இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.
2 – உலகம் பிறந்தது
வெவ்வேறு உயிர்கள் பற்றிய பதிவின் போது, ரிக் வேதம்” பற்றி நான் அறிந்ததை எழுதுகிறேன் என்று முன்பு கூறியிருந்தேன். இங்கு நான் கூறுவதை, அதற்கு முகமனாக எடுத்துக்கொள்ளுங்கள்.
- சிலர் ‘ரிக்’ என்றும், சிலர் ‘ருக்’ என்றும் எழுதுவார்கள். காரணம், சம்ஸ்க்ருதத்தில் இ,உ இரண்டும் கலந்த உச்சரிப்பு வரும். அது தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது.
- இதுதான் உலகத்திலேயே எழுத்து வடிவில் கிடைக்கப்பெற்ற முதல் நூல்.
- வேதம் என்பதால் இது அந்தணர்களால் உருவாக்கப்பட்டது என்ற தவறான எண்ணங்கள் மலிந்து கிடக்கின்றன.
- அதேபோல இது கடவுள் பற்றியது என்பதும் தவறானதே. இதில் இறைவன் என்ற சொல்லே கிடையாது.
- நான் வடமொழி அறியாததால், பெரும்பாலான பகுதிகளை வாமதேவ சாஸ்திரி என்றும், David Frawley என்றும் அறியப்பட்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர் எழுதிய ஓர் ஆங்கில நூலின் துணை கொண்டே இதன் விவரங்களை அறிந்து கொண்டேன். அவர் கூறுவதோடு, அங்கங்கு ஸ்ரீ ரமண மஹரிஷியின் கூற்றுக்களையும் ஒப்பிட்டே நான் இதை எழுதியுள்ளேன்.
- மூலமான வேதத்தில் உள்ளவைகள் எல்லாமே உருவகமாகக் கூறப்பட்டிருக்கும். அதைக் கொண்டு இதை எடை போட்டவர்களே அதிகம். வேதம் ஓதும் பலரும் அதில் அடங்குவார்கள். சிவ புராணத்தில் கூறுவதுபோல “.. பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தின் உள்ளே…” என்பது போல, அதன் உட்பொருளை அறிவதற்கு நாம் முயல்வோம்.
- அதில் வரும் மந்திரச் செய்யுட்களை நான் இங்கு கூறப்போவதில்லை.
- ஓர் ஆரம்பமாக, 1960-களில் வந்த “பாசம்” என்ற திரைப்படத்திற்காகக் கண்ணதாசன் இயற்றி, அதற்கு எம். ஜி. ஆர். நடித்த “உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக” என்ற பாடல் ரிக் வேத ஸ்லோகத்தின் விரிவுரையே என்றால் அதில் என்ன கூறப்பட்டிருக்கலாம் என்பதைக் கொஞ்சம் யோசியுங்களேன்!
ரிக் வேதம் பற்றிய முந்தைய பகுதியில், இந்தப் பாடலைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தேன். பாடலின் வரிகளை உள்ளார்ந்து அனுபவித்திருந்தீர்கள் என்றால் ரிக் வேதக் கருத்துகளை உணர்ந்திருப்பீர்கள். வேதம் என்ற சொல்லிற்கு “மறை” என்ற இன்னொரு சொல்லும் தமிழில் உண்டு. காரணம்: ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு’ என்பது போலப் புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளவர்களுக்கே எதுவும் கூறவேண்டும். அதனால் தத்துவங்கள் அனைத்துமே மறைமுகமாக உருவகங்கள் மூலம் கூறப்பட்டிருக்கும். எழுத்துக்களின் பின்னே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வதற்கு மனமோ, காலமோ, திறனோ இல்லாதவர்களுக்குக் கூறுவது விழலுக்கு இறைத்த நீரே. இதற்கு எவரையும் குறை கூற முடியாது. அதை அறிந்ததாலேயே, “உள்ள பொருள் ஒன்றே” என்ற ஒரே கருத்தையே நான்கு விதமாக நான்கு வேதங்களும் கூறுகின்றன. ஏனென்றால் மனிதர்கள் பொதுவாக நான்கு விதப்பட்டவர்களாக இருப்பதாக உணரப்பட்டிருக்கின்றனர்.
ஒருவருக்கு ஒன்று சொன்னால் போதும். அவர் அதன்படி நடப்பார். இரண்டாமவர், சொல்லப்பட்டது பொதுவான ஒழுக்க விதிகளின்படி இருக்கிறதா என்று பார்ப்பார். மூன்றாமவர், சொல்லப்பட்டதன்படி வரும் அனுபவம் எவருக்காவது நிகழ்ந்திருக்கிறதா என்று ஆராய்வார். நான்காமவர், நிகழ்வுகள் இருந்தாலும் தனக்கும் அது கைகூடுமா என்று எண்ணுவார். அதனாலேயே “பிரம்மம் ஒன்றே” என்பதே நான்கு மஹா வாக்கியங்களாக வெளிப்பட்டிருக்கின்றன.
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை உட்பட அடிக்கடி கையாண்ட, ஒரு ரிக் வேத மந்திரத்தையே இங்கு குறிப்பிடலாம். “…ஏகம் சத், விப்ராம் பஹுத்தா வதந்தி …”. அதாவது ‘உண்மை ஒன்றே, அதைப் பல ஞானிகளும் பல விதமாகக் கூறுகிறார்கள்’ என்பதே அதன் பொருள். அதன் காரணத்தைச் சென்ற பகுதியில் பார்த்தோம்.
மனிதர்கள் பொதுவாக நான்கு விதமானவர்கள். ரிக் வேதம்-ஐதரேய உபநிஷதத்தில் “ப்ரக்ஞானாம் ப்ரஹ்ம” என்ற உணர்வே பிரம்மம் என்பது இலக்கண வடிவில் கூறப்பட்டிருக்கிறது. இதுதான் வேதவாக்கு என்று சொன்னால் அதைக் கடைப்பிடிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு அப்பபடிச் சொல்வது போதும். யஜுர் வேதம்-தைத்திரீய உபநிஷதத்தில் “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்ற நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்பது ஓர் அனுபவ வாக்கியமாகக் கூறப்பட்டுள்ளது. இது எங்கள் அனுபவம், முடிந்தால் நீங்களும் ஆவன செய்து அனுபவித்துப் பார்க்கலாம் என்று அனுபவத்தை முன் நிறுத்தபவர்களுக்கு இது உதவும். சாம வேதம்-சாந்தோக்ய உபநிஷதத்தில் “தத் த்வமஸி” என்ற நீ அதுவாக இருக்கிறாய் என்பது உபதேச வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. பெரியவர்கள் வாயால் ஒன்று சொன்னால் அதன் வழி செல்லத் தயாராக இருப்பவர்களுக்கு இது உதவும். அதர்வண வேதம்-மாண்டூக்ய உபநிஷதத்தில் “அயம் ஆத்மா ப்ரஹ்ம” என்ற இந்த ஆத்மா ப்ரஹ்மம் என்பது சாக்ஷாத்கார வழியில் யுக்திக்குப் பின் வரும் அனுபவ முறையில் கூறப்பட்டிருக்கிறது. புத்திக்கு ஏற்றவாறு சொல்லி அதையே செய்தும் காட்டினால் ஏற்றுக்கொள்பவர்களுக்கு இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மனிதர்கள் பலவானால் வழிகளும் பலவாகின்றன. விளக்கங்கள் பலவானாலும் உண்மையை நோக்கிச் செல்பவனுக்கு எல்லாம் ஒன்றே.
ஒருவருக்கு ஒன்று கூறும் போது அதை அவரது புரிதலுக்கு ஏற்றபடி கூறுவது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். நான்கு வேதங்களும் அதையே செய்கின்றன. ஒரு குழுவினருக்குக் கூறுவது, அதனாலேயே சற்றுக் கடினமாகிறது. இங்கு வேதம் பற்றி அறிந்தவர்களும், அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டுள்ளவர்களும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டிக்கொள்கிறேன். சரி, கண்ணதாசனின் பாடலுக்கு வருவோம். அவர் எப்படி ஆரம்பிக்கிறார்? “உலகம் பிறந்தது எனக்காக” என்றுதானே. சாதாரணமாக ‘நான் பிறந்தேன்’, ‘அவர் பிறந்தார்’ என்போம். ஆனால் இங்கோ உலகம் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது உலகம் வரும் முன்பே ‘நான்’ இருந்திருக்கிறேன். அது உதித்து இருப்பது எனக்காக. இப்படியாக ‘நான்’ இல்லையென்றால் உலகம் இல்லை என்றாகிறது. அது உண்மைதானே? உங்களது சொந்த அனுபவத்திலேயே, நீங்கள் நன்றாகத் தூங்கும் போது உங்களுக்கு நீங்கள் இருப்பதே தெரிவதில்லை; அப்போது உலகம் எங்கே தெரிகிறது? ஆகவே விழித்துக் கொண்டிருந்து, பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனுக்குத்தானே உலகம் இருக்கிறது. அதற்கு முன்னே, அவன் தன் தூக்கத்தில் இருந்து விழித்த பின்தானே அவனுக்கு உலகம் பிறக்கிறது? இன்னொருவன் விழித்துக்கொண்டிருக்கிறான் என்பதால் உறங்கும் இவனுக்கு உலகம் தெரிவதில்லை. விழித்த பின்னே, தன்னையும் அறிந்துகொண்டு உலகமும் தெரிகிறபோது அவன் காண்பதென்ன?
உறக்கத்தில் இருந்து விழித்தாலும் சரி, ஒருவன் பிறந்து சில காலம் பின்பும் சரி, “நான்” என்று தன்னை உணரும் போது மட்டுமே உலகமும் அவனுக்குத் தெரிகிறது என்பதே நம் அனுபவம். ரமண மகரிஷியும் அவரது “உள்ளது நாற்பது” என்ற படைப்பின் முதல் செய்யுளில் “நாம் உலகம் காண்டலால் ….” என்றே தொடங்குவார். இதிலிருந்தே “நான்”, “உலகம்”, “காண்பது” என்ற மூன்றிலேயே அனைத்துத் தத்துவங்களும் அடங்குகின்றன என்பது தீவிரமாகச் சிந்திப்போர்க்குப் புரியும். அதாவது நம்மை விட்டு உலகம் இல்லை; உலகமும் நாமும் ஒன்றாக உதித்து, ஒன்றாக மறைகிறோம்; காணும்வரைதான் உலகம் இருக்கிறது என்பவைகள்தான் அதற்கு அர்த்தம். அது சரி; இருக்கும் ஐந்து புலன்களில் “காண்பதை” மட்டும் விசேஷமாக ஏன் சொல்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் காணும் புலன் ஒன்றுதான் மற்ற புலன்களை விடத் தூய்மையானது. தீவிரமாகச் சிந்தித்தால் அதன் உண்மை விளங்கும். இவை அனைத்துமே ரிக் வேதத்தில் இருப்பதுதான். மற்ற புலன்கள் இயங்கும் போது, அத்துடன் நமது எண்ணங்களும் கூடவே தொடர்கின்றன. ஆனால் ஒரு பொருளைப் பார்க்கும் போது அதனுடன் நாம் ஒரு மாதிரி ஐக்கியம் ஆகிறோம்; அப்போது எண்ணம் எழ வேண்டிய அவசியம் இருக்காது. “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்” போது, எண்ணங்களும் எழாது; பேச்சும் வராது. இவ்வாறாகத்தான் உலகத்தில் உள்ள அனைத்தையும் நாம் பார்க்கிறோம்.
ஐம்புலன்களிலே “காண்பது” என்பது எண்ணங்களோடு கலப்பு இல்லாததால் புனிதமானது என்று பார்த்தோம். அது காண்பவனையும், காணப்படுவதையும் ஒன்றிணைப்பது. அதனாலேயே முனிவர்களுக்கு ஆங்கிலத்தில் Seers என்ற சொல்லும் உண்டு. நாம் இங்கு கண்ணதாசன் பாடலுக்குத் திரும்புவோம். தனக்காகப் பிறந்த உலகத்தில் அவர் காண்பது என்ன? ஓடும் நதி, காற்றில் ஒலி, கடலின் அலை, மலரும் மலர்கள் என்பதாக அவர் பார்ப்பதற்கு என்றே “அன்னை மடியை விரித்தாள்” என்கிறார். அவை தவிர ஆகாயத்தில் தவழும் நிலவு, நட்சத்திரங்கள் கூடிய மகுடம், பறக்கும் குயிலின் இசை என்றிவைகளையும் அனுபவிக்கிறார்.
ரிக் வேதம் பூமியை அன்னை என்றும், ஆகாயத்தைத் தந்தை என்றும் வர்ணிக்கிறது. பூமியில் இருந்து ஆவியாகப் போகும் நீர் ஆகாயத்தில் இருந்து வரும் மழையாலேயே இங்கு இயற்கை வளங்கள் எல்லாம் செழிக்கின்றன. அதைக் கண்ட ஆதி மனிதர்களுக்கு ஒரே ஆச்சரியம். தன்னைச் சுற்றி வளரும் அனைத்தும் தனக்கு இயற்கை அளிக்கும் பாடங்கள். அவை என்ன என்று நாமும் அவனுடன் சேர்ந்து சற்றே யோசிப்போம்.
இயற்கை அன்னையின் திருவிளையாடல்களில் ஒன்றான நீர் சுழற்சியைப் பார்த்தோம். அது பற்றி மிகவும் அறியாதவர்கள், ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரங்களில் ஒன்றான “ஆழி மழைக்கண்ணா..” பாடலை ஊன்றிப் படித்து, நம் முன்னோர்கள் இயற்கையின் அதிசயங்களைப் பார்த்து வியந்தாலும், அவைகளின் இரகசிங்களையும் காலப்போக்கில் கண்டறிந்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறாக பூமியில் நிகழ்பவைகளையும், ஆகாயத்தில் தெரிபவைகளையும் பார்த்து ஒருபுறம் வியந்தாலும், மறுபுறம் ஆராய்ந்து தெளிந்தார்கள்.
இவை தவிர இன்னொன்றும் அவர்கள் கவனத்தை மிகவும் ஈர்த்தது. சூரியன் உதித்ததும் பொதுவாக அனைத்து சீவராசிகள் இயங்கத் தொடங்குவதும், அது அஸ்தமித்ததும் அவைகளின் இயக்கம் அடங்குவதன் மர்மமும் என்ன என்றும் யோசித்தார்கள். மேலும் சூரியன் தெரிவதும், பின் மறைந்து அப்புறம் வெளிப்படுவதும் ஏன் என்றும், அதனுடன் கூடி உலகம் தெரிவதும், தெரியாதிருப்பதும் ஏன் என்றும் ஆராய்ந்தார்கள். இவ்வாறாகப் பிண்டமான தன்னுள் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, அண்டமாகிய வெளியுலகில் தெரியும் மாற்றங்களையும் பார்த்து, தன்னால் இவை நடக்கவில்லை; அதனால் எல்லாவற்றிற்கும் வேறொரு மூலம் இருக்கிறது என்று உணர்ந்து, அதற்கு இறைவன் என்று பெயரிட்டார்கள்.
விரித்த அன்னையின் மடியில் இருந்து உலகிற்கு வந்த அனைத்து இயற்கை எழில்களைக் கண்ட மனிதன் தன்னால் அவை உருவாக்கப்படவில்லை என்றும், தனது தொடக்கத்தையும் அறியாத அவன், இறைவனை உருவாக்கி, முதலில் “இறைவன் இருப்பதை நான் அறிவேன்” என்கிறான். எவ்வாறு உலக அதிசயங்களை நான் அறிகிறேனோ, அதே போல “என்னை அவனே தான் அறிவான்” என்கிறான். ஆக இரண்டு பொருட்கள் தங்களைத் தாங்கள் உணரும் போது, “அறிவு” புலப்படுகிறது என்பதையும் உணர்கிறான்.
அப்போது அறிவு என்றால் என்ன என்று யோசிக்கும் வேளையில், அறிவு ஏதோ பெரிது என்று தெரிகிறது. இரவில் விளக்கேற்றும் அவனுக்குப் பகலில் உதிக்கும் சூரியன் அளவிற்கு ஒளியைக் கொண்டுவர முடியவில்லை என்றும், அது இரவில் மறையும் போதே இருள் வருகிறது என்றும் தெரிகிறது. அதாவது சிறிதானாலும் தன்னால் ஒளியை உருவாக்கலாம், ஆனால் இருளை உருவாக்க முடியாது – ஒளியை மறைத்தே இருளை உருவாக்க முடியும் என்று தெளிகிறான். அதனால், உலகில் சூரியனால் இயற்கையாக நடக்கும் ஒளி-இருளைக் கொண்டு, சூரியனை அறிவாகவும் அது இல்லாது இருப்பதை அறியாமை என்றும் கொள்கிறான்.
அதாவது இருக்கும் ஒன்று அறிவே; அறியாமை அது இல்லாமலோ மறைந்தோ இருப்பதே என்று புரிந்துகொள்கிறான். ஆனாலும் அந்த அறிவும் தன் உறக்கத்தில் போய்விடுகிறதே; அத்துடன் உலகமும் காணாது போய்விடுகிறதே என்று உணரும் அவன் வெளியுலகில் நடப்பதெல்லாம் தன்னுள்ளும் நடக்கிறது என்பதால் “எல்லாம் எனக்குள் இருக்கிறது” என்று அறிகிறான். அப்படி இருந்தாலும் தான் உலகில் இருப்பதால் “என்னைத் தனக்குள் வைத்திருக்கும் அன்னை”யான இயற்கையைத் தன் தெய்வம் என்று வணங்குகிறான்.
கண்ணதாசனின் பாடல் இத்துடன் முடிகிறது; ரிக் வேதமோ இதற்கும் மேலே தொடர்கிறது.
(தொடரும்)
படித்து மகிழ்ந்தோம். மிக இனிமையான பதிவு நன்றி.
“அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்னும் வாக்கியம் சுக்லயஜுர்வேதத்தின் ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில் காணப்படுகிறது. இதனை க்ருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்திரீய உபநிஷதத்தில் கண்டதாக எழுதியது பிழை.
*******************************************************************
4.அதேபோல இது கடவுள் பற்றியது என்பதும் தவறானதே. இதில் இறைவன் என்ற சொல்லே கிடையாது.
*******************************************************************
இது மிகவும் தவறானது. ஏனெனில்
ரிக்வேத வரிகளான
“ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ன்யௌ” என்பதும்
“விஷ்ணோர்னுகம் வீர்யானுப்ரவோசம்” என்பதும் கடவுளைத்தான் குறிக்கும்.