இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.
7 – இந்திரன்
உலகில் உள்ள அனைத்து சீவராசிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை அதனதன் உயிர்தத்துவத்தில் அடங்கியிருக்கிறது. அதை அவைகளின் உறக்க நிலையில் காணலாம். அனைத்தும் உலக ரீதியில் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்பவைகளில் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் அவைகளுக்கு இடையே இருக்கும் வேற்றுமைகளை, அந்த உயிர் சக்தி அவர்களிடம் வெளிப்படுத்தும் தன்மைகளில் இருந்து, உணரலாம்.
மனிதன் மற்றும் விலங்குகளுக்கு உள்ள இடம் பெயரும் தன்மை தாவரங்களுக்குக் கிடையாது. விலங்குகள் பொதுவாகத் தங்களின் உள்ளுணர்வுப்படி செயல்படுகின்றன. அவைகளில் சிலவற்றுக்குக் கற்றுக்கொள்ளும் புத்தி கூர்மை (knowledge) உண்டு என்றாலும், தனக்கு அது இருக்கிறது என்னும் மேல்நிலை அறிவு (meta-knowledge) இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
மனிதனுக்கு அது இருப்பதாலேயே விவசாயம், பண்பாடு, கலை, விஞ்ஞானம் போன்ற பலவித ஆக்கபூர்வமான வழிகளையும், அவைகளை முறியடிக்கும் வகையிலான எதிர்மறைச் செயல்களையும் கண்டறிய முடிகிறது. அதாவது “சித்” எனும் அக்னி அவர்களது புத்தியை அவரவர்க்குண்டான வெவ்வேறு வழிகளில் இயக்குகிறது. அங்குதான் விதி-மதி என்பவைகளின் விளையாட்டும் தொடங்குகிறது.
என்னதான் நடந்தாலும், நடக்கும் நாடகத்தை ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? அதாவது சாட்சியாக ஒருவன் இருந்தாகவேண்டும். அப்படி இருக்கும் ஒருவன் தன்னைத் தனியனாகவும், பொதுவாகத் தன்னை “நான்” என்றும் உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறான். தன் பிறப்பில் இருந்து இறப்பு வரை, தான் இருப்பதைப் பற்றிய எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் இருக்கிறான். தன் உடல்-உயிர்-உள்ளம் எல்லாம் எந்தவகையில் மாற்றம் அடைந்தாலும், தன் இருப்பைப் பற்றிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருப்பதையும் அவன் உணர்கிறான். அதுவேதான் அனைத்து சீவராசிகளின் அனுபவமாக இருக்கும் என்று அவன் உணர்ந்தாலும், அந்த “நான்” என்பதும், அத்துடன் மற்றவைகள் உள்ள உலகம் என்பதும் அடிக்கடி காணாமல் போவது அவனுக்கு ஆச்சரியம் தருகிறது.
அதனால் “நான்” என்னும் உணர்வு என்ன என்பதைத் தேடும் வேட்டையில் அவன் இறங்குகிறான். மற்ற சீவராசிகளுக்கு இல்லாதது போல் தெரியும் மேல்நிலை அறிவு அவனுக்கு இருப்பதே அவனை அந்த வழியில் இழுத்துச் செல்கிறது. இதையே ரமணர் “புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவரே அன்றி ஒருக்காலும் கைவிடப்படார்” என்பார். அவ்வாறாக அந்த வேட்கை அவனுக்கு மேலும் மேலும் வலுப்பெற, அவன் தன்னுள் இருக்கும் ஒரு மாபெரும் சக்தியை உணர்கிறான். எங்கும் பரந்து விரிந்துள்ள சக்தி, தன்னுள் தனித்து விளங்குவதையே இந்திரன் என்று பெயர் சொல்லி, அது ஒவ்வொருவரது இருப்பாகிய “சத்” உடன் கூடிய “சித்” என்று அறிந்துகொள்கிறான்.
“தேகம் கடம் நிகர் ஜடம்” என்று ரமணர் கூறுவார். அத்தகைய ஜடம் அல்லது பருப் பொருள்தான் உடல். அதற்கு “நான்” என்ற உணர்வு கிடையாது. அந்த உடலில் மூச்சு இருக்கும் வரை உயிர் இருப்பதை உணரலாம். அப்போது அதற்கு கட்டுப்பாடு ஏதுமின்றி அலைஅலையாக எண்ணங்கள் தோன்றும். அதன் தொகுப்பையே மனம் அல்லது உள்ளம் என்றும், அந்த ஒட்டுமொத்த தொகுப்பையே “நான்” என்றும் சொல்லிக்கொள்கிறோம். இதுதான் உலகியல்படி நம்மைப் பற்றி நாம் அறிந்தவை.
ஆனால் இவைகளில் பல, சில சமயங்களில் காணாமல் போய் மறுபடியும் திரும்பி வருவதால், நமது உண்மையான நிலைதான் என்ன என்ற சந்தேகம் வந்து, உலகியலில் மட்டும் தன்னைக் குறுக்கிக் கொள்ளாமல், அதனையும் தாண்டி ஏதேனும் இருக்கலாமோ என்று எண்ணுபவர்களுக்குத் தோன்றுகிறது. அவ்வாறு ஆய்ந்தவர்கள் தெய்வீக இயல் ஒன்றே நம்மை இயக்குகிறது என்று தெளிந்தார்கள். அதன்படி உடல் ஒன்று இருப்பதுபோல், “நாம் இருக்கிறோம்” என்ற உணர்வாகிய அறிவுடன் (சித்) கூடிய இருப்பே (சத்) நமது அடிப்படை என்று உணர்ந்தார்கள்.
“தானாய் இருப்பதே தன்னை அறிதலாம்” என்ற ரமணரின் கூற்றுப்படி, உலகியலில் எண்ணக் கலப்புடன் கூடிய “நான்” என்று நம்மை அறிவது சிற்றறிவு என்றால், தெய்வீக இயலில் எண்ணங்கள் எதுவும் இன்றி, கால தேசங்கள் எனும் கட்டுப்பாடுகளும் இல்லாத “தான்” எனும் பேரறிவாக நாம் விளங்குகிறோம். உலகியலில் சில ஆசைகளோ கடமைகளோ நிறைவேறிய பின் நம் மனம் சாந்தி அடைந்து, சிறிது காலமாவது நாம் அனுபவிக்கும் இன்பத்தின் உண்மை உருவே, இறையியலில் என்றும் எப்போதும் அனுபவிக்கப்படும் “ஆனந்தம்” என்று கூறப்படுகிறது.
நம் ஊனக் கண் முன்னால் தெரியும் நிலையற்ற உலகத்தையும் அதைச் சார்ந்த அனுபவங்களையும், இறைவனது அருளால் நமக்கு வாய்த்தவை என்பதைக் காட்டவே அவன் நம்மைப் படைத்துள்ளான். அதை உணரும் மனிதனின் ஓர் மாதிரி உருவகமாகவே இந்திரன் கருதப்படுகிறான். அவ்வாறு உணர்பவன் பிரபஞ்சம் தன்னுள் இருப்பதாகவோ, அல்லது தானே பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்பதாகவோ தன் உண்மை நிலையை உணர்கிறான். இவ்வாறாக இந்திரனைப் பற்றியும், அவனது தாக்கம் பற்றியும் கூறும் முனிவர்கள்: கதின விஸ்வாமித்திரர், வாமதேவ கௌத்தமர், வத்ஸ கன்வர், நோதஸ் கௌத்தமர், ப்ரஜாபத்ய ஸம்வாரணர், பர்ஹஸ்பத்ய பரத்வாஜர், நர பரத்வாஜர், ந்ருமேத மற்றும் புருமேத ஆங்கிரஸர் ஆகியோர் ஆவார்கள்.
உலகியல்-இறையியல் என்று இதுவரை நாம் பார்த்ததை, எழுத்தாளர் ஜெயமோகன் இந்து மத தரிசனங்கள் பற்றி விவரிக்கும் போது, சாமான்யம்-விசேஷம் என்ற இரண்டு பெரிய தளங்கள் என்றும், ஒரு தளத்தில் இருக்கும் உண்மை மற்றதில் பொருந்தாது என்றும் கூறுவார். முந்தியது மானுடவியல் பற்றியது என்றும், பிந்தியது பிரபஞ்சவியல் பற்றியது என்றும் விளக்குவார். உலகியலில் உள்ள ஒருவன் பிரபஞ்ச அறிவு பெற்றால், அவனையே இந்திரப் பதவி பெற்றவன் என்று கூறுகிறோம். உலகில் இருக்கும் அனைவரும் அந்த நிலையை அடையாமல் இருப்பதன் காரணமே அவரவருக்கு உள்ள ‘நான்’ எனும் அகங்காரமே.
முதலில் தான் உடல் என்றும், பின் அத்துடன் கூடிய உயிர்-உள்ளம்-புத்தி என்று தன்னைத் தனியனாக்கி, மற்ற சீவராசிகளைப் பிறர் என்றும் காண்பார்கள். அனைவரும் ஒன்றே என்ற அனுபவம் பெறுவதற்குத்தான் சத்-சித்-ஆனந்தம் என்ற பிரபஞ்ச அறிவு வேண்டும். நான் தனியன் என்ற மாயை விலகுவதற்கு, சித் எனும் சக்தியின் அருளால் நம்முள் உள்ள இந்திரன் வெளிப்பட்டு, நமது முந்தைய செயல்களாலும், எண்ணங்களாலும் மனம் என்று உருவாகி நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் விஷய வாசனைகளைக் களையவேண்டும்.
அதற்கு ரமணர் காட்டும் வழிதான் “நான் யார்” என்னும் விசாரணை. “எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? அவற்றைப் பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், அவை யாருக்கு உண்டாயின என்று” விசாரணையைத் தொடரவேண்டும். “மனம் அடங்குவதற்கு விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்கள் இல்லை. மற்ற உபாயங்களினால் அடக்கினால் மனம் அடங்கினால் போல் இருந்து, மறுபடியும் கிளம்பிவிடும்…. பிராணாயாமம், மூர்த்தித்தியானம், மந்திர ஜபம், ஆகார நியமம் மனத்தை அடக்கும் சகாயங்களே… மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகள் இருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும் விசாரணையும் வேண்டும்” என்பார் ரமணர். அதைத் தொடர வைப்பது இந்திர சக்தியே.
அறியாமையால் உலக இன்பங்களில் மயக்கம் கொண்டு, அவைகளே உண்மை என்னும் மயக்கத்திலேயே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு, அந்த உலகியலின் ஒரு பகுதியாக விளங்கும் எண்ணங்களாகிய மனம் எவ்வாறு அவனைக் கரையேற்ற முடியும்? ஆகவே அதற்கும் மேலான புத்தியைக் கொண்டு, உலகின் தன்மைகளையும், “நான்” என்பதில் தொடங்கி வெளிப்படும் எண்ணங்களின் தொகுப்பாக விளங்கும் மனத்தின் தன்மையையும் ஒருவன் கூர்ந்து ஆராயவேண்டும். ஆனாலும் அப்போது அவனுக்குக் கிடைக்கும் பதில்களும் உலகியல் சார்ந்தவையே என்று தொடர்ந்து உணரும் ஒருவன் ஒரு கட்டத்தில், எதையும் எதிர்பார்க்காது இருப்பதால் வரும் அமைதியைக் காண்பான்.
அப்போது அவனது “நான்”-எண்ணம் நசிந்தோ, குறைந்தோ இருக்கும். அப்போது “சித்” எனும் பேரறிவால் உந்தப்பட்டு அவனை அதுவரை வழிநடத்திய இந்திர சக்தி அவனது இயக்கத்தைத் தானே மேற்கொண்டு, அவனது மேலான நிலைகளுக்கு அவனைக் கொண்டுசெல்லும். அப்போது முழுதும் நசியாத அகங்காரம் அவனிடம் மீண்டும் தலை தூக்கினால், அவனது அகங்காரம் தூல நிலையில் இருந்து நுண்ணிய நிலைக்கு மாறும் வாய்ப்பும் இருக்கிறது. அது அவனை மீண்டும் உலகியலுக்கு அழைத்துச்செல்ல, அவனது பயணம் மீண்டும் ஆதியில் இருந்து துவங்கும்.
இந்திரன் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் இந்திரியங்கள் என்ற சொல்லாடலும். நமது பஞ்ச இந்திரியங்கள் வெளிமுகமாக நோக்கினால், நாம் உலகியலில் ஈடுபடுவோம். அவ்வாறான வெளிப்புற நோக்கை அடக்கி, அதை உண்முக நோக்கிற்கு அதனைப் பழக்கப் பழக்க, உலகைப் பற்றிய உண்மைகளும் தெரியவரும். மனத்தின் உண்மை சொரூபமும் தெரியவரும். எண்ணங்கள் மறைய மறைய, “நான்” என்ற முதல் எண்ணமும் கரைந்து, தெய்வீக இயலாகிய “தான்” என்ற அனுபவமும் இவ்வாறு முயல்கிற சாதகனுக்கு வாய்க்கும். இவை அனைத்தும் எப்போது, எவ்வாறு அமையும் என்பதை உலகியலில் ஆழ்ந்துள்ள ஒருவனால் தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது.
“சித்” ஆகிய அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டி, அதை அறிவுமயத்தோடு நிறுத்தாமல், அவனைத் தெய்வீக நிலைக்கும் கொண்டுசெல்ல வேண்டும். அந்தப் பாதையில் எங்கு அகங்காரம் மறையவில்லையோ அங்கு அதே அருள் அவனுக்குப் பின்னடைவு தந்து மேலும் வழிநடத்திச் செல்லும்.
எதிலும் “நான்-நான்” என்பதிலேயே நம் உலகியல் தொடர்புகள் சுற்றிக்கொண்டு தொடரும். ஒன்று தன்னைப் பற்றியோ, அல்லது தனது உடமை அல்லது உறவுகளைப் பற்றிய பேச்சுக்களிலோ அல்லது செயல்களிலோ அது சுழன்றுகொண்டிருக்கும். அதன் காரணமே நமது எண்ணங்களாலும், செயல்களாலும் நம் உள்ளத்தில் ஏற்கனவே ஆழமாகப் பதிந்துள்ள வாசனைகள்தான். அவை எப்படி வந்தன? நம் புலன்களின் மூலம் நம்முள் ஏற்பட்ட தாக்கத்தினால்தான். இவ்வாறு நாமே ஏற்படுத்திக்கொண்ட சூழ்நிலையில் உருவான முதன்மையான எண்ணம்தான் அந்த “நான்” எனும் அகந்தை. அவ்வாறாக உலகை நாம் உணர்வதற்கு நம் இந்திர சக்தி நம் இந்திரியங்கள் மூலம் வெளிப்படுகிறது. அப்போது அது நம்மையும் பிறரையும் பிரித்துக் காட்டுவதோடு, உலக சுகங்களில் நம்மை மூழ்கடித்து, நமது புத்தியின் போக்கையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் செயல்பட வைக்கிறது.
அதற்கு மாறாக இருப்பதுதான் “தான்-தான்” என்ற நம் உணர்வு. அது பிரபஞ்சவியல் அல்லது இறையியல் தொடர்புடையது. அதுவும் நம்மைத் தொடக்கத்தில் தனியனாக உணர வைக்கும் இந்திர சக்திதான். ஆனால் அது நம்மைச் சூழ்ந்துள்ளவைகளால் உருவான ஒன்றல்ல. அது தெய்வீகத் தன்மை பெற்ற மாபெரும் ஆக்க சக்தி. உலகியல் தொடர்புகொண்ட “நான்” என்பதன் உண்மை சொரூபத்தை நமக்குக் காட்ட நம்முள் இருக்கும் மகத்தான சக்தி. நாம் தனியன் என்று அது நம்மை உணரவைத்தாலும், அதுவே அனைத்து சீவராசிகளிலும் உள்ள சக்தி என்பதையும் விரைவிலேயே காட்டி, அனைத்தும் ஒன்றே என்பதை நாம் உணரும் நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியது.
அந்த இந்திர சக்தி நமது ஐம்புலன்களை வெளியே விடாமல் உண்முகமாகத் திருப்பி நம் பிறப்பின் காரணத்தைக் காட்டும் வல்லமை கொண்டது. அதாவது ஒரே சக்தி, தான் திரும்பும் திசைக்கேற்ப, புலன்களால் அடையக்கூடிய நிரந்தரமற்ற உலக இன்பங்களையோ, அல்லது புலன்களைத் தவிர்த்து அனுபவிக்கக்கூடிய நிலைத்து நிற்கும் ஆனந்தத்தையோ பெறுவதற்கு உதவக்கூடியது. முன்னது, நாமாகத் தேர்ந்தெடுத்து நமக்கு வரவழைத்துக்கொள்வது. பின்னது, நம்மால் இயலாதது என்பதை உணர்ந்து, அம்மாபெரும் சக்திக்கு அடிபணிந்து, அது தன்னை ஆட்கொள்ளும் வகையில் நான்-எனது என்ற அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு அதற்கேற்ற செயல்களில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வது.
முன்னதை அனுபவித்துவிட்டு, அதன் நிலையாமையை உணர்ந்த பின் அது தேவையற்றது என்று ஒதுக்கிவிட்டு, பின்னதைத் தேர்ந்தெடுக்கும் வரைதான் நம் புத்தி நமக்கு வழிகாட்ட முடியும். அதற்கு மேலும் நாம் தேர்ந்தெடுத்துச் செல்வதற்கு நமக்கு வழிகள் இருக்கின்றன என்ற எண்ணம் இருந்தாலோ, நாம்தான் சரணடைந்துவிட்டோமே, இன்னமும் எந்த மாற்றமும் நாம் காணவில்லையே என்ற எண்ணம் தோன்றினாலோ, நாம் பரிபூர்ணமாக சரணடையவில்லை என்பதே அதன் அர்த்தம் ஆகும். அதாவது ஏதோவொரு நுண்ணிய வடிவிலாவது நம் அகங்காரம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது என்பதே அதற்குப் பொருள்.
“தான் அன்றி யார் உண்டு?… தான் பிறர் என்று ஓராமல் தந்நிலை பேராமல் தான் என்றும் நின்றிடவேதான்” என்பார் ரமணர். அந்தநிலையில் உறுதியுடன் நிற்கும் வரை, ஏதேனும் ஒரு வகையில், சாதகனது ஆன்ம விசாரம் தொடரவேண்டும். அதாவது, நமது எண்ணங்கள் அலைஅலையாக வரும்போது அவைகளைத் தொடர்ந்து செல்லாமல், அவை யாருக்கு உண்டாயின என்று கேட்டோ, அல்லது ஓர் எண்ணம் எழும்போது அதை வெறும் சாட்சியாகப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதற்கோ தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதே நம் சாதகம் ஆகும்.
“தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்” என்ற ரமணரின் வாக்கில், ‘அறிதல்’ என்பதை நம் புத்திகொண்டு அறிவது என்று புரிந்துகொள்ளக்கூடாது. அது உலகியல் தொடர்பை இன்னமும் விடாத சிற்றறிவாகும். அவர் கூறும் அறிதலை ‘இருக்கும் தன்னை உணர்தல்’ என்ற சத்-சித் அளவில் உள்ள பேறறிவு என்று கொள்ளவேண்டும். சத் என்பதே இருப்பது, சித் என்பதே உணர்வது அல்லது அறிவது என்று பொருள். இருக்கும் தன்னை அறியாது, தன்னைச் சுற்றி உலகில் உள்ள மற்றதை அறிவதையே ‘அறிவு’ என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. “அறிவுறும் தனை அறியாது அயலை அறிவது அறியாமை அன்றி அறிவோ?” என்பார் ரமணர். அவ்வாறு கூறுவதால் அறிவு-அறியாமை என்ற இருமை வருவது போல, இருப்பது-இல்லாதது என்றும் உள்ளதா என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. அதற்கான விளக்கத்தைப் பிறகு காண்போம்.
“அறிவு விட்டு அறியாமை இன்றாம்; அவ்வறியாமை விட்டு அறிவும் இன்றாம்” என்று அறிவு-அறியாமையை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பார் ரமணர். அதாவது ஒன்று விட்டு மற்றது இல்லை என்பதே அதன் அர்த்தம். ஆக “உணர்வே பிரம்மம்” என்ற மகா வாக்கியத்தின்படி “தன்னை உணர்தல்” என்பது நம் வாயால் கூறப்படுவதோ, மனதால் அங்கீகரிக்கப்படுவதோ, புத்தியால் புரிந்துகொள்ளப்படுவதோ என்றில்லாமல், அது தனக்கு நேரும் அனுபவமாக சித்திக்க வேண்டும்.
நம் உலகியல் சிந்தனைகளும், அதையொட்டி நடக்கும் செயல்களும் மனத்தின் கண் குவிந்துள்ள வாசனைகளால் உந்தப்பட்டு நடைபெறுவதால், அவை அனைத்துமே நம் உண்மை சொரூபம் பற்றிய அறியாமையால் விளைந்தவை ஆகும். அந்த அறியாமையைப் போக்க இந்திர சக்தியால் வளரும் ஆன்ம அறிவு ஒன்றால் மட்டுமே முடியும். நம் முயற்சி, நம் சீரான பார்வை, கனிவான பண்பு என்ற உலகியல் தொழில்கள் அனைத்தும் அறியாமை கலந்தவைகளே. அறியாமைக்கு ஒரே எதிரி ஆன்மாவைப் பற்றிய அறிவு ஒன்றே. அதை உணர்ந்தவனே உலகியல் தரும் இன்பங்களைத் தியாகம் செய்யும் மனோநிலையை எட்டுவான். அவனால் மட்டுமே தன்னுள் இருக்கும் மகா சக்தி தன் பஞ்ச இந்திரியங்கள் மூலம் வெளியே போகாது, தன்னைப் பற்றிய ஆன்ம விசாரத்தில் உண்முகமாகத் திரும்பி, தன் உண்மை நிலையை அறிவதற்கான வழிகளை நாடுவதில் நிலைத்து நிற்க முடியும். அவன் ஒருவனால் மட்டுமே பரிபூரண சரணாகதியை எட்ட முடியும்.
அந்த நிலையை எட்டியவனுக்கு, காலாகாலத்தில் நடக்க வேண்டிய அனைத்தும் தானே நடந்து, அறியாமை எனும் இருளைத் தகர்த்து எறியும் இந்திரனின் வல்லமை, அறிவு எனும் சூரியனின் பேரொளியை அவனது உள்ளத்தில் விதைக்கும். அதன் மூலம், அவன் தன்னைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் அதே நிலையில் இருப்பதை அனுபவ ரீதியாக உணர்வான். இவ்வாறாக நாம் பிரம்மனின் மூன்றாவது முகமான சூரியனுக்கு அறிமுகம் ஆகிறோம்.
இந்திரன் என்ற சொல்லிலிருந்து இந்த்ரியம் வரவில்லை. வடமொழி ஒன்றும் தமிழைப் போல இயற்சொல் கொண்ட மொழியல்ல. அனைத்துமே காரணப்பெயர்கள் தான். இடுகுறிப்பெயர் கிடையவே கிடையாது.
புலன் என்பதற்கு ஹ்ருஷீகம் என்றும் இன்னொரு பெயருண்டு.
இக்கட்டுரை எழுதியவருக்கு வடமொழி வ்யாகரணம் தெரியவில்லை. வ்யாகரணத்தில் 2700 தாதுச்சொற்களும், 170 விகுதிகளும் உள. அவற்றை பயன்படுத்தியே சொற்கள் உருவாகுமே அன்றி, பாமர-ஆதிவாசி போல சொல்லாடல் என்பது மிகவும் தவறானது.
சொல்லாடல் என்பது பிழை. கிளவியாக்கம் என்பதே தொல்காப்பியர் தந்த விவரமாகும். இதனை வ்யாகரணம் என்பர் வடமொழியார்.
(Edited and published)
இந்தத் தொடரைப் படித்து ஆக்க பூர்வமான கருத்துக்களை வெளியிடும் வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் மூன்று பகுதிகள் தொடரும். உங்களின் மேலான கருத்துக்களை முடிவிலும் எதிர்நோக்குகிறேன்.
இதன் இரண்டாவது பகுதியிலேயே எனது துணை நூல், அதன் ஆசிரியர் விவரங்களைத் தந்துள்ளேன். அவர் காவ்யகண்ட கணபதி முனி, கபாலி சாஸ்திரி போன்றவர்களின் வழி வந்தவர். அணுசக்தி தொடர்பான விஞ்ஞானம் தவிர ஆழ்ந்த சம்ஸ்க்ருத அறிவும் கொணடவர். மேலும் எனது அறிவின் எல்லைகளையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். என்னதான் படித்தாலும் “கற்றது கைமண் அளவு” என்றுதானே நிற்கும்? அறிவு வேறு, ஞானம் வேறு எனப்படுவதும் உண்மை அல்லவா?
வேதங்களில் விஷ்ணுவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதில் பல வித்தியாசமான கருத்துக்கள் உள்ளன. ஒரு சீடருக்கு குரு அதைப் பற்றி என்ன கூறுகிறார் என்பதை வாசகர்கள் கரபாத்ர ஸ்வாமிகளின் கீழ்கண்ட பதிவைப் படித்தும் அறிந்துகொள்ளலாம்.
https://docs.google.com/viewer?url=https://www.sriramanamaharshi.org/pdffiles/Advaita_Bodha_Deepika_Tamil.pdf