மூலம்: எஸ்.சுந்தரராஜ்
தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்
எஸ். சுந்தரராஜ் (Former Asst. Professor of History, St. Joseph College, Trichy) அவர்கள் The Quarterly Journal of Mythic Society, Volume : LXXI-இல் எழுதிய வரலாற்றுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
பதினான்காம் நூற்றாண்டில் தமிழகம் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுக் கிடந்தது. வடக்கில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்த மாற்றங்களில் பாதிப்பு எதுவும் அடையாமல் இருந்த தமிழகத்தின் மீது வடக்கிலிருந்து வந்த இஸ்லாமியப் படையெடுப்புகளினால் முற்றிலும் மாற்றமடைந்து தமிழக அரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
தென்னாட்டில் பொதுவாக நிலவிய ஒற்றுமையின்மையினாலும் அதனைவிடவும், பாண்டிய நாட்டில் நிகழ்ந்த வாரிசுரிமைப் போர்களாலும் மிகவும் பலவீனமடைந்திருந்த தமிழகத்தின் மீது தொடர்ச்சியாக நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் சூறாவளியாகத் தாக்கின. இஸ்லாமிப்படைகளின் பாதம் படாமல் இருந்த தமிழ் நிலப்பரப்பினை டெல்லி சுல்தானின் படைத்தலைவர்களான மாலிக்கஃபூரும், குஸ்ரூகானும், உலூக்கானும் சின்னாபின்னமாக்கினர். இந்தப் படையெடுப்புகளைத் தொடர்ந்து பலவீனமடைந்திருந்த த்மிழகத்தின் மீது பிற அன்னியரும் தங்களின் ஆளுகையைச் செலுத்த இஸ்லாமியப் படையெடுப்புகள் வழிகோலியது. இந்த நிலையே 1947-ஆம் வருடம் இந்தியா சுதந்திரமடையும் வரை தொடர்ந்து வந்திருப்பதனை நாம் காணலாம்.
மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்குப் பிறகு பலவீனமடைய ஆரம்பித்த சோழப் பேரரசு மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் சிதறி, அதுவரையிலும் வலிமை குன்றியிருந்த பாண்டிய அரசு வலிமை பெற ஆரம்பித்தது. முதலாம் ஜடாவர்ம சுந்தர பாண்டியன், முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியன் (1268-1308) போன்ற புகழ்பெற்ற பாண்டிய அரசர்கள் வலிமை பெற்றார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரமும், அரசியல் ஸ்திரத்தன்மையும் வலிமை பெற்றன. மேற்கூறிய பாண்டியர்களின் காலத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த இத்தாலியப் பயணியான மார்க்கோ-போலோ, இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ஆட்சி நிலவும் பகுதியாக தமிழகம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
முதலாம் மாறவர்மன் குலசேகரனுக்கு மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் ஜடாவர்ம வீரபாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். வீரத்திலும், தீரத்திலும் சிறந்து விளங்கிய இந்த இரண்டு மகன்களையும் மாறவர்ம குலசேகரன் தன்னுடன் இணைந்து தனது இணை அரசர்களாக பாண்டிய நாட்டின் பல பகுதிகளை ஆளவதற்கு நியமித்திருந்தான். கடற்கரையோரம் இருந்த பகுதிகளை ஆள்வதற்கு மூன்றாம் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தான் (1302-3). இவனையே மார்க்கோ-போலோ தனது குறிப்பில் “Sondar Bandi Davar” எனக் குறிப்பிடுவதனைக் காணலாம்.
இதில் மூன்றாம் சுந்தரபாண்டியனே பட்டத்தரசிக்குப் பிறந்த நேரடி வாரிசு எனத்தெரிகிறது. ஆனால் அவனுக்குப் பதிலாக, நேரடி வாரிசு அல்லத மூத்தமகனான ஜடாவர்மன் வீரபாண்டியன் பாண்டிய அரசனாக அறியணை ஏறுகிறான் (1296). இவனையே சரியான வாரிசாக வட இந்திய சுல்தான் கருதியதாகத் தெரிகிறது. சுந்தர பாண்டியன் மதுரைக்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தான். சுல்தானின் வரலாற்றசிரியரான வசாஃப், சுந்தரபாண்டியன் மிகவும் கூர்மதியும், துணிச்சலும் கொண்டவன் எனக் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே மாறவர்ம குலசேகரன் அவனைத் தனக்குப் பின்னர் பாண்டிய அரசை ஆளும் அரசனாக நியமித்தான் எனத் தெரிகிறது.
தனது தந்தையின் இந்தச் செயலை பட்டத்திற்கு உரிய வாரிசான தனக்கு முடிசூட்டாமல், முறைதவறிப் பிறந்த தனது அண்ணனான் வீரபாண்டியனுக்கு அளித்ததின் காரணமாகக் கோபமுற்றிருந்த மூன்றாம் சுந்தரபாண்டியன் கலகம் செய்ய ஆரம்பித்ததுடன், வீரபாண்டியனை 1311-ஆம் வருடம் கொலை செய்ய முயற்சிக்கிறான். இந்த வாரிசுரிமைச் சண்டையே இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வர ஒரு சாக்காக அமைகிறது.
அதையும் விட அன்றைக்குத் தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் ஸ்திரத்தன்மையும் இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க முக்கியமானதொரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. தென்னிந்திய ஹிந்து அரசர்கள் ஒற்றுமையின்றி ஒருவர் மீது ஒருவர் படையெடுத்துப் போர்புரிந்து கொண்டிருந்தார்கள். எப்படியாவது அடுத்த நாட்டு அரசனின் பகுதிகளைக் கவர வேண்டும் என்கிற குறுகிய எண்ணத்துடன் தென்னிந்திய ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதைக் கவனித்துக் கொண்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கோ இந்த நம்பிக்கையற்ற காஃபிர்களை வீழ்த்தி அவர்களின் நாடுகளில் இஸ்லாமைப் பரப்பும் எண்ணம் இருந்தது. அதனைவும் விட பாண்டிய நாட்டில் இருந்த, தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த கணக்கிட முடியாத பொக்கிஷங்களின் அளவினைக் கேள்விப்பட்டதும் கில்ஜிக்கு தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.
இப்படியாக, தென்னிந்தியாவின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்வதற்கான காரணங்கள் பல்வேறு தரப்பின் பேராசையாலும், ஒற்றுமையின்மையாலும் பின்னப்பட்டது எனலாம்.
தனக்கு அரச பதவியை அளிக்காத தனத்து தந்தையை மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் மதுரையில் கொலை செய்துவிட்டு மணிமுடியைத் தலையில் சூடித் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான். அதனைத் தொடர்ந்து தனக்கு விசுவாசமாக இருக்க மான்குளம் (Mankul) என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருந்த பாண்டிய அரசின் பொக்கிஷங்களைத் தனது படைகளுக்குப் பகிர்ந்தளித்தான். இப்படியாக, ஆட்சியைக் கைப்பற்றிய சுந்தரபாண்டியன் தனது சகோதரனன வீரபாண்டியனை அழிக்கும் எண்ணத்துடன் அவன் மீது படையெடுத்தான்.
தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த வீரபாண்டியன், மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனுடன் தலச்சி (Thalachi) என்னுமிடத்தில் போர் புரிகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக வீரபாண்டியன் அந்தப் போரில் தோல்வியடைந்தான். இருப்பினும் கரூரை ஆண்ட அவனது நண்பனான மன்னர் பர்னுல் (Manar Barnul) என்பவரின் உதவியால் சுந்தரபாண்டியனைத் தோற்கடிக்கிறான் வீரபாண்டியன். எனவே போரில் தோற்ற சுந்தரபாண்டியன் அலாவுதின் கில்ஜியிடம் சரணடைந்து தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கிறான் எனத் தெரிகிறது.
ஆனால் அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றாசிரியர்களான அமிர் குஸ்ருவும், பரானியும் மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனின் கொலை குறித்தோ அல்லது கில்ஜியிடம் உதவிகேட்டு வந்த சுந்தரபாண்டியனைக் குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இரண்டு பாண்டிய ராஜாக்களும் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து போர்தொடுத்தார்கள் என்கிற செய்தி மட்டுமே அலாவுதீன் கில்ஜிக்குச் சொல்லப்பட்டது என்று மட்டுமே குறிப்பிடுகிறார் அமிர் குஸ்ரு. எதற்காக இரண்டு சகோதரர்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டினார்கள் என்பது குறித்தான குறிப்பு எதுவும் அவரிடமில்லை.
இரண்டு சகோதரர்களிம் மீது இருந்த பகைமையை, அதன் காரணத்தைச் சொல்பவர் வசாஃப் மட்டுமே. அதேசமயம் சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்தான் என வசாஃப் சொவது சந்தேகத்திற்குரியது. ஏனென்றால் மற்ற இரண்டு வரலாற்றாசிரியர்களும் இதனைக் குறித்து மவுனம் சாதிக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் தில்லியிலிருந்து மதுரைக்கு வர ஏறக்குறைய ஆறுமாதங்களாவது ஆகும் என்பதினை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் சுந்தரபாண்டியன், அன்றைக்கு தேவசமுத்திரத்தில் முகாமிட்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரை சந்தித்திருக்க வேண்டும். தக்காணப் படையெடுப்பின் ஒருபகுதியாக மலபாரின் மீது படையெடுக்கும் எண்ணத்துடன் வந்திருந்த மாலிக் கஃபூர் அங்கு தங்கியிருந்ததாகத் தெரிகிறது.
எனவே, மதுரையிலிருந்து சுந்தரபாண்டியன் தப்பி ஓடியதும், மாலிக் கஃபூர் தக்காணத்தின் மீது படையெடுத்து வந்ததுவும் திட்டமிடப்படாமல் ஏதேச்சையான நிகழ்வுகளாக இருக்க வேண்டும் என்றாலும், தென்னிந்தியாவின் மீது படையெடுக்க பாண்டிய அரசின் உள்நாட்டுக் கலவரம் வசதியான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே, வசாஃப் சொல்வது போல சுந்தரபாண்டியன் மதுரையிலிருந்து தப்பி ஆறுமாதகாலம் பயணம் செய்து தில்லியில் அலாவுதீன் கில்ஜியைச் சந்திருக்க வாய்ப்புகள் மிக, மிகக் குறைவு. எனவே இதுவொரு கற்பனைச் செய்தியாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையே, மதுரையில் பாண்டிய சகோதரர்கள் ஒருவொருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அறிந்த மூன்றாம் வீரவல்லாளன் மதுரையின் மீது படையெடுத்து அந்த நகரைக் கொள்ளையிட்டான். அதையும் விட, பாண்டியர்களிடம் சமீபத்தில் தான் இழந்த தனது முன்னோர்களின் நகரான கண்ணனூரை மீட்பதுவும் அவனது மதுரைப் படையெடுப்பின் முக்கிய காரணமாக இருந்தது. பாண்டிய நாட்டை நோக்கித் துருக்கர்களின் படைகள் வந்து கொண்டிருக்கின்றன எனக் கேள்விப்படும் வீரவலாளன் மதுரையை விட்டு விலகி தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டான். மாலிக் கஃபூருடன் போர் புரிவது தனக்குப் பாதகமானதாகவே இருக்கும் என உணர்ந்தே அவன் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்.
சர்மலை (சிறுமலை?) மற்றும் தபர் கணவாய்களைக் கடந்த மாலிக் கஃபூர் 1311-ஆம் வருடம் பாண்டிய நாட்டை வந்தடைகிறான். காவேரிக்கரை வந்தடையும் மாலிக் கஃபூர், வீரபாண்டியன் ஒளிந்திருக்கும் எனக் கருதப்படும் பிர்துல் என்கிற பகுதியை நோக்கி உடனடியாகக் கிளம்பிச் செல்கிறான். அவனுடன் வந்த இஸ்லாமியப் படை பிர்துல் நகரைத் துவம்சம் செய்து அங்கிருந்த குடிமக்களைப் படுகொலை செய்து அழிக்கிறது. வீரபாண்டியன் அங்கிருந்து தப்பி கண்டூர் என்கிற பகுதிக்கு ஓடுகிறான். அவன் எங்கு சென்றிருக்கக்கூடும் என விசாரிக்கும் மாலிக் கஃபூர், வீரபாண்டியன் ஜலக்கோட்டா என்கிற பகுதிக்குச் சென்று ஒளிந்திருப்பதாக அறிகிறான்.
ஜலக்கோட்டாவிற்குச் செல்லும் மாலிக் கஃபூரிடமிருந்து தப்பும் வீரபாண்டியன் அங்கிருந்து கண்டூர் எனப்படும் காட்டுப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான். கடுமையான காட்டினுள் நுழைய முடியாத மாலிக் கஃபூர் அங்கிருந்து மீண்டும் கண்டூர் பகுதிக்குத் திரும்பி வருகிறான். அங்கு பிரம்ஹாஸ்திபுரி என்னும் ஆலயத்திலிருக்கும் தங்க ஆலயத்தையும் அதன் தங்க விக்கிரகத்தைக் குறித்துக் கேள்விப்படும் மாலிக் கஃபூர் இரவோடிரவாக அந்த ஆலயத்தின் மீது படையெடுக்கிறான். விடிவதற்குள் அந்த ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
இதனையே பரானி “மாபாரின் தங்க ஆலயம் இடித்து ஒழிக்கப்பட்டதாக” தனது வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிடுகிறார். அந்த ஆலயத்தில் உடைக்கப்பட்ட தங்க சுவாமி சிலைகளின் துண்டுகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் மாலிக் கஃபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன.
அதேசமயம் இன்னொரு வரலாற்றாசிரியரான அமிர் குஸ்ரு, பிரம்ஹாஸ்திபுரி என்பது முற்றிலும் வேறு ஆலயம் எனக் குறிப்பிடுகிறார். ஆராய்ச்சியாளர் எஸ்.கே. ஐயங்கார் அது ஸ்ரீரங்க ஆலயமாக இருக்கலாம் எனக் கூறுகிறார். ஏனென்றால் மாலிக் கஃபூர், கண்ணனூரில் இருக்கையிலேயே பிரம்ஹாஸ்திபூரைப் பற்றி கேள்விப் படுகிறான். கண்ணனூர் இன்றைய ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகிலிருக்கும் ஒரு ஊர். எனவே மாலிக் கஃபூரின் படைகள் ஒரே இரவில் அங்கு வருவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் கூறுவது போல அந்த ஆலயம் சிதம்பரமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் கண்ணனூரிலிருந்து சிதம்பரத்திற்கு விரைவாக, ஓரிரிவில் வருவது சாத்தியிமில்லை.
அதையும் விட, வீரபாண்டியனைத் தேடி கண்டூருக்குச் செல்லும் வழியில் மாலிக் கஃபூர் ஜால்கோட்டா (ஸ்ரீரங்கம்) ஆலயத்தைப் பார்த்திருக்கலாம். திரும்பி வரும் வழியில் அதனைக் கொள்ளையடிக்கலாம் என நினைத்து அப்படிச் செய்யாமல் வீரபாண்டியனை விரட்டிச் சென்றிருக்கலாம்.
பிரம்ஹாஸ்திபுரி (ஸ்ரீரங்கம்) வீழ்ந்த ஐந்து நாட்கள் கழித்து மாலிக் கஃபூர் அங்கிருந்து புறப்பட்டு பிர்துல் நகரை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து மதுரையை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறான்.
சக 1249 (பொ.யு. 1327) வருடம் இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது. இஸ்லாமியப் படைகள் சமயபுரத்தை நெருங்கியதை அறிந்த ஆலய பூசாரிகள் ரங்கநாதரின் திருமேனியை தமிழகத்தின் தென்பகுதிக்கு ரகசியமாக அனுப்பி வைத்தார்கள்.
ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது. ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.
ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார். ஆலயத்தின் விமானம் தகர்த்தெறியப்பட்டதால் ஆதிசேஷன் மட்டுமே ஸ்ரீரங்கநாதரின் சிலையைக் காத்து நின்று அது மேலும் சிதைவடையாமல் காத்ததது. உற்சவ ரங்கநாதரின் சிலை அங்கிருந்து பாதுகாப்பாக ஆலய பூசாரிகளால் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
இஸ்லாமியர்களின் இரண்டாவது படையெடுப்பின்போது ஸ்ரீரங்க ஆலயம் அழிவிலிருந்து தப்பினாலும் அவர்களது மூன்றாவது படையெடுப்பில் ஆலயம் பெரும் சேதமுற்றதாகக் கோவிலோழுகு விளக்குகிறது. மூன்றாவது இஸ்லாமியப் படையெடுப்பே தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு அடிகோலியது. முந்தைய இரண்டு படையெடுப்புகளை விடவும் தனது மூன்றாவது தமிழகப் படையெடுப்பில் மாலிக் கஃபூர் ஸ்ரீரங்க ஆலயத்திற்குப் பெரும் சேதத்தை விளைவித்தான். எனவே, கோவிலொழுகு கூறும் இஸ்லாமியப் படையெடுப்பு நடந்ததாகக் கூறும் பொ.யு. 1327-ஆம் வருடம் என்பது தவறான ஒன்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
மேலும், மாலிக்கஃபூரின் படையெடுப்பு உய்யகொண்டான் திருமலைக்கும் (பிர்துல்) கண்ணனூருக்கும் இடையே பெருமளவு இருந்ததுவும் ஒரு காரணம் என நாம் கவனிக்க வேண்டும். எனவே கே.எஸ். ஐயங்கார் மாலிக்கஃபூர் தாக்கி அழித்தது சிதம்பரம் ஆலயம் எனக்கூறுவதும் தவறான தகவலே. சரியான ஆதாரங்கள் கிட்டும்வரை அமிர் குஸ்ரு கூறும் பிரஹ்மாஸ்திபுரி ஸ்ரீரங்கமே எனக்கொள்ளுதல் வேண்டும்.
ஸ்ரீரங்கத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் மாலிக் கஃபூர் அங்கு மொத்த நகரமும் காலியாகியிருப்பதனைக் காண்கிறான். மாலிக் கஃபூர் மதுரையை அடையுமுன்பே சுந்தரபாண்டியன் தனது ராணிகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தான். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு யானைகளைத் தவிர அரண்மனையிலும், ஆலயத்திலுமிருந்த முக்கியஸ்தர்கள் அத்தனைபேர்களும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.
யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார். மதுரையிலிருந்த பொதுமக்கள் தங்களின் கடவுளர்களை வணங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை. மதுரையை மீட்டபிறகு மீனாட்சி அம்மனின் ஆலயத்திற்குச் சென்ற கம்பணன் அங்கிருந்த விளக்கினை ஏற்றி மீண்டும் வழிபாட்டைத் துவக்கி வைத்தான். பொது யுகம் 1365-ஆம் வருடம் குமார கம்பணன் மதுரையை மீட்டதாக வரலாற்றாசிரியர் நெல்சன் குறிப்பிடுகிறார். அதிலிருந்து வழிபாடு நடைபெறாத 48 ஆண்டுகளைக் கழித்துப் பார்க்கையில், மாலிக்கஃபூர் 1317-ஆம் வருடம் மதுரையைத் தாக்கிப் பிடித்திருக்க வேண்டும்.
பின்னர் அதே வருடம் தில்லிக்குச் சென்று திரும்பும் மாலிக் கஃபூரின் படைகளினால் அதே 1317-18-ஆம் ஆண்டுகளில் மீண்டும் மதுரை தாக்கப்படுகிறது. ஆனால் அந்த இரண்டாவது தாக்குதல்களில் பெருமளவு அழிவுகள் எதுவும் நிகழவில்லை எனத் தெரிகிறது.
அதேசமயம் நெல்சனின் கூற்றை மறுக்கும் பிற வரலாற்றாளர்கள் குமார கம்பணன் மதுரையை 1374 வருடம் மீட்டதாக அறிவிக்கிறார்கள். அதன்படி பார்க்கையில் மதுரை ஆலய வழிபாடு பொ.யு. 1328 வருடத்திலிருந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மீண்டும் 1327-28-ஆம் வருடம் மூன்றாவது முறையாக மதுரையின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை மாலிக் கஃபூர் மீனாட்சி சுந்தரேஸ்வரரர் ஆலயத்தை அழிப்பதை விட்டுவிட்டு அதே மதுரையிலிருந்த ஜகன்னாதர் ஆலயத்தை இடித்து அழித்ததாகக் கூறுகிறார் அமிர் குஸ்ரு.
இந்த ஆலயம் மதுரைக்கு அருகில் அணைக்கல் (ஆனைக்கல்?) என்னுமிடத்தில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே இம்முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அழிவிலிருந்து தப்பியிருக்க வேண்டும். எப்படியாகினும், தில்லி சுல்தான் முகம்மது-பின் துக்ளக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பாண்டிய நாட்டில், அவன் ஆணைப்படி ஆலயங்களில் நிகழ்ந்த நித்திய பூசை, புனஸ்காரங்கள் அனைத்து நிறுத்தப்பட்டன.
தங்களின் நாடு துருக்கர்களின் கையால் சின்னாபின்னமாவதனைக் கண்டு வருந்திய பாண்டியன் சகோதரர்கள், சுந்தரபாண்டியனின் மாமனான விக்கிரம பாண்டியனின் முன்னிலையில் தங்கள் சச்சரவுகளை நிறுத்தி சமாதானம் செய்து கொண்டார்கள். விக்கிரம பாண்டியன் மாலிக் கஃபூரின் படைகளைப் போரில் தோற்கடித்து தென்னிந்தியா முழுமையும் இஸ்லாமியர்களின் ஆளுகைக்குக் கீழ்வரவிடாமல் தடுத்தான் எனத் தெரிகிறது.
வரலாற்றாசிரியர் ஃபரிஷ்டா, மாலிக் கஃபூர் தென்னிந்தியாவில் ராமேஸ்வரம் வரையில் படையெடுத்து சென்றதாகவும் பின்னர் அங்கு ஒரு மசூதியைக் கட்டி அதில் தனது எஜமானான தில்லி சுல்தானின் பெயரை ஒரு கல்வெட்டில் பொறித்து வைத்ததாகவும் கூறுகிறார். எனவே, இஸ்லாமியப் படைகள் ராமேஸ்வரம் வரையில் கைப்பற்றியிருக்கலாம் என்பதுவே பிற வரலாற்றாசிரியர்களின் கூற்றுமாகும்.
எஸ்.கே. ஐயங்கார், மதுரையை விட்டுச் செல்லுவதற்கு முன்னர் மாலிக் கஃபூர் சுல்தானின் சார்பாக ஒரு கவர்னரை நியமித்துவிட்டு அவனுக்குப் பாதுகாப்பாக தேவையான இஸ்லாமியப்படைகளை மதுரையில் விட்டுச் சென்றதாகவும் கூறுகிறார். இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஏனென்றால் விக்கிரம பாண்டியன் மாலிக் கஃபூரைத் தோற்கடித்த பின்னர் மதுரையில் அவனது அதிகாரம் செல்லுபடியாக வாய்ப்புகள் இல்லை. அதையும் விட மாலிக் கஃபூர் மதுரையைத் தாண்டி தென்பகுதிக்குச் சென்றதற்கு ஆதாரங்களும் இல்லை. துவாரசமுத்திரத்தையே ஃபரிஷ்டா ராமேஸ்வரம் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும். துக்ளக்கின் ஆட்சி வரும்வரையில் மலபார் பகுதியை ஹிந்து அரசர்களே ஆண்டுவந்தார்கள். எனவே அதுவும் சரியான செய்தியாகத் தெரியவில்லை. அதனடிப்படையில் மாலிக் கஃபூரின் மூன்றாவது தென்னாட்டுப் படையெடுப்பு ஒரு தோல்வியே என நாம் கொள்ளவேண்டும்.
*** மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : கட்டுரையாளரின் கீழ்க்கண்ட பகுதி தொடர்பின்றி குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாண்டிய சகோதரர்களிடமிருந்து விக்கிரம பாண்டியன் ஆட்சியைக் கைப்பற்றி நடத்தியிருக்கலாம். சரிவர விளங்கவில்லை. ***
பாண்டிய சகோதரர்கள் மீண்டும் தங்களுக்குள் பூசலைத் துவக்கிச் சண்டையிட்டுக் கொண்டார்கள். உள்நாட்டுக் கலவரம் துவங்கி நாடு மீண்டும் மோசமான நிலையை நோக்கிச் சென்றது. இதன் காரணமாக பலவீனமான நிலை அடைந்த பாண்டிய நாட்டின் சூழலைப் பயன்படுத்துக் கொண்ட திருவாங்கூர் அரசரான குலசேகர ரவிவர்மா மதுரையின் மீது படையெடுத்து வீரபாண்டியனப் போரில் தோற்கடித்தார். காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து அதனையு வெல்லும் குலசேகர ரவிவர்மா அங்கு முடிசூட்டிக் கொள்கிறார் (1313). பின்னர் நெல்லூரைச் சேர்ந்த முப்பிடி நாயக்கன் அவரைப் போரில் தோற்கடித்து காஞ்சிபுரத்தை விட்டு வெளியேற்றுகிறான்.
பாண்டிய சகோதரச் சண்டைகளுக்குப் பிறகும் பாண்டியர்களின் ஆட்சி மதுரையில் தொடர்ந்ததாகத் தெரிகிறது. பாண்டியர்களின் வரலாற்றுக் குறிப்புகளின்படி விக்கிரம பாண்டியன் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் பகுதிகளையும் புதுக்கோட்டைப் பகுதிகளையும் ஆண்டதாகத் தெரிகிறது (1315). எனவே சேர அரசனின் படையெடுப்பு ஒரு குறுகிய காலத்திற்குள் மட்டுமே நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
1318-ஆம் வருடம் சுல்தான் முபாரக்-ஷா அவனது படைத்தலைவனான குஸ்ரூகானை தமிழகத்தின் மீது படையெடுக்க அனுப்பி வைத்தான். இருப்பினும் அவனது படைகளுக்குள்ளேயே நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளால் கலகம் உண்டாகி அவன் மீண்டும் தில்லிக்குச் செல்ல நேரிட்டது.
பின்னர் 1327-ஆம் வருடம் முகமது-பின்-துக்ளக் அவனது படைத்தலைவனான உலூக்-கானின் தலைமையில் ஒருபடையை தென்னிந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அவனே விக்கிரம பாண்டியனை வென்று, அவனைச் சிறைப்பிடித்தான். அதன் வழியாக தென்னிந்தியாவில், மதுரையில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது.
மலபாரையும் வென்ற உலுக்கானின் படைகள் வென்றன. சுல்தான் முகமது-பின்-துக்ளக், ஜலாலுதீன் அஸான்ஷா என்பவனை மலபாரின் கவர்னராக நியமித்தான். அஸான்ஷா தன்னிடம் ஆட்சிப் பொறுப்பு வந்ததும் சுல்தானுக்கு விசுவாசமானவர்களைக் கொலை செய்துவிட்டுத் தன்னைச் சுதந்திர ஆட்சியாளனாகப் பிரகடனம் செய்துகொண்டான். இதனால் கோபமுற்ற சுல்தான் அவனை விரட்டியடிக்கப் படைகளை அனுப்பி வைத்தான். மலபாரை நெருங்கிய அந்தப் படைகளுக்குள் ப்ளேக் நோய் தோன்றி ஏராளமானவர்கள் இறந்தார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் தவுலதாபாத்திற்கு ஓடி அங்கு தஞ்சம் புகுந்தார்கள்.
இதன் பின்னர் மதுரையில் அஸன்ஷா தலைமையில் ஒரு சுதந்திர சுல்தானேட் தோன்றி குமார கம்பணன் மதுரையைக் கைப்பற்றும் வரையில் ஆட்சியில் இருந்தது.
தமிழகத்தில் அரேபிய சக்திகள் ஆதிக்கம் பெற்ற வரலாற்றை குறித்த விபரங்களை நிறைய வெளியிட வேண்டுகின்றேன். புத்தகங்கள் இருப்பின் விபரங்கள் தெரிவிக்க வேண்டுகி்ன்றேன்.
Kerala youth jailed in Saudi Arabia following his tweets criticising Prophet Mohammed
Jan 28, 2019
ALAPPUZHA: An Alappuzha youth has landed in 10-year jail term in Saudi Arabia following his series of tweets criticising prophet Mohammed.
According to Radhakrishnan Nair, his son Vishnu Dev Radhakrishnan, 28, has been undergoing imprisonment in a jail since June 2018.
As per the letter sent to the family of Vishnu from the Consular, Passport and visa division of the ministry of external affairs, he was arrested for “cybercrime pertaining to blasphemy and spreading messages against the Kingdom through social media.”
“My son, who completed mechanical engineering, had been working as planning engineer there for the past six years. He has made friendship with a Muslim woman in United Kingdom on Twitter and they shared messages. When she spoke against Hindu Gods in one of her conversations on Twitter. Vishnu tweeted something against prophet Mohammed. Following it, he was arrested on June 7, 2018. On September 13, he was given a five-year jail term and a penalty of 1.5 lakh Saudi Riyal. His sentence was increased to 10 years on January 24 as per the direction of higher court,” said Radhakrishnan Nair.
“I have sought the help of union government and union minister of external affairs Sushma Swaraj to release my son from jail.
But I have not received any positive reply from them,’’ said Nair, who has retired from Indian Air Force after 21 years of service.
https://timesofindia.indiatimes.com/india/kerala-youth-jailed-in-saudi-arabia-following-his-tweets-criticising-prophet-mohammed/articleshow/67728713.cms
——–
//அலாவுதீன் கில்ஜிக்கோ இந்த நம்பிக்கையற்ற காஃபிர்களை வீழ்த்தி அவர்களின் நாடுகளில் இஸ்லாமைப் பரப்பும் எண்ணம் இருந்தது. அதனைவும் விட பாண்டிய நாட்டில் இருந்த, தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த கணக்கிட முடியாத பொக்கிஷங்களின் அளவினைக் கேள்விப்பட்டதும் கில்ஜிக்கு தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை//
இந்திய முஸ்லிம் மன்னர்களுக்கு எந்த காலத்திலும் மதத்தை பரப்பும் நோக்கம் இருந்ததில்லை.
அவரகள் ஆட்சி, செல்வம் மட்டுமே.
இந்த மேற்கோள் சங்கித்தனமாக உள்ளது.
ஆதலால் திருத்தம் தேலை.