(ஹரன்பிரசன்னா எழுதி வெளிவந்திருக்கும் “மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்” நூலுக்கான முன்னுரை)
கிண்டில் புத்தகத்தை அமேசான் தளத்தில் இங்கே வாங்கி வாசிக்கலாம் (விலை ரூ. 49).
ஒரு வருடம் முன்பாக, இந்தச் சிறுவர் கதைகளை திடீரென ஒரு வேகத்தில் எழுதத் துவங்கினேன். நான் சிறுவயதில் இதுபோன்ற கதைகளைப் படித்தே வளர்ந்தவன். அந்த வயதில் ஒவ்வொரு முறை பொது நூலகத்துக்குச் செல்லும்போதும் என் கண்கள் எப்போதும் அம்புலிமாமாவையும் பாலமித்ராவையும் ரத்னபாலாவையும் கோகுலத்தையும் தேடும். யார் முதலில் இப்புத்தகங்களை எடுக்கிறார்கள் என்பதில் எங்களுக்குள்ளே ஒரு போட்டியே நடக்கும். அதில் வெளியான கதைகள் ஒவ்வொன்றும் தரும் கற்பனை விரிவை இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
கதைகளைப் படித்துவிட்டு அதே நினைப்பில் தனக்குத் தானே பேசிய நாள்கள் பல உண்டு. யாராவது அதைச் சுட்டிக்காட்டும்போது வெட்கமாக இருக்கும்.
கற்பனை விரிவைத் தரும் இக்கதைகளுக்கான இடம் இன்று கிட்டத்தட்ட இல்லை என்றாகிவிட்டது. இதற்கான காரணங்களை நானாகத் தொகுத்தேன்.
முதல் காரணம், மூட நம்பிக்கை என்கிற பெயரில் நம் மரபான கதைமுறையை ஒட்டி உருவாகும் அனைத்தும் ஒதுக்கப்பட்டு, மேற்கத்திய சிந்தனைகளை ஒட்டி வலுக்கட்டாயமாக ‘புதிய கதைகள்’ நவீன மயமாக்கப்பட்டன. கதைகள் இந்திய மரபு போதித்தவையாக இருந்தால் அவையெல்லாம் பிற்போக்குத்தனமானவை என்கிற எண்ணம் புகுத்தப்பட்டது. நம் கதைகளில் வலுவாக இருந்த கடவுள் நம்பிக்கை மிகத் தந்திரமாக நீக்கப்பட்டது. மேற்கத்திய சிந்தனையை ஒட்டி, அதேசமயம் கடவுள் நம்பிக்கையை நீக்கி, மிகத் தெளிவான ஒரு கட்டமைப்பில் கதைகளும் சிந்தனைகளும் சிறுவர்களுக்குப் பரிமாறப்பட்டன. தீவிர நாத்திக, கம்யூனிஸ சிந்தனை உள்ளவர்கள் அனைத்து இடங்களில் நிரம்பி அவர்களே சிறுவர்களுடன் உரையாட ஆரம்பித்தார்கள். அவர்கள் சொல்வதுதான் சிறுவர் கதை என்றானது. கற்பனை விரிவையும் தீவிர நாட்டுப்பற்றையும் சொந்த மத நம்பிக்கையையும் கடவுள் மீதான நம்பிக்கையையும் தரும் கதைகள் அனைத்தும் கேலிக்குரியவை என்ற எண்ணம் அனைவர் மனங்களிலும் விதைக்கப்பட்டது. மாறாக, கற்பனை விரிவைத் தரும் எளிய நகைச்சுவைக் கதைகள் மட்டுமே போதுமானவை என்ற எண்ணம் புகுத்தப்பட்டது. இதன் மூலம் சிறுவர்களை மிகத் தெளிவாக, நம் புராணம், கடவுள் போன்றவற்றிலிருந்து அந்நியப்படுத்தினார்கள்.
கோகுலம் போன்ற மரபான இதழ்களைக் கூட இப்போக்கு விட்டுவைக்கவில்லை. காலப் போக்கில் தாக்குப் பிடிக்க முடியாமல் பாலமித்ரா, ரத்னபாலா போன்ற இதழ்களின் வீழ்ச்சி ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் நம் மரபையே பிற்போக்கு என நம்ப வைக்கும் வெற்றிகரமான முயற்சி. இந்நிலையில்தான் இக்கதைகளை எழுதினேன்.
இவை அனைத்தும் ஒரு வேகத்தில் அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் எழுதப்பட்ட கதைகள். இவற்றை எந்தப் பத்திரிகையும் வெளியிடாது என்று நினைத்தேன். அப்படியே வெளியிட முன்வந்தாலும், நான் மேலே சொன்ன நிலைப்பாட்டை எதிர்க்கும் பத்திரிகைகளாக அவை இருக்கவேண்டும் என்றும் தோன்றியது. இந்தச் சிக்கலுக்குள் சிக்கிக் கொண்ட பத்திரிகைகள் இன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். ‘சிறுவர் மலர்’ (தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தது போல் தற்போது இல்லை என்றாலும்) மட்டுமே இன்னும் இதற்கான இடத்தை வைத்திருக்கிறது. ஆனால் அதில் பக்க அளவு ஒரு பிரச்சினைதான்.
நானே இதைப் புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்தேன். இவை எழுதப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஏனோ அக்காரியத்தில் நான் மிகவும் தீவிரமாக ஈடுபடவில்லை.
கிண்டிலின் அறிவிப்பைக் கண்டதும் இக்கதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடலாம் என்று தோன்றியது.
இக்கதைகள் மூடநம்பிக்கையை வளர்ப்பவை அல்ல. மாறாக கற்பனை விரிவைக் கோருபவை. எவ்வித அறிவுரையையும் சொல்ல முனைபவை அல்ல. சிறுவர் கதைகள் என்றால் அவை நிச்சயம் அறிவுரைக் கதைகளாக இருக்கவேண்டும் என்பதை நான் அடியோடு மறுக்கிறேன். கதைகளில் நல்ல விஷயம் இருப்பது முக்கியம். ஆனால் அவை எதையாவது போதித்தே ஆகவேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இக்கதைகளில் உள்ளவை அறிவியலுக்குப் பொருந்தாதவை. அதையும் நான் ஒவ்வொரு கதையிலும் சிறு குறிப்பினூடாகச் சொல்லி இருக்கிறேன்.
கதைகளுக்குள் ஒரு தொடர்ச்சி இருக்கட்டும் என்பதற்காக மூத்தாப்பாட்டி என்றொரு பெயரை உருவாக்கினேன். நம் மரபில் இத்தகைய மூத்தாப்பாட்டிகள் குடும்பம்தோறும் வீடுதோறும் வீதிகள்தோறும் இருந்தார்கள். இன்று இவர்கள் அருகி வருகிறார்கள். இவையெல்லாம் பிற்போக்கு என்ற எண்ணம் ஆழ மீள மீள விதைக்கப்படுமானால் அவர்கள் அனைவரும் அழிந்த இனமாகிவிடுவார்கள்.
இக்கதைமுறையை மீட்டெடுப்பதும் இவை போன்ற கதைகளை மீண்டும் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் நம் பழம் தலைமுறையையும் அவர்களது மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். மேலைநாட்டில் எழுதப்படும் கிறித்துவ சார்பான புராண/மாயாஜாலக் கதைகள் கொண்டாடப்படுகின்றன. நம் ஊரிலும் அதே கதைகளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதுவே நம் மரபான கதைகள் என்றால் இவர்கள் இன்னொரு நிலைப்பாட்டுக்குப் போய்விடுகிறார்கள். இந்த இரட்டை நிலைப்பாட்டை முதலில் நாம் புரிந்துகொண்டால்தான் இக்கதைகளுக்கு மீண்டு வரமுடியும். அதுவே இக்கதைகளின் நோக்கம்.
இன்று சிறுவர் கதை எழுதுபவர்கள் என்றறியப்படுபவர்கள் யார் யார் என்று பாருங்கள். அவர்களது அரசியல், தத்துவ நிலைப்பாட்டைப் பாருங்கள். நான் என்ன சொல்வருகிறேன் என்பது புரியும். இந்தப் பிரச்சினைக்குப் பாதி காரணம் நாம்தான் என்பதை நானே சொல்லிவிடுகிறேன். இந்த வகையிலே நான் செய்திருக்கும் முயற்சி மிகச் சிறியது. தொடர்ச்சியாக இதில் செயல்படுவதே முதன்மையானது. அதைச் செய்யமுடியுமா என்று தெரியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
என் மகனுக்கும் மகளுக்கும் என் அண்ணாவின் குழந்தைகளுக்கும் பற்பல கதைகளைச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் விழிவிரியக் கேட்பதைப் பார்ப்பதே பேரானந்தம். அதே பேரானந்தத்தை இக்கதைகளைப் படிக்கும் சிறுவர்களும் அடையவேண்டும் என்பதே என் ஆசை. அந்த ஆசைக்கு நியாயத்தை இக்கதைகளில் செய்திருக்கிறேன் என்றே நம்புகிறேன்.
கடைசியாக, அறிவியல் சொல்லும் உண்மைகளுக்கும் நிஜமான முற்போக்கான கருத்துகளுக்கும் நான் நிச்சயம் எதிரி அல்ல. அவை தேவையானவைதான். ஆனால் இன்னொரு பக்கம் என்ற ஒன்று உண்டு என்ற மனப்பான்மையை ஊட்டக் கூட மறுக்கும் போக்கையே நான் கண்டிக்க முயல்கிறேன். அதேபோல் நாட்டுப்பற்று, கடவுள் நம்பிக்கை என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்று ஆக்கப்படும் போக்கையும் எதிர்க்கிறேன். இவையே என் கதைக்கான அடிப்படை.
இந்த அடிப்படையில் சிறுவர்களுக்கான கற்பனை விரிவையும் சுவாரஸ்யத்தையும் மட்டுமே கணக்கில்கொண்டு இக்கதைகளை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு கதையை வாசிக்கும்போது இந்த அடிப்படையை மனதில்கொண்டு வாசித்தால் இக்கதைகள் வாயிலாகச் சொல்ல வருவது என்ன என்பது விளங்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கு இக்கதைகளை அறிமுகப்படுத்துங்கள்.
கிண்டில் புத்தகத்தை அமேசான் தளத்தில் இங்கே வாங்கி வாசிக்கலாம் (விலை ரூ. 49).
(ஹரன்பிரசன்னா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
I am honoured. Thanks.
Ishwara’s blessings to you sir