தடுமாறும் துலாக்கோல்!

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல அமைந்துஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி

(திருக்குறள்: 12- 8)

பொருள்: துலாக்கோல் (தராசு) போல சமநிலையில் இருந்து ஒருபக்கம் சாராது நடுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

 

அதிருப்தி நீதிபதிகள் குரியன் ஜோஸப், செலமேஸ்வர், மதன் லோக்குர், ரஞ்சன் கோகோய் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு.

நமது அரசியல் சாஸனத்தை வகுத்த முன்னோர், நீதித்துறைக்கு மிகச் சிறந்த இடத்தை நல்கி இருக்கின்றனர். சட்டங்களை உருவாக்கும் மக்கள் பிரதிநிதித்துவ நாடாளுமன்றத்துக்கு இணையான அந்தஸ்தை அரசியல் சாஸன சிற்பிகள் நீதித்துறைக்கு அளித்துள்ளனர். குறிப்பாக, அரசைச் சாராமல், அரசியல் சார்பில்லாமல், சுயேச்சையாக இயங்கும் வகையில் நீதித்துறையின் கட்டமைப்பு உள்ளது. எனினும், பல்வேறு துறைகளும் சீரழிந்து தரம் தாழ்வதன் எதிரொலியாக, நீதித்துறையிலும் அவலட்சணங்கள் தென்பட்டு வருகின்றன.

அண்மையில் தில்லியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகள் நால்வர் எழுப்பிய போர்க்கொடி, நீதித்துறையில் மறைந்துள்ள உள் அரசியலையும், நீதித்துறை நிர்வாகத்தில் உள்ள வெற்றிடத்தையும் அம்பலப்படுத்தின. இந்த அவலம், நீதித்துறை தனக்குத் தானே வெட்டிய படுகுழியாகவே தெரிகிறது.

இந்நாட்டில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரேனும் இருந்தால் அவர்கள் நீதிபதிகள் மட்டுமே. அத்தகைய உயர் மரியாதையை அரசியல் சாஸனம் நீதித்துறைக்கு அளித்துள்ளது. நீதிபதிகளையோ, அவர்கள் அளிக்கும் தீர்ப்பையோ விமர்சிப்பது கொடும் குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்கு நீதிமன்றமே தாமாக முன்வந்து தண்டனை அளிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. இதன் காரணமாக, நீதித்துறையில் நிலவும் குறைபாடுகளை ஊடகங்கள் வெளிப்படுத்த்த் தயங்குகின்றன.

நீதிபதி சி.எஸ்.கர்ணன்

இதையே, தங்களின் பிரத்யேக முன்னுரிமையாகக் கருதிக்கொண்டு நீதிபதிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டு நீதித்துறையின் தரத்தைத் தாழ்த்துகின்றனர். கடந்த ஆண்டு, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சக நீதிபதிகள் மீது எழுப்பிய ஊழல் குற்றச்சாட்டு, அத்துறையில் மறைக்கப்படும் முறைகேடுகளை தேசம் அறிந்துகொள்ள ஒருவகையில் உதவியது. ஆயினும் அதற்காக நீதிபதி கர்ணன் தண்டிக்கப்பட்டார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் கர்ணன் ஒரு யுத்தமே நடத்தினார். அதற்காக, தன்னை தலித் என்பதால் பழி வாங்குவதாகவும்கூட அவர் குற்றம் சாட்டினார். அவரது நிதானமற்ற செயல்பாடுகளால் நீதிமன்றத்தின் மாண்பு குலைந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுவரை கைது செய்யுமாறு,  உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் உத்தரவிட்டார். அதற்கு அடிப்படையாக அமைந்தது, அவரது பணியிட மாற்றம். சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவும் ஊழல்கள் குறித்து பிரதமருக்கு அவர் எழுதிய கடிதமே பிரச்னையின் துவக்கம். இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.ஜேஹர் விசாரித்தார். அதற்கு ஆற்றிய எதிர்வினையே, அவருக்கு வினையானது. அதன் விளைவாக, கர்ணன் ஆறு மாத சிறைத் தண்டனை பெற்று (2017 மே8) அண்மையில்தான் விடுதலையானார். சுதந்திர இந்தியாவில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை- அதுவும் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து-  சிறைக்கு அனுப்பியது இதுவே முதல்முறை!

நீதிபதி ஐ.எம்.குத்தூஸி

அதேபோல, ஒடிஸா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஐ.எம்.குத்தூஸி, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கில் ஒருதரப்புக்கு உதவ நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கில் 2017 செப். 22-இல் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி குத்தூஸி இப்போது பிணையில் உள்ளார். லக்னோ மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பு அளித்த மாணவர் சேர்க்கை ரத்து உத்தரவுக்கு எதிரான வழக்கில், கல்லூரிக்கு ஆதரவாக குத்தூஸி செயல்பட்டார் என்பது குற்றச்சாட்டு. ஓய்வு பெற்ற நீதிபதிகள் சட்ட நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டதன் விளைவு இது.

2003 அக்டோபரில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் குறித்து முக்கிய நாளிதழ்களில் வெளியான செய்தி, நீதித்துறையின் மாண்பை சீர்குலைத்ததாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது; விசாரணையும் நடந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜய கர்நாடகா, பிரஜாவாணி, தி வீக், டெக்கான் ஹெரால்ட் உள்ளிட்ட பத்திரிகைகள் பிற்பாடு அச்செய்திகாக மன்னிப்பு கோர வேண்டி வந்தது. இதுபோன்ற நிகழ்வுகள், நீதித்துறைக்கு தன்னைத் தானே சீர்தூக்கி ஆராய்வதற்கான வாய்ப்புகளை இருட்டடிப்பு செய்துவிடுகின்றன.

மேற்படி நிகழ்வுகள் அனைத்துமே, நமது நீதித்துறையும் விமர்சனத்துக்கு உள்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன. எனினும், இந்த மதிப்பீடு அக மதிப்பீடாக நீதித்துறையிலேயே முதலில் உருவாக வேண்டும். அதற்கான ஒரு கட்டாயத்தையே, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வர் எழுப்பியுள்ள அதிருபதி வெளிப்படுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தில் நிலவும் நிழல் யுத்தங்கள் புதியவை அல்ல. ஆனால், நீதிபதிகள் நால்வரே, அதுவும் கொலீஜியத்தின் உறுப்பினர்களான நால்வரே,  ஊடகங்கள் முன்பு வந்து தலைமை நீதிபதிக்கு எதிராகக் குற்றம் சாட்டியதுதான் புதிய விஷயம். இது ஆபத்தானதும்கூட. உச்ச நீதிமன்றத்தில் சில விஷயங்கள் ஒழுங்காக இல்லாததால் தாங்கள் ஊடகங்களை நாட வேண்டி வந்ததாக, புகார் கூறிய நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். இது நீதித்துறையில் பிற துறையினர் தலையிடக் கூடாது என்ற முந்தைய விதிமுறையை அவர்களே மீறியதாகும்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 31. இவற்றில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள நீதிபதிகளில் வயது அடிப்படையில் மூத்தவரே தலைமை நீதிபதியாக தேர்வாவது நடைமுறையாக உள்ளது. அந்த அடிப்படையில் தற்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா உள்ளார்.

அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளைத் தீர்மானிப்பதில் தலைமை நீதிபதி மிஸ்ரா தன்னிச்சையாகச் செயல்படுவதாக புகார் கூறுகின்றனர். இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்னரே மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தையும் அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனர். இது உண்மையில் வான் நோக்கி உமிழ்ந்துகொள்வது போன்றதே.

நீதிபதி லோயா

தங்கள் கிளர்ச்சியை நியாயப்படுத்த, சில அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை (உ.ம்: நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கு) மிஸ்ரா தனக்கும், இளநிலை நீதிபதிகளுக்குமே ஒதுக்கிக் கொள்கிறார் என்று குற்றம் சாட்டினர் நீதிபதிகள் நால்வரும். இதன் பின்னணியில் சில காங்கிரஸ் ஆதரவுக் கரங்கள் இருப்பதையும் காண முடிந்தது. இதன்மூலம் ஆளும் பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைந்தன. ஆனால், இது நீதித்துறையின் உள்விவகாரம், இதில் அரசு தலையிடாது என்று சட்டத் துறை இணை அமைச்சர் பி.பி.சௌத்ரி கூறிவிட்டார். மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபாலோ, அதிருப்தி நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் சமரசத்தை உருவாக்க அவர் அனைத்து நீதிபதிகளையும் சந்தித்தார்.

இந்த விஷயத்தில், நான்கு நீதிபதிகளும் வெளிப்படையாக தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றம் சாட்டியது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை ஆதரிப்போர்- எதிர்ப்போர் என,  அரசியல் ரீதியாக இரு அணிகளாக நீதித்துறையும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் பிரிந்துள்ளதில் இருந்தே, இதன் அரசியல் பின்புலம் வெட்டவெளிச்சமாகிறது.

நீதிபதி ஜே.எஸ்.ஜேஹர்

குறிப்பாக, தலைமை நீதிபதியை விமர்சிக்கும் நான்கு நீதிபதிகளும், “தலைமை நீதிபதி என்பவர் சம அதிகாரம் படைத்த நீதிபதிகளுள் முதலாமவர் மட்டுமே; அவர் மற்ற நீதிபதிகளை விட மேம்பட்டவர் அல்ல” என்று கூறி உள்ளனர். இதுதொடர்பாக தெளிவான வரையறை நமது அரசியல் சாஸனத்தில் இல்லை என்பது உண்மை. அதே சமயம், தலைமை நீதிபதி என்ற பதவியையும், அவரது பணிகளையும் அரசியல் சாஸனம் தெளிவாகவே வரையறுத்துள்ளது.

அரசியல் சாசனத்தின் 124-வது பிரிவு நீதிபதிகள் நியமனம் குறித்த விதிகளைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் ஆகியயோர்  நியமிக்கப்படுகின்றனர். இப்போது நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலீஜியம்) அளிக்கும் பட்டியலின் அடிப்படையில் நீதிபதிகளை ஜனாதிபதி நியமிக்கிறார். எனினும், கொலீஜியத்தின் பரிந்துரைகளை அரசு ஏற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேசப்பாதுகாப்பு, முறைகேடு புகார் உள்ளிட்ட காரணங்களுக்காக, பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியலை அரசு திருப்பி அனுப்ப முடியும். இதுவே மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதலாக தற்போது தொடர்ந்து வருகிறது.

உச்ச நீதிமன்றம்

அதேபோல, அரசியல் சாஸனத்தின் 145-வது பிரிவும், 1966-ஆம் வருடத்திய உச்ச நீதிமன்ற நடைமுறை விதிகளும், தலைமை நீதிபதியின் செயல்பாடுகளை திட்டவட்டமாக வரையறுத்துள்ளன. அதன்படி, வழக்குகளைத் தரம்பிரித்து அவற்றின் தன்மைக்கு ஏற்ப விசாரணை அமர்வுகளை தலைமை நீதிபதியே தீர்மானிக்க முடியும். தனது பணிகளையும், இதர நீதிபதிகளின் பணிகளையும் அவரே தீர்மானிப்பார். நீதிபதிகள், நீதித்துறை அலுவலர்களின் வருகையைக் கண்காணித்தல், அலுவலர் நியமனங்கள், நீதிமன்றம் தொய்வின்றிச் செயல்பட மேற்பாவையிடுதல் ஆகியனவும் தலைமை நீதிபதியின் கடமைகள்.  செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளின் போர்க்கொடி, இந்த விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது.

தலைமை நீதிபதியின் பணிக்காலம் என்பது அவர் 65 வயது நிறைவடையும் வரை இருக்கும்,. அவரே, தனக்குப் பின் பதவி ஏற்க வேண்டியவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் வயது அடிப்படையில் தேர்வு செய்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவியிடங்கள் காலியாகும்போது அப்பதவிகளை தாற்காலிகமாக ஏற்கும் பொறுப்பும் தலைமை நீதிபதிக்கு உண்டு. அப்படிப்பட்ட பிரதான இடத்தை அரசியல் சாஸனம் தலைமை நீதிபதிக்கு வழங்கியுள்ள நிலையில், அவரை சம அதிகாரம் படைத்தவர்களுள் முதலாமவர் மட்டுமே’ என்று அதிருப்தி நீதிபதிகள் நால்வரும் எவ்வாறு கூறுகின்றனர் என்பது புலப்படவில்லை.

நீதிபதிகள் அனைவரும் தவறிழைக்கதவர்கள் அல்ல. ஆயினும், அவர்களை எளிதில் பணியிலிருந்து விலக்கிவிட முடியாது. அதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானத்தை மூன்றில்  இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கொண்டுவர வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. இதுவரை இந்தியாவில் இத்தகைய நிலை ஏற்பட்டதில்லை. ஆனால், வருங்காலத்தில் இந்த விதியைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகும் என்பது தெரிகிறது.

(இப்போது தலைமை நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது. இது ஒன்றே போதும், உச்ச நீதிமன்ற விவகாரம் அரசியல் பின்னணியுடன் இயங்குவதை உறுதிப்படுத்த!)

உச்ச நீதிமன்றத்தில் நேரிட்டுள்ள சிக்கலைத் தீர்க்க தற்போது தலைமை நீதிபதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அனைத்து நீதிபதிகளையும் சந்தித்து அவர் பேசி வருகிறார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இப்போதைக்கு பிரச்னை முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அதிருப்தி புகைந்துகொண்டுதான் இருக்கிறது. இதை ஊதிப் பெரிதாக்க கம்யூனிஸ்ட் தலைவர் து.ராஜா, காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சிலர், ஊடக மேதாவி சேகர் குப்தா போன்றோர் கச்சை கட்டித் திரிகின்றனர். இவர்களிடமிருந்து அதிருப்தி நீதிபதிகள் விலகி நிற்பது தேசத்துக்கு நல்லது.

இப்போதுதான், மத்திய அரசு கொண்டுவர முயன்ற தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் முக்கியத்துவம் புரிகிறது. நீதிபதிகள் குழுவே நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை தவறு என்று உச்ச நீதிமன்றமே கூறியது. அதன் வழிகாட்டலில்தான் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டுவந்த்து. 99-வது அரசியல் சாஸனத் திருத்தத்தின் படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா நிறைவேற்றப்பட்டது (2014, ஆக. 13, 14). அதை ஜனாதிபதியும் அங்கீகரித்தார். அதன்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர், சட்ட நிபுணர்கள் இருவர் கொண்ட அறுவர் குழுவே நீதிபதிகளைத் தேர்வு செய்ய முடியும் என்று விதி உருவாக்கப்பட்ட்து.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாக இருப்பதாகக் கூறி, இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று 2015 அக். 16-இல் உச்ச நீதிமன்ற அரசியல் சாஸன அமர்வு 4:1 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் அப்போதைய தலைமை நீதிபதி ஜேஹர், நீதிபதிகள் மதன் லோக்குர், குரியன் ஜோசப், ஏ.கே.கோயல் ஆகியோர் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். மாறாக நீதிபதி செலமேஸ்வர் மட்டும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஆதரித்தார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா Vs நீதிபதி செலமேஸ்வர்

இப்போது தலைமை நீதிபதிக்கு எதிராகக் குரல் கொடுப்போரில் முதன்மையானவரும் நீதிபதி செலமேஸ்வர் என்பது விதிவசம்தான். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை எதிர்த்த குரியன் ஜோசப், மதன் லோக்குர் ஆகியோர் செலமேஸ்வரை இப்போது ஆதரிக்கின்றனர்.

ஆக, நீதித்துறை தன்னிச்சையாகவும் ஏகபோகமாகவும் இனியும் செயல்படக் கூடாது என்பதும், நீதிபதிகள் நியமன விவகாரங்களில் வெளிப்புறக் கட்டுப்பாடு தேவை என்பதும் உணரப்பட்டுள்ளது. இதற்கு வழிவகுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் நாடு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. எனினும், இந்த மனப்புண் புரையோடாமல் உடனடியாக சரிசெய்யப்படுவது அவசியம்.

அன்றாட அரசு நிர்வாகம் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் குவிந்து வரும் தற்காலச் சூழலில், நீதிபதிகள் அதிகாரத் தரகர்களின் கைப்பாவை ஆகிவிடக் கூடாது. இவ்விஷயத்தை அரசியல் பார்வையுடன் அணுகாமல், தெளிந்த கண்ணோட்டத்துடனும், நடுநிலையுடனும், சான்றாண்மையுடனும் நீதித்துறை அணுக வேண்டும். அதற்கு அரசும் ஒத்துழைப்பு வழங்கி, தற்போதைய இக்கட்டை நீக்க வேண்டும். மேலும், புதிய நீதித்துறை விதிகளை உருவாக்கி சிக்கல்கள் நேராமல் தடுப்பதும் அரசு- நீதித்துறை ஆகிய இருவரின் கடமை.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை

(திருக்குறள்: 55-1)

பொருள்: யாரிடத்திலும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து கண்ணோட்டம் செய்யாமல், நடுநிலைமை பொருந்தி, செய்யத் தக்கதை ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.

 

 

 

One Reply to “தடுமாறும் துலாக்கோல்!”

  1. வந்தே மாதரம். என் மனதில் இந்த விஷயம் தொடர்பாக எழுந்த பல சந்தேகங்களுக்கு பதிலாக இந்தப்பதிவு அமைந்துள்ளது. மிகவும் நன்றி. வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *