மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி

நம் தேசத்தின் மாபெரும் அரசியல் தலைவரும் முன்னாள் பிரமதருமான அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகஸ்டு 16, 2018 அன்று தனது 93ம் வயதில் மறைந்தார்.  பாரதத் தாயின் வீரப்புதல்வரும் பாரத ரத்தினமும் ஆன அடல்ஜி அவர்களுக்கு தேசமே தனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ்ஹிந்து நாட்டு மக்களுடன் இணைந்து தனது அஞ்சலிகளைத் தெரித்துக் கொள்கிறது.  அவரது இன்னுயிர் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

எமது எழுத்தாளர்கள் சிலர் எழுதிய அஞ்சலிக் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

பி.எஸ்.நரேந்திரன்:

இந்தியா கண்ட மாபெரும் தலைவர்களின் ஒருவரான அடல்ஜீ மறைந்துவிட்டார் என்று அறிகிறேன். பிறக்கும் எவரும் இறப்பது இயற்கையெனினும் அடல்ஜியின் மரணச்செய்தி என்னை வருந்த வைக்கிறது. அவரைப் போல சீரிய சிந்தனையும், நேர்மைத்திறமும் கொண்ட தலைவர்கள் இந்தியச் சூழலில் மிக, மிக அபூர்வமானவர்கள்.

அடல்ஜீயின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது என்பதனை விஷமறிந்த எவரும் மறுக்கமாட்டார்கள். வெளிநாட்டுக் கடனை முற்றிலும் தவிர்த்து முற்றிலும் உள்நாட்டு முதலீட்டிலேயே இந்தியப் பொருளாதாரம் உயர்ந்து வருவதனைக் கண்டு உலகம் வியந்தது. அவரின் தங்க நாற்கரச்சாலைத் திட்டத்தின் பயனாக இந்தியப் பொருளாதாரம் 40 சதவீதம் உயர்ந்ததாக “நேஷனல் ஜியாக்ரஃபி’ ஆராய்ந்து கட்டுரை எழுதியது. அன்னியச் செலாவணி கையிருப்பு பெருகி, விலைவாசி கட்டுக்குள் வந்தது. புதிய தொழில்கள் துவங்குவதற்கு ஆதரவான அரசாங்க பாலிசிகளின் காரணமாக ஏராளனமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்குத் திரும்பி தொழில் துவங்கத் தலைப்பட்டார்கள்.

ஆனால் அத்தனையும் சில அயோக்கியர்களின் துரோகத்தால் வீழ்ந்தது. பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அடல்ஜீ ஒரே ஒரு ஓட்டில் தோற்றார். தேசம் திருடர்களின் கைக்குச் சென்றது. அடல்ஜீயின் கடின உழைப்பின் பயனாக விளைந்த அத்தனை முன்னேற்றமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு திருடர்கள் திளைத்தார்கள். அந்தத் திருடர்கள் நாட்டைக் கொள்ளையடித்து நாசமாக்கினார்கள். தேசம் துரோகிகளினால் சூறையாடப்பட்டது.

அடல்ஜீ  நாடறிந்த ஊழல் நாரீமணிகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தாரானால் அவர் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கக் கூடும். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் நேர்மை தவறாதவராகவே வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.

பாகிஸ்தானுடன் சமாதானம் சாத்தியம் என்கிற அப்பாவித்தனத்தனம் அவரை கார்கில் போருக்கு இட்டுச் சென்றது. முஷாரஃப் என்கிற நச்சரவத்தை மடியில் சுமந்த மாபெரும் தவற்றினை அவர் செய்தார் எனினும் அவரின் நோக்கம் நேர்மையானது. அப்பழுக்கற்றது.

அடல்ஜீ ஒரு தாரகையைப் போல வாழ்ந்தார். இன்று விண்ணில் தாரகைகளுடன் கலந்துவிட்டார். ஆனால் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.

*****

ராஜசங்கர்

வாஜ்பாய் அப்படி என்ன சாதித்துவிட்டார்?

வாஜ்பாயின் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை உறவினர் ஒருவரின் வீட்டிலே பார்த்து அப்போ எனக்கு தெரிந்த இந்தியை கொண்டு மொழிபெயர்த்துக்கொண்டிருந்தேன். பள்ளி முடிவு என்பதால் இந்தியும் சமஸ்கிருதமும் படித்துகொண்டிருந்த காலம். கல்லூரியிலே சேர்ந்தபின்னர் உப்புமா கூட்டணி ஆட்சியிலே இருந்து செய்த கோமாளிக்கூத்துக்களை இந்த மானங்கெட்ட ஊடகங்களின் வழியாக படிக்கவேண்டியிருந்தது.

வாஜ்பாயின் இரண்டாம் முறை பதவி ஏற்பு மற்றும் ஆட்சியை பற்றி இந்த ஊடகங்கள் என்னென்ன எழுதின என்பது இன்னமும் வரிக்கு வரி நினைவிருக்கிறது. அப்துல் கலாமை பாம்ப் டாடி (Bomb Daddy) என கேடுகெட்ட ஊடகங்கள் வசைபாடியதை இன்றுவரை மறக்க முடியவில்லை.

வாஜ்பாயி பல நல்லதுகளை செய்திருந்தாலும் ஊடகங்கள் அவரை வில்லனாகவே சித்தரித்தன. இன்றைக்கு மோடி ஊடகங்களை கிட்டே அண்ட விடமால் இருப்பதுமே வாஜ்பாயின் காலத்திய படிப்பினை தான்.

அணு ஆயுத சோதனை நடத்தினால் பெரிய எதிர்ப்பு இருக்காது என முன்பே ஆலோசித்து ஆட்சி ஏற்றவுடனே சோதனை நடத்த உத்தரவிட்டார் என்பதை வேறு யாரேனும் நேரு குடும்பம் அல்லாமல் வேறு எவரேனும் காங்கிரஸிலே இருந்து செய்திருந்தால் கூட இன்னேரம் இந்திய வெளியுறவுக்கொள்கையின் ஆகச்சிறந்த சாதனையாக போற்றப்பட்டிருக்கும். உலகநாடுகளின் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகள் ஆறே மாதத்திலே விலக்கிகொள்ளப்பட்டது மாபெரும் சாதனை. அதை முன் கூட்டியே கணித்திருந்தார் வாஜ்பேயி.

அந்த ஆட்சி ஒரு ஓட்டிலே கவிழ்ந்தது என்பதை பல நாட்கள் ஜீரணிக்க முடியாமல் இருந்தேன்.

அடுத்த ஆட்சி வந்தவுடனே சரி இதெல்லாம் வேலைக்காகாது விட்டால் திரும்ப திரும்ப ஜெயித்துக்கொண்டே இருப்பார்கள் என மானங்கெட்ட ஊடகங்களை காங்கிரஸ் களவாணிகள் ஏவி விட்டார்கள்.

தங்க நாற்கர திட்டம், ஜிஎஸ்டியை ஆரம்பித்தது, தகவல்தொழில்நுட்ப துறைக்கு உயிரூட்டியது, தனிப்பட்ட ஏற்றுமதி பகுதிகளை ஆரம்பித்து இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிகோலியது, கிராம சாலைத்திட்டம் கொண்டு வந்தது, ஏழைகள் அனைவருக்கும் உணவு திட்டம் என பெரும் திட்டங்களை கொண்டு வந்தார்.

வாஜ்பாயி கொண்டு வந்த இந்த அந்த்யோதயா உணவுத் திட்டம் தான் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பசிப்பிணி போக்கி எல்லோருக்கும் உணவு என்பதை ஆரம்பித்து வைத்தது. அதை ஆட்டைய போட்டு உணவு பாதுகாப்பு திட்டம் என களவாணிகள் திருடியதும் இங்கே திராவிடக் கட்சிகள் அவர்கள் சொந்தமாக கொண்டு வந்ததாக சொல்லி ஏமாற்றியதையும் பார்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையிலே அன்று என்னைப்போல் ஏகப்பட்ட பேர் இருந்திருக்கிறார்கள் என பின்பு தான் தெரிந்து கொண்டேன்.

எல்லோருக்கும் கல்வி எனும் சர்வ சிக்ஷா அபியான் என திட்டத்தை கொண்டு வந்தது வாஜ்பேயி தான். நாட்டிலே பிறந்த எல்லோருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை அரசியலமைப்பு சட்டத்திலேயே ஏற்றிய மகான் வாஜ்பாயி. எல்லோரும் ஒரே மாதிரி படிக்க முடியாது எனவே வகுப்புகளிலே தேர்வு பெறாமல் போபவர்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் எனவும் திட்டம் கொண்டு வந்தார். கம்யூனிஸ்டுகளும் சோசிலிஸ்டுகளும் எல்லோருக்கும் கல்வி என கோஷம் போட்டுக்கொண்டும் டப்பா குலுக்கிக்கொண்டும் இருந்த போது அடிப்படை உரிமை என ஆக்கி காட்டியவர். அதை, பின்னர் கல்வி உரிமைச்சட்டம் என கொத்து பரோட்டா போட்டு இந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களை மட்டும் குறிவைத்து ஒழிக்கும் படியான சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் களவாணி அரசு.

தங்க நாற்கர திட்டம் போல வாஜ்பேயி கொண்டு வந்த கிராம சாலைகள் திட்டம் பெரிதாக பேசப்படவில்லை. அதன் வெற்றியையும் ஆட்டைய போட்டதன் விளைவு. கிராம சாலைகள் திட்டத்தை வேலைக்காது, பணவிரயம் என்றே அன்றைக்கு பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் இன்றைக்கு அந்த கிராமசாலை திட்டம் எப்படி கிராமங்களை இணைத்தது என சோசியல் மீடியா இருப்பதால் அறீய முடிகிறது.

டெலிகாம் டிபார்ட்மெண்ட் என இருந்ததை மாற்றி அரசு ஊழியர்கள் என சோம்பேறித்தனமாக இருந்தவர்களை பிஎஸ்என்எல் என வேலை செய்யவைத்தது வாஜ்பேயிதான். மொபைல் புரட்சி இந்தியாவுக்கு வருவதற்குக் காரணம் வாஜ்பேயி தான்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வந்து போக வசதிகள் செய்தது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு நடத்தியது என வெளியுறவு கொள்கையிலேயும் பலசாதனைகள் புரிந்தார்.

பிரான்ஸுக்கு போயிருந்தபோது பிரான்ஸ் அதிபரை இந்தியாவுக்கு அழைக்கவேண்டும் எப்போது அழைப்பது அதை எப்படி சொல்வது என அதிகாரிகள் யோசித்துக்கொண்டிருந்த போது அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜாக்கிஸ் சிராக் உடன் பேசும்போது கவித்துவமாகவே அழைப்பு விடுத்தார். இங்கே ஊடகங்கள் என்ன எழுதின தெரியுமா? வாஜ்பேயால் கூட்டத்திலே மட்டுமே பேசமுடியும் தனியறையிலே நாலு பேர் முன்னாடி பேசமுடியாது என.

கம்யூனிஸ்டுகளின் கொடும் நகங்கள் அரசதிகாரத்திலே எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பதை காட்டி வாஜ்பேயியை பணிய வைக்கமுயன்றார்கள். வெங்காய விலை உயர்வு வந்த போது இறக்குமதியானதை கப்பலிலேயே அழுக விட்டார்கள். அப்படி செய்த தேசிய உணவு கழகத்தின் நிர்வாகியை மாற்ற முடியாத அளவுக்கு சக்தி இல்லாமலே அரசை இவ்வளவு தூரம் வெற்றிகரமாக நடத்தினார்.

இதை படிப்பவர்களுக்கே வாஜ்பேயி இவ்வளவு தூரம் செய்திருக்கிறாரா என தோன்றும். நினைவிலிருந்து எழுதுவதால் முழுத் திட்டங்களையும் எழுதவில்லை. வாஜ்பாயி தான் முதல் முதலாக முன்னேற்றம், வளர்ச்சி, சுபிட்சம் என்பதை இந்திய அரசியலிலே கொண்டு வந்தார் என இடதுசாரி மானங்கெட்டதுகள் இன்றும் புலம்புகிறது என்றால் புரிந்துகொள்ளவேண்டும்.

நரசிம்மராவ் கொண்டு வந்த சீர்திருந்ததங்களை மன்மோகன் தலையிலே எழுதிவிட்டு வாஜ்பாயி செய்ததை முழுமையாக மறக்கடித்தால் நமக்கே அவர் என்னென்ன செய்துவிட்டு போனார் என விரிவாக தெரியவில்லை.

இப்படி மக்களுக்கு உணவும் கல்வியும் தொழிலும் தொழில்நுட்பமும் முன்னேற்றமும் அளித்ததற்கு மானங்கெட்ட ஊடகங்கள் வைத்த பெயர் என்ன தெரியுமா? பாப்புலிசம். தமிழிலே சொல்லவேண்டும் என்றால் அடித்தட்டு மக்களுக்கு ஆதரவு அளித்தல்.

அடித்தட்டு மக்களின் ஏழைமக்களின் குறைகளை போக்குவதை கெட்டவார்த்தை ஆக்கி வைத்திருந்தன கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும். அதை உடைக்க பத்து வருடங்கள் தேவைப்பட்டது. இன்றைக்கு சோசியல் மீடியா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மோடியையும் இப்படியே திட்டியிருப்பார்கள் என்பதும் கவனத்திலே கொள்ளவேண்டியது.

வாஜ்பாயி செய்த சாதனைகளை மறைத்து அதை தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார் என கிண்டலடித்து அதை அவர்கள் பேருக்கு போட்டு, அந்த மாபெரும் மனிதருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்ததை பார்த்து சகியாமல் என்னைப்போன்று அரசியல் பேச இயங்க ஆரம்பித்தவர்கள் ஏராளம்.

நாட்டுக்காகவும் ஏழை எளிய மக்களுக்காவும் உழைத்த மகானை வழியனுப்பும்போது வாஜ்பாயின் கொள்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி எடுப்போம்.

நாட்டுக்கு உழைக்கும் மோடிக்கும் கட்சியிலேயும் ஆட்சியிலேயும் நமக்காக உழைப்பவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என இயங்குவோம்.

நமக்காக காலமெலாம் உழைத்த ஆன்மா நீத்தோர் இடத்திலிருந்து நமக்கு அருளட்டும்.

ஜெய் ஹிந்த்.

*****

எஸ்.சண்முகநாதன்: 

இமயமலை சாய்வதில்லை; என்றும்,
இந்தியப் பெருங்கடல் காய்வதில்லை;
இந்தியப் பெருமகனே, உன் புகழும் காயாது. மாயாது!

வறண்ட தேசத்தில் தாமரை மலர
நீர் ஊற்றியவன் நீ. மலரும் கமலம் மேலும் வளர
வேர் என்று தன்னை மாற்றிக்கொண்டவன் நீ.

பால்மணக்கும் புன்னகை முகத்தில் தவழ்ந்தாலும்
வாமனன் போல் விஸ்வரூபம் எடுத்தவன் – தேசம் நலம்பெற
ராமனின் அனுமன் போல் சஞ்சீவி எடுத்தவன்.

அமைதி தேடும் புறாவுக்கும் – கொத்தும்
அலகு வேண்டும் என்று பொக்ரானில்
அழகாய் அணு “சக்தி” கண்டவன்.

“ஒளிரும் பாரதம்” கண்ட உத்தமன் – நித்தம்
மிளிரும் இந்தியா என்று தங்கச்சாலை தந்தவன்
துளிரும் நம்பிக்கை பிளிறும் களிறென்றானது உன்னால்,

கார்முகில் போல் கருணை மழை பொழிந்தவன்
கார்கில் போர் என்றால் வெற்றிமாலை கொண்டவன்
மார்பில் தாங்கி வளர்த்தாய் பாரதத்தை – தாயென!

சாய்வதில்லை ஓய்வதில்லை உன் புகழ்
மாய்வதில்லை தேய்வதில்லை உன்கனவு
தூயதில்லை ஆண்டவன் அளிக்கட்டும் முக்தி உனக்கு!

வீரவணக்கம் வாஜ்பாய்!

*****

2 Replies to “மாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி”

 1. இன்று அரசு பள்ளிகள் சிறந்து விளங்குகிறதென்னால் அதற்கு முழு காரணம் திரு.வாஜ்பாய் அரசு அளித்த சா்வசிக்யான் அபியான் -அனைவருக்கும் கல்வி திட்டம். இதற்கான நிதி உதவி அரசு பள்ளிகளுக்கு மட்டும் அல்ல நிதி உதவி பெறும் தனியாா் பள்ளிகளுக்கும் தாராளமாக அளிக்கப்பட்டது சிறப்பாகும். மனித வளம் உருவாக மகத்தான பணியை சரவ சிக்யான் அபியான் திட்டம் செய்தது.கல்வித்துறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
  அண்மையில் ஒப்வொரு பள்ளியிலும் 11ம் வகுப்பு தரத்தில் ஒரு மாதிரி தோ்வு நடத்தி அதில் தோ்ச்சி பெற்ற 10 பேர்களை நீட் தோ்வுக்கு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்யப்பட்டு வினாத்தாள்கள் அனுப்பப்பட்டு தோ்வு நடத்தப்பட்டது.பெரும்பாலான பள்ளிகளில் தோ்ச்சி 0 தான். நான் 12 ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் மத்தியில் ஒரு இயற்பியல் கணக்கை தீர்வுகாண கொடுத்தேன்.ஆங்கில எழுத்தின் A வடிவில் ஒரு மின் கம்பி சுற்று அமைக்கப்பட்டு அதன் உச்சியில் உள்ள கோணம் 60டிகிரி என்று மற்ற மதிப்புகளை கொடுத்து கம்பியின்மொத்த நீளத்தின் மின்தடையை மதிப்பிட வேண்டும்.மாணவர்கள் ஆங்கில எழுத்து வடிவத்தின் உச்சி கோணம் 60 என்ற அளவில் அந்தபகுதி சமபக்க முக்கோணம் என்ற கருத்து தோன்றிவிட்டதென்னால் கணக்கு மிக சாதாரணமாக விடை வந்து விடும்.ஆனால் 5 மாணவர்களும் சமபக்க முக்கோணம் என்ற கருத்தை புரிந்து கொள்ளவில்லை. மின்சுற்று சமபந்தப்பட்ட கணக்கில்வோல்ட ஒம்ஸ் அம்பியா் போன்றவைதானே வர வேண்டும்.இந்த கணக்கில் கோணம் ஏன் கொடுத்துள்ளா்கள் என்பதை கவனத்துடன் யோசியுங்கள் என்று பலமுறை எடுத்துச் சொல்லியும் மாணவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மேற்படி 5 மாணவர்களும் 10 வகுப்பு தோ்வில்484-490 மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
  மனப்பாடம் செய்யும் தகுதியைத்தான் மாணவர்கள் பெற்றுள்ளாா்கள். சிந்திக்க கொஞசமும் பயிற்சி யில்லை. இதற்கு காரணம் கடந்த 10 ஆண்டுகளில் ப்ளுபிரிண்ட அடிப்படையில் மாணவர்கள் தோ்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுதான். நல்லவேளை இந்த கல்வி ஆண்டில் ப்ளுபிரிண்ட முறை ஒழிக்கப்பட்டு விட்டது.
  நீட் தோ்வு மருத்துவ படிப்புக்கு மட்டும் அல்ல.BA/BSc/B.com /BE/B.Ed/ அனைத்துதோ்விற்கும் அடிப்படையான ஒரு நுழைவு தோ்வு எழுத விதி செய்ய வேண்டும்.பள்ளி தோ்வுகள் அனைத்தும் எந்த அத்தியாயத்தில் இருந்து எந்த கேள்வியும் ஆழந்த புரிதலை சோதிக்கும் வண்ணம் இருக்கும் வகையில் கேட்க வேண்டும்.இன்னும் வாசகர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.

 2. தற்போது பாலிமா் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.சென்னையில் ஒரு இந்து ஆலயத்தில் தீமிதி திருநாள் நடத்தப்பட்டது.அதில் தீ கங்குகளில் கால் தடுக்கி இரண்டு பேர்கள் விழுந்து பெரும் காயம் அடைந்தார்கள் என்ற செய்தியை தொலைக்காட்சி அறிவித்து நிகழ்ச்சியையும் காட்டியது.
  தீ மிதி நிகழ்ச்சிகளை தடை செய்ய தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
  தலையில் தேங்காய் உடைப்பதையும் தடை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *