சிவ மானஸ பூஜா – தமிழில்

பூஜா என்றால் தெய்வத்தின் மீதான பக்தியில், பிரேமையில் மனம் மலர்தல் என்பது பொருள். முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம் – அன்பே
மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே

என்கிறார் தாயுமானவர்.

இத்தகைய பூஜா-தியான மனப்பாங்குக்கு உதவும் வகையில் தெய்வங்களைக் குறித்து மானஸ பூஜா ஸ்தோத்திரங்களை ஆசாரியர்களும் மகான்களும் அருளியுள்ளார்கள்.

ஸ்ரீ சங்கரர் அருளியவற்றில் சிவனைக் குறித்து கீழ்க்காணும் சிவ மானஸ பூஜா & ம்ருத்யுஞ்ஜய மானஸிக பூஜா ஸ்தோத்ரம், தேவியைக் குறித்து மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா & த்ரிபுரஸுந்தரி மானஸபூஜா ஸ்தோத்ரம், விஷ்ணுவைக் குறித்து பகவன் மானஸ பூஜா ஆகியவை இந்த வகையானவை. ஆழ்ந்த பக்தியுணர்வும் கவிதை நயமும் சொல்லழகும் கொண்ட அற்புதமான ஸ்தோத்திரங்கள் இவை. இவற்றில் தனது இஷ்ட தெய்வத்தைக் குறித்த மானஸ பூஜா ஸ்தோத்திரத்தை பொருளறிந்து தொடர்ந்து பாராயணம் செய்து வருபவர்களுக்கு, காலப்போக்கில் இயல்பாகவே மானஸ பூஜைக்கு உகந்ததான தியான மனநிலை கைகூடி வரும் என்பது பெரியோர்களின் உபதேசம்.

சிவ மானஸ பூஜா – ஸ்ரீ சங்கரர் அருளியது
(தமிழாக்கம் எனது).

இரத்தினங்கள் இழைத்த இருக்கை
பனிநீராடல்
திவ்யமான ஆடைகள்
பல்வேறு மணிகளால் அணிகலன்கள்
கஸ்தூரியுடன் குழைத்த சந்தனம்
மல்லிகை செண்பகம் வில்வம் கலந்த மலர்கள்
தூபம் தீபம்
தேவா தயாநிதி பசுபதி
இதயத்தில் கற்பித்த இவையனைத்தையும்
ஏற்றிடுக. (1)

ரத்னை꞉ கல்பிதமாஸனம்ʼ ஹிமஜலை꞉
ஸ்னானம்ʼ ச தி³வ்யாம்ப³ரம்ʼ
நானாரத்னவிபூ⁴ஷிதம்ʼ ம்ருʼக³மதா³-
மோதா³ங்கிதம்ʼ சந்த³னம் ।
ஜாதீசம்பகபி³ல்வபத்ரரசிதம்ʼ
புஷ்பம்ʼ ச தூ⁴பம்ʼ ததா²
தீ³பம்ʼ தே³வ த³யானிதே⁴ பஶுபதே
ஹ்ருʼத்கல்பிதம்ʼ க்³ருʼஹ்யதாம் ॥ 1॥

நவரத்தினங்கள் மிளிரும் பொற்பாத்திரத்தில்
நெய்ப் பாயசம்
ஐந்துவித பக்ஷணங்கள்
பாலும் தயிரும் கலந்தவை
கதலிப்பழம் பானகம்
நிறைந்த காய்கறிகள்
கற்பூரம் கமழும் சுவைமிகு தண்ணீர்
தாம்பூலம்
பக்தியினால் மனத்தில் சமைத்தவை
பிரபுவே
சுவீகரித்திடுக. (2)

ஸௌவர்ணே நவரத்னக²ண்ட³ரசிதே
பாத்ரே க்⁴ருʼதம்ʼ பாயஸம்ʼ
ப⁴க்ஷ்யம்ʼ பஞ்சவித⁴ம்ʼ பயோத³தி⁴யுதம்ʼ
ரம்பா⁴ப²லம்ʼ பானகம் ।
ஶாகானாமயுதம்ʼ ஜலம்ʼ ருசிகரம்ʼ
கர்பூரக²ண்டோ³ஜ்ஜ்வலம்ʼ
தாம்பூ³லம்ʼ மனஸா மயா விரசிதம்ʼ
ப⁴க்த்யா ப்ரபோ⁴ ஸ்வீகுரு ॥ 2॥

குடை இருபுறமும் சாமரம் மென்விசிறி
மாசற்ற கண்ணாடி
வீணை பேரிகை மிருதங்க கோலாகலம்
கீதம் நடனம்
சாஷ்டாங்க நமஸ்காரம்
துதிகள் பலவிதம்
இவையனைத்தும் உனக்கென
எனது சங்கல்பத்தால்
சமர்ப்பித்தவை
எங்கும் நிறைந்தோனே விபுவே
பூஜையை ஏற்றிடுக. (3)

ச²த்ரம்ʼ சாமரயோர்யுக³ம்ʼ வ்யஜனகம்ʼ
சாத³ர்ஶகம்ʼ நிர்மலம்ʼ
வீணாபே⁴ரிம்ருʼத³ங்க³காஹலகலா
கீ³தம்ʼ ச ந்ருʼத்யம்ʼ ததா² ।
ஸாஷ்டாங்க³ம்ʼ ப்ரணதி꞉ ஸ்துதிர்ப³ஹுவிதா⁴
ஹ்யேதத்ஸமஸ்தம்ʼ மயா
ஸங்கல்பேன ஸமர்பிதம்ʼ தவ விபோ⁴
பூஜாம்ʼ க்³ருʼஹாண ப்ரபோ⁴ ॥ 3॥

ஆத்மா நீ
அறிவு மலைமகள்
பரிவாரங்கள் பிராணன்
உடல் கோயில்
புலன்களின் இன்பநுகர்ச்சி உனது பூஜை
உறக்கம் சமாதி நிலை
கால்கொண்டு நடத்தல் பிரதட்சிணம்
பேச்செல்லாம் துதிப்பாடல்
என் செயல்களென எவை எவை உண்டோ
சம்போ
அவையனைத்தும் உனக்கு ஆராதனம். (4)

ஆத்மா த்வம்ʼ கி³ரிஜா மதி꞉ ஸஹசரா꞉
ப்ராணா꞉ ஶரீரம்ʼ க்³ருʼஹம்ʼ
பூஜா தே விஷயோபபோ⁴க³ரசனா
நித்³ரா ஸமாதி⁴ஸ்தி²தி꞉ ।
ஸஞ்சார꞉ பத³யோ꞉ ப்ரத³க்ஷிணவிதி⁴꞉
ஸ்தோத்ராணி ஸர்வா கி³ரோ
யத்³யத்கர்ம கரோமி தத்தத³கி²லம்ʼ
ஶம்போ⁴ தவாராத⁴னம் ॥ 4॥

கால்கள் கைகளால் செய்ததோ
வாக்கில் உடலில் செய்கையில் விளைந்ததோ
செவிகளில் விழிகளில் தோன்றியதோ
மானசீகமானதோ
அறிந்ததோ அறியாததோ
அக்குற்றங்கள் அனைத்தையும்
பொறுத்தருள்க.
ஜெய ஜெய கருணைக்கடலே
ஸ்ரீமகாதேவ சம்போ. (5)

கரசரண க்ருʼதம்ʼ வாக்காயஜம்ʼ கர்மஜம்ʼ வா ।
ஶ்ரவணனயனஜம்ʼ வா மானஸம்ʼ வாபராத⁴ம் ।
விஹிதமவிஹிதம்ʼ வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ ।
ஜய ஜய கருணாப்³தே⁴ ஶ்ரீமஹாதே³வஶம்போ⁴ ॥ 5॥

(சிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம் முற்றும்)

ஒலி வடிவில் கேட்க:

2 Replies to “சிவ மானஸ பூஜா – தமிழில்”

  1. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
    தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
    கள்ளப்புலன் ஐந்தும் காளாமணி விளக்கே- திருமூலர்.

    அன்புள்ள ஜடாயு அவர்களுக்கு,
    அருமையான தமிழாக்கம். மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.
    It is a blessing to be able to read all these.
    Stay Blessed,
    Meenakshi Balganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *