எச்சரிக்கை – இது ஒரு பொருளாதார நிபுணனின் கருத்து அல்ல – பாமரனின் கருத்து மட்டுமே.
மோடி தலைமையிலான பிஜேபி அரசு தனது ஐந்தாண்டின் கடைசி ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது.
ஒரு தோட்டம் உருவாக்க வேண்டுமானால் அதைக் கட்டாந்தரையினில் உருவாக்கி விட முடியாது. முதலில் நிலத்தில் உள்ள களைகள் கல்லுகளை நீக்க வேண்டும், உழ வேண்டும், தேவைப் படும் சத்துக்களை அளிக்க வேண்டும், மண்ணை சுழற்ற வேண்டும், நீர் அளிக்க வேண்டும் கடைசியில்தான் நாற்றுக்களை நட முடியும். அதிலும் சில வளரும் வளராது அனுபவத்தின் பேரில் அதை வளர்க்க வேண்டும்.
அது போலவே கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசாங்கங்களினால் உருக்குலைக்கப் பட்ட இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை சீரமைக்க இந்த ஐந்தாண்டுகள் நிச்சயம் போதாது. இப்பொழுது களை மட்டுமே நீக்கப் பட்டுள்ளன மீதமுள்ள வேலைகளைச் செய்ய இன்னும் தொடர்ச்சியான இரு ஐந்தாண்டுகள் தேவைப் படும்.
முதல் ஆண்டில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்கள். அடுத்த ஆண்டில் டிமானிடைசேஷன் என்னும் கள்ளப் பண ஒழிப்பை நடத்தினார்கள். மென் பொருள் கட்டமைப்பை உருவாக்கிய பின்னரே ஜி எஸ் டி கொண்டு வர முடிந்தது. ஆதார் கொண்டு வர முடிந்தது. வீண் செலவுகளை அடையாளம் கண்டு குறைக்க முடிந்தது. அதன் பின்னரே வரி வசூலை கொஞ்சம் சரி செய்த பின்னரே உண்மையான வளர்ச்சிக்கான பட்ஜெட்டை போட முடியும். அதை இப்பொழுதான் ஆரம்பித்துள்ளார்கள்
பட்ஜெட் என்பது இது வரை ஒரு வருடாந்திர சடங்காக நடத்தப் பட்டு வந்தது. ஜி எஸ் டி அறிமுகத்திற்குப் பின்னால் நாய் பிஸ்கட்டுக்கு இவ்வளவு வரி மஞ்சள் பைக்கு அவ்வளவு வரி போன்ற அற்பத் தகவல்கள் அறிவிப்புகள் எல்லாம் இல்லாமல் இப்பொழுதுதான் முதன் முதலாக உருப்படியான இந்தியாவின் தேவைகளுக்கான திட்ட வரையறையாக பட்ஜெட் உருவாகியுள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜட் இந்திய வரலாற்றில் ஒரு முதல் பட்ஜெட்டாகும்.
பட்ஜெட் என்பதே வருமான வரிக்கு எவ்வளவு விலக்கு என்பதை அறிவிக்கும் ஒரு சடங்காக மக்கள் எதிர்பார்த்து பழகி விட்டார்கள். இந்த வருடம் அது நிகழாமல் போனதினால் சம்பளம் மூலம் ஒழுங்காக வரி கட்டும் சாமானியர்கள் கடுமையான அதிருப்தியும் கோபமும் கொண்டுள்ளார்கள். அந்தக் கோபத்தினை தவிர்க்க மோடியின் சர்க்கார் எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. ஏன் சாமானியர்களிடம் பேசக் கூட முயற்சிக்கவில்லை
பண வீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கே முன்னுரிமை கொடுத்திருக்கிறார்களே அன்றி, நாளைக்கு தேர்தலில் இதைச் செய்தால் ஓட்டுக் கிடைக்கும் அதைச் செய்தால் ஓட்டுக் கிடைக்கும் என்று எந்த ஓட்டுக்கான இலவசங்களையும் வழங்கவில்லை. அந்த வகையில் மிகத் துணிவாக சம்பளம் மூலம் வரி செலுத்தும் சாமான்யர்களுக்கு நேரடியான அவர்கள் சட்டைப் பையில் செல்லும் நேரடி சலுகையை அளிக்கவில்லை. மாறாக பண வீக்கத்தைக் குறைத்து விலைவாசிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமாகவும், நேரடி வரிச் சலுகை இல்லாமல் பிற வழிகளிலும் மூத்த வயதினருக்கு சலுகைகள் மூலமாகவும் பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறார்கள்.
இருந்தாலும் நம் ஆட்களுக்கு நேரடியாக தங்கள் கணக்கில் காசு வருவது ஒன்றை மட்டுமே வரிச் சலுகையாக தெரிகிறது. இல்லாவிட்டால் கோபம் கொள்கிறார்கள். மறைமுக பயன்களை உற்று நோக்க மறுக்கிறார்கள். விலைவாசி கட்டுப்பாடு, ஒட்டு மொத்த தேசிய வளர்ச்சி, பிற மறைமுக சலுகைகள் ஆகியவை கண்களுக்குத் தெரிவதில்லை. இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிகளில் விலைவாசியும் ஏறும் வரிச்சலுகையும் இருக்கும் இப்பொழுது ரெண்டும் இல்லை அதுதான் வித்தியாசம்.
ஆக சம்பளம் மூலம் வரி செலுத்தும் சாமான்யர்களின் பகையை அரசு சம்பாதித்துக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் சற்று நிதானமாக யோசித்தால், தலைக்கு மேல் கூரையும் மூன்று வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாத ஏழைகளையும் இதே அரசாங்கம்தானே காப்பாற்ற வேண்டும் என்று யோசித்தால், கொஞ்சம் அவர்களின் கோபம் கட்டுக்குள் வரும்.
ஒரு சிறிய குறுகிய கால தியாகமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்களால் ஆன ஒரு உதவியாக இதை எண்ணிக் கொண்டு மோடி அரசு மீது கோபம் கொள்ளாமல் அவர்கள் தங்கள் ஆதரவை தங்கள் எதிர்கால சந்ததியினரின் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஒரு கசப்பு மருந்தாக எடுத்துக் கொண்டு ஆதரவினைத் தொடர வேண்டும்.
வருமான வரி விலக்குகளைத் தாண்டி இந்த பட்ஜட் மகா மகோ பெரும் திட்டங்களை முன் வைத்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் எவரும் பேசாமல் வருமான வரி விலக்கில் மட்டுமே தொங்கிக் கொண்டு நிற்பது நியாயம் அல்ல. நாடு முழுவதற்குமான மாபெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் விவசாயக் கொள்முதல்களுக்கான திட்டங்களும் இந்திய வரலாறு காணாத திட்டங்கள் ஆகும்.
இவற்றை முழுமையாக செயல் படுத்த இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட ஒபாமா கேர் போன்ற திட்டங்கள் பெரும் சிக்கல்களையும் சிரமங்களையும் சந்தித்தன. இந்தியாவில் இதை செயல் படுத்த பெரும் ஐடி கட்டுமானம் தேவை மருத்துவக் கட்டுமானங்கள் தேவை. இருந்தாலும் ஜி எஸ் டி போலவே டிமானிடைசேஷன் போலவே ஆதார் போலவே இதையும் இந்த அரசு உறுதியாக வெற்றிகரமாக நிறைவேற்றி விடும்
வரி விதிப்புகளில் ஏற்ற தாழ்வுகள் மாற்றங்கள் வருவது எந்த நாட்டிலும் சகஜமே. அமெரிக்காவிலும் கூட பெர்சனல் எக்ஸம்ப்ஷன் எடுக்கப் பட்டது மிடில் க்ளாஸுக்கு அதாவது 200000 டாலருக்கும் கீழே வாங்குபவர்களூக்கு பாதிப்பே. இந்தியாவில் வரி கட்டுபவர்களே 3% மட்டுமே. வருமான விளிம்பை நீட்டிப்பதன் மூலமாக அந்த 3%க்கும் கீழே போய் விடும் அபாயம் உள்ளது. ஆரோக்யமான பொருளாதாரத்தில் அதிக சகவிகித மக்கள் வரி வலைக்குள் வர வேண்டும். அதன் காரணமாகவே மோடி அரசு வருமான வரம்பை நீட்டிக்காது என்று நான் ஏற்கனவே சொன்னேன். அது போலவே நடந்துள்ளது. பண வீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பதே வரி குறைவதை விட முக்கியமான ஒன்று. அதற்கான பாலன்ஸை கொண்டு வருவது ஒரு கழைக் கூத்தாடியின் வேலையை விடக் கடினமானது.
ஆகவே இந்த பட்ஜெட்டை பல காரணங்களுக்காகவும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட்டாகவே கருதுகிறேன். ஏழைகள் மட்டும் அல்ல நடுத்தர வர்க்க மக்களால் கூட இன்று கூடி வரும் மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள முடிவதில்லை. உரிய சிகிச்சை எடுக்காமலேயே பலரும் தானாக இறக்க முற்படுகிறார்கள். இதை நான் தினந்தோறும் என் உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் பார்த்து வருகிறேன். இந்த பட்ஜெட் அதற்கு ஒரு வழி கொணர முயற்சித்திருக்கிறது. மிகவும் அவசியமானதும் முக்கியமானதும் கூட.
மற்றபடி விவசாயிகளுக்காக எவ்வளவுதான் ஒதுக்கினாலும் அவற்றினால் பெரிய பலன் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் குறுகிய நில அளவு பெரிய பிரச்சினை அவற்றினால் பெரிய லாபம் ஈட்ட முடியாது. பெரும் நிலப் பரப்புகளில் கூட்டு விவசாயம் செய்தால் ஒழிய இதைத் தீர்க்க முடியாது. ஒரு சில ஏக்கர்களில் விவசாயம் என்பது எவருக்கும் பயன் அளிக்கப் போவதில்லை. மீண்டும் மீண்டும் கடனும் மீண்டும் மீண்டும் நஷ்டத்தையுமே அவை விளைவிக்கப் போகின்றன. எல்லா உதவிகளும் தற்கால உதவிகள் மட்டுமே.
இந்தியா போன்ற ஒரு சிக்கலான நாட்டில் எல்லாமே கஷ்டம் தான். சிக்கல் தான். எதற்கும் எளிய தீர்வுகள் கிடையாது. தொலை நோக்குப் பார்வையும் ஊழலற்ற அரசையும் கூடுமானவரை அளிப்பவர்களை ஆதரிக்கிறேன். அந்த அளவில் மோடிக்கு மாற்றாக இந்தியாவில் வேறு எவரும் உருவாகாத வரை அவருக்கே என் ஆதரவு தொடரும் – இன்னும் ஒரு சில தேர்தல்கள் வரையாவது.
இவ்வளவு பெரிய பிருமாண்டமான திட்டங்களைச் செயல் படுத்த மிகப் பெரிய ஐடி முதலீடுகளும் கட்டுமான முதலீடுகளும் செய்யப் படும் அவை பெரும் அளவில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும். ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப் பட்டதல்ல. அது போலவே இவை போன்ற மக்கள் நலன் வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தவும் இதே அரசு இன்னும் இரண்டு முறையாவது தொடர்வது அவசியம்.
இன்று வரி விலக்கு தரவில்லை என்பதற்காக மட்டுமே கோபித்துக் கொண்டு நாம் மோடியை எதிர்த்து ஓட்டுப் போடப் போகிறோம் என்றால் நம் முன் உள்ள பிற தேர்வுகள் என்ன? இது வரை ஊழல் அற்ற திறமையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வந்துள்ளார் மோடி. ஆனால் அவருக்கு நேர் எதிராக நிற்பது யார்? அவரை நீக்கி விட்டு நீங்கள் யாரைக் கொணரப் போகிறீர்கள்?
வரும் தேர்தலில் மோடி தோற்கடிக்கப் பட்டால் எதிர்த்து வரப் போவது முட்டாள் ராகுல் தலமையில் முலயம் சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ், மம்தா பேனர்ஜி, மாயாவதி, கருணாநிதி, தேவகவுடா, கம்னியுஸ்டுகள், முஸ்லீம் கட்சிகள் போன்ற சகலவிதமான ஊழல்வாதிகளும் ஜாதிய வெறியர்களும் நாட்டின் முன்னேற்றத்தை இவ்வளவு நாட்களும் சீர் குலைத்த சக்திகளே மீண்டும் தலையெடுக்கும். மீண்டும் இலவசங்களும் மீண்டும் ஊழல்களும் மீண்டும் பயங்கரவாதங்களும் மீண்டும் வளர்ச்சியற்ற பொருளாதாரமும் மீண்டும் உள்நாட்டுக் கலவரங்களும் உருவாகி உங்கள் வாரிசுகளின் எதிர் காலத்தை நிரந்தரமாக நிர்மூலமாக்கி விடும்.
ஆகவே, மோடி சர்க்கார் மீது கோபம் கொள்ளுங்கள். ஆனால் அவரைக் கை விட்டு விடாதீர்கள். இன்றைக்கு நீங்கள் ஒரு வரி விதிப்பிற்காக மோடிக்கு எதிராகப் போடும் ஓட்டு நாளைக்கு உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிரந்தரமாக முடமாக்கி விடும் சர்வ நாசம் செய்து விடும் என்பதை உணருங்கள். ஒரு நொடி சிந்தியுங்கள்.
மோடி சர்க்காரில் நமக்குப் பிடிக்காத எவ்வளவோ உள்ளனதான். சாமான்யர்களை மதித்து அவர்களுக்கு சலுகை நிறைய அளிக்கவில்லைதான், இன்னும் சில கசப்புக்கள் உள்ளனதான். மறுக்கவில்லை ஆனால் நம் முன்னால் இதை விட சிறந்த மாற்று இன்னும் அமையவில்லை. நமக்குக் கிடைத்துள்ள ஒரே துரும்பு இன்று மோடி மட்டுமே. அவரைக் கை விடுவதும் நம் குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க விடுவதும் ஒன்றே. அவரைக் கை விடுவதும் இந்தியாவின் எதிர்காலத்தை நாசம் செய்வதும் ஒன்றே. ஆகவே கோபம் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கோபம் இந்தியாவின், ஏன் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ் செய்யும் ஒரு காரியமாக மாறி விடாமல் கவனமாக இருங்கள்
மோடிக்கு இன்னும் ஒரு தடவை வாய்ப்புக் கொடுங்கள். உங்கள் நம்பிக்கையை நிச்சயம் ஏமாற்ற மாட்டார். அதற்கான அடித்தளத்தை நம்பிக்கையை தன் முதல் ஐந்தாண்டுகளில் அளித்திருக்கிறார். இன்னும் ஒரு அவகாசம் அளியுங்கள். அது வரை உங்கள் கோபங்களை சற்றே ஒத்தி போடுங்கள். உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் இந்தியாவின் எதிர்காலத்திற்காக இதை தயவு செய்து செய்யுங்கள். நன்றி.
******
மோடி வேலை வாய்ப்புகக்ளை உருவாக்கவில்லை என்று சில இந்திய விரோதிகள் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான கேள்விகள் சில:
உங்களது அபிமானத்துக்குரிய நேரு மாமாவும் அவரது குடும்பமும்தானே இந்தியாவை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டிருந்தனர்? அவர்கள் எத்தனை கோடி வேலைகளை உருவாக்கினார்கள் என்று என்றாவது அவர்களிடம் கேட்டதுண்டா?
இன்று மோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று கேட்டது போல இதற்கு முந்தைய மன்மோகன் ஆட்சியில் சொன்னதுண்டா? முதலில் நேருவிய காங்கிரஸ் மாஃபியா ஆட்சிகளில் எத்தனை கோடி வேலைகளை உருவாக்கினார்கள் என்ற தகவல்களை அளித்து விட்டு மோடியிடம் வாருங்கள்.
மோடியின் ஆட்சியில் சாலைகள் போடுவது, துறைமுகங்கள் கட்டுவது, ஸ்மார்ட் சிட்டிகள் கட்டுவது, பெரும் பெரும் கட்டுமானத் திட்டங்கள் கட்டுவது என்று பல லட்சம் கோடிகளுக்கு திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்கள். இவையெல்லாம் உரிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க ஐந்தாண்டுகளுக்கு மேலும் பிடிக்கலாம். காலப் போக்கில் இவை பல கோடி வேலைகளை உருவாக்கும். 150 கோடி மக்கள் வாழும் தேசத்தில் ஒரே நாளில் பல கோடி பேர்களுக்கு வேலைகளை உருவாக்கும் மந்திரக் கோல்கள் எவரிடமும் இல்லை என்பது படிக்காதவர்களுக்குக் கூடப் புரியும். ஆனால் இந்தப் படித்த முட்டாள்களிடம் உள்ள வரம்புமீறிய இந்திய எதிர்ப்பும் மோடி எதிர்ப்பும் இந்த சிறிய உண்மையை புரிந்து கொள்ளும் அறிவைக் கூட மறைத்து விடுகின்றன.
இருந்தாலும் மோடி அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்குவேன் என்று வாக்குக் கொடுத்து அதை செய்தும் வருகிறார்.
அமெரிக்கா போல இந்தியாவில் எத்தனை பேர்கள் நேரடியான முறைசார் வேலைகளில் இருக்கிறார்கள் என்ற கணக்கெடுக்கும் வசதி இல்லை. பி எஃப், இன்ஷ்யூரன்ஸ் போன்றவற்றில் சேர்க்கப் படும் ஆட்களையும் அரசாங்க வேலைகளில் உள்ள ஆட்களையும் வரி செலுத்துவோரையும் வைத்தேதான் இந்தக் கணக்கை எடுக்க வேண்டியுள்ளது. இந்த புள்ளி விபரம் சேகரிக்கும் முறை இன்னும் முழுமை அடையவில்லை. அவை குத்து மதிப்பாகவேதான் சொல்ல முடியும். அப்படிப் பார்த்தாலும் கூட மோடியின் ஆட்சியில் வேலை வாய்ப்புக்கள் அதிக அளவில் உருவாக்கியுள்ளதை பல ஆராய்ச்சிகளும் சொல்கின்றன
அதெல்லாம் வேண்டாம் முத்ரா கடனை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். இது வரையிலும் 50 லட்சம் பேர்களுக்கு கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி ரூபாய்கள் கடனாக வழங்கப் பட்டுள்ளன. இவை அனைத்துமே சிறு தொழில் துவங்குவதற்காக அளிக்கப் பட்டுள்ள கடன்கள். இந்த 50 லட்சம் பேர்களும் தங்களுடன் சேர்த்து ஒரு 5 பேர்களுக்காவது வேலை கொடுத்திருப்பார்கள். ஆக இந்த முத்ரா கடன் மட்டுமே கிட்டத்தட்ட 2.5 கோடி பேர்களுக்காவது குறைந்த பட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியிருக்கும்.
இந்த கடன் தவிரவும் பிற கட்டுமானத் திட்டங்கள் மூலமாகவும் சில கோடி வேலைகள் உருவாக்கப் பட்டிருக்கும். இந்தியாவில் சாலைகளை ரோபோட்டுக்கள் போடுவதில்லை மனிதர்கள்தான் போடுகிறார்கள். பல லட்சம் கக்கூஸ்களை மனிதர்கள்தான் கட்டியுள்ளார்கள். இவை யாவும் ஏராளமான வேலைகளை உருவாக்கியிருக்கும்.
நான் புள்ளி விபரங்களுக்குள் செல்லப் போவதில்லை. காமென் சென்ஸும் குறைந்த பட்ச மூளையும் உள்ள ஒரு பாமரனாக மட்டுமே இதைச் சொல்கிறேன். இதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் மோடி அரசாங்கம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கவில்லை என்று சொல்பவர்கள் ஒரு களிமண்ணுக்கு இருக்கும் மூளை கூட இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேண்டும் என்றே பொய்களையும் அவதூறுகளையும் பரப்பும் அயோக்கியர்களாக மட்டுமே இருக்க முடியும்.
(ச.திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியவற்றின் தொகுப்பு)
“முன்பு கார்ப்பரேட்களின் அரசாங்கம், ஸூட் பூட் கீ ஸர்கார் என்றார்கள். இந்த பட்ஜெட்டில் Long Term Capital Gains வரிக்கு உள்ளாகும் என்ற செய்தியால் பங்குச் சந்தை வீழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அதிக வருமானம் ஈட்டும் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் தரப்படவில்லை. சிறு, குறு நிறுவனங்களுக்குத் தான் அதிக வரிச்சலுகை தரப்பட்டிருக்கிறது. மாறாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மிகப்பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கீழ்நடுத்தர வர்க்கத்தினருக்கும் வறுமைக் கோட்டு மக்களுக்கும் பயன்தரும் வகையில் மாபெரும் மருத்துவக் காப்பீட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையெல்லாம் வைத்து “கார்பரேட் எதிரி மோடி அரசாங்கமே! விவசாயிகளின், ஏழைகளின் நண்பன் மோடியே! நன்றி நன்றி நன்றி” என்றெல்லாம் போஸ்டர்களைக் காணோம். திருப்பித் திருப்பி மிடில் கிளாஸ் அதிருப்தி என்று இல்லாத ஒரு பூதத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பளக்கார மத்தியதர வர்க்கத்தினருக்கு மோதி அரசின் மீது மிகப் பெரிய கோபம் என்றெல்லாம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை. சொல்லப் போனால் வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்திருப்பது வீட்டுக்கடன் போன்று இந்த வர்க்கத்தினர் ரெகுலராக வாங்கும் பல கடன்களின் சுமையைக் குறைத்துள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் முன்னோக்கிய விசையே உள்ளது, தேக்கம் அல்ல. வரிச்சலுகைகளை விடவும் வாய்ப்புகளையே இந்த வர்க்கத்தினர் முக்கியமாகக் கருதுபவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால், இந்த வர்கத்தினருக்கு மோதி அரசின் மீது கடும் அதிருப்தி இருப்பதாக வேன்டுமென்றே ஒரு அலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது பட்ஜெட் அதற்குத் தோதான விஷயமாகி விட்டது. அவ்வளவு தான்.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே பல ஓட்டைகளை உருவாக்கி ஊழல்களை கனகச்சிதமாக செய்யும் கலையைக் கற்று வைத்திருப்பவை இந்தியாவின் ஐ ஏ எஸ் அதிகாரிகள் அமைப்பும் அரசு இயந்திரமும். இவைகள் மோதி அரசு கொண்டுவரும் பல சீரிய முயற்சிகளுக்கும் துடிப்பான சீர்திருத்தங்களுக்கும் முட்டுக்கட்டையாகவும் எதிராகவும் உள்ளன. ஒரு ஆட்சியாளராக மோதி இதை நன்றாகப் புரிந்து கொண்டவர் தான். இந்த டைனோசரை வசப்படுத்தாமல் என்ன செய்ய முயற்சித்தாலும் அது திருப்பித் தாக்கும். இதை உணர்ந்தே கவனத்துடன் ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும் என்பதை குஜராத் முதல்வராக இருந்த நேரடி அனுபவத்திலும் தெரிந்து கொண்டவர் தான் மோதி. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த சிக்கலான வலைப்பின்னலை முழுதாக மோதி அரசால் சீர்செய்ய முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இன்னும் அதிக காலம் பிடிக்கும் சமாசாரம் அது. இத்தனையையும் தாண்டி, இப்போதைக்கும் குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கும் நரேந்திர மோதி ஒருவர் தான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். அவருக்கு ஈடாக அல்ல, அவரில் பாதியளவு மாற்றுக்குறைந்த ஒரு தேசியத் தலைவரைக் கூட இன்று இந்தியாவில் அடையாளம் காட்ட முடியாது என்பதே உண்மை. சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்தினருக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். எனவே மோதிக்கான ஆதரவை அவர்கள் மறுபரிசீலனை செய்வதற்கான முகாந்திரமே இல்லை”.
– ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது
பொருளாதார நிபுணர்கள் என்பவர்கள் குட்டை குழப்புவார்கள். பாமரனின் கருத்து அனைவருக்கும் புரியும்படியாகவே இருக்கிறது. இந்த பட்ஜெட்டின் நிறையான அம்சங்களை விளக்கியமைக்கும், அது எப்படி இந்த அரசின் தொலை நோக்குத் திட்டத்தின் அங்கமாக அமைந்துள்ளது என்பதை விளக்கியமைக்கும் நன்றி.
மோடி அரசின் பெரிய பலவீனம் அதன் செயல்பாடுகளை மக்களிடயே சரியாக விளக்கிச்சொல்ல இயலாமையே. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்ப/கும்பலின் ஆதிக்கத்தில் தழைத்து அதற்கே விசுவாசமாக இருந்துவரும் அதிகார வர்கத்தினரும், தேசீய உணர்ச்சியை மதிக்காத பத்திரிகைகள்/மீடியாக்கள் ஆகியவையும் மோடி அரசுக்கு எதிர்மறையாகவே செயல்படுகிறார்கள். அவர் கட்சியினர் சிலரே தேவையற்ற விஷயங்களைக் கிளப்பி எதிர்மறையான விளம்பரத்திற்கு வழிவகுக்கிறார்கள். மோடி அரசு இதைச் சரியான விதத்தில் எதிர்கொள்ளவில்லை.
பொருளாதார பிரச்சினைகளின் நுண்ணிய அம்சங்களை பொதுமக்கள் புரிந்து கொள்வதில்லை. இந்த விஷயத்தில் பத்திரிகைகளில் வரும் எதிர்மறைக் கருத்துக்களே மக்களுக்கு வழிகாட்டியாகின்றன. இதை மாற்றி முறியடிக்க அரசினர் விசேஷ முயற்சி எடுக்கவேண்டும்.
1966ல் இந்தியா ரூபாயை 33% devaluation செய்தபோது எதோ தேசமே கவிழ்ந்து விட்டதுபோல் இடதுசாரியினர் கூக்குரலிட்டனர். அப்போது அமைச்சர் சி. சுப்பிரமணியம் எழுதி அளித்த விளக்கம் சிறு பிரசுரமாகவே வெளியிடப்பட்டது.
நேரு காலத்தில் ஐந்தாண்டுத் திட்டம், Tighten your belts, Aram Haram Hai போன்ற கோஷங்கள் மக்களிடையே ஒரு மாயையைத் தோற்றுவித்தன.பல கஷ்டங்களைச் சிரித்துக்கொண்டே அனுபவித்தனர்! பெரிய பெரிய திட்டங்களைப்பற்றிய விளம்பரங்களும் மக்களைச் சென்றடைந்தன. பள்ளி, கல்லூரிகளும் இதற்கான கருவிகளாயின. [ எங்கள் கல்லூரி பொருளாதார வகுப்பில் ஐந்தாண்டு திட்டங்களை எதிர்த்து பேசுவதை/எழுதுவதை அனுமதிக்க மாட்டார்கள்!] நாடே நேருவின் காலனியாயிற்று. இதை ஒப்பிட்டால் மோடி அரசின் சாதனைகள் மக்களைச் சென்றடைய அரசு என்ன செய்கிறது? இந்த நிதி அமைச்சரே அவர் பட்ஜெட்டைப்பற்றியோ, மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றியோ எங்காவது விவரமாகப் பேசுகிறாரா? ஆங்கிலத்தில் இவற்றை விளக்க முடியாத மோடி, தென் மாநிலங்களில் என்ன செய்வார்? [ மன் மோஹன் சிங்கும் இவற்றைச் செய்யவில்லை- ஆனால் அவர் ஒரு குடும்பத்தின் அடிமை. அதனால் அவருக்கு ஒரு ‘இமேஜ்’ உருவாக்கப்பட்டது.]
இன்றைய நிலையில் மோடியைப்பற்றிய அதிருப்தியை வளர்க்கவே பலரும் முயன்று வருகின்றனர்..அவருடைய அரசு பற்றிய பொதுக்கருத்து அவருக்கு சாதகமாக இல்லை. அவருக்கு எதிர் அணியில் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள், நாட்டு நலத்திட்டம் அவர்களிடம் இல்லை என்பதை மக்கள் உணரவில்லை.
நமது நாட்டில் சாதனைகள் மட்டும் போதாது. அவற்றைப்பற்றிச் சத்தமிட்டுச் சொல்லவும் வேண்டும்.
இந்த நிலையிலாவது மோடியின் அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.
இந்த செய்திக்கு விவரம் தெரிந்தவர்கள் யாராவது விவரமாக பதில் சொல்ல்வார்களா?
“மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தலைவர் சுசில் சந்த்ரா கூறுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகளில் குறைந்தது 15 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் அதற்கான கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு கணக்கு தாக்கல் செய்யாத 1.98 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். எனினும், இதுவரை ஒருவர் கூட நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை. உரிய பதில் அளிக்காவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்றார்.”
ஒரு அனுமானத்தில் ,இந்த 1.98 லட்சம் பேரில்,ஒரு லட்சம் பேர் (ரூ 15 லட்சம் மட்டும் டெபாசிட்செய்தவர்கள் என்று வைத்துக்கொண்டால் ) சரியான விளக்கம் அளிக்கவில்லையென்றால் அவர்களுக்கு 10% அபராதம் விதித்தால் கூட அரசாங்கத்துக்கு 15,000 கோடி கிடைக்குமே.இது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பெரிய சாதனை அல்லவா?! இதில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாதா?