நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நன்றி. அவரால்தான் இப்போது தேசிய நீதி ஆணையம் அமைப்பது குறித்த சிந்தனை செயல்வடிவம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கட்ஜு எந்த உள்நோக்கத்துடன் ‘பண்டோரா பெட்டி’யைத் திறந்தாரோ, தெரியாது. ஆனால், அவரது முதிர்ச்சியற்ற செயல்பாடே நாட்டின் நீதித்துறையை சீர்திருத்தக் கிடைத்த நல்ல வாய்ப்பாக மாறியிருக்கிறது.
.
யார் இந்த கட்ஜு?
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஒருவர் இருக்கிறார். பழைய கதைகளை அவ்வப்போது கிண்டிவிடுவதில் சமர்த்தர் அவர். அதன்மூலமாக தனது நினைவாற்றலை தனக்குத் தானே மெச்சிக்கொண்டு, பிற அரசியல் எதிரிகளை மட்டம் தட்டுவதிலும் அவர் சூரர். அவருக்கே அல்வா கொடுத்தவர் தான் நமது கட்ஜு. “எனக்கு கோபாலபுரம் வீடு தவிர வேறெந்த சொத்தும் இல்லை என்பதை நாடறியும்’’ என்று அவர் உருக்கமாக விடுத்துள்ள அறிக்கையைப் படித்து சிரிக்காதவர் இருக்க முடியாது. இந்த அறிக்கைக்குக் காரணமானவர் கட்ஜு.
மார்க்கண்டேய கட்ஜு, காஷ்மீர பண்டிட் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தாத்தா கைலாஷ்நாத் கட்ஜு (1887- 1968) விடுதலைப்போராட்ட வீரர்; மத்திய பிரதேச முதல்வர், மேற்கு வங்க, ஒடிசா மாநிலங்களின் ஆளுநர், மத்திய சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த காங்கிரஸ்காரர். இவரது அப்பா எஸ்.என்.கட்ஜு, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். இவரது மாமா பி.என்.கட்ஜு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். இவரது அத்தை மகள் திலோத்தமா, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் முன்னாள் மனைவி.
இப்படிப்பட்ட செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவரான மார்க்கண்டேய கட்ஜு, 1946-ல் பிறந்தவர். காஷ்மீரை விட்டு வெளியேறி உத்தரப்பிரதேசத்தில் குடிபுகுந்த குடும்பம். அலகாபாத்தில் 1967-ல் சட்டக்கல்வியை (எல்எல்பி) முடித்தார். 1970-71-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார். தாத்தாமுதற்கொண்டு சட்டத்துறையில் இருக்கும் குடும்பம் என்பதால், நீதிமன்ற செல்வாக்கிற்கு என்றும் குறைவில்லை
20 ஆண்டுகால வழக்கறிஞர் பணிக்காலத்தை அடுத்து, 1991-ல் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் கட்ஜு. எல்லா வழக்கறிஞர்களுக்கும் இத்தகைய வாய்ப்புகள் எளிதாகக் கிடைப்பதில்லை. பிறந்தாலும் வெள்ளிக்கரண்டியுடன் பிறக்க வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள்?
2004 நவம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இப்போது தனது வலைப்பூவில் அவர் எழுதப்போகத் தான், நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
மிக விரைவிலேயே (2005) தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கட்ஜு மாற்றப்பட்டார் (அதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது). 2006 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுள் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார். தனது 20 ஆண்டு நீதிபதி பணிக்காலத்தை 2011, செப்டம்பரில் நிறைவு செய்த கட்ஜுவுக்கு, பத்திரிகை கவுன்சில் தலைவர் பதவி தேடி வந்தது. அந்தப் பதவிக்காலம் வரும் அக்டோபருடன் முடிவடைய உள்ளது.
பொதுவாக, கட்ஜு சர்ச்சைகளைக் கிளப்புவதில் மன்னராகவே இருந்து வந்துள்ளார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்தபோது அவருக்கு நான் அஞ்சலி செலுத்த முடியாது என்று கட்டுரை எழுதியவர் (தி ஹிந்து- நவம்பர் 19, 2012) இவர். இது ஒன்றே இவரது தரத்தை வெளிப்படுத்தும். குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தவர் தான் கட்ஜு. இந்தியர்களில் 90 சதவீதம் பேர் சாதி, மதம் ஆகிய குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்கும் முட்டாள்களாக உள்ளனர் என்று கூறிவிட்டு, எதிர்ப்பு எழுந்தவுடன் பல்டி அடித்தவரும் இவரே. நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகளாகக் காட்டுவது வருந்தத்தக்கது என்று உபதேசம் செய்தவரும் இவரே.
இவரது கருத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர் எவரும், ‘அரசியல் சரி’ நிலைப்பாட்டை இவர் சமயோசிதமாகப் பயன்படுத்துவதையும், அரசியலில் இல்லாத அரசியல்வாதியாகப் பரிமளிப்பதையும் உணர முடியும். அதனால்தான் நீதிபதி பதவிக்காலம் முடிந்தவுடன் இவரை நாடி பத்திரிகை கவுன்சில் தலைவர் பதவி வந்தது.
ஆனால், இப்போது ஆட்சி மாறி காட்சியும் மாறிவிட்டதால், அதிரடியாக பழைய விஷயங்களைக் கிளறி தியாகியாகிவிடப் பார்க்கிறார். தேன்கூட்டை (வெளிநாட்டு பாணியில் சொன்னால்- பண்டோரா பெட்டியைத் திறந்துவிட்டார்) கலைத்துவிட்டார் கட்ஜு. ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, நீதிபதிகள் நியமனத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து பேசிவரும் பாஜகவுக்கு சாதகமாக மாறிவிட்டது சூழல்.
காண்க: கட்ஜு எழுப்பும் கேள்வி! (தினமணி தலையங்கம்)
.
என்ன சொன்னார் கட்ஜு?
மார்க்கண்டேய கட்ஜு ‘சத்யம் புரூயத்’ என்ற தலைப்பில் ஒரு வலைப்பூவை (justicekatju.blogspot.in) நடாத்துகிறார். 2012, பிப்ரவரியிலிருந்து செயல்பாட்டில் இருக்கும் இந்த வலைப்பூவில் தான் தீர்ப்பளித்த பல வழக்குகளின் விவரங்களை வெளியிட்டுள்ளார். தவிர, பல்வேறு விஷயங்கள் குறித்த தனது கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். ஜூலை 2014 வரை 240 இடுகைகளை இட்டுள்ள கட்ஜுவுக்கு 3,731 பின்தொடர்வோர் உள்ளனர்.
இந்த வலைப்பூவில், கடந்த ஜூலை 20-ம் தேதியும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் கட்ஜு எழுதிய மலரும் நினைவுகள் தான், கட்ஜுவை ஊடக மைய செய்தியாக்கியது. “ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நீதிபதி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது எப்படி?” என்ற அந்தக் கட்டுரை, முந்தைய மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்திய தமிழக அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தியது. அந்த இடுகையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவரது செயல்பாடுகள் குறித்த உளவு அறிக்கை அவருக்கு எதிரான தகவல்களை வழங்கி இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். உளவு அறிக்கையில் அந்தக் கூடுதல் நீதிபதிக்கு எதிரான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் சபர்வால், ரூமா பால் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, கூடுதல் நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் நீதிபதி கட்ஜு கூறி இருக்கிறார்.
இத்தனைக்கும் பிறகு, மத்திய அரசின் வற்புறுத்தலால், ஊழல் புகாருக்கு ஆளான அந்தக் கூடுதல் நீதிபதிக்கு, தலைமை நீதிபதி லஹோதி தேர்வுக் குழுவின் பிற நீதிபதிகளைக் கலந்தாலோசிக்காமல், பணி நீட்டிப்பு வழங்கப் பரிந்துரை செய்தார் என்பது தான் நீதிபதி கட்ஜுவின் அதிரடிக் குற்றச்சாட்டு. இவரது கட்டுரையின் பிரதான அம்சங்கள் இவை:
- தமிழக அரசியல் கட்சி ஒன்றின் முக்கிய தலைவர் ஒருவரை நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிய மாவட்ட நீதிபதி ஒருவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
- அந்த நீதிபதியின் முந்தைய ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்குமாறு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நான் கடிதம் எழுதியதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நீதிபதி மீது கூறப்பட்ட புகார்கள் உறுதியாயின.
- ஆயினும், திமுக அளித்த நெருக்கடியால் அந்த நீதிபதிக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதற்காக, பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக அமைச்சர்கள் மிரட்டினர்.
- அரசியல் நெருக்கடியால் பிரதமர் அலுவலகம் தலைமை நீதிபதிக்கு நெருக்கடி கொடுத்தது. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் வளைந்து கொடுத்துள்ளனர்.
– கட்ஜு கூறுவது வேறு யாருமல்ல. நீதிபதி அசோக்குமார் தான். ஆனால், கட்ஜு ஹேஷ்யங்களுக்கு இடமளித்து, அவர் பெயரை சொல்லாமல் தவிர்த்திருக்கிறார்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கூட்டணிக் கட்சியான திமுகவின் வற்புறுத்தலால் தான், கூடுதல் நீதிபதியாக இருந்த அசோக்குமாருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது; தவிர, அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இப்போது நீதிபதி அசோக்குமார் உயிருடனும் இல்லை.
இறந்துபோன ஒருவரைப் பற்றி, பலகாலம் கடந்து ரகசியங்களைக் கொட்ட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுவது நியாயமே. ஆனால், அசோக்குமாருடன் குலாவிய பலர் இன்னமும் பொதுவாழ்வில் இருப்பதால், கட்ஜுவின் கட்டுரை பல சிக்கலான கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது.
காண்க: நீதித்துறையின் செயல்பாடுகளில் ஜெயலலிதா தலையிட்டதில்லை (தி இந்து)
.
இதுவரை மௌனம் ஏன்?
முந்தைய மத்திய அரசில் திமுக செலுத்திவந்த ஆதிக்கம் அனைவரும் அறிந்ததே. கட்ஜு சொல்வது போலவே நடந்திருக்கும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. எனினும், இதனை தான் பதவியில் இருந்த காலகட்டத்தில் துணிச்சலுடன் கட்ஜு வெளிப்படுத்தாதது ஏன்?
‘நீதிபதி அசோக்குமார் தன்க்கு மேம்பால ஊழல் வழக்கில் எந்தப் பிணையும் வழங்கவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, அவருக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்கள் மத்திய சட்ட அமைச்சரை நிர்பந்தம் செய்தார்களா என்பதை ஏன் தெளிவுபடுத்தவில்லை?
இந்த விவகாரம் வெடித்து ஊடகம் முழுவதும் பரபரப்பாக உள்ள நிலையிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மௌனசாமியாக இருப்பது ஏன்? முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் இவ்விஷயத்தில் தலித் பிரச்னையை இழுத்துவிடுவதைப் பார்க்கும்போது (நீதிபதி அசோக்குமார் தலித்தாம்- காண்க: பெட்டிச் செய்தி-1), நடந்த முறைகேடு உண்மை என்பது வெளிப்படையாகிறது. முன்னாள் சட்ட அமைச்சர் போதுமான விளக்கம் அளித்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விலகி ஓடுவது எவ்வகையில் சரியானது?
இந்த விவகாரம் தொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், “நான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த போதுதான் அந்தக் கூடுதல் நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கட்சித் தலைவர்களுடன் அவர் நெருக்கமாக இருப்பதாக அறிக்கை வந்தது. அதன் காரணமாக, அவரை சென்னையில் இருந்து ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்தேன். கட்ஜு எந்தக் காரணத்துக்காக பல ஆண்டுகள் கழித்து இந்தப் பிரச்னையை எழுப்பி சர்ச்சையாக்குகிறார் எனத் தெரியவில்லை” என்றார்.
இதிலிருந்தும், நீதிபதி அசோகுமாரின் அரசியல் சார்பு தெள்ளத் தெளிவாக வெளிப்படுகிறது. இத்தகைய ஒருவரை இடமாற்றம் மட்டும் செய்தால் சரியாகுமா? நீதிபதி பதவியில் இருக்கும் போது திமுகவின் பிற மாநில நண்பர்கள் அவரைப் பயன்படுத்திக்கொண்டால் தவறாகாதா?
கட்ஜுவின் புகாரை அடுத்து திமுக தலைவர் கருணாநிதி அவரை விமர்சித்திருப்பதும், கருணாநிதியின் சொத்துவிவரங்களை வெளியிடுமாறு கட்ஜு கோரியிருப்பதும், புரையோடிய புண்ணை மேலும் கிளறுவதாகவே இருக்கின்றன.
“நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. நீதிபதிகள் பொறுப்பில் இருக்கும்போதும், ஓய்வுபெற்ற பிறகும் நடுநிலை தவறாது நடக்க வேண்டியவர்கள். ஆனால், அண்மைக் காலமாக ஒருசிலர் இதனை மறந்து, மனம் போனபடி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது நம்பகத்தன்மை வாய்ந்த நீதித் துறை எனும் தூணில் துளை போடும் முயற்சியாகும். கட்ஜுவின் கடந்தகால நடவடிக்கைகளை அலசும்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசக் கூடியவர்; பொறுமையிழந்து கருத்துச் சொல்லக் கூடியவர்; காலையில் சொன்னதை மாலையில் மறுக்கக் கூடியவர்; முரண்பாடுகளின் மொத்த உருவம் எனத் தெரிகிறது”
-என்று கூறி இருக்கிறார் கருணாநிதி. அது உண்மையாகவே இருக்கட்டும், நீதிபதி அசோக்குமார் விஷயத்தில் திமுக செய்தது சரியா? அதற்கான பதிலைத் தவிர்த்து, விவகாரத்தை திசைதிருப்புவது எவ்வகையில் சரியான பதிலாகும்?
கருணாநிதியின் விமர்சனத்திற்கு பதில் அளித்த கட்ஜு, “என்னைப் பற்றி கருணாநிதி ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அவரின் சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா? அரசியலுக்கு வரும் முன் அவரின் சொத்து மதிப்பையும், அரசியலுக்கு வந்த பிறகு அவர், அவரின் குடும்பத்தினர் சேர்த்த சொத்து விவரத்தையும் வெளியிடத் தயாரா?” என்று கேட்டுள்ளார்.
மொத்தத்தில் நீதிபதி கட்ஜுவும் மூன்றாம்தர அரசியல்வாதியாக தன்னை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். தான் அதிகாரத்துடன் பதவியில் இருந்தபோது, வெறுமனே புகார் மட்டும் அனுப்பி வாளாயிருந்துவிட்டு, இப்போது கட்ஜு குதித்துக் கொந்தளிப்பதில் என்ன பொருள் இருக்கிறது?
இதன் விளைவு, கட்ஜுவின் சொத்துவிவரத்தை கருணாநிதி கேட்டிருக்கிறார். சபாஷ் நல்ல போட்டி! அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் சொத்து விவரங்களைப் போலவே நீதிபதிகளின் சொத்துவிவரங்களையும் வெளியிட வேண்டும் என்று, இவ்விவிஷயத்தில் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருக்கும் நீதிபதி லஹோதி, நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி கட்ஜு உள்ளிட்ட அனைத்து நீதிக்காவலர்களும் வலியுறுத்துவார்களா?
காண்க: நீதித் துறையை இழிவுபடுத்த நீதிபதி கட்ஜு முயற்சி: கருணாநிதி சாடல் (தி இந்து)
.
இப்போதைய தேவை என்ன?
கட்ஜு கிளப்பிய அதிரடிப் பூசலால் நடந்தது அனைத்தும் நன்றாகவே நடந்திருக்கின்றன. இப்போது நடந்துகொண்டிருப்பனவும் நன்றாகவே நடந்துகொண்டிருக்கின்றன. இனி நடக்கப்போவது என்ன? அதுதான் தற்போதைய கேள்வி.
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையையும், நீதித்துறையின் செயல்பாடுகளுக்கு கடிவாளத்தையும் ஏற்படுத்துவதே, இந்த விவகாரம் அளித்துள்ள பயனாக இருக்க வேண்டும்.
1950 முதல் 1990 வரை, மத்திய அரசுடன் (சட்ட அமைச்சருடன்) நீதித்துறையினர் ஆலோசித்து உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நியமித்து வந்தனர். அதில் ஏற்பட்ட அரசியல் குறுக்கீடுகளால் தான், 1990-ல் ‘கொலேஜியம்’ எனப்படும் நீதிபதிகளின் உயர்மட்டக் குழுவுக்கு நியமன அதிகாரம் அளிக்கப்பட்டது. இம்முறை தற்போது வரை நடைமுறையில் இருந்தாலும், இதில் உள்ள குறைபாடுகள் தற்போது வெளிப்பட்டுள்ளன.
நீதிபதிகளும் தனிநபர்களே. அவர்களது விருப்பு வெறுப்புகளும், அரசியல் சார்புகளும் நீதிபதிகளின் நியமனங்களில் வெளிப்பட்டால், எதிர்காலத்தில் நீதித்துறை முற்றிலும் நிலைகுலைந்துவிடும். அதற்கான எச்சரிக்கையே தற்போதைய நிகழ்வுகள் எனில் மிகையில்லை.
மக்கள் பிரதிநிதிகள் தேர்தலிலேனும் மக்களால் மதிப்பிடு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதிகார வர்க்கமும் அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், நீதிபதிகள் மட்டும் தேவலோகத்திலிருந்து வந்தவர்கள் போல யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்பதே ஒருவகையில் முறைகேடுகளை ஊக்குவிக்கிறது. மாவட்ட நீதிபதிகள் நியமனங்களில் கிளம்பிவரும் ஊழல் புகார்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இவை அனைத்திற்கும் காரணம், தங்களைத் தாங்களே நியமித்துக்கொள்ளும் நீதித்துறையின் சுயஆட்சி முறை தான். இதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை.
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி ஒரு மசோதா கொண்டுவர முயற்சி செய்தார் (2004). அப்போது நீதித்துறையில் அதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது; அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. அதன்பிறகு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சட்ட அமைச்சராக இருந்த கபில் சிபல், அந்த மசோதாவில் சிறிய மாற்றங்கள் செய்து ‘நீதிபதி நியமன ஆணையம்’என்ற நடைமுறையை அமல்படுத்த முயன்றார். இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
அண்மையிலும் கூட, முன்னாள் மத்திய அர்சு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூத்த நீதிபதிகள் குழு (கொலேஜியம்) பரிந்துரை செய்தபோது அதனை மோடி அரசு நிராகரித்தது. அப்போது பெரும் விவாதம் உருவானது.
பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான போலிமோதல் வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரானவர் என்பதால் கோபால் சுப்பிரமணியம் நிராகரிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. ஆனால் கோபால் சுப்பிரமணியம் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இந்திய அரசின் முதன்மை வழக்குரைப்பவராக நடந்துகொண்ட விதம் -சாட்சியங்களை குற்றவாளிகளின் வக்கீலிடம் கொடுக்க சொல்லி சிபிஐயை நிர்ப்பந்தப்படுத்தியதாக கசிந்த செய்தி- தான் இந்த நிராகரிப்புக்கு காரணம்.
இந்த நிராகரிப்பையடுத்து, தானாகவே கோபால் சுப்பிரமணியம் இவ்விவகாரத்தில் இருந்து விலகிக்கொண்டார். அதனை தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கண்டித்தது குறிப்பிடத் தக்கது. அதாவது, நீதிபதிகள் தங்கள் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவோரே முதன்மையானவர்கள். அதை நீதிபதிகள் ஏற்கத் தயாராக இல்லை.
இந்நிலையில் கட்ஜு நீதிபதிகளிடையிலான அந்தரங்க அவலங்களை வெளிப்படுத்தி இருப்பது, மத்திய அரசுக்கு சாதகமானதாகும். இதைப் பயன்படுத்திக்கொண்டு, தேசிய நீதி ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு முடுக்கிவிட வேண்டும்.
இத்தனை குற்றச்சாட்டுகளை சுமத்தும் நீதிபதி கட்ஜு கூட, இதே ‘கொலேஜியம்’ முறையைப் பயன்படுத்தி நீதிபதியானவர் தான். ஆகவே, நீதிபதி பதவி நியமனங்களில் அரசின் தலையீடு தேவையானது என்பது உறுதிபடப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் ஜூலை 22-ல் பெரும் அமளி ஏற்பட்டபோது விளக்கம் அளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மூவரும் ஓய்வு பெற்று விட்டனர். புகார்களில் சிக்கிய மற்றொரு நீதிபதி இறந்துவிட்டார். கடிகாரத்தின் முட்களை திருப்பி வைக்கமுடியாது. எனினும் நீதிபதிகள் நியமன நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. இதற்காக தேசிய நீதி ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தும்” என்று தெரிவித்தார்.
தற்போதைய தேவை, நீதித்துறையில் தேர்ச்சி மிகுந்த வல்லுநர்கள், மத்திய சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பகம், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தேசிய நீதி ஆணையம் அமைப்பதே ஆகும். இதன் நடத்துநர்களாக தேசிய நீதி ஆணையத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர் இருக்கலாம். இதன் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே இருக்க வேண்டும். இந்த ஆணையம் ஜனாதிபதிக்கு மட்டுமே பதில் அளிக்கும் அதிகாரம் பெற்றதாக அமைக்கப்படலாம். நீதிபதிகள் நியமனம் மட்டுமல்லாது, நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்கும் அமைப்பாகவும் இந்த ஆணையம் செயல்பட முடியும். இதுவே காலத்தின் கட்டாயம் ஆகும். இதற்கான சூழலே இப்போது திரண்டு வந்திருக்கிறது. இவ்வாய்ப்பை வழங்கிச் சென்ற நீதிபதி அசோக்குமாருக்கும், நாட்டின் நீதித்துறை கடன்பட்டிருக்கிறது.
காண்க: தேசிய நீதி ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் (தி இந்து)
***
பெட்டிச் செய்தி-1:
முன்னாள் சட்ட அமைச்சர் விளக்கம்: பாஜக அதிருப்தி
நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் புகார் தொடர்பாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் (காங்கிரஸ்) அளித்துள்ள விளக்கம் இது…
“மார்க்கண்டேய கட்ஜு குறிப்பிடுவது போல நீதித்துறையை யாரும் கட்டுப்படுத்தவில்லை. முந்தைய ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சில திமுக அமைச்சர்கள் விமான நிலையத்தில் சந்தித்ததாகவும், சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியை பணி நீட்டிப்பு செய்ய அவர்கள் நெருக்குதல் கொடுத்ததாகவும் கட்ஜு கூறுவதில் உண்மையில்லை.
அதேசமயம், சர்ச்சைக்குள்ளான கூடுதல் நீதிபதிக்கு எதிராக, மத்திய உளவுத் துறை விசாரணை நிலுவையில் இருந்த காலத்தில் தான் அவருக்குப் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கியக் கட்சியாக அப்போது திமுக இருந்தது. அக் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் சில எம்.பி.க்களும் என்னைச் சந்தித்தனர்.
“கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்குவதை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விரும்பவில்லை; மேலும், அக் கூடுதல் நீதிபதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரைத் தனிமைப்படுத்த கட்ஜு முயல்கிறார்’ என திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர்.
நீதிபதி நியமன நடவடிக்கை என்பது குடும்ப விவகாரம் கிடையாது. அந்த வகையில், சட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் அலுவல்பூர்வமாக நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லஹோதிக்கு எழுதிய கடிதத்தில், “கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டேன்.
“இந்த நிலையில், மத்திய உளவுத் துறையின் விசாரணை இறுதி அறிக்கையில், ‘அந்தக் கூடுதல் நீதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தவறானவை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், திமுகவைச் சேர்ந்த சில தலைவர்களுடன் அந்த நீதிபதி புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட தகவலை, உளவுத் துறை பதிவு செய்திருந்தது. ஆகவே, நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்ற பிறகு சென்னையில் இருந்து ஆந்திரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்று கூறி இருக்கிறார் பரத்வாஜ்.
அதாவது, நீதிபதி அசோக்குமார் நியமனம சர்ச்சையுடன் தான் செய்யப்பட்டது என்பதை அவரது விளக்கம் உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக அக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, கூறியிருப்பது:
ஊழலும் காங்கிரசும் மிகவும் நெருக்கமானவை என்பதை உணர்த்தும் வகையில் நீதித் துறையில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காகவும், சுய ஆதாயத்துக்காகவும் நீதித் துறையை முந்தைய மத்திய அரசு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்பதை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு மட்டுமன்றி, மிகவும் கவலை அளிக்கக் கூடிய பிரச்னையுமாகும். இந்த விவகாரத்தில், நடந்த உண்மையை விளக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முக்தார் அப்பாஸ் நக்வி.
காண்க: உண்மையே உன் விலை என்ன? நீதிபதி சந்துரு கட்டுரை (தி இந்து)
பெட்டிச் செய்தி-2
சந்திக்கு வரலாமா நீதிபதிகளின் சண்டை?
இந்த விவகாரத்தில் நீதிபதி கட்ஜுவின் புகாரால் வெகுவாக பாதிக்கப்பட்டவர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோதி. “இப்போதைய பத்திரிகை கவுன்சில் தலைவருக்கு இந்த நேரத்தில் இந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. அதேசமயம், நான் எதற்காகவும் வளைந்து கொடுக்கவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக நீதிபதி கட்ஜு எழுப்பியுள்ள ஆறு கேள்விகள், விவகாரத்தை மேலும் ஆழத்துக்கு கிளறிவிட்டுள்ளன. அந்தக் கேள்விகள்:
1. சென்னை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் மீதான புகார்கள் தொடர்பாக நான் முதன்முதலில் சென்னையில் இருந்து லஹோதிக்கு கடிதம் எழுதியதுடன், அக்கடிதத்தில் அந்தக் கூடுதல் நீதிபதி தொடர்பாக ரகசிய உளவுத் துறை விசாரணை அறிக்கை பெறுமாறு வலியுறுத்தினேன். மேலும், தில்லியில் லஹோதியை சந்தித்து எனது கோரிக்கையை மீண்டும் வற்புறுத்தினேன். அது உண்மையா, இல்லையா?
2. எனது கோரிக்கையின்படி, அந்தக் கூடுதல் நீதிபதி தொடர்பாக ரகசிய உளவுத் துறை விசாரணைக்கு லஹோதி உத்தரவிட்டது உண்மையா, இல்லையா?
3. தில்லியில் லஹோதியை நேரில் சந்தித்த பிறகு, சென்னை திரும்பிய என்னை, அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நான் தெரிவித்த புகார்கள் அனைத்தும் உண்மை என ரகசிய உளவு விசாரணையில் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டது, உண்மையா, இல்லையா?
4. உளவு அறிக்கையில் கூடுதல் நீதிபதிக்கு எதிரான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால், நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்கு தலைமை தாங்கிய அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான லஹோதி, அக் குழுவில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் சபர்வால், ரூமா பால் ஆகியோர் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரையில், கூடுதல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததே? அது உண்மையா, இல்லையா?
5. மேற்கண்ட பரிந்துரையைச் செய்த பிறகு, தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த மற்ற இரு நீதிபதிகளைக் கலந்தாலோசிக்காமல் லஹோதி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், கூடுதல் நீதிபதிக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கலாம் என்று பரிந்துரை செய்தது உண்மையா, இல்லையா?
6. மத்திய உளவு அறிக்கையில் முரண்பட்ட தகவல் இடம் பெற்ற பிறகும், ஊழல் புகாருக்கு ஆளான நீதிபதிக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க லஹோதி பரிந்துரை செய்தது ஏன்?
-இந்தக் கேள்விகள் அனைத்துமே சுற்றிச் சுற்றி ஒரே விஷயத்தையே வட்டமிடுகின்றன. அது வேறொன்றுமில்லை. நமது அரசியல்வாதிகள் நீதித்துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு நீதிதுறையிலும் வளைந்துகொடுக்கிறார்கள் என்பது தான் அது.
காண்க: மார்க்கண்டேய கட்ஜு கேள்விக்கணைகள் (தினமலர்)
இதுகுறித்து மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் முகுந்த் ரோத்தகி கூறியுள்ள கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவை. “நீதிபதி கட்ஜு தேவையற்ற சர்ச்சையை காலதாமதமாக்க் கிளப்பி இருப்பது நீதித்துறையின் கண்ணியத்தைக் குலைக்கிறது. அவருக்கு நீதிபதிகள் நியமன முறையில் அதிருப்தி இருந்திருந்தால் அப்போதே விலகி இருக்க வேண்டும். அதே நடைமுறையில் தானே அவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்?” என்று கேட்டிருக்கிறார் முகுந்த் ரோத்தகி. அதேசமயம், காலதாமதமாகக் கூறப்படும் புகார் என்பதாலேயே இப்புகார் மதிப்பற்றதாகிவிடாது என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.
நாட்டின் சட்டத்தை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அமைப்பில் உள்ள அதிகாரிகள், அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஊடகங்கள் – எனப் பலதரப்பிலும் ஊழல் பெருகிவரும் நிலையில், நீதித்துறையே மக்களுக்கு நம்பிக்கை அளித்து வந்திருக்கிறது. இப்போது, அதுவும் சரியில்லை என்பது இதன்மூலம் தெரிய வந்திருக்கிறது. நமது ஜனநாயகத்தின் எந்தத் தூணும் கறை படியாததாகவோ, அரிக்கப்படாததாகவோ இல்லை.
நீதிபதிகள் இடையிலான கருத்து மோதல்கள்களும் தனிப்பட்ட நபர்களிடையிலான சண்டைகளும் தெருவுக்கு வந்திருப்பதால் தான் இப்போது இது அம்பலமாகி இருக்கிறது. ஆக, நீதிபதிகளின் சண்டையிலும் நன்மையே விளைந்திருக்கிறது.
.
அப்படிப் போடுடா அருவாளை என்றானாம். முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங்கை மிரட்டிய திமுக அமைச்சரை உடனே கைது செய்து விசாரணை செய்யவேண்டும்.
இதே மார்க்கன்டேய கட்ஜு அன்று மோடி , அருண் ஜேட்லி ஆகியோர் மீது புழுதிவாரி தூற்றிய போது கட்ஜு நேர்மையாளர், நல்லவர் , போராளி என்று மகுடம் சூட்டினார்கள்…..ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிய விமர்சிக்கலாமா? இது சட்ட விரோதம் என்று கொந்தளித்தார்கள்…..
இன்று அதே கட்ஜு காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளை குற்ற்ம் சாட்டியவுடன் இப்போது அவர்மீது பாய்கிறார்கள்….
அன்றும் சரி …இன்றும் சரி… நமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை….
கட்ஜு ஒரு காரியக்கிறுக்கு…….
மாவட்ட நீதிபதியாக இருந்த அசோக்குமாரை சென்னை உயர் நீதி மன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட்டது Oct 2003. இந்த நியமனம் அப்போதைய NDA அரசால் (அப்போது கூட்டணிக் கட்சியாக இருந்த தி மு க நிர்பந்தத்தால் ) செய்யப்பட்டது. இதனை கட்டுரையாளர் வசதியாக விட்டு விட்டார்.
மாமியார் உதைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
///மாவட்ட நீதிபதியாக இருந்த அசோக்குமாரை சென்னை உயர் நீதி மன்றத்திற்கு கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட்டது Oct 2003. இந்த நியமனம் அப்போதைய NDA அரசால் (அப்போது கூட்டணிக் கட்சியாக இருந்த தி மு க நிர்பந்தத்தால் ) செய்யப்பட்டது. ///
தவறான புரிதல்/ பாதி உண்மைத் தகவல் இது.
1) மாவட்ட நீதிபதிகள் பணிவு மூப்பின் (seniority) அடிப்படையில் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகின்றனர். அஷோக் குமார் அப்போது இருந்த மாவட்ட நீதிபதிகளில் முதன்மை இடத்தில் இருந்ததோடு, சென்னை முதன்மை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதியாக கிட்டத்தட்ட மூன்றாஆண்டுகளுக்கும் மேலாகப் பணிய செய்திருந்தார். மேலும் அவர் தாழ்த்தப்பட்ட பிரிவினர், ஆதலால் அவர் பதவி உயர்வு என்பது அவரே உழைத்து அடைந்தது.
2) அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்களை இன்றளவும் சொத்துக் குவிப்பு வழக்கிலும், வருமான வரி வழக்கிலும் இழுத்தடித்து ஆட்டம் காட்டும் ஜெயா- சசி கூட்டணி கொடுத்து வந்ததிருக்கிறது. அதன் காரணம் 1993-94 ஆம் ஆண்டிலிருந்து அவர்களுக்கு அசோக் குமார் மீதிருந்துவரும் காழ்ப்பு. அப்போது அவர் திண்டுக்கல் மாவட்ட நீதிபதியாக இருந்தார். கோடைக்கானல் பள்ளியின் இடத்தை அபகரிக்க ஜெயா-சசி கூட்டணி முயன்றது. அங்கு தங்கியிருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியரை குண்டர்களை வைத்து நள்ளிரவில் நடுக்கும் குளிரில் வெளியேற்றிப் பூட்டுப் போட்டது. மறுநாள் காலை நீதிமன்றம் திறந்ததும், செய்த மனுவை விசாரித்து இடைக்காலத் தடை வழங்கியவர், இந்த அசோக் குமார். அந்த வழக்கை விரைந்து நடத்தி தான் அங்கிருந்து ஜெயாவால் மாற்றம் செய்யப் படும் முன்னர், அந்த நிலத்தை அபகரிக்கும் முயற்சிய்க்கு நிரந்தரத் தடை விதித்தவர் அசோக் குமார்.
3) அசோக் குமார் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களை அவர் உயிருடன் இருந்தபோது சொல்பவர்தான் உண்மையான நியாயவான்.செத்த பின் சொன்னால் அவரால் தம் மீது சாட்டப் படும் குற்றச் சாட்டை மறுக்க முடியுமா? அப்படிக் குற்றம் சுமத்துவதே ஒரு குற்றம்தான். சாதாரணமானவர்கள் அறியாமையால் இந்தக் குற்றத்தைச் செய்யலாம். ஒரு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் இதைச் செய்தல் பெரும் குற்றம். இவரைத் தண்டிப்பவர் யார்?
4) இந்த உண்மைகள் ஜெயா-சசி-கருணா மட்டும் அல்ல, மார்க்கண்டேய கட்சுவுக்கும் தெரியும். ஆனால அவர் ஜெயாவின் ஆதரவாளர், எனவே அது பற்றிப் பேச மாட்டார்.
5) ஜெயா நீதிபதிகள் நியமனத்தில் தலையிடவில்லை என்று கட்ஜு சொல்வது அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு. அன்றிலிருந்து இன்று வரை ஜெயாவும் சரி, கருணாவும் சரி மாற்றி மாற்றித் தமக்கு வேண்டியவர்களை நீதிபதிகளாக ஆக்கி இருக்கிறார்கள் என்பது உண்மை.
6) இப்போது இருக்கும் நீதிபதிகளில் வி.எம்.வேலுமணி அதிமுகவின் மகளிர் அணியில் இருந்தவர்தான். அவரது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூடத் தகவல் இல்லை! நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன் போயஸ் தோட்டம் சென்று அம்மா, சின்னம்மா இருவர் காலிலும் விழுந்து ஆசி பெற்றவர்தான். அனுப்பப்பட்ட பட்டியலில் அவரது நியமனம் மட்டும் நிறுத்தப் பட்டது. பின்னர் “அம்மா கொடுத்த அழுத்தத்தில்” அவர் மட்டும் தனியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். கட்ஜுவுக்கு இதுவும் தெரியும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஜெயாவுக்கு ஆதரவாளர், அவர்தான் இதில் ஜெயாவுக்கு உதவியவர். இது பற்றி ஒரு நாள் வேறு ஒரு முன்னாள் நீதிபதி தனக்குப் பதவி வேண்டும் என்பதற்காக அரசை மிரட்ட, ஒரு பிலாக்கணம் படிப்பார்.
7) பொதுவாகவே மாவட்ட நீதிபதிகள் அரசியல் காரணங்களுக்காக உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவது அரிது. மூன்றில் ஒரு பகுதி மாவட்ட நீதிபதிகளில் இருந்தும், இரண்டு பகுதி வழக்கறிஞர்களிலிருந்தும் பதவி உயர்வு ஆகின்றனர். இந்த வழக்கறிஞர் – நீதிபதி நியமனத்தில்தான் அரசியல் தலையீடு நடக்கிறது. அதுவும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், கொலேஜியம் நீதிபதிகளும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், கொலேஜியம் நீதிபதிகளும், நேர்மையாக நாணயமாக நடந்தால் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவர்களிலும் கட்ஜு போன்ற காங்கிரஸ் காரர்களும், மலை சுப்பிரமணியம், வேலுமணி, வி.பாலசுப்ப்பிரமணியம் போன்ற அதிமுக காரர்களும், சி.டிசெல்வம், ராஜ.இளங்கோ போன்ற திமுக காரர்களும் இருந்தால் எப்படி அரசியல் நுழையாமல் இருக்கும்? சந்துரு கம்யூனிஸ்டு ஆனாலும் நேர்மையும் நாணயமும் உள்ளவர். அவரிடமும் இடது சார்புப் பாரபட்சம் இருந்தாலும், அதில் கூட அவரிடம் ஒரு நேர்மையான எண்ணம் இருக்கும். அப்படிப்பட்டவர் பற்றி கட்ஜு வாய் திறக்க மாட்டார்! ஏனெனில் அவர் பற்றிப் பேசினால் இவரை அவரோடு ஒப்பிட்டுப் பார்ப்பார்கள், இவரது தரம் தெரிந்து விடும். 2003-4 இல் கட்ஜு இங்கே தலைமை நீதிபதியாக இருந்தபோது சந்துரு வழக்கறிஞர். நேர்மையில் ஆர்வம் கொண்ட கட்ஜு ஏன் அவரை அப்போது நீதிபதியாக ஆக்க பரிந்துரைக்கவில்லை? செய்திருக்கலாமே ?
திரு ஆர் நாகராஜன் ,
கட்ஜுவின் வெப் சைட்டில் சென்று பார்த்தேன். 2003 ஆம் ஆண்டில் திமுக பாஜக கூட்டணி அரசின் போது தான் பிரச்சினையில் உள்ள நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது உண்மை தான். ஆனால் அந்த நியமனத்தின் போது , அவர் மீது எழுத்துமூலமான புகார்கள் இருந்து, அவை நீதிமன்ற 3- பேர் அடங்கிய – collegium- முன்பு வைத்து பரிசீலனை செய்யப்பட்டதா என்ற விவரம் யாரும் சொல்லவில்லை. மேலும் அப்போதைய பிரதமர் மீது அதாவது வாஜ்பாய் மீது நிர்ப்பந்தம் ஏதாவது திமுகவினரால் கொடுக்கப்பட்டதா என்று யாரும் இதுவரை சொல்லவில்லை. புகாருக்கு உட்பட்டவர்கள் பலர் இருந்தாலும் , முடிவு எடுக்கும் குழு அல்லது முடிவு எடுக்கும் தலைமை அதிகாரியிடம் புகார் விவரம் மூடி மறைக்கப்பட்டால் அவரால் ஒன்றும் செய்யமுடியாது. முந்தைய பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் அவர் இந்த நீதிபதிக்கு பதவி உயர்வு அளித்திருந்தால் அவர் மீதும் நாம் வழக்கு தொடுக்கலாம். மன்மோஹன்சிங்கை விமானநிலையத்துக்கே சென்று ஆக்சிஜன் வாயு, மீத்தேன் வாயு, ஹைட்ரஜன் வாயு போன்றவைகள் மிரட்டியதாக செய்திகள் கூறுகின்றன. மன்மோஹனார் நமது நாட்டின் பிரதமர் பதவியில் ஒரு அவலம்.
புகார் இருக்கட்டும், புகார் மீது விசாரணை இன்றி தீர்ப்பு சொல்ல முடியாது என்பது கட்ஜுவுக்கு நன்றாகத் தெரிந்தும் அவர் இப்போது பதவியில் இல்லாத பொது, குற்றம் சாட்டப்படவர் உயிருடன் இல்லாத போது தீர்ப்புச் சொல்லி இருக்கிறார் என்றால் கட்ஜு எப்பேர்ப்பட்ட ஜட்ஜு?
1) புகார் முறைப்படிப் பதியப்படவில்லை.
2) குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தப் படவில்லை.
3) குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது உயிருடன் இல்லை.
4) புகார் யாரிடம் கொடுக்கப் பட்டதோ அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தப் புகாரைத் தள்ளுபடி செய்து ஒரு நடவடிக்கை எடுத்து விட்டார். அப்படியானால் இந்த கட்ஜு, அப்போதே புகார் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று உச்ச நீதிமன்ற நீதிபதியிடம் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும், அதை அவர் செய்யவில்லை, ஏனெனில் அவருக்கு சென்னை உயர் நீதிமறத்தில் இருந்து, உச்ச நீதிமன்றத்துக்குப் பதவி உயர்வு வேண்டும். ஆக, தனது பதவி உயர்வுக்காக அன்று கட்ஜு வாயை மூடிக் கொண்டார் என்பதை இப்போது ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார். ஊழல் என்பது பணத்துக்காகச் செய்யப் படுவது மட்டும் அல்ல. தனது பதவி உயர்வுக்காக ஒரு தவறைச் செய்தாலும் அதுவும் ஊழலே. எனவே, மார்க்கண்டேய கட்ஜு ஒரு ஊழல் நீதிபதி ஆவார்.
தேசிய நீதி ஆணையத்தில் சட்ட அமைச்சர் இருப்பது பேராபத்து. சட்ட அமைச்சர் என்றால் அரசியல். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு எல்லாம் இருக்கும்.
அது சுதந்திரமான நீதித் துறையை அடையும் வழி அல்ல.
#மன்மோஹன்சிங்கை விமானநிலையத்துக்கே சென்று ஆக்சிஜன் வாயு, மீத்தேன் வாயு, ஹைட்ரஜன் வாயு போன்றவைகள் மிரட்டியதாக செய்திகள் கூறுகின்றன #. மிகவும் அருமை கதிரவன் சார். உண்மையை மிக நகைச்சுவையாக சொல்லி இருகிறிர்கள்.
மிகவும் அருமை சேக்கிழான் சார்.
# தமிழகத்தில் முன்னாள் முதல்வர் பழைய கதைகளை அவ்வப்போது கிண்டிவிடுவதில் சமர்த்தர். அதன்மூலமாக தனது நினைவாற்றலை தனக்குத் தானே மெச்சிக்கொண்டு, பிற அரசியல் எதிரிகளை மட்டம் தட்டுவதிலும் அவர் சூரர். அவருக்கே அல்வா கொடுத்தவர் தான் நமது கட்ஜு#.
கட்ஜு once said “Mamta is intolerant and not ready to listen to others. You cannot run a government if you are not ready to listen to others. If one is insensitive to criticism they have no right to be in politics.”.