பெரிய திருவடி

‘குரங்கின் மேல் கொண்டு நின்றான்’

அனுமனைச் சிறிய திருவடி என்று அழைப்பது தமிழ் மரபு என்று பார்த்தோம். அப்படியானால் பெரிய திருவடி என்றொருவர் இருக்க வேண்டும். ஆமாம். வைணவ சம்பிரதாயங்களை அறிந்தவர்கள் கருடனுக்கே பெரிய திருவடி என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றறிவார்கள். ‘இவனது வலிமை கண்டு திருமால் கேட்டுக்கொள்ள, வாகனமும் கொடியும் ஆனவன்’ என்று அபிதான சிந்தாமணி கருடனைப் பற்றிச் சொல்கிறது. வாகனத்தின் மீது ஏறி அமர்கின்ற போது அதன் மீது திருவடி படுகின்ற தன்மையால் திருவடி என்னும் சிறப்புப் பெயர் விளங்குகிறது. ‘தாவடி ஓட்டும் மயிலிலும்’ என்று அருணகிரி நாதர் முருகன் திருவடி பட்ட இடங்களில் முதன்மை இடமாக வாகனத்தைக் குறிப்பிடுகிறார்.

எனவே, வாகனமாக இருக்கும் தன்மையால் கருடன் பெரிய திருவடியாகிறான். அனுமனும் இராமனுக்கு வாகனமாக விளங்கியவன்தான். இராவணனுடன் முதல் போர் நடக்கப் போகிறது. ‘ஆயிரம் பரி பூண்டது; அதிர் குரல் மாயிரும் கடல் போன்றது; வானவர் தேயம் எங்கும் திரிந்தது’ ஆகிய தேரில் ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டு இராமனின் எதிர் வந்து நிற்கிறான் இராவணன். இராமனோ, தரையின் மேல் நிற்கிறான். அனுமனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நூறுபத்துடை நொறில் பரித்தேரின்மேல் நுன்முன்
மாறில் பேரரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறுகாட்டும் ஓர் வெறுமையை; மெல்லிய எனினும்
ஏறுநீ ஐய என்னுடைத் தோளின்மேல் என்றான்.

ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் தேரின்மேல் உன் முன்னால் அரக்கன் வந்து நிற்கவும், நிலத்தின் மேல் நின்றவண்ணம் நீ போர்புரிவதும் குறைவுடையதாகும். வெறுமை காட்டி நிற்பதற்கு நீ என்ன தனியனா? நாங்களில்லையா உனக்கு? என் தோள்கள் உன்னைத் தாங்கும் அளவுக்கு வலிமையோ, தகுதியோ உடையன அல்லவை என்றாலும், மெல்லியவையே என்றாலும், என் தோளில் ஏறுவாய் ஐயனே!

தேர் மீது நின்று போர்புரியும் எதிரியோடு தரைமீது நின்று போர் புரிவது ஏதோ கெளரவக் குறைவான செய்தி போலவும், அதை நிறை செய்வதற்காக அனுமன் தன் தோளில் ஏற்றிக்கொண்டது போலவும் இந் நிகழ்ச்சியை விவரிக்கிறார்கள். அது அப்படி இல்லை. தேரில் நிற்பவன் மீது தரையில் நிற்பவன் அம்பெய்யும் போது அம்பின் விசை, அது செலுத்தப்படும் பாதை, செலுத்துபவன் தரை மேல் நிற்பதால், தேரில் நிற்பவன் மீது தைப்பதற்காக மேல்நோக்கிச் செலுத்தப்படும் அம்பானது, புவி ஈர்ப்பு விசையின் காரணத்தால் எந்த விசையோடு செலுத்தப்படுகிறதோ, அந்த விசையினின்றும் குறைதல், இலக்கு பிறழ்தல் போன்ற பல குறைகள் ஏற்படும். இன்றைய தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஏவுகணைகள் யாவும் இந்த விதிக்குக் கட்டுப்பட்டவையே. அவை செலுத்தப்படும் பாதையை trajectory என்று குறிப்பார்கள். ஒரு தோட்டா இலக்கு நோக்கிச் செலுத்தப்படும் போது நேர்ப்பாதையில் செல்வதில்லை. It follows a parabola. துப்பாக்கி முதலியவற்றை இயக்குபவனுக்கும் இலக்குக்கும் உள்ள இடைவெளியைப் பொருத்து இந்தப் பாதையின் வளைவுயரம் வேறுபடும். இவற்றை உரிய இடங்களில் விரிவாகப் பார்க்கலாம். வில்லைப் பயன்படுத்த உயரம் தேவை என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்வோம். அதுவும் இது போர் வில். வேட்டை வில் அன்று. இராமனிடத்திலிருந்த வில் மலைபோன்ற வில் என்று அரக்கராலேயே பேசப்பட்ட வில். அதற்கு இந்த elevation மிக மிக அவசியம்.

மலையைப் பெயர்த்த தோள்கள், இலங்கிணியை ஒரே குத்தில் வீழ்த்திய தோள்கள், சுந்தர காண்டம் முழுமையிலும் வித விதமான போர் புரிந்து வலிமையை வெளிக்காட்டிய தோள்கைளை ‘மெல்லிய எனினும்’ என்று சொல்லிக் கொள்கிறான் அனுமன். இராமனுக்கு எதிரில் தன் வலிமையைப் பற்றி ஒரு நாளும் ஒரு சமயத்திலும், உண்மையே ஆனாலும் உயர்த்திச் சொல்லக் கூச்சமும் தயக்கமும் கொண்டவன் மாருதி. விபீடணன் அடைக்கலம் கேட்டு வரும் கட்டத்திலும், மருந்து மலையைப் பெயர்த்து வரும் போதும் இன்னும் வேறு சில கட்டங்களிலும், இராமன் எதிரில் தன் வலிமை பேசப்படுவதையும், இராமனால் பேசப்படுவதையும் கேட்டுக் கூச்சப்படும் மாருதியைப் பின்னொரு தலைப்பில் காண்போம். இப்போது திருவடிக்குத் திரும்புவோம். அனுமனின் தோள் மீது இராமன் அமர்ந்ததும் என்ன ஆயிற்று என்று கம்பன் பேசுகிறான்:

மாணியாய் உலகளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணியாகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்; மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான்.

வாமனனாய் வந்து உலகத்தை எல்லாம் அளந்த நாளில் – இதே இராமன் – எடுத்த பேருருவத்தை அறிந்தவனான மாருதி வியப்புற்றான். திருமாலைச் சுமப்பதைத் தனக்கே தனக்கான தனி உரிமையாகக் கொண்டிருந்த கருடன் நாணம் அடைந்தான். ஆதிசேடனோ தலை நடுக்கம் கொண்டான்.

இராமனை ஒருவிதமான இரட்டைக் குவியத்தில் (double focus) வைத்துக் காட்டுகிறான் கம்பன். எல்லா வகையிலும் தன்னை மனிதனாக மட்டுமே உணர்ந்த இராமன் ஒரு குவி மையத்திலும்; அவனை மனிதனாகவும் மனித ஆற்றலை மீறியவனாகவும் உணரும் மக்கள் அவனைப் பார்த்தவிதமும்; தெய்வத்தன்மை வாய்ந்தவனாக அறிந்திருந்து அதை வெளிக்காட்ட இயலாத நிலையில் நின்ற வெகு சிலர் அவனைப் பார்த்த விதம் இன்னொரு குவி மையத்திலுமாக ஒரு சிக்கலான சித்திரத்தை வெகு திறமையாகப் பகுத்துப் பகுத்துக் காட்டுகிறான். இராமனின் தெய்வத்தன்மையைக் கம்பன் தொட்டுக்காட்டும் சில இடங்களில் இது ஒன்று.

அவதாரந்தோறும் அவதாரந்தோறும் அவனை உணர்ந்தவன் அனுமன் என்றொரு குறிப்பு கிடைக்கிறது இந்தப் பாடலில். திரு அவதாரப் படலத்தில் ‘நான் மண்ணில் மனிதனாகத் தோன்றப் போகிறேன்; நீங்கள் வானரர்களாகவும் கரடிகளாகவும் தோன்றுங்கள்’ என்று சொல்லித் திருமால் அகன்ற நேரத்தில், யார் யார் என்னென்ன வடிவத்தில் பிறப்பது என்று பேசிக்கொள்ளும் போது, ‘வாயு மற்று எனது கூறு மாருதி எனலும்,’ மாருதி (மருத் என்று அறியப்படும் வாயுவின் குமாரன் என்ற பொருளுள்ள பெயர்) என்னுடைய அம்சம் என்று சொன்னான். ‘மற்றோர் காயும் மற்கடங்கள் ஆகி காசினி அதனின் மீது போயிடத் துணிந்தோம் என்றார்.’ மற்றவர்கள், ‘நாங்களெல்லாம் குரங்குளாகப் பிறப்போம்’ என்றார்கள்.

இந்த இடத்தில் கவி ஒரு முக்கியமான குறிப்பைச் சொல்கிறான். ‘புராரி மற்றியானும் காற்றின் சேய் எனப் புகன்றான் மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.’ மாருதி வாயுவினுடைய அம்சம் மட்டுமன்று; என்னுடைய அம்சமும்தான்’ என்று புரங்களை அழித்த புராரியான சிவபெருமான் சொன்னான். மற்ற திசைகளில் உள்ள தேவர்கள் தனித்தனியே பிறந்ததையெல்லாம் கூற ஒரு எல்லை உண்டோ? ஆனால் இந்த இடத்தில் ‘புயல் வண்ணன் ஆதி வானோர் மேயினர் என்னில் இந்த மேதினிக்கு அவதி உண்டோ’ என்றும் ஒரு பாட பேதம் இருக்கிறது. ‘திருமால் முதலான தேவர்கள் பிறப்பதற்காக வந்தனர் என்றால், அவர்களைக் கொள்ளும் வண்ணம் இந்த உலகத்துக்கு அளவு (எல்லை) உண்டோ’ என்று பொருள்படுவது இந்தப் பாட பேதம். எது கம்பன் வாக்கு என்று அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், அனுமன் சிவாம்சம் என்பது பலராலும் பேசப்படும் ஒன்று. அதற்கு அணுக்கச் சான்றாகத்தான் மேற்படி திரிவிக்கிரம அவதாரத்தை அருகிருந்து பார்த்த மாருதியைப் பற்றிய குறிப்பு சொல்கிறது.

இப்போது இயல்பாகவே ஓர் ஐயம் ஏற்படும். கருடன் பெரிய திருவடி. அனுமன் சிறிய திருவடி. அப்படியானால் ஆற்றலிலும் அளவிலும் கருடனுக்கு அனுமன் சிறியவனா? இல்லை. கருடனுக்கு எந்தவிதத்திலும் குறைவுபட்டவனாகச் சொல்லும் அடைமொழியன்று அது. முதல் வாகனம் கருடன். இரண்டாம் வாகனம் அனுமன். காலத்தால் பிற்பட்டு வந்த வாகனம். அதனால் இவர் சின்னவர். அவ்வளவுதான். திருவடி சுமந்ததிலோ, போர்க்காலத்தில் தகுந்த நேரத்தில் தகுந்தபடி எதிரியைத் தாக்குவதற்கு ஏதுவான எல்லா விதத்திலும் அதி விரைவாகவும், பொருத்தமாகவும், மிகுந்த உறுதியோடும் அனுமன் நின்ற விதத்தை மற்றவர்கள் எல்லாம் பாராட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். இராவணன் எண்ணி எண்ணி வியப்பதைக் கேளுங்கள்.

முதல் போர் இப்போதுதான் முடிந்திருக்கிறது. ‘இன்றுபோய் போருக்கு நாளைவா’ என்று இராமன் திரும்ப அனுப்பியிருக்கிறான். ஆயிரம் குதிரைகள் இழுத்த தேரில் ஆரவரமாய் போர்க்களத்துக்குள் நுழைந்தவன் ‘வீரமும் களத்தே போட்டு வெறுங்கையே மீண்டுப் புக்கான்’ என்ற நிலையில் துணைக்கு ஒருவர் இல்லாமல், தன்னுடைய வீரத்தைக் கூட அங்கேயே போட்டுவிட்டுத் திரும்ப வந்திருக்கிறான். ‘நடந்துபோய் நகரம் புக்கான்’ என்று அந்த நிலையைச் சொல்கிறான் கம்பன். புட்பக விமானத்தில் பறந்தவன் நடந்து போகிறான் என்றால் அதென்ன சாதாரணமான செய்தியா? தனியாக அமர்ந்து அன்றைய போரை மனத்திரையில் ஒரு முறை ஓட்டிப் பார்க்கிறான்.

ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமைப் பாலது அன்றே
ஆற்றல்சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல்!
காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான்.

இது வெறும் குரங்கு. ஒண்ணும் பெரிய சமாச்சாரம் இல்லை என்று யாராவது சொல்ல நினைத்தால் அவனுக்குப் புத்தியில்லை. என்னையா, கருடனுக்குக் கூட இந்த மாதிரியான போர்த் தந்திரத்தோடு கூடிய இயக்கங்கள் (movements) வருமா? அந்த மனுசன், ரெண்டு கை மனுசன், என்ன காற்று மேலதான் ஏறிட்டு வரானா, நெருப்பு மேல வரானா இல்லாட்டி எமனையே வாகனமாகக் கொண்டு வரானா! இதென்ன வெறும் குரங்கா!

அப்படி இராவணனாலேயே புகழப்பட்டவன் மாருதி என்கின்ற சிறிய திருவடி. இராம பக்தர்களின் வரிசையில் முதலில் நிற்பவன்.

2 Replies to “பெரிய திருவடி”

  1. அருமையான கட்டுரை அய்யா… நல்ல தமிழில் ஹனுமனின் புகழை நல்லவிதமாய் எடுத்துக்கூறியுள்ளீர்கள்… தொடர்ந்து எழுதுங்கள்.

  2. இரு திருவடிகளும் நம்மை காக்கட்டும். அனுமனின் தொண்டும், கருடாழ்வாரின் கருணையும் நம் சமுதாயத்தின் உயர்வுக்கு மேலும் மேலும் அருள்புரியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *