சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 5

(இக்கட்டுரைத் தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்)

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிச் செய்த
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

மொழிபெயர்ப்பு: கோவை கவியரசு கு. நடேசகவுண்டர்
விளக்கவுரை: முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி

(5)

தே³ஹம்ʼ ப்ராணமபீந்த்³ரியாண்யபி சலாம்ʼ பு³த்³தி⁴ம்ʼ ச ஶூன்யம்ʼ விது³꞉
ஸ்த்ரீபா³லாந்த⁴ஜடோ³பமாஸ்த்வஹமிதி ப்⁴ராந்தா ப்⁴ருʼஶம்ʼ வாதி³ன꞉ ।
மாயாஶக்திவிலாஸகல்பிதமஹா வ்யாமோஹஸம்ʼஹாரிணே
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 5॥


உடலுடலில் உலவுவளி ஐம்பொறிகள் கரணங்கள்
ஒன்றுமே இல்லா தபாழ்
கெடலரிய தானென்று வாதியர்கள் மாயையால்
குளறினார் இகலி னாரிம்
மடமைகெட மெய்யறிவு தருவதுன தருளன்றி
மற்றொன்றும் உண்டு கொல்லோ
திடமுதவு குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி
திருவடிகள் போற்றி! போற்றி!!

முதல் நான்கு பாடல்களில் சங்கரபகவத்பாதரவர்கள் வேதாந்தத்தின் மையக் கருத்துக்களைச் சுருக்கித் தந்தருளினார். பிரபஞ்சத்தின் மாயத்தோற்றம், சத்து சித்து இரண்டும் சேர்ந்து ஆன்மா சத சித்தாக இருத்தல், தத்துவமஸி மகாவாக்கியத்தின் பொருள், அறிவே ஆன்மா, அறிவுக்கு வேறாக ஆன்மா இன்மை, சத் சிதான்மா கருத்துப்பொருள்(subject; ) பருப்பொருளன்று (object), எப்படிக் கனவனுபவம் நனவு போல என்னுள் படைக்கப்பட்டதோ அவ்வாறே காணப்படும் பிரபஞ்சமும் ‘நான்’ எனும் சத் சித் ஆன்மாவால் தோன்றின; சுழுத்தியில் எந்த அனுபவமும் இல்லை, அதுபோல, என் அகத்தில் படைக்கப் பட்ட மித்தையாகிய பிரபஞ்சமும் ‘நான்’ ஆகிய என்னுள் ஒடுங்கியது ஆகியன இப்பாடல்களில் வெளிப்பட்டன.

ஐந்தாவது பாடலில் இம்மெய்யறிவு இலாத மக்களைப் பற்றிப் பகவத்பாதர்கள் கூறுகிறார். இவர்களை அறிவற்ற மடையர்கள் என்றும் ‘பிராந்தர்கள்’ என்றும் கூறுகின்றார்.பிராந்தர் எனும் சொல்வழக்கு இன்று மலையாள மொழியிலும் வழங்கப்படுகிறது. அச்சொல்லுக்கு அறிவு கலங்கியவர்கள், மதிமயங்கியவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள் என்பது பொருள். அவர்கள் ஆத்ம அனாத்மா இவற்றினிடையே வேற்றுமை அறியாதவர்கள்; அனாத்மாவான தேகம் முதலியவற்றையே ஆத்துமா எனப் புத்தி கலங்கி அறிபவர்கள். ஆன்மா என ஒன்று இல்லவேயில்லை; ஆன்மா சூனியம் எனும் மடையர்கள்.

இவர்களிற் சிலர் சத்த பரிச ரூப ரச கந்த புலனறிவுகள் தேகத்தில் தோன்றுவதால், தேகத்தையே ஆன்மா எனக் கருதுபவர்கள். வேறு சிலர் சிந்தித்தல் தெளிதல் போன்ற அறிவு மனம் முதலிய அந்தக் கரணங்களில் தோன்றுவதால் அந்தக்கரணங்களே ஆன்மாஎன்பர். இவர்கள் அந்தக்கரண ஆன்மவாதியர் எனப்படுவர். மற்றும் சிலர் உடலியக்கத்துக்குப் பிராணவாயுவே காரணமாதலால் பிராணவாயுவே ஆன்மா என்பர். இவர்கள் பிராணவான்ம வாதியர் எனப்படுவர். இன்னுஞ் சிலர் உடல் மேலும் உள்ளும் தேடிப் பார்த்துவிட்டோம்; ஆன்மாவெனும் ஒருபொருள் புலப்படவில்லை; எனவே ஆன்மாவென ஒன்றில்லை என்பர். இவர்கள் சூன்ய ஆன்ம வாதிகள்.

இந்த பிராந்தர்கள் யார்? உடலையும் உடலினுள் உலவுகின்ற வாயுவினையும் ஐம்பொறிகளையும் அந்தக்கரணங்களையும் அறிவுடைய ஆன்மா எனும் கொள்கையுடையவர்கள். இவர்களில் சாருவாகர் எனும் மதவாதியர்களும் அடங்குவர். ஆன்மா,சூனியம் என்போர் சாருவாகர்கள். உடலே ஆன்மா என்பவர்கள் உலகாயதர் எனப்படுவோர். முன்னையோர் பிராந்தரெனின் இவர்கள் மடையர்கள். நுண்ணிய , கூர்த்த அறிவிலாத மடையர்களான இவர்கள் உடலையே ஆன்மா எனக் கருதுவோர்.
இவர்கள் அறியாமையிலும் தாம் பிடித்ததையே சாதிப்பதிலும் வாதிப்பதிலும் மூழ்கியவர்கள் இவர்களைப் படைத்த கடவுளாலன்றி யாராலும் திருத்தவியலாது. எனவே,

“கெடலரிய தானென்று வாதியர்கள் மாயையால்
குளறினார் இகலி னாரிம்
மடமைகெட மெய்யறிவு தருவதுன தருளன்ற
மற்றொன்றும் உண்டு கொல்லோ”

என்றார்.

திருத்த முடியாத இயல்புடையோருக்கு எடுத்துக்காட்டாகப் பகவத்பாதரவர்கள் நால்வரைக் குறிப்பிடுகின்றார். அந்நால்வர்.”ஸ்திரி, பாலர், அந்தகர், ஜடம்” பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள். உணர்ச்சி வயப்பட்டவர்களுக்கு அறிவு செயல்படாது; அவர்கள் உணர்ச்சி வயத்தில் சிக்கியிருக்கும்போது அறிவுணர்த்தல் பயன்படாது. பாலர் அறிவுக் குறைவுடையோர்; குறைவறிவுடையோருக்கு அவர்கள் கொள்ளும் அளவுக்குத் தானுணர்த்த முடியும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு மேற்படிப்புப் பாடங்களைப் போதிக்க வியலுமா? அந்தகர் என்போர் விழியிலாதவர்கள். யானையின் கால், காது, வால், வயிறு போன்ற உறுப்புக்களைத் தடவிப் பார்த்து யானையின் உருவம் இத்தகையது எனக் கூறிய அந்தகர்களின் கதை போன்றதுதான் இந்த அறிவுக் குருடர்களின் நிலை. ஜடம் என்றது அறிவற்ற கல், மரம் போன்ற அஃறிணைப் பொருள்கள்போன்வர்கள். இவர்கள் உருவத்தால் மனிதர்கள்; அறிவில் ஜடமாக இருப்பவர்கள்.

இங்கு ஆன்மா அல்ல என விலக்கப்பட்டன சைவசித்தாந்தத்துக்கும் உடன்பாடே. சிவஞான போதம் மூன்றாம் நூற்பாவும் நான்காம் நூற்பாவும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி தோத்திரத்தில் கூறப்பட்ட கருத்தினை ஆராய்கின்றன.

“உளது இல தென்றலின், எனதுடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்
மாய இயந்திர தனுவினுள் ஆன்மா’

உடம்பாகிய , ‘மாயையின் காரியமாகிய இயந்திர தனுவுள் ஆன்மா என்பதொன்றுண்டு. எவ்வாறு அறியப்படுகின்றதென்றால், ஆன்மா இதுவல்ல இதுவல்ல என்று கழித்தது எது, ஆன்மா சூனியம் எனக்கொள்ளத் தீர்மானித்து நிற்பது எது? அது தீர்மானிப்பவனின் அறிவல்லவா? அந்த அறிவே ஆன்மா.அந்த அறிவும் சூனியம் என்றால் என்னைப்பெற்ற தாய் மலடி என்பதற்கு ஒப்பாகும். இது சூனிய ஆன்ம வாதிகளை மறுத்தது.

இவ்வாறு பல்வேறு ஏதுக்களால் ஆன்மாவென்னும் அறிவுப் பொருள் மாயா இயந்திர தனுவாகிய உடலில் உளது என நிறுவிய சைவசித்தாந்தம், சங்கரர் கூறாத ஏது ஒன்றனையும் கூறி அந்த ஏதுவினால், அந்த ஆன்மா எது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.
“உணர்த்த உணர்தலின்” என்ற ஏதுவினால் உடலில்,- முன்பு உணர்வு இல்லாத ஆன்மா ஒன்று இருக்கிறது, அது உடலில் உள்ள ஞானேந்திரிங்களாகிய கருவிகளால் உணர்த்த உணருகின்றது என்பது பெறப்பட்டது.

எனவே உடலில் ஆன்மா எனக்கிடப்பது இருந்தாங்கு அறியும் பேரறிவாகிய பிரமம் அன்று என்பது பெறப்பட்டது. பிரமமாகிய சைதன்னியமே ஆன்மா என்பது விஞ்ஞான வாதிகள் எனப்படும் வேதாந்திகளின் கொள்கை. உடலில் உள்ள ஆன்மா சீவான்மா. அது கருவிகளோடு கூடியபோதும் தன்னியல்பின உணராதது. இந்த ஆன்மா குரவன் ஒருவனால் வேதாகமங்களின்வழி , உபதேசமொழியைப் பெற்றுத் தன்னையும் தன்னை உடையானையும் அறியும் அறிவினதாம். எனவே, அறிந்தவாறே அறிந்து நிற்கும் பேரறிவாகிய பிரமப் பொருளாகிய முதல்வன் அல்லன். இது வேதாந்திகளுக்கும் சைவசித்தாந்திகளுக்கும் இடையே ஆன்மாவைப் பற்றிய முக்கியமான வேறுபாடாகும்.

(6)

ராஹுக்³ரஸ்ததி³வாகரேந்து³ஸத்³ருʼஶோ மாயாஸமாச்சா²த³னாத்
ஸன்மாத்ர꞉ கரணோபஸம்ʼஹரணதோ யோ(அ)பூ⁴த்ஸுஷுப்த꞉ புமான் ।
ப்ராக³ஸ்வாப்ஸமிதி ப்ரபோ³த⁴ஸமயே ய꞉ ப்ரத்யபி⁴ஜ்ஞாயதே
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ॥ 6॥

அராநுகர் கலாதர திவாகரர் சமானமுற
அருமாயை யுள்மறைந்தே
உராவுகர ணாதிகள் ஒடுங்கிய உறக்கத்தில்
ஒருசத்த தாய்த்த னித்தோன்
விராவிய விழிப்புற வுறங்கினேன் முன்பென
விளம்பவமர் மெய்ப்பொருளதாம்
சிராமலைய குருமூர்த்தி ஸ்ரீதக்ஷிண மூர்த்தி
திருவடிகள் போற்றி ! போற்றி!

5ஆவது பாடலில் ஆச்சாரியர் மடமையர் என்றுகருதத்தக்க சில தத்துவ வாதியர்களைக் கூறினார். அவர்கள் தேக ஆன்மவாதியர், அந்தக்கரண ஆன்மவாதியர், பிராணஆன்மவாதியர், புத்தியான்மவாதியர், சூன்ய ஆன்மவாதியர். இவர்களுடைய கொள்கைகளைக்கூறவோ மறுக்கவோ செய்யாமல் மடவோர் என்று மட்டும் கூறினார். ஆறாவது பாடலில் சூன்ய ஆன்மவாதியை மட்டும் மறுக்கின்றார்.

சூன்ய ஆன்மவாதம் என்பது பவுத்த மதத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தவொரு பிரிவு. இவர்கள் மத்தியாத்மிக வாத பவுத்தர்கள் எனப்படுவர். இதன் ஆச்சாரியர் நாகார்ஜுனர் என்பவர். இவர் சங்கரபகவத் பாதருக்கு முன்னமேயே வாழ்ந்தவர். இவர் தம்முடைய திறமையான வாதத்தால் தேக ஆன்மவாதம், பிராண ஆன்மவாதம், இந்திரிய ஆன்ம வாதம், க்ஷணிக விஞ்ஞானவாதம் முதலியவற்றைத் தம்முடைய கோட்பாடாகிய சூனியவாதத்தால் வென்றழித்தார்.
பகவத் பாதரவர்கள் இந்த ஆறாவது பாடலில் சூனிய வாதக் கொள்கையை மட்டும் கூறி அதனைப் பூர்வபட்சம் செய்கின்றார். இதனைப் பூர்வபட்சம் செய்வதனால் பிறகோட்பாடுகளையும் வென்றாராயிற்று. இவ்வாறு செய்வதனைப் பிரதம மல்லநியாயம் என்பர். மல்லன் ஒருவன், தான் மற்போட்டியில் முதன்மையானவன் என்ற பெருமையைஅடைய விரும்புகின்றான். அவன் நாட்டிலுள்ள மல்லர்கள் எல்லாருடனும் மற்போரிட்டு வெல்ல வேண்டியதில்லை; எந்த மல்லன் பிறமல்லர்களை வென்ற புகழ் உடையவனாக இருக்கிறானோ அவனுடன் போட்டியிட்டு வென்றாலே போதும் அவன் பிறமல்லர்களையும் வென்றதற்கு அதுவே அடையாளமாகும். எனவே, பகவத் பாதரவர்கள் மற்றவர்கள் கோட்பாட்டை மறுக்காமல் சூனிய வாதிகளின் கோட்பாட்டை மட்டும் கூறி மறுக்கின்றார். இதனை வென்றதனால் பிற கோட்பாடுகளையும் வென்றாராகின்றார்.

சூனியமே அதாவது ஒன்றுமிலாத பாழே இறுதி உண்மை என்பது இவர்கள் கொள்கை. இவர்கள் கோட்பாட்டின்படி, ஆன்மாவாகிய ‘நான் யார்” என்றால் ‘நீ ‘ என ஒரு பொருள் இல்லை; ஆன்மா என்பது சூனியமே. நீயும் இல்லை நானும் இல்லை கேட்பவன் என எவரும் இல்லை என்பது இவன் கொள்கை. இக்கொள்கையினை இவன் மெய்ப்பிக்கமேற்கொள்ளும் வாதமும் அவ்வாதத் தினையே மேற்கொண்டு அவனை வெல்லும் பகவத் பாதரின் வாதத் திறமையும் அருமையானவயாகும். இருவருமே தம்கொள்கையை நிறுவ ஆழ்ந்த நித்திரை எனும் சுழுத்தி அவத்தையை அடிப்படையாகக் கொள்கின்றனர்.

ஆழ்ந்த உறக்கத்தில் எந்த அனுபவமும் இல்லை. நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எந்த விடயங்களையும் விடயிப்பதில்லை. நனவிலும் கனவிலும் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் அந்தக்கரணங்களாகிய கருவிகள் உள்ளன. இவற்றால் எனக்கு உலகம் அனுபவப் பொருளாகின்றது.
ஆழ்ந்த உறக்கத்தில் இவையெல்லாம் எனக்குக் கருவியாவதில்லை. அதனால் உலகமும் எனக்கு விடயமாவதில்லை. சுழுத்தி எனும் ஆழ்ந்த உறக்கத்தில் ‘நானும்’ இல்லை; என்னால் அனுபவிக்கத் தக்க உலகமும் இல்லை காண்போன் காணப்படும் பொருள் காட்சி எனும் எதுவும் இல்லை. ஆத்மாவும் இல்லை; அனாத்மாவும் இல்லை. ஒன்றும் இல்லாத சூனியமே உள்ளது. நனவிலும் கனவிலும்காண்பான் , காட்சி, காணப்படும் பொருள் ஆகியன திரிபுடி ஒன்றும் இல்லத சூனியத்திலிருந்தே தோன்றுகின்றன. இதுவே சூனியவாதியின் அனுபவப் பிரமாணமானமுடிவு.
சங்கர பகவத் பாதரவர்கள் ஆழ்ந்த உறக்கம் எனும் அவத்தை சூனியமோ பாழோ வெறுமையோ அன்று; அங்கு ‘சத்து’ எனும் ஒரு பொருளே உளது. அது இடம் காலம் முதலிய குணங்கள் இல்லாத அகண்டாகாரம். அதனால் அது எந்தவொரு விவகார வியாபாரமும் இல்லாதது. குணம் குறி காலம் இடம் ஆகிய பண்புகள் உடைய கண்டப் பொருளே விவகரிக்கும். அகண்டப்பொருள் எவ்விதத்திலும் செயல்படாது. ஆகாய வெளி புலன்களால் அனுபவிக்கப் படுவதில்லை. அதனால் பொதுவாக நாம் ஆகாயத்தை ஒன்றும் இல்லாத சூனியம் எனக் கருதுகின்றோம். ஆனால் ஆகாயவெளி என்பது இல்பொருளல்ல; உள்பொருளே. சத்துப் பொருளும் இத்தகையதே. சுழுத்தியாகிய உறக்கத்தில் அகண்டாகார சத்து விவகாரத்துக்குட்படாதால் அனுபவப் பொருளாதல் இல்லை.

உறக்கத்தில் காண்போன் காட்சி காணப்படும் பொருள், ஞாதுரு, ஞானம், ஞேயம் எனும் திரிபுடி இல்லை. நனவிலும் கனவிலும் ஞானேந்திரியம் முதலிய கருவிகள் செயல்படுகின்றன. சுழுத்தியில் செயல்படாக் கருவிகளே உள்ளன. உறக்கத்தில் அவை தொழிற்படுவ தில்லை. எனவே எந்த அனுபவமும் இல்லை. உறங்கிக் கொண்டி ருக்கும்போது,நான் உறங்கிக் கொண்டிருக்கின்றேன் எனும் அறிவில்லை. கனவு காணும்போது நான்கனவு கண்டுகொண்டிருக்கின்றேனெனும் அறிவும் இல்லை. அப்படியென்றால் அவ்வுறக்கத்தில் ‘சத்து’ எனும் மெய்ப்பொருள் இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? உறங்கி விழித்து, நனவு நிலைக்கு வந்தபின், ‘நினைவின்றி நன்றாக உறங்கினேன்; இன்பமாக இருந்தது’ என்று கூறக் காண்கிறோம். உறக்கத்தில் ஒன்றையும் விடயிக்காத அனுபவத்தையும் அதனால் பெற்ற இன்பத்தையும் எதுவொன்று நனவில் கூறுகின்றதோ அதுவே சத்து; மெய்ப்பொருள் ; ஆன்மா. எனவே, சுழுத்தியாகிய உறக்கத்தில் ஒன்றுமே இல்லாத பாழ் என்று கூறலாகாது. அங்குச் சத்தாகிய ஆன்மா இருந்தது. அதுவே நனவுக்கு வந்தபின் உறக்கத்தில் இருந்த தன் நிலைமையைக் கூறியது. இவ்வாறு உறக்கத்தில் சத்தான ஆன்மா இருக்கும் நிலையையே,

“உராவுகர ணாதிகள் ஒடுங்கிய உறக்கத்தில்
ஒருசத்த தாய்த்த னித்தோன்
விராவிய விழிப்புற வுறங்கினேன்
முன்பென
விளம்பவமர் மெய்ப்பொருளதாம்”

என்றுரைத்தார்.

உறக்கத்தில் ஞானமேயான மெய்ப்பொருள் இருந்தது, கருவிகள் தொழிற்படாமையினாலே அது காணப்படவில்லை, காணப்படாமையினாலே அம்மெய்யறிவில்லை, அங்குச் சூனியமே இருந்தது எனக் கூறாலாகாதென்பதற்குப் பகவத் பாதரவர்கள் ஓரெடுத்துக் காட்டுக் கூறுகிறார்.

சூரிய சந்திர கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகளாக நிகழ்கின்றன. புராணக் கதைகள் இராகு கேது எனும் பாம்புகள் சூரிய சந்திரனை விழுங்குவதால் கிரகணங்கள் தோன்றுகின்றன என்றும் பின் அவற்றைக் கக்குவதால் மீண்டும் சூரிய சந்திரவொளி தோன்றுகின்றன எனவும் கூறும். வான நூல் வல்லார் பூமியின் நிழல் சூரிய சந்திரன்மேல் விழுவதால் அவற்றின் ஒளி மங்கியதாக நமக்குத் தோன்றுகின்றதென்பர். ஜோசியர்கள் இராகு கேதுவினைச் சாயா கிரகங்கள் அல்லது நிழற்கிரகங்கள் என்பர். சாயை சூரியனையும் சந்திரனையும் மறைத்ததனால் இருள் நிலவியதேயன்றி சூரியசந்திரவொளி இல்லாமற்போகவில்லை. இதுபோன்றதே உறக்கத்தில் ஆன்மாவின் நிலையும்.
சத்தான ஆன்மா எப்படி சூனியம்போல மறைந்தது/
இந்த சத்திலேயே ஆவரண சத்தியென்றும் விக்ஷேப சத்தியென்றும் இருசத்திகள் உண்டு. ஆவரணசத்தி அறிவை மறைக்கும் சத்தி. விக்ஷேபம் அறிவை மயக்கும் சத்தி. ஆவரணம் இயங்கி அறிவை மறைத்தது; விக்ஷேப சத்தியினால் கருவிகரணங்கள் செயலொழிந்தன. அதனால் உறக்கத்தில் ஒன்றுமே இல்லாதபாழ் போன்ற வெறுமை தோன்றியது. உறக்கத்தில் கருவிகள் இயங்காததால் நான் கேட்பதொழிந்தேன்; அருந்துவதொழிந்தேன் காண்பதொழிந்தேன் ; ஸ்பரிசித்தலொழிந்தேன்; நினைவதுமொழிந்தேன். எச்செயலும் இல்லாததன்பால் ஆன்மாவாகிய நான் இல்லாததுபோல் உறக்கத்தில் இருந்தேன். உறக்கத்தில் ‘நான்’ எனும் ஆன்மா இல்லாமற் போகவில்லை.

இவ்வாறு இப்பாடல் பவுத்தர்களின் ஒரு பிரிவாகிய சூனிய ஆன்ம வாதீயர்களான மாத்தியமிகர்களை மறுத்தது.

அரா- பாம்பு. நுகர்- விழுங்கிய. கலாதரர்- சந்திரன். திவாகரன் – சூரியன். சமானமுற- அரவு விழுங்கியதனால் தோன்றிய இருளை போல. மாயையுள் மறைந்தே – மாயையின் செயலாகிய ஆவரண விக்ஷேப சத்திகளால் மறைக்கப்பட்டு. கருவிகரணங்கள் செயல் படாததனால் இவைகளெல்லாம் ஒடுங்கிய உறக்கத்தில் ஒர் சத்தாகிய மெய்ப்பொருள் ஆன்மா தனித்து இருக்கும். அவ்வான்மாவே விழிப்பு வந்த நிலையில் நான் நன்கு உறங்கினேன் என்று தன் இருப்புக்குச் சாட்சி பகரும்.
அத்தகைய மெய்ப்பொருளாக விளங்கி நிற்கும் தக்ஷிணாமூர்த்திக்கு வணக்கம்.

சிவஞானபோதம் நூற்பா 3, ஆன்மாவின் உண்மையைக் கூறுகின்றது. பிராண ஆன்மவாதியென்பவன், செயலற்ற உறக்கத்திலும் பிராணவாயுவின் செயற்பாடு உள்ளமையினால், பிராணவாயுவே ஆன்மா என்றான். அவனுக்கு மறுப்பாகச் சிவஞானபோதம், “கண்படில் உண்டிவினை யின்மையின் ஆன்மா உளது” என்று கூறியது. நனவிலும் கனவிலும் கருவிகரணங்களை இயங்கச் செய்வதும் உறக்கத்தில் அவற்றை ஒடுங்கச் செய்வதும் ஆகிய ஆன்மா உடலில் உள்ளது என்பது கருத்து.
பகவத்பாதர்கள் ஆன்மா எனக் கூறியது பரமான்மாவாகிய பிரமத்தினை. சிவஞானபோதம் ஆன்மா என்றது சீவான்மாவாகிய உயிரை.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *