கம்பனும் காளிதாசனும்

முன் குறிப்பு:

இது இசைக்கவி ரமணனுடைய சொற்பொழிவுக்காக நான் தயாரித்த குறிப்பு. அபூர்வமாக எழுதிய தேதியையும் குறித்திருக்கிறேன் (ஜூலை 19, 2011). காளிதாசனுடைய ரகுவம்ச ஸ்லோகங்களை இமேஜ் கோப்புகளாக இணைத்திருக்கிறேன் போலிருக்கிறது. இப்போது அந்த இமேஜ்கள் எதுவும் கிடைக்கவில்லை. ரமணனிடத்தில் இருந்தால்தான் உண்டு. இந்த ஒன்பதுவருட காலத்தில் இந்த இமேஜ் கோப்புகளிலிருந்த ஸ்லோகங்கள் எவை என்பது மறந்துவிட்டது. ஆனால், மீண்டும் தேடி எடுக்க முடியாத வண்ணம் போய்விடவில்லை. இதற்காகவே ரகுவம்சத்தின் ஆன்லைன் பதிப்பை ஐயப்பன் தேடிக்கொடுத்திருக்கிறான். சற்று அவகாசம் கொடுங்கள். இந்தப் பதிவில் கம்பனுக்கு மூலமாக இருந்த காளிதாசன் ஸ்லோகங்கள் எவையெவை என்பதைச் சொல்கின்றேன். இந்தக் கட்டுரை முதல் பார்வையில் தயாரித்தது என்பதால், இதில் உள்ளதற்குமேலும் பல சுவாரசியமான கம்பன்-காளிதாசன் ஸ்லோக-செய்யுள் இணைகள் கிடைத்துள்ளன. அவற்றையும் போகப்போகப் பகிர்ந்துகொள்கிறேன்.

யுத்த காண்டம், நாகபாசப் படலத்தில், அதிகாயன் இறந்ததைக் கேட்டுத் துடிதுடிக்கும் இந்திரஜித்தைக் குறித்துக் கம்பன் ஒரு பாடல் சொல்கிறான்:

சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி, விண் மீது பார்த்தான்;
‘எல்லாரும் இறந்தனரோ!’ என ஏங்கி நைந்தான்;-
வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன்.

யார் மிகச் சிறந்த வில்லாளி என்று விரல்விட்டு எண்ணத் தொடங்கினால், அப்படி எண்ணுகின்ற ‘விரலுக்கு முன்நிற்கும் வீரன்‘. இந்திரஜித் என்ற பெயரைத்தான் உச்சரித்தபடி முதல் விரலை எண்ணுவதற்காக நீட்டவேண்டும்’ என்று கம்பனால் குறிக்கப்படும் அளவுக்கு வில்லாற்றலில் மிகமிகச் சிறந்தவன் இந்திரஜித் என்று இந்த வர்ணனை சொல்கிறது.

காளிதாசனுக்கும் இத்தகைய பெருமை ஒன்று உண்டு. ஒரு வடமொழிக் கவிஞன் சொல்கிறான் – अद्यापि तत्तुल्य कवे: अभावात् अनामिका सा सार्थवती बभूव ॥

வடமொழியிலே மோதிர விரலுக்கு அநாமிகா என்று பெயர். அதாவது, ‘பெயரிலி’ என்ற பொருளில் ஒரு பெயர் அது. யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி எழுமானால், கைவிரல்களை மொத்தத்தையும் மடக்கி, முதலில் சுண்டுவிரலைப் பிரித்தவாறு, ‘காளிதாசன்’ என்ற பெயரை உச்சரித்தால், அடுத்து வருவது அநாமிகா! காளிதாசனுக்குப் பிறகு, கவிஞன் என்று பெயர் சொல்லவே யாருமில்லை என்ற பொருள்பட அமைந்த இந்த ஸ்லோகம், தெரிந்தோ தெரியாமலோ கம்பனால் இந்திரஜித்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. It is a pleasant coincidence.

காளிதாசனும் சரி, கம்பனும் சரி, அடிப்படையில் வால்மீகியையே பெரிதும் பின்பற்றியவர்கள். ஆங்காங்கே வேறுபடவும் செய்திருக்கிறார்கள். வால்மீகியின் சித்திரத்தையும், சம்பவக் கோவையையும், பாத்திரப் படைப்புகளையும் சற்றே முன்பின்னாகக் கலைத்துப் போட்டும், மாற்றி அமைத்தும், மேலும் மெருகூட்டியும் கம்பன் தன்னுடைய ராமாயணத்தைப் படைத்தான். இருவருமே வால்மீகியிலிருந்து மாறுபட்ட சித்திரங்களைத் தீட்டியதும் உண்டு; வால்மீகியையே நேரடியாக அப்படி அப்படியே எடுத்தாண்ட இடங்களும் உண்டு.

இந்த உரையாடலுக்குள் புகுமுன் ஒன்றை நாம் கவனத்தில் நிறுத்த வேண்டும். வால்மீகிக்கும் கம்பனுக்கும் இருந்த களம் மிகப் பெரியது. சுமார் 25000 ஸ்லோகங்களில் வால்மீகியும் பத்தாயிரம் பாடல்கள் அளவில் கம்பனும் பாடிய பார காவியத்தின் நாயகன், ரகு குலதிலகனாக விளங்கிய ராமன் ஒருவன் மட்டுமே. ஆனால் காளிதாசனுடைய ரகுவம்சமோ, திலீபன் தொடங்கி, ராமனுக்குப் பேரனுக்குப் பேரனுக்குப் பேரனும் அதன் பின்னும் தொடர்ந்து அக்னிவர்ணன் என்ற மன்னனோடு, மொத்தம் (ராமன் உட்பட) 29 மன்னர்களுடைய வம்சாவளியைச் சொல்லுகிறது. எனவே, காளிதாசனுக்கு ராமகாதை பாடுவதற்காகக் கிடைத்த களம் மிகக் குறுகலான ஒன்று. பத்தொன்பது ஸர்க்கங்களைக் கொண்ட ரகுவம்சத்தில், ஒன்பதாம் ஸர்க்கத்தில் தசரதர், ரிஷி குமாரனைக் கொன்று சாபம் பெற்ற சம்பவம் தொடங்குகிறது. பத்தாம் ஸர்க்கத்தில் ராமன் திரு அவதாரம். பதினைந்தாம் ஸர்க்கத்துடன் உத்தர காண்டத்துடன் கூடிய மொத்த ராமாயணமும் முடிந்துவிடுகிறது. கம்பன் பாடாமல் விட்டுவிட்ட உத்தர காண்டத்தை, ரகுவம்சத்தின் பதினைந்தாம் ஸர்க்கத்திலிருந்து நீக்கினால், பட்டாபிஷேகம் அந்த ஸர்க்கத்தில் 22 ஸ்லோகங்களோடு முடிந்துவிடுகிறது. அதாவது உத்தர காண்டத்தையும் சேர்த்துக் கொண்டால் 634 ஸ்லோகங்களும், பட்டாபிஷேகத்தோடு நிறுத்திக் கொண்டால் 553 ஸ்லோகங்களும் மட்டுமே காளிதாசனுக்கு ராமகாதை சொல்லக் கிடைத்த பரப்பளவு.

இப்படி ஒரு லிமிடேஷன் இருந்த காரணத்தால் காளிதாசன் பாயும் பாய்ச்சல் அசுரகதியாக இருக்கும். ‘மாரீசனைப் பொன்மான் வடிவில் வரச் செய்து, ராம லக்ஷ்மணர்களை ஏமாற்றிவிட்டு, ஸீதையைக் கவர்ந்து சென்றான் ராவணன். ஜடாயு அவனைத் தடுத்துப் போரிட்டது அவனுக்குச் சிறிது நேரமே தடையை ஏற்படுத்தியது என்று கம்பனுடைய ஐம்பது மைல் பயணத்தை அரை அங்குலத்தில் முடித்து வைப்பான். (பார்க்க: இமேஜ் 5 – சுருக்கத்தின் காரணம் உட்படச் சொல்லப்பட்டுள்ளது. ஸ்லோகமும் இருக்கிறது.) ஆனால், எந்த விவரத்தையும் விட மாட்டான். இடைப்பட்ட சம்பவங்களை, பிற்பகுதியில் ஆங்காங்கே தூவி வைப்பான். ஆரண்ய காண்டத்திலிருந்து கிஷ்கிந்தா காண்டத்தைத் தாண்டி, சுந்தர காண்டத்தில் அனுமன் தேவியைக் காணும் வரையில் ஏழே ஏழு ஸ்லோகங்களில் சொல்லி முடித்துவிடுவான். கிஷ்கிந்தா காண்டச் செய்திகள், மழைக்காலத்தில் நான்கு மாதங்கள் ராமன் தனிமையில் வாடியது எல்லாம், பின்னால் தேவியைத் திரும்ப அழைத்துக்கொண்டு புஷ்பக விமானத்தில் வரும்போது, ‘இதோ இங்கேதான் இது நடந்தது; அங்கே அது நடந்தது’ என்று சம்பவங்களை இடம்மாற்றிப் போட்டுப் பூர்த்தி செய்துவிடுவான். இருபத்தொன்பது மன்னர்களின் கதையையல்லவா சொல்லவேண்டியிருந்த்து அவனுக்கு! ராமகாதை அதில் ஒரேயொரு சிறு பங்குதானே!

ஆனால், இத்தனைச் சிறிய பரப்பில் காளிதாசன் காட்டியிருக்கும் ஆச்சரியகரமான சித்திரங்கள் ஏராளம். மிக அற்புதமான உவமைகளை சிறுபிள்ளை விளையாட்டாய் அள்ளித் தெளித்தவண்ணம் அவன் செல்வது ஒருபுறம் இருக்கட்டும். வால்மீகியை ஒட்டியும் வெட்டியும் மாற்றியும் அவன் செய்திருக்கும் சித்திர வேலைப்பாடுகளில் பல, கம்பனுடைய காவிய அமைப்புக்கு வித்தாக இருந்திருக்கின்றன என்ற செய்தியையே தமிழகத்தில் இதுவரையில் யாரும் எடுத்து முன்வைத்ததாகத் தெரியவில்லை. அப்படி ஒருசில எடுத்துக் காட்டுகளையும் காண்போம்.


நூலின் தொடக்கத்தில் அவையடக்கம் என்ற பகுதியை வைப்பது கவி மரபு. தன்னுடைய ஆற்றல் மிகக் குறைவான ஒன்று என்றும், இவ்வளவு சிறிய ஆற்றவைக் கொண்ட நான் எவ்வளவு பெரிய செயலை மேற்கொண்டிருக்கிறேன் என்று, தன் அறிவின் அளவைக் குறைத்தும், உண்மையிலேயே மிகப் பெருஞ்சுமையாக விரிந்துகிடக்கின்றதும், தான் இயற்றப் புகுந்திருக்கின்றதுமான காவியத்தின் மேன்மையையும் எடுத்து முன்வைப்பது ஒது பொது மரபு. ‘ஐயா! நான் என்னவோ அறிவிலி; ஆற்றலற்றவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் இயற்றப் புகுந்திருக்கும் காவியத்தின் அளவும் சிறப்பும் அளவில் அடங்காதன. என் கையிலிருப்பது என்னவோ சிறிய ஆணி—எழுத்தாணி என்று வைத்துக் கொள்வோமே. ஆனால் இதைக் கொண்டு நான் புரட்டப் புறப்பட்டிருப்பது இமய மலையை’ என்ற தொனியில் காளிதாசனும் சரி, கம்பனும் சரி, தத்தம் அவையடக்கப் பாடல்களை இயற்றியிருக்கிறார்கள். வெளிப் பார்வைக்கு, தன்னைக் குறைத்துச் சொல்லிக் கொள்வதாகப் பட்டாலும், காரியத்தின் அளவைச் சுட்டிக் காட்டி, ‘இது ஒன்றும் சாமானியமான காரியம் இல்லை. துப்பாக்கியால் புலியைச் சுட்டுவிடமுடியும். ஆனால், நானோ, சமையலறை அரிவாள்மணையால் இதை அமைக்கக் கிளம்பியிருக்கிறேன்’ என்று ஒருவன் சொல்வானேயானால், ‘அப்பா! உன்னால் புலியைக் கொல்லத்தான் முடியும். ஆனால் நான் செய்கின்ற காரியத்தால், அரிவாள் மணையால் காய்கறிகள் எவ்வாறு திருத்தப்பட்டு சமையலுக்கு ஏற்றவாறு எவ்வாறு கொண்டுவரப்படுகின்றனவோ, எவ்வாறு சுவையூட்டப்பட்டு மேலும் பக்குவப்படுத்தப்படப் போகின்றனவோ, அப்படிப்பட்ட செயலையல்லவா நான் மேற்கொண்டிருக்கிறேன்’ என்ற தொனி ஒன்று அதன் ஊடாக ஒலிப்பது, உற்றுக் கேட்பவன் காதில் மட்டும்தான் ஒலிக்கும். ஆகவே, அவையடக்கம் என்றால், ‘அவைக்கு அடங்குதல்’ என்ற நோக்கத்துடன் கூடியதாகச் செய்யப்படும் செயல், அதே நேரத்தில் அவையை அடக்குதல் என்ற பெருமிதத்தை அடிநாதமாகக் கொண்டும் அமையும். இப்படி எல்லாக் கவிகளும் செய்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் காளிதாசன் மூன்றே மூன்று அவையடக்க ஸ்லோகங்களைத்தான் பாடியிருக்கிறான் என்றாலும் அவற்றின் ஊடே இந்த இரண்டும் ஒரே சமயத்தில் வெளிப்படக் காணலாம்.

“ஸூர்யனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அவ்வம்சத்தின் பெருமை மிகச் சிறந்தது. நானோ, மிகக் குறைவான அறிவுடையவன். கடக்க முடியாத ஸமுத்திரத்தைச் சிறு படகின் மூலம் ஒருவன் கடக்க விரும்புவதுபோல் எனது குறைந்த அறிவினால் கடல்போன்ற இச் சரித்திரத்தைக்க் கூறப்போகிறேன்” என்று கடவுள் வாழ்த்துக்குப் பிறகு இரண்டாவது ஸ்லோகத்தை அமைத்தான். (இமேஜ் 10) ஸ்லோகம் 2 பக்கம் 2

கம்பனுடைய அவையடக்கப் பகுதி ஆறு பாடல்களால் அமைந்தது. அவற்றில் இரண்டாவது செய்யுளில் கம்பன் சொல்வதைக் கேளுங்கள்:

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் – எனை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

பெரியவர்கள், முனிவர்கள் தன் சாபம் ஒன்றாலேயே எதிரியைக் களைவதுபோல், மிகச் சாதாரணமாக ஏழு மராமரங்களின் ஊடாகப் போகுமாறு அம்பைச் செலுத்தியனைப் பற்றிச் செய்யப்பட்ட பெருங்காப்யியமான ராமாயணத்தை, என்னுடைய ‘நொய்தின் நொய்ய சொல்லால்’ எளிதிலும் எளிதாகிய, ஆற்றலே அற்றதாகிய சொல் வலிமையால் செய்யத் தொடங்கினேன்.

பூர்வ பீடிகை பலமாக இருக்கிறதல்லவா? என் ஆற்றல் மிகச் சிறியது. எடுத்துக் கொண்ட பணியோ அளப்பரியது என்ற செய்தி காளிதாசனில் ஒலிப்பது போலவே இங்கும் ஒலிக்கிறதல்லவா? சரி. அடுத்ததாக, காளிதாசன் தனக்கு ‘இப்படித் தான் மேற்கொண்ட காரியத்தால் எவ்வளவு பெரிய பழி நேரப்போகிறது’ என்று அஞ்சுவது போன்று அடுத்த ஸ்லோகத்தை அமைக்கிறான்.

“அறிவற்ற நான் கவியின் புகழை அடைய விரும்புகின்றேன். உயரமான மனிதன் பறிக்கக் கூடிய பழத்தை அடைய விரும்பும் ஒரு குள்ளன் கைநீட்டிக் குதிப்பானாயின், வீணே முயலுகின்ற அவனை யாரும் பரிகசிப்பார்கள். அதுபோல் எனக்கு எட்டாத பொருளில் ஆசை வைத்து அதற்காக முயலுகின்ற நானும் பலருடைய நகைப்புக்குப் பாத்திரமாவேன்.” (இமேஜ் 11) ஸ்லோகம் 3, பக்கம் 2

கம்பனுடைய அடுத்த அவையடக்கச் செய்யுள், காளிதாசனை அப்படியே எதிரொலிக்கிறது

வையம் என்னை இகழவும், மாசு எனக்கு
எய்தவும், இது இயம்புவது யாது எனின்,-
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே

(நீங்கள் யாரும் சொல்லவே தேவையில்லை) எனக்கே மிக நன்றாகத் தெரியும். நான் இயற்றி முடித்த பிறகு, நான் செய்திருக்கும் இந்தக் காதையால், என்னுடைய அறிவுக் குறைபாடு மிக நன்றாக வெளிப்பட்டுத் தோன்றத்தான் போகிறது. அதன் காரணமாக இந்த வையம் என்னை இகழத்தான் போகிறது. என்னைக் குற்றம் சொல்லத்தான் போகிறது. (பிறகு ஏன் தெரிந்தே கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொள்கிறாய் என்று கேட்கிறீர்களா?) குற்றமற்ற புலமையும் பாண்டித்தியமும் உடைய (மூல ஆசிரியன்) இயற்றி வைத்துவிட்டுப் போயிருக்கிறானே, அந்தக் கதையுடைய பெருமை எப்படிப்பட்டது என்பதைத் தெரிவிப்பதற்காகவே.‘

‘நான் இப்படிக் குறைவுபட எழுதிவைத்துவிட்டுப் போனாலல்லவோ, எப்படிப்பட்ட திறமையாளர்கள் இதைக் கையாண்டிருக்கிறார்கள் என்பது உலகுக்குப் புலப்படும். ஆகவே நான் எக்கேடும் கெட்டுவிட்டுப் போகிறேன். இந்தக் கதையின் சிறப்பை மக்கள் உணர்வதற்காகவே, என்னைப் பழி சூழும் என்பதறிந்தும் இந்தச் செயலில் நான் இறங்கியிருக்கிறேன்.‘

கம்பன் என்ன சொல்ல வருகிறான்? ‘அட ஆமாய்யா… நான் என்னால் முடியாத ஒரு செயலைத்தான் மேற்கொண்டிருக்கிறேன். அப்படியாவது ராமகாதையை மக்கள் படித்துத் தெரிந்துகொள்ளட்டுமே! யாரும் தொட்டு கூட பார்க்கத் துணியாத இவ்வளவு பெரிய செயலை நான் மேற்கொண்டிருக்கிறேன் என்றால் அது எனக்காகவா? எனக்குப் பழியும் தூற்றலும் வந்து சேரத்தான் போகின்றன. ஆனால் அதைப் பற்றி என்ன? ஒரு அருமையான காதை மக்களுக்குக் கிடைக்குமல்லவா’ என்ற குறிப்பு அடிநாதமாக இந்தச் செய்யுளில் ஒலிக்கிறது அல்லவா?

காளிதாசனுடைய மூன்றாவது ஸ்லோகத்தை மறுபடியும் பாருங்கள். ‘நான் குள்ளன். உயரமான மரத்தில் பழுத்திருக்கின்ற பழத்தைப் பறிக்க முயல்கின்றேன். என்னால் ஆகாத செயலை மேற்கொண்டிருப்பதற்காக இந்த உலகம் என்னைத் தூற்றத்தான் போகிறது.’ ஆமாம் தூற்றத்தான் போகிறது. இருக்கட்டுமே! நான் பறிக்காவிட்டால் வேறு யார் பறிக்கப் போகிறார்கள் இந்தப் பழத்தை? மரத்தில் பழுத்த பழம் என்றால், நான் மட்டுமே தின்றுவிட்டுப் போய்விட முடியும். ஆனால் எழுத்து வடிவமாக நான் பறித்துப் போடப் போகின்ற இந்தப் பழமோ, சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டாத உயரத்தில் பழுத்திருக்கிறது. இதை நான் பறிக்கிறேனோ இல்லையோ, பறிக்கவாவது முயற்சி மேற்கொள்கிறேன் அல்லவா? வெற்றி பெற்றால், அதனால் பயன்பெறப் போகிறது தலைமுறை தலைமுறையாகத் தொடரப் போகின்ற மக்கள் கூட்டமல்லவா? அதற்காக நான் இந்தப் பழியை எய்திவிட்டுப் போகிறேனே’ என்ற தொனிப் பொருள், கம்பன் சொல்லும் ‘நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்’ என்பதை மிக நெருங்கி, கருத்தால் ஒத்து நடக்கிறது அல்லவா? உண்மையில், காளிதாசனைத்தானே கம்பன் பின்பற்றியிருக்கிறான், இந்த உத்தியில்?

இதையாவது, ‘கவிமரபு, மரபுக்காக உபசாரமாகச் சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள் ஒன்றுபோல இருப்பதில் வியப்பில்லை’ என்று சொல்லி, ‘இது ஏதோ தற்செயலாக அமைந்த ஒன்று’ என்று சொல்லிவிடலாம். இப்போது விஷயத்துக்குள் நுழைகிறேன். இனிமேல் நான் சொல்லப் போவதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்; அலசிப் பாருங்கள்; அமைதியாக ஆய்வு நோக்கில் காணுங்கள்.


கம்பன், காளிதாசன் ஆகிய இருவரும் வால்மீகியை அப்படியே எடுத்தாண்ட இடங்களுக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், சுந்தரகாண்டத்தில் தேவியைக் காணும் அனுமன், தன்னுடைய பேருருவை எடுத்துக் காட்டிய பிறகு, ‘நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய ஆளில்லை. மேலும் இந்த மாதிரியான சிறிய காரியங்களுக்குப் பெரிய ஆற்றலுள்ளவர்களைப் பயன்படுத்த மாட்டார்கள். என்னைக் காட்டிலும் பன்மடங்கு ஆற்றல் வாய்ந்த எழுபது வெள்ளம் வானர சைனியத்தில் நான் ஏதோ எடுபிடி வேலை செய்கின்ற சாதாரணமான ஒருவன்’ என்று சொல்லிக் கொள்ளும்

அண்ணற் பெரியோன், அடி வணங்கி,
அறிய உரைப்பான், ‘அருந்ததியே!
வண்ணக் கடலினிடைக் கிடந்த
மணலின் பலரால்; வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத் தலைவர்,
இராமற்கு அடியார்; யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்;
ஏவல் கூவல் பணி செய்வேன்.

பாடலிலுள்ள கருப்பொருள், வால்மீகி ராமாயணத்தில் இரண்டு இடங்களில் (சீதையிடம் ஒருமுறையும், சீதையிடம் இவ்வாறு சொன்னதாக ராமனிடம் ஒருமுறையும்) வருகிறது.

இதுபோலவே, நாம் பெரிதும் கொண்டாடும் பாடலான:

‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்:

‘சீதையை’ என்று தொடங்கினால், ‘கண்டானோ காணவில்லையோ’ என்று அடுத்த சொல்லை உச்சரிக்கும் சிறுபோதளவு கூட ராமன் சஞ்சலப் படக்கூடாது என்று, ‘கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்’ என்று சொல்வதாக வரும் பாடலும் வால்மீகியில் அப்படியே உள்ள ஒன்றுதான்.

dR^iShTaa devii na samdeho na ca anyena hanuumataa || 5-64-28
na hi anyaH karmaNaH hetuH saadhane tat vidho bhavet |

 1. devii= Seetha; dR^iShTaa= was seen; na samdehaH= there is no doubt; na= none; anyena= other; hanuumataa= than Hanuma; na hi anyaH= there is indeed none other; hanuumataH= than Hanuma; hetuH= who is the executor; saadhane= in accomplishing; asya karmaNaH= this work.

“Seetha was seen. There is no doubt. None other than Hanuma must have seen Seetha. There is indeed none other than Hanuma, who is the executor.”

(மொழிபெயர்த்தவர் Seen was Sita என்று மொழிபெயர்த்திருக்க வேண்டும்.) கண்டனென் கற்பினுக்கு அணியை என்பது மட்டுமல்லாமல், ந ஸம்தேஹ என்ற ஆட்சியையும், ‘அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும்’ என்று அப்படியே கம்பன் மொழிபெயர்ப்பாகவே செய்திருப்பதைப் பார்க்கலாம்.

பார்க்கப்பட்டாள் தேவி என்ற இந்த ஆட்சியைக் காளிதாசனும் பயன்படுத்தியிருக்கிறான். (இமேஜ் 6ஏ 6பி காண்க). அவனுக்கிருந்த அவசரம் காரணமாக, சுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் காணும் சமயத்திலேயே இந்தச் சொற்றொடரை இடம் மாற்றிப் போட்டான் என்பதுதான் வேறுபாடு.

தாடகை விழுந்தபோது

பொடியுடைக் கானம் எங்கும் குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த் தாடகை, தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு, அந் நாள், முந்தி உற்பாதம் ஆக,
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள்.

ராவணனுடைய வெற்றிக்கொடி அறுபட்டு பூமியில் விழுந்த்தைப் போல தாடகை விழுந்தாள் என்று கம்பன் பாடினால், அதே இடத்தில், (இமேஜ் 1 பார்க்க) அதுவரையில் அரக்கர்களைத் தொடவும் அஞ்சியிருந்த யமன் புகுவதற்கு ஏதுவாக, பாறை போன்ற உறுதியான தாடகையின் மார்பைத் துளைத்த்தன் மூலம், அரக்கர்கள் உயிரைக் கவர்வதற்கான துவாரம் (வாயில்) ராமபாணத்தால் ஏற்படுத்தப்பட்டது என்று காளிதாசன் பாடுகிறான்.

இனி, இருவரும் வால்மீகியிடம் மாறுபடும் இடங்களில் சிலவற்றைப் பார்ப்போம். என்ன ஆச்சரியம் என்றால், கம்பன் மாறுபடும் இடங்களில் பலவற்றுக்கு வித்து காளிதாசனில் உள்ளது என்பதுதான். இந்த உண்மையை ஏனோ எந்தத் தமிழறிஞரும் மக்களிடத்தில் வந்து சொல்வதில்லை. இங்கே முன்வைக்கப்படும் சான்றுகள் காளிதாசனையும் சேர்த்தே கம்பன் பாடியிருப்பதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கின்றது என்பதை உறுதிசெய்கின்றன.

ராமனுக்கு முடிசூட்ட தசரதன் முடிவெடுத்த்தைப் பாடுகையில் கம்பன் சொல்கிறான்:

‘மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈது’ எனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்
.

தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப்
பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.

தசரதன் ஒரு நாள் கண்ணாடியில் பார்த்துக் கொண்டானாம். அவன் காதோரத்தில் ஒரு முடி நரைத்திருந்தது தெரியவந்த்தானம். ‘மகனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு, நீ தவம் மேற்கொள்ள வேண்டிய பருவம் வந்துவிட்டது’ என்று, ராவணன் செய்த தீமையே நரை வடிவம் கொண்டு தசரதன் காதருகே, அவன் காதில் ‘தன் கருமையை இழந்து மின்னலைப் போல வெளுத்த முடி‘ சொல்வதைப் போலிருந்ததாம்.

இந்தச் சம்பவம் வால்மீகியில் குறிக்கப்படவில்லை. ஆனால், காளிதாசன் இதைப் பாடுகிறான். அதுவும், கம்பனுடைய விவரிப்பைப் போலவே, காதருகில் முடிவெளுத்து, ராஜ்ஜியத்தை ராமனுக்குக் கொடு என்று சொல்வதைப் பார்த்தால், கம்பன் காளிதாசனிடமிருந்து இந்தக் காட்சியைப் பெற்றிருக்கக் கூடும் என்பது தெளிவாகிறது. (இமேஜ் 3 பார்க்கவும்.)

அகலிகை சாப விமோசனக் காட்சியில், அகலிகை, கல்லாய்ச் சமைந்து கிடந்தாள்; ராமனுடைய பாததூளி பட்டதும் உயிர்த்தெழுந்தாள் என்று கம்பன் பாடுகிறான். ‘வால்மீகி இப்படிச் சொல்லவில்லை. அவள் யாருடைய கண்ணுக்கும் புலப்படாத நிலையில்தான் கிடந்தாள்’ என்று, adR^ishyaa sarva bhuutaanaam aashrame asmin vaSisyasi || என வரும் கௌதம முனியின் சாபத்தை மேற்கோள் காட்டுபவர்கள் உண்டு. கண்ணுக்குத் தெரியாமல் கிடந்தவளைக் கம்பன் கல்லாக்கினான் என்ற விமர்சனமும் மிகப் பரவலான ஒன்று. ஆனால், இதற்கு மூலம் காளிதாசனில் இருக்கிறது. ‘ஷிலாமதி’ என்று அவள் கல்லாய்க் கிடந்ததைச் சொல்கிறான் காளிதாசன். (இமேஜ் 2 பார்க்கவும்.) page 602

சீதையைப் பற்றி ராவணனிடம் முதன்முதலாகச் சொல்பவன் அகம்பனன் என்ற அரக்கன். அதன் பிற்பாடே, மூக்கறுபட்ட நிலையில் சூர்ப்பணகை வந்து சொல்கிறாள். கர தூஷண வதையைப் பற்றியும், ராம லக்ஷ்மணர்களுடன் சீதை என்ற பேரழகி, ராமனுடைய மனைவி, இருப்பதையும், ‘அவள் தனிமையில் இருக்கும்போது நீ அங்கே சென்று அவளைத் தூக்கிக்கொண்டு வந்துவிடு’ என்ற கருத்தை ராவணனிடம் சூர்ப்பணகைக்கும் முன்பாகச் சொன்னவன் இந்த அகம்பனன் (வால்மீகி ராமாயணம், ஆரணிய காண்டம், ஸர்க்கம் 31,ஸ்லோகம் 30-31),

ஆனால் காளிதாசன் பாடுகையில், இந்த அகம்பனன் இல்லை. சூர்ப்பணகையே மூக்கறுபட்டு வந்து ராவணனிடம் இந்தக் கருத்தை ஊன்றுகிறாள். கம்பன் காளிதாசனை அப்படியே அடியொற்றுகிறான். அகம்பனன் சம்பவமே கம்பனில் இடம்பெறவில்லை. (இமேஜ் 4 பார்க்கவும்.)

இன்னொன்று. அனுமன், சுந்தர காண்டத்தில் சீதையைக் காணும்போது (இமேஜ் 6பி, வலதுபுறக் கடைசி ஸ்லோகம்) ராமர் தன்னிடம் சொன்ன செய்திகளை சீதையிடம் தெரிவித்ததாகக் காளிதாசன் பாடுகிறான். இது குறித்து உரையாசிரியர்கள் ‘அப்படி எந்தச் செய்தியையும் ராமன் சொல்லியனுப்பியதாக வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ஒருவேளை நலம் விசாரிக்கச் சொல்லியிருக்கலாம். அதை அனுமன் சீதையிடம் சொல்லியிருக்கலாம். ஆயினும், இவ்வாறு அர்த்தப்படுத்திக்கொண்டாலும் இந்தப் பொருள் அவ்வளவு சிறந்ததல்ல’ என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தக் குறையைக் களைய நினைத்தானோ என்னவோ தெரியாது. கம்பன், தன்னுடைய ராமாயணத்தில், (கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்) அனுமனை மட்டும் தனியிடத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவனிடம் சீதையின் அங்க அடையாளங்களை விவரித்துச் சொல்லி, அவளிடம் ‘தான் ராம தூதனே’ என்று நிரூபிப்பதற்கான அடையாள நிகழ்ச்சிகளை—அந்தரங்க நிகழ்வுகள் உட்பட—விவரித்து, கணையாழியை அனுமனிடம் அளித்த செய்திகளைக் கம்பன் 41 பாடல்களால் பாடியிருக்கிறான் என்பதையும் கவனித்தால், காளிதாசனுடைய கருத்தை நேர்செய்யவே இப்படிச் செய்தானோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

யுத்த காண்டத்தில், கும்பகர்ணன் வதையின்போது, ராமன் அவனிடம் சொல்வதாகக் காளிதாசன் பாடுகிறான்: ‘உன்னை உன் அண்ணன் அரைகுறைத் தூக்கத்தில் எழுப்பிவிட்டான். ஆனால் அவன் அப்படி உன்னை எழுப்பியதால், உன் தூக்கம் கெட்டதைத் தவிர வேறு என்ன பயன் ஏற்பட்டது? ஆகவே, இனிமேல் நீ நிரந்தரமாக உறங்கலாம். உன்னை எழுப்புவதற்கு யாரும் வரமாட்டார்கள்’ என்று கேலி பேசுவதாக வரும் பாடல் வால்மீகியில் இல்லை. ஆனால், நான் என்ன கம்பன் பாடலைச் சொல்லப் போகிறேன் என்பது அவையில் முக்கால்வாசிப் பேருக்கு ஏற்கெனவே இதயத்தில் உதித்துவிட்டது. ஆமாம்.

‘உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது இன்று காண்; எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்’!

காற்றாடியைப் போல (கறங்கு=காற்றாடி) வில்லைக் கையில் பிடித்தபடி காலதூதர்களான ராம லக்ஷ்மணர்கள் உனக்காக வந்திருக்கிறார்கள். எனவே, இப்போது விழித்துக்கொண்டு, பிறகு அவர்கள் கையில் போய் விழுந்து இனிமேல் மீளவே முடியாமல் கிடந்து உறங்குவாய் என்று கும்பகருணனை எழுப்புபவர்கள் சொல்கின்ற வாக்கியம், காலனாகவே வந்த ராமன் வாயால் வெளிப்பட்டிருக்கிறதல்லவா!

One Reply to “கம்பனும் காளிதாசனும்”

 1. இந்தியா ஒரே நாடு
  இந்தியா ஒரே நாடு

  இந்தியா
  ஒரே நாடு அல்ல
  பல நாடுகளின்
  கூட்டமைப்பு ..என்று

  ஒரு சில பிரிவினைவாதிகளின்
  குரல்
  யாரும்
  கண்டு கொள்ளாத போதும்
  ஒலித்துக் கொண்டே இருக்கிறது !

  ஒற்றை நாய்
  குரைக்கும் போதே
  விரட்டா விட்டால்
  ஊரு நாய்களெல்லாம்
  ஒன்று சேர்ந்து
  ஊளையிடும்
  அபாயம் நேரலாம் !

  எனவே
  தெளிவு படுத்தும் கடமை
  தேச பக்தனின்
  தோள்களில் !

  மலையையும்
  கடலையும்
  காரணமாக்கிக்
  காலம் படைத்த
  தீப கற்பம் இது !

  இந்த கற்பத்தில்தான்
  உலகின் ஆன்மீகக் குழந்தை
  அவதரித்தது !

  ஆதியில்
  இதனை
  நாவலந் தீவென்றே
  நானிலம் அறியும் !

  துணைக் கண்டம்
  என்று
  புவியியலார்
  புகழ்வதுண்டு !

  தென்னாடுடைய சிவன்
  இமயத்திலும்
  இமவான் மகள்
  குமரியிலும்
  இடம் மாறி இருந்து
  எல்லை வகுத்தனர் !

  கயிலைப் பெருமான்
  கல்யாணம் செய்தது
  மதுரைப் பாண்டியன்
  மகளை அல்லவா?

  இதிகாசங்கள் இரண்டும்
  பேசாத
  இடங்களே இல்லை
  இந்தியாவில் !

  வடபுலத்து இராமன்
  தென்கோடியில்
  கட்டிய கோயில்
  இராமேஸ்வரம் !

  காந்தாரச் சகுனி முதல்
  கடலோரப் பாண்டியன் வரை
  பங்கெடுக்காதவர் யார்?
  பாரதப் போரில் !

  கங்கை நீரையும்
  கயிலைக் கல்லையும்
  கொண்டு வந்து தான்
  பத்தினிக் கோட்டத்தைக்
  கட்டி முடித்தான்
  செங்குட்டுவன் !

  ஆதி முதல்
  தீர்த்த யாத்திரை
  காசி – இராமேஸ்வரம்
  என்பதாய்த் தானே
  காணப்படுகிறது !

  கயிலையில் புறப்பட்ட
  அகத்தியருக்குத் தெரியும்
  பாரத எல்லை
  நெல்லைக்கு அப்பால்
  இல்லை என்று !

  அதனால்தான் பொதிகையைத் தாண்டி
  போகவில்லை அவர் !

  வடக்கே அவதரித்த
  பரசுராமர்
  அந்திமத்தில்
  அமைதி கொண்டது
  தென்னகத்துக் கேரளம் !

  பாரதம் முழுவதையும்
  பாதத்தால் அளந்த
  கேரளத்துச் சங்கரர்
  பீடம் ஏறியது
  காஞ்சி நகர் !

  கயிலை முனிவரே
  மூலனாய் மாறி
  மூவாயிரம் பாடலில்
  திருமந்திரத்தைத்
  திரட்டிக் கொடுத்தார் !

  வடகயிலை
  சுந்தரர்தான்
  தென்னகத்தில்
  தமிழ் வளர்த்தார் !

  காரைக்கால் அம்மையும்
  கரசேவை அப்பரும்
  வடகயிலை சென்று
  தென்தமிழில் பாடினர் !

  கேரளத்துச் சேரலன்
  கவிதைத் தொகுதியை
  வெளியிட்ட இடம்
  வடகயிலை என்பது
  வருணன் தரும் செய்தி !

  மெய்கண்டாருக்குச்
  சித்தாந்தம் சொன்னவர்
  வடகயிலை பரஞ்சோதி
  என்பதே வரலாறு !

  காசி மடத்தைக்
  கட்டி ஆண்டவர்
  கன்னித் தமிழ் நாட்டுக்
  குமரகுருபரர் !

  ஆண்டாள் மாலை
  அழகு செய்யாமல்
  திருப்பதியில்
  திருவிழா ஏது ?

  விவேகானந்தரின்
  வேதாந்த அறிவு
  அமெரிக்காவை
  ஆட்டிப் படைத்தது
  சேதுபதியின்
  செலவில்தானே !

  வடக்கே பிறந்து
  தெற்கே புகுந்து
  புதுவை மண்ணை
  புனிமாக்கினார்
  அரவிந்தர் !

  ஆந்திராவின்
  அற்புதமானார்
  தமிழகம் தந்த
  இராகவேந்தர் !

  ஒருங்குடன் ஆண்ட
  பரதன் பெயரால்
  பாரதம் என்பதே
  பழம் பெயராகும் !

  இந்திய எல்லையை
  எடுத்துக் காட்டும்
  சங்க இலக்கியச்
  சான்றுகள் பற்பல !

  இட்டப் பொட்டும்
  கட்டிய புடவையும்
  இந்தியப் பெண் என
  எடுத்துக் காட்டும் !

  இந்தியா முழுவதும்
  எல்லா வீட்டிலும்
  யாராவது ஒருவருக்கு
  வடமொழிப் பெயராய் !

  பாரத தேசம்
  பழம் பெரும் தேசமாம்
  பாரதி புலவனும்
  பாடி மகிழ்ந்தான் !

  வடக்கே இருக்கும்
  திரிவேணி சங்கமம்
  தெற்கே வந்தால்
  முக்கூடலாகும் !

  எடுத்துக் காட்டுகளை
  அடுக்கத் தொடங்கினால்
  முடிவாய்ச் சொல்ல
  முந்நூறு நாட்கள்
  முழுமையாய்த் தேவை !

  பெரிய தேசத்தில்
  வேறுபாடுகள்
  இருப்பதே இயற்கை !
  வேறுபாடுகளைக்
  கூறுபடுத்தி
  பிரிவினைப் பேசும்
  பித்தர்கள் எத்தர்களாய்!
  விரல்களின் அளவு
  வெவ்வேறாயினும்
  உள்ளங்கை
  ஒன்றுதான் என்பதை
  உணர மறுக்கும்
  குருடர்களுக்கு
  விளக்கினாலும் விளங்காது !

  சோழநாடு
  சேரநாடு
  பாண்டியநாடு
  கொங்குநாடு
  நடுநாடு
  ஆப்ப நாடு
  என்றெல்லாம்
  பிரிந்து கிடந்த
  தமிழ்நாடு
  ஒரே மாநிலமாய்
  உருப்பெற்றதற்குத்
  தமிழ் மொழியே
  அடிப்படை !

  பல மாநிலங்களையும்
  சேர்த்து
  பாரத நாடென
  பறை சாற்றுவதற்கு
  ஆன்மீகப் பண்பாடே
  அடிப்படை !

  அழகான மாலையில்
  பல பூக்கள் இருப்பதால்
  அது
  மாலையே இல்லை
  தனித்தனிப் பூக்கள் தான்
  என்று
  அடம்பிடிப்போரிடம்
  அகப்பட்டு விடாதீர் !

  பிரிவினை நோய்
  பிடித்துக் கொள்ளும் !!!

  நாம் இந்தியர் என்பதில்
  பெருமிதம் கொள்வோம்!
  இணைந்தே இன்னும் பல
  சாதனைகள் புரிவோம்!

  வாழ்க பாரதம்!
  வந்தே மாதரம்!‍‍
  ஜெய்ஹிந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *