தமிழ்ஹிந்து வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் B.R.மகாதேவன் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம் இந்துமதம்: நேற்று இன்று நாளை. கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது:
இந்துமதம் : பௌத்தம், சமணம், நாத்திகம் போன்ற பாரதிய ஆக்கபூர்வ எதிர்நிலைகள், கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள்.
இந்துத்துவம் = இந்துமதம் மைனஸ் சாதிக் கொடுமைகள் ப்ளஸ் நவீன சமூக சேவைகள் ப்ளஸ் அந்நியமத அடிப்படை வாதங்களுக்கு எதிரான தற்காப்பு வன்முறைகள் என்ற இந்த சமன்பாட்டின் விரிவான விளக்கம், அதன் அவசியம் பற்றிய மறைக்கப்படும் உண்மைகள்.
ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த(இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, அதன் சாதனைகள், மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.
ஜாதிக்கட்டமைப்புக்கு மாற்றாகச் சொல்லப்படும் இந்து தேசியம், தமிழ் தேசியம், மத மாற்றம், நகர்மயமாக்கம், வர்ணாஸ்ரமம் ஆகியவற்றின் நிறை குறைகள்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.
அச்சுப்புத்தகம் விலை: ரூ 200. இங்கு வாங்கலாம்
கிண்டில் புத்தகம் விலை: ரூ 105. இங்கு வாங்கலாம்
இப்புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி:
கோட்ஸே குற்றவாளியா..?
ஆர்.எஸ்.எஸ்.மீது சொல்லப்படும் இன்னொரு மிகப் பெரிய குற்றச்சாட்டு, காந்தியைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸால் வழிநடத்தப்பட்டவர் என்பதுதான். அது தொடர்பான வழக்கில் ஆர்.எஸ்.எஸ்.மீது எந்தக் குற்றமும் இல்லை என்று நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. அது மட்டுமல்ல… நேரு அரசாங்கமும் அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எல்லாமே ஆர்.எஸ்.எஸ்.மீது வெறுப்பு கொண்டவைதான். ஆனால், ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள்மீது பொய்ப் புகார் சுமத்திக்கூட ஒற்றை வழக்காவது பதியவைக்க முடியவில்லை. 1974-ல் அரசு தாக்கல் செய்த ஓர் அறிக்கையில் இந்து முஸ்லிம் கலவரம் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்திலுமே இஸ்லாமியர்கள்தான் கலவரத்தை ஆரம்பித்ததாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கோட்ஸே விஷயத்துக்கு வருவோம். அவர் காந்தியை ஏன் கொன்றார்? காந்தி, அன்பின் வார்த்தைகளைத் தந்திரமாகத் தேர்ந்தெடுத்துப் பேசினார். அதுவும் லட்சக்கணக்கில் இந்துக்கள் இஸ்லாமியர்களால் கொல்லப்படும் நேரத்தில் அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். பிரிவினைக் காலத்தில் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை உடனடியாகத் தரவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். அப்படிக் கொடுக்கப்படும் பணம் இந்துக்களைக் கொல்லும் இஸ்லாமிய வெறியர்களுக்குக் கொடுக்கப்படும் என்பதால் இந்தியா அதைத் தரக்கூடாது என்று கோட்ஸே சொன்னார்.
தேசத்தைத் துண்டாக்கிக்கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். அதோடு நின்றார்களா… பாகிஸ்தான் என்று தனி நாடு கிடைத்த உடனேயே அங்கு வசித்து வந்த இந்துக்களை ஒருவர்கூட விடாமல் அடித்துத் துரத்தியும் கொன்று குவித்தும் இருக்கிறார்கள். தனி நாடு கொடுத்ததற்கு நன்றி விசுவாசம் காட்டும் ஒரு இனம் என்றால் தமது புதிய நாட்டில் இருக்கும் சிறுபான்மைகளுக்கு மரியாதை அல்லவா செய்திருக்கவேண்டும். அல்லது திருப்பி அனுப்ப விரும்பினால் கௌரவமாக அல்லவா அனுப்பிவைத்திருக்கவேண்டும். எதற்காகக் கொன்று குவிக்கவேண்டும்? தனி நாடு தரமாட்டேனென்று இந்துக்கள் சொல்லியிருந்தால் ஆத்திரத்தில் தம் கைவசம் இருக்கும் இந்துக்களைக் கொன்றால் அதையாவது புரிந்துகொள்ளமுடியும். ஆனால், கேட்ட பகுதிகளில் 95%த்தை எந்தப் பேச்சும் பேசாமல் தூக்கிக் கொடுத்தாகிவிட்டது. இவ்வளவு செய்த பிறகும் ஏன் வன்முறையை முன்னெடுத்தார்கள்?
அது மட்டுமா இந்தியாவில் சுமார் 20க்கு மேற்பட்ட மாநிலங்களில் 85 சதவிகித இந்துக்களுக்கு மத்தியில் இருந்த 10 சதவிகித முஸ்லிம்களின் மேல் ஒரு சிறு கீறல் கூட இந்தியப் பிரிவினைக் காலத்தில் விழவில்லை. ஆனால், பாகிஸ்தானில் 90 சதவிகித முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்த சுமார் ஏழெட்டு சதவிகித இந்துக்கள் அனைவருமே வன்முறைக்கு ஆளானார்கள். பாகிஸ்தானுடனான எல்லையைப் பகிர்ந்துகொண்டிருந்த பஞ்சாப் மற்றும் மேற்கு (?) வங்காள மாநிலங்களில் மட்டுமே இந்துக்கள்-சீக்கியர்கள் வேதனையில் எதிர்வினை புரிந்தார்கள். எஞ்சிய 20க்கு மேற்பட்ட மாநில இந்துக்கள் காந்தி சொன்னார் என்பதற்காக மத நல்லிணக்கத்தைப் பின்பற்றவில்லை. அது அவர்களுடைய தர்மத்தின் அடிநாதமாக ஏற்கெனவே இருந்துவந்ததுதான். அஹிம்சையை அன்பை யாருக்கு போதித்திருக்கவேண்டும் காந்தி?
மகாபாரதத்தில் ‘தங்களுக்கு உரிமையுள்ள சாம்ராஜ்ஜியத்தைக் கொடு… அது முடியாதென்றால் ஐந்து ஊர்கள் கொடு… அதுவும் முடியாதென்றால் ஐந்து கிராமங்கள் கொடு’ என்று கெஞ்சியபிறகும் ஐந்து அடி மண் கூட தரமாட்டேன் என்று சொன்னதால் கிருஷ்ணரே வெகுண்டு போரை ஆரம்பித்திருக்கிறார். இந்துக்களின் நிலையும் கிட்டத்தட்ட அதேதானே. நாட்டைக் கொடுத்தாயிற்று… நாட்டு மக்களைக் காவும் கொடுத்தாயிற்று… பணத்தையும் தூக்கிக் கொடு என்று வெட்ட வெட்டத் தொடர்ந்து சமாதானப் புறக்களை மட்டுமே அனுப்பச் சொல்லிக்கொண்டிருந்தால் கோபம் வரத்தானே செய்யும்.
காந்தி அப்படியொன்றும் அஹிம்சையை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர் இல்லை. உலகப் போர் நடந்தபோது பிரிட்டிஷார் இந்தியர்களை ராணுவத்தில் சேரச் சொன்னபோது காந்தி அதற்கு ஆதரவு தந்தார். ஓர் அஹிம்சைவாதி போர் வேண்டாம் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது போர்க்களத்தில் மருத்துவ சிகிச்சைப் படையில்தானே சேரச் சொன்னார். அதையே இப்போதும் செய்திருக்கலாமே.
ஆயுதம் ஏந்திப் போர்க்களத்துக்கு வரும் ஒருவனை ஆயுதம் கொண்டு தாக்கி அழிப்பது தவறில்லை என்பது அவர் கருத்தாக இருந்தால், அப்பாவிகளைக் கொல்லும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொல்வதும் தவறில்லை என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். அப்பாவி இஸ்லாமியர்களைக் கொல்லாதீர்கள்… ஆனால், அப்பாவி இந்துக்களைக் கொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கொல்லுங்கள் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். அவருடைய மனிதாபிமானமும் நடுநிலையும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், எளிய இஸ்லாமியர்களைக் கொல்லும் இந்து அடிப்படைவாதியையும் கொல்லுங்கள் என்று சேர்த்துத்தானே சொல்லியிருக்கவேண்டும்.
தேச நலனைத் தன் கடமையாகக் கொண்ட ஓர் அரசுக்கு போர்க்காலகட்டத்தில் வன்முறையைக் கைக்கொள்ள நேர்வது சரியே என்றால், மதத்தைக் காக்கும் தரப்புக்கும் வன்முறையைக் கைக்கொள்ள அதற்கான நியாயமும் இருக்கும் அல்லவா. காந்தி பிரிட்டிஷ் அரசின் போரை ஆதரித்தார். மதம் சார்ந்த அதுவும் பாதிக்கப்படும் மதம் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்துவதைத் தடுக்க முயன்றார். இது மாடுகள் தனது கொம்பைப் பயன்படுத்தி புலியை எதிர்ப்பது தவறு என்பதுபோன்ற வாதம்.
பகத் சிங்கை அரசு தூக்கிலிட முடிவெடுத்தபோது பிரிட்டிஷ் அரசிடம் அதை நிறுத்தும்படிக் கேட்கவில்லை. இன்று மனித உரிமை பற்றிப் பேசும் கடைநிலைப் போராளிக்கு இருக்கும் தார்மிக, அற உணர்ச்சிகூட அவரிடம் அன்று இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் அரசு சார்பிலான வன்முறைகளை அவர் தொடர்ந்து நியாயப்படுத்தவே செய்திருக்கிறார். அவருடைய அஹிம்சை ஏன் அங்கெல்லாம் போதிக்கப்படவில்லை.
பாகிஸ்தானிய பதான்களும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தியா மீது போர்தான் தொடுத்திருந்தார்கள். இந்தியா அவர்களை எதிர்த்துப் போராடுவதுதான் நியாயம். காந்தி முழுக்க முழுக்க இந்திய/இந்து தரப்பை விட்டுக்கொடுத்துப் போகும்படியே சொல்லிக் கொண்டிருந்தார். இஸ்லாமியர்கள் செய்த வன்முறைகளை மிதமாகவே கண்டித்தார். உண்மையில் அவர் அவருடைய அஹிம்சைக் கோட்பாடுகளுக்கு விசுவாசமாக நடந்துகொள்பவராயிருந்தால் இந்துக்களை விமர்சித்தது போல் 100 மடங்கு இஸ்லாமியர்களை விமர்சித்திருக்கவேண்டும். அதை அவர் ஒருபோதும் செய்யவில்லை.
இந்த விஷயம் என்றில்லை. காந்தி ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமியர் களுக்குச் சாதகமாகவே நிறைய விஷயங்கள் பேசி வந்திருக்கிறார். எதிர் தரப்பில் இருந்து எந்தப் பெரிய நன்றியுணர்வும் வெளிப்படுத்தப் பட்டிருக்காத நிலையிலும் அவர் தொடர்ந்து இஸ்லாமிய நலனுக்காகவே பாடுபட்டார்.
நவம்பர் 1919ல், காந்தி தம் அகில இந்திய கிலாஃபத் பரிஷத் தலைமை உரையில், தம்முடைய நிபந்தனையற்ற முழு ஆதரவையும் அவர்களுக்கு அளித்தார். உண்மையில் ஒட்டோமான் பேரரசு, மதவாதிகளிடம் இருந்து நவீன தேசியவாதிகள் வசம் வரத் தொடங்கி இருந்தது. காந்தியோ இஸ்லாமிய மதத் தலைமையின் ஆட்சியே அங்கு நீடிக்கவேண்டும் என்று விரும்பினார். நவீன அரசுதான் பெண்களுக்கான கல்வி, சிறுபான்மைக்கு மத வழிபாட்டுச் சுதந்தரம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நவீன மதச்சார்பற்ற தேசத்தை உருவாக்க முன்வந்திருந்தது. காந்தியோ அவர்களை ஓரங்கட்டிவிட்டு இஸ்லாமிய மத அதிகாரம் ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்று வக்காலத்து வாங்கினார்.
அவருக்கு தேச நிர்வாகத்தில் மதம் ஆற்றும் பங்களிப்பு முக்கியம் என்ற எண்ணம் இருந்தால் இந்தியாவிலும் அதேபோல் பெரும்பான்மையான இந்து மதத் தலைமையின் கீழ்தான் இந்தியா வரவேண்டும் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். ஆனால், அவரோ பிற்போக்கான இஸ்லாமிய மத அதிகாரத்தை ஆதரித்தார். ஜாதிக்கொடுமையைக் கடுமையாக எதிர்த்த இந்துத்துவத்தை எதிர்த்தார். கிலாஃபத் இயக்கத்துக்கு காந்தி தந்த ஆதரவுதான் முதல் கோணல் முற்றும் கோணல் என்றாகி பிரிவினையில் சென்று முடிந்து இன்றும் இந்தியாவை வாட்டிவருகிறது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முஸ்லிம்களின் ஆதரவைத் திரட்ட மகாத்மா காந்தியும் காங்கிரஸும் கிலாபத் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், ‘இவ்வியக்கம், தேசியவாதத்துக்கு எதிரானது. இஸ்லாமியர்களை மைய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிடும்’ என்று அப்போது குற்றம்சாட்டியது யார் தெரியுமா? முஸ்லீம் லீகின் ஜின்னா!
கிலாபத் இயக்கத்தின் விளைவாக கேரளாவின் மலபார் பகுதியில் ஆரம்பித்த மாப்ளா கலகத்தில் கொடூர வன்முறைகள் நிகழ்ந்தன. உண்மையில் அது கிலாஃபத் இயக்கத்தை அடக்க முயன்ற பிரிட்டிஷாருக்கு எதிராகத்தான் தொடங்கியது. ஆனால், மெள்ள அப்படியே கைக்குக் கிடைத்த இந்துக்களையெல்லாம் கொல்லும் இயக்கமாக மாறியது. இந்து அடிப்படைவாதியின் கைகளில் அதிகாரம் வந்தால் என்ன ஆகும் என்பதற்கு குஜராத்தின் பத்தாண்டு கால மோடி ஆட்சியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கைகளில் அதிகாரம் குவிந்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரள மாப்ளா கலகமும் நல்ல உதாரணம். அங்கு ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் மதம் மாற்றப்பட்டனர். இதுகுறித்து காந்தி என்ன சொன்னார் தெரியுமா… ‘கடவுள் நம்பிக்கை கொண்ட வீர மாப்ளாக்கள் தங்கள் மதக்கடமை என்று தாங்கள் நம்பியதன் அடிப்படையில் செயல்பட்டிருக்கிறார்கள்’ என்றார்.
எல்லாக் கொடுங்கோலனுக்கும் அவன் தரப்பு நியாயம் என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை தேசத்தின் தந்தை, கருணா மூர்த்தி, அஹிம்சையின் முழுக் குத்தகைதாரர் ஏன் சொல்கிறார்? ஏனென்றால், கொல்லப்பட்டது இந்துக்கள் மட்டுமே. முஸ்லிம்களும் கொல்லப்பட்டிருந்தால்தானே இந்துக்களிடம் வந்து அன்பைப் போதிக்கமுடியும். இஸ்லாமியர்களிடம் அன்பைப் போதிக்க முடியாதே. எனவே, ஓநாய் தன்னுடைய சுபாவத்தின் அடிப்படையிலேயே மென் விலங்குகளைக் கொன்று தின்கிறது. அதில் எந்தத் தவறும் இல்லை என்ற பேருண்மையைச் சொன்னார்.
முஸ்லிம்கள் மனத்தைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக, காந்தி பசுவதைத் தடுப்புத் தீர்மானத்தை வற்புறுத்த மறுத்துவிட்டார். சுவாமி சிரத்தானந்தாவைக் கொன்றவர்களைப் புகழ்ந்தார். பசுக்கள் கொல்லப்படும்போதோ இந்துக்களோ சுவாமிஜிகளோ கொல்லப்படும்போதோ அவருடைய அஹிம்சை அவற்றை எதிர்க்கவில்லை. ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தைவிட, ‘அல்லா ஹு அக்பர்’ மேன்மையானது என்றார்.
இந்தியாவை ஆஃப்கானிஸ்தானின் அமீர் தாக்கினால், இந்துஸ்தானத்தை அவருக்குத் தந்துவிடுவதாக எழுதினார். மன்னர் இந்துவாக இருந்தபோதிலும் காஷ்மீர இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவுடன் சேரவேண்டும் என்று சொன்னபோதிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியப் பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்துக்காக ஸ்ரீநகரையும் லடாக்கையும் கூட முஸ்லிம்கள் வசமே ஒப்படைத்துவிடவேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு ஆதரவாகப் பேசினார்.
ஆனால், ஹைதராபாத்தில் மன்னர் மட்டுமே இஸ்லாமியர். மக்கள் அனைவரும் இந்துக்கள். மேலும் அது இந்து மாநிலங்களுக்குள் பொதிந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் சேர்வதுதான் சரி என்று இந்துக்கள் கோரியபோது ஹைதராபாத்தின் மன்னர் தனி இஸ்லாமிய நாடாக இருக்க விரும்புகிறார். எனவே, அவர் பாதுஷாவாகத் தொடர்ந்து இருந்துகொள்ளட்டும். ஹைதராபாத் தனி நாடாக இருக்கட்டும் என்று சொன்னார்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கண்டிக்காமல் இருப்பதுதான் இஸ்லாமிய நேசம் என்று நடந்துகொண்டார். முஸ்லிம்களை அரவணைத்துச் செல்கிறேனென்ற பேரில், காங்கிரஸுக்கு உள்ளேயே இருக்கும் எண்ணற்ற குழுக்களை காந்தி ஓரங்கட்டினார். ஏராளமான இந்துகள் காங்கிரஸுக்குள் தொடர முடியாமல் தவித்தார்கள். அதன் உச்சமே காந்தியின் படுகொலை. காந்தி தனக்கான சிதையின் விறகுகளைத் தானே ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டார். கோட்ஸே கடைசியில் கற்பூரத்தைக் கொளுத்திப்போட மட்டுமே செய்தார்.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், கிராம சுயராஜ்ஜியம், கைத் தொழில் வளர்ச்சி, ஜாதி ஒடுக்குமுறை நீங்கலான இந்துப் பாரம்பரியத்தின் பெருமிதம், எளிமை, தியாகம், சுய ஒடுக்கல், பிரம்மச்சரியம், பசு பாதுகாப்பு, தெய்வ நம்பிக்கை என காந்தி முன்வைத்த அனைத்து விழுமியங்களையும் தங்களது வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள்தான் இந்துத்துவர்கள்.
காந்தியின் சீடர் என்று சொல்லப்படும் நேருவும், இந்திய அரசியல் சாசனம் எழுதிய அம்பேத்கரும் காந்தியின் அந்த விழுமியங்கள் அனைத்தையும் நிராகரிப்பவர்கள். நவீன இந்தியா நேரு மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு ஏற்பவே வளர முயற்சி செய்து வருகிறது. அதாவது காந்தியத்தை மறுதலித்தபடி அது நுகர்வு கலாசாரம் மற்றும் தனி நபர் சுய நலம் சார்ந்த வாழ்க்கையையே முன்னெடுக்கிறது. அந்தவகையில் காந்தியின் பூத உடலை கோட்ஸே கொன்றார் என்றால் காந்தியின் கொள்கைகளை அம்பேத்கரும் நேருவும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள்.
தனது முதுவயது பிரம்மச்சரிய சோதனைகள் மூலம் கிடைத்திருக்கக்கூடிய சக்தியைக் கொண்டு இன்னும் பல புதிய கொள்கைகளை காந்தி கண்டு சொல்லியிருக்கக்கூடும். கோட்சே அதை இல்லாமலாக்கிவிட்டார் என்பது தவறுதான். ஆனால், காந்தி அத்தனை காலம் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையை அடியோடு அழித்தவர்கள் நேருவும் அம்பேத்கரும்தான்.
ஆனால், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிர்வினையாக காந்தியை கோட்சே கொல்லாமல் இருந்திருந்தால் இந்திய அரசு இப்படி மேற்கத்திய நகலாக நேருவால் ஆக்கப்பட்டதை எதிர்த்திருக்கக்கூடும். அல்லது எளிய இஸ்லாமியர் மீதான நேசம் என்பதற்குப் பதிலாக இஸ்லாமிய அடிப்படவாதத்துக்கு ஆதரவு என்று செயல்படும் அபாய அரசியலின் பிதாமகரான காந்தியை ஓரங்கட்டிய கோட்ஸே மேற்கத்திய அடிவருடிகளிடமிருந்தும் தேசத்தைக் காப்பாற்றி படேல், அல்லது வினோபாவே அல்லது பாபு ஜெகஜீவன்ராம், ஜே.சி.குமரப்பா போன்ற உண்மையான மகாத்மாக்களிடம் தேசத்தைக் கொண்டு சேர்த்திருக்கவேண்டும்.
அப்படியாக, காந்தியை கோட்ஸே கொன்றிருக்கவே கூடாது. அல்லது காந்தியைக் கொன்றதோடு நிறுத்தியிருக்கக்கூடாது. அந்தவகையில் கோட்ஸே நிச்சயம் குற்றவாளிதான்.
இந்து அடிப்படைவாதியின் கைகளில் அதிகாரம் வந்தால் என்ன ஆகும் என்பதற்கு குஜராத்தின் பத்தாண்டு கால மோடி ஆட்சியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கைகளில் அதிகாரம் குவிந்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரள மாப்ளா கலகமும் நல்ல உதாரணம்.
தவறான கருத்து. திரு.மோடி அவர்கள் குறித்த விமா்சனம் நியாயமானதல்ல.
இந்து அடிப்படைவாதியின் கைகளில் அதிகாரம் வந்தால் என்ன ஆகும் என்பதற்கு குஜராத்தின் பத்தாண்டு கால மோடி ஆட்சியும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கைகளில் அதிகாரம் குவிந்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரள மாப்ளா கலகமும் நல்ல உதாரணம்.
தவறான கருத்து. திரு.மோடி அவர்கள் குறித்த விமா்சனம் நியாயமானதல்ல.