ஜூலை 4 – அமெரிக்க சுதந்திர தினம். Independance Day. அமெரிக்கா இங்கிலாந்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாள். பிரிட்டிஷ் காலனியாக இருந்த அமெரிக்கா தன்னை ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது அன்றுதான்.
அமெரிக்கச் சுதந்திரம் என்பது வெள்ளை அமெரிக்க ஆணுக்கு மட்டும்தான். அவன் காலடியில் செவ்விந்தியர்களும், கறுப்பினத்தவர்களும் பிற அமெரிக்கப் பழங்குடியினரும் நசுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லது அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அமெரிக்கப் பெண்கள் வாக்குரிமை பெற, ஆண்களைப் போல சுதந்திரமாக இருக்க மிகவும் போராட வேண்டியிருந்தது. 1920-ஆம் ஆண்டுவரை அது அவர்களுக்குக் கிட்டவில்லை. ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழித்தார் என்றாலும் அமெரிக்கக் கறுப்பனுக்கு 1960-கள் வரையில் சம உரிமையில்லை. அமெரிக்கா இன்றுவரை ஒரு வெள்ளை ஆணாதிக்க மனோபாவம் கொண்டதொரு சமுதாயம். அதிலிருந்து அமெரிக்கா வெளிவர இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது செல்லவேண்டியது இருக்கலாம் என்பது என் எண்ணம்.
ஆரம்பத்தில் அமெரிக்கா வெறும் பதின்மூன்று காலனிகளை அல்லது மாநிலங்களை மட்டுமே உடையதாக இருந்தது. இன்றைக்கும் “நியூ இங்கிலாந்து” என அழைக்கப்படும் நியூயார்க், நியூஜெர்ஸி, ஃபிலடெல்ஃபியா, கனெக்டிகட்…போன்ற மாநிலங்கள் மட்டுமே ஆரம்ப கால அமெரிக்காவாக இருந்தது. ஆனால் அமெரிக்கத் தலைவர்கள் மெல்ல, மெல்ல பிற பகுதிளைக் கட்டாயப்படுத்திச் சேர்த்துக் கொண்டார்கள். ஃப்ரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்த லூஸியானா போன்ற மாநிலங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டன. லூயிஸ்-க்ளார்க் என்கிற இரண்டுபேர்களின் தலைமையில் அமெரிக்காவின் உட்பகுதிகளைக் கண்டறிய அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கத் தலைவர்கள் அமெரிக்க உட்பகுதிகளை செவ்விந்தியர்களிடமிருந்து பிடுங்கினார்கள். மிகப்புகழ்பெற்ற ஒரேகான் ட்ரெயில் (Oregon Trail) அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலமாக கிழக்குப் பகுதியிலிருந்து கலிஃபோர்னியா வரையிலான மேற்குப் பகுதிகளுக்குப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பழைய அமெரிக்கக் காலனிகளில் இருந்தவர்கள் மெல்ல, மெல்ல அமெரிக்காவின் உட்பகுதிகளுக்குச் சென்று குடியேறினார்கள்.
நீங்கள் பார்க்கிற கொளபாய் படங்களின் அடிப்படை அதுதான். ஆச்சரியம் என்னவென்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த செவ்விந்தியன் வில்லனாகக் காட்டப்பட்டான். அவனைத் துரத்தியடித்து அல்லது கொன்று அவனது நாட்டைப் பிடிக்க வந்த வெள்ளையன் நல்லவனாகக் காட்டப்படுவான்! இன்றுவரை அதுதான் தொடர்கிறது. அவர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவப் பாதிரிகள் செவ்விந்தியர்களை மதம்மாற்ற அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவ்வாறு மதம் மாற்றப்பட்ட செவ்விந்தியர்கள் தங்களின் சொந்த இனத்தவனையே காட்டிக் கொடுத்து இறுதியில் அவர்களும் அழிந்து போனார்கள். மது அருந்தாத செவ்விந்தியர்களுக்கு மதுவருந்தும் பழக்கத்தை உண்டாக்கினார்கள் பாதிரிகள். அவர்கள் போர்த்திக் கொள்ள அம்மை நோய் நிறைந்த போர்வைகள் கொடுக்கப்பட்டன. அம்மை எதிர்ப்புச் சக்தி உடலில் இல்லாத செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாக மரித்தார்கள். அவர்களின் முக்கிய உணவாக இருந்த பைசன் எனப்படும் காட்டெருதுகளை ஆயிரக்கணக்கில் கொன்று அவர்களைப் பட்டினி போட்டுக் கொன்றான் வெள்ளையன். எஞ்சியவர்களை சுற்றிவளைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஏறக்குறைய பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் இருந்த செவ்விந்தியர்கள் இன்று சில லட்சம் பேர்கள் கூட இல்லை. அப்படி மிஞ்சி இருப்பவர்கள் கூட பெருங்குடிகாரர்களாகத்தான் இன்றைக்கு இருக்கிறார்கள். அவர்களின் வரலாறும், கலாச்சாரமும், மொழியும் சுத்தமாக அழிக்கப்பட்டுவிட்டது.
கலிஃபோர்னியாவின் சாக்ரமேண்ட்டோவிற்கு அருகில் சட்டர்ஸ் கிரீக் (Sutters Creek) என்கிற இடத்தில் தங்கம் கிடைத்ததைத் தொடர்ந்து கிழக்கில் இருந்த வெள்ளை அமெரிக்கர்கள் மேற்கு நோக்கி நகர்வது துரிதப்படுத்தப்பட்டது. கலிஃபோர்னியா மெக்ஸிகோவிற்குச் சொந்தமானது. ஆனால் அமெரிக்கர்கள் வலுக்கட்டாயமாக அதனைத் தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
சட்டர் என்பவர் ஒரு ரிட்டையர்ட் ராணுவ ஜெனரல். சாக்ரமேண்ட்டோவில் ஒரு பண்ணை (Ranch) அமைத்து ஏகாந்தமாக ஓய்வுகாலத்தைக் கழிக்க எண்ணிக் கொண்டிருந்த அவருக்கு, அவரது பண்ணையில் இருந்த ஒரு ஆற்றின் கரையில் கிடைத்த தங்கத்தால் நிம்மதி போயிற்று. அவரிடம் வேலை செய்து கொண்டிருந்த ஒருவன் அந்த ஆற்றங்கரையில் சிதறிக் கிடந்த தங்கத்தைக் கண்டெடுத்தான். அந்தத் தங்கத்தை எடுத்துக் கொண்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ வீதிகளில் “Gold!” எனக் கத்திக் கொண்டு ஓடியது அமெரிக்காவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. அதுவரையில் விவசாய நிலம் மட்டும் பெறுவதற்காக நியூ இங்கிலாந்து காலனிகளை விட்டு கட்டை வண்டிகளில் குடும்பத்துடன் உட்பக்கம் சென்று கொண்டிருந்த அமெரிக்கர்கள் ஓரேகான் ட்ரெயில் வழியாக கலிஃபோர்னியாவுக்கு வர முயன்றார்கள். சான்ஃபிரான்ஸிஸ்கோவில் நிலைமை இன்னும் மோசமானது. கடையில் வேலை செய்து கொண்டிருந்தவன், குதிரை வண்டியோட்டிக் கொண்டிருந்தவன், வீடுகட்டிக் கொண்டிருந்தவன் எல்லாம் சட்டர்ஸ் க்ரீக்கை நோக்கி, வேலையை விட்டுவிட்டு, ஓட ஆரம்பித்தான். எங்கும் குழப்பம்.
ஆர்வமுள்ளவர்கள் 1845-ஆம் வருடத்திய California Gold Rush குறித்துப் படிக்க வேண்டுகிறேன். இன்றைய கலிஃபோர்னியாவின் வரலாறு தெரியவரும். ஒருகாலத்தில் இதையெல்லாம் குறித்து ஏகப்பட்ட புத்தகங்கள் படித்திருக்கிறேன். இன்றைக்கு அந்த ஆர்வமெல்லாம் குறைந்து விட்டது. அதுபோலவே கனடாவின் Klondike Gold Rush ஒரு மிகப்பெரும் நிகழ்வு. கனடாவில் ஏகப்பட்டபேர்கள் குடியேற அது காரணமாக அமைந்தது.
கலிஃபோர்னியா தங்கத்தின் காரணமாகவே பனாமா கால்வாய் வெட்டப்பட்டது. காரணம் கலிஃபோர்னியாவிற்குப் போகும் பாதை கடினமானது மட்டுமல்லாமல் ஆபத்தானதாகவும் இருந்தது. நியூயார்க்கிலிருந்து புறப்படும் கப்பல்கள் தென்னமெரிக்காவின் கடைசி முனையில் திரும்பி மீண்டும் வடக்கு நோக்கு மேலேறி வரவேண்டும். மாதக்கணக்கான கடல் பயணத்தில் ஏகப்பட்ட ஆபத்துக்கள். இன்று இருப்பதுபோல சக்தி வாய்ந்த கப்பல் இல்லாமல் புயலிலும், ஆர்ட்டிட் பனிக்கட்டியிலும் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். அதையெல்லாம் தவிர்க்கவே பனாமா கால்வாய் வெட்டப்பட்டது.
வரலாறு மிக, மிக சுவாரசியமானது. ஆனால் அதனைக் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இன்றைக்கு முற்றிலும் குறைந்துவிட்டது என்பது துரதிருஷ்டம்தான். அதிலிம் இளையதலைமுறைகளை நினைத்தால் உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.
Wish you a Happy July 4th.
(பி.எஸ்.நரேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).
படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.
Thanks for this articke.
One should read the book “A little matter of genocide from 1492″by Professor Ward Churchill. Author is a Red native Indian!
In the stand-off with China, US is supporting India strongly with words and ammunition. 2.9 lakh Indian students are in US universities,. Indian origin Americans, all of them mostly Hindus, are 10 percent of the voters. So, US-hating will boomerang.