சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம். 

தொடர்ச்சி.. 

விவசாயம், விலைவாசி ஏற்றம், அணு உலை, சிறப்புப் பொருளாதார மண்டலம், அதீத வரி, ஊழல் போன்ற  பிரச்னைகளுக்கு மடாயலங்கள் என்ன செய்ய என்ற கேள்வி எழுகிறது. பக்தர்களில் பலர் ஆன்மிகமும் அரசியலும் கலக்கக்கூடாதென்று சொல்கிறார்கள். ஆனால், சுவாமி அம்பேத்கரோ அந்தக் காலத்தில் ராஜ ரிஷிகள் ஆன்மிகத்தையும் அரசியலையும் கலந்து செய்தவர்களே… அறம் பேசிய வள்ளுவர் அரசியலும் பேசவில்லையா என்ன… பிளேட்டோ சொன்ன ஃபிலாசஃபர் கிங் என்பவர் ராஜ ரிஷிதானே… சமகால உதாரணமாக காந்தியும் வினோபாவேயும் அதைத்தானே செய்து காட்டியிருக்கிறார்கள். எனவே ஆன்மிகத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் உண்டு… மக்களுடைய லௌகீகத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகி சமூகத்தில் வளம் நிலவினால்தான் அடுத்த கட்ட ஆன்மிகம் நோக்கி அவர்கள் நகரமுடியும். வேதனைகளுக்கு விடிவு தேடியும் துயரங்களுக்குத் துணை தேடியும் இறைவனை வணங்க வருபவர்கள் வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி ஆன்மிகத்தின் அடுத்தகட்டத்துக்கு ஞானத்தின் துணையுடன் தலை நிமிர்ந்து நகரவேண்டும். அதற்கு ஆன்மிகத்துக்கும் அரசியலுக்கும் சமூக நிகழ்வுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது அவசியம் என்று சொல்கிறார்.

முதல்கட்டமாக, மடாலயத்தில் ஒவ்வொரு பிரச்னை சார்ந்தும் நிபுணர்களை அழைத்துவந்து கலந்துரையாடச் செய்கிறார். இன்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் ஒவ்வொரு அரசியல் சக்திகளும் தத்தமது அரசியல் நலன்களுக்கு ஏற்ப உண்மைகளைத் திரித்தும் மிகைப்படுத்தியும் பொதுக்கருத்தை தவறான திசைக்கு வழிநடத்துவதைத் தடுக்கும் முகமாக ஒவ்வொரு விஷயத்தின் இரண்டு தரப்புகளின் நிபுணர்களை அழைத்துப் பேச வைத்து மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வழி செய்கிறார். மடாயலம் சார்பில் ஒரு பத்திரிகையும் தொலைகாட்சி சேனலும் தொடங்க முடிவு செய்யப்படுகிறது. பக்தி சேனலாக இருப்பதோடு சமூக நிகழ்வுகள் தொடர்பான ஆக்கபூர்வமான உரையாடலுக்கான களமாகவும் அது செயல்படுகிறது. சாராயக்கடைகளை மூடச் சொல்லி மடாலயம் சார்பில் ஆலைகள் முன்பாக நடக்கும் போராட்டங்களில் வெற்றி வேல்… வீர வேல் போன்ற முழக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு வண்டி கூட சாரயத்தை ஏற்றிக்கொண்டு வெளியே போக முடியாதபடியாக  சிறுவர்கள், தாய்மார்கள் ஆலை வாசலில் அமர்ந்து காவிக் கொடி ஏந்திப் போராடுகிறார்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஆன்மிகமும் ஆன்மிகவாதிகளுக்கு அரசியலும் கற்றுத் தந்தாகவேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்படுகின்றன.

*

மடாலயத்து மலைக்கோவில் ஒன்றில் விழா நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த விழாவில் கூட்ட நெரிசல், வேலி சவுக்குக் கம்பு உடைதல், விபத்து, காயம் என நடந்துகொண்டே இருக்கும். அந்த மலைக்கோவிலுக்கு முன்னேற்பாடுகள் செய்ய சுவாமி அம்பேத்கர் செல்லுவார். மலைக் கோவிலுக்கான பாதையில் சமதளமாக இருக்கும் பகுதிகளிலும் மலை உச்சியிலும் கடைகள் போடப்படும். அவையே நடைபாதையின் பாதி இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதால்தான் மக்களுக்கு பெரும் இடைஞ்சல் என்று புரிந்துகொள்கிறார். ஆனால், அந்த சிறு வியாபாரிகளை கடை போடாமல் தடுக்கவும் முடியாது. என்ன வழியென்று யோசிக்கிறார். ஒரு மீட்டர், இரண்டு மீட்டர் பாய் விரித்துப் பரப்பி வைக்கும் விற்பனைப் பொருட்களை அலமாரி போல் செய்து அடுக்கி வைத்தால் ஐம்பது மீட்டருக்குள் அடக்கிவிடமுடியும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் அலமாரிகள் செய்ய உத்தரவிட்டு அவற்றுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கச் சொல்கிறார். விழா விமர்சையாக நடக்கிறது. மக்கள் கூட்டம் நெரிசல் இல்லாமல் வந்துபோகிறது.

விழாவெல்லாம் முடிந்து கடைகள் எல்லாம் ஏரைக் கட்டும்போது ஏதோ தகராறு நடக்கிறது. ஆலய அலுவலகத்தில் இருக்கும் சுவாமி அம்பேத்கர் என்ன என்று விசாரிக்கச் சொல்கிறார். ஒரு சிறு வியாபாரி தரை வாடகை, அலமாரி வாடகை கட்டமுடியாமல் தவிக்கிறார். வாடகையைக் குறைத்துக்கொள்ளும்படிக் கேட்கிறாராம். உங்களைச் சந்தித்துப் பேசவிரும்புவதாகவும் சொல்கிறார். கோவில் பணியாளர்கள் அதுமுடியாதென்று தடுக்கிறார்கள் என்று உதவியாளர் சொல் கிறார். அவரை அழைத்துவா நான் பேசுகிறேன். இரண்டுக்கும் சேர்த்து 500 ரூபாய்தானே நிச்சயித்திருக்கிறோம். அதுகூடவா கட்டமுடியவில்லை என்கிறார் சுவாமி அம்பேத்கர். கோவில் பணியாளர்களே பார்த்து சரி செய்துவிடுவார்கள். நாம் இதில் தலையிட வேண்டாம் என்று உதவியாளர் சொல்கிறார். சுவாமி அம்பேத்கருக்கு குழப்பம் வருகிறது. என்ன விஷயம் என்று கேட்கிறார். உதவியாளர் தயங்கியபடியே உண்மையைச் சொல்கிறார். கோவில் கணக்கில் 500 ரூபாய்தான் வசூலிக்கப் படும். கோவில் பணியாளர் தன்னுடைய கணக்காக ஐந்தாயிரம் வசூலித்துக் கொள்வார் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியுறும் சுவாமி அம்பேத்கர் சட்டென்று எழுந்து புறப்படு கிறார். உதவியாளர் அவரை சமாதானப்படுத்தி கோவில், மடாலயக் கணக்குகள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார். எல்லா வருவாயும் இப்படித்தான். ஆயிரம் ரூபாய் வசூலிச்சிட்டு அம்பது ரூபாய்தான் கணக்கு காட்டுவார்கள் என்கிறார்.

சுவாமி அம்பேத்கர் மறு நாள் பூஜை புனஸ்காரங்கள் முடிந்ததும் நேராக மூத்த மடாதிபதியிடம் இது பற்றிப் பேசுகிறார். அவரோ நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதுவொரு பெரிய புதைகுழி இறங்கினால் நம்மை அழித்துவிடும். கூடுமானவரை இந்த லௌகீக கணக்கு வழக்குகளில் நாம தலையிடாம இருக்கறதுதான் நமக்கு நல்லது. நம்ம மடாலயத்தோட நிலைமை மட்டுமல்ல… எல்லா இந்துக் கோவில்களோட நிலைமையும் இதுதான் என்கிறார். சுவாமி அம்பேத்கருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அரசியல்வாதிகளையும் அற நிலையத்துறை அதிகார வர்க்கத்தையும் எதிர்க்கவும் முடியாது. இந்த முறைகேடு தொடர அனுமதிக்கவும் முடியாது. என்ன செய்ய என்று யோசிக்கிறார். வணிக நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அரசின் கட்டுப்பாடு குறைவாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் தனியார்மயமாக்கம் நடந்தேறியிருப்பதைப் போல் ஒவ்வொரு கோவிலும் ஓர் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டு பக்தர்களை உறுப்பினர்களாகக் கொண்டு பக்தர்களாலேயே நிர்வகிக்கப்படுவதாக ஆக்கவேண்டும் என்று முடிவுசெய்கிறார்.

 

தனது கொள்கைக்கு ஆதரவாக மக்களை ஒருங்கிணைக்க முதலில் விவேகானந்தர் பாறையில் இருந்து தொடங்கி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொள்ள முடிவுசெய்கிறார். கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கே என்ற முழக்கத்துடன் யாத்திரை தொடங்குகிறது. பக்தர்களுக்காக பக்தர்களால் பக்தர்களின் கோவில் என்று ஒவ்வொரு கிராமத்துக்கும் அந்த ரதம் செல்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஓர் அறக்கட்டளைக் குழுவை அந்த இடத்திலேயே உருவாக்குகிறது. இந்த அறக்கட்டளையை செல்வந்தர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் போன்றவர்களிடம் ஒப்படைக்காமல் தினமும் கோவிலுக்கு வருபவர்கள், உழவாரப்பணிகளில் ஈடுபடுபவர்கள், கோவில் மூலம் நடக்கும் சமூக சேவைகளில் தவறாமல் ஈடுபடுபவர்கள் போன்ற ஆத்மார்த்தமான பக்தகளிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.

கோவிலுக்கு சொந்தமாக இருக்கும் சொத்துகள் எல்லாம் மிகக் குறைந்த தொகைக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதையும் அதனால் கோவிலுக்கு வருவாய் வெகுவாகக் குறைவதையும் கண்டுபிடிக்கிறார். அதிக பக்தர்கள் வரும் கோவில்கள் சிலவற்றில் கோவிலின் பெரும்பகுதியைக் அதோடு சில கோவில் வளாகங்களில் அமைத்திருக்கும் கடைகளில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது பிற மதத்தினர் அதிகம் இருப்பதால் அவர்களை அங்கிருந்து அகற்றவேண்டும் என்று பக்தர்களில் சிலர் சொல்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத நிலையிலும் பிற மதத்தினராக இருக்கும் நிலையிலும் இந்து கோவில் வளாகத்துக்குள் வந்து போகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு அவர்களுக்கும் புண்ணியம் கிடைக்கட்டும்… பூவோடு சேர்ந்து நார் மணம் பெறுவதுண்டே. அந்தப் புண்ணியம் முழுமையாகக் கிடைக்க கோவில் வளாகத்தில் கடை அமைப்பவர்கள் தினமும் அந்தக் கோவிலுக்குள் சென்று வழிபட்டுவிட்டே கடைகளைத் திறக்கவேண்டும் என்றும் எந்தக் கோவில் என்பதற்கு ஏற்ப விபூதி அல்லது திருமண் இட்டுக்கொண்டே கடைகளை நடத்தவேண்டும் என்று சொல்கிறார்.

கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்கப்படுவதால் கோவிலின் புனிதம் கெடுவதோடு சிற்பங்கள், கலை அழகு எல்லாம் சிதைவது தொடர்பாகவும் சிலர் புகார் செய்கிறார்கள். முற்காலத்தில் கோவில்களும் திருவிழாக்களும் சமூக உற்பத்தி, சிறு தொழில்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு/சுழற்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இன்று வணிகத்துக்கு வேறு வசதி வாய்ப்புகள் வந்துவிட்டன. எனவே, கோவில்களை சமூக வணிகநலன்களுக்குப் பயன்படுத்துவதைக் குறைக்கலாம். திருவிழாக்களை மட்டுமே அப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதன்படி பக்தர்கள், கலை ரசிகர்கள், புராதனப் பெருமிதம் கொண்டவர்கள் ஆகியோரின் உதவியுடன் கோவில்களில் இருக்கும் கடைகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.

ஆனால், மக்கள் கூட்டம் குழுமும் இடங்களில் கடைவிரிப்ப தென்பது இயல்பான விஷயம்தானே. சிறு வியாபாரிகளின் டிரேட் செண்டர் அதுதானே. எனவே, அவர்களுக்கு என்ன செய்ய என்று பக்தர்கள், வணிக நிபுணர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கிறார்.  புராதனக் கோவிலுக்கு அருகில் சுற்றுலா, மன மகிழ் நிகழ்வுகள், வணிகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நவீனக் கோவில் ஒன்றைக் கட்டும்படி ஒருவர் ஆலோசனை சொல்கிறார். அதாவது, கோவிலை வணிகமயத்தில் இருந்து காக்கும் நோக்கில் ஒரு வணிக மையத்தைக்  கோவிலாக மாற்றும் திட்டமாக அது பரிணமிக்கிறது.

புராதனக் கோவிலுக்கு பக்திக்காகவும் அதை தொட்டடுத்து நிற்கும் நவீனக் கோவிலை மனமகிழ் நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு டிரேட் டெம்பிள் கட்டித் தரப்படுகிறது. கிட்டத்தட்ட புராதனக் கோவிலின் அதே கோபுர வடிவிலும் உட்புறத் தூண்கள் எங்கும் சிற்பங்களின்  டிஜிட்டல் அலங்காரங்களுமாக வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கடைகளுமே சாம்பிராணி மணம் கமழ அகல் விளக்கொளியில் மிளிர ஓம் நமோ நாராயணாய… ஓம் நமச்சிவாய… என்ற மந்திரங்களும் பக்திப் பாடல்களும் ஒலிக்கும் கோவிலாகவே வடிவம் பெறுகின்றன. புராதனக் கோவிலில் கடை போட்டவர்களுக்கு நவீன வணிகக் கோவிலில் முன்னுரிமை தரப்படுகிறது. வணிகக் கோவிலைக் கடந்துதான் புராதனக் கோவிலுக்கு வந்து போகும்படியாக பாதை அமைக்கப்படுகிறது. இதனால் ஓரிரு கிலோ மீட்டர்கள் அதிகம் நடக்க வேண்டி வரும் என்பதால் பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சலுகை விலையில் பயண வசதி செய்து தரப்படுகிறது (வணிகக் கோவிலுக்கு மட்டும்).

*

இந்த நடவடிக்கைகளுக்கு பக்தர்களிடமிருந்தும் பிற தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கின்றன. என்றாலும் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் அறநிலையத்துறையினரும் அரசியல்வாதிகளும் இதை எதிர்க்கிறார்கள். கோவிலுக்கு மாத வாடகையாக 100 ரூபாய் கட்டிவிட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு உள் வாடகைவிட்டு சம்பாதித்து வந்தவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும். ஏற்கெனவே மடாலயத்தை சீர்திருத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் பலரைக் கோபப்பட வைத்திருந்தது.

இன்றைய காலகட்டத்தில் சுவாமிஜிக்களுக்கு இழைக்கப்படும்  துரோகங்கள் அல்லது எதிரிகள் அவரை வீழ்த்த முன்னெடுக்கும் அவதூறுகள் என்பவை பாலியல் அவதூறுகள், கொலைப் பழி, சுற்றுச் சூழலை சீரழித்ததாகப் புகார், அந்நியச் செலாவணி மாற்றத்தில் ஊழல் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. சில பிழையான சுவாமிஜிக்கள் தாமே இவற்றைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிச் செய்யாதவர்களை அப்படிச் செய்ததாக வலையில் சிக்கவைக்கிறார்கள். ஆக நம் நாட்டில் இரண்டுவகையான சுவாமிஜிக்கள் இருக்கிறார்கள். ஒன்று: தவறு செய்பவர்கள். இன்னொன்று தவறு செய்ததாக அவதூறு செய்யப்படுபவர்கள். நிஜத்தில் இரண்டு வகை சுவாமிஜிக்களுமே தோற்றவர்களாக இருக்கின்றார்கள். நமது கதாநாயகர் அடிப்படையில் நல்லவர் மட்டுமல்ல, அவருக்கு இழைக்கப்படும் அவதூறுகளையும் தீமைகளையும் வென்றுகாட்டக்கூடியவரும் கூட.

சுவாமி அம்பேத்கர் மீதும் பாலியல் புகார் முன்வைக்கப்படுகிறது. சதிகாரர்கள் வேண்டுமென்றே ஒரு பெண்ணை சிஷ்யையாக அனுப்பி சில வீடியோக்களை எடுத்து வைத்து மிரட்டுகிறார்கள். பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கைவிடும்படி பிணை மிரட்டல் விடுக்கிறார்கள். சுவாமி அம்பேத்கரோ மறுத்துவிடுவார். எதிரிகள் அந்த வீடியோவை வெளியிட்டு அவரை அவமானப்படுத்துவார்கள். ஊரே கூடி அவரைத் தூற்றும். அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும். சுவாமிஜி அமர்ந்தபடியே சாட்சி சொல்லலாம் என்று நீதிபதி அனுமதி கொடுப்பார். ஆனால், அவரோ வேண்டாம் அந்த நடைமுறையை எல்லா குற்றவாளிக்கும் நீங்கள் மாற்றி அமைத்து சட்டம் இயற்றுங்கள். இப்போதைக்கு நான் குற்றவாளிக் கூண்டில் நின்றபடியே பதில் சொல்கிறேன் என்று சொல்கிறார்.

அந்த வீடியோவில் இருப்பது அவரல்ல… அது கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என்று சொல்லும்படி வழக்கறிஞர் சொல்லியிருப்பார். நீதிபதியும் அதை ஏற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய சம்மதித்திருப்பார். பக்தர்களும் அவரை ஏற்கத் தயாராக இருப்பார்கள். ஆனால், குற்றவாளிக் கூண்டில் ஏறிய சுவாமிஜி… அந்த வீடியோவில் இருப்பது நான் தான். துறவறம் மிகவும் உயர்வான லட்சியம். என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. என்னை மன்னியுங்கள். நீங்கள் என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்.

அனைவரும் அதிர்கிறார்கள். ஆனால், நீதிபதி சுவாமிஜிக்கு சாதகமாகவே தீர்ப்பை வழங்குகிறார். நீங்கள் குற்றம் செய்ததாகச் சொல்கிறீர்கள். ஆனால், அந்த வீடியோ கிராஃபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதுதான். நீங்கள் செய்த நல்ல செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை அவமானப்படுத்த அப்படிச் செய்திருக்கிறார்கள். எனவே உங்களை இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் சுவாமிஜியோ உங்கள் தீர்ப்பைவிட எனக்கு என் பக்தர்கள் தரும் தீர்ப்பே மிக முக்கியம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அமல்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்.

பக்தர்கள் கூடிக் கலந்து பேசிவிட்டு சுவாமி அம்பேத்கர் குற்றவாளியே என்று தங்கள் தீர்ப்பை எழுதிக் கொடுக்கிறார்கள்.

துறவற விதி மீறல், நம்பிக்கை மோசடி, திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவு, திருமணம் செய்துகொள்வதாகப் பொய் சொன்னது என பல குற்றங்களின் அடிப்படையில் சுவாமிஜிக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற புனிதமான இடத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதால் எந்தவித அபராதமோ, பிணை வாய்ப்புகளோ இல்லாமல் முழு ஏழாண்டும் சிறையில் இருந்தாகவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.

தீர்ப்பை வழங்கிவிட்டு பக்தர்களிடம் திருப்திதானே என்கிறார். திருப்திதான். ஆனால்… எங்களிடம் இரண்டு பரிந்துரைகளும் இருக்கின்றன என்கிறார்கள்.

என்ன அவை என்கிறார் நீதிபதி.

முதலாவது: அவருடைய ஏழாண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து முடித்துவிட்டதாக தீர்ப்பு வழங்கவேண்டும்.

இரண்டாவதாக அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுவே எங்கள் தீர்ப்பு என்கிறார்கள்.

மக்களுக்கு சேவை செய்ய முன்வருபவர்களை துறவறம் என்ற சிலுவையில் இனியும் அடிக்கத்தான் வேண்டுமா… ஊருக்கு நல்லது செய்வதற்காக ஒருவர் தன் உள்ளத்துக்கும் உடலுக்கும் துன்பம் தந்துகொள்ளவேண்டுமா? இந்த நவீன யுகத்திலாவது இல்லறத்தில் இருந்தபடியே சமூக சேவை செய்ய மடாலயங்கள் அனுமதிக்கவேண்டும். மேற்கத்திய போப், பாதிரிகளில் ஆரம்பித்து கிழக்கத்திய மடாதிபதிகள் வரை பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நம் புராணங்களில் கூட தவத்தில் ஈடுபடும் முனிவர்கள் ரம்பை, மேனகை போன்றவர்களால் சம நிலை தடுமாறியதாகப் படித்திருக்கிறோம்.

துறவறம் அடிப்படையில் இயற்கைக்கு எதிரானது… இறைவனுக்கும் எதிரானது. துறவிகள் உலகுக்குத் தேவை என்று இறைவன் கருதியிருந்தால் இனப்பெருக்க உறுப்புகள் இல்லாமல் சிலரைப் படைத்து அனுப்பியிருப்பானே… எனவே அது இறைவனுக்கு எதிரானதுதான். குடும்பம், குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஒருவர் சமூகத்துக்கு நன்மைகள் செய்வதில் வேகமும் ஆர்வமும் குறைந்து விடுமென்றால் குறையட்டுமே. சமூகத்தின் நன்மைக்காக தனி ஒருவரை இந்த அளவுக்கு ஒடுக்கவேண்டுமா… அது ஒருவகையில் குழந்தைகளின் இன்பத்துக்காக விலங்குகளைக் கூண்டில் அடைத்து வைப்பதைவிடக் கொடூரம் அல்லவா..? பொதி சுமப்பதற்காக காளையை மூக்கணாங்கயிறு குத்தி, லாடம் கட்டி காயடித்து வண்டியில் பூட்டுவதைவிட அராஜகம் அல்லவா..? அது இனியும் தொடரத்தான்வேண்டுமா… நாம் லௌகிக இன்பத்தில் திளைக்க துறவிகளைக் காயடிக்கவேண்டுமா என்ன..? அவர்கள் நமக்குத் தரும் மன நிறைவுக்கும் வழிகாட்டுதலுக்கும் இன்ன பிற உதவிகளுக்கும் நாம் காட்டும் நன்றி விசுவாசம் என்பது இதுதானா..?

துறவிகளுக்கும் தென்றல் வீசும் மாலைகளையும் நிலவு பொழியும் இரவுகளையும் கடக்கத்தானே வேண்டியிருக்கிறது. பட்டாடைகளும் நறுமணத் திரவங்களும் பூசி பூவும் பொட்டுமாக வளைகள் குலுங்க கொலுசுகள் ஒலிக்க வந்துபோகும் பெண்களையெல்லாம் பார்த்த பிறகும் உணர்சியற்றுக் கிடக்கவேண்டுமென்றால் எவ்வளவு பெரிய தண்டனை அது… துறவிகளின் பகல்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். முடிவற்று நீளும் அவர்களுடைய தனிமை இரவுகளை நாம் யோசித்துப் பார்ப்பதே இல்லை. இது தவறு… அதிலும் ஆண் துறவிகளின் நிலைமை மிக மிக பரிதாபமானது. பெண்களுக்காவது அடிப்படையிலேயே பாலியல் சுதந்தரம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆண்களுக்கு அப்படியல்ல. விரும்பித் தேர்ந்தெடுத்த வாழ்க்கையென்றாலும் ஆணாகப் பிறந்தும் துறவியாக இருக்க நேர்வதென்பது மிகவும் துயரம் மிகுந்தது. சொர்க்கத்துக்குப் போயும் சோகமாக வாழ நேர்வதைப் போன்றது. எனவே, துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிப்போம். அந்தக் காலத்தில் ரிஷியும் ரிஷி பத்தினியுமாக வாழ்ந்ததில்லையா அதுபோல் வாழ அனுமதிப்போம் என்று சொல்கிறார்கள்.

சுவாமி அம்பேத்கர் பக்தர்கள் அவர் மீதும் துறவிகள் மீதும் காட்டிய பேரன்பை நினைத்து கண்ணீர் மல்குகிறார். அவரை வீழ்த்துவதற்காக அனுப்பப்பட்டவர்தான் என்றாலும் அந்த நடிகைக்கு சுவாமிஜியின் மீது பரிதாபமே இருந்தது. அதிலும் பாலியல்ரீதியாகத் தன்னைச் சுரண்டியவர்களை மட்டுமே பார்த்துவந்த அவருக்கு சுவாமிஜியைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் விடுதலையாகவே உணர்கிறார்.

சுவாமி அம்பேத்கரின் லட்சியக் கோவிலில் திருமணம் நடக்கிறது. காவி உடை அணிந்தபடியே தாலி கட்டுகிறார்.

அவருடைய சமூக சீர்திருத்தங்கள் தொடர்கின்றன.

(முற்றும்)

3 Replies to “சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5”

  1. துறவறம் என்பது விதிவிலக்கு.விதியாக பின்பற்றும் போது பல சிக்கல்கள் ,தோல்விகள் எற்படுகின்றது என்பது உண்மை. துறவறத்தை முற்றிலும் நிராகரிப்பதும் கூடாது. ஆனால் மடங்கள் துறவறம்தான் உயா்ந்தது என்று தங்களை உயா்த்திக்கொள்ள காலில் விிழுந்து வணங்கச் செய்வது,காலைக் கழுவச் சொல்வது இப்படி பல பயித்தியக்காரத்தனங்களையெல்லாம் வகுத்துள்ளாா்கள். தங்கள் காலில் விழுந்து வணங்காதவா்களிடம்பல மடாதிபதிகள் பேசவே மாட்டாா்கள்.மடாதிபதிகளுக்கு இருக்கும் கோணல் கொஞசமா ? அம்மணக்குண்டியாக நாட்களை பாழாக்கம் சாதுக்கள் எணணிக்கை மிக அதிகதம். என்ற ஜெயின் டிவி நிகழ்ச்சிகளை் பாருங்கள். ஆண் சாமியாா்கள் அம்மணமாக வரிசையில் வலம் வருவதும் பெண்களை அவர்கள் காலைத் தொட்டு வணங்குவதும் சகிக்காது.குறைந்தபட்சம் அம்மணம் தடை செய்யப்படவேண்டும்.நிா்வாணமாகத்தான் இருப்பேன் என்றால் அந்தமானில் உள்ள ஒரு தனித்தீவிற்கு அவர்களை நாடு கடத்தி திருப்பதி தேவஸ்தானம் செலவில் சோறு போட வேண்டும்.

  2. ஜெயின் டிவியின் பெயா் jinvani

  3. I thought many comments would be posted here.I request the readers to post their comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *