மேதா ஸூக்தம் – தமிழில்

யஜுர்வேதம் (தைத்திரியாரண்யகம் – மஹாநாராயண உபநிஷத்)
தமிழில்: ஜடாயு

மேதா தேவி
மகிழ்வுற்று எம்மிடம் வருக
எங்கும் நிறைந்தவள்
மங்கலை
நலமருள்பவள்
வீண்மொழிகளில் களித்திருந்த
நாங்கள்
உனது ஆசியாலேயே
நல்லறிவு பெற்று
வீரர்களாகி
உயர் உண்மைகளைப் பேசலுற்றோம். (1)

உன் அருள் பெற்றவனே
ரிஷியாகிறான்
தேவி
உன்னாலேயே
பிரம்மமயமாகிறான்
திருமகள் வந்தடைவதும்
உன்னாலேயே
உன் அருள் பெற்றவன்
பல்வேறு செல்வங்களை
அடைகிறான்.
அத்தகு மேதா தேவி
எமக்குச் செல்வங்களை நல்கிடுக. (2)

மேதைமை தருக இந்திரன்
எனக்கு மேதைமை தருக
தேவி சரஸ்வதி
தாமரை மாலை சூடிய அசுவினிகள்
மேதைமை தருக. (3)

அப்சரஸ்களில் உறையும்
மேதைமை
கந்தர்வர்களின் மனங்களின்
மேதைமை
சரஸ்வதியின்
தெய்வீக மேதைமை
நறுமணமென
என்னில் உணர்வை நிறைத்திடுக
ஸ்வாஹா. (4)

வருக என்னிடம் மேதா
நறுமணமுடையவள்
விஸ்வரூபிணி
பொன்வண்ணத்தினள்
என்றும் நிலைத்தவள்
நாடுதற்குரியவள்
வலியவள்
பாலூட்டி வளர்ப்பவள்
மேதா தேவி
முகமலர்ந்து எனக்கருள்க. (5)

எனக்கு மேதைமையும்
எனக்கு மக்கட்செல்வமும்
எனக்குத் தேசும்
அக்னி தருக
எனக்கு மேதைமையும்
எனக்கு மக்கட்செல்வமும்
எனக்கு இந்திரியமும்
இந்திரன் தருக
எனக்கு மேதைமையும்
எனக்கு மக்கட்செல்வமும்
எனக்கு வலிமையும்
சூரியன் தருக. (6)

[தேசு – தேஜஸ், அறிவினால் வரும் ஒளி; இந்திரியம் – புலன்களின் வீரியம்]

வேதங்களில் வரும் மேதா என்ற என்ற பெண்பாற்சொல் உள்ளுணர்வு (intuition), அறிவு (intelligence), மன ஆற்றல் (mental vigor) ஆகியவற்றைக் குறிக்கிறது. இதிலிருந்தே தமிழில் மேதை, மேதைமை ஆகிய சொற்கள் வருகின்றன. அறிவையும் அதனால் விளையும் ஆற்றலையும் ஒரு சக்தியாக, தேவியாக போற்றுகிறது இந்த அழகிய வேதப்பாடல். வேதங்களில் இவ்வாறு போற்றப்படும் மேதா தேவி என்னும் தெய்வீக சக்தியே சரஸ்வதி, கலைமகள், பாரதி என்று ஒவ்வொரு இந்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் வழிபடப் பெறுகிறாள்.

உலகில் கல்வி, செல்வம், தலைமை, வீரம் என எந்தத் துறையில் முன்னேறிச் செல்வதற்கும் இந்த மேதா சக்தியின் விழிப்பே அடிப்படையாக அமைகிறது. உலகியலைக் கடந்த ஆன்மீக நாட்டத்திற்கும், ஞானத் தேடலுக்கும் அடிப்படையாக அமைவதும் இதுவே. எனவே, அறிவையும் ஆற்றலையும் தம் அகத்துள்ளே நிறுத்திட விழைபவர்கள் அனைவருக்குமான உன்னதப் பிரார்த்தனையாக இந்தப் பாடல் அமைகிறது.

மேதா ஸூக்தம் ஒலிவடிவில் இங்கே. இனிய குரலில், பிசிறற்ற ஸ்வரத்துடன் ஓதும் இந்த சிறுவர் சிறுமியர் பெங்களூர் த்ரயீ வேத வித்யாலயம் மாணவர்கள். வேத பண்டிதர்களான சள்ளகரே சகோதரர்களின் (Challakare brothers) சீடர்கள்.

மேதா ஸூக்தம், தேவநாகரி லிபியில் இங்கே.

ஜடாயு வேத மந்திரங்களையும் உபநிஷதங்களையும் தொடர்ந்து மொழியாக்கம் செய்து விளக்கக் குறிப்புகளுடன் எழுதி வருகிறார்.  இது தொடர்பான அவரது அனைத்து பதிவுகளையும் இங்கு காணலாம்.

2 Replies to “மேதா ஸூக்தம் – தமிழில்”

  1. மேதா சூக்தம் தமிழாக்கம் மிக அருமை… தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  2. இன்று மேதா சுக்தம் பொருள் தேடினேன். கிடைத்தது. நன்றி ஐயா. அனந்த கோடி நமஸ்காரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *