நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் கூடத்தில் வந்து அமர்ந்தனர்.

“மாமா! சாப்பிடுவதற்கு முன்பாக, மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று கேட்டேன்” என்றாள் ஸ்நேஹா.

“நீ கேட்டாயா என்ன?” என்று கேட்டார் மஹாதேவன்.

“ஆமாம் மஹாதேவன். அதைப் பற்றித் தனியாக விவாதிக வேண்டும் என்பதற்காகச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு பேசலாம், என்று நான் தான் சொன்னேன்” என்றார் சங்கர்.

“சரி. மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் மற்றொரு விஷயத்தைப் பற்றிப் பார்ப்போம். சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் உடலின் வலிமையும் (Strength) சக்தியும் (Stamina) கூடும் என்பதும், அதே சுவாசக் கட்டுப்பாடு (Breath Control) உங்கள் மனத்தின் உணர்ச்சிகளையும் (Emotions) எதிர்வினைகளையும் (Reactions) கட்டுப்படுத்த உதவும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?”

“உண்மையாகவா? அது எப்படி முடியும்?” என்று கேட்டான் கௌசிக்.

“நாம் முதலில் உடலிலிருந்து ஆரம்பிப்போம். வலிமை என்றால் என்ன அர்த்தம்?”

“பல வகையில் வரையறுக்கலாம். எடையைத் தூக்கும் ஆற்றலே வலிமை என்று சொல்லலாம்”

“அருமை! உண்மையில் அதுதான் உன் வலிமையைச் சோதிக்க மிகச்சுலபமான வழி, சரியா?”

“நான் அப்படித்தான் நினைக்கிறேன்”

“லேசான எடைகளை நீ சுலபமாகத் தூக்கிவிடுகிறாய். கொஞ்சம் கனமான எடைகளைத் தூக்குவதைக் கற்பனை செய்து பார். அதாவது மேஜை, அலமாரி போன்ற கனமான பொருட்கள் எதையாவது தூக்குவதற்கு உன்னால் முடியுமா?”

“முடியும்”

“சரி, நான் மற்றொரு உதாரணம் தருகிறேன். ஒலிம்பிக் அல்லது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குவதைப் பார்த்திருக்கிறாயா?”

“ஆம், பார்த்திருக்கிறேன்”

“பளு தூக்குபவர் என்ன செய்கிறார் என்பதை வரிசை முறையாக விவரிக்க முடியுமா?”

“நிச்சயமாக. அவர் மிகவும் ஊக்கத்துடன் உற்சாகமாக இருப்பார்; போட்டி நடக்கும் தளத்திற்கு நடந்து வருவார்; தன் கைகளை உலர் நிலையில் வைத்திருக்க ஏதோ ஒரு தூளைக் கைகளில் போட்டுக்கொள்வார்; இரண்டு பக்கமும் உள்ள பளுக்களை இணைக்கும் கம்பியை அளந்து பார்ப்பார்; அளந்து பார்த்துத் தன்னுடைய கைகளைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்துப் பிறகு பளுவைத் தூக்குவார்” என்றான் கௌசிக்.

“பளுவைத் தூக்குவதற்கு முன்பாக அவர் செய்யும் கடைசிச் செயல் என்ன?”

“ம்… மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு பளுவைத் தூக்குவார் (He holds his breath and then lifts)”

“சபாஷ்! மூச்சை இழுத்துப் பிடிக்காமல் ஏன் பளுவைத் தூக்கக் கூடாது? அப்படிச் செய்தால் என்னவாகும்?”

“தூக்க முடியாமல் கஷ்டப்படுவார், அவ்வளவுதான்”.

“மிகச்சரி. கனமான பொருளையும் தூக்குவதற்கு முன்பாக, நீ செய்ய வேண்டிய கடைசிச் செயல் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்வதுதான். அதற்குப் பிறகுதான் அதைத் தூக்க வேண்டும். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்வது உன் வலிமையை அதிகரிக்கிறது என்பதையே இது சுட்டுகிறது. ஒத்துக்கொள்கிறாயா?”

“தர்க்க ரீதியாகப் பார்க்கும்போது சரியாகத்தான் இருக்கிறது”

“உண்மை. மூச்சை இழுத்துப்பிடிக்கும் திறன் அதிகமாக அதிகமாக, அதற்கு ஏற்றவாறு, உன் வலிமையும் அதிகரிக்கிறது. உனக்கு நீயே சோதித்துப் பார்க்கலாம். மூச்சை இழுத்துப் பிடிக்காமல் இந்த மேஜையைத் தூக்கிப்பார். கஷ்டப்படுவாய். மேஜை மிகவும் கனமானது. இதைத் தூக்க முயலும்போது, உன்னையே அறியாமல் அனிச்சை செயல்போல் தன்னிச்சையாக மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்வாய். அது இயற்கையாக நடப்பது”.

“சரி. அதற்கு என்ன அர்த்தம்?”

“மூச்சை இழுத்துப்பிடிக்கும் திறனைப் பயிற்சி செய்வதன் மூலம் உன்னுடைய வலிமையை அதிகரித்துக்கொள்ளலாம், என்பதே அதன் அர்த்தம்”.

“ஒருவர் அதை எப்படிச் செய்ய முடியும்?”

“நான் அந்த விஷயத்திற்கு வருகிறேன். அதற்கு முன்னால் சக்தியைப் பற்றியும் பார்த்துவிடுவோம். சக்தி என்றால் என்ன?”

“உடலைப் பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பதால், அது ஓட்டத்துடன் தொடர்பு கொண்டதாக இருக்குமா?”

“மிகவும் சரியாகச் சொன்னாய்”

“அப்படியென்றால், மூச்சுத் திணறாமல் நீண்ட தூரம் ஓடும் திறனே சக்தி என்பதாகும் (the ability to run long distances without gasping for breath)”.

“அற்புதம் கௌசிக்! குறைந்த அளவு தூரத்தைக் கூட ஓடிக்கடக்க முடியாமல் உனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உனக்கு சக்தி குறைவு என்று அர்த்தம், ஒத்துக்கொள்கிறாயா?”

“ஆம், எனக்குத் தெரியும். இதை நானும் அனுபவித்திருக்கிறேன். நான் டென்னிஸ் விளையாடும்போது சில சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு கடினமான சுற்றுக்குப் பிறகு, முற்றிலும் சோர்வடைந்து, மிகவும் அசௌகரியமாக உணர்ந்து, வெளியேறியிருக்கிறேன்”.

“சரி. வலிமை, சக்தி இரண்டையும் ஒரே பயிற்சியின் முலம் அதிகரிக்கலாம், தெரியுமா?”

“உண்மையாகவே அப்படி ஒன்றைத் தெரிந்துகொண்டு பயிற்சி செய்ய விரும்புகிறேன்”.

“ஆமாம். அதற்கு ‘மூச்சுப் பயிற்சி’ (Breathing Exercise) என்று பெயர். இந்த மூச்சுப் பயிற்சியைத்தான் பிராணாயாமம் என்று கூறுகிறோம். இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய வேண்டும். இதற்கு இரண்டு நிமிடங்கள் பிடிக்கும்).

“அவ்வளவு தானா?”

“ஆமாம். உண்மை தான். வலிமையையும் சக்தியையும் அதிகரிக்கச் செய்ய மிகவும் பயனளிக்கக் கூடிய பயிற்சியாகும் இது”.

“இதை எப்படி அளவிட முடியும்?”

“இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னால், உன்னால் எவ்வளவு நேரம் மூச்சை இழுத்துப் பிடிக்க முடிகிறது என்று பார். மூச்சை வெளியேற்றிய பிறகு மீண்டும் உள்ளே இழுக்காமல் எவ்வளவு நேரம் இருக்க முடிகிறது என்று பார். இரண்டையும் ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்”.

“சரி. பிறகு?”

இந்தப் பிராணாயமத்தைப் பயிற்சி செய். கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் இரண்டு பண்பளவுகளையும் பரீட்சித்துப்பார். Test both the parameters again. குறைந்தபட்சம் மூச்சை இழுத்துப்பிடிப்பது 50% முதல் 75% வரை அதிகரித்திருப்பதை உணர்வாய். அதே போல மூச்சை வெளியேற்றிய பிறகு மீண்டும் உள்ளிழுக்காமல் இருக்கும் நிலையும் அதே அளவு அதிகரித்திருப்பதைக் கவனிப்பாய்”.

“உண்மையாகவா?”

“மேலும் நீ விளையாடும்போது, சக்தி குறைவதாக உணர்ந்தால், விளையாட்டை நிறுத்திவிட்டு அரை பாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு அதே இடத்தில் இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய். இரண்டு நிமிடங்கள் தான் பிடிக்கும். ஆனால், புத்துணர்ச்சி ஏற்பட்டு, சக்தி அதிகரித்து, குறைந்தபட்சம் மேலும் இரண்டு சுற்றுகள் விளையாடத் தயராக இருப்பாய்”.

“அற்புதம். இதை இப்போதே முயற்சி செய்யப் போகிறேன்”.

“மனதைக் கட்டுப்படுத்துவதைப் பற்றியும் சொன்னீர்கள். அதற்கும் இந்தப் பயிற்சி உதவுமா?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“இது அடுத்த வகைப் பிராணாயாமத்திற்கான முன்னேற்பாடு”.

“அடுத்த வகை எது?”

“அதற்கு நாடி சுத்தி பிராணாயாமம் என்று பெயர். உன்னுடைய மனது கொந்தளிக்கும் நிலையில் இருக்கும்போது அதற்கு ஊட்டமளிப்பது எது தெரியுமா?”

“கோபத்தைச் சொல்கிறீர்களா? யாராவது எதையாவது செய்தாலோ அல்லது செய்யாமல் விட்டாலோ அது உள்ளுக்குள் கோபத்தைத் தூண்டுகிறது. சரிதானே நான் சொல்வது?”

“சரிதான். ஆனால் உன்னுள் கோபப்படுவதற்கு முன்னால் நீ கடைசியாகச் செய்யும் செயல் என்ன?”

“அதற்கும் மூச்சிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?”

“கண்டிப்பாக. கோபமோ, விரக்தியோ, தீவிர மகிழ்ச்சியோ, மனதில் தோன்றும் எந்த மாதிரியான எதிர்வினையானாலும் அந்த உணர்ச்சித் தூண்டுதலானது ஒரு ஆழமான சுவாசத்தில் தான் ஆரம்பிக்கிறது; அந்த சுவாசத்திற்குப் பிறகு தான் உன்னுடைய உணர்ச்சியை நீ வெளிப்படுத்துகிறாய்”.

“நீங்களே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது வேகமாக சுவாசிப்பதைப் நான் பார்த்திருக்கிறேன்”.

“சரிதான். உன் மனதின் எந்தவிதமான கொந்தளிப்பையும் உன் சுவாசத்தை வைத்துப் பரீட்சிக்கலாம். அது வேகமாக இருக்கும். வேகம் அதிகமாக, அதிகமாக, உன் மனதின் கொந்தளிப்பும் அதிகமாகும், ஒத்துக்கொள்கிறாயா?”

“ஆமாம். மேலும், மனம் அமைதி அடைந்து, மீண்டும் சாதாரண மனநிலைக்குத் திரும்புவதற்குக் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். பல சமயங்களில் வாக்குவாதத்தினால் சண்டை ஏற்பட்டு, அதனால் உறவும் குலைந்து போய்விடுகிறது” என்றார் சௌம்யா.

“நன்றாகச் சொன்னாய் சௌம்யா. மனதை அமைதியாக வைத்திருக்கச் சிறந்த வழி மூச்சைக் கட்டுப்படுத்துவது தான்”.

“உண்மையாகவா?” என்றாள் ஸ்நேஹா

“கண்டிப்பாக. நீ இப்போது எவ்வளவு அமைதியாக இருக்க முடியுமோ அவ்வளவு அமைதியாக இருக்கிறாய்; மேலும் சாதாரணமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாய். உன் சுவாசம் சாதாரணமாக normal breathing-ஆக இருக்கிறது, சரிதானே?”

“ஆமாம்”.

“இந்த மாதிரியான அமைதியான நிலையில், யாராவது உன்னைச் சீண்டினால் கூட உன்னால் கோபத்துடனோ கட்டுப்பாட்டை இழந்தோ நடந்துகொள்ள முடியாது”.

“உண்மையாகவா?”

“உன் மூச்சு உன் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் உன் மனது தன்னிச்சையக எதிர்வினை ஆற்றும். ஆனால் உன் மூச்சைக் கட்டுப்படுத்தி அமைதியான சாதாரண நிலையில் இருந்தால், உன் மனது கொந்தளிப்படைவதற்குக் கஷ்டப்படும்; Your mind will struggle to get agitated”.

“இது சுவாரஸ்யமாக இருக்கிறது. மனதை நேரடியாக அல்லாமல், மறைமுகமாகக் கட்டுப்படுத்த முடியும் என்கிறீர்களா?”

“அருமையாகச் சொன்னாய் ஸ்நேஹா. நான் அதைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டேன். நீ சரியாகக் கிரகித்துக்கொண்டாய்”.

“இதற்கு நாடி சுத்திப் பிராணாயாமம் தான் தீர்வா?” என்று கேட்டாள் லேகா.

“ஆமாம் லேகா. அது தான் தீர்வு. அதை நீ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்; எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் பிராணாயாமத்தை நீ அதிகமாகச் செய்யச் செய்ய, மறைமுகமாக உன் மனக்கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த உதவும். உன் மூச்சை, அதிகமாகக் கட்டுக்குள் கொண்டுவருவாய். (சௌகரியமான நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும்; உன் வலது கட்டை விரலால் உன் வலது நாசியை மூடிக்கொள்ள வேண்டும்; இடது நாசி வழியாக முன்று வரை எண்ணியவாறு மெதுவாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; இரண்டு நாசிகளையும் முடிக்கொண்டு முன்றிலிருந்து நான்கு வரை எண்ணவேண்டும்; வலது கை மோதிர விரலால் இடது நாசியை மட்டும் மூடிக்கொண்டு வலது நாசி வழியாக மூன்றிலிருந்து நான்கு வரை எண்ணியபடியே மெதுவாக மூச்சை வெளியேற்ற வேண்டும். பிறகு அதே போல எண்ணியபடியே வலது நாசி வழியாக மூச்சை இழுத்து, இரண்டு நாசிகளையும் மூடிக்கொண்டு மூச்சை நிறுத்தி, இடது நாசி வழியே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு செய்வது ஒரு சுற்று. ஒரு நேரத்தில் இதைப்போல் பத்து சுற்றுக்கள் செய்ய வேண்டும்)”.

“இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் (Side Effects) ஏற்படுமா?” என்று கேட்டார் சங்கர்.

“எப்படியிருந்தாலும் வாழ்வதற்காக சுவாசித்துக்கொண்டுதானே இருக்கிறோம். அதைப்போலவே அந்த அளவுக்கு எளிமையானது இந்தப் பயிற்சி. உண்மையில் சொல்லப்போனால் நாம் சுவாசித்தலை நமக்குக் அளிக்கப்பட்டக் கொடையாகவே எடுத்துக்கொள்கிறோம். இந்த ஒரு செயல்பாடு தான் நாம் வாழ உதவுகிறது; ஆயினும் அதை நாம் அங்கீகரிப்பதில்லை; அதற்கு மரியாதையும் தருவதில்லை. நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கூட அது செயல்படுகின்றது”.

“ஆம். நான் ஒத்துக்கொள்கிறேன்” என்றார் சங்கர்.

“இதில் உள்ள ஒரே மாற்றம் நீ எப்படி சுவாசிக்கிறாய் என்பது தான். கனவுகளும் தொந்தரவுகளும் இல்லாத ஆழ்ந்த உறக்கத்தை நேரடியாக நீ பெறுவதற்கு இந்தப் பிராணாயாமம் உதவுகிறது என்பது உனக்குத் தெரியுமா?”

“உண்மையாகவா?” என்று கேட்டார் சௌம்யா“

”ஆமாம். உறக்கம் பெறும் நடைமுறையானது பின்வரும் வரிசையில் நிகழ்கிறது. நீ பற்பல நினைவுகளோடு உறங்கச் செல்கிறாய்; அது மெதுவாகச் சில நினைவுகளாகக் குறைகின்றது; பிறகு ஒரே நினைவு என்கிற நிலையை எட்டும்போது மனது தானாகவே ஒடுங்கிப்போய் நீ உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாய். பல நினைவுகளிலிருந்து ஒரு நினைவுக்குச் செல்லும் இந்த நீண்ட நடைமுறையானது, இந்தப் பிராணாயாமத்தின் மூலம் விரைவாகச் சாதிக்கப்படுகின்றது”.

“உறங்கச் செல்லும்முன் இதைச் செய்தால் நான் விரைவில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும் என்கிறீர்களா?” என்று கேட்டார் சௌம்யா.

“அது மட்டுமல்ல; அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள் ஏதுமின்றி நீ மரக்கட்டை போன்று உறங்குவாய்; இதன் மோசமான பகுதி, அல்லது சிறந்த பகுதி (Worst or the Best part), என்னவென்றால் உன்னால் 5 அல்லது 6 மணிநேரம் தான் உறங்க முடியும்; வலுக்கட்டாயமாக விழிப்பு வந்துவிடும்; பின்னர் எழுந்திருக்கும்போது முழுமையான புத்துணர்வுடன் இருப்பாய்”.

“நம்பவே முடியவில்லை. நீங்கள் ஒன்றும் கிண்டல் பண்ணவில்லையே?” என்று கேட்டார் சௌம்யா.

“இல்லை. இன்றிரவே இதை முயற்சி செய்; எப்படி உறங்கினாய் என்பதை நாளைக் காலை சொல். ஒருவர் ஒரு தினத்தை உடலளவிலும் மனத்தளவிலும் புத்துணர்ச்சியுடனும், சக்தியுடனும், ஊக்கத்துடனும் துவக்குவதைக் கற்பனை செய்து பாருங்கள்; அது ஒரு சிறந்த துவக்கமாக இருக்காதா?”

“நிச்சயமாக. ஆனால் அதை எப்படிச் செய்வது?” என்று கேட்டான் கௌசிக்.

“நான் இப்போது செய்து காண்பிக்கிறேன். நீங்கள் அதைப் போலவே முயற்சி செய்து பாருங்கள். ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் (Starters), இந்த இரண்டு பிராணாயாமங்களையும் அருகில் உள்ள யோகா ஆசிரியரிடம் நேரிடையாகக் கற்றுக்கொள்வதே சிறந்த வழி”.

“ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் (Starters) என்று ஏன் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் சங்கர்.

“இதன் பயன்கள் மீது ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நீ மேலும் கற்றுக்கொள்ளவும் தெரிந்துகொள்ளவும் விருப்பப்படுவாய். அதனால்தான் அவ்வாறு சொன்னேன். ஆனால் ஒரு எச்சரிக்கை; இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை செய்துவிட்டுப் பின்னர் முயற்சி செய்வது நல்லது”.

“இது தியானத்திற்கு உதவுமா?” என்று கேட்டார் சௌம்யா.

“அது முற்றிலும் வேறு விஷயம்”.

“எங்கள் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லாததால், இன்றிரவு உன்னுடன் பயிற்சி செய்துவிட்டு, எங்கள் அனுபவங்களை நாளைக் காலை பகிர்ந்துகொள்கிறோம். என்ன, எல்லாருக்கும் சம்மதம் தானே?” என்று கேட்டார் சங்கர்.

“நிச்சயமாக அப்பா” என்றான் கௌசிக்.

(தொடரும்)

One Reply to “நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்”

  1. அருமையான கட்டுரை.நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *