(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்
மொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்
விளக்கவுரை: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி
(3)
யஸ்யைவ ஸ்பு²ரணம்ʼ ஸதா³த்மகமஸத்கல்பார்த²கம்ʼ பா⁴ஸதே
ஸாக்ஷாத்தத்த்வமஸீதி வேத³வசஸா யோ போ³த⁴யத்யாஶ்ரிதான் ।
யத்ஸாக்ஷாத்கரணாத்³ப⁴வேன்ன புனராவ்ருʼத்திர் ப⁴வாம்போ⁴நிதௌ⁴
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 3॥
எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட் களிலும்
இயைந்தே விளங்கலுறுமோ
எந்தமெய்ப் பொருள்சரண் அடைந்தவர்க் கதுநீயென்
இனியஉப தேசம் அருள்மோ
எந்தமெய்ப் பொருள்தனைக் கண்டவர்க்குப் பிறவி
இனியில்லை யாகு மோவச்
சிந்தையுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !!
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அட்டகத்தின் இம் மூன்றாம்பாடல், ’தத்வமசி’ மகவாக்கியத்தின் மூன்றாவதாகிய ‘அசி’ பதத்தை விளக்குகின்றதென்பர்.
சைவசித்தாந்தம் பொருள்களை உள்பொருள், பொய்ப்பொருள் , இல்பொருள் என மூவகையாகக் கூறும். உள்பொருள் என்பது என்றும் எவ்வகையாலும் மாறத பொருள். அதனைச் ‘சத்’தென்றும் ‘மெய்ப்பொருள்’ என்றும் கூறுவர். அது தோற்றக் கேடுகளில்லாத நித்தியப்பொருள் அதுவே ‘பிரமம்’ என்று வேதாந்திகளும் சிவம் என்று சித்தாந்திகளும் கூறுவர். அவ்வுள் பொருளை ‘அகண்டாகார நித்திய வியாபக சச்சிதானந்தப் பிழம்பு’ என்று சைவசாத்திரம் கூறும்.
சைவ சித்தாந்தம் பதியாகிய சிவம் பசுவாகிய ஆன்மாக்கள் உலகமாகிய பாசம் எனும் முப்பொருள்களையும் உள்பொருள்கள் என்றே, அதாவது, சத்துப் பொருள் என்றே கூறும்.
இவற்றுள் ஜீவான்மாக்களாகிய உயிர்கள் அவை செய்த வினைக்கேற்ப இத் தாவரசங்கமத்தில் எல்லாப் பிறப்பிலும் பிறந்திறந்து உழலும்; தேகவேறுபாடு அடைவதாலும் சித்தாகிய சேதனமாதலாலும் ‘சதசத்து’ எனப்படும். பிரபஞ்சம் காரண காரியமாகிய தோற்றக் கேடுகள் உடைமையாலும் அசேதனமாதலாலும் சேதனனால் காரியப்படுவதாலும் அசத்து என்று கூறப்படும். எனவே, தோற்றக் கேடுகள், காரண காரிய மாற்றங்களை யுடைய நித்தியப் பொருளே சித்தாந்தப்படி ‘பொய்ப்பொருள்கள்” முயற்கொம்பு, ஆகாயத் தாமரை போன்றவையே இல்பொருள்கள் .இல்பொருள்கள் என்றும் இல்லாத பொருள்களே. எனவே, காணப்படும் இப்பிரபஞ்சம் தர்ப்பண நகர் போன்றோ, சொப்பன நகர் போன்றோ மித்தையன்று; உள்பொருளே.
இப்பாடலில் நித்திய சத்தாகிய மெய்ப்பொருளாம் சிவப்பிரமம் ஏனைய சதசத்து, அசத்து ஆகிய பொருள்களுக்கு இருப்பும் இயக்கமும் அளிக்கும் அத்துவிதத்தைப் பேசுகின்றது.
மெய்ப்பொருள் என்றது, வேதாந்தத்தின்படி பிரமம். சைவம் இம்மெய்ப்பொருளைச் சிவம் என்று கூறுகின்ற்து. சிவம் ஔபச்சிலேடிக வியாபகம்;(உள்ளும் புறமுமாகிய வியாபகம். அதனில் அடங்கிய வியாப்பியம் சதசத்தாகிய ஜீவான்மாக்கள்; அதனில் வியாத்தி பாசமாகிய அசத்து.
பாடலில்’ ‘எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட்களினும் இயைந்தே விளங்க லுறுமோ’ என்னுந் தொடர் வியாபக மெய்ப்பொருளான சிவம், தன்னுள் அடங்கியிருக்கும் வியாப்பியப் பொருள்களான சேதன அசேதனங்களுக்கு இருப்பினையும், முறையே அறிவு, இயக்கங்களையும் தந்துதவுவதை உணர்த்துகின்றது.
ஒளி- இதன் பொருள் பிரகாசம் என்பது. சேதனமாகிய உயிர்களில் இம்மெய்ப்பொருள் கலந்து,ஆன்மப் பிரகாசம் என்னும் அறிவை விளக்குகின்றது. இப்பிரகாசமேஆன்ம அறிவு அல்லது தற்போதம் எனப்படுகிறது. ஒளி- பிரகாசம் – விளங்கித் தோன்றுதல்.
அசத்துப் பொருள்களுடன் சிவமாகிய மெய்ப்பொருள் இயைந்து அவற்றிற்கு அவற்றின் இயல்பையும் இயக்கத்தையும் தருவதை மணிவாசகர்,
திருவண்டப்பகுதியில்,
“ நாள்தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியிற் றன்மை வைத்தோன் திண்டிறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரி லின்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணின் திண்மை வைத்தோன் என்றென்
றெனைப்பல கோடி யெனைப்பல பிறவும்
அனத்தனைத் தவ்வயின் அடைத்தோன்”
கூறுதல் காண்க.
சிலர் இப்பாடலின் முதல் அடி ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியத்தைக் கூறுகின்றதென்பர் ( In this third verse , Sankaacharya brings out mahavakyartha, of the Upanishad; the mahavakya being Tat thvam Asi.The word Tat indicates ParamAtma; the word Thvam indicates jivatma. And the word asi indicates aikiyam. And therefore maha vakiya is jivatma Pramathma aikiyam) ஐக்கியம் அத்துவிதமாகாது. ஐக்கியம் நீரும் நீரும் சேர்வது போலவும், பாலும் நீரும் கலப்பது போலவும் ஒத்தபொருள்கள் இரண்டு கலப்பதாகும்.
ஆற்று நீரும் கடல் நீரும் தம்மில் சேர்ந்தாற் போலவும், கடாகாயமும் மகாகாயமும் சேர்ந்தாற்போலவும் ஐக்கியமெனின், அது ஐக்கியமன்று; சேர்ந்தவை ஒருபொருளேயாகலின் ஐக்கியமன்று. ஒன்றாதலை ‘எகம்’ எனப்படுமே யன்றி அத்துவித மெனப்படாது. ஜீவான்மாவும் பரமான்மாவும் நீரும் நீரும் கலந்தது போன்ற ஐக்கியம் எனில் முத்தியில் ஆன்மா என்ற பொருளே இல்லை என்றாகும். அப்பொழுது முத்தியடைந்தது எது?
எனவே, இப்பாடலின் ““எந்தமெய்ப் பொருளினொளி எப்பொருட்களிலும் இயைந்தே விளங்கலுறுமோ” என்ற முதலடியில் உள்ள ‘இயைந்தே விளங்கலுறுமோ” என்ற பதம் ஆன்மவொளியும் (ஆன்ம அறிவு) கண்ணொளியும் ஆகிய இருவேறு ஒளிகளும் தம்முள் அத்துவிதமாக நின்று அறிவதே பொருள் என விளக்கியது. காணும் ஆற்றலுடைய கண்ணுக்கு, ஆன்ம அறிவும் உடன் நின்று பொருள்களை அறிவித்தலைப் போல ஜீவான்மாவுக்கு அறிவிச்சை செயல்கள் பரமான்மா பிரிவின்றி உடன் நின்றால்தன் இகழும். எனவே,இவ்விருவகை ஆன்மாக்களும் உடன் நிற்றலையே ‘இயைந்து’ என்ற பதம் உணர்த்திற்று. உடனிற்றல் அத்துவிதம்; உடனிற்றல் ஐக்கியமன்று. ஐக்கியம் அத்துவிதம் ஆகாது.
எந்தமெய்ப் பொருள்சரண் அடைந்தவர்க் கதுநீயென்
இனியஉப தேசம் அருள்மோ
இந்த வரி, பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சிவமே குருவாக எழுந்தருளி வந்து, ‘அது நீ” எனும் உபதேசத்தை அருளி உய்விப்பதைக் கூறுகின்றது குருவே சிவம்; சிவமே குரு. சிவமே தக்ஷிணாமூர்த்தியாகிய ஆதி குரு. குருபரம்பரை அவர் வழியே மானிடத்தை உய்விக்க வந்தருளுகின்றது. கேவலாத்துவித, சுத்தாத்துவித மரபுக ளெல்லாம் அவர் வழி வந்தனவே.
“சதாசிவ சமாரம்பாம் சங்கராச்சாரிய மத்யமாம்
அஸ்மத் ஆசாரிய பரியந்தம் வந்தே குரு பரம்பராம்”
“சதாசிவ சமாரம்பாம் மெய்கண்டாச்சாரிய மத்யமாம்
அஸ்மத் ஆசாரிய பரியந்தம் வந்தே குரு பரம்பராம்”
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அட்டகத்தின் மூன்றாம்பாடல் தென்முகக் கடவுள் உபதேசித்த முதல் மகாவாக்கியம் இன்னதென்று கூறி அதன் சிறப்பையும் இயம்புகின்றது. “அது நீ” என்றதே அந்த மகாவாக்கியம். அம் மகாவாக்கியம் ‘சர்வ துக்க நிவிர்த்தி பரமானந்த ப்ராப்தி” அளிப்பதால் ‘இனிய உபதேசம் ஆயிற்று. ‘அது நீ’ என்பது ‘தத் துவம் அசி’ என்னும் வடமொழி மகாவாக்கியத்தின் தமிழாக்கம்.
வேதத்தில் எண்ணற்ற மகாவாக்கியங்கள் உண்டு. அவற்றில் நான்கே மிகச் சிறப்புடையனவாக எடுத்தாளப்படுகின்றன. அவையாவன:1. தத் துவம் அசி. (அது நீ ஆகின்றாய்) 2.பிரஞ்ஞானம் ப்ரஹ்ம (அறிவே பிரம்மம்) 3. அஹம் ப்ரம்மாஸ்மி.(நான் பிரம்மம்) 4. அயமாத்மா ப்ரஹ்ம (இந்த ஆத்மாவே பிரம்மம்) என்பனவாம். இவை அனைத்தும் சீவபிரம்ம ஐக்கியத்தை உணர்த்துகின்றன என்பர்.
முதல் வாக்கியம் குரு உபதேசிப்பது இரண்டாவது வாக்கியம் பிரஹ்ம இலக்கணம் உணர்த்துவது. மூன்றாவது வாக்கியம் மாணாக்கன் சிந்தித்துப் பயிலுவது. நான்காம் வாக்கியம் இந்த ஆத்மாவே பிரஹ்மம் என அநுபவித்துத் தெளிவதை உணர்த்துவது.
‘தத் துவம் அசி” மகாவாக்கியத்திற்கு நான்கு விதமான பொருள் கூறுவர். அவையாவன:
1. அதுபோல நீ ஆகிறாய்
2. அதன் தருமமாக (பண்பு குணம், இயல்பு)நீ ஆகிறாய்.
3. அது நீ ஆனாய்
4. அது நீ ஆகின்றாய்
முதலிரண்டும் முத்தியில் சகுணம் உணர்த்துவன ஆகையால் வேதாந்தி ஏற்றுக் கொள்வதில்லை. மூன்றாவது பொருள், இறந்த காலத்தைச் சுட்டுகின்றது. முன்பு பிரமமாக இருந்த நீ அந்தப் பிரமமானாய் என்ற பொருளைத் தருகிறது. முன்பு பிரமமாக இருந்த ஜீவனுக்குச் செய்யும் இந்த உபதேசம் பயனற்றது. ஆதலால் இதையும் வேதாந்தி ஏற்றுக் கொள்வதில்லை. நான்காவதாகிய ‘அது நீ ஆகின்றாய்’ என்ற பொருளே வேதாந்திக்கு உடன்பாடு. .
தான் பிரமமென்று இன்னும் உணராதவனை , ‘நீ பிரமமாவாய்’ என எதிர் காலத்தில் சொல்ல வேண்டியதற்கு மாறாக ‘அது நீ ஆகின்றாய்’ என நிகழ் காலத்தில் கூறுவது எவ்வாறு பொருந்தும் எனும் ஐயம் எழக்கூடும்.
எதிர்காலத்தில் உறுதியாகவும் தெளிவாகவும் நிகழவிருப்பதை, எதிர்கால வினைச்சொல்லால் சொல்லாமல் நிகழ்காலத்திலும் இறந்தகாலத்திலும் கூறுவதால் அந்த உறுதியும் தெளிவும் சிறப்பாகத் தோன்றும் என்பது தமிழ் இலக்கணம்.
“வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்
இயற்கையும் தெளிவும் கிளக்குங்காலை”
(தொல்.சொல். 247)
ஒருவன் தவறி ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்துவிட்டான். அவன் கஷ்டப்பட்டு நீந்திக் கரைக்கு அண்மையில் வந்துவிட்டான். இன்னும் கரை சேரவில்லை. அவனைக் கரையில் இருப்பவன் உற்சாகப்படுத்த, ‘கரைக்கு வந்தாயிற்று, வந்தாயிற்று வா வா’ என்று கூவுகிறான். அதுபோலப் பிரமமாகத் தக்கவனைப் பிரமமாகின்றாய் என நிகழ்காலத்தில் கூறுவது பொருந்தும் என வேதாந்திகள் கூறுவர். இம்மகாவாக்கியங்களுக்குச் சைவசித்தாந்தம் கூறும் விளக்கத்தை அடுத்த பதிவிற் காண்போம்.
சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம் மகாவாக்கியத்தினைப் “பெரும்பெயர்” என்று கூறுகின்றது. பெரும்பெயரெனினும் மகாவாக்கியமெனினும் ஒரு வார்த்தை யெனினும் ஒக்கும் என்பது சிவஞானமாபாடியம். திருப்பெருந்துறையில் குருவாய் வந்த பெருமான் மணிவாசகருக்கு அளித்த உபதேசம் இந்த மகா வாக்கியத்தின் பொருள் போலும். அது, “மன்ன! என்னையோர் வார்த்தையுட் படுத்துப் பற்றினாய்” என்ற அவர் (திருவாசகம் செத்திலாப்பத்து 2) கூற்றிலிருந்து ஊகிக்க இயலுகின்றது.
இச்சிறப்புப் பாயிரத்தில் உள்ள ‘பெரும்பெயர்க் கடவுள்’ எனும் பதத்திற்குப் பெரும்பெயரால், அதாவது, மகாவாக்கியத்தால் எடுத்தோதப்படும் முதற்கடவுள் என்று பொருள் உரைக்கப்படுகிறது. பிரபஞ்சம் அனைத்தையும் தன்னுள் அடக்கித் தான் வியாபகமாக நிற்றலின் முதற்கடவுள் பெரும்பெயர்க்கடவுள் என்று அதன் பொருளும் விளங்கியது. பெரும்பொருள் என்பது பற்றியே வேதமும் அம்முதற் பொருளைப் பிரமம் எனவும் கூறிற்று.
இந்த மகாவாக்கியம் ‘அது’அல்லது ‘தத்’ என உணர்த்தியது சிவப்பிரமமாகிய ஞேயம் என்பது சைவசித்தாந்திகள் கருத்து. ‘தத்’, அல்லது அது என்றது, ஞேயத்தைக் குறிக்கவில்லை, ஞானத்தையே சுட்டிற்று என்பது வேதாந்திகள் கொள்கை. குணியின்றி குணம் தனித்து நிற்கும் என்பது அவர்களது கொள்கை; குணம் குணியைவிட்டத் தனித்து இயலாது என்பது சைவசித்தாந்தக் கொள்கை.
வேதாந்திகள் கருத்து: பரப்பிரமப்பொருள் அவிச்சை வயப்பட்டு ஞாதா(அறிபவன்) எனவும், ஞேயம் (அறியப்படும் பொருள்) எனவும், பகுக்கப்பட்டு நிற்கும். சாத்திரங்களிற் கூறப்படும் நித்தியாநித்ய விவேகம்முதலான சாதன சதுட்டயங்களால் அவிச்சையாகிய அஞ்ஞானம் நீங்கியபொழுது, அறிபவன், அறியப்படும்பொருள், (ஞாதிரு, ஞேயம், ஞானம் என்னும் பாகுபாடு சிறிதும் இல்லாமல், பிரமப்பொருள், தனித்து ஞானமாக மட்டுமே நிற்குமென்பர்.
மகாவாக்கியத்தால் உணர்த்தப்படும் பொருள் ஞேயம் என்று சைவசித்தாந்தம் கொள்ள, அது ஞானம் என வேதாந்தம் கொள்ளும்.
அறிவு எனப்படுவது எது? அறிவாவது ஒன்றனை விடயிப்பதேயாம் (அநுபவிப்பது). . விடயித்தல் இன்றியும் அறிவு உண்டு என்பது புத்தர் கொள்கை. இதனை ஆலய விஞ்ஞானம் என்பர். இவ்வாறே வேதாந்திகளும் கூறுவர். உயிர் உடலோடு கலந்து இருக்கும்போது போதம் அல்லது அறிவு இருப்பது தெரிகின்றது. உடல் நீங்கியபோதும் அவ்வறிவு உண்டு என்பர்.உடலாகிய ஊடகம் ‘மீடியம்’ வழியே அறிவுடைமை தெரிகின்றது. அவ்வூடகம் இன்றியும் அறிவுண்டு என்பது அவர்கள் கொள்கை. அவ்வறிவு எவ்வியல்பிறு என்பதற்கு விடையில்லை. அத்தகைய அறிவுண்டு என்று கூறுவது ஆகாயத்தாமரை உண்டென்பதி ஒக்கும் என்பர் சைவசித்தாந்திகள்
(How can I appreciate the pure consciousness without association with any object (physical body)? I am able to appreciate consciousness with body. Once the body is removed, pure formless existence consciousness survives, the sastras say. How can I appreciate that pure existence –consciousness? The sastra says : you will never be able to appreciate the existence – consciousness because you yourselves are the pure existence- consciousness., it being the very subject itself , it is never available for objectification. And therefore, Tat, pure existence is you; the very subject itself – Swami Paramarthananda)
சைவசித்தாந்தம் உயிர்கள் பல; அவை உள்பொருளே எனக்கூறும். உடல் அழிந்தாலும் உயிர் அழிவதில்லை; உயிர் சேதனம்; அறிவுடைப் பொருள். சைவசித்தாந்தம் உயிர்களைப்பற்ரியும் உயிரறிவைப் பற்றியும் கூறுவன:”(உடல், உடலிலுள்ள கருவிகள் முதலியவற்றின் வேறாய்) ஆன்மா (உயிர்) உண்டு. அஃது அறிதற் குணமுடையது. ஆன்மாத் தோற்றக் கேடின்றி நித்தமாய், வியாபகமாய், நிற்கும். அறிவாவது ஒன்றனை விடயிப்பதே அன்றிப் பிறிதன்று. குணங்கள் அவ்வ்க் குணிகளின் வேறன்மையான், ஆன்மாவின் குணமாகிய ஞானமும் அவ்வாறே நித்தமும் வியாபகமும் ஆதல் பெறப்பட்டது. அதாவது, ஆன்மா நித்தியம்; அதனால் அதனைவிட்டுத் தனித்தியலாத ஞானமும் நித்தியம் என்பது பெறப்பட்டது.,
****
நான்கு மகாவாக்கியங்கள்
1. தத் துவம் அஸி – ‘அது நீ ஆகின்றனை’ என்று பொருள். குரு உபதேசிக்கக் கேட்டல்
2. ப்ரக்ஞானம் பிரமம் – ‘அது’ என்றது ‘பெரியஞானமே சொரூபமாகவுள்ள பிரமம்’ எனு பொருள். குரு உபதேசித்த வக்கியத்தை மனனம், செய்தல், சிந்தித்தல்.
3. அயம் ஆத்மா பிரமம் – ‘அயம்’ – இந்த; ஆத்மா- இந்த ஆத்ம ; பிரமம்- பெரியது. இந்த என்ற சுட்டு (உயிராகிய சீவான்மாவையும் பிரஹ்மம் என்றது, சீவான்மாவுக்கு அந்தரியாமியாகவுள்ள பரமான்மாவே) அந்தப் பிரமம் எனும் பொருளைப் பயக்கும் வாக்கியப் பொருளை நிதித்தியாசனம் செய்தல்; தெளிதல்.
4. அஹம் ப்ரமாஸ்மி – ‘நான் அந்தப் பிரமமாக இருக்கிறேன் என்பது பொருள் தெளிந்த பொருளுடன் சமாதி, நிட்டை கூடுதல்’
இந்த மகாவாக்கியங்கள் நான்கும் தனித்தனியே நிற்பன அல்ல; ஒன்றையொன்று தொடர்ந்து பொருள்கொள நிற்பன. அரும்பு, பூ, காய், கனி எனும் தொடர்ச்சி போல. இந்தநான்கு மகாவாக்கியங்களின் சுருக்கம், திரட்சி ‘சோஹம்; என்பதாம். சிவம்+அஹம்= சிவோஹம்- சோஹம். ‘சோஹம்’ – அது நான் என்னும் பொருளுடையது. ‘சிவோஹம்’ என்பதே சோஹம் எனப்பட்டது.
சைவசித்தாந்தம், ஆன்மா, சிவபரம்பொருளொடு அனாதியாகவே அத்துவித சம்பந்தம் உள்ளது என்ற கொள்கையுடையது. ‘தத் த்வம் அசி’ எனும் மகாவாக்கியமும் சிவோஹம் எனும் வாக்கியமும் சீவான்மாவாகிய நீ சுவானுபூதி ஞானத்தால் சிவபரம்பொருளின் தன்மையை அடைவாய் எனும் அருத்தத்தைத் தருவனவாகும்.
சிவோஹம் எனும் மகாவாக்கியம் ஆகமத்திலுள்ளது என்று அறியப்படுகிறது.
பாம்புக் கடிக்கு விடம் தீர்க்கும் மாந்தரீகர்கள் கருடோகம் பாவனை செய்து, தங்கள் ஆன்மாவைக் கருடனாக மாற்றிக் கொள்கிறார்கள் பாம்புக்குப் பகை கருடன். கருடோகம் பாவனை செய்யும் அம்மாந்தரீகன் கருடத் தன்மை அடைந்து விஷ முறிவு செய்கின்றான். அவனுடைய ஆன்மாவே கருடத் தன்மை அடைகின்றது. அவனே கருடனாக மாறிவிடுவதில்லை.
அதுபோலவே, பாசம் நீங்கித், தன்னைப் பரசிவமாக ஒன்றியிருந்து அத்துவித பாவனை செய்யும் ஆன்மாவும் சிவத்தன்மை அடையும். இந்த அத்துவித உபாசனையே சிவோஹம் அல்லது சோகம் பாவனை எனப்படுகிறது.
“பாசத்தோடு கூடிப் பாசமயமாகவும், தத்துவங்களோடு கூடித் தத்துவ மயனாகவும் இருக்கும் ஆன்மா பதியோடு கூடி அப்பதி மயமாகவும் ஆகும். ஆன்மாச் சார்ந்ததன் வண்ணமாகும் இயல்புடையது. அது எவ்வெம் மந்திரத் தெய்வத்துடன் கூடினும் அத்தெய்வமயமாகவும் இருக்கும் என்பது இதனால் உறுதியாகின்றது.
கருடோகம் பாவனையால் ஆன்மாவைக் கருடனாக்கிக் கொண்ட மாந்தரீகன் அடுத்தவன் உடலில் உள்ள விடத் துன்பத்தை நீக்குகின்றான். அதுபோலவே, பாசம் நீங்கிச் சிவோகம் பாவனையால் சிவமாகவே நின்ற தூய ஆன்மா, குருவாக, ஞானாசாரியனாக, பாசவேதனைப்படுவோனது வேதனையைக் களைகின்றான். இந்த உண்மையினை,
“ விடநகுல மேவினுமெய்ப் பாவகனின் மீளுங்
கடனிலிருள் போவதெவன் கண்” (திருவருட்பயன் அருளுருநிலை ).
“கருட னுருவங் கருது மளவில்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவி னுருவங் குறித்த வப்போதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே “ (திருமந்திரம்)
எனச் சைவ சாத்திரங்களும் இயம்பின. இவ்வாறு சிவமாந் தன்மை பெற்றார் இனிப் பிறவி அடையார் என்னும் உண்மையினையே தக்ஷிணாமூர்த்தி குருவாய் உணர்த்தினார். இக்கருத்தையே,
எந்தமெய்ப் பொருள்தனைக் கண்டவர்க்குப் பிறவி
இனியில்லை யாகு மோவச்
சிந்தையுறு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி !
எனும் வரிகள் உணர்த்தின.
(தொடரும்)