திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்

திரௌபதி குறித்து சமஸ்கிருத மகாபாரதத்தில் இல்லாத ஒரு கதை வழக்கில் உள்ளது. பின்னர் சில மகாபாரதங்களிலும் குடியேறியிருக்கிறது. பருவமல்லாத காலத்தில் பழுத்த மாங்கனி ஒன்றை திரௌபதி கேட்க அர்ஜுனன் அதை கணையால் அடித்து கொடுத்துவிடுகிறான். பிறகுதான் அவர்களுக்கு ஐயம் ஏற்படுகிறது – நாம் தவறு செய்துவிட்டோமோ என்று. கண்ணனிடம் கேட்கிறார்கள். கண்ணன் சொல்கிறான் அது சந்தீபன மகரிஷி உண்ணுவதற்கென்று. நிச்சயமாக மகரிஷி வந்தால் சாபம்தான். ஏற்கனவே வனத்தில் அலைந்து கொண்டிருக்கும் நமக்கு இப்போது ரிஷி சாபம் வேறா… என்ன செய்வதென்று கண்ணனைக் கேட்கிறார்கள். கண்ணன் சொல்கிறான் நீங்கள் ஒவ்வொருவரும் ஆழ்மனதில் ஒரு ஆசையைக் கொண்டிருப்பீர்கள். பிறழ் ஆசை. அதை சொல்லுங்கள் மாம்பழம் மீண்டும் மரத்தில் பழையது போல போய் சேர்ந்துவிடும். ஒவ்வொருவரும் சொல்கிறார்கள் தருமனுக்கு உள்ளே அரசாட்சி செய்ய ஆசை என்று ஆரம்பித்து அது செல்கிறது. இறுதியில் திரௌபதியின் முறை. அவள் மனதில் கர்ணன் மீது ஆசை இருப்பதை/ இருந்ததைக் கூறுகிறாள். மாங்கனி சென்று மரத்தில் முன் போல சேர்ந்து விடுகிறது.

இந்த கதையைத்தான் பழ.கருப்பையா திரௌபதியை கீழ்மைப்படுத்த பயன்படுத்தியிருக்கிறார். கற்பு என்பதே கற்பிதமான விஷயம்தான். அது கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்டது. ஒரு மரபணு பிறழ்ச்சியால் – mutation- நாளையே ஓரினச் சேர்க்கை அவசியமாகி அதுவே ஒழுக்க விதியென ஏற்கப்படலாம். இருபால்-சேர்க்கை ஆபத்தானதாகி குற்றமாகலாம். உடல் சார்ந்த எதுவுமில்லை ஒரு பாலினத்தவரின் மேன்மையை போற்றுவது. கண்ணகியை போற்றி மாதவியை எவரும் தூற்றுவதில்லை. கண்ணகி, மாதவி இருவருக்குமே இருக்கும் அளவு கடந்த தூய அன்பே இங்கு அவர்கள் மதிக்கப்படுவதற்கு காரணம். இதில் கண்ணகி திராவிட பெண் மாதவி ஆரிய பெண் என்று பேசுவது எவ்வளவு மடத்தனமோ அதற்கு சற்றும் குறையாத மடத்தனமே பழ.கருப்பையாவின் மடத்தனம்.

இதனை விளக்க ராமாவதாரத்திலிருந்தே ஆரம்பிப்பது சரியாக இருக்கும்.

காவியங்களில் இல்லாத சில விஷயங்களை பொது மனப்புத்தி சேர்ப்பதுண்டு. உதாரணமாக அகலிகை. நம் மனதில் மிகவும் ஊறிய ஒரு சித்திரம் கௌதமரின் வடிவில் இந்திரன் வந்தான். அறியாமல் அகலிகை தன்னை இழந்தாள் என்பது. ஆனால் ஆதி கவியும் சரி கம்ப நாட்டாழ்வாரும் சரி அப்படிச் சொல்லவில்லை. ’மதிம் சகார துர்மேதா தேவராஜகுதூஹலாத்’ என்பது ஆதிகவி வாக்கு: தேவேந்திரனே தன்னை விரும்புகிறான் என்று குதூகலத்தில் மதியிழந்து தன்னை இழந்தாள் என்கிறார். கம்ப நாட்டாழ்வார் கதைப் போக்கை கொஞ்சமாக மாற்றத்தான் செய்கிறார். ஆனால் தெளிவாக அவள் உணர்ந்தும் ஓரவில்லை என்கிறார்.

உணர்ந்தனள், உணர்ந்த பின்னும்
தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்

ராம காவியத்தில் வால்மீகி மிக முக்கியமான ஒரு விஷயத்தை பின்னர் சொல்கிறார்: உடலால் செய்த குற்றத்துக்கான கழுவாய் அவளுக்கு தவத்தால் கிடைத்தது. தபோபலத்தால் தூய்மை அடைந்தாள் -’தபோபல விசுத்தாங்கி’. அகலிகை கல்லானாள். ராமன் பாதத்தால் மீண்டும் எழுந்தாள் என்பது வால்மீகிக்கு வெளியே உருவானது. அகலிகை கவுதமன் சாபத்தால் கல்லானாள் என்பது தமிழ்நாட்டில் மிகவும் வழக்கிலிருந்தது. திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபத்தில் இக்காட்சி தீட்டப்பட்டிருந்தது என பரிபாடல் மூலம் அறிகிறோம்:

இந்திரன் பூசை: இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது …

ஆண்-மைய சமுதாயத்தில் பெண் உடல் முக்கிய உடமை ஆகிறது. அவள் உடலால் மாசுபட்டால் அத்துடன் அவளை மீளவே முடியாத அசுத்தமடைந்து விட்டதாக பார்க்கும் போக்கு உண்டு. அகலிகை அந்த போக்கு எதிராக எழுகிறாள். அவள் அறிந்தே குற்றம் செய்தாள். இக்குற்றத்துக்கு பல மதங்களில் கல்லால் அடித்து கொல்லும் பழக்கம் அக்காலகட்டத்தில் இருந்தது. ஆனால் அகலிகை அக்குற்றத்தை தன் தவத்தால் களைந்தாள். எனவே ராமன் அவள் பாதங்களில் விழுந்து வணங்கினான் என்கிறார் வால்மீகி. ‘பஞ்ச கன்யா ஸ்மரேத் நித்யம்’ என்று சொல்லும் ஸ்லோகத்தில் முதலில் வைக்கப்படுபவள் அகலிகை. இதுவே திரௌபதிக்கும் பொருந்தும்.

அதிசயமான விஷயமென்னவென்றால் திரௌபதி குறித்த இக்கதையின் மற்றொரு வடிவத்தை காலனிய இந்தியவியலாளரான வில்லியம் ஜோன்ஸ் நீள் கவிதையாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கண்டு வியக்கிறார். ஜோன்ஸ் சொல்லும் கதையில் திரௌபதியிடம் ஒரு பிராம்மணன் கிருஷ்ண லீலைகளை விவரிக்கிறான். அப்படி விவரிக்க விவரிக்க அவனே கிருஷ்ணனை போல ஜொலிக்கிறான். திரௌபதியின் கரங்களை பற்றுகிறான். மாங்கனி மீண்டும் மரமேக இந்நிகழ்ச்சியை அவள் சொல்கிறாள். சொல்ல சொல்ல ஐந்து சகோதரர்களுக்கும் இதயம் பட பட என அடிக்கிறது. அர்ஜுனன் முகம் கோபத்தில் சிவக்கிறது. ஆனால் அந்த அந்தணன் என்னை முத்தமிட்டான் அதைத்தவிர வேறெதுவும் செய்யவில்லை / நடக்கவில்லை என்கிறாள் திரௌபதி. மாங்கனி மரமேகுகிறது.

இங்கிருந்து ஜோன்ஸ் தாவுகிறார்.

Could you, ye Fair, like this black wife,
Restore us to primeval life,
And bid that apple, pluck’d for Eve
By him, who might all wives deceive,
Hang from its parent bough once more
Divine and perfect, as before,
Would you confess your little faults? …

Enchanted fruit or Hindu wife என கூகிளிட்டால் முழு பாடலும் கிட்டும். படியுங்கள்.

சைத்தானால் தூண்டப்பட்டு விலக்கப்பட்ட கனியை பறித்த ஏவாளுடன் தன் அகத்தை வெளிப்படுத்தி கனியை மீண்டும் மரமேக வைத்த திரௌபதியை ஒப்பிட்டு மானுடத்தின் மீட்சியே இத்தன்மையில் இருப்பதாக சுட்டிச் செல்கிறார் ஜோன்ஸ் – அக்காலத்திய கிறிஸ்தவ தாக்கம் நிறைந்தே. எனினும் இந்த ஒப்பீடு முக்கியமானது. பெண் தைரியமாக தன் முழுமையை முன்வைப்பதிலும் அதை குறுகிய ஒழுக்க விதிகளைத் தாண்டி இதயபூர்வமாக அவள் கணவர்கள் ஏற்பதிலும் அடிப்படையாக இருக்கும் அன்பு மானுடத்தை முழுமையடைய வைக்கும் எனும் ஒரு அக உண்மையை ஜோன்ஸால் இங்கு காண முடிந்திருக்கிறது. ஆனால் பழ.கருப்பையா? எவ்வளவோ மிகச் சிறந்த அறிஞர்களை நம் சமயத்துக்கு அளித்த ஒரு சமுதாயத்தில் இப்படி ஒன்றும் கண் திருஷ்டிக்கென பிறந்து தொலைத்திருக்கிறது.

ஒரு பெண்ணின் மகத்துவம் அவள் உள்ளாற்றலில் இருந்து வருகிறது. கண்ணகிக்கு காவியம் என்ன சிறப்பளிக்கிறதோ அதையே மாதவிக்கும் அளிக்கிறது. சீதைக்கு என்ன சிறப்போ அதே சிறப்பு திரௌபதிக்கும் உண்டு. அகலிகைக்கும் உண்டு. ஆனால் இதெல்லாம் உடலினால் பெண்ணை வரையறை செய்யும் மனப்போக்குடன், சாதி வெறி பிடித்து சாதியை விட்டு கலியாணம் செய்பவர்களை சாதியை விட்டு தள்ளவேண்டும் என்று கூவி அலைகிற கட்சிகள் தாவியே வாழும் ஒரு மாமிச மலைக்கு புரியுமா என்ன? அதனிடம் தீராவிட வக்கிர மொண்ணைத்தனத்தை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

******

6 Replies to “திரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்”

 1. குருப்யோ நம:
  அ.நீ அருமையான சிந்தனை. ஸனாதன தரும சிந்தனைகள் புரியவே ஒரு
  விரிவுரையாளர் தேவை

 2. இந்த கதையைத்தான் பழ.கருப்பையா திரௌபதியை கீழ்மைப்படுத்த பயன்படுத்தியிருக்கிறார். கற்பு என்பதே கற்பிதமான விஷயம்தான். அது கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்டது. ஒரு மரபணு பிறழ்ச்சியால் – mutation- நாளையே ஓரினச் சேர்க்கை அவசியமாகி அதுவே ஒழுக்க விதியென ஏற்கப்படலாம். இருபால்-சேர்க்கை ஆபத்தானதாகி குற்றமாகலாம்.
  ————————–
  தங்களின் கருத்து அபத்தமானது.ஆபத்தானது. இது போன்று தயவு செய்து எழுதாரீர்கள். ஒருபால் உறவு வக்கிரமானது. அசிங்கம்.பிரம்மச்சரியம் பேசும் இந்து மத்தில் இப்படி ஒரு நியாயமா ? கங்கையில் சாக்கடைகலந்து விட்டது.
  ———————————————–
  இந்த கட்டுரையேஅநாவசியம்.திரொபதி இந்து மக்களுக்கு முன் உதாரணம் அல்ல.ஒரு வரலாற்று பெண் அல்லது கற்பனை கதா பாத்திரம்.

 3. ‘மாமிசமலை ‘ என்பது போன்ற தரமற்ற , தனி மனித தாக்குதலை அ .நீ. போன்றவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் நன்று .

 4. S.Dhanasekaran அவர்களுக்கு,
  எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
  மெய்ப்பொருள் காண்ப தறிவு.(குறள்: 355)

  எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

  என்கிறார் வள்ளுவர். அவ்வகையில் மெய்பொருளை அறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அரவிந்தன் நீலகண்டன் உண்மையில் மனிதருள் புனிதர். அவ்வாரல்லாதவரை அவர் ‘மாமிசமலை‘ என்று கூறினால் அதில் எவ்வித தவறும் இல்லை.

  கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
  புண்ணுடையர் கல்லா தவர்.

  என்றார் வள்ளுவர் (குறள்: 393) வள்ளுவரின் தரத்திற்கு இது ஏற்புடையதல்ல கல்லாத மனிதனின் கண்களை புண் என்பதா என யாரும் அவரை கேட்க இயலாது. அது போலவே இந்த ஞான சூனியங்களை ஏசுவதில் தவரொன்றும் அல்ல. தரமற்றுதுகளை தரமற்றது என்றுதான் சொல்ல வேண்டும். தகரத்தை தங்கமென்று சொல்ல இயலாது.

  எனவே, அது தரமற்ற விமர்சனமோ தனி மனித தாக்குதலோ அல்ல. இது போன்ற வார்த்தைகள் அவர்களை வசைபாடவாவது பயன்படட்டுமே.

 5. திரௌபததியைப் பற்றிய இந்தக் கதை வியாச பாரதத்தில் இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைப் பற்றிக் கொண்டு கீழ்த்தரமான வாதம் செய்த கருப்பய்யா வன்மையாக கண்டிக்ககப்பட வேண்டியவரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *