மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.
“காலை வணக்கம் கௌசிக். நீ அதற்குள் எழுந்துவிட்டாயே!” என்று கேட்டபடியே வந்தார் சங்கர்.
“ஆமாம் அப்பா. நான் இவ்வளவு சீக்கிரமாக எழுந்திருப்பது வழக்கமல்ல. ஆனால் நான் உண்மையாகவே நன்றாகத் தூங்கினேன்”.
“நானும் தான். வா, காப்பி குடிப்போம். மற்றவர்களையும் விசாரிப்போம்”.
“காலை வணக்கம் சங்கர்!” என்று கூறியபடியே வந்தார் மகாதேவன்.
சங்கர் பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதே, “அண்ணா! உங்கள் காப்பி தயார்” என்று சொலியபடியே கோப்பையுடன் வந்தார் சௌம்யா. நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்டார் மகாதேவன்.
“அண்ணா! நேற்றைய என் உறக்கத்தைப் பற்றி நான் உங்களிடம் சொல்ல வேண்டும்” என்றார் சௌம்யா.
“தாராளமாகச் சொல்லலாமே! நன்றாகத் தூங்கினாயா?”
“தூங்கினேனாவா!!! நிஜமாகவே நீங்கள் சொல்லியது போல ஒரு கட்டையைப் போலத் தூங்கினேன்”.
“அவ்வாறு தூங்க முடியும். நீங்கள் எல்லாருமே அப்படித்தான் உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். அதற்குக் காரணம் நீங்கள் மிகவும் குறைந்த அடித்தளத்திலிருந்து (Low Base) ஆரம்பிப்பது தான்”.
“காலை வணக்கம் மாமா. ஏன் அவ்வறு சொல்கிறீர்கள்?” என்று கேட்டபடியே வந்தாள் ஸ்நேஹா.
“பார் ஸ்நேஹா! உன்னுடைய அடித்தளம் (Base) 5 என்று வைத்துக்கொண்டால், அதை 10-ஆக நீ உயர்த்தும்போது, 100% அதிகரித்தது போலத் தோன்றும். ஆனால், உன் அடித்தளம் 90-ஆக இருந்து அதை நீ 95-ஆக உயர்த்தும்போது, வெறும் 5.5% தான் அதிகரித்திருப்பாய்”.
“அதனால்?”
“ஆரம்பத்தில் ஒப்பீட்டளவில் வித்யாசம் மிகவும் அதிகமாக இருப்பதை நீ உணர்வாய். அந்த ஒப்பீட்டளவு வித்யாசம் மிகவும் குறைந்த அளவுக்கு வரும்போது நீ ஒரு உறுதியான நிலையை அடைவாய்”.
“அண்ணா! இது தியானத்திற்கு உதவுமா என்று கேட்டிருந்தேன்” என்றார் சௌம்யா.
“நாம் தியானத்திற்குள் நுழைவதற்கு முன்னால் மற்றதைக் கவனிப்போம். ஸ்நேஹா! நாம் சாதிக்கக்கூடிய நான்கு நிலைகளை நான் சொல்லியிருந்தது ஞாபகம் இருக்கிறதா?”
“நிம்மதி (Quiet), அமைதி (Calm), சாந்தி (Peace), மௌனம் (Silence) ஆகியவை தானே?”
“ஆம். ஆரம்பத்தில் அனைத்திடமும் அன்பு செலுத்துவதன் மூலம் நீ சாந்தமான நிலையை அடைவாய். அந்த சாந்தமான மனநிலை உனக்கு நிம்மதியைப் பெற்றுத்தர உதவுகிறது”.
“நான் அதைப் புரிந்துகொள்கிறேன்”.
“நீங்கள் நேற்று இரவு கற்றுக்கொண்ட பிராணாயாமம் உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. உங்கள் சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உங்கள் மனதைக் கொந்தளிக்கச் செய்யும் யோசனைகளை நீங்கள் அதற்கு அளிப்பதில்லை. இது நீங்கள் நிம்மதியாக இருந்து அமைதியைப் பெற உதவுகிறது”.
“ஓ! அப்படியென்றால் அடுத்ததாக நாம் சாந்தி நிலைக்குச் செல்கிறோமா?”
“ஆம். அதற்கு முன்னால் நான் ஒரு கதை சொல்லியாக வேண்டும். பரவாயில்லையா?”
“கதையா? நிச்சயமாக! நாங்கள் எல்லோரும் காதுகளைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறோம்”.
“இந்தக் கதையை என்னுடைய ஆன்மிகக் குரு எனக்குச் சொன்னார். எந்த அளவுக்கு சோம்பேறியாக இருக்க முடியுமோ அந்த அளவுக்குச் சோம்பேறியாக ஒருவன் இருந்தான். முழுச் சோம்பேறியாக இருந்ததால் அவனை ஒவ்வொருவரும் கடிந்துகொண்டனர். அதற்குத் தீர்வாக அவன் தவம் புரிய முடிவு செய்தான்”.
“தவமா, எதை அடைவதற்காக?”
“தான் முழு நேரமும் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுத்து அனுபவிப்பதற்காகவும், தன்னுடைய அனைத்து வேலைகளைச் செய்வதற்காகக் கடவுளிடம் ஒரு வேலையாள் வேண்டியும் தவம் புரிந்தான்”
“அப்புறம் என்னவாயிற்று?”
“அவனுடைய தவம் தீவிரமாக இருந்ததால், கடவுள் அதற்கு மதிப்பளித்து அவன் முன்னே தோன்றி, ‘மகனே! உன் தவத்தை மெச்சினேன்; உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார்”.
“ஆஹா! அவன் என்ன கேட்டான்?”
“அந்த மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் தன் அனைத்து
வேலைகளையும் விரைவாகச் செய்து முடிக்க ஒரு வேலையாளைக் கேட்டான்”.
“அது சரி! கடவுள் அவன் கேட்ட வரத்தை அளித்தாரா?” என்று கேட்டான் கௌசிக்.
“அளித்தார். ஆனால் ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, அந்த வேலையாளுக்கு எந்த விதமான வேலைகள் கொடுத்தாலும் செய்வான்; ஆனால் ஒரு கணம் வேலை இல்லாவிட்டாலும் இவனை உணவாக விழுங்கிவிடுவான், என்று சொன்னார்”.
“சரி”.
“கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்த மனிதன் தன் வீட்டிற்குச் சென்றான். அங்கே ஒரு சிறுவன் அவன் முன்னே வந்து நின்று, ‘எஜமான்! நான் தான் உங்கள் வேலையாள்; நான் இப்போது உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்”.
“அவ்வளவு சீக்கிரமாகவா?”
“ஆமாம். நீண்ட நாள் தவம் இருந்ததால், அந்த மனிதன் வேலையாளிடம், 7 அடுக்கு விருந்துணவைக் (7 Course Meals) கொண்டுவருமாறு பணித்தான். அவன் அவ்வளவு உணவையும் கொண்டுவரக் காலதாமதம் ஆகும் என்கிற எண்ணத்தில் ஒரு மரத்தின் கீழே ஓய்வெடுக்க முடிவு செய்தான்”.
“நிச்சயமாக அந்த வேலையாள் உடனடியாக உணவைக் கொண்டுவந்திருப்பான்”.
“ஆமாம். அவ்வுணவை அவன் முன்னே அழகாக வரிசை முறையில் பரப்பி வைத்தான். நமது ஆள் சாப்பிடத் தொடங்கியவுடன், ‘அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அந்த வேலையாள் கேட்டான்”.
“ஓ! அவனால் கண நேரம் கூட சும்மாயிருக்க முடியாது, இல்லையா?”
“ஆமாம். நமது ஆள் அவனிடம் ஒரு கூடை நிறையப் பல்வேறு விதமாகத் துண்டுகள் செய்யப்பட்டப் பழங்களைக் கொண்டு வருமாறு சொல்லிவிட்டுச் சாப்பிட ஆரம்பித்தான். அவன் மூன்றாவது வாய் சாப்பிடுவதற்குள், வேலையாள் கூடை நிறையத் துண்டாக்கப்பட்டப் பழங்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, ‘அடுத்து என்ன செய்ய வேண்டும்’? என்று கேட்டான்”.
“அது நம்ம ஆளுக்கு வெறுப்பைத் தந்திருக்கும். உணவைக்கூட
நிம்மதியாகச் சாப்பிட முடியாது”.
“மிகச்சரி! நமது ஆளுக்குக் கவலையாகிவிட்டது. அந்த வேலையாளிடம் இதைச் செய், அதைச் செய் என்று பல வேலைகள் கொடுத்தபோதும், அவன் மிகக் குறுகிய காலத்தில் அந்த வேலைகளை முடித்துவிட்டு, அடுத்த வேலை என்னவென்று கேட்டுக் கொண்டிருந்தான்”.
“அப்புறம் என்னவாயிற்று?”
“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”.
“ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா.
“இல்லை. குருநாதரிடம் நடந்தவற்றைச் சொல்லி அந்த நெருக்கடியான நிலையிலிருந்து தப்பிக்க வழி கேட்டான். தான் அமைதி இழந்து விட்டதாகவும், ஒரு சில நிமிடங்கள் அமைதியைப் பெறக்கூட தவிப்பதாகவும் அவரிடம் கூறினான்”.
“அவன் குருநாதர் என்ன சொன்னார்?“
“அவன் சொன்னதைக் கேட்டுப் பலமாகச் சிரித்த அவன் குருநாதர் அவனுக்கு ஆலோசனைகள் கூறினார். மகிழ்ச்சியுடன் அவர் சொன்ன ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட அவன், அவருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பித் தன் வீட்டுக்குச் சென்றான். அங்கே வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருந்த வேலையாள், ‘அடுத்து என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டான்”.
“எஜமான் என்ன வேலை சொன்னான்?”
“அவன் வேலையாளிடம், ஒரு மரத்தின் கிளைகளை வெட்டி அந்த மரத்தை ஒரு கம்பம் போலச் சீராக்கி அதை வீட்டு வாசலில் பள்ளம் தோண்டி அதில் நட்டு வைக்கச் சொன்னான். பிறகு அந்தக் கம்பத்தின் மேலே ஏறியும், ஏறிய பிறகு கீழே இறங்கியும். அவ்வாறாகத் தொடர்ந்து ஏறியும் இறங்கியும் செய்துகொண்டிருக்கச் சொன்னான். தான் அவ்வப்போது கொடுக்கும் வேலைகளைச் செய்துவிட்டு மீண்டும் கம்பத்தில் ஏறியும், இறங்கியும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கச் சொன்னான்”.
“மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அப்புறம் என்னவாயிற்று?”
“வேலையாள் மரத்தை வெட்டிக் கம்பம் செய்து வீட்டு வாசலில் நட்டுவைத்து, அதில் மேலே ஏறிக்கொண்டும் மேலேயிருந்து கீழே இறங்கிக்கொண்டும் இருந்தான். நமது ஆள் நிம்மதியாக ஓய்வெடுத்தான். தேவைப்படும்போது வேலையாளைக் கூப்பிட்டுத் தன் வேலைகளைச் செய்து முடித்துக்கொண்டான்”.
“இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?” என்று கேட்டான் கௌசிக்.
“நம் மனது ஒரு வேலையாள் போல. ஏதாவது ஒன்றை அது விரும்பிக்கொண்டே இருக்கிறது. இங்கும் அங்கும் அலைகிறது. ஸ்நேஹா! மகாபாரதத்தில் யுதிஷ்ட்ரனுக்கும் யக்ஷனுக்கும் இடையே நடந்த உரையாடலும், அதில் யக்ஷன் 32 கேள்விகளுள் ஒன்றாக ‘காற்றை விட வேகமானது எது?’ என்று கேட்டதும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?”
“ஆம். ‘நமது மனது’ என்று யுதிஷ்ட்ரன் பதில் சொன்னார்”.
“அருமை!. நமது மனது அதீத சுறுசுறுப்புடன் இயங்கி நம்மைச் சாகவும் அடித்துவிடும். அது அப்படித்தான். அதனுடைய இயற்கைக் குணம் அது”.
“அப்படியென்றால், அதற்கு என்னதான் தீர்வு?”
“வேலையாளைக் கம்பத்தின் மேலே ஏறியிறங்கச் சொன்னதைப்போல நமது மனத்திற்கும் அவ்வாறு பயிற்சி கொடுக்க வேண்டும்”.
“எப்படி?”
“அதற்குப் பெயர்தான் ஜபம்”.
“மந்திர உச்சாடனம் செய்வதன் நோக்கம் அதுதானா?”
“ஆமாம். மனதை ஒரு இயந்திரத்தனமான செயல்பாட்டில் கவனமாக இருக்கச் செய்வதே ஜபத்தின் நோக்கம். இது, ஒரு வேலையாள் போல, ஒரே நேரத்தில் ஒரே எண்ணத்தில் லயித்திருக்க மனதுக்குப் பயிற்சி தருகிறது”.
“நான் சந்தியாவந்தனம் செய்யும்போது காயத்ரி ஜபம் செய்கிறேன். அதுவும் இதைப் போலத்தானா?” என்று கேட்டார் சங்கர்.
“முற்றிலுமாக. நிம்மதிக்கான பரீட்சையில் அன்பு செலுத்துவதன் மூலம் வெற்றி பெற்று, பின்னர் பிராணாயாமம் மூலம் அமைதியைப் பெற்ற பிறகு, நீங்கள் ஜபத்தின் மூலம் சாந்தியைப் பெறவேண்டும்”.
“அதை சாதிக்க ஜபம் உதவுமா?”
“பகவத் கீதையின் 10-ஆவது அத்தியாயத்தில் 25-ஆவது ஸ்லோகத்தைப் படியுங்கள். அதில் பகவான் கிருஷ்ணர், ‘அனைத்து விதமான வேள்விகளிலும் நான் ஜப வேள்வியாக இருக்கிறேன்’ என்கிறார். அப்படி ஒரு சிறப்பான அந்தஸ்து ஜபத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது”.
“உண்மையாகவா?”
“ஆம். அமைதி நிலையிலிருந்து சாந்தி நிலைக்கு உயர ஜபம் மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது. இதைவிட வேறு எதுவும் அந்நிலைக்கு உங்களை இட்டுச் செல்லாது”.
“நான் வெறுமனே ஜபம் செய்தால் இதை சாதிக்க முடியுமா?”
“நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பரிசோதித்து உங்களுடைய உண்மையான வரிசை முறயைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தயவு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிம்மதியிலிருந்து அமைதிக்குச் செல்கிறீர்கள்; அமைதியிலிருந்து சாந்தி நிலைக்கு உயர்கிறீர்கள். நீங்கள் அமைதி நிலையை எட்டாதவரை உங்களால் ஜபம் செய்ய முடியாது; இந்தக் குறிப்பைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்”.
“நான் புரிந்துகொண்டேன். பிராணாயாமம் மனது அமைதியடைய உதவுகிறது. அந்நிலையிலிருந்து ஜபத்தின் மூலம் சாந்தியைப் பெறலாம்” என்றார் சௌம்யா.
“அற்புதம். உங்கள் மனது வேகமாகக் கொந்தளித்தாலோ, விரைவாகக் கிளர்ச்சியுற்றாலோ, உங்களால் ஜபம் செய்ய முடியாது. அது மிகவும் முக்கியம்”.
“அப்படியானால் தியானம் என்பது என்ன?”
“அதுவே அனைத்துப் பயிற்சிகளிலும் சிறந்தது”.
“ஜபத்திலிருந்து அது எவ்வாறு வேறுபட்டது?” என்று கேட்டாள் ஸ்நேஹா.
“ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன நேரம் இல்லதபோது 32 முறை மட்டுமே செவீர்கள்”.
“ஆமாம்” என்றார் சங்கர்.
“அங்கே முழு கவனமும் மந்திரத்தின் மீதும் எண்ணிக்கையின் மீதும் இருக்கும்”.
“ஆமாம்” என்றாள் சௌம்யா.
“அடுத்தடுத்து வரும் மந்திர உச்சாடனங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துவது தான் அடுத்த படி. மனதை அமைதிப்படுத்தி, சாந்தி நிலையை அடைந்த பிறகு, ஜபம் செய்யும்போது, மந்திரத்தின் மீதோ அல்லது எண்ணிக்கையின் மீதோ கவனம் செலுத்தாமல், இரண்டு மந்திரங்களுக்கும் இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்தை அதிகப்படுத்தி அங்கேயே நிலைத்திருங்கள்”.
“ஒருவர் எவ்வளவு நேரம் அதிகப்படுத்தலாம்?” என்று கேட்டாள் சௌம்யா.
“புதிய எண்ணம் தோன்றும் வரைக்கும். புதிய எண்ணம் தோன்றும்போது உடனடியாக நீங்கள் மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்துவிடுங்கள். எவ்வளவு மெதுவாக உச்சாடனம் செய்ய முடியுமோ, அவ்வளவு மெதுவாக உச்சாடனம் செய்யுங்கள்; இரண்டு மந்திரங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்திலேயே இருங்கள். நீங்கள் எவ்வளவு முறை ஜபிக்கிறீர்கள் என்பது ஒரு பெரிய விஷயமல்ல; நீங்கள் மௌனமாக இருக்கும் நிலையை எவ்வளவு தூரம் நீட்டுகிறீர்கள் என்பது தான் முக்கியம்”.
“இதில் எங்கள் நேரம் அதிகமாகச் செலவாகாதா?” என்று கேட்டான் கௌசிக்.
“இதில் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஆரம்பத்தில் அரை நொடி கூட உங்களால் மௌனத்தில் இருக்க முடியாது. மேலும், உண்மையில் அது ஒரு முடிவற்ற காலம் போல உங்களுக்குத் தோன்றும். உண்மையிலேயே ஒரு சில நொடிகள் தான் செலவு செய்திருப்பீர்கள். ஆனால் ஒரு மணிநேரம் செலவிட்டதுபோலத் தோன்றும்”.
“உண்மையாகவா?”
“ஆமாம். மௌனத்தில் இருப்பது என்பது விளையாட்டு கிடையாது. முயற்சி செய்யுங்கள்; புரிந்துகொள்வீர்கள்”.
“அவ்வளவு கடினமானது என்றால் அதை ஏன் முயற்சிக்க வேண்டும்?”
“நீங்கள் பிறந்த தினத்திலிருந்து அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்”.
“என்னது? எப்படி, எப்போது?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஸ்நேஹா.
“நீங்கள் ஆழ்ந்து உறங்கும்போது மௌனத்தில்தான் இருகிறீர்கள். அது உங்களுக்குத் தெரிவதில்லை; அவ்வளவுதான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்த பிறகு, புத்துணர்ச்சியுடன் முழுமையான உத்வேகத்துடன் இருக்கிறிர்களா இலையா?”
“ஆமாம்”.
“ஆழ்ந்து உறங்கும்போது உங்களையே அறியாமல் மௌனத்தில் இருப்பதால், முழுமையான புத்துணர்ச்சியும் உத்வேகமும் பெறுகிறீர்கள் என்றால், மனமறிந்து மௌனத்தில் இருந்தால், எவ்வளவு புத்துணர்ச்சியும் உத்வேகமும் ஏற்படும் என்று கற்பனை செய்து பாருங்கள்”.
“அற்புதம் மாமா. நான் புரிந்துகொண்டேன்” என்றாள் ஸ்நேஹா.
“அருமை! விழிப்புணர்வுடன் மௌனமாக இருக்கும் திறனை சாதிப்பதும், அந்த மௌனத்தில் நிலைத்திருப்பதும், எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உங்கள் மூல ஆதாரத்துடன் இருப்பதும் தான் தியானத்தின் முழுமையான நோக்கம்”.
“அடக் கடவுளே! மந்திர உச்சாடனம் தான் தியானம்” என்று நினைத்தேன்” என்றார் சௌம்யா.
“உச்சாடனம் ஒரு வழிவகை தானே ஒழிய இறுதி கிடையாது. தியானம் ஒரு செயலோ, நடவடிக்கையோ கிடையாது; அது வினைச்சொல் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு நிலை. நீங்கள் மௌனத்தில் இருக்கும் நிலையே தியானம்”.
“எனக்கு இது ஒரு தெய்வீக வெளிப்பாடு. இதை இப்போதே நான் பயிற்சி செய்யலாமா? அதற்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டுமா?” என்று கேட்டார் சங்கர்.
“முதலில் உன் மனதைப் பரிசோதித்துக்கொள். வேகமாக உணர்ச்சிவசப்படுகிறதா? அப்படியென்றால் நிம்மதியைப்பெற அன்பு செலுத்தப்பழகு. உணர்ச்சி உன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால், பிராணயாமம் செய்து அமைதியைப் பெறு”.
“அடுத்தது என்னவென்று எனக்குத் தெரியும். ஜபம் செய்து சாந்தியைப் பெறவேண்டும்” என்றான் கௌசிக்.
“ஜபம் செய்யும்போது இரண்டு மந்திரங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தில் கவனத்தைச் செலுத்தி அங்கேயே நிலைகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது அடுத்தது” என்றள் ஸ்நேஹா.
“அருமை ஸ்நேஹா! அற்புதம் கௌசிக்! நீங்கள் இருவரும் மிகவும் வேகமாகப் புரிந்துகொண்டீர்கள்”.
“இதற்காக நான் எதுவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டுமா?” என்று மீண்டும் கேட்டார் சங்கர்.
“விடியற்காலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இருக்கும் பிரம்ம முகூர்த்தமே மௌன நிலையில் இருக்கச் சிறந்த நேரம் என்று நமது சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. எனக்குத் தனிப்பட்ட முறையில் எப்போதெல்லாம் ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பயிற்சி செய்கிறேன். விசையூக்கி (Key) என்னவென்றால், மனதைச் சாந்தப்படுத்தி, இயந்திரத்தனமான நடைமுறைக்குள் நுழைந்து, பின்னர் மௌனத்தில் ஆழ வேண்டும். (பிராணாயாமம் – ஜபம் – தியானம்)”.
“தியானத்தில் பல்வேறு வகைகள் உள்ளனவா?” என்று கேட்டார் சௌம்யா.
“அது ஒரு விஷயமல்ல. மௌனத்தில் இருப்பதுதான் முக்கியம். மௌனத்தில் இருப்பதற்கான ஒரே வழி மௌனத்தில் இருப்பதுதான். மௌனத்தில் ஒரே ஒருவகைதான் உள்ளது என்று நான் ஏற்கனவே சொன்னேன்; வெறுமனே மௌனத்தில் இருங்கள்”.
“பாடல்கள் பாடுவதும், இசையைக் கேட்பதும் கூட தியானம் தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியா?” என்று கேட்டாள் ஸ்நேஹா.
“உனக்கு மிகவும் பிடித்திருப்பதும், அல்லது, உன்னுடைய முழு ஈடுபாடும் கொண்டுள்ள எதுவும் உன்னுடைய கவனத்தைப் பெறும். அந்தச் செயல்பாட்டில் உன்னுடைய முழு கவனமும் செல்லும்போது, உன்னுடைய மனம் ஒரே எண்ணத்தில் இருக்கும்; அது உன் மனதை அமைதிப்படுத்த உதவும், ஒரே எண்ணத்தில் உன் மனதைப் பிடிக்க நீ பயிற்சி செய்யும் பிராணாயாமம் போன்றது. மன அமைதியை மௌனம் என்று நினைத்துக் குழப்பிக்கொள்ளாதே”.
“புரிந்தது” என்றாள் ஸ்நேஹா.
“நான் கண்டிப்பாக முயற்சி செய்வேன்” என்றான் கௌசிக்.
“நாம் சிற்றுண்டி முடித்துவிட்டுப் பிறகு தொடர்ந்து உரையாடுவோம்” என்றார் சங்கர்.
(தொடரும்)