விமானங்களின் பரிணாம வளர்ச்சி – முதல் உலகப்போர்:
அமெரிக்காவில் கிட்டி ஹாக் என்னும் ஊரில் 1903ம் ஆண்டு டிசம்பர் 17ல், ரைட் சகோதரர்கள் ஆர்வில்லும் வில்பரும் முதல் விமானத்தை[1] வடிவமைத்துப் பறக்கச்செய்தபின் சில ஆண்டுகளுக்கு அதுவொரு புதுமைப் பொருளாகத்தான் இருந்ததே தவிர, அதன் உபயோகம் உடனடியாக விமானத்தைப்போல வானத்தில் பறக்கவில்லை. ஏனெனில், விமானத்தில் பறப்பதே ஒரு துணிச்சலான, உயிருக்கு ஆபத்தான செயலாகவே இருந்தது.
இருப்பினும், விரும்பியவண்ணம் செலுத்ததக்க விமானம் இதுதான் என்பதை அறிந்துகொண்ட அமெரிக்க அரசு, போரில் எதிரிப்படைகளை உளவுபார்க்க உபயோகிக்கலாம் என்று, முதன்முதலாக போர்விமானத்தை வடிவடித்துக்கொடுக்கும் ஒப்பந்தத்தை ரைட் சகோதரர்களுக்கு 1908ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அளித்தது.[2]
அவர்கள் வடிவமைத்துக்கொடுத்த, இருவர் ஏறிச்செல்லும் விமானம் 40மைல் வேகத்தில், 125மைல் தூரம் செல்லும்படி இருந்தது. இது 1909ம் ஆண்டில், “விமான எண் 1, காற்றைவிடக் கனமான பிரிவு, அமெரிக்க விண்படை” என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இருந்தாலும், செப்பெலின் என்று அழைக்கப்பட்ட நீர்வாயு [ஹைட்டிரஜன்] நிறப்பப்பட்ட பலூனைப்போன்ற, காற்றைவிடக் கொள்ளளவில் இலேசான வானூர்திகளே முதலாம் உலகப்போருக்கு முன்னர் எதிரிகளின்மீது குண்டுவீச உபயோகிக்கப்பட்டன. இறக்கைகளுள்ள விமானங்கள் உளவுக்குமட்டுமே பயனாகின.
குண்டுவீசும் விமானம் [பெயர் பிலெரியோ 11 – Bleriot XI] 1911ல் அக்டோபர் 23ல் இத்தாலிய துருக்கிப் போரில் முதன்முதலாகச் செயலாற்றியது. அதை இயக்கியவர் கார்லோ பியாசா என்னும் இத்தாலிய விமானி.[3] அதற்கு ஒன்பது நாள்கள் கழித்து ஜியொலியோ கவொட்டி என்ற விமானி ஐன் சாரா என்ற இடத்தில் நான்கு எறிகுண்டுகளைத் துருக்கிய எதிரிகள்மீது எறிந்து விமானக் குண்டுவீச்சைத் துவக்கிவைத்தார்.
இதை அறிந்தவுடன் போர் விமானங்களின் பரிணாம வளர்ச்சி சூடுபிடித்தது.
24000 [7300 மீட்டர்கள்] அடி உயரத்தில் பறந்து எதிரிப்படைகள் இருக்குமிடத்தை வானொலி உதவியுடன் பீரங்கிப்படைக்குத் தெரிவித்து, குறிவைத்துத் தாக்க உதவியது, இருவர் அமர்ந்துசெல்லக்கூடிய ரம்ப்லர் என்னும் ஜெர்மானிய விமானம்.
விமானத்தின் மேன்மையை அறிந்தவுடன், அதில் எந்திரத் துப்பாக்கிகளை வைத்து எதிரிகளைத் தாக்கும் போர்முறை துவங்கியது. போர்விமான வடிவமைப்புகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இரட்டை அடுக்கு இறக்கைகள் போய், இக்காலத்தில் நாம் காணும் ஒற்றை இறக்கை விமானம் உருவெடுத்தது.
பிரான்சுடனும், பிரிட்டனுடனும் விமான உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டதே முதல் உலகப்போரில் ஜெர்மனி தோற்பதற்குக் காரணமாக அமைந்தது என் உண்மை தெரிந்தவுடன் போர்விமானங்களின் மதிப்பு உயரத்துவங்கியது.
முதல் உலகப்போரில் கலந்துகொண்ட புகழ்பெற்ற விமானங்கள் — சாப்வித் காமல், ஃபோக்கர் டி-7, பிரிஸ்டல் எஃப்-2பி, சாப்வித் சலமான்டர், ஹால்பெர்ஸ்டாட் சிஎல்-3, காப்ரோனிஸ், இல்யா முரொமெத் ஆகியவை.
போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – இரண்டாம் உலகப்போர்:
முதல் உலகப்போர் விமானங்கள் எந்த அளவுக்குச் சண்டையில் உதவியாக இருக்கும் எனக் காட்டியது. உடனே, அப்போதிருந்த வல்லரசுகளான பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி ஆகியவை விமானக் கலைநுட்பத்தை விரிவாக்கத் துவங்கின.
விமானங்களை மென்மேலும் எப்படிச் சாதகமாகக் கையாளலாம் என்பதில் பணம், ஆராய்ச்சி, அறிவு இவை செலவிடப்பட்டன. முதல் உலகப்போர் 1918ல் முடிவடைந்து இரண்டாம் உலகப்போர் ஜெர்மனியால் 1939ல் போலந்து படையெடுப்புமூலம் துவங்குவதுவரை விமான அறிவியல் பல்வேறுவகைகளில் முன்னேற்றம் அடைந்தது.
உளவுபார்க்கவும், எதிரிகளின்மீது குண்டுவீசுவதற்கும் அதிகமாக எப்படி விமானங்கள் உபயோகிக்கப்படலாம் என்று சிந்தித்து, அவைகள் — துருப்புகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்ல, சண்டையிட்டுக்கொண்டிருக்கும் படைகளுக்கு இராணுவ தளவாடங்களை விரைவில் அனுப்ப என்று பலவிதத் தேவைகளயும் நிறைவேற்றும்பொருட்டு, பல்வேறு விமானங்களை வடிவமைக்கத் தொடங்கினார்கள்.
விமானங்கள் அதிகநேரம் விண்ணில் பறந்தால்தான் அது மிகவும் உதவியாக் இருக்கும். ஆனால், அதற்கு நிறைய எரிபொருளை ஏற்றிச்சென்றால், விமானத்தின் எடை அதிகமாகும். எடை அதிகமானால் அது சுழன்று சுழன்று எதிரிவிமானங்களைத் தாக்குவதென்பது இயலாதுபோய்விடும். எனவே, அவ்வகைப் போர்விமானங்களைக் எவ்வளவுக்கெவ்வளவு எடைகுறைவாக வடிவமைக்கமுடியுமோ, அவ்வளவு குறைந்த எடையுடன் வடிவமைக்கவேண்டியிருந்தது.
இக்குறையை நீக்க அவை பறக்கும்போதே எரிபொருள் நிறப்பமுடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.
அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த லெஃப்டினென்ட்கள் காட்ஃப்ரி காபாட் என்பரும், ஹாரிஸ் என்பவரும் 1920 அக்டோபர் 3ம்தேதி அதை நிறைவேற்றிக்காட்டினார்கள்.[4]
அச்சாதனையால், போர்விவிமானங்களில் பறக்கும்போதே எரிபொருள் நிறப்பும் வசதியையும், எரிபொருளுடன் பறக்கும் விமானங்களையும் வடிவமைக்கத் துவங்கினார்கள். ஆயினும் இரண்டாம் உலகப்போர் முடியும்வரை அது வெற்றிபெறவில்லை.
அதுவரை மெதுவாக நடைபெற்றுக்கொண்டிருந்த போர்விமானங்களின் தொழில்நுட்பம், இரண்டாம் உலகப்போரில்தான் மிகவும் வேகமாக வளர்ச்சிபெற்றது. மரத்தின்மேல் துணிபோர்த்திய இரட்டை இறக்கை விமானங்கள், பளபளக்கும் அலுமினியப் போர்வை போர்த்திய ஒற்றை இறக்கையுடன், சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட, அதிக சக்திபடைத்த பிஸ்டன் விமானங்களுக்கு வழிவிட்டன.
பிரிட்டன் ஸ்பிட்ஃபைர் [நெருப்பு உமிழி], ஜெர்மன் மெஸ்ஸெர்ஷ்மிட் விமானங்களும், பின்னர் அமெரிக்காவின் பி-51 மஸ்டாங் [காட்டுக் குதிரை] விமானமும் வானத்தில் பறந்து சண்டையிட்டபோது, பி-17 ஃப்ளையிங்க் ஃபோர்ட்ரஸ் [பறக்கும் கோட்டை] மற்றும் புகழ்பெற்ற பி-29 என்னும் அமெரிக்க விமானங்கள் அவற்றுடன் சேர்ந்துகொண்டன.
ஆனால், போர் இறுதியில் புதுவிதமான விமான இயந்திரங்கள் [எஞ்சின்கள்] — ஜெட் எஞ்சின் வடிவத்தில் உபயோகத்திற்கு வந்தன. அவை அதுவரை விமானங்களை இயக்கிவந்த காற்றாடி [புரொபெல்லர்] இயந்திரங்களைவிடச் சிறியதாகவும், விமானங்களை அதிக விரைவாகவும், உயரத்திற்கும் கொண்டுசெல்லும் திறமைவாய்ந்ததாகவும் இருந்தன. ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா இந்த ஜெட் -இயந்திரங்களைப் பொருத்தி, விமானங்களைச் சோதனைசெய்தபோதிலும், பிரிட்டனும், ஜெர்மனியும் சில போர்த்தாக்குதல்களுக்கு ஜெட்விமானங்களை உபயோகப்படுத்தினார்கள்.[5]
போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – இரண்டாம் உலகப்போருக்குப் பின்:
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன் தனது வல்லரசு நிலையை இழந்தது — காரணம், அது ஆதிக்கம் செலுத்திய நாடுகள் இந்திய-பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு ஒவ்வொன்றாக அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதும், முன்போல அந்நாடுகளின் இயற்கை வளத்தைச் சுரண்டி தன்னை மேம்படுத்திக்கொள்ள இயலாதுபோனதும்தான்.
அதைத்தொடர்ந்து பிரான்சும் தனது ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளை இழந்தது. இருப்பினும், ஜெனரல் டிகால் அதன் அதிபரானாதும், தனித்துத் தன் தொழில்நுட்பத்தை உயர்த்தத் துவங்கியது.
அமெரிக்காவும், ரஷ்யாவும்தான் உலகின் இருபெரும் வல்லராசாகின. அவை வெறும் வல்லரசுளாகம்ட்டு ஆகியிருந்தால் அவ்வளவு சிக்கல் இருந்திருக்காது. ஆனால், அமெரிக்கா முதலாளித்துவ நாடாகவும், ரஷ்யா பொதுவுடமை நாடாகவும் இருந்ததே பெரும் பிரச்சனையாகிவிட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகல் முதலாளித்துவத்தையும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் பொதுவுடைமையைத் தழுவியது அவைகளுக்குள் ஒரு இழுபறிப் போராட்டத்தை ஏற்படுத்தியது.
சோவியத் யூனியனின் ஆதிக்க எல்லையைக் கட்டுப்படுத்தவும், ஐரோப்பியத் தேசியவாத இராணுவப்போக்கை அமெரிக்காவின் வலுவான இருப்பின்மூலமாகத் தடுக்கவும், ஐரோப்பா அரசியலமைப்பு வாயிலாக இணையவும்[6] வட அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு [North Atlantic Treaty Organization or NATO] 1949ல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தோற்றுவிக்கப்பட்டது. அப்பொழுது அவ்வமைப்பில் 12 நாடுகளே இருந்தன. இப்பொழுது 29 உறுப்பினர் நாடுகள் உள்ளன.
இது அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ஒரு போர்நிலையை
உருவாக்கியது. இருநாடுகளும் தங்கள் இராணுவ வலிமையை அதிகரிக்கத் துவங்கின. அதனால் போர்விமானங்களின் முக்கியத்துவமும் வளர்த்துவங்கியது.
இத்துறையில் விரைவில் முன்னேற்றமடைந்த நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்சு ஆகியவை. ரஷ்யாவும் அமெரிக்காவும் தத்தம் கூட்டாளி நாடுகளுக்கு ஆயுத உதவியும், போர்விமானங்களையும் தந்துதவின. பலவித முன்னேற்றங்களைச் செய்து, போர்விமான வடிவமைப்பிலும், உற்பத்தியிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்தன. காரணம் — அந்நாடுகளின் செல்வச் செழிப்பும், ஐரோப்பா இரண்டுவிதக் கொள்கையுள்ள வல்லரசுகளால் பிரிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒரு உலகப்போர் துவங்கிவிடாமல் பாதுகாத்துக்கொள்ளவும்தான்.
இவ்விரு அமைப்பிலும் சேரவிரும்பாத, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட 29 ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் 1955ல் இந்தோனேசியாவில் பாண்டூங் நகரில் கூட்டுசேராக் கொள்கையை மேற்கொண்டு இயங்கத்துவங்கின. இதன் முக்கிய காரணகர்த்தாக்கள் இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் கமால் அப்டெல் நாசர், கானாவின் க்வாமே நிக்ருமா, இந்தோனேசியாவின் அகமது சுகர்னோ, யுகோஸ்லாவியாவின் ஜோசிப் டிட்டோ ஆகியார் ஆவர்.[7]
பஞ்சசீலக் கொள்கை பொய்த்து, 1962ல் சீனா இந்தியாவைத் தாக்கியது நேருவின் உடல்நலத்தை மிகவும் பாதித்தது. 1964லில் அவர் காலமானார்.[8]
அதற்குமுன் அவர் இந்தியா போர்விமான உற்பத்தியிலும் தன்னிறைவு பெறவேண்டும் என விரும்பினார். 1956ல் அப்பொழுதைய இந்திய விமானப்படைத் தலைவர் ஏர்மார்ஷல் எஸ். முகர்ஜி அதற்காக மிகவும் முயற்சி எடுத்துக்கொண்டார். அதை அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்த மகாவீர் தியாகியும் ஆதரித்தார்.[9]
அர்ஜென்டினாவில் தஞ்சம் புகுந்த, வில்லி மெஸ்ஸெர்ஷ்மிட் [Willy Messerschidt] நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெர்மானிய விமானப் பொறியாளர் கர்ட் டாங்க் என்பவர் இந்துஸ்தான் ஏரோநாடிக் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்ற அழைக்கப்பட்டார். அவர் அர்ஜென்டீனிய, ஜெர்மானிய, இந்தியப் பொறியாளர்களின் ஒத்துழைப்புடன் ஆசியாவிலேயே முதல்முதல் சூப்பர்சானிக் விமானத்தை வடிவமைத்தார். இதற்கு ஹெச்.எஃப்-24 மாருத் என்று பெயர் சூட்டப்பட்டது.
அதன் வடிவமைப்பு சிறந்து விளங்கியபோதிலும், பிரிஸ்டல் சிட்டலி ஆர்பியஸ் தயாரித்து வழங்கிய அதன் இரட்டை எஞ்சின்கள் வலிமையற்றவையாக இருந்ததால், எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. ஆயினும் அந்த எஞ்சினைவைத்து வடிவமைத்த நாட் [Gnat Mk1] தாக்குதல் போர்விமானம் 1965ல் பாகிஸ்தானின் சேபர்ஜெட்டுகளுக்கு எமனாக அமைந்து இந்தியா விமானக் கட்டமைப்புக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
இருப்பினும், ஹெச்.எஃப்-24 போர்விமானத்திற்கு ரஷ்ய எஞ்சின்களையும், எகிப்தின் ஹெச்.ஏ-300 எஞ்சின்களையும், உபயோகிக்க நினைத்தும், நினைத்த வெற்றி கிட்டவில்லை என்றே சொல்லலாம்.
