சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

தமிழகத்தை வாழ்விக்க வந்த  தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 – 1985).  சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது.  யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள  ‘வேதாந்தம் தந்த வீரத்துறவி – சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு‘ என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது.  மூன்று பாகங்களாக,  1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும்  விரிவாக இந்த நூல் விளக்குகிறது.

நூலாசிரியர்   யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா சுவாமி சித்பவானந்தரிடம், 1984ல் தீட்சை பெற்று துறவியானவர்.  திருநெல்வேலி ஸ்ரீ சாரதா மகளிர் கல்லுாரியில் முதல்வராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, 2007ல் திருவண்ணாமலையில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தை நிறுவினார். பேராசிரியராகவும் சிறந்த கல்வியாளராகவும் விளங்கும் யதீஸ்வரி அம்பா அவர்கள் சகோதரி நிவேதிதை பற்றி நான்கு நுால்களும், ஹிந்து மதம் கூறும் இறை வழிபாடு தொடர்பான ஒரு நூலும் எழுதியுள்ளார்.

நூல் வேண்டுபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

ஸ்ரீ சாரதா ஆசிரமம், 58, சாரதா நகர், மணக்குள விநாயகர் தெரு, திருவண்ணாமலை – 606603.

தொலைபேசி: 9442131956

மின் அஞ்சல்: ykpamba@gmail.com

கோவை மாவட்டத்தில்,  பொள்ளாச்சிக்கு அருகில் செங்குட்டை பாளையம் என்ற ஊரில் பெரியண்ண கவுண்டர் – நஞ்சம்மை தம்பதிக்கு, ஏழாவது மகனாக பிறந்தவர் சுவாமி சித்பவானந்தர். பூர்வாசிரமத்தில் சின்னு என்ற பெயரில் விளங்கிய அவர்  அந்தக் காலத்திலேயே ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்கி தமது  கல்லுாரிப் படிப்பை சென்னை மாநிலக் கல்லுாரியில் முடித்தார்.  லௌகீக வாழ்வில் நாட்டம் ஏதுமின்றி,  தெய்வீகத்தையும் ஞானத்தையும் துறவையும் தொண்டையுமே அவரது மனம் நாடியது.  தனது குருவான  சுவாமி சிவானந்தரால்  தீட்சை அளிக்கப்பட்டு, சித்பவானந்தர் ஆனார் (ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவானந்தர் மஹாபுருஷஜி மகராஜ் அல்லது தாரக் மகராஜ்  என்றும் அழைக்கப்பட்டார்).  திருப்பராய்த்துறையில்  ‘ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை’ நிறுவினார்.  உபநிஷதங்கள், பகவத்கீதை, திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் ஆகியவற்றுக்கு அற்புதமான விரிவுரைகளையும்,  அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும்  சுவாமிகள் எழுதியுள்ளார்.  ஏராளமானோர் நல்வழியிலும் ஆன்மீக வாழ்விலும் மேம்பாடு அடைய  ‘அந்தர்யோகம்’ எனும் சிறப்பான பயிற்சியை அறிமுகம் செய்தார்.   1956ல் சேலத்தில் ‘ஸ்ரீ சாரதா சமிதி’ என்ற துறவு ஸ்தாபனத்தை உருவாக்கினார். இது, பின்னாளில் கரூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில், சித்பவானந்தரின் போதனைகளை பின்பற்றி, 60 பள்ளிகளும், ஏழு கல்லுாரிகளும் செயல்பட்டு வருகின்றன.  இத்தகு பெருமைகள் கொண்ட சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு தமிழக மக்களிடத்தில் பரவலாக சென்றடைய வேண்டும்.  அதற்கு உதவும்  இந்த நூலை வாசகர்கள் வாங்கி வாசித்தும் ,  நூலகங்களுக்கு வழங்கியும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

40 Replies to “சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு”

 1. இது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. ஸ்வாமி சித்பவானந்தர் தம் புத்தகங்களீன் மூலமாகவே ஆஸ்திகர்களுக்குப் பெரிதும் பரிச்சயமானவர். எளிமையாகவும் அருமையாகவும் தமிழில் எழுதும் ஆற்றல் அமையப்பெற்றவர். சம்ஸ்கிருத மூல நூல் கருத்துக்களைத் தமிழில் எழுதும்போது, அதுவும் மூல நூல் போன்றே இருக்கும். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையையும் உபதேசங்களையும், ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்வையும் வாக்கையும் மிக அருமையாக விளக்கியுள்ளார். தாயுமானவர் பாடல்களுக்கு இவர் எழுதிய உரை அற்புதமானது. தாயுமானவரின் பாடல்களை அழகிய பதிப்பாக வெளியிட்டார். திருவாசகத்திற்கு இவர் எழுதிய உரை தனித்தன்மை வாய்ந்தது. ஒவ்வொரு இடத்திலும் தகுந்த உபனிஷத மந்திரங்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். இதற்கு இவர் எழுதியுள்ள முகவுரை அற்புதமானது.திருவாசகத்தின் சொல்லழகில் தோய்ந்து விடாமல் அது காட்டும் ஆத்ம சாதனத்தை உணரவேண்டும் என வலியுறுத்தி யுள்ளார். மேலும்,”மாயை” என்ற கருத்தின் உண்மைப் பொருள் என்ன, மாயா வாதம் பிரம்ம வாதத்திலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். வேதாந்தம் பிரம்மவாதத்தை அடிப்படையாகக்கொண்டது, மாயாவாதமல்ல என்பதையும் விளக்கியுள்ளார். எத்தனை ஆங்கில, தமிழ் நூல்களை வாசித்தாலும் இவ்வளவு தெளிவான விளக்கத்தைக் காணமுடியாது. இதுவே இவருடைய சொந்த ஆன்மீக அனுபவத்தின் ஒரு அடையாளமாகும். Where words come out from the depth of Truth. இவர் எழுதியுள்ள கீதை உரை பிரசித்தமானது. அதில் இவர் எழுதியுள்ள முகவுரை மிகச்சிறப்பானது. வேதாந்தக் கருத்துக்களையும், வேதாந்த-சித்தாந்த சமரசத்தையும் இவர்போல் தமிழில் யாரும் விளக்கியதில்லை.
  நாங்கள் 50களில் பள்ளியில் படிக்கும்போது “அறம் வளர்த்த நம்பி” , “உலகுக்கு உயிர் கொடுத்த உத்தமன்”, “உலகை உய்வித்த உத்தமன்” என்ற ஸ்வாமி சித்பவானந்தர் எழுதிய மூன்று புத்தகங்கள் மூன்று வகுப்பில் துணைப்பாட நூல்களாக இருந்தன! இவை ஸ்ரீ ராமர், ஏசு கிறிஸ்து, புத்தர் பற்றியவை! காலம்தான் எப்படி மாறிவிட்டது! ராமரைப் பற்றிய புத்தகம் இன்றைய பாட நூல்களில் சேர்ப்பார்களா! நினைத்தும் பார்க்க முடியவில்லை!
  இவர் தபோவனத்திலிருந்து வெளியிட்டு வந்த ‘தர்ம சக்கரம்’ என்ற தமிழ் மாதப்பத்திரிகையும் சிறந்து விளங்கியது. இதை அப்போது வீட்டில் படிக்க இயலாதிருந்தவர்கள் எங்களை (பள்ளிப் பசங்களை) படிக்கச் சொல்லிக் கேட்பார்கள்! எனவே, நாங்களும் சிலவற்றை அறிந்துகொண்டோம்! இப்படி ஸ்வாமி சித்பவானந்தர் எங்களுக்கும் ஆசானானார்!
  இவர் எழுதிய தமிழ் நூல்கள் காலத்தால் அழிக்கமுடியாதவை.தமிழர்களின் பெரும் ஆஸ்திகச் செல்வமாகத் திகழும். இவரைப்பற்றிய பல செய்திகளை அங்குமிங்குமாகக் கேட்டிருந்தாலும், விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் மகிழ்சியுடன் வரவேற்கத்தக்கது.
  இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்கு நன்றி.

 2. சுவாமிகள் விரும்பிய அந்தா்யோகம் என்ற நிகழ்ச்சியை கிராமங்கள் தோறும் நடத்துவது அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.

 3. சுவாமிகளின் குரு, இராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவானந்தர் ( மஹாபுருஷஜி மகராஜ் அல்லது தாரக் மகராஜ்).

 4. ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அல்லது(பூர்வாஸிரமத்தில் டாக்டர். குப்புசாமி என்று அழைக்கப்பட்டார். அப்பையா தீக்ஷிதர் வழிவந்தவர்). அவர் வேறு, சித்பவானந்தரின் குரு வேறு.

 5. சந்நியாசிகளாக வாழ்ந்து மறைந்தோரின் சாதிகளை வெளிப்படுத்துவது தவறு. கட்டுரை (அல்லது நூல்) சுவாமி சித்பவானந்தரை கவுண்ட சாதியில் பிறந்தவர் என்கிறது. பின்னூட்டத்தில் ஒருவர் சுவாமி சிவானந்தாவை அப்பைய தீட்சிதர் வழிவந்தவர் என்பனவெல்லாம் நாகரிகமா?

 6. // சந்நியாசிகளாக வாழ்ந்து மறைந்தோரின் சாதிகளை வெளிப்படுத்துவது தவறு. கட்டுரை (அல்லது நூல்) சுவாமி சித்பவானந்தரை கவுண்ட சாதியில் பிறந்தவர் என்கிறது. பின்னூட்டத்தில் ஒருவர் சுவாமி சிவானந்தாவை அப்பைய தீட்சிதர் வழிவந்தவர் என்பனவெல்லாம் நாகரிகமா? //

  அன்புள்ள BSV அவர்களுக்கு, உங்களது கருத்து அர்த்தமற்றதாக உள்ளது. ஒரு 50-60 ஆண்டுகள் முன்பு வரை கூட தமிழ்நாட்டில் அனைவரும் தங்கள் குலப்பெயர்களை சகஜமாக குறிப்பிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள் – வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், முத்துலட்சுமி ரெட்டி, மு.ராகவையங்கார், தியாகராஜ செட்டியார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் இத்யாதி இத்யாதி. இதே ரீதியில் தான் சுவாமிகளின் பெற்றோர் பெயரும் எப்படி அழைக்கப் பட்டதோ அதே பாணியில் எழுதப் பட்டுள்ளது. ஒருவரது பெயர் எவ்வாறு வழங்கப் பட்டதோ அதை அப்படியே எழுதுவது தான் நாகரீகம், அதை சிதைப்பது அநாகரீகம். பெரியண்ண கவுண்டர் என்ற பெயரை பெரியண்ணன் என்று மொட்டையாக எழுதுவது தவறானதும் பிழையானதும் மட்டுமல்ல. அவருக்கு இழைக்கப் படும் அவமரியாதையும் ஆகும். திராவிட இயக்கத்தினரின் உள்ளீடற்ற, போலித்தனமான சாதி எதிர்ப்பு உணர்வால், என்னவோ குலப்பெயர்களை சேர்த்து எழுதுவதே ஒரு அவமானம், நாகரீகமின்மை என்ற அபத்தமான கருத்து தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது (இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முட்டாள்தனம் இல்லை). நீங்களும் அந்தக் கருத்தையே எதிரொலிக்கிறீர்கள். இந்தப் பழக்கத்தை இப்போதுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், வரலாற்றில் முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கும் நீட்டித்து, வலிந்து அவர்களது குலப்பெயர்களை உடைத்து விட்டு எழுதவேண்டும் என்பது அநாகரீகம் மட்டுமல்ல, வெறித்தனத்தின் உச்சம் என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம்.

  அப்பைய தீட்சிதர் ஓரு மிகப்பெரிய மகான். அந்த மகானின் பரம்பரையில் சமீபகாலத்தில் சுவாமி சிவானந்தா என்ற மற்றொரு மகான் அவதரித்தார் என்று கூறுவது அநாகரீகமா? சுவாமி சிவானந்தாவின் வாழ்க்கை வரலாற்று நூலிலேயே இந்த விஷயம் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. என்ன வகையான சிந்தனைப் போக்கு இது?

 7. சித்பவானந்தரின் சந்யாச ஸ்விகரித்தலின் போது, ஊட்டியில் சுவாமிகள் பித்ருபிண்டம் கொடுக்கும் அந்த நிமிடத்திலேயே, அவரின் தந்தை easy chair ல் அவரின் ஊரில் உட்கார்ந்து இருக்கும் அதே க்ஷணத்தில் உயிர் பிரிந்தது. இது ஒரு அரிதான நிகழ்ச்சி! இதைப் கேட்டுவிட்டு விட்டு மஹாபுருஷஜி மகராஜ்,” உனது தந்தை ,” ஒரு குப்தயோகி”( வெளியுலகிற்கு காட்டிக் கொள்ளதா யோகி) என்று அருளுவர்! அப்பையா தீக்ஷிதர் வழிவந்தவர் என்று சொன்னதோ அல்லது சித்பவானந்தரின் தந்தை பெரியண்ண கவுண்டர் குறித்து நிகழ்ச்சியோ , ஸ்வாமிகள் இருவரும் எப்படி பட்ட பரம்பரையில் வந்தவர்கள் என்று மேன்மையை சொல்லுவற்காக கூறியது! இதைப் புரிந்து கொள்ள வேண்டும்! வேறு காரணம் என்ன இருக்கமுடியும்?

  இராமகிருஷ்ண பரம்மஹம்ஸ மூர்த்தி சொல்லுவார்,” கருணை கிழங்கின் முளையை”, வைத்தே அதிலிருந்து தோன்றும் கிழங்கின் தரத்தை முன்பே அறிந்துகொள்ளலாம்!

 8. அன்பார்ந்த ஆசிரியர் குழுவினரே..

  //திராவிட இயக்கத்தினரின் உள்ளீடற்ற, போலித்தனமான சாதி எதிர்ப்பு உணர்வால், என்னவோ குலப்பெயர்களை சேர்த்து எழுதுவதே ஒரு அவமானம், நாகரீகமின்மை என்ற அபத்தமான கருத்து தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டுள்ளது (இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முட்டாள்தனம் இல்லை). நீங்களும் அந்தக் கருத்தையே எதிரொலிக்கிறீர்கள்.//

  மேல் சாதியை சார்ந்தவர்களை சாதி பெயரிட்டு அழைப்பதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்கள் சரி. அப்படியே அம்பேத்கரையும் , கக்கனையும் இன்னும் பல தாழ்த்த பட்ட வகுப்பினை சார்ந்த தலைவர்களையும் இவ்வாறு உங்களால் குல(சாதி) பெயரிட்டு கூப்பிட முடியுமா. அது முடியாது எனும் பொழுது, இவர்களை மட்டும் இவ்வாறு சாதி பெருமிதத்துடன் அழைப்பது எந்த வகையில் நியாயம். வ.உ. சிதம்பரனார் நிச்சயம் இன்று இருந்திருந்தால் உங்களின் கருதத்தினை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.

  //வரலாற்றில் முன்பு வாழ்ந்த மனிதர்களுக்கும் நீட்டித்து, வலிந்து அவர்களது குலப்பெயர்களை உடைத்து விட்டு எழுதவேண்டும் என்பது அநாகரீகம் மட்டுமல்ல, வெறித்தனத்தின் உச்சம் என்பதைத் தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறோம்…//

  இது எப்படி வெறித்தனத்தின் உச்சமாகும். இந்த ஒரே வார்த்தையில் காலமெல்லாம் சாதியை அதான் நீங்கள் கூறும் குல பெருமையை ஒழித்து கட்ட அரும்பாடு பட்டா வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி நாராயண குரு , குருநானக் , அய்யன் காளி, பசவண்ணர் போன்றோரை முட்டாள்கள் என கூறி விட்டிர்கள். மேற்படி மகான்களை அநாகரீகர்கள் ஆக்கி விட்டிர்கள். நாட்டில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை தான் நாகரீகமானது என ஏற்றுக் கொள்கிறேன்.. மட்டுறுத்தாமல் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்..

 9. “பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்”- ஔவையார்

 10. மேலும்,இராமகிருஷ்ண மடத்தில், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சமயத்தில் தான் பெரும்பாலும் சந்யாச நாமத்துடன் குறிப்பிடுவார்கள். மற்றபடி, பேசும் போது, பூர்வாசிரம நாமத்துடன் ,” மஹராஜ் “, என்று சேர்த்து அழைப்பது வழக்கம். சித்பவானந்தரை,”சின்னு மஹராஜ், இராமகிருஷ்ணனந்தரை சசி மஹராஜ், சிவானந்தரை தாரக் மஹராஜ் “, என்று அழைப்பதும் வழக்கம்.

 11. /ஒரு 50-60 ஆண்டுகள் முன்பு வரை கூட தமிழ்நாட்டில் அனைவரும் தங்கள் குலப்பெயர்களை சகஜமாக குறிப்பிட்டுக் கொண்டு தான் இருந்தார்கள் – வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், முத்துலட்சுமி ரெட்டி, மு.ராகவையங்கார், தியாகராஜ செட்டியார், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் இத்யாதி இத்யாதி. இதே ரீதியில் தான் சுவாமிகளின் பெற்றோர் பெயரும் எப்படி அழைக்கப் பட்டதோ அதே பாணியில் எழுதப் பட்டுள்ளது. ஒருவரது பெயர் எவ்வாறு வழங்கப் பட்டதோ அதை அப்படியே எழுதுவது தான் நாகரீகம், அதை சிதைப்பது அநாகரீகம். //

  வ உசி, உ வே சா,முத்துலட்சுமி ரெட்டி, மு.ரா. வ.ரா, தியாராஜ செட்டியார், வெள்ளக்கால சுப்பிரமணிய முதலியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் – இன்ன பிற – இவர்களும் திருவரங்க மடத்து ஜீயர், திருக்குருங்குடி மடத்து ஜீயர், அகோபில மடத்து ஜீயர், ஆதீனங்கள், சங்கராச்சாரியார், ஆழ்வார்கள், இங்கே கட்டுரைநாயகரான சுவாமி சித்பவானந்தா, சுவாமி சிவானந்தா, சுவாமி ராமகிருஸ்ணர், சுவாமி விவேகானந்தர், இரமண மகரிஷி, இன்னபிற இகவாழ்க்கையை அனைத்துப் பற்றுகளையும் விட்டொழித்த‌ துறவிகளையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதுவே அநாகரீகம். இவர்கள் மனிதநிலையைக் கடந்து தெய்வநிலைக்குச்சென்றவர்கள். சாதி, இன பேதங்களைக்கடந்தவர்கள். வரலாறு வரையும் போது குறிப்பிடலாம். ஆனால் அது ஒரு வரலாற்று உண்மைக்காகத்தானே ஒழிய, சொல்லவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. சுவாமி சித்பவானந்தரையும் அவரது தகப்பனாரையும் ஒன்றாகச் சேர்த்துப்பார்ப்பது, நம்மாழ்வாரையும் அவரது தகப்பனாரையும் – காரிமாறனையும் – சேர்த்துப்பார்ப்பது. இரு தகப்பனகளும் இகவாழ்க்கை வாழ்ந்தே மறைந்தார்கள். அவர்கள் மகன்கள், தாய், தகப்ப்ன, குடும்பம் என முற்றும் துறந்து இறைநிலையை அடைந்தவர்கள்.

  நம் வாழ்வில் சாதிகளும் குலங்களும் ஒவியவே ஒழியா. ஒழியக்கூடாதென்பதே உங்கள் நிலைப்பாடு . அதை நான் இடையூறு பண்ணவில்லை. தெயவநிலைக்கு உயர்ந்தோரையும் நம்மோடு இணைக்கவேண்டுமா? என்பதே என் கேள்வி. அவர்கள் பெற்றோர் இன்ன சாதி; அல்லது அவர்கள் இக்குலத்தில் பிறந்தார்கள் என்பதில் பெருமை காண்பது எப்படி முடியும்?

  திராவிட இயக்கத்தினரைப்பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்கள் துறவிகளைப் பற்றிப் பேசுவது கிடையாது. ஆனால் சாதி தெரிந்தால் பேசுகிறார்கள். நாம் சாதி சொன்னோமானால், ”போட்டுக்கொடுப்பது” போல. மேலும் இருசாதிகள் பகையோடு இருக்கும்போது, சாதி சொல்லப்பட்டால், இன்னொரு சாதி அம்மஹானை ஏற்காது. மேட்டிமை உணர்வு கொண்ட சாதியும் ”தீண்டத்தகாத” சாதியிலிருந்து ஒரு துறவி வந்தால், அவரை ஏற்காது (நம்மாழ்வார் சூத்திரர் என்பதால் ஏற்க மாட்டோம் என்றார்கள் என்பது நம்மாழ்வார் வரலாறு). சலவைக்கார சாதி என்பதால் ‘குள்ளச்சாமி எப்படி ம்ஹான் என்று நக்கலடித்த பாரதியாரின் கதையை நான் ஏற்கனவே இங்கு விரித்தேன். ஆனால் அவர் பின்னர் திருந்தினார்: எப்படி, ம்ஹான்களுக்கு சாதி கிடையா. இதே சொலையே ஆளவந்தார், மாறனேரி நம்பிகள் தான் இழிகுலத்தோன்; உங்கள் பின்னால் வருவது உங்களுக்கு இழுக்கு! என்றவுடன் ”பரமஞானிகளுக்கு சாதிகள் கிடையா!’ என்று தன்னோடு சேர்த்துக்கொண்டார். ஆக, பரமஞான நிலையை அடைந்தோருக்கு – இங்கே சுவாமி சித்பவனாந்தா – சாதி கிடையாது.

  ஆக, சாதி தெரிந்தால் கேடு. தெரியாவிட்டால் ஆன்மிக உலகுக்கு நல்லது. பரமஞானிகளுக்கு பரம்பரை என்ற கருவி தேவையில்லை. அவர்கள் ஆன்மிகம் எல்லை கடந்தது.

 12. மிஸ்டர் தாயுமானன், ஆசிரியர் குழு சொல்லவந்ததை வேண்டும் என்றே திரித்து நீங்கள் வம்பு செய்கிறீர்கள் என்று நினைக்கீறேன். அவர்களது நிலைப்பாடு மிக எளிமையானது.யார் பெயர் எப்படி எழுதப்பட்டதோ அந்தப் பெயரை அப்படியே எழுதுவது. தட்ஸ் ஆல். இதில் உங்களுக்கு என்ன பிரசினை? இதில் மேல்சாதி, கீழ்சாதி எல்லாம் எங்கே வருகிறது?

  மேலும் ஐயர், பிள்ளை, கவுண்டர், நாயக்கர் போன்றவை *சாதி* பெயர்கள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது, அவை பட்டங்களும் கூட. விசாகப்பெருமாளையர், சரவணப் பெருமாளையர் ஆகிய தமிழறிஞர் பெயர் கேட்டதுண்டா? அவர்கள் பிராமணர்கள் அல்லர், வீரசைவ சமுதாயத்தினர். அதே போல, வைணவ உரையாசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, வடக்குத்திருவீதிப் போன்றவர்கள் சைவ வேளாளப் பிள்ளைகள் அல்லர், வைஷ்ணவ அந்தணர்கள்… இப்படி எத்தனையோ உதாரணங்கள் தரலாம்.

  // . வ.உ. சிதம்பரனார் நிச்சயம் இன்று இருந்திருந்தால் உங்களின் கருதத்தினை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். // என்பது சிரிப்பை வரவழைக்கிறது. அவர் வாழ்நாள் இறுதிவரை தன் பெயரை சிதம்பரம் பிள்ளை என்று தான் எழுதிக்கொண்டிருந்தார்.

  // மேற்படி மகான்களை அநாகரீகர்கள் ஆக்கி விட்டிர்கள். நாட்டில் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை தான் நாகரீகமானது என ஏற்றுக் கொள்கிறேன்..// நல்ல காமெடி. இதற்கும் ஆர் எஸ் எஸ்க்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. தேசத்தலைவர்களான காந்தி, நேரு, படேல், போஸ், அம்பேத்கர் ஆகிய பெயர்கள் எல்லாமே குலப்பெயர்கள் தானே? இப்படித் தான் அனைவரும் அழைக்கின்றனர். மாறாக, மோகன்தாஸ், ஜவகர்கால், வல்லபபாய், பீம்ராம் ராம்ஜி என்று வெறுமனே அழைத்தால் அதுதான் அவமரியாதையாக பார்க்கப் படும். கம்யூனிஸ்டுகள் கூடத் தங்கள் குலப்பெயர்களை எடுத்துவிடவில்லையே – சீதாராம் எச்சூரி, பிருந்தா காரத், புத்ததேவ் பட்டாசாரியா, மாணிக் சர்கார், ஜோதி பாசு, ஈஎம்எஸ் நம்பூதிரிப்பாடு.. சொல்லிக்கொண்டே போகலாம்.உலக அளவில் வாஷிங்டன், லிங்கன், ஜெஃபர்சன், ஐன்ஸ்டைன் போன்றவை கூட குலப்பெயர்களே.

  சும்மா எதையாவது சொல்லவேண்டும் என்பதற்காக சொல்ல வேன்டாம்.

 13. மிஸ்டர் BSV,

  முதல் விஷயம். இங்கு சுவாமி சித்பவானந்தரின் பூர்வாசிரம சாதியை யாரும் குறிப்பிடவில்லை. ஹிந்து மரபின் படி ஒருவர் சன்னியாசியானவுடன் அவர் சமூகப் பிரிவினைகளான வர்ணங்கள் முதலான பாகுபாடுகளை எல்லாம் கடந்து சென்று விடுகிறார் என்பதே உண்மை.

  ஆசிரியர் குழு அளித்த உதாரணங்கள் மிகச் சரியானவை. ஏனென்றால் இங்கு பேச்சு சுவாமிஜியைப் பற்றி அல்ல, அவரது பூர்வாசிரம தந்தையார் பெயரைப் பற்றியது. அது உள்ளவாறு குறிப்பிடப்பட்டது, அவ்வளவே. உடனே ஏதோ தகாதது நடந்து விட்டது போல தாம் தூம் என்று குதிப்பது எதற்காக? சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எல்லாவற்றிலும் அவர் பெயரே நரேந்திரநாத் தத்தா என்று குலப்பெயருடன் சேர்த்து தான் கொடுக்கப் பட்டுள்ளது.

  // நாம் சாதி சொன்னோமானால், ”போட்டுக்கொடுப்பது” போல. மேலும் இருசாதிகள் பகையோடு இருக்கும்போது, சாதி சொல்லப்பட்டால், இன்னொரு சாதி அம்மஹானை ஏற்காது. மேட்டிமை உணர்வு கொண்ட சாதியும் ”தீண்டத்தகாத” சாதியிலிருந்து ஒரு துறவி வந்தால், அவரை ஏற்காது // என்பதெல்லாம் உங்களது உங்களது உள்ளக் கிடக்கையாக இருக்கலாம், யதார்த்தம் அல்ல. மாபெரும் காங்கிரஸ் தலைவர் சி.சுப்பிரமணியம் பூர்வாசிரமத்தில் சுவாமிகளின் சித்தப்பா. எனவே சுவாமி சித்பவானந்தர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாடு முழுவதற்கும் அவரது பூர்வீக பின்னணி மிக நன்றாகத் தெரியும். அவரை தமிழ்நாட்டின் அனைத்து சமுதாயத்தினரும் போற்றீ வணங்கினர். அந்தர்யோக பயிற்சி முகாம்களில் பிராமணர்களும் எஸ்.சி பிரிவினரும் கவுண்டர்களும் பிள்ளைகளும் எல்லாரும் சேர்ந்து கலந்து கொண்டது பற்றிய விவரங்களை நான் நேரடியாகவே கேட்டிருக்கிறேன். ஆன்மீகம் ஒன்றும்
  திராவிட அரசியல் அல்ல, ஜாதி துவேஷத்தை வைத்து உயிர் வாழ்வதற்கு.

  இன்னும் பல உதாரணங்கள் தரலாம். சுவாமி சின்மயானந்தா கேரளத்துக் காரர்,பூர்வாசிரமத்தில் நாயர் சமுதாயத்தினர். மாதா அம்ருதானந்தமயி பூர்வாசிரமத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஜக்கி வாசுதேவ் கன்னடர். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குடும்பம் கும்பகோணம் பக்கம் பாபநாசத்திலிருந்து சென்று பெங்களூரில் செட்டிலானவர்கள். இவர்களைப் பற்றிய பின்னணி எல்லாம் நன்கு தெரிந்தது தான். பற்பல சமுதாயங்களைச் சேர்ந்த இந்துக்களும் இவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

  எனவே உங்களது வாதங்கள் ஆதாரமற்றவை.

 14. துறவிகளுக்கும் கன்னிப்பெண்களுக்கும் சாதி கிடையாது என்பது மநுவின் மொழியாம்.ஆகவே சாதி பெயரில் உள்ள ஒரு சமுதாயத்தில் இருந்துதான் சாதிகளையும் துறந்து துறவியாகின்றாா்கள். அந்த வகையில் வாழ்க்கை வரலாற்று கணக்கில் சாதியைச் சொல்வதில் பிழையில்லை. ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கவுண்டா்களுக்குமட்டும் என்று இல்லை. அனைத்து சாதியினரும் துறவிகள் ஆகியிருக்கின்றாா்கள். ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் நடத்தும் பள்ளியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உதவிட அன்றைய கல்வி அமைச்சா் பேராசிரியா் அன்பழகனை நான் தொடா்பு கொண்டபோது ” தபோவனம் பார்ப்பனா் அல்லாத(Non-brahmin Organisation ) துறவற பீடம்.அதற்கு நான் நிச்சயம் உதவுவேன் ” என்றாா்.

 15. திரு சக்திவேல்!

  என்னைப்பொறுத்தவரை நான் மஹான்களை ஆன்மிக நிலையிலிருந்து இறைநிலைக்குச் சென்றோராக மட்டுமே பார்க்கிறேன். என்னால் மஹானாக முடியாது. எனவே மஹான்களாவது பார்ப்போமே நினைப்போமோ என்ற ஆசைதான். துறவிகளைக் காண்பது கூட நன்மை பயக்கும் என்பது இந்து மதம்.

  நம்மாழ்வாரை பிள்ளைமார் சாதியைச்சேர்ந்தவர் என்று நான் நினைப்பதே இல்லை. மஹான்களின் பூர்வாசிரம் எனக்குத் தேவையில்லை. வரலாறு படிக்கும்போது எவராவது சொன்னாலும், ஓகோ என்று மட்டும் சொல்லிவிட்டு மறப்பதுதான் என் வழக்கம். மஹானகள் எனக்கு மஹான்கள்தான். சாதியின் அடையாளம் அவர்களுக்குத் தேவையேயில்லை.

  என் உறுதியான நிலைப்பாடு — நமக்குத்தான் சாதிகளும் குலங்களும். அவர்களுக்கு இல்லை.

  இருப்பதாகச் சொல்லி அதிலொன்றும் பாவமில்லை என்பது அவ்ரகளை பிறமனிதர்களோடு இணைத்து இழிவுபடுத்துவதாகும் என்பதே என் முதலும் கடைசியுமான நம்பிக்கை. மன்னிக்கவும். என்னால் மாற்றிக்கொள்ள முடியாது. ஆதாரமே என் நம்பிக்கைக்குத் தேவையில்லை.

  பலர் சாதியைத்தேடி புளகாங்கிதமும் இறும்பூதும் அடைகிறார்கள். அடையட்டும். அவர்கள் வழி அவர்களுக்கு. என் வழி எனக்கு.

  நன்றி.

 16. //துறவிகளுக்கும் கன்னிப்பெண்களுக்கும் … சாதி பெயரில் உள்ள ஒரு சமுதாயத்தில் இருந்துதான் சாதிகளையும் துறந்து துறவியாகின்றாா்கள்… தபோவனம் பார்ப்பனா் அல்லாத (Non-brahmin Organisation ) துறவற பீடம். அதற்கு நான் நிச்சயம் உதவுவேன் ” என்றாா்.//

  நீங்கள் நான் எழுதியதைச் சான்றோடு உறுதிப்படுத்திவிட்டீர்கள். அன்பழகன், பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதவர் எனத் துறவிகள் வாழும் மடங்களைப் பிரித்துப்பார்த்து பார்ப்பனர்கள் என்றால் உதவமாட்டேன் என்று உங்களிடமே சொல்லிவிட்டார். ஆக, சாதி தெரிந்தால் சங்கடமாகிறது. அவராவது திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பார்ப்பன எதிர்ப்பாளர். ஆனால், இரு சாதிகள் ஒன்றுக்கொன்று பகையுடன் வாழுமிடத்தில் — அல்லது ஒரு சாதியை அங்கு வாழம் அனைத்து மற்ற சாதிகளும் வெறுக்கும்போது — ஒரு மடம் இருந்தால் அம்மடம் சாதிகளுக்கப்பாற்பட்டது எனத் தெரியும் போது அல்லது துறவியின் சாதியே தெரியாமலிருக்கும்போது, சாதி பேதமில்லாமல் எல்லாருமே – அல்லது இரு சாதி மக்களுமே அங்கு போய் துறவியை வணங்கி மரியாதை செலுத்துவர். மாறாக, அத்துறவியின் சாதி தெரியவந்தால், அது பகைகொண்ட இன்னொரு சாதி தாங்கள் அத்துறவியை வெறுக்காவிட்டாலும், போகார். ஏனெனில், சாதி மக்கள் அத்துறவியின் சாதியைச் சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்கள். தபோவனத்துக்கு எவரும் செல்ல முடியாது என்று நான் சொல்லவே இல்லை. என் மீது திணிக்காதீர்கள். தடுத்தாலும், தடுக்காவிட்டாலும் சாதி சமூகத்திலும் மதத்திலும் ஒரு தீராப் பிரச்சினையே. சாதிகளைத் துறந்துதான் துற்வியாகிறார்கள் என்று சொல்லிவிட்டு அவர்களின் சாதியை ஏன் குறிப்பிட வேண்டும்? வரலாற்றுக்காக குறிப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. முடிந்தால் மறையுங்கள். சாதி தெரியாதபோது அம்மடத்தில் கூட்டம் அதிகமிருக்கும். மக்கள் எந்நினைப்புமன்றி போய் வருவார்கள்.

  கிரிக்கெட், அரசியல், வேலை, உதவி செய்யக்கூட, கல்வி (சாதித்தலைவர்களால அவர்கள் சாதிக்கென்று) , தொழில் (ஒரு குறிப்பிட்ட சாதி முதலாளி, அவர் சாதிக்காரர்களைத்தான் வேலைக்கமர்த்துவார்கள்) – இப்படி சமூகத்தில் எல்லாமட்டங்களிலும் சாதி சதிராட்டம் ஆட, பலர் மகிழ, சிலர் நைய, ஆன்மிகத்திலாவது அனைவரும் ஒன்றாக உணரட்டுமே? அங்கேன் சாதிகளைக் காட்டி மக்களைப் பிரிக்கவேண்டும்?

  மயிலையில் பேயாழ்வார் சந்நதிக்கருகில் ஒரு வைணவ மடமிருக்கிறது. அங்கு ஒருமுறை ஜீயர் வந்த போது நான் போனேன். மடத்தில் கூட்டம். எல்லாரும் வரிசையில் நின்று தரிசனம் பண்ணினார்கள். ஒவ்வொருவருக்கும் அவை கையில் எது கிடைத்ததோ, அதை கொடுத்து ஆசிர்வதித்தார். கேட்டுக்கு வெளியே – அம்மடத்துக்குப் பின்புறம் உள்ள ஒரு ஏழைக்குடியிருப்பு மக்கள் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே உள்ளவர்கள் அச்சந்நிதித்தெரு வைணவர்களும் வெளியிடங்களிருந்து வந்த மற்றவர்களுமே. இங்கு எவருமே எவரையும் தடுக்கவில்லை. ஜீயரின் சாதியும் தெரியாது. ஆனால் வெளியில்தான் நின்று பார்க்கிறார்கள் அம்மக்கள்.

  இதைப்போலவே, தற்போது திருமலையில் தலைமை குருக்களாக இருக்கும் திரு இராமுலு அவர்கள் சொன்னார்: தலித்து மக்களே இக்கோயிலுக்கு வருவதில்லை. நாமெவரையும் தடுக்கவில்லை. ஆனால் அவர்கள் விலகிகொள்கிறர்கள். இதைப் போக்க வழி, நாமே அங்கு போனாலென்ன? என்று ஒரு திட்டத்தைத் தொடக்கினார். அதன்பெயர் தலித்து கோவிந்தம். இதன்படி, ஆண்டில் சிலதடவைகளாவது – ஒரு முறை ஒரு தலித்து கிராமம் – என திட்டமிட்டு, அம்மக்களுக்குத் தெரிவித்து விட்டு, அங்கு பெருமாளைக் கொண்டு போய், தரிசனமாக ஓரிரு நாட்கள் வைப்பார்கள். ஆண்டுதோறும் தலித்துகோவிந்தம் நடக்கிறது. ஏனென்றால், இராமனுஜரே தலித்து கோவிந்தம் நடாத்டினாரல்லவா?

  ஆக, நாம் பிரிக்கவில்லையென்றாலும் அவர்கள் மனதளவில் பிரிந்துவிடுகிறார்கள். காரணம் சாதி. நம் சாதியால் நாம் பெருமைப்பட்டுக்கொள்ள சிலர் சிறுமைப்படுகிறார்கள் என்றாவது புரியவில்லையென்றால் நாமென்ன மனிதர்கள்?

 17. ஜாதியைப் பற்றிய இந்த கருத்துக்களைப் படித்து சிரிப்புதான் வருகிறது. இன்று சமுதாய அமைப்பு ஜாதியைச் சார்ந்துதான் இருக்கிறது. இதுதான் அப்பட்டமான உண்மை. ஒருவர் பிறக்கும் போதே ஏதோ ஒரு ஜாதியில் தான் பிறக்கிறார்கள். ஏதோ சிலர் அவர்கள் அளவில் அதை மீறிச் செல்கிறார்கள். ஜாதியற்ற சமுதாயம் இன்னும் மலரவில்லை.
  இன்று ஜாதியமைப்பு அரசியல் சட்டத்திலேயே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. மறுபிறவி பெற்று எழுந்துவிட்டது. ஜாதியின் பெயரால் சலுகைகள் வழங்கப் படுகின்றன.இவற்றைப் பெறுவதற்கே அனைத்து ஜாதியினரும் அரசியல் வாயிலாக முயற்சிசெய்கின்றனர். ஜாதியின் அடைப்படையில் வரும் சலுகை வேண்டாம் என எந்த ஜாதியினரும் சொல்லவில்லை!பிறந்த ஜாதியை மாற்றமுடியாது என்று உச்ச நீதி மன்றமே சமீபத்தில் கூறிவிட்டது. பின்னும் நாம் ஏதோ ஜாதியற்ற சமூகத்தில் இருப்பதுபோல் கருதிப் பேசி வருகிறோம்!
  இவ்வளவு சொல்வானேன்! தெருப்பெயர்களில் ஜாதி கூடாது என்று சொல்லும் அரசு, பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்போது ஜாதிப்பெயரைக் கேட்பது ஏன்? இது அறிவீனமா, அயோக்யத்தனமா?
  இந்த நிலையில், சன்யாசியான ஒருவர் ஜாதியைத் துறக்கிறார் என்ற நமது சாஸ்திர நிலைப்பாடு உயர்ந்தது தானே? நூறு வருடத்திற்கு முன்பு பிறந்த ஒருவர் சன்யாசத்திற்கு முன் சார்ந்திருந்த ஜாதியைச் சொல்வது எப்படித் தவறாகும்?
  விவேகானந்தர், பிரம்மானந்தர், சித்பவானந்தர், சின்மயானந்தர் ஆகியோரைச் சிறந்த சன்யாசிகளாக நாம் அறிவோமேயன்றி அவர்கள் பூர்வாசிரம ஜாதியை யார் கருதுகிறார்கள்!
  இன்று ஜாதி எதிர்ப்பு என்பது வெறும் பார்ப்பன எதிர்ப்புதான்!

 18. //விவேகானந்தர், பிரம்மானந்தர், சித்பவானந்தர், சின்மயானந்தர் ஆகியோரைச் சிறந்த சன்யாசிகளாக நாம் அறிவோமேயன்றி அவர்கள் பூர்வாசிரம ஜாதியை யார் கருதுகிறார்கள்!//

  ஆனால் கருதுகிறார்கள். சரியென்கிறார்கள். நமக்கு சாதிகள்; அவர்களுக்கும் இருக்கவேண்டுமென்கிறார்கள்.

  துறவிகளின் பூர்வாசிரம் பக்தர்களுக்குத் தேவையில்லை. ஏதோ வரலாறு எழுதுபவர்கள் சொல்வார்கள்; சொல்லட்டும் என்று விட்டுவிட வேண்டும். அதற்கு மேல் ஒன்றுமில்லை அங்கே.

  சமூகத்தில் சாதியை ஒழிக்க முடியாது. இதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? எத்தனை முறை நான் இங்கே எழுதிவிட்டேன். ஆனால் நாம் சமூகத்தைப்பற்றியா இங்கு பேசுகிறோம்? அவர்கள் நாமல்ல; நாம் அவர்களல்ல; நாம்தான் சமூகம்; அவர்கள் சமூகத்தின் தளை; பற்றுகள் எல்லாவற்றையும் துறந்தவர்கள். இமயமலையில் வாழ்ந்த இரிஷிகளும்; காடுகளில் வாழ்ந்த சித்தர்களும் உண்டே!

  பேசுபடுபொருள் துறவிகள். அதற்குத்தக்க பார்த்தால் சிரிப்பு வராது. வருத்தம்தான் மிஞ்சும்.

  சமூகத்தில் அழிக்கமுடியாதென்றால், துறவிகளும் தங்கள்தங்கள் சாதிகளை சுமந்து கொண்டேதான் வாழவேண்டுமா? அவர்கள் வாழமாட்டார்கள் எனச் சொல்லல் வேண்டாம். நாம் அவர்கள் மீது திணிக்கிறோம்; உங்கள் கருத்தென்ன? துறவிகளைச் சாதிகளோடு இணைத்துதான் பார்க்கவேண்டுமா? Without circumventing, can you give a direct reply ? If you say NO, the matter ends for me.

  From all that I’ve written above, you could have got that I have time and again said we cannot abolish caste system in our society. But we can when it comes to Saints by not talking about the castes they were born.

 19. திராவிட கட்சிகள் ஜாதி வெறி கொண்டவை. பிராமணர்களை மட்டும் ஜாதி வெறி கொண்டு தாக்குபவை.
  இந்துக்களில் பலர் ஜாதியைத் தேடி புளகாங்கிதமும் இறுமாப்பும் அடைவதும்,அதனால் வேறு பலர் சிறுமைப்படுத்தபடுவது இந்துமதத்தின் பெரும் துயரநிலை. இந்துக்கள் ஜாதி வேற்றுமை பார்க்காதவர்களாக மாறவேண்டும்.தங்களது ஜாதியை தெரிவித்து இந்துக்களில் பலர் பெருமை அடைவதும், பிற இந்துக்களை துன்பப்படுத்துவதும் ஏற்று கொள்ளதக்கது அல்ல.

 20. சாதிகள் அடிப்படையில் சமூக அமைப்பு ஏற்பட்டு உயா்வு தாழ்வும் ஒடுக்குதலும் வெறுத்தலும் அரங்கேறிவிட்டதுதான். காலம் மாறிக்கொண்டுதான் இருக்கின்.வாழ்க்கை நிா்பந்தங்கள் மனிதனை மாற்றிக்கொண்டுதான் உள்ளது. சாதி அடிப்படையில் முறையான சமய அனுஷ“டானங்களைக் கற்றுக் கொடுக்க மறுக்கப்பட்டது. எந்த சாதிக்கெல்லாம் மடங்கள் இருக்கின்றதோ அவைகள் எல்லாம் முன்னேறிய சாதிகள் – பாா்வேடு சாதிகளாக இருக்கின்றன. பிறாமணா்களுக்கு மடங்கள் நிறையஉள்ளது.சைவ பிள்ளைமாா்களுக்க ஆதினங்கள் உள்ளன. பிற பிற்பட்ட அட்டவனை சாதி இந்துக்களுக்க எந்த மடமும் இல்லை. எந்த மடாதிபதியும் அட்டவனை சாதி மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவும் இல்லை. துயா் துடைக்க ஆவன செய்யவும் இல்லை. தீண்டாமை ஒழிப்பு தெருவில் நடக்கக் கூடாது நல்ல தண்ணீா் எடுக்கக் கூடாது போன்ற சமூக அநீதிகளை ஒழிப்பதில் இந்த சங்கரமடங்களின் பங்கு கஆதீனங்களின் பங்கு பெரிய புச்சியம்தான்.
  காஞ்சி சங்கராச்சாரியாா் இறந்ததற்கு சிருங்கேரி சங்கராச்சாரியாா் வந்தாரா ? துவாரகா சங்கராச்சாரியாா் வந்தாரா ? வரமாட்டார்கள்.காஞ்சி மடம் ஆதிசங்கரார் துவக்கப்படவில்லை அவரது சீடரால் துவக்கப்பட்டது.பிற 4 மடங்களும் ஆதி சங்கரரால் துவக்கப்பட்டதாம்.அதனால் காஞ்சி மடாதிபதி அந்தஸ்தில் குறைந்தவராம். அவருக்கு ”ஜகத்குரு” என்று பட்டம் போட தகுதி கிடையாது என்பது பிற சங்கரமடாதிபதிகளின் கருத்து. இது குறித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.துறவிகளுக்கு இருக்கும் கோணல் ஒன்றா இரண்டா ? மனிதனின் தகுதியைக் கூட கணிக்கத் தெரியாத இவர்களிடம் என்ன தகுதியை எதிா்பார்க்க முடியும். ஸ்ரீராமகிருஷ்ண மடத்து துறவிகளை இவர்கள் மிகச் சாதாரணமாக நடத்துவார்கள்.துறவியின் தகுதிக்கும் மடத்தை உருவாக்கியது யாா் ? என்ற கேள்விக்கும் என்ன சம்பந்தம்.காஞ்சி மடம் தவிட பிற சங்கர மடத்தில்தான் நல்ல ஆத்மாக்குள் உருவாக முடியுமா ?
  சிருங்கேரி சங்கராச்சாரியார் திருச்செந்துரர் கோவிலின் மூலவா் கதவிற்கும் கதவு நிலைக்கும் 40 லட்சம் செலவில்தங்க தகடு வேய்நது கொடுத்துள்ளாா். என்ன தொண்டு? சில வருடங்கள் கழித்தால் அந்த கதவில் தங்கம் இருக்குமா ? சமூகத்திற்கு என்ன தேவை என்பது கூட தெரியாமல வாழும் இவர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன ? இரண்டுமே ஒன்றுதான்.

 21. திரு அ.அன்புராஜ் அவர்களுக்கு,

  உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால், வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக தங்களது விமர்சனம் வைக்கப் படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்பட்ட காலம் வரை இந்துமதத்தில் பாரம்பரிய மடங்களின் பங்கு என்பது சமூகசேவையாக இருக்கவில்லை. சமூகசேவை என்பது மன்னர்கள், குடித்தலைவர்கள், ஊர்ப்பஞ்சாயத்துக்கள் ஆகியவர்களால் செய்யப்பட்டது. மடங்கள் தங்களது சமயப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது. அது தொடர்பான சாஸ்திர ஞானத்தையும் சம்பிரதாயங்களையும் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்ப்பது, தேவைப்பட்ட சமயங்களில் மட்டும் அரசியல், சமூக வழிகாட்டுதலை அளிப்பது என்ற அளவிலேயே இருந்தது. உண்மையில் இது மிகப்பெரிய பங்களிப்பு. இந்த மடங்கள் இல்லையென்றால் பகவத்கீதையும், உபநிஷதங்களும், பிரம்ம சூத்திரமும், பதஞ்சலி யோகமும், சைவத்திருமுறைகளும், திவ்யப் பிரபந்தமும் நமக்கு எப்படிக் கிடைத்திருக்கும்? சிருங்கேரி மடாதிபதியான வித்யாரண்யர் தான் விஜயநகரப் பேரரசு உருவாக வழிசெய்து தென்னிந்தியாவின் கலாசாரத்தையே காப்பாற்றினார். கர்நாடக வீரசைவ மடங்களும் அந்த சமூகத்தைப் பெரிய அளவில் கட்டிக் காத்துள்ளனர். தமிழ்நாட்டு சைவ மடங்கள் தமிழ்ச் சுவடிகளைப் பாதுகாக்கவில்லையென்றால் நமக்கு திருக்குறளும் தொல்காப்பியமும் தமிழ் இலக்கியத்தின் பெரும்பகுதியுமே கிடைக்காமல் போயிருக்கும். உ.வே.சாவின் தொண்டு என்பது சைவமடங்களின் கொடையின் நீட்சியே. இத்தகைய அமைப்புகள் பாரம்பரியத்தை conserve செய்வதால் தான் அவை conservative என்று அழைக்கப் பட்டன. சமீபகாலத்தில் தான் அது எதிர்மறைச் சொல்லாகி விட்டது.

  ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டின் பாரம்பரிய அமைப்புகள் எல்லாவற்றையும் தகர்த்துப் போட்டு தாறுமாறு ஆக்கிவிட்டதால் இந்த மடங்களின் செயல்பாடும் அதனால் பாதிக்கப் பட்டது. அவை நிலைகுலைந்து போயின. பின்பு ஆரிய சமாஜம், ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம் போன்ற நவீன இந்துமத சீர்திருத்த நிறுவனங்கள் தோன்றின.. அதுவரை பாரம்பரிய அமைப்புகள் காப்பாற்றி வைத்திருந்த சமய ஞானத்தை இவை அச்சுத் தொழில்நுட்பம், நவீனக் கல்வி, ஆங்கிலம் போன்றவற்றின் வாயிலாக புதிய வீச்சுடன் எடுத்துச் சென்றன. சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகின்றன. இரண்டு விதமான அமைப்புகளுக்கும் அவ்வவற்றுக்கான முக்கியத்துவம் உள்ளது.

  இந்துமத மடங்களும் அமைப்புகளும் பரஸ்பர மரியாதையுடனும் ஒத்துழைப்புடனும் இயங்க வேண்டும் என்ற தங்கள் கருத்து முற்றிலும் சரியானது. தத்துவ சிந்தனைகளில் அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம் – இந்துமதத்திற்குள் அதற்கான சுதந்திரம் உண்டு. மற்றபடி பொதுவான விஷயங்களில் அவை இணைந்து செயல்படவேண்டும்.

 22. திரு சக்திவேல். உங்கள் நிலையும் விளக்கமும் சரியானவை. ஹிந்து மதத்தில் பரோபகாரம் என்பது ஒரு அங்கமாகவே, சாமான்ய தர்மமாகவே இருந்தது.பஞ்ச மஹா யஜ்ஞங்கள்- தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான்- என்பதில் எல்லாவித சமூக சேவையும் அடங்கிவிடும். உண்மையான வர்ண அமைப்பு ஒருவரின் கடமையையும் அதற்கேற்ற தகுதியையும் வரையறுத்ததே தவிர, யாருக்கும் எந்த உரிமையையும், சலுகையையும் அத்துமீறி வழங்கவில்லை. வர்ண அமைப்பு ஜாதியாக உருமாறியது காலத்தின் கோலம். இதை எல்லா விஷயத்திலும் பார்க்கிறோம். நமது அரசியல் சட்டம் 50களில் போல் இன்று மதிக்கப்படுகிறதா?

  தவிர மடங்கள் என்று வந்தால் அதற்கென்று சில தன்மைகள் சேரும். காலப்போக்கில் மூல லட்சியங்கள் மறைந்து, மடமே லட்சியமாகிவிடும்! இதை இன்று ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலும் பார்க்கிறோம்! இந்த மடம் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பெயரில் நடந்தாலும், இதை அவர் தோற்றுவிக்கவில்லை. உண்மையில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவிற்குப்பின், அவர் அடியார்கள் துறவிச் சிடர்கள்- இல்லறச் சீடர்கள் என்று இருபிரிவாகப் பிரிந்து ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அஸ்தியையும் இரு பங்காக்கி வைத்திருந்தனர். ஏதோ “தகிடு தத்தம்” செய்துதான் பெரிய பகுதியை எடுத்து வந்து துறவிப் பிள்ளைகள் மடத்தை நிறுவினர். சங்கர மடங்கள் மட்டுமல்ல, ராமகிருஷ்ண மடத்தின் பின்னாலும் இத்தகைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இதையும் மீறிய செயலும் 70 களில் நடந்தது. “சிறுபான்மையினர்” என்ற முத்திரை பெறுவதற்காக, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஹிந்துவே அல்ல, தாங்கள் பின்பற்றுவது ஹிந்துமதமல்ல; அது “ஸ்ரீ ராமகிருஷ்ணாயிஸம்” ; இதை சுமார் 1500 துறவிகளும், 10000 குடும்பங்களும் பின்பற்றுகின்றன, எனவே தாங்கள் சிறுபான்மையினர் என்று உச்ச நீதி மன்றத்தில் ராமகிருஷ்ணமடத்தினர் affidavit தாக்கல் செய்தனர்! நதி மூலம் ரிஷி மூலம் போன்று மடம் மூலமும் பார்க்கக்கூடாது போலும்!

  இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரை, நம் சமூக அமைப்பு கிராமங்களின் அடிப்படையில் நன்றாகவே நடந்து வந்தது.உணவு, கோயில் பராமரிப்பு, கல்வி, பிற சமூக சேவைகள் ஆகியவற்றுக்கு கிராம சமுதாயங்களே பொறுப்பேற்று நிதி ஒதுக்கின. இந்த விவரங்களை பிரிஷ்ட்டிஷ் ஆட்சியாளரின் ஆவணங்களிலிருந்தே எடுத்து தொகுத்துக் கொடுத்திருக்கிறார் ஸ்ரீ தரம்பால் அவர்கள். இதை அவர் எழுதிய 5-நூல் தொகுப்பில் விரிவாகக் காணலாம். [ The Collected Writings of Dharampal-5 Volumes; Published by The Other India Press, Mapusa, Goa]

  இன்று ஹிந்துக்களின் அவல நிலைக்குக் காரணம் அவர்களிடையே ஒற்றுமையின்மைதான். இதை ஹிந்து விரோதிகள் நன்கு பயன் படுத்திக்கொள்கின்றனர். ஹிந்துக்கள் ஜாதி உணர்வினால் மட்டுமல்ல, மதப் பிரிவு, மொழி, குறுகிய பிரதேச/மாநிலப் பற்று, அரசியல் கொள்கை, ஆகிய பலவற்றால் பிளவுண்டிருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றீற்குள்ளும் பற்பல பிரிவுகள்! இன்று கர்னாடகத்தில் சைவர்களையே பிரிக்கும் சூழ்ச்சி நிறைவேறி வருகிறது. இதற்கெல்லாம் மூலம் பிரித்தாளும் அரசியல் தந்திரம்தான்!

 23. திரு சக்திவேல்!

  அவர் இன்னொரு கருத்தையும் வைத்திருக்கிறார்; அதாவது மடங்கள் அட்டவணை சாதியினருக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

 24. //பிறாமணா்களுக்கு மடங்கள் நிறையஉள்ளது.சைவ பிள்ளைமாா்களுக்க ஆதினங்கள் உள்ளன. பிற பிற்பட்ட அட்டவனை சாதி இந்துக்களுக்க எந்த மடமும் இல்லை.//

  ஆனால் சித்தர்கள் போன்ற ஆன்மீகவாதிகள் அட்டவணை சாதியினரிலிருந்து வந்திருக்கிறார்கள் ஆதிகாலத்திலிருந்தே ஆனால் என்ன பிரச்சினையென்றால், அவர்களை பிற இந்து சமூகங்கள் கண்டுகொள்வதில்லை எனவே அவர்கள் ஓர் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே தெரிந்து மறைந்துவிடுவ‌ர் அப்படியே தெரிபவர் சமூக தளத்தில் சில செயல்கள் செய்தவராக இருக்கவேண்டும் ஒருவர் தமிழ்நாடு சட்டசபை உறுப்பினாரக இருந்தத்தனால் தெரியவந்தார். அவரைப்பற்றி இங்கு கட்டுரைகள் உண்டு!

  அட்டவணை சாதி மக்களுக்கு மதம் ஒரு வேராக இல்லை. தம் மதத்தைத் தெரிந்துகொண்டு, புரிந்து கொண்டு அணுக வேண்டுமென்ற சிந்தனை வளரவிடாமல் வாழ்க்கை அமைகிறது எனவே அவர்களிடமிருந்து வரும் ஆன்மிகவாதிகள் சொற்பமே அப்படியே ஓரிருவர் வந்தாலும் அட்டவணை மக்களே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறாரகள் ஆன்மிகத்தில் ஈடுபாடு மிக்க அட்டவணை ஜாதி பிரமுகர்களை பிற ஜாதியினரே பேசுவார்கள் இளையராஜாவின் ஆன்மிகத்தின் நிலையதுவே. அவர் ஜாதிக்காரர்கள் கண்டுகொள்ளவேயில்லை. அவரும் அவர் ஜாதிக்காரர்களை விட்டு விலகிவிட்டார்

  ஆக, இப்படிப்பட்ட அட்டவணை ஜாதியிலிருந்துவரும் ஆன்மிகநிலையில் உயர்ந்தோருக்கு ஒரு பெரிய கூட்டமில்லையாதலால் – பிறராலும் அவர்கள் சாதியினராலும் – அவர்கள் வானத்தில் தோன்றிமறையும் வாள் நட்சத்திரங்கள்தான்.

  அதேவேளையில், நாராயண குருவை எடுங்கள் கேரள, மற்றும் தென்மாவட்ட பிள்ளைகள் உயர்த்துக்கு கொண்டு போய் வைத்துவிட்டார்கள். அவர் காலத்துக்குப் பின் அவர் ஒரு பொலிட்டிகல் ஸ்லோகன், கச்சி ஐகானாககூட ஆக்கப்பட்டு விட்டார் அக்கட்சி கேரளாவில் பி ஜே பியுடன் கூட்டணி வைத்திருக்கிறது அய்யா வைகுண்டரும் அப்படியே சங்கரமடத்தை அய்யர்களும், ஜீயர் மடங்களை அய்யங்கார்களும், ஆதினஙகளை தமிழ்நாட்டு சைவைப்பிள்ளைகளும் தொண்டர்களாக இருந்து பரப்புரை செய்ததால் பேர் பெற்றன

  அட்டவணை சாதி ஆன்மிககுருக்களுக்கு எவருமே இல்லை எனவே மடங்கள் இல்லை ஆதிகாலத்தில் நிறைய பேர் வந்தார்கள். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் இன்றுவரை மேற்சாதியினர் இருக்கிறார்கள் இரவிதாஸ் நிலைமை அதே பஞ்சாபி அட்டவணை ஜாதியினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டார் எனவே ஆண்டுதோறும் வாரணாசியில் நடக்கும் அவரின் ஜயந்திக்கு பஞ்சாபிலிருந்து வரும் தலித்துக்கள் மட்டுமே காணப்படுவார்கள். உலகமெங்கும் அவ்ருக்கு மடங்கள் உண்டு. ஆனால், அவை புலம்பெயர்ந்த பஞ்சாபி தலித்துக்களால் மட்டுமே நடத்தப்படுபவை

  தில்லி, உ பி, பஞ்சாப், இராஜஸ்தான், இவைகளில் இரவிதாஸ் பஸ்டி என்று சேரி இருந்தால், சொல்லமாலே தெரியும் அது அட்டவணை சேரியென்று. இரவிதாசின் கோயில்கள் இருந்தால் பக்கத்தில் சேரி இருக்கிறது என்று பொருள். அங்கு விழாவென்றால் அம்மக்கள் மட்டுமே வருவார்கள் இத்தனைக்கும் இரவிதாஸ் மிகப்பெரிய இந்து மஹான். என்ன செய்ய? அவருக்குத்தான் சாதி இல்லையே!!

  அங்காவது தலித்துக்கள் ஒன்று கூடி அவரை நினைவில் கொண்டுவந்தார்கள். இங்கு அட்டவணை சாதியினர் கூடி தங்களது குருவை ஏற்றம் செய்யவில்லை நினைப்பும் வரவில்லை இதற்கு ஒரு காரணம் மேலே இருக்கிறது. தாங்கள் ஆன்மிக நிலையில் உயர்வு பெருவது சாத்தியமே இல்லை என்ற முடிவு. தங்களுள் ஒருவர் வந்தால், அவர் தங்களிடமிருந்து விலகி உயர்ஜாதியாகிவிட்டார் என விட்டுவிடுகிறார்கள்

  மற்றொரு காரணம் தமிழக அட்டவணை சாதியினரில் பெருவாரியான மக்கள் – நேரடி கிருத்துவர்களாகவும் மறைமுக கிருத்துவர்களாகவும் இருக்கிறார்கள்.

 25. திரு.சக்திவேல் அவர்களுக்கு

  வணக்கம். தங்களின் பதிவை படித்தேன்.மிக்க மகிழச்சி அடைந்தேன். தங்களது

  கருத்துக்கள் சரியானவை. கூடுதல் விளக்கங்கள் அளித்ததற்கு நன்றி.சங்கர மடங்களும் ஆதீனங்களும் பிற சாதி மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய காலத்தின் நிலையை அவர்கள் விளங்கிக் கொண்டதாக உள்ளதா ?

  மதுரை ஆதீனம் என்ற அமைப்பில் சொத்துக்களின் மதிப்புஎன்ன ? வருவாய் என்ன ? செயல்படும் திட்டங்கள் ? கல்விப்பணிக்கு எவ்வளவு பணம் ? பிற சாதி மக்களிடையே தேவாரம் திருவாசகம் பிரச்சாரம் செய்ய எவ்வளவு பணம் செலவிடப்படுகின்றது? தெரிந்தவா்கள் பதிவு செய்யலாம்.மதுரை ஆதீனத்தை கைபற்றி மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வசம் ஒப்படைக்கலாம். சிவனுக்கு உகந்த முடிவாக அது இருக்கும்.

 26. தருமபுரம் ஆதீனகர்த்தா் நமது சீடராக -இளைய சந்நிதானமாக சேரன்மகாதேவிக்கு அருகே உள்ள கூனியுரைச் சோ்ந்த குமரேசன் சைவ பிள்ளைமாா் சமூக பையன் தோ்வு செய்யப்பட்டு மதத்தில் சோ்ந்தாா். பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு குரு காசிக்கு சென்று விட்டாா். மடத்தில் ஒழுங்கீனங்கள் பெருகி விட்டதைக் கேள்விப்பட்டு மீண்டும் வந்து குருமகாசந்நிதானமாக பொ?றுப்பேற்றுக் கொண்டாா். இரவு அவரது படுக்கை அறையில் விஷ ஊசியோடு இருவா் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா். கொலையாளிகளுக்கு ஆதரவானவா் எனவே இளைய சந்நிதானமும் கைது செய்யப்பட்டாா். பின் நிலைமை என்ன ஆவது என்பது தெரியவில்லை.
  —————————
  மகாராஷ்டிர மாநிலத்திலும் வெளிநாடுகளிலும் ஸ்ரீராமச்சந்திரமிஷன் என்ற அமைப்பு அருமையான தொண்டுகள் செய்து வருகின்றது.ஆனாலும் அங்கும் இரண்டு இளைய சாமியாா்களுக்குள் தலைமை பொறுப்பிற்கு ஏற்பட்ட போட்டியில் ” வயதான தலைமை சாமியாா்” விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டாா்.
  —————————————-
  மடங்கள் நிா்வாகத்திற்கு ஒரு பொது நிா்வாக அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.மடங்களின் தனித்தன்மைக்கு பங்கம் வராமல் அந்த அமைப்பு செயல்பட முடியும்.தொடா்ந்து நல்லமுறையில் நிா்வகிக்க முடியாமல் போன மடங்களை இந்த அமைப்பு முறையாக செயல்படும் கொள்கை இணக்கம் உள்ள மடங்களோடு இணைத்து விடலாம். இல்லையெனில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு கொடுத்து விடலாம்.
  ———————————————————
  திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவிலுக்குள் அடைந்து கிடக்கும் தங்கங்களை என்ன செய்யப்போகின்றீா்கள் .அப்படியே கிடந்து மக்கித்தான் போக வேண்டுமா ?ஜோதிடம் பிரசன்னம் என்று தவறான கருத்துக்களின் அடிப்படையில் கஜானா அறையை திறக்காமல் காலம் கடத்துவது ஏன் ? செல்வத்தின் பலன் புட்டிவைப்பதில் இல்லை. அது ஆற்று வெள்ளம்போல் ஒடவிடுவதில்தான் உள்ளது.கேரளத்தில் இந்துக்கள் கிறிஸ்தவ அரேபிய மத காடையா்களின் வன்முறைக்கு பலியாகி வருகின்றாார்கள். டமேற்படி செல்வங்களை எல்லாம் எடுத்து விற்று பணமாக்கி இந்த சமூக நலனுக்கு செலவிட வேண்டும்.ஆனால் இது குறித்து யாரும் பேசுவார் இல்லையே ! ஏன்
  தமிழ்இந்து கூட இது குறித்து எந்த பதிவையும் போடவில்லையே!

 27. இந்தக் கருத்துப் பரிமாற்றம் சுவாரசியமாகப் போகிறது.ஓரிரு விஷயங்கள் பற்றிச் சொல்லவேண்டி யிருக்கிறது.
  1. நிலைமை சரியில்லாத சில அமைப்புக்களை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குக் கொடுத்து விடலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.ஆனால் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் நிலை என்ன? அவர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் பெயரைச் சொன்னாலும், அவர் உபதேசங்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறார்கள்.கூர்ந்து கவனித்தால்தான் இது புரியும். ஸ்ரீராமகிருஷ்ணர், ஆங்கில-மேலைபாணிக் கல்விமுறை, கிறிஸ்துவ மிஷினரிகளின் பிரச்சாரம் ஆகிய இருமுனைத் தாக்கிலிருந்து ஹிந்துமதத்தைக் காத்தார். தற்காலத்தில் ஹிந்துக்கள் எந்த வழியைப் பின்பற்றவேண்டும் [நாரதர் காட்டிய பக்தி வழி] என்பதையும் எடுத்துரைத்தார். ஆனால் இன்றைய ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினர், ‘எல்லா மதங்களும் உண்மையானவை, சரியானவை’
  (All religions are true and equal)என்ற நிலையை உலக அளவில் பரப்பி வருகின்றனர்.இது உலக ஆதிக்கத்தையும், ஹிந்து விரோதத்தையும் முக்கியமாகக் கருதிச் செயல்படும் ஆபிரஹாமிய மதங்களுக்கு அளிக்கும் மறைமுகமான ஆதரவாகிறது.
  இக்கருத்துப்படி இவர்கள் செய்த சில வேலைகளால் நமது மதத்திற்கு பாதகமே ஏற்பட்டுள்ளது. இவர்கள் பைபிளையும் ‘வேதாந்த’ வழியில் விளக்க முற்படுகிறார்கள். ஏசுவின் உரையை வேதாந்தப்படி விளக்கியிருக்கிறார்கள். இதைப்பார்த்த மேலை நாட்டினர், ‘உங்கள் வேதாந்தம் எங்கள் பைபிளிலேயே இருப்பதால், இங்கு நீங்கள் வேதாந்தம் ஏன் பேசவேண்டும்?’ என்று கேட்கின்றனர்.
  இதையெல்லாம் Philip Goldberg எழுதிய American Veda என்ற புத்தகத்தில் பார்க்கலாம். இப்படி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினர் மேலை நாட்டில் செய்ததாகச் சொல்லப்பட்டு வந்த வேதாந்த பிரசாரம் நமக்கு எதிராகவே உருவெடுத்திருக்கிறது.
  – சரி, உள் நாட்டில் தான் இவர்கள் நிலை என்ன? நான் கடந்த 50 ஆண்டுகளில் 7 மாநிலங்களில் இவர்கள் மடம்/ஆசிரமங்களைப் பார்த்தவன். இங்கும் இந்தச் சாமியார்களிடயே போட்டியும் பூசலும் நிலவுவதையும், குறுகிய மொழிவெறி இருப்பதையும் நேரில் கண்டிருக்கிறேன்.[தெரிந்த சில விவரங்களை வெளியிடத் தயக்கமாக இருக்கிறது.] இப்போது புதிதாக ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் பெயரில் “Universal Temple” என்று கட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக நிதி வசூலும் செய்கிறார்கள். இது ஹிந்து மதத்திற்கு எந்த விதத்தில் சகாயமாகும்? ஹிந்து மதம் சரியானது, உண்மையானது, சமமானது என்று எந்த இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ சொல்கிறார்களா? பின் Universal Temple என்பது யார் காதில் பூ சுற்றும் வேலை?
  எல்லாம் உள்ளே விகாரம், வெளியே அபாரம்!இப்படிச் செயல்படும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கையில் போனால் பிற ஹிந்து அமைப்புகள் உருப்படுமா?

  ஹிந்து மதத்தின் எந்தப்பிரிவின் எந்த மடமும் சரியாகச் செயல்படாததற்கு அங்கு சேரும் சொத்தும் பணமும் தான் காரணம்.சன்யாசிகள் பணம், காசு தொடக்கூடாது. ஆனால், மடம் என்று வந்தால் இந்தக் கட்டுப்பாடுகள் இல்லை!
  இதற்கும் ஹிந்து சமுதாய அமைப்பின் சீரழிவுதான் மூல காரணம்.

  இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
  நல்லாற்றின் நின்ற துணை.
  துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
  இல்வாழ்வான் என்பான் துணை.

  இன்று இல்லறத்தார் துறவிகளை ஆதரிப்பதில்லை. துறவிகள் மடங்கள் நிறுவி வாழவேண்டிய நிலை; அங்கு பணம், சொத்து சேரும்; அதற்கான பொறாமையும் போட்டியும் வரும். இது உலகம் முழுவதும் எல்லா மத அமைப்புகளிலும் நடப்பதுதான். பொருள் சேர்ந்த இடத்தில் பயம் வருவது இயல்புதானே!
  2. சில கோவில் செல்வத்தை பொது நலத்திற்குச் செலவிடலாமே என்பது ஒரு கருத்து. கோவிலுக்கு நன்கொடை, சொத்து கொடுத்தவர்கள் ஏதோ நோக்கத்திற்காக/
  காரணத்திற்காகக் கொடுத்திருக்கிறார்கள். அதை மீறி அச்செல்வத்தைச் செலவிடுவது நம்பிக்கைத் துரோகமாகும். அதற்கு ஒரு வழிவகுத்தால் அங்கும் ஒரு அதிகார வர்கம் உருவாகும். சுரண்டல் தொடங்கும். தமிழ்நாட்டின்
  அறநிலையத்துறை செய்யும் அராஜகம் நாம் அறியாததா?

 28. திரு.நஞ்சப்பா அவர்களுக்கு வணக்கம்.

  தங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன். உலகப் பொது கோவில் என்பது வெறும் வெற்றுவிளம்பரம்தான். இந்து என்ற வரைறைக்கு வெளியில் என்றுதான் பொருள்படும். நானும் ராமகிருஷ்ண இயக்கத்து துறவிகளிடம் தாங்கள் சொன்ன அனைத்து பிரச்சனைகளையும் பேசி எதிா்ப்பை பதிவு செய்துள்ளேன். இருக்கின்ற கூட்டத்தில் ” அவர்கள் ” சற்று பராவாயில்லை என்பதுதான் என் இறுதியான முடிவு.
  தீண்டாமை ஒழிப்பு விசயத்தில் என்றாவது ராமகிருஷ்ண மடத்து துறவி ஒரு பிரச்சனையை தீா்த்து வைத்தாா் என்றுள்ளதா” என்று நான் சென்னை ராமகிருஷ்ண மடத்து துறவிகளிடம் நேருக்கு நேர் கேட்டுள்ளேன்.அதிக அளவில் அந்தா் யோகம் நடத்துவதில்லை என்று எனது வருத்தத்தையும் தொிவித்துள்ளேன். தனி நபா் துதி மிகவும் குறைவு. மடத்து தலைவா் பொது நியதி படி தோ்வு செய்யப்படுகின்றாா்.இது சிறப்பு.ஆகவே விசம் வைத்து கொல்லும் அளவிற்கு ராம.மடத்தில் இன்னும் பதவி வெறி பிடிக்கவில்லைதான்.

 29. திரு.நஞ்சப்பா அவர்களுக்கு வணக்கம்.

  திருவனந்தபுரதம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறையில் குவித்து

  வைக்கப்பட்டுள்ள பெரும் செல்வங்கள் குறித்து எனது கருத்துக்களை படித்திருப்பீா்கள்

  அல்லவா ?

  அது குறித்து மெளனம் ஏன் ?

  கேரள மண் அரேபிய மயமாகி இந்துக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றார்கள். முஸ்லீம்கள் வலிமை பெற்றால் வெகு சுலபமாக கொள்ளையடித்துக் கொண்டு சென்று விடுவாா்கள்.

 30. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா says:

  யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா

  வேதாந்தம் தந்த வீரத் துறவி – சுவாமி சித்பவானந்தர் – விரிவான வாழ்க்கை வரலாறு புத்தக வெளியீடு குறித்துத் தமிழ் ஹிந்து தளத்தில் அறிமுகம் அளித்த ஆசிரியர் குழுவுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இறையுணர்வில் மூழ்கியிருந்த ஆன்மஞானி, சாதியுணர்வு சற்றேனும் இல்லாதிருந்த மகான். அவரைப்பற்றிய இந்த உண்மையில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. அவருடைய சிறப்புக்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைந்திருந்த இந்த ஆன்மீகச் சிறப்பை இயன்றவரை வெளிப்படுத்துவதுதான் இந்த வரலாற்று நூலின் நோக்கம். நூலில் இந்நோக்கம் நிறைவேறியிருப்பது நூலைப் படிப்போருக்கு விளங்கும் என்பதில் எனக்குச் சிறிதேனும் ஐயமில்லை.
  நூல் அறிமுகவுரையில் சுவாமிகளின் தந்தையார் பெயரைக் குறிப்பிட்ட விதத்திலிருந்து ஜாதியைக் குறித்த வாதப் பிரதிவாதங்கள் பல அன்பர்களிடமிருந்து வந்துள்ளன. அவற்றைப் படித்தபோது, முதலில், விஷயம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறதே என்று தோன்றியது. (இப்போது துறவு ஸ்தாபனங்களின் நிலை பற்றிய அலசலாகவும் அது போய்க்கொண்டிருக்கிறது!) ஆனால் மறுமொழிகளைப் படிக்கப்படிக்க, தமிழ் ஹிந்துச் சமுதாயம் சாதியைப்பற்றிய தெளிவைப் பெற முயன்றுகொண்டிருக்கிறது, கருத்துப் பரிமாற்றத்திற்கேற்ற விவாத மேடையாகத் தமிழ் ஹிந்து தளம் விளங்குகிறது என்பதையே இம்மறுமொழிகள் சுட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது.
  எனவே இந்த விஷயம் குறித்த என்னுடைய சில அனுபவங்களையும் சாதிகள் குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் நிலைப்பாடுகளை நான் அறிந்தவாறும் இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். (ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் நிலைப்பாடுகள் என்று நான் சொல்லும்போது அதன் மூல மூர்த்திகளாகிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அருள் அன்னை ஸ்ரீ சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர், இம்மூவருக்குப் பின் அவர்களது கொள்கைகளை எடுத்துச் சென்றவர்களில் சகோதரி நிவேதிதை, தமிழ்நாட்டிற்கு அந்த இயக்கத்தின் அருட் கொடையை அளித்த சுவாமி சித்பவானந்தர் ஆகியோரின் போதனைகளையே குறிப்பிடுகிறேன்.)
  1986ல் திருநெல்வேலியில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி துவக்கப்பட்டபோது, சுவாமிகளின் ஆணைக்கிணங்க என்னைக் கல்லூரியின் முதல்வராக நியமித்தார்கள். அப்போதிலிருந்து இருபது ஆண்டுகள் நான் அப் பணியினை ஆற்றும் பேறு பெற்றிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைச் சொல்லுகிறேன்.
  சுவாமி சித்பவானந்தர் அவர்கள் திருப்பராய்த்துறையில் நிறுவியிருந்த விவேகானந்த வித்யாவன குருகுலத்தில் மாணவர்கள் அனைவரும் சம்ஸ்கிருதம் கற்றுக்கொண்டு, நாள்தோறும் காயத்ரீ மந்திரம் ஓதவும் பகவத்கீதை கற்கவும் ஏற்பாடு செய்துள்ளார். சென்ற நூற்றாண்டின் நாற்பதுகளில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிக்கு எதிர்ப்புக்கள் இருந்துள்ளன. அவற்றைப் பொருட்படுத்தாமல் சுவாமிகள் தம் திட்டத்தை நிறைவேற்றினார். பின்னர் 1956ல் சேலத்தில் பெண்கள் கல்வி நிறுவனங்கள் சுவாமிகளின் வழிகாட்டுதலில் துவக்கப்பட்டபோது அங்கும் மாணவியர்அனைவருக்கும் காயத்ரீ மந்திரம் கற்றுக்கொடுக்கப்பட்டது.
  நாற்பத்துமூன்று ஆண்டுகள் கழித்து நெல்லையில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி துவக்கப்பட்டபோது, சுவாமிகளின் அடியொற்றி அங்கும் மாணவியர் அனைவருக்கும் காயத்ரீ மந்திரம் கற்றுக்கொடுக்கப்பட்டது. தினந்தோறும் பிரார்த்தனையில் அதை ஓதினார்கள் மாணவியர். பகவத் கீதையில் சில சுலோகங்களும் வேதப் பிரார்த்தனைகள், உபநிஷத மந்திரங்கள் சிலவும் மாணவியருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.
  இது தொடங்கி நடந்துகொண்டிருந்த சில மாதங்களில் மாணவி ஒருத்தியின் தந்தை என்னைப் பார்க்க வந்தார். “காயத்ரீ மந்திரத்தைப் பெண்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறீர்களே, இது சரியா?” என்றார். “எங்களுடைய ஸ்தாபகர் சுவாமிகள் சேலத்தில் பெண்கள் கல்வி நிலையங்களில் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். அவர் செய்ததைத்தான் நாங்கள் செய்கிறோம்” என்றேன். “இருக்கலாம். ஆனால் பெண்கள் காயத்ரீ மந்திரம் சொல்லவோ வேதம் படிக்கவோ அதிகாரம் இல்லையே” என்றார். “ஐயா, அது பழைய ஏற்பாடு. அதற்கு அப்போது தேவை இருந்திருக்கலாம். ஆனால் யாரெல்லாம் அறிவைப் பெருக்குவதிலும் ஒழுக்கத்தில் நிலைநிற்பதிலும் உண்மையான நாட்டம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் காயத்ரீ மந்திரம் கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பார் எங்கள் குருநாதர். இக் கல்லூரி குருகுல முறையில் ஒழுக்கத்தையும் சுயக் கட்டுப்பாட்டினையும் மாணவியருக்கு போதித்துவருவதால் அதற்கு உட்படும் ஒவ்வொரு மாணவியும் காயத்ரீ ஓத ஓரளவு தகுதியைப் பெற்றுவிடுகிறாள். இது அவளுக்கும் சமுதாயத்திற்கும் நலன் செய்யும் நல் முயற்சிதானே. உங்கள் குடும்பங்களில் உங்கள் பெண்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு இங்கு அளிக்கப்படுகிறதே” என்றேன். அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. விடை பெற்றுச் சென்றார். இந்த ஒரு சிறு மாற்றுக் கருத்தைத்தவிர வேறு எந்த எதிர்ப்பும் பிறகு வரவில்லை.
  மாணவியருக்குப் பல பண்பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றின் ஒரு முக்கிய பகுதியாக அட்டவணை சாதி மாணவியருக்குச் சிறப்பாக உபநிஷத மந்திரம் ஒப்பித்தல் போட்டி நடத்த விரும்பினேன். ஏனென்றால் அரசாங்கம் அளிக்கும் இட ஒதுக்கீடு, பண உதவி ஆகியவை அம்மக்களுக்குத் தேவையான சில சலுகைகளை வழங்கியபோதும் அச் சலுகைகளைப் பெறுவோர் அதனால் கௌரவமோ கூடுதல் சமூக அந்தஸ்தோ ஏதும் பெறவில்லை. அவர்களது சுய கௌரவத்தையும் பிற சமுதாயத்தினரிடையே அவர்களுக்கிருக்கும் மதிப்பையும் உயர்த்த வேண்டுமென்றால் அவர்கள் மற்றவர்களுக்கு இணையான பண்பாட்டு பலம் பெற்றிருக்கவேண்டும். அதைப் பெற உதவுவதே அவர்களுக்குச் செய்யும் உண்மையான உதவியாக இருக்கும் என்று தோன்றியது.
  எனவே மூன்றாமாண்டு வகுப்புக்களில் படித்த அட்டவணை சாதி மாணவியரை அழைத்து, இந்தச் சிறப்பு உபநிஷதப் போட்டியைப்பற்றி அறிவித்தேன். “எங்களை நீங்கள் பிரிக்கிறீர்கள்” என்றாள் ஒரு மாணவி. “இல்லையம்மா. பிரிக்கவில்லை. மற்றவர்களோடு உங்களைச் சேர்க்க முயல்கிறேன்” என்று என் நோக்கத்தை மீண்டும் விளக்கினேன். கூச்சத்தினாலோ வருத்தத்தினாலோ தனித்தே இருந்துவிட்டால் அந்த வருத்தம் மாறாமலே நின்றுவிடும் என்றேன். என் கருத்தை அவள் ஏற்றுக்கொண்டாளோ இல்லையோ, மேற்கொண்டு பேசாது இருந்துவிட்டாள். “பயமாக இருக்கிறது, அம்பா” என்றாள் இன்னொரு மாணவி. “எல்லார் முன்னாலும் நாங்கள் சொல்லும்போது தப்பு விட்டால் கேலி செய்வார்கள்” என்றாள். “சரி. எல்லார் முன்னாலும் சொல்லவேண்டாம். இங்கு என் அறையில் என் முன்னாலும் சம்ஸ்கிருத ஆசிரியர் முன்னாலும் சொல்லுங்கள்” என்றேன். மாணவியர் அதற்கு ஒத்துக்கொண்டனர். பிறகு இந்த மாணவியருக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இது ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்தது. மாணவியர் பலருக்கு இதில் மகிழ்ச்சியே.
  இந்த முயற்சிக்கும் சாதிச் சாயம் பூசச் சிலர் முயலாமல் இல்லை. ஆனால் நாளடைவில் அவையெல்லாம் ஓய்ந்து, நெல்லை ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி சாதி உணர்வுகளைக் கடந்து மாணவியர் அனைவருக்கும் பண்பாட்டையும் சமய நெறியையும் நல்வாழ்வையும் புகட்டும் ஒரு கல்வி ஸ்தாபனம் என்ற பெயர் நிலைத்தது.
  இந்தப் பண்புப் பயிற்சி முயற்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மாணவியர் சேர்க்கையில் அரசு ஆணைகளுக்கேற்ப, சாதி அடிப்படையில் என்னென்ன இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமோ அவை அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு வந்தன. அவ்வாறு சேர்க்கப்பட்ட பி சி, எம் பி சி, எஸ் சி எஸ் டி சமுதாயங்களைச் சேர்ந்த மாணவியருக்கு அரசு அளித்த கல்வி உதவித் தொகையும் பெறப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வந்தது. பணத்தைப் பெற்றோரிடமே அளிப்போம். (இப்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.) அதற்காக ஒருமுறை மாணவி ஒருத்தியின் தந்தை வந்திருந்தார். பணத்தைப் பெற்றுக்கொண்டபோது, “இந்த அநியாயத்தை எங்கு சொல்வது?” என்றார். “எந்த அநியாயத்தைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவருக்கு உரிய தொகையை ஒரு பைசா குறையாமல் சரியாகவே கொடுத்திருந்தோம். “உங்களைச் சொல்லவில்லையம்மா. எங்கள் சமுதாயத்தில் இருப்பதைச் சொல்கிறேன். அரசாங்கம் என்ன சலுகைகள் கொடுத்தாலும் இந்த பள்ளப் பசங்களே அள்ளிக்கொள்கிறார்கள்” என்று புலம்பிக்கொண்டே பணத்தைப் பெற்றுச் சென்றார்.
  அவர் போனபிறகு அலுவலகத்தில் ஆவணங்களைப் பரிசோதித்ததில் உண்மை ஒன்றைக் கண்டுபிடித்தேன். கல்லூரியில் படித்துவந்த எஸ் சி எஸ்டி மாணவியரில் அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் பள்ளர்களே. பறையர், அருந்ததியர், பிற சமுதாயத்தவர்கள் குறைவாகவே இருந்தனர். விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் இடமளித்துவிடுவதே நாங்கள் பின்பற்றிய நடைமுறையாய் இருக்க, பயன்பாடு அடைந்தவர்களின் விகிதாசாரத்தில் சமநிலை இல்லாது போனது. இதற்கு யார் காரணம்? முயற்சி அதிகம் எடுத்துக்கொண்டு சலுகைகளைப் பயன்படுத்தியவர்களா? தம்மை முன்னேற்றிக்கொள்ள முயன்றதற்கிடையில் அடுத்தவர்கள் முன்னேற்றத்திற்கு அவர்கள் தடை போட்டார்களா? அல்லது, அவரது புலம்பல் முறையான முயற்சி மேற்கொள்ளாதவர்களின் பொறாமைப் புலம்பலா? இங்கே பேசுவது சாதி உணர்வு மட்டும்தானா? அதற்கும் கீழே தன் அசிங்கமான முகத்தை மறைத்துக்கொண்டு வேலை செய்வது சுயநலமல்லவா? எங்கெல்லாம் சாதியுணர்வு சுயநலத்திற்குத் துணைபோகிறதோ அங்கு சாதி ஒரு சமுதாயக்கேடாக நிலைகொண்டுவிடுவதைத் தவிர்க்க முடியாது, அதை எல்லா மட்டங்களிலும் சுயநலம் பிடித்த மனிதர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பது புரிந்தது.
  சரி. தனிமனித சுயநலத்தை மட்டுப்படுத்த சாதியுணர்வைப் பயன்படுத்தும் முயற்சிகள் ஹிந்து சமுதாயத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா? பாரதத்தின் நீண்ட வரலாற்றை நோக்கும்போது, அத்தகைய முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டை அளித்திருப்பதைக் காண்கிறோம். இந்த நிலையைப் பாராட்டுகிறார் சகோதரி நிவேதிதை. (The Web of Indian Life – Ch. 8 Nobless Oblige: A Study of Indian Caste) இந்தியாவில் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு சாதியில் பிறந்தவர் கல்வி, செல்வம் முதலிய வாய்ப்புக்களைப் பெற்று வாழ்வில் உயரும்போது, தன் முன்னேற்றத்திற்கு உதவிய தன் சாதியைச் சேர்ந்தவர்களையும் முன்னேற்றிவிடக் கடமைப்பட்டிருக்கிறார். இந்த நல்ல ஏற்பாடு ஐரோப்பாவில் நிலவிவந்த நிலைக்கு முற்றிலும் மாறானது என்று சுட்டிக்காட்டுகிறார் சகோதரி நிவேதிதை. அங்கு உயர் சாதியானது பணம், திறமை, அழகு படைத்தவர்களை உயர் சாதிக்கு உயர்த்திக்கொண்டு அவை இல்லாதவர்களைத் தாழ்ந்தவர்களாகவே வைத்திருக்கிறது. அதே சமயம் உயர் சாதியில் பிறந்து மேற்சொன்ன வாய்ப்புக்கள் இல்லாதுபோனவர்கள் கீழ் சாதி ஆகிவிடுகிறார்கள். இந்தியாவிலோ ஒருவர் பிறந்த சாதியிலிருந்து தாழ்வதில்லை. மாறாக அதே சாதியைச் சார்ந்தவர்களால் உயர்த்தப்படுகிறார் என்கிறார். காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் இன்றும் ஒரு சாதியைச் சேர்ந்த வசதி படைத்தவர்கள் தம் சாதியிலுள்ள வசதியற்றவர்களுக்குக் கல்வி முதலிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க சாதிச் சங்கங்களை அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். தனிமனித சுயநலத்தை வெல்லச் சாதியின் பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இது ஒன்று.
  இன்றைய ஜனநாயக அரசியல் முறை சாதி அமைப்பினை ஒரு போக்கில் பயன்படுத்திக்கொள்கிறது. அதனால் பல கேடுகளும் சில நலன்களும் ஏற்பட்டிருக்கின்றன. அறநெறி நிற்கும் ஆன்றோர் வழி சென்று சமுதாயத்தில் எல்லோருக்கும் நலன் செய்யும் ஏற்பாடுகளை அரசு உற்சாகப்படுத்தவேண்டும். அதற்கு மக்கள் முதலில் மனதளவில் தயாராக வேண்டும். நாம் இன்றைய சூழலுக்கு ஏற்ப சாதியமைப்பைச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நலன் செய்யும் அமைப்பாக மாற்ற நம் முன்னோர்களின் முயற்சிகளையும் மாறியமைந்துள்ள இன்றைய சூழல்களையும் கருத்தில் கொண்டு முறையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  திரு பி எஸ் வி அவர்கள் சாதியை நம் சமுதாய அமைப்பிலிருந்து ஒழிக்கவே முடியாதுபோலிருக்கிறதே என்று வருந்துகிறார். ஐயா, உங்கள் வருத்தம் எனக்குப் புரிகிறது. ஆனால் அந்த வருத்தத்தில் ஒரு தவறான நிலைப்பாடு புகுத்தப்பட்டிருக்கிறது என்பது ஆழ்ந்து சிந்தித்தால்தான் புலனாகும். வரலாற்று ரீதியாக பாரத சமுதாயத்தைத் தாக்கி வரும் பல அன்னியக் கலாச்சாரங்களின் முயற்சிகளில் பாரதத்திற்கு உண்மையாகவே பாதுகாப்பு அளித்து வந்துள்ள அமைப்புக்களைச் சீர்குலைக்கும் ஒரு முயற்சியே சாதியமைப்பின் கேடுகளைப் பெரிதுபடுத்தி ஹிந்து சமுதாயத்தை பலவீனப்படுத்தும் முயற்சி. பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்த முயற்சி மிகுந்த வலிமையுடன் பணம், அதிகாரம், ஆதிக்க வெறி எல்லாவற்றையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு, நம்முடைய மனங்களில் சாதிக்காக வெட்கமும் வேதனையும் கொள்ளுகிற தாழ்வு மனப்பான்மையை வெகு ஆழமாகப் பதித்துவிட்டது. இதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
  சாதிகளின் கேடுகளை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதைச் சுட்டிக்காட்டி நம்மைத் தன்னம்பிக்கை அற்றவர்களாகச் செய்து, அரசியல் சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் சுய பச்சாதாபத்தில் குமைபவர்களாக, நம்முடைய அடையாளங்களையே அழித்துக்கொள்கிற அறிவீனத்தில் வெகுவேகமாக இறங்குகிற மனோரீதியான அடிமைத்தனத்தை நம்பால் திணித்துள்ளார்கள். “ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி” என்கிறார் பாரதியார். அதுவே நம் நிலைப்பாடாக இருக்கவேண்டும். ஹிந்து சமுதாயத்தில் சாதியமைப்பில் உள்ள கேடுகளை நீக்கி, நலனை உறுதிப்படுத்திக்கொள்கிற பொறுப்பும் பணியும் ஹிந்துக்களுக்கே உள்ளது.
  சாதியமைப்பு முற்றிலும் கேடு நிறைந்தது என்றால் அது மனித சமுதாயத்திலிருந்து என்றோ மறைந்து போயிருக்கும். அது மறையவில்லை என்பதே அதில் உள்ள நலன்களை மனிதன் நாடுகிறான் என்பதைக் காட்டுகிறது. நலத்தைப் பெருக்கிக் கேட்டைக் குறைக்க முயல்வதே அறிஞர் கடமை. இது விஷயத்தில் ஹிந்து சமுதாயமும் பலவித பரிசோதனைகளை இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு டாக்டர் தன் மகனை மருத்துவத் தொழிலிலேயே ஈடுபடுத்த விரும்புகிறார் – அது அவர் துவக்குகிற முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உதவுவதால். ஆசிரியர் ஒருவர் தன் மகனை ஆசிரியராக்க முயல்கிறார். குலத் தொழில் முறை மறைந்துவிடவில்லை. எங்கெல்லாம் குலத் தொழில் வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கிறதோ அங்கு அது தொடர்கிறது. அதற்கிடையே யாரும் எந்த வேலையும் செய்ய முயலும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
  சாதிக்கட்டுப்பாடுகள் ஹிந்து சமுதாயத்தைப் பண்பாட்டுச் சீரழிவிலிருந்தும் அன்னியத் தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்து வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் சகோதரி நிவேதிதை. ஹிந்து சமுதாயம் மதமாற்றத்தில் ஈடுபடுவதில்லை. அதற்கிடையே அது தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபடும் பிற மதங்களால் தாக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் ஹிந்து சமுதாயத்திற்குத் தேவையான தற்பாதுகாப்பை அளித்து வந்திருப்பது சாதியமைப்பே. இந்த உண்மையைச் சுட்டிக்காட்டி, சாதியமைப்பின் இந்தச் சிறப்பை self-defence without aggression என்று பாராட்டுகிறார் சகோதரி. ஆனால் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பாரதத்தின்மீது மேலைக் கலாச்சாரம் செலுத்திவந்துள்ள தாக்கத்தின் காரணமாகச் சாதியமைப்பின் பல நல்ல அம்சங்கள் நலிந்துபோய், இன்று ஹிந்து சமுதாயம் தற்பாதுகாப்பிற்கு உரிய வழியில்லாமல் பல சிக்கல்களில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.
  தனிமனிதர்களின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதில் சாதிக்குப் பங்கு இருந்திருப்பதையும் பாராட்டுகிறார் சகோதரி நிவேதிதை. அவர் கூறும் உதாரணம் – கிராமம் ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவன் பட்டணத்திற்குச் செல்லுகிறான். அங்கு அவன் தன் சாதிக்காரர்களுக்குரிய சத்திரத்தில் தங்குகிறான். அங்கிருக்கும்போது அவன் தவறு ஏதேனும் செய்தால் அது உடனே கிராமத்தில் இருக்கும் அவனது குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டுவிடும். எனவே அவன் கவனமாக இருந்துகொள்வான் என்கிறார் சகோதரி. இந்த உதாரணங்கள் எல்லாம் இன்றைக்குப் பொருந்தாதுதான். ஆனால் அப்படிப் பொருந்தாமல் போனதே சாதியமைப்பு இன்று தன் நல்ல அம்சங்களை இழந்து நிற்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.
  இன்று நாம் செய்யக்கிடப்பது, தேசத்தையும் சமயத்தையும் முன்னிறுத்தி, சாதி வேறுபாடுகளை மறந்து ஹிந்துக்கள் ஒன்றிணைந்து நிற்பதுதான். குல ஆச்சாரம், விவாகம், சமய அனுஷ்டானம் போன்ற சமூக, சமயக் கடமைகள் பொறுத்தவரையில் சாதி ஏற்பாடுகளைப் பின்பற்றிக்கொண்டு, பிற விஷயங்களில் நம்முடைய உணர்வை சாதியிலிருந்து எடுத்து தேசத்தை நோக்கியும் சமயத்தை நோக்கியும் விரித்துச் செல்லவேண்டும். அப்படிச் செய்தால்தான் ஹிந்து சமுதாயம் தன்னையும் காத்துக்கொண்டு, உலகுக்கும் நலன் செய்ய முடியும்.
  சாதியமைப்பினால் வரும் கேடுகளுக்கு மாற்று அரசியலிலோ பொருளாதாரத்திலோ இல்லை. ஆன்மீகத்திலேயே உள்ளது. நம் பாரத சமுதாயத்தில் காலம் காலமாக ஆன்மீக வலிமையால் அருளாளர்கள் அதைச் சாதித்து வந்திருக்கிறார்கள். ராமானுஜர், குருநானக், சைதன்யர், சமீப காலத்தில் கேரளத்தில் ஸ்ரீ நாராயண குரு என்று எல்லா மகான்களும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதற்கு வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு தலைமுறையும் அந்த முயற்சிகளைச் சலிப்பில்லாது திரும்பத் திரும்ப மேற்கொள்ள வேண்டியதும் அவசியம். எனவே நம் முன்னோர்கள் சாதித்ததைப் பெருமையுடன் நினைவு கூர்ந்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கிடையில் இன்றைய சூழலுக்கேற்ப மீண்டும் முயலவேண்டியது நம் கடமை.
  அந்த முயற்சியை எங்கிருந்து துவக்குவது? அறநெறியும் மனித நேயமும் ஆன்மீகமுமே கேடுகளை நீக்கும் சக்தியை நமக்குத் தரும். 1984ல் ஒருமுறை நான் சுவாமி சித்பவானந்தர் அவர்களிடம் கேள்வி ஒன்று கேட்டேன். கிட்டத்தட்ட திரு பி எஸ் வி அவர்கள் இப்போது வேதனைப்படுவதுபோல அப்போது என் மனதை வேதனைப்படுத்திய ஒரு கேள்வி. “நம் பாரத சமுதாயம் எத்தகைய உயர்ந்த பண்பாட்டு, ஆன்மீகப் பாரம்பரியம் உடையது. இத்தகைய பெருமை உடைய நாட்டில் இன்று அரசியல் நிலவரம் இவ்வளவு மோசமாக இருக்கிறதே?” என்று கேட்டேன். இதற்கு விடிவே கிடையாதா? என்ற தவிப்புடன். உடனே சுவாமிகள், “ஆன்மீகம் தலையெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்று சுருக்கமாக ஆனால் உறுதிபட உரைத்தார்.
  பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் அந்த ஆன்மீக சக்தி எது? ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகிறார் – “தாயே, தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்படும் இவர்களும் உன் பிள்ளைகளே. இவர்களை கௌரவிப்பது உன்னை வணங்குவது ஆகும்.” இவ்வாறு சொல்லி அவர் சேரிக்குச் சென்று தம் தலைமுடியால் அதைச் சுத்தப்படுத்தினார். பிற்காலத்தில் சீடர்கள் அவரை வந்தடைந்தபோது, “சிவ பாவேன ஜீவ சேவா – ஜீவனில் உறையும் சிவனைக் கண்டு, அந்த உயிருக்குச் சேவை செய்க” என்ற தாரக மந்திரத்தை உபதேசித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு துறவின் செயல்முறை வெளிப்பாடாகச் சேவையை வைத்தார் சுவாமி விவேகானந்தர். இதில் மிக முக்கியமான பகுதி என்ன சேவை செய்யப்படுகிறது என்பது அல்ல. என்ன மனப்பான்மையில் அது ஆற்றப்படுகிறது என்பதுதான். எல்லா உயிர்களுக்குள்ளும் இறைவன் உறைகின்றார் என்ற ஆன்மீக உண்மையே நம்மைக் கேடுகளிலிருந்து விடுவிக்கும் சக்தி படைத்த பேருண்மை. சுவாமி சித்பவானந்தர் போன்ற மகான்களுக்கு இது நிதரிசனமான உண்மை. நம் போன்றோர் அம் மகான்களின் வாக்கில் நம்பிக்கை வைத்து நம் மனப்பான்மையை இவ்வுண்மைக்கு ஒத்ததாக மாற்றியமைத்தால் நிச்சயமாகக் கேடுகளை நம்மளவிலாவது வெல்லலாம்.
  “If caste would persist, I would rather have a caste of culture than a caste of dollars” என்கிறார் சுவாமி விவேகானந்தர். சாதியமைப்பு வேண்டாம். ஆனால் அது இருந்துதான் தீரும் என்றால் பண்பாட்டின் அடிப்படையில் அது இருந்துவிட்டுப்போகட்டும் என்கிறார். இங்கு அவர் caste of dollars என்று குறிப்பிடுவது மேலைச் சமுதாயத்தில் நிலவி வரும் சாதியமைப்பை. செல்வத்தின் அடிப்பைடையில் பணக்காரர்களை உயர்ந்த சாதி என்றும் ஏழைகளைத் தாழ்ந்த சாதி என்றும் ஒதுக்குவது அவர்கள் போக்கு. (மேலைச் சமுதாயத்தில் சாதிக்கொடுமை இல்லை என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். ஆனால் வேறு வடிவில் அங்கு அது ஆட்டம் போடுகிறது.) caste of culture என்பது நம் சாதியமைப்பு. இங்கு உயர்ந்த சாதி என்பது பண்பாட்டில் உயர்ந்தவர்களைத்தான். அந்தப் பண்பாட்டு உயர்வு இப்போது பிறப்பால் உயர்ந்தவர்களில் பலரிடம் இல்லை என்பது ஒரு வேதனை தரும் விஷயம். அதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆயினும் இன்றும்கூட குலத்திற்கேற்ற ஒழுக்க சீலம் உள்ளவர்கள், சிரமங்கள் பலவற்றிற்கிடையே, சமுதாயத்தின் மதிப்பைப் பெறுபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
  அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
  செந்தண்மை பூண்டொழுகலான் என்பார் வள்ளுவர்.
  இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தார் என்பது ஔவைப் பிராட்டியின் வாக்கு.
  பிறப்பினும் உயர்ந்தது பண்பு. இறுதியில், பண்பே ஒருவனின் உண்மை மேன்மையினைத் தீர்மானிக்கிறது. அருள் அன்னை சாரதா தேவியாரின் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. அன்னையாரைப் பார்ப்பதற்கு ஒரு பக்தை வந்தாள். அவளது சிரமங்களுக்குச் செவிகொடுத்துக் கேட்டு அன்பையும் ஆறுதலையும் வேண்டிய வழிகாட்டுதலையும் அளித்தார் அன்னை. அன்றிலிருந்து அந்தப் பெண் தவறாமல் அன்னையைச் சந்திக்க வரலானாள். இப்போது அன்னையாரோடு உடன் வசித்து வந்த மற்ற பெண்களுக்கு ஒரு குறுகுறுப்பு. இந்தப் பெண் என்ன சாதி? அன்னையார் பிறப்பால் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். அவருடன் இருந்தவர்களுக்கு அது ஒரு பெரிய விஷயம். ஆனால் அன்னையின் கண்களில் மதிப்புப் பெற்றது அதுவல்ல. உடனிருந்தவர்கள் அன்னையிடமே வந்து தங்கள் சந்தேகத்தைத் தெளிவித்துக்கொள்ள முயன்றார்கள். அந்தப் புதிதாக வந்த பெண் பிராமணப் பெண் இல்லை என்று அவர்கள் ஊகித்துவிட்டார்கள். அன்னையிடம் உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தார்கள். அன்னையார் சொன்னார் – “இதோ பார், உலகத்தில் இரண்டே சாதி. பக்தர்களெல்லர்ம் ஒரு சாதி. பக்தர் அல்லாதவர்கள் ஒரு சாதி. நாம் பக்தர்கள் சாதி. அந்தப் பெண்ணும் பக்தை. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.” இதன்பிறகு யாரும் எதுவும் சொல்லவில்லை. அந்த பக்தை தொடர்ந்து அன்னையை தரிசித்து வந்தாள். உரிய வழிகாட்டுதல் பெற்று மன அமைதி பெற்றாள்.
  மேற்சொன்ன இந்தக் கருத்துக்களில் சாதிப் பிரச்சினையைப் பெருமளவுக்கு எளிமைப்படுத்தி அடிப்படையான சில கருத்துக்களையே கூறியிருக்கிறேன். திரு பி எஸ் வி, திரு அன்புராஜ், திரு நஞ்சப்பா, திரு சக்திவேல் என்று அன்பர்கள் பலர் பிரச்சினைகளின் சிக்கலான பல பரிமாணங்களை அழகாக எடுத்துரைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கும்போது சாதியமைப்பு என்பது தூக்கி எறியப்படவேண்டிய குப்பை அல்ல, சீர்திருத்திப் பயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டிய நல்ல ஏற்பாடு என்பதே தெளிவாகிறது. அந்த அகச் சீர்திருத்தத்தைச் செய்து சாதிப்பதற்கான உள்வலிவு ஹிந்து சமுதாயத்திற்கு உண்டு என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
  ஆனால் இந்த இடத்தில் சுவாமி விவேகானந்தரின் எச்சரிக்கை ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவர் கூறுகிறார் – “இந்தியாவில் அரசியல், சமுதாய, பொருளாதாரச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பும்முன் ஆன்மீக உண்மைகளை வெள்ளமெனப் பாயச் செய்யுங்கள்.” உண்மையான ஆன்மீகத்தில்தான் சமத்துவமும் மனித நேயமும் பொலியும். தெய்வீகமே மனிதனின் – உயிர்கள் அனைத்தின் – உண்மை இயல்பு. இதுவே உண்மை ஆன்மீகம். அடிப்படை ஆன்மீகம். சாதி முதலான சமுதாய ஏற்பாடுகள் இந்த உண்மையை அனைவருக்கும் எப்போதும் நினைவு படுத்துவதாக இருக்கவேண்டும்.
  சரி. சாதியைப்பற்றிய இந்தச் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டபிறகு எனக்கு இன்னொரு கேள்வி. திரு பி எஸ் வி அவர்களுக்கு அந்தக் கேள்வி. ஐயா, சாதி குறிப்பிடப்பட்டதனாலேயே சங்கடப்பட்டுப்போனீர்களே, இத்தனை விவாதங்களுக்கும் காரணமான உங்கள் முதல் கருத்தில் மாற்றம் வந்ததோ இல்லையோ, புத்தகத்தை வாங்கியிருப்பீர்கள், படிக்கத் துவங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதுவரை வாங்கவில்லை என்றால் இனியாவது வாங்கிப் படிப்பீர்கள் அல்லவா? படித்தீர்கள் என்றால், பல நடைமுறைச் சிக்கல்களுக்கு இடையில் ஹிந்து சமுதாயம் இன்றும் ஆன்றோர்களைத் தோற்றுவிக்கும் அருட்சக்தி பெற்றதாகவே இருக்கிறது, அத்தகைய ஆன்றோர் ஒருவரே ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் என்ற மகான், அவர் வாழ்ந்து காட்டிய வழியில் செல்ல முயல்வது ஹிந்து சமுதாயத்திற்கு நலன் செய்யும் என்பது நம்பிக்கையாக மட்டுமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாக உங்களுக்கு நிச்சயம் விளங்கும். நன்றி.

 31. விளக்கம் நன்று. எனினும் என்னை ஒரு கேள்வி உறுத்துகிறது.

  ஏன் முற்றும் துறந்த முனிவர்களை, தங்களை மக்களின் ஆன்மிக வாழ்வுக்காக அர்ப்பணித்தோரை, வீரத்துறவி என்கிறோம்? அவர்கள் யாரிடம் வாளெடுத்து, அல்லது துப்பாக்கியால் சுட்டு, சண்டையிடுவார்கள்? வீரம் என்றால் உடல் சார்ந்தது. அப்படியே மனம் சார்ந்தது என்றால் வேறுபெயரால் சுட்டலாமே?

 32. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா says:

  திரு பி எஸ் வி அவர்களுக்கு.
  அன்புடையீர், ஒரு நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.
  வீரம் என்ற சொல்லால் இங்கு குறிப்பிடப்படுவது உடல், மனம் இரண்டையும் தாண்டி ஆன்ம பலத்திலிருந்து வெளிப்படும் அஞ்சாமையே. இதற்குச் சரியான சம்ஸ்கிருத பதமாக வீர்யம் என்ற சொல்லைச் சுட்டலாம். “வீர்யமஸி, வீர்யம் மயி தேஹி” என்பது ஒரு வேதப் பிரார்த்தனை. சுவாமிகளின் வீர்யம், வழுவாத பிரம்மச்சரியத்திலிருந்தும் பேர், புகழ் உட்பட உலகிலிருந்து எதையும் வேண்டாத வைராக்கியத்தின் வலிமையிலிருந்தும் தோன்றிய ஆன்ம சக்தி. “நான் இந்த உடல்ல, மனமல்ல, என்றும் தூயதான, அறிவே வடிவான, ஆசைகளற்ற, தேவைகள் அற்ற, நிறைவான, சுதந்திரமான ஆன்மா” என்ற மெய்ஞ்ஞானத்தின் வெளிப்பாடு அது. உலகினருக்குப் பெரிதாகப் படும் பணம், அதிகாரம், கல்வி போன்ற எந்த உலகப் பேறுகளைக் கண்டும் ஆசையோ அச்சமோ கொள்ளாத மனத் தெளிவு.

  “அஞ்சாமையும் கெஞ்சாமையுமே துறவின் இலக்கணம்” என்பார் சுவாமிகள். சுவாமி விவேகானந்தர் பற்றிய ஒரு நிகழ்ச்சியை சுவாமிகள் சத்சங்கத்தில் குறிப்பிடுவார். விவேகானந்தர் மேல்நாட்டில் வேதாந்தப் பிரச்சாரம் செய்துவந்தபோது, ஒரு முறை பல்லாயிரம் பேர் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று பாரதத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை ஹிந்து சமுதாயத்தின்மீது அள்ளி வீசுகிறார். அவற்றையெல்லாம் கேட்ட சுவாமிஜி, அவையினரைப் பார்த்து, “உங்களில் யாராவது உலக சமய சாஸ்திரங்களில் மிகப் பழமையானதாகிய ஹிந்துக்களின் வேதத்தை அறிவீர்களா?” என்று கேட்டார். யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. “பகவத் கீதையைப் படித்திருக்கிறீர்களா?” அதற்கும் உடன்பாட்டில் பதில் இல்லை. இப்படி ஒவ்வொரு சாஸ்திரமாகக் குறிப்பிட்டுவிட்டு, பதில் ஏதும் வராமல் போகவே, நெஞ்சை நிமிர்த்திக் கைகளைக் கட்டிக்கொண்டு, அவையோரை உற்றுப் பார்த்து, “இது எதுவுமே தெரியாமல் இருந்துகொண்டு எங்களை விமர்சிக்க வந்துவிட்டீர்களா? என்ன துணிச்சல் உங்களுக்கு?” என்றார். சத்தியத்தைத் தவிரத் தனக்குப் பாதுகாப்பு வேறு எதுவும் இல்லை என்ற நிலையில், அன்னியர்களான அத்தனை பேர் மத்தியில் உண்மையைத் துணிந்து எடுத்துரைத்தார் சுவாமி விவேகானந்தர்.

  “இது வீர்யத்தின் உச்சம்” என்பார் சுவாமி சித்பவானந்தர் அவர்கள். இத்தகைய வீர்யம் சுவாமி சித்பவானந்தர் அவர்களின் வாழ்விலும் பலமுறை வெளிப்பட்டிருப்பது நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. இரு உதாரணங்கள் ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்த சுவாமிகளின்மீது கோபம் கொண்ட உயர் சாதியினர் அடியாட்களை அனுப்பி சுவாமிகளைத் தாக்க முயன்றபோது சுவாமிகள் காட்டிய ருத்ராவேசம் (பாகம் 2 அத்.23 பக்.120-23 ), அரசாங்கம் உட்பட யாருக்கும்அஞ்சாமல் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு சுவாமிகள் அளித்த வெளிப்படையான ஆதரவு (பாகம் 3 அத். 49 பக். 349 ).

  அத்தகைய அஞ்சுதல் அறியா நெஞ்ச நற்றுறவியை “வீரத் துறவி” என்று அழைப்பதில் தவறில்லை. “வேதாந்தம் தந்த வீர்யத் துறவி” என்று சொல்லியிருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு அப்படியொரு தலைப்பு உள்ளத்தைத் தொட்டிருக்குமா? மாறாக, வீரத் துறவி என்றால் முதலில் எதிரிக்கு அஞ்சாத அச்சமின்மை என்பதில் தொடங்கி படிப்படியாகப் பல நிலைகளில் அந்தச் சொல்லை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். அத்தகையதொரு புரிதலுக்கு நூல் உதவி செய்வதாகவே அமைந்துள்ளது.

 33. //ஒருமுறை மாணவி ஒருத்தியின் தந்தை வந்திருந்தார். பணத்தைப் பெற்றுக்கொண்டபோது, “இந்த அநியாயத்தை எங்கு சொல்வது?” என்றார். “எந்த அநியாயத்தைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவருக்கு உரிய தொகையை ஒரு பைசா குறையாமல் சரியாகவே கொடுத்திருந்தோம். “உங்களைச் சொல்லவில்லையம்மா. எங்கள் சமுதாயத்தில் இருப்பதைச் சொல்கிறேன். அரசாங்கம் என்ன சலுகைகள் கொடுத்தாலும் இந்த பள்ளப் பசங்களே அள்ளிக்கொள்கிறார்கள்” என்று புலம்பிக்கொண்டே பணத்தைப் பெற்றுச் சென்றார்.//

  அவருக்கு சரியான பதில்: ”அரசு கொடுக்கும் சலுகைகள் அவை. எனவே பெறுகிறார்கள். உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமானால், அரசிடம் கோரிக்கை வையுங்கள். எங்கள் கடமை அரசின் கல்விக்கொள்கைகளை செயல்படுத்துவது மட்டும்தான்” என்னிடம் மேற்சாதியினர் இட ஒதுக்கீடு பற்றி புலம்பும்போது, நான் சொல்வது நீங்கள் அரசிடம் போராடுங்கள் என்பதுதான். எய்தவன் இருக்க அம்பையா நோவார்கள்?

  இது போக, ”எல்லாவற்றையும் பள்ளப்பயலுக அள்ளிக்கொள்கிறார்களம்மா!” என்பது முழுமூடத்தனமான பேச்சு. அரசு எவரெல்லாம் அட்டவணை சாதியோ (தற்போது ஓபிசிக்களுக்கும் உண்டு) அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை அளிக்கிறது. பள்ளி, கல்லூரிகள் பெற்றுத்தரவேண்டுமெனபது கட்டளை. இப்படியிருக்க எப்படி ஓர் அட்டவணை சாதியினர் மட்டுமே அள்ள முடியும்? பணம் என்ன ஓரிடத்தில் கொட்டியா போட்டிருந்தார்கள்? ஓர் குறிப்பிட்ட கூட்டம் ஓடி வந்து அள்ளிப்போக? மற்றவர்கள் பங்கைப் பிடிங்கிக்கொள்ள? அவர்களுக்குக் கொடுத்ததனால் இவள் மகளுக்கு இல்லையென்றாகிவிட்டதா? பேசினவனுக்கு மூளையே இல்லை.

 34. தவத்திரு.யதீஸ்வரி கிருஷணபரியா அம்மா அவர்களுக்கு வணக்கம். தங்களை பலமுறை 1.சேரன்மகாதேவி ஆஸ்ரம ஸ்தாபகா் நினைவு தினத்தில் 2.ஸ்ரீசாரதா கல்லூரிக்கு பல மாணவியரைச் சோ்க்க வந்தபோதெல்லாம் – தங்களைச் சந்திக்கும் நறபேறு எனக்கு கிட்டியுள்ளது. தங்களது கடிதம் என்னை நன்கு சிந்திக்க வைத்துள்ளது. பிறசமயத்தவரின் நெருக்கடிகாரணமாகவே நான் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளேன்.
  மனிதன் பல ஆளுமைப் பண்புகளைப் பெற்றே பிறக்கின்றான்.எல்லாகுழந்தைகளின் மனதிலும் ஏதோ எழுதப்பட்டுதான் பிறக்கின்றது. எனவே மனிதர்களை ஒரு கட்டில் -ஒரு சமுதாய அமைப்பில் – கட்டிப்போட முடியாது என்பது உண்மை.தங்களது கடிதம் படித்து தெளிவு பெற்றேன். எனது பதிவுகளை தாங்கள் முழுவதும் படித்திருக்கின்றீா்கள். நன்றி. தங்களின் நல்லாசியை வேண்டும்.

 35. இதையும் மீறிய செயலும் 70 களில் நடந்தது. “சிறுபான்மையினர்” என்ற முத்திரை பெறுவதற்காக, ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஹிந்துவே அல்ல, தாங்கள் பின்பற்றுவது ஹிந்துமதமல்ல; அது “ஸ்ரீ ராமகிருஷ்ணாயிஸம்” ; இதை சுமார் 1500 துறவிகளும், 10000 குடும்பங்களும் பின்பற்றுகின்றன, எனவே தாங்கள் சிறுபான்மையினர் என்று உச்ச நீதி மன்றத்தில் ராமகிருஷ்ணமடத்தினர் affidavit தாக்கல் செய்தனர்! நதி மூலம் ரிஷி மூலம் போன்று மடம் மூலமும் பார்க்கக்கூடாது போலும்!
  ————————-
  ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைமைச் செயலகம் மேற்கு வங்காளம் பேலூரில் உள்ளது.மேற்படி பிரச்சனை தலையெடுத்தபோது மேற்கு வங்க மாநிலத்தில் கம்யுனிஸ்டகளின் ஆட்சி நடைபெற்றது. தனியாா் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசு உடைமை ஆக்க அரசு சட்டம் கொண்டு வந்தது.ஆனால் கிறிஸ்தவ முஸ்லீம் சிறுபான்மையினர்நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி மடம் நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் இழக்க வேண்டிய நிலை எற்பட்டது. அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் பிற சுவாமிகளின் கடும் கண்டனத்தை பொருட்படுத்தாமல்ஸ் ரீராமகிருஷ்ணா மடம் இந்து அல்லாத சிறுபான்மை மதம் என்று மேற்கு வங்க கம்யுனிஸட் அரசின் அரசுடைமை நடவடிக்கையில் இருந்து கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற உயா்நீதி மன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள். பின்னா் அரசு இந்த நடவடிக்கையை விலக்கிக் கொண்டது என்று நினைக்கின்றேன்.உச்ச நீதி மன்றம் மடத்தின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. பிரச்சனை அதோடு முடிந்து விட்டது.ஸ்ரீராமகிருஷ்ண இயக்கத்திற்கு இது ஒரு கரும் புள்ளிதான். ஆனால் பேராசையினால் இதைச் செய்யவில்லை.ஒரு தந்திரமாகவே செய்தார்கள்.பழைய குப்பையை கிண்டுவதில் நன்மையென்ன ?
  பிறநாடுகளில் இந்துமதம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.ஆனால் அதன் நோக்கம் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அல்ல. மக்களின் வாழ்க்கை மேன்மைஅடையும் என்பதுதான். இந்து கிறிஸ்தமவனாக வேண்டும்.அல்லது கிறிஸ்தவன் இந்துவாக மாற வேண்டுமா ? மனிதநேயம் பண்பாடு தரம் உயர வேண்டும்.வாழ்வாங்கு வாழ கீதையோ ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகளோ அன்னையாரின் வாழ்க்கை வரலாறோ யோகாவோ திருவாசகமோ இத்தனையையும் படித்து அனுஷ்டித்து ஒருவன் கிறிஸ்தவனாக வாழ்ந்தால் ஆன்மீகத்திற்கு வெற்றிதான். இப்படி இந்து இயக்கங்கள் செயல்படுவதால்தான் வெளிநாடுகளில் எதிர்ப்பு இன்றி எதிர்ப்பின்றி செயல்பட முடிகின்றது. நாம் அங்கேயும் போய் இந்து என்று மதம் மாற்றி மற்றவா்களுக்கு எதிராக அரசியல் பண்ணினால் நாம் கடுமையான எதிா்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும். இன்று பகவத்கீதை யோகக் கலைகள் அப்படியே அந்த நாடுகளின் கலாச்சார நரம்புகளை வலுவேற்றிக்கொண்டிருக்கின்றது.ஆகவே ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சில செயல்பாடுகளை குறைகாண வேண்டியதில்லை.

 36. கயாத்திரி மந்திரம் புணுால் போட்டவா்கள்தான் ஜெபிக்க வேண்டும் .மற்றவா்கள் தகுதி படைத்தவா்கள் அல்ல என்று காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீஜெயேந்திரா் ஞான புமி என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தாா்.அதற்கு ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்து பத்திரிகையான தர்மசக்கரத்தில்
  ”இளைய சங்கராச்சாரியாா் பழைய காலத்திற்கு தேசத்தை கொண்டு செல்ல முயல்கிறாா்” என்று கண்டித்து எழுதினார்கள்.
  அதுபோல் சுவாமி சித்பவானந்தா் அவர்கள் ” பகவத்கீதை” உரை எழுதி வெளியிட்டபோதும் அவருக்கு கீதைக்கு உரை எழுதும் தகுதியில்லை என சில சங்கரமட மேதாவிகள் அறிவிப்பு கொடுத்தார்கள்.உடனே ஆா்எஸ்எஸ் அமைப்பு பகவத்கீதைக்கு உரை எழுத தகுதியானவா் சுவாமி சித்பவானந்தா் அவர்கள் என்று அறிக்கை வெளியிட்டது.அதற்கு மேல் சம்பந்தபட்டவா்களுக்கு அறிவு பிறந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
  புதுக்கோட்டையில் ஆதிதிராவிட சாதி பெண் ஒருவா் ஒரு கோவிலுக்குச் சென்றபோது வெளியேற்றப்பட்டாா்.செய்தி சில தொலைக்காட்சிகளில் வெளியானது.எவ்வளவு பிற்போக்குத்தனம்.அறியாமை.
  ஆனால் இன்றும் பிறப்பின் அடிப்படையில் இழிவு படுத்தும் போக்கு பல இடங்களில் இருக்கின்றது.அதற்கு எந்த மடமும் தீா்வுகாண முயலவேயில்லை.இந்நேரம்கூறி அந்த பெண்ணோடு அந்த கோவிலுக்கோ வேறு கோவிலுக்கோ சென்று வந்திருந்தால் மக்களுக்க மடாதிபதிகள் மேல் நம்பிக்கை பெருகும்.

 37. சுவாமிஜி சித்பவாநந்தர் அவர்கள் முன்னால் ஆளுநர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களின் சிறிய தந்தை கொங்கு மண்டலம் பூர்வமான பூமி,திருப்பராய்த்துறைக்கு1940 ம் ஆண்டு புரட்டாசிமாதம் வந்து அருணாசலம் செட்டியார் உதவியதால் அங்கு தங்கி கல்விச்சேவை செய்து தான் செட்டியார் உதவியால் ராமகிருஷ்ண தபோவணம் துவங்கிய துறவி ஆகும் இதை பலர் தற்போது மறந்து விட்டு புதிய வரலாறு எழுதும் நிலை உண்மைக்கு பல ஆதாரங்கள் உண்டு நன்றி கவிஞர் சீ.க.புலித்தேவன் பாண்டியன்

 38. கவிஞர் புலித்தேவன் பாண்டியன் அவர்களுக்கு,
  ஐயா,
  உங்கள் நவம்பர் 1 தேதியிட்ட பதிவினை இப்போதுதான் படித்தேன்.

  நீங்கள் ‘வேதாந்தம் தந்த வீரத் துறவி – சுவாமி சித்பவானந்தர்’ என்ற விரிவான வாழ்க்கை வரலாற்று நூலை வாசித்தீர்களா என்று தெரியவில்லை.
  சுவாமிகள் 1940ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி (நீங்கள் குறிப்பிடுவதுபோல் புரட்டாசி மாதத்தில் அல்ல, வைகாசி மாதத்தின் இறுதிப் பகுதியில்) திருப்பராய்த்துறை வந்தார். அவருடைய அருட் சிறப்பை ஏற்கனவே உணர்ந்து, அவரைத் திருப்பராய்த்துறைக்கு அழைத்த ராமனாதன் செட்டியார், ராமனாதன் செட்டியார் மூலம் சுவாமிகளை அறியவந்த அருணாச்சலம் செட்டியார் முதலிய நகரத்தார் பெருமக்கள் ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவுவதில் சுவாமிகளுக்குப் பேருதவி புரிகிறார்கள் என்பதுபோன்ற வரலாற்று உண்மைகள் முறையாக, முழுமையாகத் தொகுக்கப்பட்டு மேற்படி புத்தகத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். (பாகம் 1 – அத்தியாயம் 14, பக்கம் 352-353, 359; அத்தியாயம் 15 – பக்கம் 372-73, 386, 389-90, 393; அத்தியாயம் 17 – பக்கம் 346; பாகம் 2 – அத்தியாயம் 30 – பக்கம் 343-346; பாகம் 3 அத்தியாயம் 47 – பக்கம் 301-302 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *