கொலைகாரக் கிறிஸ்தவம் — 18

, கிறிஸ்தவர்களல்லாத, கிறிஸ்தவமதத்தின்மீது நம்பிக்கையற்ற பிறமதத்தவர்கள், அதாகப்பட்டது ஹிந்துக்கள், எவரும் சர்ச் தடைவிதித்திருக்கும் காலங்களில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது எனவும், அந்தத் தடைகள் நீக்கப்பட்ட மாதங்களில் அவர்கள் தங்களுடைய கிராமங்களுக்கு வெளியே மட்டும் திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதை மீறினால் 1000 ஜெராஃபின்ஸ் (Xerafins) அபராதம் விதிக்கப்படும் என மார்ச், 13, 1613 அன்று கோவாவின் போர்ச்சுக்கீசிய கவர்னர் ஹைரானிமோ-டி- அஸெவிடோ உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் ஜனவரி 31, 1620-ஆம் வருடம் அதைவிடவும் கடினமான உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த உத்தரவு வெளியிடப்படும் இந்த நாளிலிருந்து, எந்தவொரு ஹிந்துவும், கோவா நகருக்குள்ளோ அல்லது அதைச் சுற்றியுள்ள தீவுகளிலோ திருமணம் செய்யத் தடைவிதிக்கப்படுகிறது. அதை உதாசீனம் செய்பவர்களுக்கு 1000 ஜெராஃபின்ஸ் பணம் அபராதம் விதிக்கப்படும்.

மனம் வெதும்பிய கோவா ஹிந்துக்கள் தங்களின் திருமணங்களை கோவாவில் நடத்த அனுமதிக்கவேண்டும் என வேண்டி 32,000 ஜெராஃபின் பணத்தை வைசிராய்க்கு அளித்தார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட வைசிராய் கொண்டே-டி-விடிகுயிரா ஹிந்துக்களின் திருமணங்களை நடத்த அனுமதித்தாலும் சிறிது காலத்திற்குப் பிறகு அந்த அனுமதியை ரத்து செய்ததோடு மட்டுமன்றி, கோவா ஹிந்துக்கள் தங்களின் நெற்றியில் சந்தனப் பொட்டு வைக்கவும், அரிசிப் பொட்டு வைக்கவும் தடைவிதித்தார்.

இருப்பினும், போர்ச்சுக்கல் அரசருக்கு இதனைக் குறித்து எழுதும் கடிதத்தில் ஹிந்துக்கள் சர்ச்சுகள் இல்லாத கோவாவின் பிறதீவுகளில் வைத்து திருமணம் செய்து கொள்ள அனுமதித்தால் ஒவ்வொரு வருடமும் அரசாங்க கஜானாவுக்கு 6000 ஜெராஃபின்ஸ் வரை வருமானம் வரும் என வைசிராய் குறிப்பிட்டார். அதேபோல பொட்டுவைக்க அனுமதித்தால் இன்னும் 2000 ஜெராஃபின்ஸ் கூடுதல் வருமானம் வருவது மட்டுமல்லாமல், அந்தப் பொட்டைவைத்தே அவர்களைக் கிறிஸ்தவர்களிடமிருந்து பிரித்து இனம் காணமுடியும் ஸ்பெயினில் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளின்போது  யூதர்களை மஞ்சள் தொப்பி அணியச் செய்து அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டதுபோல பொட்டு வைக்க அனுமதிப்பதும் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்..

எனவே கோவாவில் திருமணம் செய்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட ஹிந்துக்கள் அருகாமையிலிருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் பகுதிகளில் சென்று திருமணம் செய்யத் தலைப்பட்டார்கள். எனினும் அந்தப் பகுதிகளில் திருடர்களும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் திருமண கோஷ்டிகளைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள்.  பின்னர் ஐம்பது ஆண்டுகள் கழித்து  1679-ஆம் வருடம் வைசிராய் பெட்ரோ-டி-அல்மைடா ஹிந்துக்களை கோவாவிலேயே திருமணம் செய்து கொள்ள அனுமதித்தார்.

அதேசமயம் ஹிந்துக்கள் பொதுவெளியில் திருமணம் செய்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டார்கள். அவர்களின் திருமணங்கள் கதவடைக்கப்பட்ட வீட்டுக்குள் மட்டுமே நடத்தப்படவேண்டும். மேலும் அந்தத் திருமணங்களை நடத்துவதற்கு பிராமணர்களோ அல்லது ஆலயப் பூசாரிகளோ வந்து ஹிந்து முறைப்படியான சடங்குகளை நடத்தி விடாமலிருக்க அரசாங்கமே தேவையான காவலதிகாரிகளை திருமணம் நடக்கவிருக்கும் அவர்களின் வீடுகளின் முன்னால் நிறுத்தியது. கோவாவில் அன்றைக்கு நடந்து கொண்டிருந்த இன்குசிஷன் விசாரணை அதிகாரிகள் இதுபோன்ற திருமணங்களைத் தீவிரமாகக் கண்காணித்தார்கள்.

ஹிந்துத் திருமணச் சடங்குகள் அனைத்தும் புரோகிதர்களை முன்னிறுத்திச் செய்யப்பட வேண்டியவை. ஆனால் புரோகிதர் மந்திரம் ஓதி நடத்தாத திருமணங்கள் ஹிந்துக்களைப் பொறுத்தவரை திருமணங்களே அல்ல என்பதால் அந்தச் சடங்குகளைச் செய்யாமல் நடத்தப்பட்ட திருமணங்களினால் மணமான பெண்கள் வெறும் வைப்பாட்டிகளாக மட்டுமே கருதப்பட்டார்களேயன்றி மனைவிகளாக அல்ல. எனவே அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து எதுவுமின்றி, சட்ட ரீதியிலான பல சிக்கல்களைச் சந்தித்தார்கள்.

பின்னர் மேற்கண்ட சட்டம் ஆகஸ்ட் 29, 1679-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசனான பெட்ரோவால் விலக்கிக் கொள்ளப்பட்டு, கோவா ஹிந்துக்கள் கப்பல்களிலோ அல்லது கட்டுமரங்களிலோ வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கிறிஸ்தவர்கள் எவர்களும் இல்லாத பகுதிகளிலும், போர்ச்சுக்கீசிய பகுதிகளிலிருந்து தொலை தூரத்தில் இருக்கிற முஸ்லிம் பகுதிகளிலும் மட்டுமே ஹிந்துக்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.

கோவாவில் ஆற்றில் படகில் நடக்கும் இந்துத் திருமணம்

இப்படியாக தங்களின் சொந்த நாட்டிலேயே அலைக்கழிக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்ட ஹிந்துக்கள்மீது கருணைகொண்ட போர்ச்சுக்கீசிய அரசன் மார்ச் 4, 1701-ஆம் வருடம் புதியதொரு உத்தரவினைப் பிறப்பித்தான். அந்த உத்தரவின்படி, ஹிந்துக்கள் மூடிய வீட்டுக்குள் வைத்துத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் எவரும் அந்தத் திருமணங்களுக்குக் அழைக்கப்படக் கூடாது எனவும், அப்படியே தப்பித்தவறி எவனாவது ஒரு கிறிஸ்தவன் அந்தத் திருமணத்திற்கு வந்தான் என்றால் அதற்கான தண்டனையை ஹிந்துக்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவு விளக்கியது.

ஒருவழியாக இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது என ஹிந்துக்கள் நிம்மதிகொண்டிருந்த வேளையில், கோவாவின் வைசிராய் போர்ச்சுக்கீசிய அரசருக்கு டிசம்பர் 5, 1704-ஆம் வருடம் அனுப்பிய கடிதத்தில், இவ்வாறு ஹிந்துக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை கோவாவின் சர்ச் பாதிரிகள் மிகவும் கோபத்துடன் எதிர்ப்பதாகச் தெரிவித்தார். எனவே போர்ச்சுக்கீசிய அரசர் தனது செப்டம்பர் 22, 1705 அன்று அனுப்பிய கடிதத்தில் ஹிந்துக்கள் மூடிய கதவிற்குள் வைத்து திருமணம் செய்து கொள்ளப் பிறப்பித்த தனது அனுமதியை ரத்து செய்வதாக அறிவிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கோவவின் சர்ச்சு, ஹிந்துக்களின் திருமணச் சடங்குகளைக் குறித்து இவ்வாறு அறிக்கை விட்டது:

ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் குருட்டுத்தனமான சடங்குகளையும், விழாக்களையும், கோவில் அலங்காரங்களையும், பிரார்த்தனைகளையும் செய்யமாட்டோம், திருமணம் புனித சர்ச்சினால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மட்டுமே நடக்கும் என உறுதியளித்தால் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.   சர்ச்சின் பிரதிநிதிகள் திருமணம் நடக்கும் ஐந்து நாட்களும் மணமகன் மற்றும் மணமகளுடன் இருந்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

தங்களின் திருமணச் சடங்குகளுக்குத் தேவையில்லாமல் இன்குசிஷன் சர்ச்சினால் இத்தகையை கொடூரமான தடைகள் விதிக்கப்பட்டதால் வருந்திய ஹிந்துக்கள் கோவாவைவிட்டு வெளியேறிச் சென்றார்கள்.  இதனைக் குறித்து வைசிராய்க்குக் மார்ச் 8, 1715 அன்று கடிதம் எழுதும் போர்ச்சுக்கீசிய அரசன் ஜெவாவோ, எனது ஆட்சிக்கு உட்பட்ட கோவா பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால்,  ரகசியமாக, எந்தவொரு கத்தோலிக்கனும் அறியாமல், அவர்களின் மதச் சடங்குகளைப் பின்பற்றி திருமணம் நடத்தினாலும் இன்குசிஷன் பாதிரிகளினால் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவதாக அறிகிறேன்.  இதன் காரணமாக பல ஹிந்துக்கள் தங்களது உடைமைகளையும், நிலங்களையும் விட்டுவிட்டு இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் குடியேறியதின் காரணமா பல கிராமங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் எனக்குத் தெரிகிறது. இதனைக் குறித்து மேலதிக தகவல்களை அறிய விழைவதால் உங்களது எண்ணங்களை எனக்குத் தெரிவிக்கவும். என எழுதினான்.

அதற்குப் பதிலளிக்கும் வைசிராய், இன்குசிஷன் பாதிரிகள் எவரும் குற்றம் செய்ததாகத் தனக்குத் தெரியவில்லை என பதிலெழுதினான்.

திருமணங்கள் மட்டுமல்லாமல் சாதாரண பூணூல் அணிவிக்கும் நிகழ்வுகள்கூட கோவாவில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு அவையும் போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு வெளியே நடத்தப்பட்டன.  எனவே அவையும் பூட்டிய கதவிற்குப் பின்னால் ரகசியமாக நடத்த அனுமதியளிக்கப்படுகின்றன.  அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் வெளியூருக்குப் போகிறவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டன எனத் தெரிகிறது.

1640-ஆம் வருடம் மதவெறி பிடித்த கிறிஸ்தவப் பாதிரிகள் ஹிந்துக்கள் பூணூல் அணிவதனைத் தடைசெய்ததற்கான ஆதாரங்களும் இன்றைக்குக் கிடைத்திருக்கின்றன. போர்ச்சுக்கீசிய கவுன்சிலைக் கூட்டிய பாதிரிகள் “ஹிந்துக்கள் ஏவரும் பூணூல் அணிவதனைத் தடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பிள்ளைகள் எவருக்கும் அவ்வாறு பூணூல் அணிவிப்பது தடை செய்யப்பட வேண்டும்,” எனப் போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கடிதம் எழுதினார்கள்.

மேன்மை தங்கிய அரசருக்கு, இந்தியாவிலிருக்கும் ஹிந்து எவனுக்கும் மகன் பிறந்தால் இங்கு அது ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  மகன் பிறந்ததற்க்காக எட்டு நாட்கள் விழாவெடுத்து, விருந்து உண்ணும் ஹிந்துக்கள் நமது இறைவனை அவமதிக்கிறார்கள். கோவாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து பல கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்ட போதும் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களில் பலர் தாங்கள் ஹிந்துக்களாக இருந்தபோது செய்த அத்தனை செய்கைகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் இந்தச் செய்கை நமது போர்ச்சுக்கீசியர்களையும் பீடித்து அவர்களும் இந்த கடவுளுக்கு எதிரான கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் பணக்காரன் ஏழை என்கிற வித்தியாசமில்லாமல் இந்தக் கண்டிக்கத்தக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, கோவாவின் வைசிராயாக அப்போது இருந்த ஜொகோவோ சால்டானா-டி-காமா, “ஹிந்துக்களின் பண்டிகைகளை, அவர்களின் மதச் சடங்குகளைக் கொண்டாடுகிற போர்ச்சுக்கீசியர்கள் அனைவருக்கும் 500 ஜெராஃபின் அபராதமும், அவர்கள் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது முதல் குற்றத்திற்கு 100 ஜெராஃபின் அபராதமும், இரண்டாவது குற்றத்திற்கு சிறையும் பின்னர் சீனா அல்லது மொசாம்பிக் நாட்டிற்கு இரண்டு வருடங்கள் நாடுகடத்தப்படுவார்கள்,” என்று மார்ச் 22, 1729-அன்று உத்தரவிடுகிறார்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *