ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9

  • இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.

சோமன்

நாம் காணும் பிரபஞ்சத்தில் பூமி, வானம், சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள், மற்றும் பகல்-இரவு, உதயம்-அஸ்தமனம், ஆறுகள், கடல் போன்றவற்றைக் கண்ட வேதகால முனிவர்கள், நம்மைப் படைத்த இறைவனின் அங்கங்களே நாம் என்று உணர்ந்தனர். தொலை தூரத்தில் கடலும் பூமியும் இணைவதாகவும், அங்கு மறையும் சூரியன் அதே போன்று இருக்கும் மறுமுனையில் உதிப்பதாலும், ஆறுகள் கடலில் கலப்பதாலும், அவைகளுடன் தொடர்பு கொண்டால் நம்மைப் படைத்த இறைவனுடன் தொடர்பு கொள்வதாகவே அவர்கள் உணர்ந்தனர். மேலும் தண்ணீருக்குச் சுத்தம் செய்யும் தன்மை இருப்பதால், நம் அர்ப்பணிப்பை நீர் மூலம் அளிப்பது தொலைதூரம் சென்று, எங்கும் பரவி இறைவனை அடையும் என்ற நம்பிக்கையில், நீரைத் தங்கள் சடங்குகள் அனைத்திலும் ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டனர். இது மனித கலாச்சாரங்கள் பலவற்றிலும் காணப்படுகிற வழக்கமே.

இவ்வாறாக ஒன்று செய்யும்போது, அதன் பின்புலத்தில் இறைவன் இருப்பதையும், ஒவ்வொரு செயலிலும் சாரம் இருப்பது இயற்கையே என்பதையும் உணர்ந்து, எதையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதே சரியான முறை என்று தெளிந்தனர். இவ்வாறாக நம் உலக வாழ்வின் சாரமே நாம் என்றும் ஆனந்த நிலையில் இருப்பதை உணர்வதே என்று அறிந்தனர். அந்த சாரம் பெருக்கெடுத்து நம்முள் ஓடி எங்கும் நிறைவதையே சோமன் அல்லது அமுதம் என்றனர். இதைப் பல விதமாக விவரித்த ரிக்வேத ரிஷிகள் ரேணு வைஸ்வாமித்ரர், உஷானஸ் காவ்யர், கன்வ கோரர், தைவோதஸி ப்ரதர்தானர், அஸித/தேவல காஸ்யபர், ப்ரியமேத ஆங்கிரஸர், கௌதம் ராஹுகணர், த்ரித ஆப்தயர், ராஹுகண ஆங்கிரஸர், கவி பார்கவர், அவத்ஸர காஸ்யபர், ப்ராஸ்கன்வ கன்வர், அனந்த பருச்சேபி ஆகியோர் ஆவார்கள்.

ஐம்புலன்களில் ஒன்றான த்ருஷ்டி அல்லது பார்வையே அனைத்திலும் தூய்மையானது என்பதை முன்பே ஒருமுறை பார்த்தோம். ஏனென்றால் ஒன்றைக் காணும் போது, மனத்தின் குறுக்கீடு இல்லையென்றால், அங்கிருப்பது நாமும் அந்தப் பொருளும்தான். உண்மையில், காணப்படும் பொருளின் சாரத்தை நாம் பெறுகிறோம். அதனால் நாமும் அந்தப் பொருளும் ஒன்றுபட்டுக் கலக்கிறோம் என்றும் கூறலாம். இதை நாம் நம் தினசரி அனுபவத்தைக் கொண்டே புரிந்துகொள்ளலாம். ஒரு புத்தகம் என்பது ஒரு குறிக்கோளுடன் எழுதப்பட்டது. அது பல அத்தியாயங்கள், பத்திகள், வாக்கியங்கள், வார்த்தைகள், மற்றும் சொற்களைக் கொண்டது. நாம் சொற்களைப் பார்த்தாலும், வார்த்தைகள்-வாக்கியங்கள்- பத்திகளையும் தாண்டி, அவை என்ன கூறுகிறது என்று அதன் சாரத்தைத்தானே நோக்கிச் செல்கிறோம்? இவ்வாறாக அது நம்முள் பதிந்து நம்மோடு கலக்கிறது என்று கூறலாம். ஒரு புத்தகத்திற்கு இருப்பது போல, நமது சாரம் ஆனந்த நிலையான சோமன் ஆகும். அதை உணரமுடியாமல் தடுப்பது நம் பழைய வாசனைகள் என்பதால் அவைகளைக் களைவதே நம் பிறப்பின் இரகசியம்.

“சகல ஜீவர்களும் துக்கம் என்பது இன்றி எப்போதும் சுகமாய் இருக்க விரும்புவதாலும், யாவருக்கும் தன்னிடத்திலேயே பரமப் பிரியம் இருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணம் ஆதலாலும், மனம் அற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை அடைய தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு ‘நான் யார்’ என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்” என்று சொல்லியே ரமணர் தன் ‘நான் யார்’ தொகுப்பைத் தொடங்குகிறார். பின்னால் விளக்கும் போது, இந்த ஞான வழி புரியாதவர்கள், இறைவனிடம் சரணடைந்து ‘நான்’, ‘எனது’ என்ற அனைத்தையும் துறக்கவே, அவன் அருளால் ஞானம் பெறலாம் என்பார்.

இவ்வாறாக ஞானம் பெறுவதற்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன. வேதகால முனிவர்கள் தன்னை இழந்து தவ நிலையில் இருந்த வேளையில், தங்கள் ஞானக் கண்ணால் கண்டு உணர்ந்தவைகளையே, வேத மந்திரங்களாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதை எப்போது நாம் உச்சரித்தாலும், அவர்கள் அன்று உணர்ந்த அந்தப் பரவச நிலைக்கு நம்மைக் கொண்டுசெல்லும் வல்லமை கொண்டவை அந்த மந்திரங்கள்.

அந்த ஆனந்த நிலையில் நிற்பதே அனைவரது குறிக்கோள் என்பதால், வேதம் ஓதுவதையும், கேட்பதையும் தினப்படி வழக்கங்களாக வகுத்தனர் நம் முன்னோர்கள். ஒரு காலத்தில் அந்த வழக்கம் மங்கிப்போனாலும், வேறோர் காலத்தில் அவை மீண்டும் துளிர்த்து எழுவதன் காரணமே அவை உண்மையின் மறு வடிவம் என்பதால்தான். ஊனக் கண்ணால் காணும் போதே காணப்பட்டதன் சாரம் பிழிந்து எடுக்கப்பட்டது போல காண்பவனின் உள்ளத்தில் காணப்பட்டது புகுந்துவிடுகிறது என்றால், ஞானக் கண்ணால் கண்டு உணர்ந்த மந்திரங்களின் வலிமையைப் பற்றி விவரிக்காமலேயே விளங்கும்.

அன்றைய விலங்குகளின் தன்மை கொண்டு அவை அன்று விளக்கப்பட்டன. வெறும் புல்லை மட்டும் தின்றுவிட்டு, அனைவரின் பயனுக்காக பால், தயிர், வெண்ணையை அளித்த பசுவின் மேன்மை கொண்டவை என்றும், விரைவாகச் செல்லும் குதிரையின் வலிமை பெற்றவை என்றும் அந்த ஸ்லோகங்களையும், அதை ஓதுபவர்களின் மனோநிலையையும் அவர்கள் விவரித்தனர். இவ்வாறாகவே வேண்டியதை அளிக்கும் காமதேனு என்னும் பசுவும் உதித்தது. அறிந்தோ, அறியாமலோ ஓதுபவர்கள் அனைவரும் அதே குணங்களை அடைவதும் நிச்சயம் என்றும் உறுதி அளித்தார்கள்.

குறுகிய எண்ணங்களைத் துறந்து, நான்-எனது என்ற அகங்காரத்தையும் துறந்த நிலையில் உணரப்பட்ட வாக்குகள் அவை என்பதால், ஒவ்வொரு சாதகனும் அதற்காகப் பெரு முயற்சி என்று கூட எடுக்கவேண்டாம்; அதில் தீவிர ஆர்வமும், ஊக்கமும் காட்டினாலே போதும். மேற்கொண்டு நடக்க வேண்டியது தானாகவே நடக்கும். ஏனென்றால் இயற்கையாக அந்த நிலையை எட்டும் வழிகளை எட்ட முடியாது தடுக்கும் நமது பூர்வ வாசனைகளும், நம் துறவு நிலையால், நம்மை விட்டு அகல்கின்றன. அவ்வாறாக உறக்கத்தில் வரும் ஆனந்த நிலை நமக்கு விழிப்பு நிலையிலும் தானாகவே சித்திக்கிறது.

“மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் சுபாவமான அச்சுகம்” என்று ரமணர் குறிப்பிடுவது சோமனின் துளிகள் பெருகி வெள்ளமாக நம்முள் ஓடும் அந்த நிலையைத் தான். தினந்தோறும் அது நம்முள் ஓடுவதை நாம் அறியாவிட்டாலும், அதை நன்கு அனுபவித்துக்கொண்டு சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறோம். அதை ஏன் அப்போது மட்டுமே நாம் அனுபவிக்கிறோம் என்றால், அந்த நிலையில் மட்டுமே நாம் மனம் அற்று இருக்கிறோம். அதாவது எந்த விதமான எண்ணங்களின் குறுக்கீடுகளும் இல்லாமல், இருப்பதை அது இருக்கும்விதமாக மட்டுமே அனுபவித்து, ஆனந்தமாகத் தூங்குகிறோம். அப்போது ‘நான்’ என்றோ ‘எனது’ என்றோ எண்ண வைக்கும் அகங்காரம் நமக்கில்லை. அதனால் ‘பிறர்’ என்ற வேறுபாடும் கிடையாது. அந்த நிலையில், இருக்கும் பிரம்மமான ஒன்றை உள்ளூற உணர்வதால், சோம வெள்ளம் பிரவாகமாக ஓடி நம்மை ஆனந்த நிலையில் அப்போதைக்கு நிறுத்திவைக்கிறது.

உறக்கத்தில் இருந்து விழித்ததும், ‘நான்’ என்ற முதல் எண்ணத்துடன் தொடங்கி, மனம் தன் முழு உருவத்தையும் பெற்று, நாம் காணும் எதனையும் அந்த மனக்கண்ணாடி மூலம் பார்க்கவைத்து, இருப்பதை இருக்கும்படி காட்டுவதில்லை. எப்போது இருப்பதன் சாரத்தை நாம் சரியாக உணர்கிறோமோ அப்போது மட்டுமே சோம ரசம் நம்முள் ததும்பி, ஆனந்தப் பெருக்கை அள்ளித்தரும். உள்ளது உள்ளபடி விளங்கும். அதுவே முக்தி நிலை எனப்படும்.

அதை நாம் அடைய, இடையில் புகுந்து நம்மை வாட்டும் மனத்தின் தன்மையை அறிந்து, அதை ஒரேயடியாக நிராகரித்து அழிப்பதே சிறந்த வழி. அதற்கு ஆன்ம விசாரம் ஒன்றே நேர் வழி. “மற்ற உபாயங்களால் அடக்கினால், மனம் அடங்கினால் போல் இருந்து, மறுபடியும் கிளம்பிவிடும்” என்பார் ரமணர். ஆக மனோநிக்கிரஹத்திற்கு உண்டான செயல்களில் நாம் நமது விழிப்பு நிலையில் ஈடுபடும்போது, இறைவனின் அருளால் நமக்குண்டான வழிகள் கண்கூடாகத் தெரியவரும். அவ்வாறாக விழிப்பு-உறக்கம் எந்த நிலையிலும் நம் சத்-சித்-ஆனந்த நிலையே நமது உண்மையான நிலை என்பதை உணர்வோம். அவ்வாறு உணர முடியும் என்று தெரிந்ததும், நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் தெரிந்தால் நல்லதுதானே?

ரிக் வேதம் கூறும் கடவுட்கள் இவ்வாறாக இயற்கையில் காணப்பட்டவைகளில் இருந்து இயல்பாக உணரப்பட்ட தெய்வீக அம்சங்கள். அவை இங்கங்கு என்னாது எங்கும் பரவி நிற்பவை என்பதால் நம் உள்ளும் உள்ளவை, வெளியிலும் நிறைந்தவை. இதன் பின்னர் ரிக் வேதம் கூறும் பெண் தேவதைகள் பற்றிக் காண்பதற்கு முன், இதுவரை நாம் கற்றவைகளின் தொடர்பாக ஞானிகள் கூறுவதையும் சற்று பார்ப்போம்.

பூவுலகில் காணப்படும் உடல்-உயிர்-உள்ளத்தின் பின்புலமாக ‘சத்’ எனும் இருப்பும், அதை உணரும் ‘சித்’ எனும் அறிவும், தன் இருப்பை உணர்வதால் வரும் ‘ஆனந்தமும்’ இருக்கின்றன என்பதை நாம் புத்தியளவில் தெரிந்துகொண்டுள்ளோம். அவ்வாறு அறிவதே முடிவான நிலையல்ல; அது ஒவ்வொருவரின் அனுபவமாக மலர வேண்டும். இறுதியில் எல்லாம் பிரம்மம், அது ஒன்றே நிலையானது என்பதை மனத்தளவில் நிறுத்தி, உலகளவில் எவ்வாறு இருப்பது அவசியம் என்பதை ஆதி சங்கரர் கூறியதை ரமணர் தமிழில் இவ்வாறு மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்:

“அத்துவிதம் என்றும் அகத்துறுக ஓர்போதும்
அத்துவிதம் செய்கையில் ஆற்றற்க – புத்திரனே
அத்துவிதம் மூவுலகத்தாகும் குருவினோடு
அத்துவிதம் ஆகாது அறி”.

எல்லா உலகிலும் அத்வைதம் உண்மை என்றாலும், தனக்கென்று இருக்கும் ஒரு குருவோடு தன்னை சமமாக நினைக்கும் அத்வைத வாதம் சரியாகாது என்றும், அதனால் மனதளவில் அனைத்தும் ஒன்றே என்பதைப் பதியவைத்துக்கொண்டு, உலகில் உன் செயல்களில் ஈடுபடுவாயாக என்று அறிவுறுத்துகிறார். அதை மேலும் விளக்கும் வகையில் தனது ‘உள்ளது நாற்பது’ அனுபந்தத்தில் ரமணர் இவ்வாறு கூறுகிறார்:

“விதவிதமாக நிலைகள் எல்லாம் விசாரம் செய்து
மிச்சையறு பரமபதம் யாதொன்று உண்டோ
அதனையே திடமாக அகத்தால் பற்றி
அனவரதம் உலகில் விளையாடுவீரா
எது சகலவிதமான தோற்றங்கட்கு
எதார்த்தமாய் அகத்து உளதோ அதை அறிந்தாய்
அதனால் அப்பார்வையினை அகலாது என்றும்
ஆசைபோல் உலகில் விளையாடு வீரா”.

இது ராமருக்கு வசிஷ்டர் கூறும் “யோக வாசிஷ்ட”த்தில் வரும் ஸ்லோகம் ஒன்றின் மொழிபெயர்ப்பே. உனது எல்லா நிலைகளைப் பற்றி அலசி ஆராய்ந்துவிட்டு பரமார்த்த நிலை பற்றி நீ அறிந்துகொண்டதை திடமாக மனத்தில் ஏற்றிக்கொண்டு, உலக விவகாரங்களில் விளையாட்டைப் போல் உன் பணிகளைச் செய்வாயாக. அனைத்துக்கும் ஆதாரமான ஒன்றை அறிந்துகொண்டதால் பெற்ற ஞானதிருஷ்டியை விடாது, உலகப்பற்றுள்ளவன் போல உன் விளையாட்டைத் தொடர்வாயாக என்கிறார். மேலும் கூறும்போது,

“போலி மன எழுச்சி மகிழ்வு உற்றோனாகிப்
போலி மனப் பதைப்பு வெறுப்பு உற்றோனாகிப்
போலி முயல்வாம் தொடக்கம் உற்றோனாகிப்
புரையிலனாய் உலகில் விளையாடுவீரா
மால் எனும் பல்கட்டு விடுபட்டோனாகி
மன்னுசமனாகி எல்லா நிலைமைக் கண்ணும்
வேலைகள் வேடத்து இயைவ வெளியில் செய்து
வேண்டியவாறு உலகில் விளையாடுவீரா”.

இதுவும் “யோக வாசிஷ்ட”த்தில் வரும் ஸ்லோகம் ஒன்றின் மொழிபெயர்ப்பே. இவைகளைப் படிக்கும்போது நாம் ராமரின் தவ நிலையை மனதில் நிறுத்திக்கொண்டு அவை கூறுவதைப் புரிந்துகொள்ளவேண்டும். போலியான மனக் குதூகலம், மகிழ்ச்சி, பதைப்பு, வெறுப்பு கொண்டவன் போலவும், எதையும் தானே ஆரம்பித்து முடிப்பவன் போலவும், அவ்வாறு செய்வதால் வரும் உயர்வு, பெருமைகளில் பற்றில்லாதவனாகவும் உலகில் விளையாடுவாய். ஆசை, பாசம் முதலிய பந்தங்களில் இருந்து விடுபட்டவனாக, எல்லா நிலைமைகளிலும் உறுதியுடன் சமசித்தம் உடையவனாகி, வேஷத்துக்கு ஏற்றவாறு வேலைகளை வெளியில் செய்து, உலகில் வேண்டியவாறு விளையாடுவாயாக என்று அறிவுறுத்துகிறார். அதாவது வள்ளுவர் கூறுவது போல “மனத்துக்கண் மாசிலனாகி” உன் உலக வாழ்க்கையை நடத்துவாய் என்பதே இதில் நாம் காணவேண்டியது. பின்புலத்தில் உள்ள பேருண்மையை உணர்ந்து, நல் வழிகளில் உறுதியாய் நிற்பதே மிக முக்கியமானது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *