ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4

இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.

4 – உடல்-உயிர்-உள்ளம்

இதுவரை ஆண்மை-பெண்மை என்பவை பற்றியும், வளம் தரும் பூமியை அன்னை என்றும், ஆகாயத்தைத் தந்தை என்றும் விவரிப்பதைப் பற்றியும் பார்த்தோம். அவைகளும், அவை தொடர்பாக இனி நாம் உடனே காணப்போகும் விவரங்களையும் தந்த சில ரிஷிகள் யார் என்பதையும் தெரிந்து கொள்வோம். அவர்கள்: திர்காதமஸ் அச்சுதர், ப்ருகஸ்பத்ய பரத்வாஜர், மற்றும் மைத்ரவாருணி வசிஷ்டர்.

தினம் உதித்து அஸ்தமிக்கும் சூர்யன், வானம் மற்றும் பூமியின் மகன் என்பதோடு மட்டும் அல்லாமல், அதுவும் அதன் கிரணங்களும் நம் உள்ளமாகவும், நம்மைச் சுற்றியுள்ள உலகை உணரவைக்கும் ஆற்றலாகவும் வெளிப்புறத்தே வலம் வருகிறது. எவ்வாறு என்றால், சூரியன் உதித்த பின்பே நாம் இருப்பதை நாம் உணர்வதோடு, உலகம் இருப்பதையும் நம் புலன்களால் அறிகிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் நாம் நம்மை உணராதபோது, உலகமும் மறைந்துதானே போகிறது? ஆக சூரியன் உதிக்கும்போது தான் “நான்” என்ற நம் உணர்வும் சேர்ந்தே உதிக்கிறது. அத்துடன் புலன்களும் விழித்து, அவைகள் மூலம் உலகமும் தெரிய வருகிறது. அப்படி நாம் ஒவ்வொருவரும் ஆத்ம சூரியன் என்றால் நம் தாய் யார், தந்தை யார் என்றுதானே நமது அடுத்த கேள்வியாக இருக்கும்? “சத்” ஆகிய நமது இருப்பே நம் தந்தை, “சித்” ஆகிய அந்த இருப்பைப் பற்றிய நம் உணர்வே நம் தாய்.

“சத்” ஆகிய இருப்பு என்பது அசலம்; அதாவது அசைவு இல்லாது இருப்பது. “சித்” எனும் உணர்வு அல்லது அறிவு சலம்; அதாவது அசைவு தருவது. அதைத்தான் சக்தி, தாயார், அம்பாள் என்றெல்லாம் குறிப்பிடுகிறோம். அது இல்லை என்றால் இருப்பது எல்லாம் பிரும்ம மயமாக இருந்துவிடும். அதனால் உலகம், பிரபஞ்சம் என்றனைத்தின் இயக்கமும் அந்தச் சக்தியின் வெளிப்பாடே. ஆனாலும் இவ்விரண்டும் வெவ்வேறல்ல; அவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்று புரிந்து கொள்ளவேண்டும்.

அருணாசலமே அனைத்தும் என்று உணர்ந்து திருவண்ணாமலையை விட்டு எங்குமே செல்லாத ரமணரை, ஒரு சிதம்பர தீட்சிதர் அடிக்கடி வந்து தரிசித்து வந்தார். பஞ்சபூதத் தலங்களில் மிக நுண்ணியதான ஆகாயத்தைக் குறிக்கும் தலமான சிதம்பரத்திற்கு ரமணர் வருகை தரவேண்டும் என்று விரும்பிய தீட்சிதர் ஒவ்வொரு முறையும் அதை வற்புறுத்தி வந்தார். ஒருமுறை அவர் அவ்வாறு கூறியபோது, ரமணர் ஒரு காகிதத்தில் பின்வரும் வெண்பாவை எழுதி அவரிடம் கொடுத்துவிட்டார்:

அசலனே ஆயினும் அச்சவை தன்னில்
அசலையாம் அம்மை எதிர் ஆடும் – அசல
உருவில் அச்சக்தி ஒடுங்கிட ஓங்கும்
அருணாசலம் என்று அறி.

ரமணரின் அணுக்கத் தொண்டரான அமரர் திருமதி கனகம்மாள் இதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்: “இறைவனாகிய பரமேஸ்வரன் சுபாவத்தில் சலனமற்றவனே ஆனாலும், அந்த கனகசபை ஆகிய தில்லையில் சாந்த சுபாவமாகிய பராசக்தியின் எதிரில் நடனம் ஆடுகிறார். ஆனால் இங்கு சலனமற்ற தனது அருணாசல பரமாத்ம சொரூபத்தில், அந்த பரசக்தியாகிய பார்வதி தன்னுள் இரண்டற ஒன்றிவிடுவதால், இந்த அருணாசல க்ஷேத்திரம் மிகுந்த சிறப்புடன் ஓங்கி ஒளிர்கின்றது என்று அறிந்துகொள்வாயாக.”

இவ்வாறாக சிவகாமி அன்னையின் முன்பாக நடராஜனாக (சலனாக) ஆடும் சிவனும், அசலமாக இருந்தும் சக்தியைத் தன் ஒரு பாதியாகக் கொண்டு விளங்கும் அர்த்தநாரீசுவரர் ஆன சிவனும் ஒன்றே என்று கூறி, சித்-சத் தனியாகவும் இருக்கலாம் ஒன்றாகவும் இருக்கலாம்; எல்லாம் ஒன்றே என்றாலும் சேர்ந்தே இருப்பது இன்னும் சிறந்ததே என்கிறார்.

பூமி, ஆகாயம், சூரியன் என்ற இயற்கை அம்சங்களில், அடுத்தபடியாக வேதகால ரிஷிகளை யோசிக்க வைத்தது சூரியனின் எழுச்சியும், வீழ்ச்சியும் தான். தினம் அதிகாலை சூரியன் உதித்ததும் அனைத்து உயிர்கள் இயங்குவதைக் கண்ட அவர்கள், தினம் மாலையில் அது மறைவதைக் கண்டு, அது எங்குதான் செல்கிறது என்பதை அறியாது இருந்தார்கள். அது மட்டும் அல்லாது மறுநாளும் அது உதிப்பதைப் பார்த்து, அதனை எதுவோ அழிக்க முயல்வதாகவும், அதனை வென்ற பின் அது மீண்டு வருவதாகவும் அவர்களுக்குத் தோன்றியது.

பகலில் இயக்கம் நடைபெற்று, இரவில் நம்மையும் அறியாத நிலை நமக்கு வருவதால், ஒளியை அறிவுடனும் இருளை அறியாமையுடனும் அவர்கள் ஒப்பிட்டார்கள். ஆனாலும் இருளில் விளக்கை ஏற்றி ஓரளவு ஒளியைக் கொண்டுவந்தாலும், ஒளியை மறைத்தால் மட்டுமே இருளைக் கொண்டுவரும் ஒரே வழி என்று அறிந்தார்கள். அதனால் ஒளி அல்லது அறிவு என்பதே உண்மை என்றும், இருள் அல்லது அறியாமைக்கு தனித்து இருக்கும் இயல்பு கிடையாது என்றும் அறிந்தார்கள். அதாவது அறியாமை என்பது அறிவு அற்ற நிலை.

அத்தகைய இருளில் இருந்து ஒருவன் விழித்து எழும் தருணமான அதிகாலை வேளையை அவர்கள் “உஷஸ்” என்று குறிப்பிட்டு, அதற்கு ஒரு தனி மகத்துவத்தையும் அளித்தனர். ஏனென்றால் அனைத்து உயிர்களும் அறியாமையில் மூழ்கி இருந்தாலும், வேற்றுமையை மறந்து அப்போது அவர்கள் அனைவரும் ஒரே நிலையில் இருக்கும் அந்த உறக்க நிலையில் இருந்து மாறி, உலக இயல்பின் படி தங்களின் வேற்றுமைகளை விழிப்பு நிலையில் காணப் போவதன் முதல் படி அது.

அப்படி என்றால் நமது உண்மை நிலை எது? அனைத்தும் ஒன்றே என்று பார்ப்பதா? அல்லது வேற்றுமைகளைக் காண்பதா? ஆக ஒவ்வொருவரும் தன் உண்மை நிலையை அறியத் தூண்ட உதவும் நேரம் அது. அந்த “உஷஸை” தாயாகவும், மகளாகவும் வெவ்வேறு ரிஷிகள் வர்ணித்து, உண்மையைக் காண உதவும் உள்ளம் கொண்டவர்களாக அந்த அதிகாலை வேளையை விவரிக்கின்றனர். ஏனென்றால் ஒவ்வொருவரும் தன் உண்மை நிலையை உணர்வதற்கே இவ்வுலகில் பிறந்து வந்துள்ளனர்.

ஆக ஒவ்வொரு விடியலும் உறக்கத்தில் அனுபவிக்கப்படும் ஆனந்தத்தை, விழிப்பு நிலையில் அவரவர்களும் பரிபூர்ண உணர்வுடன் அனுபவிக்க வேண்டும் என்றதொரு குறிக்கோளுக்காகவே என்பதை உணர்த்துகிறது. உலக இயக்கங்களில் ஈடுபட்டாலும் அவைகளில் மயங்காது, அவைகளைக் கொண்டே அவை மூலம், உண்மையை அறிவதே அது காட்டும் வழி. ஒருவேளை அந்தக் குறிக்கோளை ஒருவன் தன் வாழ்நாளில் அடைய முடியாது போனாலும், அந்த விடியும் வேளை மேலும் தொடர்வதையே அடுத்த பிறவி என்னும் எண்ணத்தைத் தோற்றுவித்து, அவனது முயற்சியைத் தொடர வைக்கிறது.

நம் நிலைகளைப் பற்றிய பதிவில், நமக்கு ஏழு நிலைகள் (அல்லது ஐந்து கோசங்கள்) இருப்பதாக முன்பு படித்தோம். அவை கீழ் நிலையில் உடல், இயங்குதற்கு உயிர், உள்ளம் அல்லது மனம், பின் இடையில் இவைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த புத்தி எனும் அறிவு, மற்றும் மேல் நிலையில் சத்-சித்-ஆனந்தம் என்ற ஏழு நிலைகளாகும்.

எவ்வாறு “உஷஸ்” எனப்படும் அருணோதய வேளை இருள் நிறைந்த இரவையும், ஒளி மிகுந்த பகலையும் பிரித்துக் காட்டுகிறதோ, அதே போல நம் ஒவ்வொருவருக்கு இருக்கும் புத்தியாகிய அறிவுத் திறன், தெய்வீகம் பொருந்திய நம் சத்-சித்-ஆனந்த நிலையையும், உலகத் தொடர்பு மிகுந்த நம் உடல்-உயிர்-உள்ளம் நிலைகளையும் பிரித்துக் காட்டுகிறது.

கீழ்நிலையில் உடல் என்பது ஜடம்தான். அது தானே இயங்கும் தன்மை இல்லாதது. “தேகம் கடம் நிகர் ஜடம்; அதற்கு அகம் எனும் திகழ்வு இலதால்..” என்பார் ரமணர். இல்லையா? உடல் எப்படி “நான்” என்று தானே சொல்லும்? உயிர் இருந்தால்தானே அது முடியும். அதன் பின் வருவது மனம் என்னும் உள்ளம். இந்த மூன்றின் இயக்கம்தானே நமக்கும் உலகத்திற்கும் இடையே உள்ள உறவை நிர்ணயிக்கிறது? அதில் புத்தியும் உண்டு. அதைப் பற்றிப் பின்பு அலசுவோம்.

மற்றவர்கள் உங்களைப் பார்க்கும்போது உங்கள் உடலையும், அதன் இயக்கத்தையும் மட்டும்தானே பார்க்க முடிகிறது? உங்கள் மனதை அவர்களால் கணிக்கத்தான் முடியும், இல்லையா? அதனாலேயே அது உள்ளம் எனப்படுகிறது. இந்த மூன்றும் ஓங்கியிருக்கும் வரை ஒருவனால் உலக ரீதியாக மட்டுமே இயங்க முடியும்.

எப்போது அவனது புத்தி இதைப் பற்றி அலசியோ (சுயபுத்தி) அல்லது பிறர் சொல் கேட்டு விழித்து எழுந்து (சொல்புத்தி) இந்த மூன்றிற்கும் மேலே நமக்கு நிலைகள் உண்டு என்பதை உணர்கிறானோ, அப்போதுதான் அவனுக்கு மேல்நிலைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வமே வரும். அதாவது ஒருவனது புத்தியாகிய அறிவு உலக விஷயங்களிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கும்வரை அவன் உலகுக்கு இரையாகிறான். அவனுக்கு இறையனுபவ முதிர்ச்சி இன்னும் கிட்டவில்லை என்பதே இதன் அர்த்தம். அந்த முதிர்ச்சி வளரும் தருணம்தான் இருளை விரட்டி ஒளியை அளிக்கும் “உஷஸ்” ஆகிய விடியல் வேளையாகும்.

எவராலும் “நான் தூங்கினேன்” என்று இறந்த காலத்திலும், அல்லது “நான் தூங்கப் போகிறேன்” என்று எதிர் காலத்திலும் மட்டுமே கூற முடியும். நிகழ் காலத்தில் “நான் தூங்குகிறேன்” என்று சொல்ல முடியாததன் காரணம் அப்போது “நான்” என்ற உணர்வு இல்லை. நான் எனும் உணர்வு இல்லாத அந்தச் சமயத்தில் அவனுக்கு உலகமும் இல்லை. அதனால் நானும் உலகமும் ஒன்றாக உதித்து, பின் ஒன்றாகவே மறையும். இதுதானே நம் ஒவ்வொருவரின் நித்திய அனுபவம்? அப்போது உடல் இருக்கிறது, ஆனால் அதைப் பற்றிய உணர்வு இல்லை.

நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நம் மனதில் இருக்கும் எண்ணங்களோ, உலகத்தாரோடு இயங்க வைக்கும் புத்தியோ உணரப்படுவதில்லை. ஆனாலும் விழித்ததும் அவை அனைத்தும் மீண்டும் உணரப்படுவதால், அவை ஏதோ நுண்ணிய வடிவில் நமது அறிவுக்கு எட்டாமலேயே நம்முள் இருக்கிறது என்பதை நாம் ஊகிக்கலாம். அதாவது மனமானது உலக அனுபவங்களை கிரகித்து வைத்துக்கொண்டு, விழிக்கும்போது அவைகளை வெளிப்படுத்துகிறது என்றுதானே அதன் அர்த்தம்? இதைத்தான் “உஷஸ்” எனும் விடியல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

ஆனாலும் நம்மில் எத்தனை பேர் இந்தப் பேருண்மையைப் பற்றித் தீவிரமாக அலசி அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம்? அவ்வாறு சிறிதும் சிந்தனை செய்யாமல், விழித்த உடனேயே நாம் உலகத்தில் இயற்ற வேண்டிய அடுத்தடுத்த காரியங்களில் இறங்கிவிடுகிறோம் அல்லவா? மாறாக ஒரேயொரு நிமிடமாவது இது பற்றி அப்போது தியானித்தால் நமது வாழ்க்கைமுறை மேலும் வளம் பெற அது உதவும்.

நாம் வாழும்போது, உடலுடன் கூடிய இதுதான் நமது தினப்படி அனுபவம் என்றால், நாம் இறக்கும்போது உடல் மறைந்து உயிர் போனாலும், நமது உள்ளத்தளவில் நாம் சேகரித்து வைத்துள்ள விருப்பு, வெறுப்பு போன்றவைகள் நுண்ணிய வடிவாக “வாசனைகள்” என்று தங்கி, நமக்கு அடுத்த பிறவியை அதற்குண்டான சமயத்தில் அளிப்பதும் இதே “உஷஸ்” எனப்படும் விடிவுகாலம்தான்.

ஆக “மனத்துக்கண் மாசிலன் ஆக இருப்பதே அனைத்து அறன்” என்பதை நாம் அறியவேண்டும். அதனால் நம் வாழ்நாளில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், நமது புத்தியாகிய அறிவைப் பயன்படுத்தி, தறிகெட்டு ஓடும் நமது மனத்தைக் கட்டுப்படுத்தி, நமது உடலின் இயக்கங்கள் அனைத்தையும் நற்செயல்களுக்கு அற்பணித்து, இதுவரை நாம் சேர்த்து வைத்துள்ள பாவ-புண்ணியங்களை அவை மூலம் கழித்து, தற்போது ஆற்றும் பணிகளால் மேலும் பாவ-புண்ணியங்களைச் சேர்க்காது இருக்க “நான் செய்கிறேன்” என்ற எண்ணம் துளியும் இல்லாது எதையும் இறைபணியாக ஆற்றவேண்டும்.

அதற்கு புத்தியாலேயே புத்தியையும் களையும் வழிகளைக் கற்பதற்கே நமது மேல் நிலைகளைப் பற்றி நாம் அறிந்துகொள்ளும் அவசியம் நமக்கு இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் பொறுப்பை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

(தொடரும்)

One Reply to “ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4”

  1. படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *