நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்

இன்று மகாசிவராத்திரி. 

இறைவனுக்குச் சாத்திக் களைந்த மலர் மாலை நின்மாலியம் எனப்படும். அது இலையாயினும் பூவாயினும் மிகப் புனிதமானதாகக் கருதப்படும். இக்கோட்பாடு சைவம் வைணவம் இரண்டுக்கும் உரியதாம். நின்மாலியத்தின் உயர்வை விளக்கும் நிகழ்ச்சிகள் வரலாற்றிலும் உண்டு; புராணத்திலும் உண்டு

சேரன் செங்குட்டுவன் ‘வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக், கடவு ளெழுதவோர் கற்கொண்டு ‘ வருவதற்கு, ‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதி யுருவத் துயர்ந்தோ’னாகிய சிவனின் சேவடியை வெட்சிமாலையொடு சிரசில் புனைந்து, மானிடர் யாரையும் வணங்காச் சென்னி இறைஞ்சி கடக்களியானைப் பிடர்த்தலை ஏறினன். அப்பொழுது ‘குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்க’ என, ஆடக மாடத்தறி துயி லமர்ந்தோனாகிய அனந்தபத்மநாபனின் சேடம் (நின்மாலியம்) கொண்டு வந்து அந்தணர் சிலர் ஏத்தினர்.

சேரன் செங்குட்டுவன், சைவன், ‘தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுளின் வண்ணச் சேவடியைத் தன் முடிமேல் வைத்தவன். ஆகவே, அனந்தபத்ம நாபனின் சேடத்தை வாங்கித் தன் அணிமணிப் புயத்தில் தாங்கினன். சைவனேயாயினும், சேரன் செங்குட்டுவன், திருமாலின் சேடத்தை அலட்சியம் செய்யாது, பணிவுடன் பெற்றுத், தோளில் தாங்கினான். சேடத்தைச் சிரசில் தாங்குதல்தான் முறை. சேரன் செங்குட்டுவனின் சிரசில் நீங்காமல் சிவனின் சேவடி உள்ளது. அதன்மேல் அல்லது அதற்கு நிகராகத் திருமாலின் சேடத்தை வைக்கச் சைவனான அவன் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. எனவே, தோள்மீது தாங்கி அதற்கு உரிய மரியாதையைச் செய்தான். சைவர்கள் திருமாலின் சேடத்திற்கும் தரும் மரியாதையைச் சேரன் செங்குட்டுவன் தன் செயலில் காட்டினான்.

பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம் நின்மாலியத்தை அலட்சியம் செய்த இந்திரனும் அவன் வாகனமாகிய வெள்ளையானையும் அடைந்த தண்டனையைக் கூறுகின்றது.

கருவாசனையை கழிக்கும் காசி நகரில் துருவாசமுனிவர் விசுவநாதனை ஆகம முறைப்படி வழிபட்டு , இன்புற்று அருச்சனை செய்தார். அருச்சனை முடிவில் பெருமானின் சிரசிலிருந்து தாமரை மலரொன்று சரிந்து விழுந்தது. அதனைத் துருவாசமுனிவர் கரத்தில் ஏந்தினார். பரமனின் சிரசிலிருந்து சரிந்த அந்த உயரிய நின்மாலியத்தை உயர்ந்த ஒருவனுக்கு அளிக்க விரும்பிய முனிவர் இந்திரலோகத்தை அடைந்தார்.

இந்திரன் தன் செல்வச் செருக்கெல்லாம் வெளிப்படத் தன் வெள்ளையானைமீது ஊர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான். இந்திரனைத் தாங்கிவரும் பெருமையினால் ஐராவதமும் மதக் களிப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தது.

துருவாசமுனிவர் பரமனின் நின்மாலியத்தினை இந்திரனிடம் அளித்து வாழ்த்தினார். பெரியோர் அளிக்கும் நின்மாலியத்தை இருகரம் நீட்டிப் பெறுவதுதான் முறை. ஆனல் அறிவிலாத இந்திரன் மரியாதையின்றி ஒருகரம் நீட்டி வாங்கி அதை அலட்சியமாக யானையின் மத்தகத்தின் மீது வைத்தான்; யானை மத்தகத்தின்மீது இருந்த மணமலரைத் தன் துதிக்கையினால் எடுத்துத் தரையில் வீசித் தன் நெடுந்தாளால் மிதித்துச் சிதைத்துச் சென்றது. சினமுற்ற துருவாசர், இந்திரனை நோக்கி, ’ உன்னுடைய சென்னி செழியரில் (செழியர் – பாண்டியர்) ஓர் வீரனின் வளையால் (வளை ஒருவகை படைக்கலன்) சிதறுக. உன்னுடைய நாற்கோட்டு வெண்ணிறத்த குஞ்சரம் காட்டு யானையாக அலைக’ எனச் சாபமிட்டார்.

இந்த இரண்டு நிகந்ழ்ச்சிகளும் நின்மாலியத்தின் சிறப்பினை உணர்த்துவன. இனி, நின்மாலியத்தால் தோன்றிய தெய்வப் பாடலை அறிவோம்.

புஷ்பதந்தர் என்னும் கந்தர்வ தலைவர், காசிமன்னனான வாகு என்பவன் தன்னுடைய போகத்துக்கு அமைத்திருந்த நந்தன வனத்திலிருந்து நாள்தோறும் உயர்ந்த மணமிக்க மலர்களைக் கவர்ந்து சென்று சிவபூசை செய்து வந்தார். இவர் , நிலத்தில் கால் பதியாது, வானத்தில் சஞ்சரிப்பவ ராதலால் நந்தனவனத்தைச் சுற்றிலும் இருந்த கடுமையான காவல் பயனற்றதாயிற்று.

அரசன் நுண்ணறிவுடையவ னாதலால் மலர்க் கள்வனைப் பிடிக்க அரியதொரு சூழ்ச்சியினைச் செய்தான். நந்தன வனமெங்கும் சிவ நின்மாலியங்களைத் தூவச் செய்தான். மலர் பறிக்க வந்த புட்பதந்தர், சிவநின்மாலியங்களை மிதித்துச் சிவாபராதத்துக்கு ஆளானார். ஆகாயத்தில் பறக்குமாற்றலை இழந்தார்; மண்ணுலகில் தங்க வேண்டியவரானார்.

சிவாபராதத்திலிருந்து உய்யவும் மீண்டும் கந்தர்வ நிலைபெற்று ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெறவும் சிவபெருமானின் பெருமைகளைப் பாடித் தோத்தரிக்க விரும்பினார்.ஆனால் பெருமானின் பெருமைகளை எடுத்துப் புகழும் ஆற்றல் தனக்கு இல்லையே எனவும் வருந்தினார். இறைவன் அருள் புரிந்தார். சிவபரம்பொருளின் மகிமைகளை எடுத்துக் கூறித் துதிக்கத் தொடங்கினார்.

சிவனின் மகிமைகளை எடுத்தோதிப் போற்றும் நூலாதலின் இது ‘சிவமஹிம்ந ஸ்தோத்திரம்’ எனப் பெயருடைய தாயிற்று.

வடமொழியில் உள்ள இந்த அருமையான நூல், பரஞ்சோதி முனிவரால் தம்முடைய திருவிளையாடற் புராணத்தில்,

“பந்தநான் மறைப்பொருட் டிரட்டென வடபாடல் செய்தெதிர் புட்ப
தந்தனேத்த” (திருமணப்படலம் 112)

எனப்புகழப்படுகின்றது. இந்த அரிய நூலுக்கு வடமொழியில் ஜகந்நாத சக்ரவர்த்தி என்னும் வங்காள அறிஞர் உரை எழுதியுள்ளார். அதனை ஆங்கிலத்தில் வங்காள உயர்நீதி மன்ற நீதியரசர் ஸர் ஜான் உட்ரூஃப் எனும் ஆங்கிலேயப் பெரியவர் ‘ஆர்தர் ஆவலான்’எனும் புனைபெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் துள்ளார். சுவாமி விவேகாநந்தரும் இந்நூலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நூலில் 36 பாடல்கள் உள்ளன. அனைத்தும் சிவபரம்பொருளின் பெருமையை எடுத்துமொழிவன. அவற்றுள் சிலவற்றை எடுத்துச் சுவைப்போம்.

*******

‘உன்னுடைய அநந்த கல்யாண குணங்களில் எதை எவ்வாறு அறிந்து எப்படிப் பாடித் துதிப்பேன்’ எனச் சுந்தரமூர்த்தி நாயனார் கவலைப்பட்டதைப் போன்றே, புஷ்பதந்தரும் ‘உன்னுடைய எல்லையற்ற மகிமைகளில் எதை எப்படி இயம்புவேன்’ என ஏங்கினார். இந்த ஏக்கமே முதற்பாட்டாக அமைந்தது. இப்பாட்டு இந்த நூலின் உட்பொருளையும் ஆசிரியரின் மனக் கருத்தையும் எடுத்துக் காட்டும் பாயிரமாகவும் அவையடக்கமாகவும் உலகோரை ஆற்றுப் படுத்தும் அற உரையாகவும் அமைந்தது.

“அரனே ! உன்னுடைய பெருமைக்கு உயர்வெல்லையே இல்லை. உன் பெருமையை அறியாதவர் அதனைக் குறித்துப் பேசுதல் என்பது பிழையாம். வேதன் எனச் சிறப்புப் பெயருடையவனும் ஓதுதற்குக் கருவியாக நான்கு நாக்களைக் கொண்ட நான்முகமுடையோனுமாகிய பிரமன் முதலாய தேவர்கள் உன்னைத் துதிக்கும் மொழியும் குறைபடுதல் எனும் குற்றமுடையதாகும். (விரிக்கில் பெருகும்;சுருக்கில் எஞ்சும்) அதேசமயம், அன்பினால் உம் மகிமைகளை மனத்தில் எண்ணி, அவரவர் அறிவுக்கு எட்டிய அளவில் உன்னைப் புகழ்ந்து துதித்தால் அது குற்றமாகாது. அதனாலென்னுடைய உரையும் உனக்கு ஏற்புடைத்தாகும்.

பெருமையுன துயர்வெல்லை யில,தறியார்
பேசுவது பிழையா மென்னில்
சுருதியுணர் பிரமன்முத லியருமுனைத்
துதிமொழியுந் துரிசா மன்பால்
கருதியுணர் தமதுமதி யளவுபுகல்
பவரெவர்க்குங் கரிசின் றென்றால்
ஒருபிழையு மிலதாகு மரனேயென்
னுரையுமுனக் கேற்ப தாமே.

(பாடல் 1, சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்)

[கரிசு- பிழை. துரிசு – குற்றம்.]

மஹிம்ன​: பாரம்ʼ தே பரமவிது³ஷோ யத்³யஸத்³ருʼஶீ
ஸ்துதிர்ப்³ரஹ்மாதீ³னாமபி தத³வஸன்னாஸ்த்வயி கி³ர​: |
அதா²(அ)வாச்ய​: ஸர்வ​: ஸ்வமதிபரிணாமாவதி⁴ க்³ருʼணன்‌
மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர நிரபவாத³​: பரிகர​:|| 1||

சிவனே முத்தொழிற்கும் முதல்

சிவனே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் திருவந்தொழில்களுக்கும் கருத்தா.

இவற்றில் முதல் மூன்றும் மாயையாகிய சடத்திலும் பின்னைய இரண்டும் சித்தாகிய உயிரிலும் நடைபெறும். ஐந்தொழிலை முத்தொழிலாகவும் கூறுதல் உண்டு. மறைத்தல் தொழிலைத் திதியாகிய காத்தலிலும் அருளல் தொழிலைச் சங்காரமாகிய ஒடுக்கலிலும் அடக்கிக் கூறுவர்.

சிவபெருமான் மாயாகாரியமாகிய முக்குணங்கள் இல்லாதவன். மாயாகாரிய நிர்குணனாகிய சிவன் சர்வஞ்ஞம் முதலிய அருட்குணங்கள் கொண்டவன். ஆன்மாவின் பொருட்டு சிருட்டி திதி சங்காரம் எனும் முத்தொழில்களை மாயை இடமாகச் செய்யும் போது, அத்தொழில்களுக்குரிய குணங்களோடு இயற்றுவன்.

“……. விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத் தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை”
(ஞானசம்பந்தர், திருவெழுகூற்றிருக்கை)

“அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே” (11ஆம் திருமுறை)

“எதினின்று இந்தச் செந்துக்களெல்லாம் பிறக்கின்றனவோ, பிறந்தவை எதனால் நிலையுறுகின்றனவோ (திதி, திரோபவம்) , ஒழியுங்காலத்து அவை எதனுட் பிரவேசிக்கின்றனவோ , அதனை அறிதி; அது பிரஹ்மம்” (தைத்திரீயோபநிடதம்)

இதனால் படைத்துக் காத்து அழிப்பது (சிவப்)பிரஹ்மம் எனப் பெறப்படுகின்றது

முக்குணங்கள் – சாத்துவிகம், இராஜசம், தாமசம். இறைவன் ராஜதகுணவடிவாக அயனிடத்தும், சாத்துவிக குணவடிவாக அரியிடத்தும், தாமச குணவடிவாக உருத்திரனிடத்தும் நின்று படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களைச் செய்கின்றான். ஆயினும் அவன் மும்மூர்த்திகளில் ஒருவனல்லன்.

“முக்குணத்தின் மூவுருவி னின்றுலகம்
முழுவதையும் படைத்துங் காத்தும்
ஒக்கவழித் திடுமுனது பேரிறைமை
மறைமூன்றும் உணர்த்தக் கேட்டும்
தக்கநிறை புண்ணிய மிலாதசிலர்
அதையிகழ்ந்து தருக்கும் கொள்வர்;
மிக்கமதி வாணர்களுக் கம்மொழிகள்
செவிசுடுமே விளங்கும் வள்ளால்.

(பாடல் 4, சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்)

தவைஶ்வர்யம்ʼ யத்தஜ்ஜக³து³த³யரக்ஷாப்ரலயக்ருʼத்‌
த்ரயீவஸ்து வ்யஸ்தம்ʼ திஸ்ருஷு கு³ணபி⁴ன்னாஸு தனுஷு|
அப⁴வ்யானாமஸ்மின்‌ வரத³ ரமணீயாமரமணீம்ʼ
விஹந்தும்ʼ வ்யாக்ரோஶீம்ʼ வித³த⁴த இஹைகே ஜட³தி⁴ய​:|| 4||

“ஈற்றில் நினையே சேர்வர் சிவமாம் தேவே”

சிவன் ஒருவனே தேவன். அவனை அடையும் மார்க்கங்கள் பல. ‘யாதொரு தெய்வங் கொண்டீர்! அத்தெய்வமாக மாதொரு பாகனே வருவன்”. ஆன்மாக்களின் மனப்பக்குவம், அறிவு பல திறத்தன. அவற்றிற்கேற்பவே சிவனும் குருவாய் வந்து அவ்வான்மாக்களை நெறிப்படுத்தினான். எனவே எல்லா நெறிகளும் அவனால் படைக்கப்பட்டனவே. ‘விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதே யாகும்”.

மலைமேல் பெய்த மழைநீர் ஆறாக சமதளத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும் நதிகளிற் சில நேரே கடலிற் புகும்; வளைந்து வளைந்து தடைபட்டுப் பட்டுப் பாயும் நதிகளும் இறுதியில் கடலில்தான் சங்கமம் ஆகும்.

அதுபோன்றே சமய உலகில் வேதாந்தம்., சாங்கியம்,யோகம், பாசுபதம் , வைணவம் எனப் பல சமயநெறிகள் உள்ளன. அவை தம்முள் வேறுபட்ட கொள்கைகளும் அனுட்டானங்களும் உடையன. ஒவ்வொன்றும் அபிமானத்தாலே தன்னுடைய கொள்கையே பெருமையுடையது, மேன்மையது என்று கூறிக் கொண்டாலும் , நேராகச் செல்லும் நதியும் வளைந்து செல்லும் நதியும் இறுதியில் கடலைச் சேர்ந்தே முடிவதுபோல எச்சமயத்தாரும் இறுதியில் சிவனைச் சேர்ந்தே முத்தி பெறுவர்.

அருமறையே சாங்கியமே யோகம்மே
பசுபத மரிமார்க் கம்மே
பெருமையுடைத் தெனவொன்றே பேணியொழு
குநருமிச்சா பேதத் தாலே
வருநதிகள் நேர்புகுவ வளைந்துசெலு
மவையும்வழி வழியே யீற்றில்
திருவின்மிகு கடல்புகுத லெனநினையே
சேர்வர்பர சிவமாந் தேவே.

(பாடல் 7 – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்)

த்ரயீ ஸாங்க்²யம்ʼ யோக³​: பஶுபதிமதம்ʼ வைஷ்ணவமிதி
ப்ரபி⁴ன்னே ப்ரஸ்தா²னே பரமித³மத³​: பத்²யமிதி ச|
ருசீனாம்ʼ வைசித்ர்யாத்³ருʼஜுகுடில நானாபத²ஜுஷாம்ʼ
ந்ருʼணாமேகோ க³ம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ|| 7||

அருமறை- வேதாந்த நெறி. அரிமார்க்கம் – வைணவசமயம்.

இப்பரந்த கருத்தாலே சிவத்தைச் “சமயாதீதப் பழம்பொருள்” என்பர். சிவராத்திரியில் இச்சிவத்தின் மகிமைகளைத் தியானிப்போமாக.

4 Replies to “நின்மாலியம் தந்த தெய்வப் பாடல் – சிவ மஹிம்ந ஸ்தோத்திரம்”

  1. மதிப்பிற்குரிய ஐயா,
    தங்கள் கட்டுரை சிவராத்திரி தினத்தன்று எத்தகையதொரு உயரிய இறையுணர்வில் ஆழ்த்தி மகிழ்வித்தது என இயம்பச் சொற்களே இல்லை. தங்கள் திருவடிகளுக்கு வணக்கம். வெளியிட்ட தமிழ் ஹிந்து இணைய தளத்தாருக்கும் நன்றி.

  2. அபுதாபி இளவரசா் தனது பேச்சை ஜெயஸ்ரீராம் என்று துவங்கியிருக்கின்றாா் என்று வாடஸ் அப் செய்தி வந்துள்ளது. சரி என்றால் முழுமையாக செய்தியை வெளியிடலாம்.

  3. Sorry – please ignore my previous note on this subject. That guy in the video was not the Sultan and it was apparently a journalist. Apologies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *