(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்
மொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்
விளக்கவுரை: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
(2)
பீ³ஜஸ்யாந்தரிவாங்குரோ ஜக³தி³த³ம் ப்ராங்நிர்விகல்பம் புந:
மாயாகல்பிததே³ஶகாலகலநாவைசித்ர்யசித்ரீக்ருʼதம் ।
மாயாவீவ விஜ்ருʼம்ப⁴யத்யபி மஹாயோகீ³வ ய: ஸ்வேச்ச²யா
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம் ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 2॥
வித்துக்குள் முளைபோற் படைப்புக்கு முன்பேதும்
வேற்றுமை யிலாத தாகி
பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்
பேதங்க ளான வுலகைச்
சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச்
சிருட்டித்த தேவ தேவே
சித்தர்க்குள் உறுமூர்த்தி ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி! போற்றி !!
இந்த இரண்டாவது பாடலில் பகவத் பாதர் ‘தத்வமஸி’ எனும் மகாவாக்கியத்தின் ‘தத்’ பதத்தினைப்பற்றிப் பேசுகின்றார். தத் பதத்தின் பொருள் பிரமம் என்பது. அது, அந்தப் பிரமமே ‘ஜகத் காரணம்’; பிரபஞ்ச தோற்றத்திற்கு முதற் காரணமும் நிமித்த காரணமுமாம் எனக் கூறுகின்றார். (அபின்ன நிமித்த , உபாதான காரணம்). அத்துடன், ‘சற்காரிய வாதம்’ எனும் கோட்பாட்டினையும் நிறுவ முனைகிறார்.
சத் என்றால் உள்ளது; காரியம் என்றால் தோன்றும். உள்ளதே தோன்றும்; இல்லது வாராது என்பது இக்கோட்பாடு. காரண உருவத்தில் மறைந்திருப்பதுதான் காரிய வடிவத்தில் வெளிப்படும். மண்ணில் குடம் சத்தி வடிவமாக மறைந்துள்ளது; காரிய வடிவத்தில் வெளிப்படுகின்றது. பொன்னில் ஆபரணங்கள் சக்தி சூக்குமமாக மறைந்துள்ளன்; காரிய வடிவில் வெளிப்படுகின்றன. இதனை, பகவத் பாதர்கள் “வித்துக்குள் முளைபோல் படிப்புக்கு முன் வேற்றுமை யிலாததாகி” என்று உரைத்தார்.
‘ சிறுமீனின் கண்ணைகாட்டிலும் சிறிய முட்டையில் அரசன் தன் நாற்படை பரிவாரங்களுடன் வந்து தங்க நிழல் தரும் பெரிய ஆலமரம் உள்ளது’ என்பது (தெள்ளிய ஆலின் ) தமிழ்ப்பாட்டியின் வாக்கு. இந்தச் சிறிய விதைக்குள் தன்னைப் பிற மரங்களிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளாமலும் வேர், கிளை கொப்பு விழுதுகள் போன்ற உறுப்புகள் காணப்படாமலும் சத்தியாக ஆலமரம் மறைந்துள்ளது. இதனை வடமொழியில் ‘நிர்விகல்ப ரூபம்’, அவ்வியக்தம் (un manifested, undifferentiated form ) என்பர். அதாவது, காணப்படும் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் அது ‘ஜகத் காரணமாக’ சூக்கும சத்தியாகப் பிரமத்தில் இருந்தது. அதனால் பிரமம் பிரபஞ்சத்திற்கு வித்து. எனவே, இவ்வுலகம் பிரமத்தினால் படைக்கப்பட்டதன்று. பிரபஞ்சம் படைக்கப்பட்ட தன்று. ஏற்கெனவே உள்ளது.
ஏற்கெனவே உள்ள சூக்குமப் பிரபஞ்சம் நம்முடைய கண்ணுக்குக் காட்சிப் படவில்லை. எனவே காட்சிப்பட்ட பிரபஞ்சத்தினை இறைவன் படைப்பு எனக் கருதுகிறோம். பிரமமே முதற்காரணம். The world was there In potential form, in Brahman, the kAranam, material cause.
பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரமவித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்.
இந்த பொருட்பன்மையும் வேறுபாடுகளும் எப்படித் தோன்றின?பகவத் பாதர் கூறுகிறார்-, ‘மாயா கல்பித தேச கால” ,அதாவது, பித்துச்செய் மாயையால் தேசகா லங்களால்
பேதங்க ளான வுலகை”.
அறிவு மயக்கத்தைச் செய்யும் மாயையால் உண்டானது தேச காலம். அந்த மாயா சத்தியும் பிரமத்தினுள்ளதே. மாயா சத்தி விட்சேப சத்தியினை உடையது.
விட்சேபசத்தி viṭcēpa-catti, n. < vi-kṣēpa + šakti. 1. Elasticity; ஒடுங்கிவிரியுஞ் சத்தி. (W.) 2. The Energy of Māyā, as the cause of the five subtle elements; சூக்கும பஞ்சபூதங்களுக்குக் காரணமான மாயா சத்தி. (நானாசீ. 150.) மாயையின் விட்சேபத்தினால் காலதேச விகற்பங்கள் தோன்றும். காலதேச பரிச்சேதங்களோடு காணும்போது பிரமம் வேறுபாடுகளை யுடைய பன்மையான துவிதமாகக் காட்சிப்படும். ஏகமாகிய பிரமம் அநேகமாகிய ஜகத்தாகத் தோன்றும்.
*****
பகவத்பாதரவர்கள் சத்காரிய வாதத்தின்படி வித்தாகிய பிரமமே தன்னுடைய மாய சத்தியினல் தன்னுள் சூக்கும சத்தாக இருந்த பிரபஞ்சமாக விரிந்தது என்று கூறியதைக் கண்டோம். அதற்கு அவர் பயன்படுத்தியசொல் ‘விஜ்ரிம்பயதி’ (‘vijrimbhayati’). தன்னிச்சையால் தானே மலர்தல் என்பதுகருத்து.
தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு. மாயவாதி தன்னிடமிருந்தே புதியபுதிய பொருள்களைத் தோற்றுவிக்கின்றான். கையை நீட்டி விரித்துக் காட்டுகின்றான். ஒன்றுமில்லாத உள்ளங்கையில், மூடித்திறந்தவுடனே தொப்பியொன்று காணப்படுகின்றது. தொப்பியைத் தூக்கினால் புறா இருக்கிறது. தொப்பியால் புறாவை மூடித் திறந்தால் வேறொரு பொருள் காணப்படுகின்றது. இவற்றையெல்லாம் தனது மாயாசத்தியினால் தன்னிடமிருந்தே தோற்றுவிக்கின்றான். சித்தயோகி சங்கற்பத்தால், தன் நினைவால் உலகைப் படைப்பதற்கு உதாரணம் விசுவாமித்திர முனிவர் திரிசங்கு என்பானுக்குச் சுவர்க்கம் படைத்துக் கொடுத்தது போலாம். எந்தவொரு மூலப்பொருளும் இன்றி மாயவாதியும் சித்த யோகியரும் புதிய பொருள்களைத் தங்கள் சங்கற்பத்தால் அல்லது நினைவால் படைத்தலைப் போலப் பிரமமும் தன் விருப்பத்தால் சங்கற்பத்தால் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கின்றான் என்கிறார் பகவத் பாதர். கிறித்துவர்கள் God created the world out of nothing என்பர். அது போன்றதே இதுவும்.
அதாவது, பிரமம் உலகைப் புதிதாகப் படைக்கவில்லை; தன்னிடம் சூக்குமசத்தியாக இருந்தனைச் சங்கற்பத்தால் மலரச் செய்தார்.பிரபஞ்சம் சொப்பன நகர் என் முதற் பாடலில் கூறினார். இங்கு மாயாவியின் படைப்பைக் கூறினார். மாயாவியின் படைப்புக் கண்கட்டு வித்தை என்பர் அவன் படைத்த உலகம் வெறும் தோற்றமேயன்றி உண்மையில் இல்லை. அதனைப் போன்றதே காணப்படும் இந்த பிரபஞ்சமும் சொப்பனப் பிரபஞ்சமே. இதனால் பிரமமே பிரபஞ்சத் தோற்றத்திற்கு முதற்காரணமும் நிமித்த காரணமும் ஆம் எனப் பகவத்பாதர் கூறினார்.
கனவில் தோன்றும் பிரபஞ்சத்திற்குக் கனாக் காண்பவனே முதற்காரணம். அவனே தன்னுள் இருந்ததனை வெளிப்படுத்துவதனால் நிமித்த காரணமுமாவன்.. தன்னுள் இருந்த உலகை வெளிப்படுத்துதற்குக் கருவியாக இருந்தது அவனுடைய நினைவு அல்லது இச்சை. எங்ஙனம் கனாக் காண்பவனின் முயற்சியின்றிக் கனவு தோன்றுகின்றதோ அவ்வாறே எச்செயலுமின்றிப் பிரமம் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கின்றது. அதாவது, பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதில் பிரமத்துக்கு விருப்போ, வெறுப்போ எவ்வுணர்ச்சியோ செயலோ இல்லை. கனவு காண வேண்டும் என்ற விருப்பமோ எண்ணமோ இல்லாதவனுக்குக் கனவு இயல்பாகத் தோன்றுவது போல.
“Why did Īśvara create the creation? Many people are frustrated by this question. The answer is, because that is Īśvara’s nature. Like even heat and light are the defining attributes of fire, so also creation, sustenance and resolution are of Īśvara; that is His nature” – Svāmī Dayānanda Sarasvati.
நெருப்பின் குணம் சூடும் ஒளியும் போல ஈசுவரனின் பிரபஞ்சத்தோற்றமும் காப்பும் ஒடுக்கமும். இது இயற்கை. இதில் அவனுடைய விருப்பு, இச்சை, செயல் எதுவும் இல்லை
வேதாந்தத்தில் படைப்பும் இல்லை; இறுதியும் இல்லை. எனவே நடுவும் இல்லை. ஒரு மையப்புள்ளியிலிருந்து கோலம் விரிவதும் சுருங்குவதும் போல. நேர்கோடு என்றால் அதற்குத் தொடக்கமும் இறுதியும் உண்டு. வட்டத்தில் எங்கு தொடக்கம் எங்கு இறுதி என்று கூறுவது? அது போன்றதுதான் வேதாந்தத்தில் பிரபஞ்சத் தோற்றமும் இறுதியும். இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது.
இந்தப் பிரபஞ்சத்தில் சேதனப் பிரபஞ்சமான ஆன்மாக்கள் உழன்று வருந்திக் கொண்டுள்ளனவே. தோற்றமும் இருப்பும் இறுதியும் ஒரு சுழற்சியாக இயங்கிக் கொண்டே இருக்குமென்னில் பிறப்பிறப்பினில் உழன்று துன்புறும் ஆன்மாக்களுக்கு விடிவே இல்லையா எனில் , தன்னைச் சேதனம், அறிவுடைப் பொருள்; நான் அதிஷ்டானம்; என் மேல் இந்தப் பொய்ப் பிரபஞ்சம் அதிட்டித்துள்ளது. அறிவாகிய என்னை இந்த சொப்பனம் போன்ற பிரபஞ்சம் பந்திக்காது என்றறிந்தால் இந்த மாயாவிகார சுழற்சியிலிருந்து உய்யலாம்.
****
இனி, இங்கு கூறப்பட்டசெய்திகளைச் சைவசித்தாந்தம் எப்படி நோக்குகின்றது என்பதைப் பார்ப்போம்.
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தின் இரண்டாம் பாடலுக்கு உரை காணும் பெரியோர், இப்பாடல் தத்துவமசி மகாவாக்கியதின் ‘தத்’ பதத்தைப் பேசுகின்றது என்றும் ‘தத்’ பதம் பிரமத்தைக் குறிக்கின்றதென்றும், பிரமமே பிரபஞ்சத்தின் முதற்காரணம் என்றும் பிரபஞ்சத்தில் காணப்படும் வேற்றுமைகளால் பிரமம் விகாரப்படுவதில்லை என்றும் கூறினர். பிரமம் பிரபஞ்சத்தின் முதற்காரணம் என்று கூறப்பெறுதலில் இரண்டு நிலைகளைக் கூறுகின்றனர்.
அவற்றில் முதலாவது, பிரமமே பிரபஞ்சத்திற்கு ‘ அபின்ன நிமித்தோபாதான காரணம்’ (abhinna nimitta upadana karaNam). அதாவது பிரபஞ்சத் தோற்றத்துக்குப் பிரமமே நிமித்த காரணமும் (intelligent cause) உபாதான காரணமும் (material cause) என்பர். சித்து முதற்காரணம் ஆகுமோ, சித்து பரிணாமம் அடையுமோ, அது எப்படிச் சடமாகிய பிரபஞ்சம் ஆகும் என்று கேட்டால், எப்படிச் சித்தாகிய சிலந்திப் பூச்சி தன்னிடமிருந்து வலையை உண்டாக்குகின்றதோ அதைப் போலச் சித்தாகிய பிரமத்தினின்றும் சடமாகிய பிரபஞ்சம் தோன்றும் என்பர். (spider and spider web)
இதற்குச் சான்றாக, “ ஊர்ணநாபி (சிலந்திப் பூச்சி) யானது எப்படி நூலைச் சிருட்டிக்கின்றதோ, பூமியில் எப்படிப் பல ஓஷதிகள் உண்டாகின்றனவோ மனிதன் மீது எப்படித் தலைமயிர், உடம்பு மயிர் உண்டாகின்றனவோ அப்படியே பிரமமாகிய க்ஷரத்தினின்றும் (அழிவில்லாதது) யாவும் உண்டாகின்றன’ என்னும் முண்டகோபநிஷத வாக்கியத்தைக் காட்டுவர்.
வேதம் பொய் சொல்லுவதில்லை. வியாக்கியானம் செய்வோரெ தமக்கு வசதியாகப் பொருள் கொள்கின்றனர்.
தலை மயிர், உடல்மயிர், சிலந்தியின் வலை இழை என்பன சடமாக இருத்தலினாலேயே அவை சித்திருந்து வந்தனவல்ல; சித்து பரிணமியாது என்பது பெறப்படும்.
வேதம் கூறும் ஊர்ண நாபி உவமானத்துக்குச் சைவசித்தாந்தம் கூறும் விளக்கம் அறியத் தக்கது. ஊர்ண நாபியின் உடம்பே உபாதான காரணம், ஊர்ணநாபியின் உயிரே நிமித்த காரணம். அவ்வாறே பிரபஞ்சத் தோற்றத்திற்குச் சிவம் நிமித்த காரணம், சிவசத்தி துணைக்காரணம் (instrumental cause); மாயை யாகிய சடப்பொருள் உபாதான காரணம், அந்த உபாதான காரணத்தின் இருப்பிடம் சிவமே; சிவத்தின் பரிக்கிரக சத்தி, அதாவது வேண்டும் போது பயன் கொள்ளுகின்ற சடசத்தியே மாயை. நிமித்த காரணமாகிய சிவம் தன்னிடத்தில் கிடக்கும் மாயை எனும் முதற்பொருளுடன் தன் சத்தியாகிய ஆணையால் கூடிப் பிரபஞ்சத்தை படைக்கின்றது. என்பது சைவக் கொள்கை. “மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க” என்பது மணி வாசகம்.
சிவம், நிமித்த காரணமாகப் பிரபஞ்சத்துடன் தன் சக்தியினால் பிரிப்பின்றி அபின்னமாகக் கலந்து நின்றே படைத்துக் காத்து ஒடுக்கி இயக்குகின்றான் என்பது சைவக் கொள்கை
****
சற்காரிய வாதத்திற்கு எடுத்துக் காட்டாகக் கூறிய ‘ வித்துக்குள் முளைபோல்’ என்ற உவமை சைவ சாத்திரத்திலும் கூறப்படுகின்றது. ஆனால் இரண்டினுக்கும் இடையில் பெருத்த வேற்றுமை உண்டு.
பிரம முதல் வாதிகள், வித்தின் இடத்தில் பிரமத்தையும் பிரமத்தின் உள் சூக்கும சித்தாக இருக்கும் சேதன அசேதன பிரபஞ்சங்களை வித்துக்குள் உள்ள முளையாகவும் கூறுவர். பிரபஞ்சத்தில் காணப்படும் ஏற்ற தாழ்வுகள், வேறு பாடுகளுக்கு மாயையாகிய மித்தையினின்றும் தோன்றிய கால தேசங்களைக் காரணமாகக் கூறுவர். சித்தாந்தம் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.
சிவஞானபோதம் வெண்பா,
“ வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம்
அத்தன்தாள் நிற்றல் அவர்வினையால் வித்தகமாம்”
என்று கூறிற்று. இதனால் முதல்வன் உலகிற்கு நிமித்தகாரணன்; முதற்காரணன் அல்லன்; உலகிற்கு முதற் காரணமாகிய மாயைக்கு முதல்வன் தாரகமாக நிற்பதால், உலகம் அவனிடத்திலிருந்து தோன்றி அவனிடத்தில் ஒடுங்கும்எனக் கூறலும் அமையும் என்பது பெறப்பட்டது.
இவ்வெண்பாவின்படி, வித்துப் போல் மாயை, அதனில் அடங்கிச் சூக்குமமாய் நின்ற வித்துப் போல உலகம்; வித்துக்கு ஆதாரம் நிலம்; மண். மண் குளிர்ந்தால்தான் வித்து முளைக்கும். வித்துக்கு ஆதாரம் மண் . மாயைக்கு ஆதாரம் சிவசத்தி. நிலத்திலுள்ள மண் குளிர்ந்தால்தான் வித்து முளைக்கும்; தானே முளையாது. மண் குளிர்வதைப் போல முதல்வனின் திருவருள் சங்கல்பித்த வழியே பிரபஞ்சம் தோன்றும் என இதனால் உணர்த்தப்பட்டது.
உலகத்துப் படைப்புக்களில் காணப்படும் வேற்றுமைக்குக் காரணம் அவற்றின் வினைப் பயனே என்பதை, “அவர்வினையால் வித்தகமாம்” எனும் தொடரால் உணர்த்தினார். சிவசத்தி சங்கற்பித்தவழி அவரவர் வினைக்கீடாக உடல் முதலியன தோன்றும். என்பது இதனாற் பெறப்பட்டது. நிலம் குளிர்ந்த வழியல்லது அதன்கண் கிடந்த வித்து முளையைத் தோற்றுவிக்காது. அதைப் போலவே சங்காரகாலத்தில் மாயையில் ஒடுங்கிய உலகம் அதற்கு ஆதாரமாய் நின்ற இறைவனின் சத்தியில் ஒடுங்கித் திருவருள் சங்கற்பித்த வழியே தோன்றிவதாகும்.
சைவசித்தாந்தம் வலியுறுத்தும் சற்காரியத்தின்படி,
1. வித்து- மாயை. முளை- உலகம். மண்- இறைவன்.மண்குளிர்தல் – திருவருட் சங்கற்பம். மாயையுள் ஒடுங்கிய பிரபஞ்சம். வித்து இல்வழி நிலத்தினின்றும் அங்குரம் தோன்றாது. அதுபோல மாயை இல்வழி பிரமத்தினின்றும் உலகம் தோன்றாது. இது பிரம்மப் பரிணாம வாதிகளை மறுத்தது.
2. மாயை உள்பொருளே. அநிர்வசனமோ மித்தையோ அன்று. பிரபஞ்சத்திற்கு முதற்காரணம்; மாயை நித்தப் பொருள்; மாயை, சடம்; மாயை முதல்வனுக்கு, வேண்டும்போது பயன்படும் பரிக்கிரக சத்தி; மாயை முதல்வனின் வியாபகத்தில் வியாப்பியம்; மாயை உள்பொருள், மெய்ப்பொருள்; மாயை அருவப்பொருள். இக்காரணங்களால் மாயை அநிர்வசனம் என்பார் கருத்து மறுக்கப்பட்டது.
3. வித்தும் முளையும் நிலனும் போல் என மாயையும் மாயாகாரியமாகிய உலகையும் முதல்வனையும் வேறு கூறினமையால், “பிரபஞ்சத்திற்கு முதற்காரணமும் நிமித்த காரணமும் முதல்வன் ஒருவனே” என்னும் சிவாத்துவிதர் கொள்கையும், வாசுதேவனாகிய முதல்வனே பிரபஞ்சத்தின் சடமும்சித்துமாகவும் உள்ளான் எனும் பாஞ்சராத்திரிகள் மதமும் மறுக்கப்பட்டது.
உலகைச் சித்துச்செய் மாயாவி யோகியைப் போலச் சிருட்டித்த தேவ தேவே
பிரமம் எந்தவொரு மூலப்பொருளும் முயற்சியும் இன்றி நினைவால் பிரபஞ்ச சிருஷ்டியைச் செய்வதற்கு மாயாவியின் மாயவித்தை, யோகியின் செயல் ஆகியவற்றை இப்பாடல் கூறுகின்றது.. இதுபற்றிய பொருள் விளக்கம் முன்னமேயே அளித்துள்ளேன்.
சைவசித்தாந்தமும் இறைவன் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு உதாரணமாக மாயாவியைக் கூறுகின்றது. ஆனால் இரண்டற்கும் இடையில் வேறுபாடு மிகுதியும் உண்டு.
மந்திரவாதி தன்னிலிருந்து முன்னில்லாத பொருள்களைத் தோற்றுவிக்கும்போது தன்னை மறைத்துக் கொள்வதில்லை. அதேபோல் யோகியும் தன் சக்தியால் உலகத்தைப் படைக்கும் போது அவன் மறைந்து விடுவதில்லை. மாயாவாதி தன்னிடமிருந்து முன்னில்லாத பொருளைத் தோற்றுவிக்கும்போது அவனும் காட்சிப்படுகின்றான்; அவன் தோற்றுவிக்கும் பொருள்களும் காட்சிப்படுகின்றன. அவ்வாறே, யோகி புதியதொரு உலகைத் தோற்றுவிக்கும்போது அவனும் காட்சிப்படுகின்றான்; அவன் தோற்றுவிக்கும் உலகமும் காட்சிப்படுகிறது. அவர்கள் தோற்றுவிக்கும் பொருள்களில் அவர்கள் கலந்துவிடுவதில்லை.
பிரமம் எந்த நிலையிலும் காட்சிப் பொருளாவதில்லை. எனவே பிரபஞ்ச சிருஷ்டிக்கு மாயாவாதியும் யோகியும் பொருத்தமான எடுத்துக் காட்டாவதில்லை.
சிவ வியாபகத்தில் சேதன அசேதன பிரபஞ்சம் முழுவதும் வியாப்பியமாக அடங்கியுள்ள சிவ வியாபகத்தை ஔபச்சிலேடிக வியாபகம் என்பர். அதாவது, தன்னுள் வியாப்பியமாக அடங்கியுள்ள பிரபஞ்சத்தின் உள்ளும் புறமுமாகிய வியாபகம். சிவன் அனைத்திற்கும் ஆதார அந்தர வத்து; அதனால், எதனையும் புறத்தேயிருந்து படைப்பதில்லை. அனைத்திலும் கலந்திருந்தே படைக்கின்றான். “மருவி எப்போருளும் வளர்ப்போன் காண்க” என்றார், மணிவாசகர். அறிவுடைய பொருள்கள், அறிவிலாப்பொருள்கள் எல்லாவற்றிலும் கலந்து நின்று அவற்றைப் படைத்துக் காத்து,.சேதனப் பொருள்களின் அறிவையும், அசேதனப் பொருள்களின் இயல்புகளையும் வளர்ப்பவன். இறைவன் எல்லாப்பொருள்களிலும் கலந்து நின்று அவற்றை இயக்குவதால்தான் அவை இயக்கமும் வளர்ச்சியும் பெறுகின்றன. கூடவே கலந்திருந்து இவ்வாறு செயல் புரிபவனை ஆன்மாக்கள் தம் பாச அறிவினால் அறிய முடியாத நுட்பமானவன் இறைவன்.
இறைவன் உயிர் உலகுகளுடன் கலந்து நின்றே, தன்னைப் புலப்படுத்திக் கொள்ளாது ஐந்தொழில் செய்வதை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள்,
“ – தாரணியில்
இந்திரசா லம்புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்திற் சாராது சார்வதுபோல்”
என்றுரைத்தார்.
இந்திர சாலம் புரிபவன், மாயவித்தை காட்டும்போது தனித்து நின்றானென்றால், வித்தையைக் காண்பவருக்கு, அவன் காட்டுவது அனைத்தும் பொய்,மாயம், கண்கட்டு வித்தை என்பது புரிந்துவிடும். ஆனால் அவ்வித்தையில் அவனும் கலந்து விடுவானேயாகில் காண்பன அனைத்தும் உண்மையே எனக் காண்பவர் கருதுவர். அத்தகைய மாயாவியின் செயலே இறைவன் செயலும்.
சில மாதங்களுக்கு முன், கோவையில் pro zone என்னும் ‘மாலில்’ ஒரு மேஜிக் நிபுணராகிய இளைஞர், அரை மணி நேரம் ஆகாயத்தில் பறந்து திரிந்து வித்தை காட்டினார். கீழே மக்கள் கூட்டத்தில் நின்ற அவர், ஆகாயத்தில் பறந்தபோது, காணவில்லை. எனவே, அக்காட்சியைக் கண்டவர்கள் அவரே,ஆகாயத்தில் உண்மையாகப் பறந்தார் என நம்பினர். அவரே தாம் செய்தது கண்கட்டு வித்தை என்று பின்னர் கூறினார். இதுபோன்றதே இறைவன் செயலும்.
(தொடரும்)
மரியாதைக்குரிய ஐயாவுக்கு , அடியேனுக்கு பலநாளாக ஒரு சந்தேகமிருக்கிறது.உபநிடதங்கள் 108 எட்டுமே பிராமணம் தானா என்பதில் சந்தேகம் வருகிறது.பல ஆச்சாரியார்கள் ஜாபாலம்,சரபம் போன்ற சிவபரத்துவ உபநிடதங்களை கையாளாததாலும்
அரதத்த சிவாசாரியாரும் அப்பய்ய தீக்கிதரும் கூட அரிகரதாரதம்மியம்,சிவதத்துவ விவேகம் போன்ற நூல்களில் எடுத்தாளவில்லை என்பதாலும் அவை அப்பிராமணம் என வைணவர் விலக்குகின்றனர்.
அவை பிராமணமா இல்லையா என்பதை விளக்க வேண்டுகிறேன்.
முக்திகமும் கற்பையே என்கின்றனர்
மகாபாரதத்திலும் கூட சைவர்கள் அநுசாஸன பருவத்தில் இகைச்செருகல் நிகழ்த்தியதாகக் கூறுகின்றனர். அதாவது மாத்துவர்கள் செய்த ஸ்ரீமத் மாபாரத நிர்ணயம் என்னும் நூலில் சிவபரத்துவமான கதைகள் இல்லை என்றும் அவை பிற்காலத்து இடைச்செருகல்கள் என்றும் கூறுகின்றனர்.
இதற்கு பதில் அளிக்க வேண்டுகிறேன்