கோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!

ஊதியூர் மலைக் கோயில்

நமது சிறப்பு நிருபர் திரு. குண்டடம் பெரியசாமி, களத்தில் இருந்து அளித்துள்ள செய்தி இது…


காங்கயம் அருகிலுள்ள ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் பால் நிறுவனமான ஹட்சனுக்கு எதிராக, அரசுத் துறையில் தனியொருவராகப் போராடுகிறார் அறநிலையத் துறை உதவி ஆணையரான எம்.கண்ணதாசன். இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்து முன்னணியும் களம் இறங்கி உள்ளதால் இப்போதைக்கு கோயில் நிலத்தில் நடைபெற்றுவந்த கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டம், காங்கயத்திலிருந்து தாராபுரம் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்த ஊதியூர் மலை. பொன்னூதி மலை என்று அழைக்கப்படும் இந்த மலை 13 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. கொங்கணச் சித்தர் இந்த மலையில் உள்ள குகையில் 800 ஆண்டுகள் தவம் செய்ததாகவும், பல்வேறு சித்துக்களை இந்த மலையில் கொங்கணர் நிகழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், உச்சிப்பிள்ளையார் திருக்கோயில், கொங்கண சித்தர் திருக்கோயில், கொங்கணர் தவம் செய்த குகை, கொங்கணரின் சீடரான செட்டித் தம்பிரான் சந்நிதி, மலைக்கன்னிமார் கோயில், ஆஞ்சனேயர் கோயில், மலையடிவாரத்தில் கைலாயநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. இந்த மலையில் ஏராளமான மூலிகைகள் காணப்படுகின்றன. அத்துடன் மான், குரங்கு, நரி, கீரி, உடும்பு, மரநாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் உள்ளன. தவிர மலையின் பல்வேறு இடங்களில் சந்தன மரங்களும் உள்ளன.

இவ்வளவு சிறப்பும் பெருமையும் வாய்ந்த இந்த மலையில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்கு ஊதியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கர் இறையிலி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை பெரும்பாலும் விவசாயிகள் குத்தகைக்கு உழுது வருகின்றனர்.

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புக் கட்டுமானம்

இந்த நிலையில் ஊதியூர் மலையை ஒட்டி குண்டடம் சாலையில், 101 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்‌டு ஹட்சன் அக்ரோ பிராடக்ட் லிமிடெட் என்ற தனியார் பால் தயாரிப்பு நிறுவனம் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அந்த இடம் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

2017 நவம்பர் மாதம்,  கட்‌டுமானப் பணிகள் நடைபெறும் நிலம் அனைத்தும் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறி, இந்‌து சமய அறநிலையத் துறையின் சிவன்மலை பகுதி உதவி ஆணையர் எம்.கண்ணதாசன் பணைகளைத் தடுத்து நிறுத்தினார். மேலும் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ‘கோயிலுக்குச் சொந்தமான நிலம்’ என அறிவிப்புப் பலகையையும் வைத்தார்.

அறநிலையத் துறை அதிகாரி
எம்.கண்ணதாசன்

அடுத்த நாளே அந்த அறிவிப்புப் பலகையை உடைத்து எறிந்துவிட்டு கட்டுமானப் பணிகளை தனியார் நிறுவனத்தினர் தொடங்கினர். இதனை அறிந்த  இந்துமுன்னணி அமைப்பினர், கோயில் நிலத்தை மீட்க வேண்டி போராட்டத்தில் குதித்தனர்.

அதைத் தொடர்ந்து மேற்படிக் கட்டுமானப் பணிகள் காங்கயம் வட்டாட்சியர்  உத்தரவுப்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டன. அதே நேரம் அறநிலையத் துறைப் பணியாளர் ஒருவரும் காவலுக்கு அங்கு அமர்த்தப்பட்டார். மேலும், பால் நிறுவன காவலாளிகளும் அங்கு காவலுக்கு இருந்து வந்தனர்.

இந்நிலையில், அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசனின் செயல்பாடுகளுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனுவை (எண்: 1502/2017) ஹட்சன் நிறுவனம் தாக்கல் செய்தது. தங்கள் ஆலை கட்டுமானப் பகுதிக்குள் அரநிலையத் துறை அதிகாரிகள் நுழையத் தடை விதிக்குமாறு அந்நிறுவனம் முறையிட்டது.

ஆனால், ஹட்சன் நிறுவனம் அளித்த ஆவணங்களைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், ஆலை அமைய உள்ல நிலம் தேவதான நிலமாக இருப்பதைக் குறிப்பிட்டு, அதனை கிரையம் செய்ய பத்திரப் பதிவுத் துறை எவ்வாறு அனுமதி அளித்தது என்றும் வருவாய்த் துறையினர் இதனை எவ்வாறு அனுமதித்தனர் என்றும் கேள்வி எழுப்பியது. இறுதியாக, மேலும், ஊதியூர் கோயில் நில விவகாரத்தில் தாராபுரம் சார் ஆட்சியர் ஹட்சன் ஆலைக்கு ஆதரவாக அளித்திருந்த உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்தது. இறுதியாக, ஹட்சன் நிறுவனத்தின் ‘ரிட்’ மனுவை தள்ளுபடி செய்தார் உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன். இத்தீர்ப்பு 2018 ஜூன் 20இல் வழங்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவு

அதன்பிறகு சில மாதங்கள் அமைதியாக இருந்த தனியார் நிறுவனம்,  கடந்த 2018 டிசம்பர் 10ஆம் தேதி திடீரென  கட்டுமானப் பணிகளை மீண்டும் காவல் துறையினரின் பாதுகாப்புடன் தொடங்கியது. இரவு பகலாக பல நூறு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். பால் நிறுவன வாயில் முன்பு ஏராளமான போலீசார்  குவிக்கப்பட்டனர்.

உடனே அறநிலையத் துறை உதவி ஆணையர் எம்.கண்ணதாசன், நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளைச் செய்வதாக  காவல் துறையில் புகார் கூறினார்.  அப்போது, வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் ஆக்கிரமிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று மதியம் அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், கட்டடப் பணிகளை நிறுத்தக் கோரி கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தை முற்றுகையிட்டனர். 

இந்து முன்னணியினர் போராட்டம்

கோயில் நிலத்தில் வேலை செய்ய எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர். உடனே காங்கயம் வட்டாட்சியர்  மகேஸ்வரன் அங்கு வந்து இந்து முன்னணியினரிடம் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தையின்போது,  2018 பிப்ரவரி மாதம் தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு அளித்த உத்தரவைக் கொண்டு பணிகள் துவக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் சார் ஆட்சியரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதை காடேஸ்வரா சுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார். அதையடுத்து கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு வட்டாட்சியர்  மீண்டும் உத்தரவிட்டார். 

பால் பண்ணைப் பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டிருந்தாலும், மீண்டும் பணிகளைத் தொடங்கி முடிக்க அந்த நிறுவனம் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு வருகிறது. அப்பகுதியில் இருக்கும் முக்கிய பிரமுகர்களிடம் பேசி அவர்களைக் கொண்டு அப்பகுதி மக்களைப் போராடத் தூண்டி வருவதாகவும் கூறப்படுகிறது.  

ஊதியூர் மலைப் பகுதியில் பெருமளவு நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், இந்த விவகாரத்தில் பால் பண்ணை நிர்வாகத்துக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். தவிர, தனியார் பால் நிறுவனத்துக்கு ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரது மகன் ஆதரவளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி7ஆம் தேதியன்று அப்பகுதியைச் சேர்ந்த மக்களை வேன்களில் ஏற்றி தாராபுரம் துணை ஆட்சியரிடம் அழைத்துச் சென்ற மேற்கண்ட தனியார் நிறுவனம், தங்கள் பகுதியில் பால் பண்ணை நிறுவனம் துவங்கினால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மனு கொடுக்க வைத்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டிய சில முக்கியப் பிரமுகர்களே பல நூறு ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், ஹட்சன் நிறுவன கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு நிலம் மீட்கப்பட்டால் தாங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலமும் பறிபோய்விடும் என அஞ்சியே போராட்டத்தைத் தூண்டுவதாகவும் அப்பகுதியில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

எது எப்படி இருப்பினும், தற்போதுள்ள இந்து சமய அறநிலையத் துறையின்  சிவன்மலை உதவி ஆணையர் கண்ணதாசன் மட்டும் இந்த விஷயத்தில் கோயில் நிலத்தை மீட்க உறுதியாக நில்லாமல் இருந்திருந்தால் இந்த பிரச்னையே வெளிவந்திருக்காது என்பது உண்மை.

அறநிலையத் துறையில் இவரைப் போன்ற அதிகாரிகள் சிலர் இருப்பதால்தான் இதுபோன்ற ஆக்கிரமிப்பு நிலங்கள் சிறிதளவையாவது மீட்க முடிகிறது என மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். 

கோயில் நிலத்தை மீட்கப் போராடும் இந்து முன்னணியும் ஊதியூரில் மோசடியாக இறையிலி நிலம் களவு போவதைத் தடுத்திருக்கிறது. அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், “கோயில் நிலங்களில் விவசாயம் சேய்யும் ஏழை மக்களை இந்து முன்னணி எதிர்க்கவில்லை. ஆனால், கோயில் நிலத்தை மோசடியான முறையில் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்து ஏப்பமிடத் துடிக்கும் தனியார் நிறுவனத்தையே இந்து முன்னணி எதிர்க்கிறது. இந்த விவகாரத்தில், சுயநலத்துடன் பின்னணியில் இருந்து தூண்டிவிடும் உள்ளூர்ப் பிரமுகர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காக்கப் போராடும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு இந்து முன்னணி துணையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி மீண்டும், கோவை கோட்ட அளவிலான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி காங்கயத்தில் நடத்தி இருக்கிறது. இதில் சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.

தனியார் நிறுவனத்தின் செல்வாக்காலும், அரசியல் பின்புலத்தாலும் அதன் முறைகேட்டை பல அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாத போதும், அறநிலையத் துறையின் உதவி ஆணையராகப் பணியாற்றும் கண்ணதாசன் என்ற தனியொரு அதிகாரியால் கோயில் நிலம் இப்போதைக்கு மீட்கப்பட்டிருக்கிறது. அவரது கரத்தை வலுப்படுத்துவது அரசு மற்றும் மக்களின் கடமை.

2 Replies to “கோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!”

  1. இந்நிகழ்வின் வியப்பு என்னவென்றால் இந்து அறநிலையத்துறை அதிகாரி கோயில் நிலத்தை மீட்க பெரிய பணக்கார கம்பெனிக்கு எதிராக போராடுகிறார். அறநிலையத்துறை மொத்தமாக எல்லா அதிகாரிகளும் இந்துமதத்துக்கு எதிராக வேலை செய்கிறார்கள் என்றுதான் இந்து இயக்கஙகளும் பி ஜே பி தலைவர்க்ளும் சொல்லிவர, இங்கே நிலைமை தலைகீழ். போகட்டும் நிகழ்வுக்கு வருவோம்.

    ஹட்சன் பின்புலத்தில் துணை வெறும் பணமட்டுமல்ல ப்ரோ. ஜாதி. கஷ்டம்தான்.

  2. போடப்பட்டிருக்கும் ஸ்கிரீன் ஷாட் கோர்ட் உத்தரவே அன்று. அது உத்தரவின் முதற்பக்கமே. அது சொல்வது. ஹட்சன் Co கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பதிலிருந்து தடுக்க உத்தரவு போடுமாறு மனுதாரர் விண்ணப்பிக்கிறார் எனபது மட்டுமே. என்ன உத்தரவு போட்டது உத்தரவில் இருவகை ஒன்று, முடிவான உத்தரவு இரண்டு, இடைக்காலத் தடை. இதில் எது போடப்பட்டது கடைசிப்பக்க ஷாட் போடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *