அப்பாவின் துண்டு

‘பொத்’தென்று யாரோ என்னைத் தூக்கியெறிந்ததால் ஏற்பட்ட வலி உணர்வுதான் எனது வாழ்வில் எனக்கு முதலில் தெரிந்த நினைவு.  அழுதுகொண்டே கண்களை முதன்முதலாகத் திறந்து பார்த்தபோது எனக்குத் தெரிந்ததெல்லாம் குப்பைகூளங்கள்.  மூக்கைத் துளைக்கும் துர்நாற்றம். அங்கிருந்து என் தாயின் அரவணைப்புக்குச் செல்லவேண்டும் என்ற உந்துதலில் இரண்டடி எடுத்துவைத்த நான் அப்பெரிய குப்பைமேட்டிலிருந்து உருண்டு விழுந்தேன்.

“அடாடா, யார் இப்படி விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்?” என்றபடி நான் தூக்கியெடுக்கப்பட்டேன்.  நல்ல மணம் வீசியது.  இதமான அக்கதகதப்பிற்குள் எனது முகத்தைப் புதைத்துக்கொண்டு குரல்கொடுத்தேன்.

என்னைத் தூக்கிய அவர் எங்கோ நடந்து சென்றார்.  அந்த அரவணைப்பில் கண்ணயர்ந்தேன்.

“பார்வதி, பார்த்தாயா?  யாரோ வேண்டாம்னு குப்பைமேட்டில் இந்த அழகான…” பரிவான அந்தக் குரலை இடைமற்ந்து, “அப்பா! கண்டகண்ட சனியனையெல்லாமா தூக்கிக்கொண்டு வருவீர்களோ?  என்ன ஜாதியோ, என்ன வியாதியோ, வேண்டாம்னு விசிறியெறிந்திருக்கிறார்கள்.  நம்ம வீட்டில ஒரு குழந்தையும் இல்லேன்னு, ராமேஸ்வரம் போய் வந்தாச்சு.  இந்த லட்சணத்துல, குப்பைமேட்டுலேந்து ஒண்ணை எடுத்து வளர்க்கணுமாக்கும்?” என்ற கோபமான குரலும் கேட்டது. அக்குரல் வந்த திக்கிலிருந்து இலேசான வியர்வை நாற்றமும், உணவுவாடையும் அடித்தது.

“இப்படிச் சொல்லாதே, பார்வதி.  நாம காப்பாத்தாம விட்டுட்டு வந்தா செத்துப்..” என்றவரை மீண்டும் இடைமறித்து, “எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும்.  முனிசிபாலிட்டிக்காரன் அள்ளியெடுத்துப் போட்டுட்டுப்போறான்.” என்ற பதில் கிடைத்தது.

இந்த அம்மாவுக்கு இரக்கமே இல்லையா என்று பயந்த நான், என்னைப் அவரிடம் புதைத்துக்கொண்டேன்.

“நல்லாயிருக்கே, நீ சொல்லறது?  மணி நம்மவீட்டிலேதான் இருப்பான். சொல்லிட்டேன்.” என்று மணி என்று எனக்கு ஒரு பெயரும் சூட்டினார் ‘அப்பா’.

“மணியோ, சனியோ, எங்கிட்டக் கொண்டு வராதீங்க.  நீங்க கொண்டுவந்தீங்க, நீங்களே வளர்த்துக்குங்க.”  என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் பார்வதி விடுவிடுவென்று சென்றுவிட்டாள்.

“மணி, நீ எதுக்கும் கவலைப் படாதே! உனக்கு நான் இருக்கேன்.  நீ இங்கேயேதான் இருப்பே.  உன்னைக் குப்பைமேட்டுக்குப் போக விடமாட்டேன்!” என்று கொஞ்சும் குரலில் அப்பா என்னிடம் சொல்லிவிட்டு, என்னைக் கீழே இறக்கிவிட்டார். 

நான் தட்டுத் தடுமாறி நடந்துவந்து அவர் காலடியில் அமர்ந்துகொண்டேன்.

“இரு, இரு. உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்.” என்று அப்பா உள்ளே நடக்கவே, அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் பின்னாலேயே சென்றேன்.

“இங்கேயே இரு.” என்று என்னைத் தூக்கி ஒரு இடத்தில் விட்டுவிட்டுச் சென்ற அப்பா திரும்பி வந்தார்.  ஏதோ உணவுவாடை அவருடன் வந்தது.  எனவே, எனக்குப் பசி எடுத்தது.

“இந்தா, சாப்பிடு என்று ஒரு பாத்திரத்திரத்தில் வெள்ளையான ஒரு திரவத்தை ஊற்றினார் அப்பா.  அதனிடமிருந்து உணவுவாடை வரவே, ஆவலுடன் அதைக் குடித்துமுடித்தேன்.

“நல்ல பசி போலிருக்கு.” என்று என் தலையைத் தடவிக்கொடுத்தார் அப்பா.

தூக்கம் கண்ணைச் சுற்றியது.  கண்ணயர்ந்துவிட்டேன்.

திடுமென்று விழித்துக்கொண்டேன் நான்.  என்னைச் சுற்றிலும் ஒரே இருட்டு.  பயமாக இருந்தது.  என்னைப் பெற்றவளைத் தேடினேன்.  பிறகுதான் அவள் இல்லை என்ற உணர்வு வந்து உறுத்தியது.  அவளது கணகணப்பான உடம்பில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கிவைத்தேன். என்னை எடுத்துவந்த ‘அப்பா’வின் நினைவு வந்தது. அவர் எங்கே?

‘அப்பா, அப்பா..”

மெல்லிய குரலில் அழைத்தேன்.

பதில் இல்லை.

மீண்டும், “அப்பா, அப்பா,” என்று அழைத்தேன்.  இந்தத் தடவை பயத்தினால் உரக்கவே குரல்கொடுத்தேன்.  பதில் வராததால் தொடர்ந்து குரல் கொடுத்து, ‘அப்பா’வைத் தேடி இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்தேன்.

“அப்பா, உங்க சனியன் கத்துது. ராத்திரி தூங்கவிடாமல் என்ன ஊளை இது?” என்று ஒரு பெண்ணின் – அதுதான் பார்வதியின் குரல் கேட்டது.

“உங்கப்பா ஏன் இப்படிக் கண்டகண்ட கழிசடையைக் கொண்டுவந்து தூக்கத்தைக் கெடுக்கறார்?”

இது நான் இதுவரை கேட்காத ஆண்குரல்.

கண்ணைக்கூசும் வெளிச்சம்.

“நீ இவ்வளவு தூரம் வந்துட்டியா?”  என்றபடி என்னை இரு கைகள் தூக்கின.  அந்தக்கைகளின் வாடை ‘அப்பா’வுடையது என்று தெரிந்தவுடன் என்னுள் ஒரு அமைதி பிறந்தது. என்னை அக்கைகளில் புதைத்துக்கொண்டேன்.

“உன் அப்பாவை அந்தச் சனியனோட இருக்கச் சொல்லு.”

மீண்டும் அந்தக் கட்டையான ஆண்குரல் உரக்க எழுந்தது.

“பரவாயில்லை, மாப்பிள்ளை.  நான் மணியைப் பார்த்துக்கறேன்.  புது எடம், ராத்திரி தனியா இருக்கறதுனால பயமோ என்னவோ?” என்று என்னைத் தூக்கித் தன்னுடன் வைத்துக்கொண்டார் ‘அப்பா’.

நான் நிம்மதியாக அவர் கால்மாட்டில் படுத்துக்கொண்டேன். 

அவரது குறட்டை எனக்குத் தாலாட்டாக இருக்கவே கண்ணயர்ந்தேன். 

இப்படியே, ‘அப்பா’வின் பரிவும், பார்வதி, மாப்பிள்ளையின் எரிச்சலுடன் என்னுடைய முதல்நாள் கழிந்தது.

மறுநாள் எழுந்திருக்கும்போது நல்ல பசி.  எங்கிருந்தோ நல்ல உணவின் மணம் வீசியது.  அதை நோக்கித் தட்டுத் தடுமாறி நடந்தேன்.  தரையில் ‘அப்பா’வும், மாப்பிள்ளையும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்த தட்டில் சுவையான..

“இந்தச் சனியன் எங்கேந்து வந்துது?  அப்பா, இந்தச் சனியனை விரட்டுங்க!” என்று கத்தியபடியே கையை ஓங்கினாள் பார்வதி.

“எனக்கும் ஏதாவ்து கொடுங்க, பசிக்குது..” என்று இழுத்தேன்.

“சனியனே! ஏன் ஒப்பாரி வைக்கறே!” என்று விரட்டினாள் பார்வதி.

“பாவம் பார்வதி, மணி.  பசி போலிருக்கு.  ஏதாவ்து கொடேன்!” என்று கேட்டார் அப்பா.

“உங்க சனியன், உங்க பாடு.  இந்தச் சனியனுக்கு நீங்களே ஏதாவது போடுங்க.  இங்கேல்லாம் இந்தக் குப்பைமேடு வரக்கூடாது.” என்று விரட்டினாள்.

மாப்பிள்ளை ஒன்றும் பேசவில்லையென்றாலும், அவர் என்னை வெறுக்கிறார் என்ற உணர்வு அவர் பார்வையிலேயே எனக்குத் தெரிந்தது. மெல்லப் பின்வாங்கினேன்.

ஒரு அலுமினியக் கிண்ணத்தில் வெள்ளையான ஒன்றைப் பிய்த்துப் போட்ட அப்பா, அங்கிருந்து சென்று, வேறு இடத்தில் என் முன்வைத்தார்.  பசிவேகத்தில் அதை வேகவேகமாத் தின்றுவிட்டு அவரை அன்புடன் பார்த்தேன்.  என் தலையைப் பரிவுடன் தடவிக்கொடுத்தார் அப்பா. அதன்பின், அந்தக் கிண்ணத்திலேயே தண்ணீரையும் ஊற்றினார்.  அதையும் குடித்துவிட்டுப் படுத்துக்கொண்டேன். கண்ணயர்ந்தும் விட்டேண். 

சில நாள்கள் கழிந்தன.  ஒருநாள்..

வாசலில் ஏதோ சத்தம் கேட்கவே, “யாரோ வருகிறார்கள்?” என்று குரல் கொடுத்தேன்.

“சனியனே! ஏன் நாராசமா டிவி பார்க்கவிடாம கத்தறே?” என்று கோபமாகத் திட்டினாள் பார்வதி.

வாசல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த மாப்பிள்ளை, என்னை முறைத்துப் பார்த்தார். அவரிடமிருந்து ஒரு மாமிச வாடை அடித்தது. அவர் கையில் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து அது வருகிறது என்பதை அறிந்த நான், அப்பா பக்கம் நகர்ந்தேன்.

“பார்வதி, இந்தா..” என்று அவளிடம் அப்பாத்திரத்தைக் கொடுத்தார் மாப்பிள்ளை.

“ஏன்ன மாப்பிள்ளை இது?  புரட்டாசி சனிக்கிழமை இதெல்லாமா?” என்று கேட்ட அப்பாவிடம், “உங்களுப் பிடிக்கலைன்னா நீங்க சாப்பிடவேண்டாம்.” என்று நறுக்குத் தெரித்தாற்போல எரிந்துவிழுந்தார்.

“பார்வதி, நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன்.” என்று ஒரு வெள்ளையான துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினார் அப்பா.

“இந்தச் சனியனையும் கூட்டிண்டு போங்க.” என்ற மாப்பிள்ளையைப் பார்த்து, “கோவிலுக்கு எப்படி மணியை..” என்றவர், “சரி,” என்று தலையாட்டிவிட்டு, என்னைப் பார்த்து, “வா, மணி!” என்றார். 

அவரைப் பின்தொடர்ந்தேன்.

அப்பா கோவிலுக்குப் போகவில்லை.  என்னுடன் பார்க்வரை சென்றார்.  அங்கு சிறுவர்கள் பந்தை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.  நானும் அவர்களுடன் விளையாடினேன்.  என்னுடன் அப்பா வீட்டிற்குத் திரும்பிவந்தார்.

நான் என்ன பேசினாலும், அதைக் கூச்சல் என்றும், கத்தல் என்றும் பார்வதியும், மாப்பிள்ளையும் திட்டுவதால் நான் அவர்கள் இருக்கும்போது பேசுவதை விட்டுவிட்டேன்.

மாதங்கள் கழிந்தன.

வழக்கம்போல அப்பாவும் நானும் பார்க்குச் செல்லக் கிளம்பினோம். 

பார்க்குக்குச் செல்வதென்றாலே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அப்பா அப்பொழுதுதான் ஏதையோ பறிகொடுத்தவர்போலிருக்காமல் உற்சாகமாக இருப்பார்.  அங்கு விளையாடும் சிறுவர்களும் என்னை எதிர்பார்த்திருப்பார்கள்.  நானும் அவர்களுடன் குதித்துக்கொண்டே பந்து விளயாடுவேன்.  அவர்கள் பந்தை எங்கு எறிந்தாலும், எப்படி எறிந்தாலும், முதலில் அதை எடுப்பது நானாகத்தான் இருக்கும்.  என்னளவுக்கு அவர்கள் யாராலும் வேகமாக ஓடமுடியாது.

திடுமென்று அடித்த காற்றில் அப்பாவின் துண்டு அவர் தோளிலிருந்து பறந்து சென்றது.

அதை எடுக்க ஓடினேன் நான்.

“மணி, மெதுவாகப் போ!  கார், லாரி மோதிடப் போறது..” என்று என்னை எச்சரித்தார் அப்பா.

என் காதில் எதுவும் விழவில்லை.  அப்பாவின் துண்டில்தான் என் கவனம் இருந்தது.

“மணி, மணி,” என்றவாறு என்னைப் பின் தொடர்ந்தார் அப்பா.

துண்டை எடுத்த அதே கணம், என் காதில் கிறீச் என்ற சத்தமும், அதைத் தொடர்ந்து இரத்தமும், ரப்பர் கருகும் வாடையும் அடித்தது.

வாடை வந்த பக்கம் திரும்பினேன்.

ஒரு லாரி நின்றிருந்தது. அப்பா இரத்தவெள்ளத்தில் கீழே கிடந்தார்.

துண்டுடன் அவரருகில் அமர்ந்தேன்.

“அப்பா, அப்பா!” என்று ஓலமிட்டேன்.

என் ஓலத்தைக் கேட்டு அங்கு வந்த ஒருவர், அப்பாவுக்குத் தெரிந்தவர், வழியில் சென்ற காரை நிறுத்தினார். அப்பாவை அதில் ஏற்றினார்கள்.  கூடவெ ஏறச்சென்ற என்னை விரட்டினார்கள்.

துண்டை எடுத்துக்கொண்டு அந்தக் காரின் பின்னால் ஓடினேன்.

கார் எங்கள் வீட்டு வாசலில் நின்றது.

பார்வதியிடம் சொல்லலாமென்று அப்பாவின் துண்டுடன் ஓடினேன்.

அப்பாவுக்குத் தெரிந்தவர் வீட்டுக் கதவைத் தட்டினார்.

கதவைத் திறந்த பார்வதியிடம் அவர் ஏதோ பேசினார். 

“அப்பா!” என்று அலறினாள் பார்வதி.

“என்ன?” என்றவாறு அங்கு வந்த மாப்பிள்ளையிடம், “அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது” வாங்க, ஆஸ்பத்திர்க்குப் போவோம்.” என்று கதறினாள்.

அவர்கள் இருவரும் அந்தக் காரில் ஏறிச் சென்றுவிட்டார்கள். நான் வீட்டு வாசலிலேயே காத்திருந்தேன்.

பலமணி நேரம்சென்று இருவரும் ஒரு ஆட்டோவில் திரும்பிவ்ந்தார்கள்.

 “அப்பாவுக்கு என்ன ஆச்சு?” என்று கதறினேன்.

“சனியனே!  உன்னால் வந்த வினை!” என்று கீழே கிடந்த கல்லை எடுத்து என்மீது வீசினார் மாப்பிள்ளை.

அப்பாவின் துண்டை எடுத்துக்கொண்டு ஓடினேன். கல்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிந்தது.

அதன்பிறகு அவர்கள் இருவருமே என்னை வீட்டுக்குள் நுழையவிடுவதில்லை.  வீட்டுக்கு அருகிலிருந்த எந்தக் குப்பைமேட்டிலிருந்து அப்பா என்னை எடுத்து வந்தாரோ, அந்தக் குப்பைமேட்டுக்கே சென்றுவிட்டேன்.

அப்பாவின் துண்டைமட்டும் விட எனக்கு மனமில்லை.  அதைப் பத்திரமாக ஒரு பொந்துக்குள் ஒளித்து வைத்தேன்.  அவர் நினைவு வரும்போதெல்லாம். அதை எடுத்து முகர்ந்து பார்ப்பேன்.  குப்பை வாடைகளுடன் அப்பாவின் வாடையும் அதிலிருந்து வரும்.

அப்பாவுன் நினைவு என் தொண்டையை அடைக்கும் வானைநோக்கி, அப்பாவை எண்ணிக் கதறுவேன்.

“சனியன் பிடித்த நாய்! எப்போது பார்த்தாலும் ஊளையிடுகிறது.  அப்பா போனாலும், அவர் கொண்டுவந்த பீடையின் தொல்லை தாங்கவிலை,” என்று டப்பென்று சன்னல் கதவுகளை பார்வதி அடித்துச் சாத்தும் சத்தம் கேட்கும்.

நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.

அப்பாவின் அன்பை நினைவில் நிறுத்தி, அவரது துண்டை இறுகப் பிடித்தவாறே , அவரது வாடையை முகர்ந்தவாறே உறங்கிவிடுவேன்.

***

5 Replies to “அப்பாவின் துண்டு”

  1. Off-topic comment – Can any of the site administrators or commenters tell me where I can find Tamil translations of Golwalkar’s works? Especially ‘Bunch of Thoughts’? Thanks a ton in advance.

  2. ஞான கங்கை என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.சென்னை சேத்துப்பட்டு ஆா்எஸஎஸ காரியாலயத்தை விசாரிக்க லாம். கிடைக்கும்.

  3. Mr. Anburaj, thank you very much for the info. I’ve contacted the Organizer office and placed an order for the book.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *