திரிவேணி சங்கமம்

நான்தான் சேட்டுப்பொண்ணு கங்கா.  எங்க மூணுபேரையும் சேர்த்து, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க. ஏன்னு கேட்டா, “கங்கா, ஜமுனா சரஸ்வதினு நீங்க மூணுபேரும் ஃப்ரன்ட்ஸ்னுதான் பேரு.  ஆனா எப்பவும்  கங்காவையும், ஜமுனாவையும்தானே ஒண்ணாப் பார்க்கமுடியறதுன்னு,”  சொல்லுவாங்க.

அதென்ன, முதல் வரிலேயே கதை பேரைச் சொல்லிட்டியேன்னு கேக்கறீங்களா?  நான் என்ன பெரிய கதைநாயகியா — கதைகாரியா — எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலே — கதை எழுதறவளா, கதை பேரு முதல்ல வரக்கூடாதுன்னு பார்த்துக்கறத்துக்கு.  அதோட, இது கதை இல்ல, எங்க சரித்திரமாக்கும்.

ஆமாம்,  சேட்டுப்பொண்ணுனு சொல்லிட்டு, இந்திலே எழுதாம தமிழ்ல ஏன் எழுதறயேன்னு கேட்டா?  நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாமே மதுரைலதான்.  அதுனால எனக்கு தமிழ்தான் நல்லா எழுத, படிக்க, பேசத் தெரியும்.  ஆனா, இந்தி பேசத்தான் வருமே தவிர, கொஞ்சமா எழுத்துக்கூட்டிப் படிக்கத்தான் வரும். அதுனால தமிழ்லதான் எழுதுவேன்.

ஜமுனா கோல்டிப் பொண்ணு, அதுதாங்க, தெலுங்கு பேசறவ.  அவளும் என்னைமாதிரி மதுரைலே பொறந்து வளர்ந்தவதான். அவளுக்குத் தெலுங்கு சுத்தமா எழுதப்படிக்கத் தெரியது.  பேசறதுலேயும் பாதிக்குமேல தமிழ்தான் இருக்கும்.

அவ அப்பாவுக்கு ஜமுனாங்கற நடிகைய ரொம்பப் பிடிக்குமாம்.  அதுனால அவளுக்கு ஜமுனானு பேர் வைச்சுட்டாராம்.  இதெல்லாம் ஜமுனா சொல்லித்தான் எனக்குத் தெரியும். 

சரசுங்கற சரஸ்வதி.  அவ…

“திரும்ப ஆரம்பிச்சுட்டியா, அவளும் மதுரைல பொறந்து வளர்ந்த.. பொண்ணுனுதானே?”னு கேட்டா…

அதுதான் இல்லே. அவ அலஹாபாத்திலே பொறந்து, மதுரைல எங்ககூடப் படிச்ச மதராசி, அரவம்மா, —  தமிழ்ப் பொண்ணு.

இதில வேடிக்கை என்னன்னா, எங்க பூர்வீகம் அலஹாபாத்.  எங்க குடும்பம் பொழைப்பைத் தேடி மதுரைக்கு வந்துது.  ஆனா, சரசுவோட குடும்பத்துக்கு மதுரை பூர்வீகம். பொழைபைத் தேடி — இல்லே, இல்லே — அவ அப்பாக்கு முதல்ல அலஹாபாத்துல வேலைகெடச்சதாலே, அவங்க பத்து வருஷம் அங்கேதான் இருந்தாங்களாம். இவ அங்கேதான் பொறந்து அஞ்சுவயசுவரை வளர்ந்தாளாம்.

அவ அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்டு.  , அவரே அவளைக் ஸ்கூல்ல கொண்டு விடுவார்.  ஸ்கூல் முடிஞ்சவுடனே வாசல்ல காத்திருந்து கூட்டிப்போயிடுவார்.  முதல்ல எங்களோட அவளைப் பார்த்தும், “கண்ட கண்ட சேட்டு, கோல்ட்டி பொண்ணுங்களோட உனக்கு என்னடி பழக்கம்?”  அப்படீன்னு திட்டிட்டு, சரசுவை இழுத்துப் போயிட்டார்.

சரசுவோட அப்பா அலஹாபாத்ல வேலை பார்க்கறபோது சீனியரான அவருக்குப் ப்ரமோஷன் கொடுக்காம, ஒரு வடக்கத்திக்காரருக்கும், தெலுங்குக்காரருக்கும் ப்ரமோஷன் கொடுத்தாங்களாம்.  அதுல மனசு உடைஞ்சுபோயி மதுரைக்கு வந்தா, அவர் பொண்ணு வடக்கத்திப் பொண்ணான என்கூடவும், தெலுங்குப் பொண்ணான ஜமுனாகூடவும் பழகறது பிடிக்காமப் போயிட்டுது.

அதுக்கப்பறம் நாங்க பேசிக்கறதெல்லாம் ஸ்கூல்ல, அதுக்கப்பறம் காலேஜுல மட்டும்தான். 

ஸ்கூல்லயும், காலேஜுலேயும் கிளாசுலே ஒண்ணாப் பழகினாலும், ஒரே பெஞ்சுலே உக்காந்திருந்தாலும், சாப்பாட்டைப் பகிந்துட்டாலும், வெளியே வர்றபோது சரசு எங்ககூட வரமாட்டா.

சேட்டுப் பொண் கங்காவான என்னையும், கோல்ட்டிப் பொண்ணு ஜமுனாவையும்தான் சேர்ந்து பார்க்கமுடியும்.  திடும்னு சரசு மறைஞ்சு போயிட்டமாதிரி எல்லோரும் தோணும்.  அலஹாபாத்திலே கங்கைக்குள்ளேயும், யமுனைக்குள்ளேயும் சரஸ்வதி மறைஞ்சுபோன மாதிரினு வச்சுக்குங்க. அதுனாலதான் என்னையும், ஜமுனாவையும் பார்த்தா, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க.

கதைத் தலைப்பு மறுபடியும் வந்துடுச்சே, கதை அவ்வளவுதானான்னு கேட்டா?

இது ஒரு இன்ட்ரொடக்ஷன்தான்.  இனிமேத்தான் கதையே ஆரம்பம்.

சரசுவுக்கு அவ அத்தைபையன் மேல ஆசை, உயிரு,. அதாவது காதல்.  காதல்னா, சினிமாக் காதல்மாதிரி லவ்லெட்டர், பீச்சு, சினிமா, ஐ லவ் யூ, அப்படி இப்படியெல்லாம் கிடையாது. அவ வீட்டுல சின்னவயசுலேந்து இவளுக்கு அவன், அவனுக்கு இவள்னு சொல்லிச் சொல்லி, சரசு மனசுல அப்படி ஒரு நினைப்பு வந்துபோச்சு.  அவன் போட்டோவை புஸ்தகத்துள்ளே மறைச்சு வச்சு, எங்களுக்குக் காட்டுவா, நாங்களும் கிண்டல் பண்ணுவோம்.  அவ மொகம் குங்குமமாச் செவந்து போகும். மத்தபடி இவ மனசுல என்ன இருக்குன்னு எங்களைத்தவிர அவ வீட்டுல மட்டுமில்லே, அவ அத்தைபையனுக்குக்கூடத் தெரியாது. அதேமாதிரி, அவன் மனசுல என்ன இருக்குன்னு இவளுக்கும் தெரியாது.

அவளோட அத்தைபையன் எம்.எஸ்ஸி படிக்கறபோது, கூடப்படிச்ச ஒரு பொண்ணுமேல அவனுக்கு ‘லவ்வு’ வந்துட்டுது.  அவளும் பணக்காரப்பொண்ணு.  அவன் வீட்டுலேயும் சரின்னு சொல்லிட்டா.  கல்யாணமும் அவனுக்கு நிச்சயமாயி, நடந்து போயிட்டுது.

சரசுக்கு மட்டுமில்ல, அவ வீட்டிலேயேயும் எல்லாருக்கு ஒரே வருத்தம்.  இவளுக்கு மனசு ஒடஞ்சே போயிடுத்து.

நாங்கதான் அவளுக்குச் சமாதானம் சொன்னோம்.

“டீ சரசு.  அவன் போனா என்னடி?  அவன் உன்ன லவ் பண்றேன்னு எப்பவாது சொன்னானா?  இல்லே நீதான் அவங்கிட்டச் சொன்னியா?  இது சும்மா வீட்டிலே பேசினதுதானே?  இவனைவிட நல்ல பையன் உனக்குக் கிடைப்பான்.”னு சமாதானம்பண்ணிப் பார்ப்போம்.

ஆனா சரசு ஒண்ணுமே பேசமாட்டா.  தலையை வேறபக்கமா திருப்பிக்குவா.  அவ மூஞ்சிலே வழக்கமா இருக்கற சிரிப்புகூடக் காணாமப் போயிட்டுது.

இப்படியே சில மாசங்கள் போச்சு. 

ஒருநாள் சரசு காலேஜுக்கு வரல்ல.  நானும், ஜமுனாவும் காலேஜிலேந்து வெளிலே வரப்போ, சரசுவோட அப்பா நின்னார்.  எங்களப் பார்த்து, “நீங்கதானே சேட்டு, கோல்டிப் பொண்ணுங்க?”ன்னு அதட்டறமாதிரிக் கேட்டார்.

எங்க ரெண்டுபேருக்கும் என்னவோ மாதிரி ஆயிட்டுது.  எதுக்காக இவர் இப்படிக் கேக்கறாரு?

பயந்துபோயி, பேசாமத் தலைய ஆட்டினோம்.

“சரசுவுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு.  உங்களைக் கூப்பிடனும்னா.  பத்திரிகை கொடுக்கச் சொன்னா. இந்தாங்க பத்திரிகை.”  அப்படீன்னு எங்ககிட்ட கல்யாணப் பத்திரிகையைக் கொடுத்தார்.

எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது.  இந்தமட்டும் சரசுவோட ஏமாத்தத்துக்கு ஒரு முடிவு வருதே.

அடுத்தாப்பல அவர் சொன்னதுல நாங்க அதுந்து போயிட்டோம்.

“உங்களுக்கு பத்திரிகை கொடுக்கச் சொன்னா.  கொடுத்துட்டேன்.  கூப்பிடச் சொன்னா.  கூப்பிட்டுட்டேன்.  ஆனா, கல்யாணத்துக்கு வந்து தொலைஞ்சுடாதீங்க.  சனியன்பிடிச்ச ஒங்களோட பேசிவேற தொலைக்க வேண்டியிருக்கு.” 

விடுவிடுன்னு ஸ்கூட்டரில் ஏறி வேகமாகப் போய்விட்டார். 

சரசுவுக்குக் கல்யாணம்னு சந்தோஷப்படக்கூட முடியலே. எங்களுக்கு அழுகை பொத்துகொண்டு வந்துது. நாங்க் இவருக்கு என்ன பண்ணினோம்?  எங்கமேல இவருக்கு என்ன வெறுப்பு, துவேஷம், கோவம்?

அவ கல்யாணத் தேதியிலே எங்களுக்குச் சுரத்தாவே இல்லே.  தோழிகளா கூடவே இருந்து, அவளைக் கிண்டல்பண்ணி, துள்ளிக் குதிச்சு, அரட்டை அடிச்சு, அவ கன்னத்தைக் கிள்ளி விளையாட முடியாமப் போச்சேன்னு நினச்சா, எங்களுக்கு அழுகை அழுகையா வந்துது.

ஒருவாரம் கழிச்சு எங்க ரெண்டுபேர் பெயரும் எழுதி காலேஜுக்கு ஒரு லெட்டர் வந்துது.  சரசுதான் போட்டிருந்தா.

“ஃப்ரன்டா இருந்தும், எங்கப்பா பத்திரிகைகொடுத்து கூப்பிட்டும் நீங்க என் கல்யாணத்துக்கு வரக்கூட இல்லைல? இனிமே எனக்கும் ஒங்களுக்கும் ஒண்ணுமே இல்லை.  சரசு” அப்படீன்னு எழுதியிருந்துது. 

எங்களுக்கு அழுகையும் கோபமும் பொத்துட்டு வந்துது.  இந்த சரசுவுக்கு எங்களைப்பத்தித் தெரியாதா?  அவ அப்பா அப்படிச் சொல்லாட்டா நாங்க அவ கல்யாணத்துக்குப் போகாம இருந்துருப்போமா? 

ஊமைக்கு அடிபட்டமாதிரித்தான் எதையும் சொல்லிக்க முடியாம அவஸ்தைப்பட்டோம்.  அவ வீட்டு அட்ரஸும் தெரியாது, அவ கல்யாணம் பண்ணிப் போன ஊரு அட்ரஸும் தெரியாது. சரசுவைக் கான்டாக்ட் பண்ணக்கூட வகையில்லே.  அதுதான் இன்னிவரை மனசை உறுத்துது.

அதுக்கப்பறம் சரசுவைப்பத்தி எங்களுக்கு ஒண்ணுமே தெரியாமப் போச்சு.  அவ எங்க மனசுலதான் இருந்தாளே தவிர, திரிவேணி சங்கமத்துல மறைஞ்சுபோன சரஸ்வதிமாதிரி மறைஞ்சே போயிட்டா.

கதை முடிஞ்சுபோச்சா?  இப்பவும் தடவையும் திரிவேணி சங்கமம்னு எழுதியாச்சேன்னு கேக்கறீங்களா? 

இல்லே.  இன்னும் இருக்கு…

படிப்பு முடிஞ்சதும் எனக்குக் கல்யாணம் ஆயிட்டுது.  மாப்பிள்ளை அலஹாபாத். அங்கேதான் அவங்களுக்குப் பரம்பரை பிசினசாம். அவருக்கு இந்திதான் தெரியும்,  தமிழ் வராது.  கல்யாணம் முடிஞ்சதும் நான் அலஹாபத் போயிட்டேன்.

ஜமுனா மேலே தொடந்து படிச்சா.  நாலு வருஷம் கழிச்சு அவகிட்டேந்து அவ கல்யாணப் பத்திரிகை வந்துது.  அப்ப நான் கர்ப்பமா இருந்ததாலே, அவ கல்யாணத்துக்குப் போக முடியலே.

இதுல என்ன வேடிக்கைனா, அவ வீட்டுக்காரர் விஜயவாடாவாம்.  அவருக்கும் சுட்டுப்போட்டாலும் தமிழ் வராதாம்.

அப்பப்ப, அதாவது வருஷத்துக்கு ஒருதடவை, இல்லாட்டி ரெண்டுதடவை, லெட்டர் போட்டுப்போம், அவ்வளவுதான். அதுக்கப்பறம் அதுவும் நின்னுபோச்சு.  எனக்கும் மூணு குழந்தைகள்னு ஆச்சு.  அதுகளைக் கவனிக்கவே நேரம் சரியா இருந்துது.  அவளுக்கும் ஒரு பையன், ஒருபொண்ணு, அவ வீட்டுக்காரருக்கு டெல்லிலே வேலை கிடைச்சு அங்கேயே வந்துட்டானு கடைசியா கேள்விப்பட்டேன்.  ஆனா எங்க ரெண்டுபேராலையும் சந்திச்சுப் பேசத்தான் முடியலே.

பசங்க வேகமா வளந்துட்டாங்க. என் பொண்ணுக்குக் டெல்லிலே வரன் கிடைச்சுது. அங்கேதான் கல்யாணத்தை நடத்தனும்னு மாப்பிள்ள வீட்டுல சொல்லிட்டாங்க. 

ஜமுனா டெல்லிதானேனு, ஒருவழியா அவ அட்ரஸ், ஃபோனை விசாரித்துக் கண்டுபிடிச்சு, அவளைக் கூப்பிட்டேன்.  கிட்டத்தட்ட இருபத்திரெண்டு வருஷம் கழிச்சு அவள் குரலைக் கேட்டது….

அதை வார்த்தைலே சொல்லமுடியாது.  அதைச் சொல்றதுக்கும் எனக்குத் திறைமை இல்லே.  நாங்க கிடுகிடுன்னு தமிழ்லே பேச ஆரம்பிசுட்டோம்.  என் வீட்டுக்காரர், “க்யா, தூ மதராசி சாலு கியா கர்தீ [என்ன நீ தமிழ்லே ஆரம்ப்பிச்சுட்டே]?”னு இங்கு என்னைக் கேட்டபோது, அங்கே, “ஏமி, நூவு அரவம் மாட்லாடிதுன்னாவு [என்ன, நீ தமிழ்ல பேசறே]?”னு ஜமுனா வீட்டுக்கார் கேட்பதும் என் காதில் விழுந்துது.  நாங்க பேசும் தமிழுக்குத்தான் எங்க வீட்டுக்காரர்கள் என்ன பெயர் கொடுக்கிறார்கள் என்பதை நினைச்சால் எங்க ரெண்டுபேருக்கும் சிரிப்பு வருவதைத் தடுக்க முடியலை. 

என் பெண் கல்யாணத்துக்கு முதல்ல வீட்டு மனுஷியாக ஜமுனாதான் வந்தாள்.  என்னைப் பார்த்தும் அவளுக்கு ஒரே சிரிப்பு.  “என்னடீ கங்கா, சேட்டுப்பொண்ணுலேந்து சேட்டம்மாபோல குண்டாயிட்டேடி,”னு என்னைக் கிண்டல் செஞ்சா. 

“ஒனக்கு உடம்பு முழுக்க வினை. அதுதான் எவ்வளவு தின்னாலும் அப்படியே வத்தக்காச்சியா இருக்கே,”ன்னு நான் திரும்பக் கேலி பண்ணினேன்.

எங்க ரெண்டுபேர் பெயரையும் கேட்ட என் வீட்டுக்காரர், “ஜமுனாதான் [யமுனைதான்] கங்கையைத் தேடி வரும், இங்கே கங்காவே, ஜமுனாவைத் தேடி வந்திருக்கு,”னு ஜோக் அடித்ததை நாங்கள் கேட்டு மகிழ்ந்து சிரிச்சோம்.

“கண்டிப்பா இந்த ஜமுனா கங்காவைப் பார்க்க அலஹாபாத் வருவா,”னு அவள் தமிழில் சொன்னதை என் வீட்டுக்காரருக்கு நான் மொழிபெயர்த்தேன்.

ஆனால் பத்து வருஷம் ஆகியும் ஜமுனாவால் அலஹாபாத் வரமுடியலே.  ஏதேதோ காரணம், மாத்திமாத்தி.  நான்தான் ஒரொரு வாட்டியும் என் பெண்ணைப் பார்க்க என் வீட்டுக்காரரோட டெல்லி போகும்போதும், அவளைப் பார்ப்பேன். ரொம்ப சந்தோஷப்படுவா. அவ்வப்போது வாட்ஸ் அப்பில் வீடியோலயும் பேசுவோம்.

திடுன்னு இந்தக் கொரோனா கலவரம். டெல்லி ரொம்ப மோசமாயிட்டுது.  என் மாப்பிள்ளையோ டாக்டர்.  என்ன ஆச்சோனு எங்களுக்கெல்லாம் ஒரே மனக்கவலை அரித்துப் பிடுங்கிச்சு.

இப்படியிருக்கும்போது ஜமுனாவிடமிருந்து போன் வந்துது.  எடுத்துப் பேசினால் ஆண்குரல்…

“நான்தான் கிருஷ்ணா ராவ்.  ஜமுனாவோடா..”னு இந்திலே தட்டுத் தடுமாறி ஜமுனாவின் வீட்டுக்காரர்.  “கொஞ்சம் வீடியோலே வர்றீங்களா? ஜமுனா உங்களைப் பார்க்கணும்கறா.”

எனக்குச் சுரீர்னு வயத்தில என்னவே பண்ணிச்சு.

உடனே வீடியோ-கால் போட்டேன்.  ஜமுனாவின் வீட்டுக்காரர்தான் ஃபோனை எடுத்தார்.  அவர் முகம் ரொம்பவும் கவலைல வாடிப்போய இருந்துது. முகத்துலே மாஸ்க் போட்டிருந்தார்.

மனசு பதறிட்டுது.

“ஜமுனாவுக்கு என்ன?” 

இதுதான் என் கேள்வி.

அவர் பதிலே சொல்லாமல் ஃபோனில் ஜமுனாவைக் காண்பித்தார்.  என்னால் தாங்கமுடியவில்லை.

ஜமுனா படுக்கையில், அவளுக்கு ஆக்சிஜன் கொடுத்திருந்துது. அவள் கண்கள் மூடியிருந்துது.

“என்ன ஆச்சு, ஜமுனாவுக்கு?” எனக்குக் கட்டுப்படுத்தமுடியாமல் அழுகை வந்துட்டுது.  நான் அழுவதைக் கேட்டு என் வீட்டுக்காரர் ஓடிவந்தார்.

“ஜமுனாவுக்கு நேத்திலேந்து மூச்சுத் திணறல். கொரானாவோன்னு சந்தேகப்படறோம். டெஸ்ட் ரிசல்ட் வரணும். எப்ப வேணாலும் ஆம்புலன்ஸ் வரும்.  அதுக்குள்ள உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா.  இப்ப அவளால பேசக்கூட முடியாது,”ன்னவர், “ஜமுனா, ஜமுனா,”னு கூப்பிட்டார்.

“உன் ஃப்ரன்டு கங்கா வாட்ஸ் அப்பில இருக்கா பாரு.”

கண்ணை மெதுவாத் திறந்தா, ஜமுனா.

என்னையும், என் வீட்டுக்காரரையும் அடையாளம் கண்டுகொண்டமாரி அவள் கண்ணு கொஞ்சம் பெரிசாச்சு. முகத்துலே சந்தோஷம், அதோட ஒரு வருத்தம்.  தலையை ஒரு தடவை அசைச்சா.

கையைத் தூக்கி மூணு தடவை மெதுவா ஆட்டினா. கை கீழே போயிட்டுது. கண்ணை மூடினா.  முகத்துலே ஒரு சாந்தி.

“ரொம்ப டயர்டா இருக்கா. நான் உங்களுக்கு ரிசல்ட் வந்ததும் சொல்றேன்”னு சொன்னபோது ஜமுனா வீட்டுக்காரர் குரல் கமறி நடுங்கிட்டுது.  அவராலயும் பேசமுடியலேன்னு தெரிஞ்சுது.

ஃபோனை ஆஃப் செய்து வைச்சுட்டேன்.  மனசே ஓடலை. 

நாலைஞ்சு நாள் கழிச்சு எனக்கு ஃபோன்ல எஸெம்மெஸ் வந்துது.

“ஜமுனா போயிட்டா. எங்க பொண்ணு, பையன் ரெண்டு பேரும் வெளிநாட்டுலே இருக்கறதுனால அவங்களும் வரமுடியாது.  அவ ஆத்மாவுக்காக நீங்க பிரார்த்தனை பண்ணிக்கோங்க”.

நான் இடிஞ்சுபோயிட்டேன்.

ஜமுனா இப்ப கங்காவோட கலந்துட்டா.  பிரயாகைல கங்கா, ஜமுனா சரஸ்வதி மூணுபேரும் கலந்து ஒண்ணா இருக்கறமாதிரி நான் கங்காமட்டும்தான் இருக்கேன்.  நான் தனியா இருந்தாலும் எனக்குள்ளே அவங்க ரெண்டுபேரும் இருக்காங்க.  நாங்க நிஜம்மா திரிவேணி சங்கமமா ஆயிட்டோம். 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *