கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது?

எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது ?

‘ சாகப்போகிற நேரத்திலே சங்கரா ! சங்கரா ! என்று அழுது என்ன பயன் ? ‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . இந்தப் பழமொழி எதைக் காட்டுகிறது ? மிக இள வயதிலே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லவிஷயம் . இது அவரவர் கர்மாவை ஒட்டியது என்றாலும் , மனித முயற்சி என்று உண்டு என்று மறுப்பதற்கில்லை .

நம் சைவ சமய பரம ஆச்சாரியரான ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள் மிக இளம் பிராயத்தில் சமண சமயம் புகுந்தார்கள் . பல காலம் அந்த சமயத்திலே உழன்று , தம்முடைய நடுவயதில் மீண்டும் சைவம் வந்து சேர்ந்தார்கள் . இதற்காக வருந்தி , தமது தேவார பதிகங்களில் குறித்துள்ளார்கள் .

கையில் கோலூன்றி – கோலன் என்ற பிரயோகம் – நடக்கும் பிராயம் வரையிலும் வாழ்க்கையின் குறிக்கோள் – அதாவது இறை வழிபாடு செய்யாமல் – இல்லாமல் கெட்டேன் – ‘கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன் ‘ என்றும் தம் திருபாடல்களில் அருளுகிறார்கள் .அந்தத் தேவார பதிகம் இதோ :

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே. ( 4- 67 – 9 )

சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே! சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்.

கைத்தடி படங்கள் : பெரியபுராண பேருரை ஆசிரியர் “ சிவக்கவிமணி ‘ C K S அவர்கள் உபயோகித்து வந்த கைத்தடி . முகப்பு : ஸ்ரீ ரிஷபாரூடர் . பக்கங்கள்: ஸ்ரீ நால்வர் பெருமக்கள் ( ‘’நால்வர் பொற்றாள் எம்உயிர்த்துணை ‘’)

ஏன் இளம் வயதிலேயே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும் ?

இளம் வயது – மனத்துடிப்பும் , உடலுறுதியும் உள்ள பருவம் . மிக முக்கியமாக உடல் திறன் . கிழ வயதில் இறை நம்பிக்கை கொண்டு எவ்வாறு நம் பாரத தேசம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடியும் ?

வத்ரி எனவும் பத்ரி என வழங்கும் பத்ரிநாத் வடநாட்டில் உள்ள இமயத்தில் உள்ள ஒரு விண்ணகரம் . நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று . உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் என்னும் தலத்திலிருந்து கெளரிகுண்டம் செல்லும் வழியினின்றும் பிரிந்து மலைப்பாதையில் சென்றால் ஸ்ரீ பத்ரிநாராயண விண்ணகரம் சென்று சேரலாம் . இந்தக் கடுமையான பாதையில் நம் முதிய பிராயத்தில் விட இளம் வயதில் சென்று வருவது சரியானது

நம் ஸ்ரீ வைஷ்ணவ சமயத்தின் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் . ‘ முதுகைப் பிடித்துக் கொண்டு , இருமிக்கொண்டு , கையில் ஒரு கோல் ஊன்றிக்கொண்டு – ‘ தாத்தா போறார் டோய் ‘ – என்று சிறுவர்கள் கேலி செய்யும் பருவம் வரும் முன்னரே பத்ரிநாத் சென்று வா “ என்று ஸ்ரீ திருமங்கை மன்னர் ஆணை இடுகிறார்கள் . அவர்கள் அருளிய திருபாசுரம் இதோ :

முதுகுபற்றிக்கைத்தலத்தால் முன்னொருகோலூன்றி * 
விதிர்விதிர்த்துக்கண்சுழன்று மேற்கிளைகொண்டிருமி * 
இதுவென்னப்பர்மூத்தவாறென்று இளையவரேசாமுன் * 
மதுவுண்வண்டுபண்கள்பாடும் வதரிவணங்குதுமே.

(பெரிய திருமொழி – முதற்பத்து மூன்றாம் திருமொழி)

கை தலத்தால் – ஒரு கையாலே
முதுகு பற்றி – முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி – (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து – (உடல்) நடுங்கியும்
கண் சுழன்று – (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்
(ஆக இப்படிப்பட்ட ஜூகுப்ஸைகளைக் கண்டு)
இளையவர் – இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு)
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன் – “இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே,
மது உண் வண்டு – பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள்
பண்கள் பாடும் – இசை பாடப்பெற்ற
வதரி – ஸ்ரீபதரியை
வணங்குதும் – வணங்குவோம்

கைத்தடிகள் கொண்டு நடக்கும் நிலையினை சமய வாழ்கையை ஒட்டி சில விஷயங்களைப் பார்த்தோம் .

இனி ‘ கடவுள் இல்லை ‘ ‘ கடவுளை புதைக்க வாரீர் ‘ என உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்த நாத்திகரான நீட்ஷேவின் கைத்தடி குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம் இதோ :

பிரெட்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche 15 October 1844 – 25 August 1900 ) கலை , மொழியில் , வரலாறு , அறிவியல் , சமயம் , பண்பாடு , முதலிய பன்முக துறைகளை அவர் எழுதிய நூல்கள் பரக்க கிடக்கின்றன . கிறித்துவ சமயத்தில் மிக ஆழமான பிணைப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்த நீட்ஷே ஜெர்மானிய கல்வித்துறையில் மிக இள வயதிலே சேர்ந்து பண்டைய மொழியில் பேராசிரியராக இள வயது மேதையாகத் திகழந்தவர் ( Prodigy ) . கிரேக்கம் , லத்தின் ஆகிய மொழிகளிலே மிகப் புலமை வாய்ந்தஅவர் ஒரு இசை வல்லுனரும் கூட .

மனநோய்க்கு ஆளான நீட்ஷே ‘ ( Insanity closed down his mind – William Shirer ) தமது ஐம்பத்தி ஐந்தாம் வயதில் காலமானார் .

நீட்ஷேவை அவர் இறுதிக்காலம் முடிய அவரைப் போஷித்த அவருடைய சகோதரி எலிசபத் போர்ஸ்தர் நீட்ஷே , அப்பொழுது ஜெர்மனிய ஆட்சிப்பீடத்தில் ஏறிய ஹிட்லரிடம் , நீட்ஷே தம் இறுதிகாலம் வரை வைத்திருந்த கைதடியை அன்பளிப்பாக கொடுத்தார் . ‘ நீட்ஷேவின் வாரிசு ‘ என்று தன்னை கூறிக்கொண்ட ஹிட்லர் அந்தக் கைதடியை மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுகொண்டாராம்!

References :

1 . தேவார பாடலும் & பொழிப்புரையும் – ஸ்ரீ தருமை ஆதீன website

2. நாலாயிர திவ்விய பிரபந்தம் & உரை : திராவிட வேதா website

3. எக்சிஸ்டென்ஷியலிசம் – ஓர் அறிமுகம் – S V ராஜதுரை

(க.கந்தசாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

One Reply to “கைத்தடி மான்மியம் (அ) எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது?”

 1. நமது பாரம்பரியக் கல்விமுறையில் இளவயதிலேயே தெய்வ நம்பிக்கையை வளர்த்தனர். இதன் அங்கமாக இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை போன்ற அடிப்படை உண்மைகளை மனதில் பதியுமாறு போதித்தனர். திருக்குறள், நாலடியார்,ஔவையார் பாடல்கள், பிற அறநெறிப்பாடல்கள் ஆகியவற்றை மனப்பாடம் செய்தோம். அவற்றின் பொருள் அன்று விளங்காவிட்டாலும் நாளடைவில் மனம் அவற்றை அசைபோட்டு ருசிகண்டது.
  இது தவிர பல தெய்வத் துதிகளையும் அவரவர் மரபுப்படி கற்றுக்கொண்டோம். இதை Supplementary education எனலாம்.
  இன்று மெக்காலே கல்விமுறை மிகத்தீவிரமாகத் திணிக்கப்பட்டுவிட்டது. Secularism என்ற பெயரில் மேலை நாட்டு கொள்கைகளையும் நாத்திக வாதத்தையும் பரப்புகிறார்கள். பள்ளிக்குழந்தைகள் இதற்கு இலக்காகிறார்கள். கிறிஸ்தவர்களும், முகம்மதியர்களும் விடாமல் தங்கள் மதபோதனையைத் தொடர்கிறார்கள்; ஆனால் ஹிந்துக்கள் மட்டும் பல வரட்டு வாதங்களுக்குப் பலியாகி இளைய தலமுறையினர் சமய-அற நம்பிக்கையில்லாத சூழ்நிலையில் வளருமாறு விட்டுவிட்டார்கள்.
  இந்த நிலையில், ஐந்தில் விளையாது ஐம்பதில் எப்படி விளையும்? கடவுளைப்பற்றிப் பிறகு வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றால், யார் எத்தனை நாள் இருப்பார்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்> இதையெல்லாம் அருணகிரிநாதர் திருப்புகழில் பல இடங்களில் மனம் உருகும்படிச் சொல்லியிருக்கிறார்.
  “அல்லின் நேருமின் அதுதானும் அல்லதாகிய உடல் மாயை” -இந்த உடல் இரவில் தோன்றி மறையும் மின்னலைப்போன்றது ( நிலையற்றது) என்பார். அதனால், “இளமை கிழம்படுமுன் பதம் உணர்வேனோ?” என்கிறார். முதுமையையும் அதனால் தோன்றும் துன்பங்களையும் பல பாடல்களில் விளக்கியிருக்கிறார். மரண காலத்தில் உணர்விழந்து உயிர்கள் படும் அவஸ்தையை விவரித்திருக்கிறார்.
  தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
  தந்த மசைய முதுகே வளையஇதழ்
  தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் …… நகையாடி

  தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
  கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
  துஞ்சு குருடு படவே செவிடுபடு …… செவியாகி

  வந்த பிணியு மதிலே மிடையுமொரு
  பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
  மைந்த ருடைமை கடனே தெனமுடுக …… துயர்மேவி

  மங்கை யழுது விழவே யமபடர்கள்
  நின்று சருவ மலமே யொழுகவுயிர்
  மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை …… வரவேணும்

  என்று இப்படி எத்தனையோ பாடல்கள்!

  அந்தோமன மேநம தாக்கையை
  நம்பாதெயி தாகித சூத்திர
  மம்போருக னாடிய பூட்டிது …… இனிமேல்நாம்

  அஞ்சாதமை யாகிரி யாக்கையை
  பஞ்சாடிய வேலவ னார்க்கிய
  லங்காகுவம் வாஇனி தாக்கையை …… ஒழியாமல்

  வந்தோமிது வேகதி யாட்சியு
  மிந்தாமயில் வாகனர் சீட்டிது
  வந்தாளுவம் நாமென வீக்கிய …… சிவநீறும்

  வந்தேவெகு வாநமை யாட்கொளு
  வந்தார்மத மேதினி மேற்கொள
  மைந்தாகும ராவெனு மார்ப்புய …… மறவாதே……

  என்றிப்படி எத்தனையோ அற்புத வரிகள்!

  ஒரு உயிர் உலகில் தோன்றும் பொழுது, அதற்கு இறை நினைவு வராமல் இருக்க எத்தனை தடைகள் நேரிடுகின்றன என்பதை மாணிக்கவாசக ஸ்வாமிகள் பட்டியலிடுகிறார்.
  “ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
  நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்” என்கிறார்! இந்த நிலைதான் இன்று தமிழ் நாட்டில் நிலவுகிறது. இதையெல்லாம் மீறி “தெய்வம் என்பதோர் சித்தம்” நம் இளைஞர்களுக்கு வரவேணும்! இதற்கு நம் பெரியவர்கள் “சிறியன சிந்தியாமல்” முயலவேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *