அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்

அயோத்யா என்ற சொல்லுக்கு ”போர் தொடுக்கப் படாத பூமி” என்று பொருள்.இந்துக்கள் போற்றி வணங்கும் ஏழு புனித நகரங்களில் முதன்மையானது ஸ்ரீராமனின் ஜன்மபூமியாகிய அயோத்தி. ஸ்ரீராமனும் அயோத்தியும் இணைபிரியாதவை.

அருந்திறல் இழந்த அயோத்தி போல
பெரும்பெயர் நகரம் பெரும்பேதுற்றது

என்று 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிச் சென்றார் செந்தமிழ்ச் சேரநாட்டு இளவல் இளங்கோவடிகள். கோவலனும் கண்ணகியும் புகார் நகரைப் பிரிந்ததும் அது “ராமன் இல்லாத அயோத்தி போல” ஆயிற்று என்று உவமை கூறினார்.

பல நூற்றாண்டுகளாக நமது மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி 1528ல் இஸ்லாமியப் படையெடுப்பாளன் பாபரால் சிதைக்கப் பட்டது. அங்கிருந்த எழில்மிகு ஸ்ரீராமர் ஆலயம் தகர்க்கப் பட்டு ஆக்கிரமிப்புச் சின்னமாக மசூதி எழுப்பப் பட்டது. அப்போதும், அதைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் ராம ஜன்ம பூமியை மீட்க மன்னர்கள், படைவீரர்கள், சாதுக்கள், சாமானியர்கள், வனவாசிகள் என்று பல தரப்பட்ட இந்துக்களும் தொடர்ந்து போராடி ரத்தம் சிந்தியுள்ளனர். இந்த மாபெரும் போராட்டத்தின் இறுதிக் கண்ணியாக 1992ல் ஆக்கிரமிப்புச் சின்னம் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றிவாகை சூடி, இதோ இன்று ஆகஸ்டு 5, 2020 அன்று ஸ்ரீராமனின் பேராலயம் அதே அயோத்தியில் எழப் போகிறது.

இன்று இளங்கோவடிகள் இந்தக் காட்சியைக் கண்டிருந்தால்

அருந்திறல் அடைந்த அயோத்தி என்னும்
பெரும்பெயர் நகரம் பெரும்பேறுற்றது

என்று பாடியிருப்பார்.

“அங்கண் நெடுமதிள் புடைசூழ் அயோத்தி என்னும், அணிநகரத்து உலகனைத்தும் விளக்கும் சோதி”, “அயோத்தியர் கோமானைப் பாடிப் பற!” என்றெல்லாம் பரவசத்துடன் பாடிய ஆழ்வார்கள் வைகுந்தத்திலிருந்து அயோத்தி நகரின் திசைநோக்கி ஆசியளித்துக் கொண்டிருக்கின்றனர். திருவயோத்திப் பெருமாள் என்ற தமிழ்க் கல்வெட்டுகளின் வாசகம் உயிர்ப்புடன் மீண்டெழுந்திருக்கிறது.

ஸ்ரீராமஜன்மபூமியில் எழும் இந்தப் பேராலயம் தர்மத்தின் வெற்றியை முரசறைகிறது. ஆபிரகாமிய அதர்ம மதங்களின் ஆக்கிரமிப்பும் அராஜகமும் தொடர நாம் அனுமதியோம் என்று கட்டியம் கூறுகிறது. ஒருங்கிணைந்த இந்து சக்தி ஒளிவீசி உரம் பெற்று வேத தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் பாரதபூமியைம் அன்னிய சக்திகளின் அழிப்புத் தாக்குதல்களிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் பிரகடனம் செய்கிறது. இதுவே இந்த நிகழ்வின் முக்கியத்துவம். இதனை உள்ளபடி உணர்வோம்.

இந்த வரலாற்றுத் தருணத்தை உலகெங்கும் உள்ள இந்துக்கள் தாங்கள் வசிக்குமிடங்களிலெல்லாம் கொண்டாடுகின்றனர். இந்த மகத்தான நிகழ்வு நிகழும் தருணத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமது பாக்கியம். இத்தருணத்தை உள்ளன்புடன், மகிழ்வுடன் நாமும் கொண்டாடி மகிழ்வோம்.

“அனைத்துயிர்களும் மகிழ்வுற்றன. அனைவரும் தர்மத்தில் பற்றுடையவராயிருந்தனர். ராமனைப் பார்த்துப் பின்பற்றியவர்களாய் ஒருவரையொருவர் துன்புறுத்தாமலிருந்தனர். ஸ்ரீராமர் அரசாள்கையில் ‘ராமன் ராமன் ராமன்’ என்ற பேச்சே மக்களிடையில் எப்போதும் நிகழ்ந்தது. உலகம் ராமமயமாக ஆயிற்று” (வால்மீகி ராமாயணம், யுத்தகாண்டம் 131.96-98)

ஸ்ரீராமஜெயம்.

3 Replies to “அயோத்தியில் எழுகிறது ஸ்ரீராமர் ஆலயம்: மாபெரும் வரலாற்றுத் தருணம்”

  1. மஹான்கள் அனைவருக்கும் நமஸ்காரம்.

    ராமாயண காலத்தின் பின் மீண்டும் எழுகிறது ராம ராஜ்ஜியம்.
    ராம ராஜ்யம் தொடர ஒவ்வொரு இந்துவும் பாடுபட வேண்டும் .
    அதுவே அவர்களின் லக்ஷ்யமாகவும் இருக்கவேண்டும் சகல தர்மஸ்வரூபர் ஸ்ரீ இராமபிரான்
    அவருடைய வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து இந்த புனித நாளில் உய்வு பெறுவோமாக .

    சர்வே ஜனாஹா சுகினோ பவந்து வாழ்க வளமுடன்.

  2. அன்பின் வழியில்

    அன்பின் வழியில் யார் நடந்தாலும்
    அவனும் ராமனும் ஒன்று
    அழுபவர் கண்களை யார் துடைத்தாலும்
    அவனும் ராமனும் ஒன்று

    அன்பின் வழியில் யார் நடந்தாலும்
    அவனும் ராமனும் ஒன்று

    பெற்றவர் உள்ளம் பெருமிதம் கொள்ளும்
    பிள்ளையும் ராமனும் ஒன்று
    மற்றவர்க்கெல்லாம் நல்வழி காட்டும்
    மனிதனும் ராமனும் ஒன்று

    அன்பின் வழியில் யார் நடந்தாலும்
    அவனும் ராமனும் ஒன்று

    ஒரு மணம் புரிந்து நிறைவுடன் வாழும்
    ஒருவனும் ராமனும் ஒன்று
    அருள்நெறி கருணை அமைந்தவன் எவனோ
    அவனும் ராமனும் ஒன்று

    அன்பின் வழியில் யார் நடந்தாலும்
    அவனும் ராமனும் ஒன்று

    தர்மத்தைக் காத்திட உயிரையும் வழங்கும்
    தலைவனும் ராமனும் ஒன்று
    தன்னலம் துறந்து மன்னுயிர் காக்கும்
    வள்ளலும் ராமனும் ஒன்று

    அன்பின் வழியில் யார் நடந்தாலும்
    அவனும் ராமனும் ஒன்று

    மண்வளம் பெருகிட மழை நீர் பொழியும்
    மேகமும் ராமனும் ஒன்று
    பொன்னொளி திகழும் கதிரவன் என்னும்
    கீதையும் ராமனும் ஒன்று

    அன்பின் வழியில் யார் நடந்தாலும்
    அவனும் ராமனும் ஒன்று

  3. இந்த தளத்தில் ..
    இந்து மதத்தை பற்றி பிற மதத்தினர் தவறாக புரிந்து கொண்டு இருக்கும் விசயங்களுக்கு பதில் அளிக்கும் விதமான கட்டுரைகளை மட்டும் அதிகம் பதிவிட்டால் நன்றாக இருக்கும்…
    மாரிதாஸ்..
    ஸ்டான்லிராஜன் போன்ற எழுத்தர்களை இந்த தளத்தின்ஆசிரியர்களாக சேர்த்தால் சிறப்பாக அமையும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *