கொலைகாரக் கிறிஸ்தவம் — 21

கோவாவில் கிறிஸ்தவர்களாக மதம்மாறும் ஹிந்துக்களுக்குப் பதினைந்து ஆண்டுகள் வரை நிலவரி எதுவும் தரவேண்டாம் போன்ற பல்வேறு சலுகைகளை போர்ச்சுகீசிய அரசு வழங்கியது

ஹிந்துமதச் சட்டங்களின்படி மகன்கள் அல்லாத ஒரு ஹிந்து இறந்தால் அவனது சொத்துக்கள் அவர்களின் மகள்களைச் சேருவதில்லை (இன்றைக்கு இந்தச் சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன). இதனை உபயோகிக்க நினைத்த கிறிஸ்தவ பாதிரிகள், இறந்தவனின் மகள் கிறிஸ்துவமதத்திற்கு மாறினாலோ, அவள் மாறாது அவளது நெருங்கிய உறவினர்கள் மாறினாலோ அவள் அந்தச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம் எனச் சட்டமியற்றினர். இந்தச் சட்டம் மார்ச் 22, 1559-ஆம் வருடம் கோவாவில் நடைமுறைக்கு வந்தது.

அதுபோலவே ஒரு பெண் கிறிஸ்தமதத்திற்கு மாறிய பிறகு அவளது கணவன் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவளை வெளியே அனுப்பினாலோ, அல்லது அவள் கணவனுடன் வாழப்பிடிக்காமல் வெளியேறினாலோ,  அவளுக்குக் கணவனது சொத்தில் பாதியளவு கிடைக்கும் எனவும் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தங்களது இறைநம்பிக்கையைப் பரப்புவதற்கு இதையெல்லாம் செய்வதில் தவறில்லை எனவும் கிறிஸ்தவ பாதிரிகள் சொல்லித் திரிந்தார்கள்.

போர்ச்சுக்கீசிய வெள்ளையர்கள் ஹிந்துக்களை மதம்மாற்றி அவர்களைக் கிறிஸ்தவர்களாக்கினாலும் அவர்களைத் தங்களின் இனத்திலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தார்கள். அவர்களைப் பெயரளவிற்குக் கூடத் தங்களுக்கு இணையானவர்களாக ஒருபோதும் நடத்தினார்களில்லை. பிப்ரவரி 19, 1718-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசன் எழுதிய கடிதமொன்று, புதிதாக மதம்மாறிய ஹிந்துக்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அவர்களுக்கு ஒருபோதும் போர்ச்சுக்கீசியர்களுக்கு இணையான வேலைகள் கொடுக்கப்படவே கூடாதென்றும், அதிகாரத்தை இந்தியர்கள்மீது செலுத்த இது மிக அவசியமான ஒன்று என்கிறது அந்தக்கடிதம்.

ஒரு போர்ச்சுக்கீசியன் ஒரு வேலையில் எட்டு வருடங்கள் பணிபுரிந்தாலேயே அவன் அந்த வேலையைச் செய்யத் தகுதியானவனாகிறான். அதே இடத்தில் ஒரு மதம்மாறிய ஹிந்து பணிபுரிந்தால் அவன் தகுதியானவனாவதற்குப் பனிரெண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த வேறுபாடு எப்போதும் தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது போர்ச்சுக்கீசிய அரசனின் உத்தரவு.

கோவாவில் நிறவெறிக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதனைக் குறிக்கும் பிரெஞ்சுப் பயணியான ஃபரான்கோ பையார்ட், இந்தியக் கிறிஸ்தவர்கள் கோவாவிலிருந்த உயரிய மருத்துவமனையான ராயல் ஹாஸ்பிடலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு,

நூற்றுக்கணக்கானவர்கள் அந்த மருத்துவமனைக்குத் தினமும் வந்தனர். நான் அங்கு இருக்கையில் ஏறக்குறைய 1500 போர்ச்சுக்கீசிய மற்றும் பிற ஐரோப்பியக் கிறிஸ்தவ நோயாளிகள் அங்கு வந்து மருத்துவம் பார்த்துக்கொண்டனர். ஆனால் இந்தியக் கிறிஸ்தவர்கள் எவரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு என அமைக்கப்பட்டிருந்த சிறிய மருத்துவமனைகளில் மட்டுமே அவர்கள் வைத்தியம்பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். நகரின் இன்னொருபுறத்தில் கிறிஸ்தவப் பெண்களுக்கு மட்டுமேயான மருத்துவமனை ஒன்றும் இருந்தது. அங்கு மதம்மாறிய இந்திய கிறிஸ்தவப் பெண்கள் மட்டும் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். என்கிறார் பையார்ட்.

இன்னொரு பயணியான ஆங்கிலேயர் ஜான் ஃப்ரையர் 1675-ஆம் வருடம் கோவாவில் நிலவிய சூழ்நிலையைக் கூறுகையில், பெரும்பாலான இந்தியர்கள் போர்ச்சுக்கீசியமொழி பேசி, போர்ச்சுக்கீசிய நடை, உடை, பாவனைகளில் நடந்துகொண்டாலும் வெள்ளைக்காரப் போர்ச்சுக்கீசியனைக் கண்டால் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வதினைக் கண்டேன். எவனேனும் ஒரு வெள்ளைக்கார போர்ச்சுக்கீசியன் எதிரே வந்தால் அவனுக்குப் பயந்து வழிவிட்டு, சல்யூட் அடித்து நின்றார்கள் இந்திய கிறிஸ்தவர்கள். என்று எழுதியிருக்கிறார்.

ஆக, புதிதாக மதம் மறியவன் ஐரோப்பிய உடகளை அணிந்து அவர்களைப் போலப் பழக்க, வழக்கங்கள் மேற்கொண்டு, அவர்களை எங்கு பார்த்தாலும் குனிந்து கும்பிட்டுக் கொண்டு திரிந்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஐரோப்பிய வெள்ளையன் இந்தியக் கறுப்பனைவிடவும், அவன் கிறிஸ்தவனாக இருந்தாலும், கலாச்சார ரீதியில் அவனுக்குப் பலமடங்கு தான் உயர்ந்தவன் என்பதனைத் தொடர்ந்து அவன் கறுப்பு இந்தியனுக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தான்.

இன்னொருபுறம் ஹிந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி, போர்ச்சுக்சியப் பாதிரிகளே சிரிக்குமளவுக்கு ஒருவருக்கொருவர் உளவுபார்த்துச் சொல்வதும், அடுத்த சாதிக்காரனைக் குறித்துக் கோள்சொல்வதுமாக இருந்தார்கள். உதாரணமாக பாதிரிகளின் மதமாற்றத் தொல்லை காரணமாக இந்தியாவின் பிறபகுதிகளுக்குச் சென்ற ஹிந்து வியாபாரிகளை மீண்டும் திரும்பி வருமாறு போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் கேட்டுக்கொண்டபோது, அவ்வாறு திரும்பி வரவேண்டுமென்றால் தனக்கு பிடிக்காத இன்னாரைப் பழிவாங்கவேண்டும் என வேண்டிக்கொண்ட சம்பவங்கள் திரும்பத் திரும்ப நிகழ்ந்தன. ஹிந்துக்கள் பல குழுக்களாக, ஜாதிவாரியாக, சொந்த கோபதாபங்கள் காரணமாக, ஒருவர் காலை ஒருவர் வாருபவர்களாக இருந்ததால், மதமாற்ற பாதிரிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் ஒன்றுபட்டு எடுக்க இயலாதவர்களாக இருந்தார்கள்.

பிராமண்ர்களும் தங்களுக்குளுள்ள பிரிவினைகளை வைத்துக்கொண்டு சண்டையிட்டுப் பிரிந்து கிடந்த வரலாறும் காணக் கிடைக்கிறது. பிராமணர்களுக்கும், அவர்களுக்குள்ளேயே மதம்மாறியவர்களுக்கும் — சரஸ்வத் பிராமணர்களுக்குள்ளே ஸ்மார்த்த பிரமாணர்களுக்கும், வைணவ பிராமணர்களுக்கும் இடையே இருந்த பிளவுகளும், சச்சரவுகளும் படிக்கக் கிடைக்கின்றன. இதுவே இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதினை ஹிந்துக்கள் எவரும் இறுதிவரை உணரவில்லை என்பதுதான் பரிதாபம்.

பிராமணர்களும், சாரதாக்கள் (Charados) என்கிற இரு சாதிகள் கோவாவின் உயர்சாதிகளில் முதன்மையானவர்களாக இருந்தார்கள்.  இவர்களின் சாதிப்பிடிப்பு மிக ஆழமானது. இந்த உயர்சாதிக்காரர்களில் பலர் மதம்மாறிக் கிறிஸ்தவர்களான பிறகும்  தங்களின் சுயசாதிப் பிடிப்பினை விட்டார்களில்லை. அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் கிறிஸ்தவப் பெயர்கள் கொண்டிருந்தாலும் அதனுடன் தங்களின் சுயசாதியையும் சேர்த்தே அழைத்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்க ஆவணங்களிலும் அவர்களின் பெயர்கள் சாதி அடையாளத்துடனேயே இருந்தது.  இன்குசிஷன் விசாரணையால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களும் தங்களின் சாதிய அடையாளங்களை இழக்க விரும்பவில்லை என்பது இன்குசிஷன் ஆவணங்களிலிருந்து தெரிகிறது.

மதம் மாறிய இந்த பிராமணர்களுக்கும் அவர்களின் உட்பிரிவுகளுக்கும் இடையே யார் பெரியவர் என்கிற விவாதங்கள் தொடர்ந்து நடந்து, அவை பெரும் கலவரமாகவும் மாறியிருந்திருக்கின்றன. இரண்டுபக்கமும் ஆயுதம்தாங்கியவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ரத்தம் சிந்தியதாக ஜனவரி 15, 1741-ஆம் வருடம் கோவா வைசிராய் எழுதிய ஒரு கடிதத்தின்மூலம் தெரியவருகிறது. அவ்வாறு சண்டையிட்டுக்கொண்டவர்கள் கைத செய்யப்பட்டு தண்டனையளிக்கப்பட்டு அவர்களின் பெயர்களும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 மதம் மாறிய வைணவர்களுக்கும், ஸ்மார்த்தர்களுக்குமிடையே நடந்த சண்டைகள் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களுக்குப் பெரும் தலைவலிகளை உண்டுபண்ணின.  இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கினார்கள்.  இவர்களிடையே தொடர்ந்து நடந்த சண்டைகளைச் சமாதானம்செய்ய அரசாங்கம் அடிக்கடித் தலையிடவேண்டியிருந்தது. எனவே இந்த இரண்டு பிரிவினர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் தள்ளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டார்கள். இருப்பினும் இந்த இருபிரிவினர்களுக்குமிடையே தொடர்ந்த திருமண பந்தங்கள் இருந்தன.  ஒரு பிரிவிலிருந்து திருமணமாகி இன்னொரு பிரிவுக்குச் செல்லும் பெண், தன்னுடைய கணவன், குழந்தைகளின் சாதிப் பிரிவுக்கு மாறவேண்டியிருந்தது. அவ்வாறு மாறாத பெண்கள் கணவனால் துன்புறுத்தப்பட்டதால், பல பிராமணப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

பல ஹிந்துக்கள் தங்களின் மதத்திற்காக, கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக பல தியாகங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். அதேசமயம் பல சாதி ஹிந்துக்கள் தங்களிடையே இருக்கும் சிறிய வேற்றுமைகளைக்கூடச் சகித்துக்கொள்ளாமல், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி ஒருவரை ஒருவர் மதிக்காமல் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தச் சண்டைகளுக்கு ஆதரவாக அயல் நாட்டுக்காரர்களான போர்ச்சுக்கீசியர்களை அழைத்து தங்களைத் தாங்களே அவமானப்படுத்திக்கொண்டார்கள். தங்களின் மதத்தையும், கலாச்சாரத்தையும், மதநம்பிக்கைகளையும், சடங்குகளையும் அழிக்கத் துடித்துக்கொண்டிருந்த போர்ச்சுகீசியர்களுக்குத் துரதிருஷ்டவசமாக எல்லா வசதிகளையும் ஹிந்துக்களே செய்து கொடுத்தார்கள் என்பது கோவாவின் வரலாறு நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

*

இனி, இன்குசிஷன் விசாரணைகளில் எந்த மாதிரியான சித்திரவதைகள் மதம்மாற மறுத்த ஹிந்துக்களுக்கும், மதம்மாற்றப்பட்ட பின்னரும் அதனைப் பின்பற்றாத யூதர்களுக்கும் போர்ச்சுக்கீசிய பாதிரிகளால் நடத்திக் காட்டப்பட்டன என்பதினைக் குறித்து டெல்லோன் சொல்வதினை (Dellon) சுருக்கமாகக் காண்போம். டெல்லோன் இன்குசிஷன்நடந்த சமயத்தில் கோவாவில் இருந்தவர்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், ஒவ்வொரு நாள் காலையிலும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகும் பலரின் அலறல் மற்றும் அழுகைச் சத்தங்களைக் கேட்டேன். அந்தக் கொடும் சித்திரவதைகளுக்கு ஆளான பலரையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஆண்களும், பெண்களும் அந்தச் சித்திரவதைகளின் காரணமாக உடல் ஊனமடைந்து கண்ணீர் சிந்தினார்கள். அவர்களில் ஒருவன் என்னுடைய சிறையில் என்னுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தான்.

இன்குசிஷன் விசாரணைகளின்போது பாதிரிகள் தங்களிடம் பிடிபட்டவனைப் பல சித்திரவதைகள் செய்து அவன் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் உண்மையானவையா, அல்லது குற்றம் சாட்டப்பட்டவன் உண்மைகளை முழுமையாகச் சொல்லாமல் தங்களிடமிருந்து மறைக்கிறானா என அறிந்தார்கள்.

முதலில் சாதாரண விசாரணைகள் செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவன் கிறிஸ்துவுக்கு எதிரானவன் எனப் பட்டம் சூட்டப்பட்டு, இன்னொரு பிரிவான “செக்யூலர்” பிரிவுக்கு (மதச் சார்பற்றவர்களை விசாரிக்கிற பிரிவு!) அனுப்பி வைத்தார்கள். அந்தப் பிரிவே மேற்கண்ட உடல் ரீதியான சித்திரவதைகளை “கிறிஸ்துவுக்கு எதிரானவனுக்கு” வழங்கும்.

கோவா இன்குவிஷன்

இந்த சித்திரவதைகள் தாங்காமல் எவரேனும் தாங்கள் கிறிஸ்துவமதத்திற்கு எதிராகப் பேசின குற்றத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அவனது சித்திரவதைகள் நிற்காது. அதற்கும் மேலாக அவன் தனக்குத் தெரிந்த பிற “கிறிஸ்தவ எதிரிகளையும்” காட்டிக்கொடுக்கவேண்டும்.  எப்படிச் என்னென்ன காரணங்களுக்காக, எத்தனை நாட்களுக்குச் சித்திரவதைசெய்யவேண்டும் என்பதற்கான வழிகாட்டிகள் துல்லியமாக எழுதிவைக்கப்பட்டு, அதன்படியே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதினை நாம் கவனிக்கவேண்டும். அதனை எல்லாம் இங்கு எழுதுவதற்குச் சாத்தியமில்லை. அந்த விவரங்கள் அனைத்தும் இன்றைக்குப் பொதுவெளியில் கிடைக்கின்றன.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *