சல்லிக்கட்டு பற்றி பொதுவெளியில் ஒருதலைப்பட்சமான கருத்துகள் மட்டுமே முன்வைக்கப்படமுடியும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டுவிட்டிருக்கிறது.
பாலின சமத்துவமின்மை, சாதி ஆதிக்கம், மிருக வதை, மனித பலி, காயங்கள், நவீன காலத்துக்குப் பொருந்தாததன்மை என பல கோணங்கள் அதில் இருக்கின்றன. ஆனால், அவை எல்லாமும் ஓரங்கட்டப்பட்டு தமிழ் பெருமிதம், கலாசாரம் என்ற ஒற்றை அம்சம் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுவிட்டிருக்கிறது.
அதிலும் 2017-ல் நடைபெற்ற போராட்டம் என்பது தமிழ்க் கலாசார மீட்பு என்ற போர்வையில் இந்திய எதிர்ப்பு, இந்து நீக்கம் என்பதாகவே முன்னெடுக்கப்பட்டது. உண்மையில் இதுதான் ஃபாசிஸம். போலித் தமிழ் ஃபாசிஸம்.
அந்தப் போராட்டம் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டிருக்கும் நிலையில் சில விஷயங்களை இனியாவது பேசியாகவேண்டும்.
முதலாவதாக, கோவில் திருவிழா என்ற அம்சம் மீட்டெடுக்கப்படவேண்டும். அடுத்ததாக அந்த விளையாட்டில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும்.
*
உலகின் பிற பகுதிகளில் நடக்கும் காளை விளையாட்டுகளோடு ஒப்பிடுகையில் தமிழகத்து சல்லிக்கட்டு மிகவும் பாதுகாப்பானது, வன்முறையற்றது; இதில் காளைகள் கொல்லப்படுவதில்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. உண்மைதான். ஆனால், காளைகள்தான் கொல்லப்படுவதில்லையே தவிர காளையை அடக்கக் களம் இறங்குபவர்கள் கொல்லப்படுவதுண்டு. அந்தவகையில் இதில் சிந்தும் ரத்தம் மிகுந்த வேதனைக்குரியது.
அதிலும் 2000லிருந்து 2010 வரையில் சல்லிக்கட்டுப் போட்டியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 23. ஆனால், 2017-ல் தமிழர்களின் பெருமிதமாக வம்படியாக முன்னிறுத்தப்பட்டபிறகு நடக்கும் சல்லிக்கட்டுப் போட்டிகளில் ஆர்வ மிகுதியால் கலந்துகொண்டு உயிர் துறப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். போலிப் பெருமிதத்தின் கூக்குரல்கள் மூடிமறைக்கும் பெரு வலியின் கேவல்கள் இவை.
ஸ்பெயின், போர்ச்சுகல் என உலகின் பிற இடங்களில் நடக்கும் காளை விளையாட்டு உண்மையில் விளையாட்டே கிடையாது. அது வெறும் கொலை. ஊர் கூடி, கைதட்டி உற்சாகமூட்டும் கொலை. அது உண்மையிலேயே கொடூரமானது. ஒரே குத்தில் காளையைக் கொல்பவன் யாரோ அவனே வீரன் என்று கொண்டாடும் காட்டுமிராண்டித்தனம். ஈட்டியால் ஒரு முறை குத்தியும் சாகவில்லையென்றால் ஏழெட்டு பேர் சேர்ந்து குத்துவார்கள். அப்படியும் சாகவில்லையென்றால் கசாப்பு கடைக்காரனிடம் கொடுத்து வெட்டச் சொல்லுவார்கள். இதுதான் அங்கு நடக்கும் விளையாட்டு. இங்கோ நேர்மாறாக காளைகளின் கொம்புகள் கூர் தீட்டப்பட்டு அப்பாவிகள், தமிழ் வீரமென்று போலியாக உசுப்பேற்றப்பட்டு பலிகொடுக்கப்படுகிறார்கள்.
தமிழகத்து சல்லிக் கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு முக்கியகாரணங்களில் ஒன்று அந்த விபரீத விளையாட்டில் தன்மகனைப் பறிகொடுத்த ஒரு பச்சைத் தமிழனின் பச்சைத் தமிழ்த் தந்தை தொடுத்த வழக்கும்தான்.
இன்றைய நேரலை ஒலிபரப்புகளில் எழுப்பப்படும் பெரும் கூச்சல்களையெல்லாம் தாண்டி ஒலிக்கவேண்டியது அந்தத் துயர ஆன்மாக்களின் எளிய மவுனங்கள்.
சல்லிக்கட்டு மைதானத்தில் ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தக்கூடாதுஎன்பதை உறுதி செய்த பிறகே அல்லது அதைச் செய்ய முடியாத பகுதியில் இனிஅந்த விளையாட்டு நடத்தாமல் இருப்பதே நல்லது.
மிகவும் எளிய விஷயம்தான். காளையில் கொம்புகளில் பஞ்சு உறை அல்லது காளை பிடிப்பவர்களுக்கு கவசங்கள் கட்டாயம் என அறிவித்தாலே போதும்.
- சல்லிக்கட்டு பற்றி சங்க இலக்கியங்களிலேயே குறிப்புகள் உள்ளன. தமிழகத்து குகை ஓவியங்களில் கூட அந்த விளையாட்டு சம்பந்தமான குறிப்புகள் உள்ளன. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கலாசார அம்சத்தை பாதுகாக்கவேண்டியது அவசியமல்லவா…என்றொரு வாதம் முன்வைக்கப்படுவதுண்டு.
முதலாவதாக, இந்த கலாசாரம், பாரம்பரியம் என்ற விஷயத்தில் கொஞ்சம் நிதானமான பார்வை அவசியம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்பது நம் பாரம்பரியத்தினதும் முதுமொழிதானே. சங்க காலத்தில் பரத்தமை ஒழுக்கம் என்று இருந்தது. தலைவன், தலைவிக்கு இணையாக பரத்தையரும் தமிழ் சமூகத்தில் முக்கிய இடம்பெற்றிருந்தனர். இன்று நாம் ஒருவனுக்கு ஒருத்தி என கற்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் என்பதையே நம் பெருமையாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.
சங்க காலத்தில் வேத காலத்தைப் போலவே ஜாதிகள் கிடையாது. சிந்து சரஸ்வதி சமூகத்தில் வேத காலத்தில் பிறப்பை அடிப்படையாகக் கொள்ளாத வர்ணங்கள் (வகுப்புகள்) இருந்ததுபோலவே தமிழ் சமூகத்திலும் தொழில் வகுப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால், இன்று ஜாதியே நம் வாழ்க்கை முறையாகிவிட்டது. இவற்றிலெல்லாம் நாம் நம் வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். அவை தவறுதானே?
தமிழ்க் கலாசாரத்தில் மசூதிக்கும் சர்ச்சுக்கும் ஏது இடம்..? இந்து மதத்துக்கு மாற்றென்றால் பவுத்தம் என்பதுதானே நம் பாரம்பரியம்.
பாழ் நெற்றிக்கு தமிழ் கலாசாரத்தில் ஏது இடம்? பைந்தமிழ்க் கலாசாரத்தில் ஆங்கிலவழிக்கல்விக்கு ஏது இடம்..? சித்திரைதானே நம் புத்தாண்டாக இருந்துவந்திருக்கிறது. ஆங்கிலப் புத்தாண்டு எதற்கு?
ஏறு தழுவுதலில் மட்டும் சங்க காலத்துக்குத் திரும்பவேண்டுமா..? அதில் காட்டும் அதே கலாசாரப் பற்றை தமிழர்களின் பிற அம்சங்களிலும் காட்டவேண்டும். அதுதானே சரியான செயலாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் வரைகூட காளையை அடக்குபவர்கள் அந்தப் போட்டியை நடத்தும் கோவிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையில் பங்குபெற்று, நெற்றி நிறைய விபூதி பட்டை இட்டுக்கொள்வார்கள். வேட்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு களத்தில் குதிப்பார்கள். இப்போதைய போட்டிகளில் பங்குபெறுபவர்கள் விபூதி இட்டுக்கொள்வதில்லை. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டிக் கொண்டு களம் காண்பதில்லை. பரிசுகள் கொடுக்கும்போது கோவில் பூசாரிதான் முன்னால் நின்று கொடுப்பார். இப்போது அவர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இவற்றிலும் பாரம்பரியம் மீட்கப்படவேண்டும்.
*
சல்லிக்கட்டு தமிழர் விளையாட்டா… இந்துக்களின் விளையாட்டா..?
இந்துக்களின் விளையாட்டு என்று சொல்ல வேண்டுமென்றால் எல்லா இந்துக்களும் விளையாடவேண்டும்; பிராமணர்கள், வேளாளர்கள், முதலியார்கள், செட்டியார்கள், மீனவர்கள், பட்டியல் ஜாதியினர், மலைஜாதியினர், நரிக்குறவர் என பல ஜாதியினர் இதில் பங்குபெறுவதில்லை. எனவே, இது இந்துக்களின் கலாசார விஷயம் அல்ல என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால், பிராமணர்கள், வேளாளர்கள், முதலியார்கள், செட்டியார்கள், மீனவர்கள், பட்டியல் ஜாதியினர், மலைஜாதியினர், நரிக்குறவர் போன்ற ஜாதியினர் அனைவருமே தமிழர்கள்தான். அவர்கள் சல்லிக்கட்டில் விளையாடுவதில்லை என்று சொல்லும்போதே தமிழர்களில் கணிசமானவர்கள் விளையாடுவதில்லை என்றும் ஆகிவிடுகிறது. அப்படியானால் இது தமிழர்களின் பொதுவான கலாசார அம்சம் அல்ல என்றும்தான் ஆகிறது. எனவே, சல்லிக்கட்டு இந்துக்களின் கலாசாரம் அல்ல என்று சொன்னால் அது தமிழர்களின் கலாசாரமும் அல்ல என்றே ஆகும்.
அப்பறம் இந்த விளையாட்டில் பங்கெடுக்கும் ஜாதியினரும்கூட இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மதம் மாற்றப்பட்டதும் அதை விளையாடுவதை நிறுத்திவிடுகிறார்கள். சர்ச்சிலோ, மசூதியிலோ இந்த விளையாட்டு நடத்தப்படுவதில்லை. மதம் மாறிய பிறகும் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் இதை இந்து விழாவாகக் கருதுவதால்தான் விளையாடுவதில்லை. இது இந்துக்களின் விளையாட்டுத்தான் என்பதை உணர்த்த இது ஒன்றே போதும்.
*
சல்லிக்கட்டில் காளைகள் கொல்லப்படுவதில்லையே தவிர துன்புறுத்தப்படுவது உண்டு.
சல்லிக் கட்டுக்காளைகளை வண்டி இழுக்கவோ, நிலத்தை உழவோ விடமாட்டார்கள். நல்ல சாப்பாடு கிடைக்கும். சாமிக்கு நேர்ந்துவிடும் காளைகள் போல் ராஜ வாழ்க்கைதான். காளை வளர்ப்பவர்கள் அதை வெறும் ஒரு மாடு என்று நினைப்பதில்லை.அதை சொந்தப் பிள்ளையாவேதான் பாத்து வளர்ப்பார்கள் என்பதெல்லாம் உண்மைதான்.
எனினும், காளையின் கோபம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தார்க்குச்சியால் குத்துதல், வாலைக் கடித்தல், சாராயம் ஊட்டுதல், மிளகாய்த்தூளை மூக்கில், கண்ணில் தடவுதல் எனப் பலவகையில் துன்புறுத்துவது உண்டு. அரசுத் தரப்பு கண்காணிப்பு மூலம் இவை வெகுவாகக் குறைந்திருப்பதும் உண்மைதான்.
ஆனால், சல்லிக்கட்டு நடக்கும் நாளில் அந்தப் பெரிய மைதானத்தில் ஆயிரம் பேர் கூடிநின்று கூக்குரல் எழுப்பியபடி காளைகளை விரட்டுவதென்பது நிச்சயம் அவற்றைப் பெரிதும் அச்சுறுத்தவே செய்யும். அதிலும் போட்டிக்கு முன் அவற்றை வாடிவாசல் பட்டியிலடைத்து வைத்து, திடீரென ஆயிரம் பேர் கூடிக் கூப்பாடு போடும் மைதானத்துக்குள் திறந்துவிட்டு, சொத் சொத் என்று பலரும் அதன் மீது பாய்ந்து செய்பவை எல்லாமே அந்த எளிய ஜீவனை மிரட்டும் செயலே.
காளை நம் பெருமிதம் என்றால், காளை நம் கலாசாரம் என்றால், காளை நம் அடையாளம் என்றால் அதை இன்னும் கொஞ்சம் அன்புடன் தான் நடத்தவேண்டும். அதிலும் அந்தக் காளையின் பெயரிலான திருவிழா நாளில் அதை இப்படித் துன்புறுத்துவதென்பது அதன் மீது நாம் வைத்திருக்கும் அன்பையோ மரியாதையையோ வெளிப்படுத்தவே இல்லை.
ஏதோ எதிரியின் மீதான கோபத்தை அவனுடைய உடமையை, உயிரை, அடையாளத்தை அவமானப்படுத்தித் துன்புறுத்தும் செயல்போலவே இருக்கிறது. நாகத்தை நாம் மதித்துப் போற்றுகிறோம் என்றால் அதன் புற்றுக்குப் பாலும் முட்டையும் காணிக்கையாக வைத்துத்தான் அதை வெளிப்படுத்துகிறோம் (அது சாப்பிடுமா இல்லையா என்பது வேறு விஷயம்).
நினைத்துப் பாருங்கள் நாகத்துக்கு மரியாதை செய்கிறோம் என்று சொல்லி அதன் புற்றை இடித்து, ஊர்கூடிக் கல்லால் அடித்து விரட்டினால் அது அதன் மீதான அன்பை, மரியாதையை வெளிப்படுத்துவதாக ஆகுமா..? காளை மீது மரியாதை என்றால் அதற்கு வரிசையில் நின்று, சந்தனம் குங்குமம் இட்டு, புல் கொடுப்பதுதான் சரி.
ஆனால், காலம் காலமாக வீர விளையாட்டாகவே இது நடத்தப்பட்டிருப்பதால், உடனடியாக அப்படி மாற்றுவது கடினமாக இருக்கும். எனவே, கோவில் மாடு என்று ஒரு காளை முதலில் அவிழ்த்துவிடப்படுவதுண்டும். எல்லா சல்லிக்கட்டுகளிலுமே அதுதான் முதலில் களத்தில் இறக்கப்படும். அதை யாருமே அடக்கமாட்டார்கள். அந்தக் காளைக்கு பெண்கள், குழந்தைகள் எல்லாரும் அதே மைதானத்தில் கரும்பு, புல், பொங்கல் கொடுத்து மரியாதை செய்யலாம். அந்தக் காளையை ஈன்றெடுக்கும் பசுவுக்கும், அந்தக் காளை ஈனும் கன்றுகளுக்கும் கூட போட்டி தொடங்குவதற்கு முன்பாக உணவு கொடுத்து நம் நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தலாம். வீரம்மட்டுமா தாய்மையும் பக்தியுமே கூடத் தமிழர்களின் பாரம்பரியம்தானே. காலப்போக்கில் அதன் எல்லைகள் விரிவடைவது ஆரோக்கியமானதுதானே. பாரம்பரியச் செயல்பாடுகளில் அவற்றின் தொடர்ச்சியான அம்சங்கள் புதிதாகச் சேர்வது ஆக்கபூர்வமானதுதானே.
- சல்லிக்கட்டுக்குக் கொண்டு வரும் காளைக்குத் தனிப் பயிற்சி எதுவும் தேவையில்லைதான். கூட்டத்தில் யாரைப் பார்த்தாலும் அது சீறும்; முட்டும். காளையை அடக்கவருபவருக்கு நிச்சயம் பயிற்சி வேண்டியிருக்கும். ஆனால், அது பொதுவாக எங்கும் தரப்படுவதில்லை. சிறு வயதில் இருந்தே பல சல்லிக்கட்டை நேரில் பார்த்து, படித்துக் கொள்வதுதான். அப்படிப் பார்த்து கேட்டு தெரிந்துகொள்ளும் வித்தை எதுவும், காளை ஆவேசத்துடன் பாயும் போது பயனளிக்காது. அது காளையுடன் ஆடும் விளையாட்டு இல்லை. மரணத்துடன் விளையாடும் விளையாட்டுதான். 2017 ”தன்னெழுச்சி’ப் போராட்டத்துக்குப் பின்னர் நடகும் சல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகரித்திருக்கும் மரணங்களும் காயங்களும் இதையே காட்டுகின்றன. கலாசாரத்தின் பெயரில் உயிர்கள் காவு கொடுக்கப்படுவது காட்டாட்சியை விடக் கேவலமானது.
*
காளையை அடக்குவதற்குப் பின்னால் என்ன மனநிலை செயல்படுகிறது..?
ஆண் என்கிற கர்வம். ஊரில் எல்லார் முன்னாலும் வீரனாக வலம் வர வேண்டும் என்ற ஆசை. பெண்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும் என்ற ஆணாதிக்க மனம். கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால், மண்ணில் மைந்தருக்கு மாமலையும் ஓர் கடுகுதானே. வேறென்ன… ஓர் ஆண் தன்னை ஆணாக உணர்வதே, பெண்கள் விரும்புவதுபோல் ஏதேனும் ஒரு செயலைச் செய்யும் போதுதானே. அந்த ஹார்மோன் சுரக்கும் வரை இந்த விளையாட்டு தொடரத்தான் செய்யும்.
ஆனால், இதில் இருக்கும் பாலின ஒடுக்குமுறை நிச்சயம் களையப்படவேண்டியது. இந்த உலகில் பெண்களால் செய்ய முடியாத ஒன்றே ஒன்று சல்லிக்கட்டில் காளையை அடக்குவதுதான் என்பது நம் தமிழ் சமூகத்துக்கு எவ்வளவு அவமானத்துக்குரிய விஷயம். இது இந்து மதத்தின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடும்கூட. எனவே திராவிடக் கழக, திராவிட முன்னேற்ற கழக, கம்யூனிஸ, நாத்திக, இஸ்லாமிய, கிறிஸ்தவ பெருந்தகைகள் அனைவரும் உடனடியாக இந்த கலாசார விளையாட்டில் இருக்கும் பாலின சமத்துவமின்மையை உடனடியாகக் களைய ஏற்பாடு செய்யவேண்டும்.
தமிழக உயர் நீதிமன்ற நீதிபதிகள், குறிப்பாக மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விரைந்து இதுதொடர்பாக ஒரு தீர்ப்பை, வேண்டுமென்றால் புதிய சட்டத்தையே உருவாக்குவது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் ஒரு பசுமாட்டை அல்லது கன்னுக்குட்டியை அடக்கியாவது சமத்துவத்தை நிலைநாட்ட முன்வரவேண்டும்.
*
வேடிக்கையைவிடுவோம்.
உண்மையில் பெண்கள் இதை எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள்? காளையை அடக்கப் போகிறவனின் அம்மாவின் மனம் என்ன பாடுபடும்? காளையை அடக்கப் போகிறவரின் மனைவி குழந்தைகள் உள்ளுக்குள் எவ்வளவு துடிப்பார்கள்?
வாடிவாசலில் கேட்ட ஆரவாரமும் கள்ளுண்ட களிப்பும் மட்டுமே இலக்கியத்தில் பதிவாகியிருக்கின்றன. கொஞ்சம் தள்ளி இருந்த குடிசைகளில் கணவனையும் மகனையும் அப்பாவையும் அனுப்பிட்டு கண்ணீரோடு காத்து நின்ற பெண்களின் வேதனை எந்த இலக்கியத்திலும் பதிவாகவில்லை.
பெண்ணியவாதிகள் சமத்துவம் கேட்டுப் போராட அவசியமில்லைதான். ஆனால், இந்த விபரீத விளையாட்டினால் பாதிக்கப்படப்போகும் குடும்பத்தின் பெண்ணின் நிலைக்காகவாவது ஏதேனும் செய்யவேண்டும். இதுவும் குடிக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு இணையானதுதான். ஒருவித ஆணாதிக்க போதைதான் காளையை அடக்கக் களம் இறங்குபவரிடமும் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கலாசாரக் குடுவையில் இருந்து ஊற்றப்படும் போலிப் பெருமிதக் கள் தரும் போதை. உயிரிழப்பு நடக்கும் அபாயத்தை முழுவதுமாகத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்காகவாவது பெண்ணியவாதிகள் குரல் கொடுக்கவேண்டும்.
*
உண்மையிலேயே இது வீர விளையாட்டுதானா..?
காளையை அடக்குவதென்றால் நேருக்கு நேராக, கொம்பைப் பிடித்து அதுவும் கொலை வெறியோட இருக்கும் ஒரு காளையை அடக்கவேண்டும். அதுதான் வீரம்.
பின்னால் இருந்து பாய்ந்து திமிலுக்கு மேல் தொத்திக்கொள்வது வீரமே அல்ல. மாடு நாலைந்து உலுப்பு உலுப்புகிறது. துள்ளுகிறது. மாடுபிடி வீரன் கீழ விழாமல் பிடித்துக்கொள்கிறான். அதில் உண்மையில் வீரம் அல்ல; பயமே வெளிப்படுகிறது. அதாவது அவன் அந்தத் திமிலை விட்டுவிட்டால் மாடு அவனைத் துரத்திவந்து கொம்பால் குத்திக் கிழித்துவிடும். அப்படியாக, ரொம்பவும் பயந்துபோய் செய்யும் ஒரு செயலைத்தான் ரொம்பவும் வீரம் என்பதாகச் சொல்கிறோம்.
புயலின் மையத்தில் அமைதி நிலவும் என்று சொல்வார்களே அதுபோல் கொலை வெறியோடு வரும் மாட்டிடமிருந்து தப்பிக்க கொம்புக்கு பக்கத்தில் இருக்கும் திமில்தான் நல்ல பாதுகாப்பான இடம். ஆக அதைப் பிடித்துத் தப்பிப்பவனை தந்திரசாலி என்று வேண்டுமானால் சொல்லலாம். வீரன் என்று சொல்லமுடியுமா என்ன?
*
காளையை அடக்குவதில் என்ன வீரம் இருக்கிறது? உரிய சம்பளம் தராத முதலளியை எதிர்த்து சண்டை போட்டால் அது வீரம். ராயல்ட்டி கொடுக்காத பதிப்பாளரை எதிர்த்துப் போராடினால் அது வீரம். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிவிட்டுப் போகும் உச்ச நட்சத்திரங்களை எதிர்த்துப் போராடினால் அது வீரம். மணல் கொள்ளையைத் தடுத்தால் அது வீரம். ஊழலில் ஈடுபடுகிற கவுன்சிலர் தொடங்கி எம்.எல்.ஏ. எம்.பி. வரை எதிர்த்தால் அது வீரம்.
சாராயக்கடையை நடத்தற அரசுக்கு ஓட்டு போடமாட்டேன் என்று சொன்னால் அது வீரம். சாதிக் கொடுமைக்கு எதிரா போராடினால் அது வீரம். காளை பாவம் வாயில்லா ஜீவன். அதைப் போய் ’அடக்கிவிட்டு’ நான் வீரன் என்று சொன்னால் வேடிக்கையாத்தான் இருக்கிறது. கழனித் தண்ணியும் புண்ணாக்கும் ஒரு வாளியில் கலந்து வைத்தால் வாலைச் சுருட்டிக்கொண்டு, கொம்புல கட்டின சல்லிக்காசுப் பணமுடிப்பை நீங்களா எடுத்துக்கறீங்களா நானே எடுத்துத் தரட்டுமா என்று பக்கத்தில் வந்து சாதுவாக நிற்கும்.
மனுஷன் மேல பாசமா இருக்க முடியாதவங்கதான் விலங்குகள் மேலா பாசமா இருப்பாங்கன்னு சொல்வாங்க. அதுமாதிரி தப்பு செய்யற மனுஷனை எதிர்க்க தெம்பு இல்லாதவங்கதான் காளையை அடக்கறேன்னு மீசையை முறுக்கிட்டு களத்துல குதிப்பாங்க.
*
இந்தியாவில் ஜாதியின் அம்சம் கலக்காதது எதுவுமே கிடையாது. சல்லிக்கட்டும் அதுக்கு விதி விலக்கு கிடையாது. மிகச் சமீப காலம் வரை பட்டியல் ஜாதியினர் காளையை அடக்க அனுமதிக்கப்பட்டதில்லை. இப்போதும்கூட பட்டியல் ஜாதிகளில் மேல் அடுக்கில் இருக்கும் ஓரிரு ஜாதிகள் தவிர வேற யாரையும் மாட்டைத் தொடவிடுவதில்லை.
தமிழ் பெருமிதம் என்று சொல்லி முன்னெடுப்பதால் இதைப் பூசி மொழுகுகிறார்கள். இந்துப் பெருமிதமாக இதை முன்னெடுத்திருந்தால் அந்த ஜாதிப் பிரச்னையைத்தான் முதலில் முன்னுக்குக் கொண்டுவந்து இந்தப் போட்டியையே முடக்கியிருப்பார்கள்.
எனவே, உண்மையான சாதி சமத்துவத்தை வெளிப்படுத்துவகையில் ஆதிக்க ஜாதிக்காரர் வளர்க்கும் காளையை அடுத்த படிநிலைகளிலிருக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அடக்க வேண்டும் என்பதாக ஒரு வழிமுறையை அமல்படுத்தவேண்டும்.
மேலும் இப்போது இந்து கோவில்களில்மட்டுமே இந்தப் போட்டிகள் நடக்கின்றன. கோவிலை நீக்கிவிட்டு ஸ்டேடியங்களில் நடத்துவதற்கு முயற்சிகள் திரைமறைவில் ஆரம்பித்துவிட்டன. என்றாலும் சர்ச்சிலும், மசூதியிலும் முதலில் இந்தப் போட்டிகளை நடத்தவேண்டும்.
மசூதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதால் அவர்களுடைய கறுப்பு உடையைப் பார்த்து காளைகள் மிரள வழியில்லை. பாதிரியின் வெள்ளை உடையைப் பார்த்தும் காளைகள் பயப்பட வாய்ப்பு இல்லை. எனவே இந்த ஆண்டே இந்த சமத்துவம் இப்படியாக அனைத்து தளங்களிலும் ஏற்பட்டு இந்த சல்லிக் கட்டு முழு தமிழர் விழாவாக ஆகியாகவேண்டும்.
*
இறுதியாக, ஒரு விஷயத்தை பேச்சளவில் ஆதரித்துவிட்டு செயல் அளவில் செய்யாமல் இருக்கும் ஒரே ஒரு போராட்டச் செயல்பாடு சல்லிக்கட்டுமட்டுமே. மாட்டுக்கறி சாப்பிடுவதை ஆதரிக்கும் ஒரு இடைநிலை ஜாதிப்போராளி காரஞ்சாரமாகச் செய்துதரச்சொல்லி அதை சாப்பிட்டுக் காட்டித் தன் பேராதரவை வெளிப்படுத்திவிடுவார். ஆனால் சல்லிக்கட்டு விஷயத்தில் மட்டும்தான் இந்த உலகத்தில் அதை ஆதரித்துப் பேசுபவர்களில் 80-90%க்கு மேல் அதைச் செயலில் செய்துகாட்டுவதே இல்லை. இது மிக மிகப் பெரிய இரட்டைவேடம்.
தமிழர்களின் பெருமிதம் மொத்தமாகக் குடிகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் இப்படி இரட்டை வேடம் போடுவது மிகவும் தவறு. எனவே, சல்லிக்கட்டை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் மொதல் வேலையாக இதைச் செய்து காட்டவேண்டும் என்று நாம் கோரிக்கை விடலாம். அல்லது, அவர்களுடைய வீட்டுக்குள்ளோ கூட்டங்கள் நடக்கும் மேடையிலோ தமிழ் களை மின்னும் காங்கேயக் காளைகள் சிலவற்றை அவிழ்த்துவிட நாம் முயற்சிகள் எடுக்கலாம்.
*
தமிழ் இளைஞர்கள் மதசார்பற்றவர்களாக வெகுதூரம் மாற்றப்பட்டு விட்டார்கள். ஆகவேதான் நெற்றிக்கு விபுதி அணிந்து கொள்ளும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது உண்மைதான்.1000 ஆண்டுகால அடிமைகளை திருத்த வேண்டும்தான். எப்படி? யார் ? எவ்வளவு காலத்தில் ? யாதும் அறியேன் பராபரமே.
சல்லிக்கட்டு என்ற வேதனை பற்றிய உண்மைகளை உயர்திரு மகாதேவன் அவர்கள் தோலுரித்து காட்டி உள்ளார். ரஜினிகாந் என்கின்ற மாயை பற்றியும் எழுதி உள்ளார் அருமையான கட்டுரைகள்.
tamilhindu.com must allow sharing of the articles. More people should get to know. Please do