இப்பொழுது அந்த விமானங்கள் பாரதத்தின் பல விமானதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அவை ஒரு வெட்கக்கேடு என்று உணர்வதால், விமானப்படைத் தலைமையகமும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனமும் பாராமுகமாகவே இருக்கின்றன.[10]
எனவே, ரஷ்ய மிக் விமானங்கள் பாரதத்தின் தேவையை இட்டு நிரப்பின.
மிக் விமானத்தை பாரதம் அப்படியே தயாரித்தபோதும், சீனா அதன் வடிவமைப்பை மிகவும் மேம்படுத்தி, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட எஃப்-16 விமானத்தின் வடிவமைபுடன் இணைத்து, பாகிஸ்தானுடன் சரிபாதிச் செலவை ஏற்றுக்கொண்டு, ஜே.எஃப்-17 என்ற விமானத்தைத் தயாரிக்க முடிவுசெய்தது. முதலில் அமெரிக்க நிறுவனம் குரும்மன் அதற்கு எஞ்சினைத் தர ஒப்புக்கொண்டாலும், பிறகு பின்வாங்கிவிட்டது. ஆகவே, சீனா தந்திரமாக, ரஷ்யா தனது மிக்-33 போர்விமானத்திற்கென்று தயாரித்து, பிறகு அவ்விமான உற்பத்தையைக் கைவிட்டதால் மிஞ்சிய க்லிமோவ் ஆர்டி-93 [Klimov RD-93] எஞ்சின்களை வாங்கி அதற்கு உபயோகித்துக்கொண்டது.[11]
ஆகவே, தனக்கு வலிமைமிக்க போர்விமானங்கள் வேண்டுமென்றால், தங்குதடையின்றி, பலமுனைத் தாக்குதல்களில் சிறந்த நடுத்தர விமானங்களை [Medium Muti Role Combat Aircraft – MMRCA] வாங்கித் தயாரிக்கவேன்டும என்ற முடிவை பாரதம் எடுத்தது.
[தொடரும்]
[1] Inventing a flying Machine, Smithsonian National Air and Space Museum website, https://airandspace.si.edu/exhibitions/wright-brothers/online/fly/1903/
[2] Military Aircraft by John F Guilmartin and John W.R. Taylor, Encyclopaedia Britannica,https://www.britannica.com/technology/military-aircraft
[3] The World’s First Warplane, by Rebecca Maksel, Airspacemag.com, October 21, 2011, https://www.airspacemag.com/daily-planet/the-worlds-first-warplane-115175678/
[4] ..the first an aircraft was refueled in flight is generally attributed in Lt. Godfrey L. Cabot of the US Naval Rserve and Lt. harris of the NUS Navy on Oct 3, 1920
Background Paper on the History of Air Refueling, by SMSgt. M.A. Gentry, SNCOA Student,Air Force Enlisted Heritage Research Institute, 3rd May, 1994
[5] World War II Aircraft, sep 28, 2015, https://ethw.org/World_War_II_Aircraft
[6] A Short History of NATO, https://www.nato.int/cps/ie/natohq/declassified_139339.htm
[7] History and Evolution of Non-Aligned Movement, Public Diplomacy, August 22, 2012, Ministry of External Affairs, Government of India, https://mea.gov.in/in-focus-article.htm?20349/History+and+Evolution+of+NonAligned+Movement
[8] Asia Society (1988). “Jawaharlal Nehru”. In Embree, Ainslie T. Encyclopedia of Asian History. 3. New York: Charles Scribner’s Sons. pp. 98–100. ISBN 978-0-684-18899-7.
[9] HR-24 Marut, Global Security.org, https://www.globalsecurity.org/military/world/india/marut.htm
[10] HR-24 Marut, Discussion in “Indian Air Force’ started by Bhramos, Defence Forums of India, June 18, 2011, https://defenceforumindia.com/forum/threads/hf-24-marut.22755/
[11] JF-17 Fighter: China’s Weird MiG-21 and F-16 Hybrid, by Charlie Gao, The National Interest, June 30, 2018, https://nationalinterest.org/blog/buzz/jf-17-fighter-chinas-weird-mig-21-and-f-16-hybrid-24782
மிகையான தகவல்கள் இல்லாமல், இன்னும் சற்று எளிமையாக இருக்கலாம்.