மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்

கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வ ஸந்த்யா ப்ரவர்ததே |
உத்திஷ்ட நரஶார்தூல கர்தவ்யம் தைவம் ஆஹ்னிகம் ||

– பாலகாண்டம்

“இராமா பொழுது விடிந்தது, எழுந்திரு” என்று சொல்ல வேண்டிய இந்த சமயத்தில் கௌசல்யையைக் கொண்டாடுவது எதற்காகவென்று கேள்வி வரும். அதற்கு -வ்யாக்யானம் கேண்மின் –“உண்பதற்கு உட்கார்ந்த ஒருவன், இலையில் ப்ரசாத பணியாரங்களைப் பரிமாறியிருந்தால், செய்ய வேண்டிய காரியமென்ன? அவற்றைத் திரட்டி எடுத்து உட்கொள்வது தானே செய்ய வேண்டும். அது செய்யாதே “இந்தப் பணியாரம் யார் பண்ணியது? எது கொண்டு பண்ணியது? என்று இங்ஙனே சில விசாரங்கள் செய்து கொண்டு கிடந்தானாகில் அவன் அந்த பணியாரத்தின் அமைப்பிலேயே மிக மிக ஈடுபட்டுவிட்டான் என்றுதெரிந்து கொள்ளலாமன்றோ.

இதுபோலவே விஶ்வாமித்ரரும் ஸ்ரீராமரை எழுப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டிய காரியம் முக்கியமாயிருக்க, அதை விடுத்து , “இப்படி அழகிய பிள்ளையைப் பெற்ற கௌசல்யாதேவி என்ன நோன்பு நோற்றாள் கொலோ ! “ என்று அவளைக் கொண்டாடத் தொடங்கி விட்டார். இது ராமனுடைய அழகு படுத்தின பாடு என்பது தவிர வேறென்ன சொல்ல முடியும்?

முன்பொரு சமயம் 1000 வருடங்கள் தவமியற்றினார். அச்சக்தி முழுதும் த்ரிசங்கு நிமித்தமாக தனியொரு சுவர்க்கலோகம் ஸ்ருஷ்டித்து இழந்தார். மீண்டும் தொடங்கிய, 1000 வருட தவத்திற்குப் பிறகு, ஒருமுறை மேனகையால் அதனை இழந்து சகுந்தலையைப் பெற்று, மனம் வருந்தி, திரும்பவும் தவத்தில் ஆழ்ந்தார் முனிவர். மறுமுறை தான் தவம் செய்யும்பொழுது, ரம்பை அதனை கலைக்க வந்தாள். இவருடைய தேகத்தை தொட்டாள். கண் திறந்த முனிவர் –“ மறுபடியும் முதலில் இருந்தா !” என்று வெகுண்டு “அவளைக் கல்லாகப் போகும்படி சபித்தார். இம்முறை 1000 வருடங்கள் கும்பகம் செய்து ப்ராணனை இதயத்தில் நிறுத்தி, இறுதியாக “ஸ்ரீபிதாமகர் ப்ரம்மர் மற்றும் வஶிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி பட்டம் பெற்றார்.

இப்படிபட்ட விஶ்வாமித்ர முனிவருக்கே, ஸ்ரீராமசௌந்தர்யமும், லாவண்யமும் படுத்தியபாடு இருக்கே அதுதான் –“ கௌசல்யா சுப்ரஜா ராமா”.

இப்பொழுது என்னுடைய தாய் அருளிய பாசுரத்திற்கு வருவோம்.

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா ! நரனே ! உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனிநாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா ! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே.

– நாச்சியார் திருமொழி -2-1

மாமி தன் மகன்= கணவன். உலகில் எல்லோருக்கும் தீம்பு செய்யும் புருஷன், தன் மனைவியிடத்து வந்தால் பொறுக்கவொண்ணாத தீம்பு செய்வான் என்பது ப்ரசித்தமாதலால், அதனை உணர்ந்த இந்த ஆய்க் குலப் பெண்கள், “ஏற்கனவே தீம்பனான நீ எமக்கு கணவனாக வாய்த்தால் எங்களால் துன்பம் அநுபவித்து முடியுமோ? என்கின்றனர்.

இப்பாசுரத்தைக் கண்டால் விஶ்வாமித்திர முனிவர் ஸ்ரீஆண்டாள் மீது எவ்வளவு பொறாமை கொள்வார்?

அடப்பாவிகளே ! 3000 வருடம் தவமிருந்தும் ராமனை, கூட முடியவில்லை. நீங்கள் அவனைக் கணவனாகப் பெற்று, அவனிடம் ஊடவும் செய்கின்றீர்களே !! என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியை மனப்பாடம் செய்யத் தொடங்குவாரா, இல்லையா என்பதனை அன்பர்கள் சிறிது நினைத்துப் பார்க்கவும்.

அதுசரி ! நீங்கள் எப்பொழுது தொடங்குவீர்கள் ?

******

தழிஞ்சி என்றால் என்ன ?

ஸ்ரீஆண்டாள் திருவேங்கடத்தானை மார்புறத் தழுவ ஆசைப்பட்டது தவறா ?

தொல்காப்பியம் என்ன சொல்கிறது?

ஸ்ரீராமாயணம் என்ன சொல்கிறது?

தொல்காப்பியம் புறத்திணைகளை இவ்வாறு பட்டியலிடுகிறது: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண்.

தழிஞ்சி என்பது புறத்திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் பதின்மூன்று துறைகளுள் ஒன்றாம். அவையாவன- 1.படையரவம், 2.எரிபரந்து எடுத்தல், 3.வயங்கல், 4.கொடை, 5.அட்ட கொற்றம், 6.மாராயம், 7.நெடுமொழி, 8.பேராண் பக்கம், 9.பெருஞ்சோறளித்தல், 10.வென்றோர் விளக்கம், 11.தோற்றோர் தேய்வு, 12.கொற்றவள்ளை, 13. தழிஞ்சி

அழி படை தட்டோர் தழிஞ்சியோடு தொகைஇ
கழி பெரும் சிறப்பின் துறை பதின்மூன்றே.

– தொல்காப்பியம், சூத்திரம்-1011

பொருள்: – போரில் அழிவுதரும், பகைவர் படைக்கலங்களை மார்பிலேற்று விழுப்புண் பெற்ற மறவரை மார்புறத் தழுவிக் கொள்ளுதல் என்னும் மிக உயர்ந்ததான பதின்மூன்று துறைகளும் வஞ்சித் திணைக்குரியன.

எடுத்துக்காட்டு 1:

இத்யுக்த்வா ப்ரீதி ஹ்ருஷ்டாங்கோ ராம: தம் பரிஷஸ்வஜே |
ஹநூமந்தம் மஹாத்மாநம் க்ருதகார்யம் உபாகதம் ||

– ஸ்ரீமத்ராமாயணம்-6-2-15

பொருள்:- சீதைப்பிராட்டியை, அசோகவனத்தில் கண்டு, அவளிடமிருந்து செய்தியைக் கொண்டு,திரும்பிய அனுமனை, ஸ்ரீராமர் -தன்னால் இவ்வாறு ஏவப்பட்ட காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்பிய, பேராண்மை படைத்த ஹநுமானை, ஸ்ரீராமர், மகிழ்ச்சியினால் தன் அங்கங்களெல்லாம் புல்லரிக்க, இறுகக் கட்டித் தழுவிக் கொண்டார்.

எடுத்துக்காட்டு 2:

தம் த்ருஷ்ட்வா ஶத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் சுகாவஹம் |
பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்தாரம் பரிஷஸ்வஜே ||

– ஸ்ரீமத்ராமாயணம்-3-31-38

பொருள்:-ஜனஸ்தானத்தில், கர தூஷணர் முதலிய 14,000 அரக்கர்களை 45 நிமிடங்களில் கொன்று, மாமுனிவர்களுக்கு நன்மையை விளைவித்த ஸ்ரீராமரைப் பார்த்து சீதை ஆனந்தப்பட்டாள். கணவரை இறுக கட்டி அணைத்துத் தன்னுடைய முலைகளால் அவனுடைய விழுப்புண்களை வேது கொண்டாள்.

இப்பொழுது ஸ்ரீஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியில் 7ஆம் பதிகம் 4 ஆம் பாடல்:

சங்கமா கடல் கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்து
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழிய புகுந்து ஒருநாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே.

பொருள்:குளிர்ச்சி பொருந்திய மேகங்களே, பாம்பை கயிறாகவும், மலையை மத்தாகவும் கொண்டு, சங்குகள் நிறைந்த திருப்பாற்கடலை கடைந்து, அமுதெடுத்து, முப்பத்து முக்கோடி தேவர்களுடைய துயர் தீர்த்தருளிய பெருவீரனும், திருவேங்கடமலையில் எழுந்தருளி இருப்பவனும், செம்மையான கண்களையுடையவனுமான திருமால் என்னிடம் வந்து, என் முலைகளில் பூசப்பட்டிருக்கும் குங்குமம் போன்ற செஞ்சந்தனக் குழம்பு உதிருமாறு அணைப்பான் எனில் அன் உயிர் என்னை விட்டு நீங்காமல் நிலைத்திருக்கும். இதனை நீங்கள் அவன் பாதம் தொட்டுத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு “தையொரு திங்கள்”, ”நாமமாயிரம்”, “கோழியழைப்பதன்”, ”தெள்ளியார்”, ”மன்னுபுகழ்” என்னும் 5 பதிகங்களில் பரபக்தி நிலையிலிருந்தாள். “வாரணமாயிரம்” பதிகம்-6 க்கு மேல் 14 பதிகங்களில் என்னுடைய தாய், பரக்ஞான நிலைக்குச் சென்றாள். பல அசுரர்களை வென்ற திருமாலின் வீரத்தையே சமாதி நிலையில் கண்டாள். எதிரில் தோன்றியவனை “தழிஞ்சு” செய்ய ஆசைப்பட்டாள்.

******

5 Replies to “மாமிதன் மகன், தழிஞ்சி: ஸ்ரீஆண்டாள் பாசுர அனுபவம்”

  1. ஆண்டாளைப் பற்றிய மூதறிஞர் இராஜாஜி அவர்களின் கருத்து குறித்து தங்கள் விளக்கம் என்ன ?

  2. I fail to understand why people are obsessed with rajaji’s views on Aandaal. Yes, he said that Aandaal is a fictitious figure. So what? That need not be taken as gospel. That is his view.

    Since when did Rajaji become God for hindus so much so that whatever he said should be blindly accepted.?

  3. Sanjay, I agree with you.BTW, who said Gospels are all true? Gospel truth is a myth and they contradict each other quite a bit.

  4. It is not the question of accepting Rajaji as God, as wrongly attributed by one of our readers.The intention was to know the views of the author of this article , on the point referred to therein,which is contextual in nature. As such, expecting the views of the author on a related issue is is nothing but natural.As such,our readers need not be so intolerant of their own counterparts(readers like them) seeking the views of the author on a relevant point.

  5. எவ்வளவு அழகாக ஆண்டாளின் தமிழ் பாசுர மகிமையை அனுபவித்து எழுதியிருக்கும் இக் கட்டுரையில் பின்னூட்டமாக ஆங்கிலத்தில் கட்டுரைக்கு சம்பந்தமில்லாமல் விவாதம் வளர்ப்பதேன்? “தமிழ்” ஹிந்து இதை கவனிக்ககூடாதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *