அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்!

நண்பர் ஜடாயுவை தீபாவளி வாழ்த்துச்சொல்ல அழைத்தபோது, அமெரிக்க அதிபர் தேர்தலைப்பற்றிப் பேச்சு எழுந்தது  அப்போழுது ஜடாயு, “அரிசோனன், அங்கே என்ன நடக்கிறது? ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் வென்றுவிட்டார் என்கிறார்கள்.  அதிபர் டிரம்ப் தானும், மைக் பென்ஸும் வென்றுவிட்டதாகவும், நிறைய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது என்றும் சொல்கிறார்.  திரும்ப ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது! ஓட்டு எண்ணுவதில் என்ன தாமதம்?  எக்கச்சக்கமான வழக்குகள் பல இடங்களிலும் பதியப்பட்டுள்ளன.  யார் வென்றார்?  ஜோ பைடனா, டிரம்ப்பா?  சுப்ரீம்கோர்ட்டுக்கு வழக்கு போனால் யார்பக்கம் தீர்ப்பாகும்?    நீங்கள் முன்னால் ‘அமெரிக்க அதிபர் தேர்தல்பற்றி எழுதினீர்களே!  சொல்லுங்கள். அங்கு என்னதான் நடக்கிறது?”  என்று கேட்டார்.

நன்றி: kidsnews.com.au

“அதை விவரிப்பது என்றால் நிறைய நேரம் பிடிக்கும்.  கேட்க நேரம் இருக்கிறதா!” என்று கேட்டேன்.

“அப்படியானால் கட்டுரையாக எழுதிவிடுங்களேன்!” என்று அன்புடன் பணித்தார்.  சிறிது நேரம் இந்தியத் தேர்தலைப்பற்றியும், அங்கு ஓட்டு எண்ணுவது பற்றியும் பேசிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிட்டேன்.

நண்பர் கிருஷ்ணகுமாரும் முகநூலில் ஒருமுறை, “அதிகாரபூர்வமாக பைடன் ஜெயித்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டதா?” என்றும் கேட்டிருந்தார்.  அவருக்கு ஏதோ நம்பிக்கை இல்லாதமாதிரியும் பட்டது.

ஆகவே, கொஞ்சம் நகைச்சுவையுடன்(!) அமெரிக்க அதிபர் தேர்தலைப் பற்றி எழுதி உங்களை குஷிப்படுத்தலாம் — அல்லது அறுக்கலாம் (உங்கள் மனநிலையைப் பொருத்து) என்று நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து படித்துக் கருத்து எழுதினால், என் முயற்சியில் வெற்றிபெற்றதாகக் கருதுவேன். 

அப்படியில்லாமல், உங்களுக்கு ரொம்ப ‘போர்’ அடித்தால், உங்கள் குழந்தைகள் உங்களைத் தொந்தரவுசெய்யும்போது, சரித்திரப் பாடம் என்று இக்கட்டுரைத் தொடரைக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள்.  அத்துடன் கட்டுரையில் கேள்வியும் கேட்பதாகச் சொல்லிப் பாருங்கள்.  அதற்குப் பிறகு உங்கள் குழந்தைகள் உங்களைத் தொந்தரவு செய்யவே மாட்டார்கள்.  தொந்தரவுசெய்வதென்ன, உங்கள் பக்கமே வரமாட்டார்கள்!  அவர்கள் உங்கள் சொல்லைக் கேடகவேண்டுமென்றால், “ஒரு அரிசோனனின் கட்டுரையைப் படிக்கக் கொடுக்கட்டுமா?” என்று பயமுறுத்தினால் போதும், உங்கள் குழந்தைகள் தங்கக் கம்பியாக மாறிவிடுவார்கள்.

சரி, மேலே தொடரலாமா..?

1.  இந்திய – அமெரிக்கத் தேர்தல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்

இந்தியத் தேர்தலைப் பற்றி நீங்கள் எனக்குப் பக்கம் பக்கமாக வகுப்பு எடுப்பீர்கள் — ஊழல், அப்படி இப்படி என்று.  அதிலெல்லாம் எனக்குத் தெரியாது,  தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை.  அதைப்பற்றி நான் கருத்துச் சொல்லவும் கூடாது.  சொன்னால், இந்தியத் தேர்தலில் அமெரிக்கவாசியான ஒரு அரிசோனன் தலையிட்டுக் குழப்படி செய்கிறான் என்ற கெட்டபெயரும், இந்தியத் தேர்தலில் தலையிட்டு இந்தியர்களின் தலைவிதியை மாற்றமுயற்சிசெய்யும் அரிசோனனைக் கைதுசெய்து ஏன் உள்ளே வைக்கக்கூடாது என்ற கேள்வியும் எழும். சிலர் வழக்குப் பதிந்தாலும் வியப்பில்லை.

இதெல்லாம் எனக்குத் தேவையா? வேண்டவே வேண்டாம். ஆனால் பொதுவாக இந்தியாவில் தேர்தல் எப்படி நடக்கிறது, ஓட்டு எப்படி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்பதைச் சான்றுடன் எழுதலாம்,  அது தவறல்ல.  இதை எழுதுவது, அமெரிக்கத் தேர்தலுக்கும், இந்தியத் தேர்தலுக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டவே, வேறு எதற்கும் அல்ல.

டிஸ்கி, அதாவது டிஸ்க்லைமர் கொடுத்துவிட்டு, அதாவது ‘நான் பொறுப்பல்ல” என்று சொல்லிவிட்டு எழுதுகிறேன்.  இதனால் நீங்கள் நான் எழுதியதைவைத்து என்மீது வழக்குத் தொடுக்கமுடியாது என்று இப்பவே சொல்லிவிட்டேன்.  வீணாக உங்கள் பணத்தைச் செலவழித்து என்மீது வழக்குப்போடாதீர்கள். தோற்றுத்தான் போவீர்கள்.

அப்பாடா!  நிம்மதியாக நான் மேலே பயமில்லாமல் எழுதலாம்.

இந்தியாவில் ‘தேர்தல் கமிஷன்’ என்று ஒரு அரசாங்க நிறுவனம் இருக்கிறது.  அது அரசியல் அமைப்பில் ஒரு உறுப்பு என்று 324ம் ஷரத்துப்படி ஜனவரி மாதம் 1950ல் உருவாக்கப்பட்டது.. அதற்குத் தேர்தல் கமிஷனர் தலைவர், இப்பொழுது அதில் மூன்று உறுப்பினர் உள்ளனர்.[i]  இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும், அதுதான் தேர்தலை நடத்துகிறது.

 அதற்கு நிறைய அதிகாரம் உள்ளது/ என்று, எங்கு தேர்தல் நடக்கவேண்டும், எப்பொழுது ஓட்டு எண்ணப்படவேண்டும் என்று அது முடிவுசெய்கிறது.  அது அரசாங்க ஊழியர்களைத் தேர்தல் நடக்கும்போது ஓட்டுச் சாவடியில் மேற்பார்வையாளர்களாக நியமிக்கிறது.  தேர்தல் நடக்கும் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வாக்குப் பதிவு பல நாள்கள் நடக்கின்றன.  வாக்குகள் ஒரே நாளில் எண்ணி முடிவு சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் அப்படியல்ல.  நாடு முழுவதற்கும் ஒரு தேர்தல் கமிஷன் என்று ஒன்றும் இல்லை.  ஒவ்வொரு மாநிலமும் அங்கு நடக்கும் தேர்தலுக்குப் பொறுப்பேற்கிறது.  வாக்குச் சீட்டையும் அந்தந்த மாநிலங்கள்தான் வடிவமைக்கின்றன.  ஒழுங்காகத் தேர்தல் நடத்தும் பொறுப்பையும் அவைதான் ஏற்றுக்கொள்கின்றன.  ஒவ்வொரு மாநிலத்தின் மாநிலக் காரியதரிசிதான் (Secretary of State) அதற்குப் பொறுப்பேற்கிறார்.  இருப்பினும் ஒவ்வொரு மாநில கவுன்ட்டியும் — அதுதான் இந்தியாவில் மாவட்டம்போன்ற பிரிவு — தேர்தலில் இடப்பட்ட வாக்குகளை எண்ணிப் பதிவிட்டு, மாநில மையத்துக்கு அனுப்புகின்றன.

“அட ராபணா?  இத்தனை சிக்கலா?  நீங்கள் அமெரிக்காவில் வாக்கை எண்ணி முடிவு சொல்வதே ஒரு பெரிய விஷயம்?  நடுவில் எவனாவது —  இதில் ஆணாதிக்கம் கூடாது –  எவளாவது –  மரியாதையில்லாமல் எழுதலாமா — எவராவதும் நடுவில் ஆட்டையைப் போட்டுவிட்டால், வட்டங்கள், மாவட்டங்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்வதை எப்படித் தடுக்கிறீகள்? உங்கள் தேர்தல் முடிவை நாங்கள் எப்படி நம்புவது?” என்று கேட்கத் தொடங்கிவிடாதீர்கள்.  இங்கு ஒரு சிலபலர் — அதாவது தோற்பவர்கள் அப்படிக் கேட்டுப் பாடாய்ப் படுத்துகிறார்கள்.  அவர்களுடன் நீங்களும் சேர்ந்துகொண்டு என்னையும் குழப்பாதீர்கள்.  உங்களைத்தான் நான் குழப்பவேண்டுமே தவிர, என்னை நீங்கள் குழப்பக் கூடாது. 

பின்னால் அது எப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதை விவரமாகச் சொல்வேன்.

இங்கு எந்த ஆண்டும் நவம்பர் மாதம் முதல் வாரம் செவ்வாய்க்கிழமைதான் ஓட்டுப்பதிவு நடக்கும். அன்று விடுமுறை கிடையாது.  வாக்களிக்கச் செல்பவர்களுக்கு எல்லா நிறுவனங்களும் அந்த நேரத்திற்கு வாக்காளர் பெருமக்களுக்கு — தமிழக அரசியல்வாதிமாதிரி எழுதத் துவங்கிவிட்டேனோ —  மன்னிக்க! — அனுமதிகொடுக்கவேண்டும்.

அப்படியானால் யார் வேலையைவிட்டு வாக்களிக்க வருவார்கள்?  இதற்காக ‘வராதோர் வாக்குச்சீட்டு (absentee ballot)’ வாக்களிப்புமுறை உள்ளது. அதையும் பின்னால் விளக்குகிறேன்.

இந்தியாவில் எம்.பி, எம்.எல்.ஏ இவர்களுக்கு மட்டுதான் வாக்களிப்பீர்கள் — அதுவும் இரண்டு தேர்தலும் ஒன்றாக நடந்தால் மட்டும்.  இல்லாவிட்டால் எம்.பிக்கோ, எம்,எல்.ஏக்கோ வாக்களித்துவிட்டு, நிம்மதியாக வெளிவந்துவிடுவீர்கள்.

இங்கு அப்படியில்லை.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அதிபர், மாநில ஆளுனர், மாநில செனட்டர், பிரதிநிதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.  ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டு (இதை யு.எஸ் என்பர்) செனட்டரும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டுப் பிரதிநிதியும் (யு.எஸ் ரெப்ரசென்டேடிவ் – இந்திய எம்.பி மாதிரி) தேர்ந்தெடுக்கப்படுவர், அரிசோனா உள்பட சில மாநிலங்களின் மாதிரி வாக்குச் சீட்டுகளின் படங்கள் கொடுத்துள்ளேன்.

பென்சில்வேனியா வாக்குச்சீட்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்குபோது எல்லா மாநில ஆளுனர், யு.எஸ் செனட்டர், தேர்தல் நடப்பதில்லை.  ஆனால் யு.எஸ். பிரதிநிதி தேர்தலும் நடக்கும்.  அதுமட்டுமல்ல, மாநில நீதிபதிகளின் தேர்தலும், சில மாநில, கவுன்ட்டி, நகர், பிரேரேபணைகளுக்கும் (propositions) வாக்கெடுப்பு நடக்கும்.  ஒரு வாக்காளர் கிட்டத்தட்ட இருபதிலிருந்து முப்பது விஷயங்களுக்கு வாக்களிக்கவேண்டியிருக்கும். இதெற்கல்லாம் எவ்வள்வு நேரம் வேண்டும்?  யோசித்துப் பாருங்கள்.

“ஒரு அரிசோனன்!  கொஞ்சம் மெதுவாகப் போங்கள்.  அதென்ன பிரேரேபணை?  அதிபர் முதலான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், இதற்கும் என்ன தொடர்பு?  வரப்பைவெட்டி, ஊடுசால் பாய்ச்சி, ஒரு வயலிலிருந்து நீரைத் திருப்புவதுபோல திடுமென்று மடைமாற்றுகிறீர்களே!” என்று கேட்கிறீகளா?

நுணலும், அதுதாங்க தவக்களை – தவளை –  இப்ப நல்ல தமிழில் எழுதினாலே யாருக்கும் புரியமாட்டேன் என்கிறது  — ஆங்கிலத்தில் – அதுதாங்கள், இங்கிலீஷில் ஃப்ராக் (frong) என்று சொல்கிறார்களே, அதுதாங்க நுணல்.  கடைசியில் நான் சொல்லவருவது எனக்கே மறந்துபோகிறது.  மண்ணுகுள்ளே மறைஞ்சு கிடக்கற தவளை ‘கொட கொட’ன்னு கத்தி பாம்புகிட்ட மாட்டிக்கிற மாதிரி நான் பிரேரேபணைனு எழுதிட்டு மாட்டிக்கிட்டேன்.

திசை திருப்பலை.  அதையும் என்னனு சொல்லிடறேன்.

கஞ்சா தெரியுமில்ல கஞ்சா — உங்களுக்குத் தெரியாதா?  கேள்வியாவது பட்டிருக்கீங்களா?  வாயைக்கொடுத்து ஏன் மாட்டிக்கனும்னு பார்க்கறீங்களா? 

அது ஒரு போதைப்பொருள்.  இங்கிலீஷ்ல மாரிவானானு சொல்லுவாங்க.  அமெரிக்காவுலே அதைத் தடை செஞ்சிருக்காங்க.  சில வியாதிவந்தா, உடம்புல ரொம்ப வலி இருக்கும்.  அதுக்கு மருந்து வாங்கிச் சாப்பிட்டா எக்கச்சக்கமா செலவாகும். அதுனால் இந்தக் கஞ்சாவைப் புகைச்சா வலி குறையுமாம்.  அரிசோனாவிலே டாக்டர்கள் எழுதிக்கொடுத்தா, மருந்துமாதிரி கொடுப்பாங்க, நோயாளிகளுக்கு.

இப்ப என்ன ஆச்சுன்னா, நிறையப்பேரு திருட்டுத்தனமா கஞ்சா வாங்கிப் புகைக்க ஆரம்பிச்சுட்டாங்க.  திருட்டுத்தனமா செஞ்சா அரசுக்கு வருமானம் கெடைக்குமா?  இது கள்ளச் சாராயம் காய்ச்சறமாதிரித்தான். கஞ்சா ஒரு செடியோட இலைதானே!  அதுதான பலபேரு திருட்டுத்தனமா அந்தச் செடியை வளர்த்து, வித்துப் பணம்பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.  நோயாளிங்கலும், மத்தவங்களும் இவங்ககிட்ட வாங்கினா விலை கொறச்சலா இருக்குன்னு அங்க போயிட்டாங்க.

அதுனால, அரிசோனாவிலே, நோயாளிங்க மட்டுமில்லாம, உல்லாசமா புகைக்கிறவங்களும் கஞ்சா வாங்க அனுமதிக்கலாமான்னு கேட்டு ஒரு பிரேரேபணை — அரசியல்வாதிங்க கருத்துச்சொல்லாம நழுவிட்டாங்க.  வேணும்னாலும் தப்பு, வேணாம்னாலும் தப்பு.  ஆக, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு விட்டுட்டாங்க.  அனுமதி கிடைச்சாலும், கிடைக்காட்டாலும் அரசியல்வாதிங்க மாட்டிக்கமாட்டாங்க.  எப்படியிருக்கு!

இதே மாதிரி, பள்ளிக்கூடத்திலே ஆசிரியர்களுக்குச் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க, கட்டிடம் கட்ட, கணிணிபோன்றவை வாங்க அரை விழுக்காடு வரி உயர்த்தலாமான்னு இன்னொரு பிரேரேபணை.  வரியை உயர்த்தினாலும், உயர்த்தாட்டாலும் அரசியல்வாதிங்க தப்பிக்கலாமில்லையா?

அடேடே! நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இப்படி ஒரு வழி இருக்குன்னு தெரியாமபோச்சேன்னு நினைக்கறீங்களா?  அதெல்லாம் தெரியும்.  இந்தியத் தேர்தல் விதிமுறை அதுக்கெல்லாம் அனுமதி கொடுக்கறதில்லை, அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட பிரேரேபணைகள் வேணுமா, வேண்டானு தொலைக்காட்சிகளிலும், வீட்டுக்கு வரும் அஞ்சல்களிலும் நமக்கு விவரம் வரும்.  இதைத் தவிர, இங்கே இருக்கும் தேர்தல் வாரியமும் ஒவ்வொரு வீட்டுக்கும் இதைப்பற்றி வேணும்-வேணாம்னு யார் யார் என்ன சொல்லியிருக்காங்கன்னு நமக்கு விவரம் அனுப்பும். 

இதையெல்லாம் படிச்சுப்பார்க்க எல்லோருக்கும் பொறுமை இருக்காது.  டிவிலே பத்து விநாடிலே என்ன சொல்றாங்களோ, அது பிடிச்சுருக்கறமாதிரி வாக்களிப்பாங்க.  சிலபேரு எதுக்குமே ‘வேண்டாம்”னு ஓட்டுபோடுவாங்க.  சிலபேரு “வேணும்’னு;  சிலபேரு அதைப்பத்திக் கவலையேபடாமா பரிட்சைல தெரியாத கேள்வியை விட்டுடறமாதிரி விட்டுடுவாங்க. இதெல்லாம் நாம கண்டுக்கக் கூடாது. 

இப்போதைக்கு இது போதும்.  அடுத்த அத்தியாயத்திலே இன்னும் விவரமா எழுதறேன்.

[தொடரும்]


[i]   Election commission of India;  History, Composition, Power and Functions,  by Aakriti Vikas, Sep.12, 2020,  https://www.legalbites.in/election-commission-of-india

2 Replies to “அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்!”

  1. கட்டுரை நன்று.

    இல்லை. ஒரே நாளில்தான். ஆனால் பல கட்டங்களாக நடக்கிறது
    நாள்கள்= நாட்கள்.

  2. அண்ணா அருமை அற்புதம் இந்திய தேர்தல் சில காலமாக கொஞ்சம் கொஞ்சமா தெரியும் இப்பொழுது அமெரிக்க தேர்தலையும் தெரிந்து கொள்ள நீங்கள் எழுதியதற்காக நன்றி நன்றி. ஒருவர் ஓட்டு போட அரைமணி நேரம் செலவிட வேண்டும் அதுபோல அங்கே EVM மெஷின் எல்லாம் கிடையாதா,, காகிதத்தில் தான் போடணுமா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *