இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.
தொடர்ச்சி…
போர்ச்சுக்கல்லில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் கதியைக் குறித்து விளக்கும் ஓலிவரா மார்ட்டின்ஸ் மேலும் சொல்கிறார்,
“குற்றம் சாட்டப்பட்ட மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் சிறையில் இத்தனை ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே பலரும் மாதக்கணக்காக, வருடக்கணக்காக, ஏன் வாழ்க்கை முழுவதும் தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என அறியாமலேயே சிறையில் வாடினார்கள். இன்னும் பலர் தந்திரமாக விரிக்கப்பட்ட வலைகளில் வீழ்ந்து தண்டனைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது பரிதாபம் கொள்வது போல நடித்த சிறைக்காவலர்கள் அவர்களிடமிருந்து சொத்துக்கள், மத எண்ணங்கள் போன்ற ரகசியங்களை அறிந்து பின்னர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.
இந்த வகையில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் ஒரு பெரும் ப்ளேக் நோயைப் போலப் பரவி யூதர்களையும், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையும் துன்பத்திலும், துயரத்திலும் தள்ளியது. பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளும், குற்றமற்றவர்களை ஏமாற்றி செய்யாததொரு குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து, உண்மையைச் சொன்னால் அவர்களை விடுதலை செய்வதாக ஏமாற்றி….இன்னும் பலப்பல வழிகளில் அந்த பாவப்பட்ட யூதர்களும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்.
ஒவ்வொரு முறை சிறைக் கதவுகள் திறக்கப்படுகையிலும் சிறைக் கைதிகள் அச்சத்தால் நடுங்கினார்கள். அவர்களில் சிலரைப் பிடிக்கும் காவல்காரர்கள் அவர்களது கயிற்றால் அவர்களது கைகளை பின்புறம் கட்டிப் பின்னர் சித்திரவதைக் கூடங்களுக்கு இழுத்துச் சென்றார்கள். பாதாள அறைகளை நோக்கி நடத்திச் செல்லப்படுகையில் அவர்கள் இட்ட கூக்குரல்கள் குரல்வளையை நசுக்கி அடக்கப்பட்டன. மனம் பேதலித்த அவர்களில் பலர் உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் உளறிக்கிடந்தனர்.
இன்னும் பல அப்பாவிகளோ தங்களைத் தாங்களே பெரும் பிசாசுகளாகக் கற்பனை செய்துகொண்டு தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் சரியானவைதான் என்கிற முடிவுக்கு வந்தனர். உதாரணமாக தாங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளில் பிசாசுகளைக் கண்டதாகவும், இன்னும் சிலர் அங்கிருந்த சிலுவையைத் தூக்கி சுத்தியலை வைத்து அடித்து உடைத்ததாகவும் தாங்களாகவே சொல்லிக் கொண்டு திரிந்தனர்.
பாதாள அறைகளின் அதிக வெளிச்சமில்லாத சித்திரவதைக் கூடங்களின் மேசைக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் இன்குசிஷன் விசாரணை நடத்தும் கிறிஸ்தவ சாமியார் மேற்படி கதைகளை உண்மையென்று எடுத்துக் கொண்டு அவர்களைத் சித்திரவதை செய்து கொன்றார்கள் (வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த சித்திரவதைகளைக் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்). இந்தச் சித்திரவதைகளின் போது அந்தப் பரிதாபப்பட்டவன் அல்லது பரிதாபப்பட்டவள் மரணமடைவது இயல்பு. அவ்வாறு மரணமடைந்தவர்கள் அரண்மனைத் தோட்டத்தின் மூலையில் அடையாளம் தெரியாத ஓரிடத்தில் புதைத்தார்கள்.
சதையையெல்லாம் மண் தின்றபிறகு கிடைக்கும் எலும்புகளை வெளியில் எடுத்துக் கவனமாகச் சேகரித்து வைத்தார்கள். பின்னர் அந்த எலும்புகள் அடுத்த auto-de-fe என்கிற சடங்கின்போது எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.”
போர்ச்சுக்கல்லின் சுதந்திரச் சிந்தனையுடைய புகழ்பெற்ற அமைச்சரான மார்க்குவெஸ்-டி-பொம்பால் 1774 வருடம் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளின்படி சிறிதும் மனிதத்தன்மையற்ற, குரூரமான, மதவெறி பிடித்த இன்குசிஷன் விசாரணைகளைச் சட்ட விரோதமாக அறிவித்தார். எனினும் 1820-ஆம் ஆண்டே அது முழுமையாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றானது.
போர்ச்சுக்கல்லில் 1782-ஆம் வருடம் வரையில் ஏறக்குறய 28,000 பேர்கள் பல்வேறு தண்டனைகளுக்கு ஆளானதாகவும், 1454 பேர்கள் கட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் உண்மையில் எத்தனைபேர்கள் இந்தக் கொடுமையால் மரித்தார்கள் அல்லது சித்தரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்கிற உண்மை இன்றுவரை வெளிவரவில்லை.
குறிப்பு : சென்னையில் பல முதியவர்களின் எலும்புக்கூடுகளில் சர்ச்சுகளில் பிடிபட்ட செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம். அனேகமாக பல முதியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே எனது அனுமானம். அவர்கள் இறந்து, சதைகள் அழுகிய பிறகு அவர்களின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு auto-de-fe திருவிழா நடத்தப்பட்டு அந்த எலும்புகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம்.
இனி இந்தியாவில் நிகழ்ந்த போர்ச்சுக்கீசிய இன்குசிஷன் பயங்கரங்களைக் குறித்துக் காண்போம்.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய குடியேற்றங்கள் ஆரம்பமானபின்னர் போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த பல யூதர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறி அங்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கிடையே போர்ச்சுக்கல்லில் கிறிஸ்தவ மதவெறி தூண்டப்பட்டு இன்குசிஷன் விசாரணைகள் துவங்கிப் பெரும்பாலான யூதர்கள் கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதிலிருந்து தப்பவும், தங்களின் பூர்வ மதமான யூத மதத்தைக் காப்பற்றவும் பல யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறிக் கொண்டிருந்தார்கள்.
யூதர்கள் பழங்காலம் தொட்டே இந்தியாவைத் தங்களது தாயகமாகக் கொண்டிருந்தார்கள். கொச்சி அரசரின் படைகளில் பல யூதர்கள் சிப்பாய்களாகப் பணிபுரிந்தார்கள். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கொச்சி அரசரை யூதர்கள் தங்களின் அரசனாகக் கருதினார்கள் என்பது அன்று வாழ்ந்த் பாதிரி லூஸன்கா என்பவர் எழுதி வைத்திருக்கிறார். இருப்பினும் அவர்கள் தங்களின் அடைக்கல நாடான இந்தியாவிலும் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்களால் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்குசிஷன் விசாரணகள் போர்ச்சுக்கல்லில் 1541-ஆம் ஆண்டு ஆரம்பமாயின. பின்னர் அதே இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவின் போர்ச்சுக்கீசியப் பகுதிகளில் 1560-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இருப்பினும் கேஸ்பர் கொரெரியா என்பவர் எழுதிய Lendas de India என்கிற புத்தகத்தில் இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவில் 1548-ஆம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். அதனைக் குறித்து அவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்,
“1548-ஆம் வருடம் இந்திய போர்ச்சுக்கீசிய கோவா பகுதியில் வாழ்ந்த புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஜெரானிமோ டயஸ் என்பவன் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் பரமண்டலத்திலிருக்கும் பிதாவையும் அவனது மகனான ஏசுவையும் குறித்து தவறாக ஏதோ சொல்லியதாகத் தெரிகிறது. அதனைக் கேள்விப்படும் கோவா பிஷப் அந்த டயஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சாட்சிகளின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடுகிறார். அதன்படி கைது செய்யப்படும் டயஸ் பிடிவாதமாகத் தனது யூத மத ஆச்சாரங்களைக் குறித்து உயர்வாகப் பேசியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கோவாவின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் ஆர்ச் பிஷப்பின் வேண்டுகோளுக்கு இணங்க அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.
அதன்படி, இதன்படி பரமண்டலத்தில் இருக்கும் பிதாவினையும், அவனது மகனான ஏசு கிறிஸ்துவையும் பழித்து, கிறிஸ்தவ மத ஆச்சாரங்களை இழித்துக் கூறிய புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட யூதனான டயஸ் ஒரு கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை நீ உன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, கிறிஸ்தவனாக மரிக்க ஆசைப்பட்டாயானால் முதலில் உனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு அதன் பின்னர் தீ வைத்து எரிக்கப்படுவாய். அவ்வாறு நீ கிறிஸ்தவன் அல்ல என்று கூறினால் உன்னை உயிருடன் கம்பத்தில் கட்டி எரிப்போம் எனவும் அவனுக்குக் கூறுகிறார்கள்.
பின்னர் மதகுருமார்கள் அந்த டயஸை நோக்கிக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்கள். டயஸ் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிவித்துக் கொள்கிறான். அதன்படி அவனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான். பின்னர் அவனது உடல் தீவைத்துக் கொளுத்தப்படுகிறது. “
அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் கூடிய கூட்டத்தில் பிஷப் தங்களின் தாய் நாடான போர்ச்சுக்கல்லில் துவங்கியிருக்கும் புனித இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து அங்கு வந்திருக்கும் கிறிஸ்தவர்களிடையே பேசுகிறார். கிறிஸ்தவ மதத்தைக் குறித்து தவறாகப் பேசுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் குறித்த தகவல்களைத் தனக்குத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கிறார் பிஷப். எனினும் போர்ச்சுக்கல் அரசரின் நேரடி உத்தரவு தங்களுக்கு வந்து சேராதவரையில் அந்த மத நிந்தனையாளர்களுக்குத் தண்டனை வழங்குவதனை நிறுத்தி வைக்கப் போவதாகவும் அறிவிக்கிறார்.
இந்தியாவில் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டும் என்கிற முதல் வேண்டுகோள் “புனித” ஃப்ரான்ஸிஸ் சேவியர் என்பவனால் முன்வைக்கப்படுகிறது. அம்பொய்னா என்னும் கோவா பகுதியிலிருந்து போர்ச்சுக்கல் அரசனான மூன்றாம் ஜெகோவோவுக்கு மே 16. 1545-ஆம் வருடம் சேவியர் எழுதிய கடிதம் இவ்வாறு கூறுகிறது,
“இந்தியாவிலும் உடனடியாக இரண்டாவது இன்குசிஷன் விசாரணைகளைத் துவங்க வேண்டும் என மேதகு அரசரை வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் இங்கும் தங்களின் மத ஆச்சாரங்களைப் பின்பற்றும் யூதர்களும், முஸ்லிம்களும் கடவுளைக் குறித்த எந்த அச்சமும், அவமானமும் இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த கோட்டையின் பெரும்பகுதிகளில் அவர்களைப் போன்றவர்கள் நிரம்பி இருப்பதால் இங்கும் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்காகப் பல கிறிஸ்தவ சாமியார்களும் தேவைப்படுகிறார்கள். உங்களின் உண்மையுள்ள குடிமக்கள் வாழும் கோவாவிற்கு இந்த அவசியமானதொரு உத்தரவை மேதகு அரசர் வழங்கிக் கவுரவிக்க வேண்டும்”
[தொடரும்]
இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.