கொலைகாரக் கிறிஸ்தவம் — 20

சொஸைட்டி ஆஃப் ஜீஸஸைச் சேர்ந்த பாதிரியான ஃப்ரான்ஸிஸ்கோ-டிசௌசா, கோவாவின் திவார் நகரத்தில் வசித்த பிராமணர்கள் தங்களைச் சுற்றிலும் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ அதிகாரத்தையும் கண்டு, பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் அதிகாரம் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றிருப்பதனைக் கண்டு கொண்டார்கள். இப்போது அவர்களின் முன்னிருக்கும் ஒரே வழி, தாங்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவது அல்லது கோவாவைவிட்டு வெளியேறுவதுதான் என்பதை உணர்ந்து பெரும் சோகமடைந்தனர். என்று குறிப்பிட்டுவிட்டு மேலே தொடர்கிறான்:

“தாங்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவது ஆண்டவனால் இடப்பட்ட கட்டளை என்பதைச் சிலரும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அந்தச் சமயம் தங்களை எதிர்நோக்கி வந்துவிட்டதாகவும் மற்றும் சிலரும் புரிந்துகொண்டார்கள். ஆனாலும் பலர் தங்களின் மூதாதையர்களின் குருட்டுப் பழக்கவழக்கங்களைக் கைவிட முடியாமல், கிறிஸ்தவர்களாக மதம்மாற மறுத்து, கோவாவை விட்டு வெளியேற முடிவுசெய்தார்கள். மிகவும் பக்திமான்களான சில பிராமணர்கள் திவாரில் இருந்த யானைத் தலையும், மனித உடலும் உடைய பிள்ளையார் சிலையின் முன்பு கூடி, அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு இந்தியப் பகுதியில் உள்ள மலாருக்குச் செல்வது குறித்து விவாதித்தார்கள்.

“இந்த யோசனை அந்தப் பகுதியிலிருந்த சில பணக்காரக் குடும்பத்தினர்களாலும், இளஞர்களாலும் நடைமுறைத்தப்படுத்தப்பட்டு, பிள்ளையார் சிலையை மலர்களால் அலங்காரம்செய்து தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து இந்தியப் பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் போர்ச்சுக்கீசிய படையினரால் பிடிக்கப்பட்டு வைசிராயின் முன்னால் நிறுத்தப்பட்டார்கள்.

“வைசிராய், அந்தக் கூட்டத்திலிருந்த குழந்தைகள் அனைவரையும் தனியே பிரித்து ஒரு வீட்டில் விசாரணைகள் முடியும் வரைக்கும் அடைத்துவைக்க உத்தரவிட்டார். அக்குழந்தைகள் அனைவரும் தங்களுடன் பேசிய போர்ச்சுக்கீசிய பாதிரிகளிடம் கிறிஸ்தவர்களாக மதம்மாறச் சம்மதம் தெரிவிக்கவே. வைசிராய் அவர்களின் பெற்றோர்களுக்கு அந்த குழந்தைகளிடம் பேச அனுமதி அளித்து, அக்குழந்தைகள் அனைவரும் சுதந்திரமன மனதுடன் மதம்மாறுகிறார்களா எனக் கேட்கச் சொன்னார்.  அந்தக் குழந்தைகளும் சுதந்திரமாக மதம் மாறியதாகச் சொல்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துச் செல்லவேண்டுமானால் அவர்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாறவேண்டும் எனச் சொல்லப்பட்டு வேறுவழியின்றி அவர்களும் மதம் மாறினார்கள்.”

இதுபோன்ற ஹிந்துக்களுக்கெதிரான பல சோகச் சம்பவங்கள் ஏராளமானவையும் போர்ச்சுக்கீசிய பாதிரிகளால் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற கொடுமைகள் கிறிஸ்துவின்பேரால் ஹிந்துக்கள் நிறைந்த இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறத,. இன்றும்நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இனியும் நிகழும் என எச்சரிக்கத்தான் முடியும்.

மதமாற்ற மிஷனரி வேலைகளில் ஒரு கிறிஸ்தவ பாதிரியின் வேலைகளும், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிக் கபடமாகப் பேசி பிற மதத்துக்காரனை மயக்கவேண்டும் என்பதற்கான துல்லியமான அறிவுறுத்தல்கள் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பிறமதத்துக்காரர்கள் அறிந்து ஒதுங்கினாலும், ஹிந்துக்கள் அறிந்துகொள்வதில்லை. எனவே அவர்கள் எளிதாக தேனொழுகப் பேசும் கிறிஸ்தவ பாதிரியின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கிவிடுகிறார்கள். இதனைக் குறித்து ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடங்களைக் குறித்து இங்கு சிறிது காண்போம்.

“கோவாவில் வாழும் ஒரு கிறிஸ்தவப் பாதிரி, ஹிந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவை எந்த மாதத்தில், எந்த நேரத்தில் கொண்டாடப்படுகின்றன என்பதனைக் குறித்தான துல்லிய அறிவு கொண்டவனாக இருக்க வேண்டும். பாக்கு மரங்கள் மற்றும் சந்தனம் போன்றவற்றை ஹிந்துக்கள் எதற்காக உபயோகிக்கிறார்கள் என்பதனையும் அவன் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு அந்தத் திருவிழாவில் பங்கெடுக்க வருபவர்களை அடையாளம் கண்டு தடுப்பதற்கும் அல்லது தண்டனையளிப்பதற்கும் அது மிக உதவிகரமாக இருக்கும்.

“இதேபோல, கோவில்களுக்குப் புனிதப் பயணம் வரும் ஹிந்துக்களையும் அடையாளம் கண்டு அவர்களுடன் நமது கோவாவைச் சேர்ந்த ஹிந்துக்களும் சேர்ந்துகொள்கிறார்களா எனக் கண்காணிப்பதுடன் அவர்கள் நமது நிலத்தின் வழியாகச் செல்வதனைத் தடுத்து, நமது அரசர் உத்தரவிட்டபடிக் கடுமையான முறையில் தண்டிக்கவேண்டும்.

“ஹிந்துக்கள் தங்கள் திருமணங்களை ஹிந்துப் பண்டிகைகளுடன் சேர்த்துக் கொண்டாடுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஹிந்துத் திருமணங்கள் எவையும் திருவிழாக்காலங்களிலோ அல்லது பிறமதச் சடங்குகளுடனோ கொண்டாடுவதனை முற்றிலும் தடுத்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

“பாதிரிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்துக்களைக் கண்காணித்து அவர்களில் எவரேனும் பெற்றோர்களை இழந்த அனாதைகளாக, பதினான்கு வயதிற்கும் குறைந்தவர்களாக இருக்கிறார்களா என்பதினைக் கண்டறிந்து, அந்த அனாதைகளை உடனடியாகப் பிடித்துக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு பிடிபட்ட அனாதைகளை உடனடியாக கிறிஸ்தவனாக ஞானஸ்னானம் செய்துவைக்கவேண்டும்.

“நமக்குத் தெரியாமல் எவரேனும் பதினான்கு வயதிற்குட்பட்ட அனாதைகளை போர்ச்சுக்கீசியப் பகுதியிலிருந்து வெளியே அனுப்பி வைத்திருப்பார்களேயானால் அவர்களின் சொத்துக்கள், நிலம் அனைத்தையும் கைப்பற்றி அவர்களைக் கடுமையாகத் தண்டித்து, அந்த நிலங்களையும், சொத்துக்களையும் கிறிஸ்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்……..” எனப் பட்டியல் நீளுகிறது.

இப்படியாக கோவாவாழ் ஹிந்துக்கள் வந்தேறிகளான போர்ச்சுக்கீசியர்களின் கீழ் பல கொடூரங்களை அனுபவித்து நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், மதவெறி பிடித்த கோவா பாதிரிகள் தொடர்ந்து ஹிந்துக்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதால் அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாற மறுத்து தொடர்ந்து ஹிந்துக்களாகவே ‘சுகமாக’ வாழ்ந்து கொண்டிருப்பதாக போர்ச்சுக்கீசிய அரசனுக்குப் புகாருக்கு மேல் புகாரளித்துக் கொண்டிருந்தனர்.

“ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களை விடவும் நன்றாக நடத்தப்படுவதாகவும், எந்த அழுத்தத்திற்கும் அஞ்சாமல் தொடர்ந்து அவர்கள் ஹிந்துக்களாகவே இருப்பதால், சமுதாயத்தில் அவர்களுக்குப் பெரிம் மதிப்பு இருப்பதாகவும், மதம்மாறிய ஹிந்துவைவிட மதம்மாறாத ஹிந்துவே மிகவும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பதால் கோவாவில் வசிக்கும் பெரும்பாலான ஹிந்துக்கள் மதம்மாறி கிறிஸ்தவர்களாக மறுக்கிறார்கள்” எனப் பாதிரி இக்னேசியோ மார்ட்டின், ஜனவரி 30, 1698-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசனுக்கு எழுதிய கடிதம் தெரிவித்தது. அந்தக் கடிதத்தை அரசன் கோவாவின் வைசிராய்க்கு அனுப்பிவைத்து அவரது பதிலைக் கோரினான். வைசிராயும் ஹிந்துக்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பிவைக்கிறார்.

இதே தொல்லை அடுத்த நூற்றாண்டிலும் தொடர்வதனைக் காணலாம்.

ஜனவரி 21, 1735-ஆம் வருடம், கிறிஸ்தவப் பாதிரியான மானுவெல்-டி-அப்ரு, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதற்காகக் கூட்டம் கூட்டமாக மதம்மாறாமல் இருக்கிறார்கள் என்பதற்கான பல காரணங்களை வெளியிடுகிறார்:

ஒன்று, ஹிந்துக்கள் மதம்மாறிய கிறிஸ்தவர்களைவிடவும் பலமடங்கு உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.

இரண்டு, ஹிந்துக்கள் கோவாவிற்குள் மிகச் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

மூன்று, ஹிந்துக்கள் கிறிஸ்தவ சட்டங்களை மதிக்காமல் அதனை உதாசீனப்படுத்துகிறார்கள்.

உண்மையில் கோவாவின் பல பகுதிகளில் ஹிந்துக்கள் பெருமளவு ஒழிக்கப்பட்டிருந்தார்கள். சில பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் தொகையில் ஒப்பிடுகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை மிக,மிகக் குறைவாகவே இருந்தது. உதாரணமாக 1705-ஆம் வருடம் கோவாவின் செலசெடே பகுதியில் ஏறக்குறைய அனைத்து ஹிந்துக்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்டிருந்தார்கள். ஏறக்குறைய ஒரு இலட்சம் கிறிஸ்தவர்கள் இருந்த அந்தப் பகுதியில் வெறும் 3000 ஹிந்துக்கள் மட்டுமே வாழ்ந்தார்கள் என கிறிஸ்தவ பாதிரிகளே எழுதிவைத்திருக்கிறார்கள். கோவாவிலோ அவர்களின் எண்ணிக்கை 12,000 மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக்கப்பட்டுவிட்டார்கள்.

ஹிந்துக்களின் மதநம்பிக்கைகளைக் குலைத்ததுடன் கோவா மதவெறிப் பாதிரிகள் நின்றுவிடவில்லை. கண்ணில் தென்படும் ஒவ்வொரு ஹிந்துவையும் சிறுமைப் படுத்தும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருந்தார்கள்.

டிசம்பர் 15, 1752 அன்று கோவாவின் வைசிராய், ஹிந்துப் பண்டிதர்கள் (பிராமணர்கள்), ஹிந்து மருத்துவர்கள் நகரின் எந்தவொரு பகுதிக்குச் செல்வதாக இருந்தாலும் குதிரைகளில் அமர்ந்தோ அல்லது பல்லக்கில் அமர்ந்தோ செல்லக்கூடாது எனவும், அவ்வாறு பயணிப்பவர்களுக்கு முதல் தடைவையாக 10 குருசோடோக்களும், இரண்டாம் தடவைக்கு 20 குருசோடக்களுடன் அவர்கள் பயணம் செய்த குதிரைகள் மற்றும் பல்லக்குகள் பறிமுதல் செய்யப்படும் எனவும், மூன்றாம் முறை பிடிபட்டால் அவர்கள் உடனடியாக பாதாளச் சிறைகளில் அடைக்கப்படுவாரகள் எனவும் உத்தரவிட்டார்.

பின்னர் 1781-ஆம் வருடம் வைசிராயாக இருந்த கோண்டே-டி-சண்டோமில், கிறிஸ்தவர்கள் எவரும் ஹிந்துக்கள் பயணிக்கும் பல்லக்குகளைத் தூக்கக்கூடாது என உத்தரவிடுகிறார். அவ்வாறு தூக்கிச் செல்லும் கிறிஸ்தவர்களின் அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் எனவும் கூறப்பட்டது.

கிறிஸ்த விவசாயப் பணியாளர்கள் எவரும் ஹிந்துக்களின் நிலங்களில் வேலைசெய்யக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. ஹிந்து விவசாயிகள் கிறிஸ்தவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வதுகூடக் குற்றம் என அறிவிக்கப்பட்டு தண்டனையளிக்கப்பட்டது. அவ்வாறு தண்டனையளிக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்றைக்கும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *