முனைவர் திரு. கோ.ந.முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஜனவரி 12, 2021 இரவு 10.45 மணிக்கு சிவபதம் அடைந்தார். ஆயிரம் பிறைகண்டு நிறைவாழ்வு வாழ்ந்த முனைவர் ஐயா அவர்கள் முதுபெரும் சைவ அறிஞர். பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நமது இணையதளத்திற்கு மிகப்பல கட்டுரைகளைத் தந்திருக்கிறார். அவரது மறைவிற்கு தமிழ்ஹிந்து இணையதளம் சார்பாக கண்ணீர் அஞ்சலி – ஆசிரியர் குழு
சிவ சிவ.
முனைவர் திரு. கோ.ந.முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் சிவபதம் அடைந்தார்கள் என்ற செய்தி கேள்வியுற்றேன். தமிழ்நாட்டின் மகத்தான சைவ அறிஞர்களில் ஒருவரான ஐயாவின் மறைவு ஒரு பேரிழப்பு. அன்னாரின் மறைவுக்கு எனது நெஞ்சார்ந்த கண்ணீர் அஞ்சலி. அவரது குடும்பத்தினர்க்கும் உற்றார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.

ஐயாவுடனான எனது பரிச்சயம் 2009ம் ஆண்டு இணையவழி ஏற்பட்டது. அதுமுதல் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து அவரிடம் கற்றும், உரையாடியும், அவரது கட்டுரைகளைப் பதிப்பித்தும் வந்திருக்கிறேன். 2017ம் ஆண்டு தான் கோவையில் அவரை நேரில் சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் கிட்டியது. மிக்க பாசத்துடனும் பரிவுடனும் அவர் அன்று உரையாடியது நெஞ்சில் பசுமையாக உள்ளது.
ஐயா அவர்களின் கட்டுரை ஒவ்வொன்றும் அவரது ஆழ்ந்த தமிழ்ப்புலமைக்கும், அவரது சைவசித்தாந்த ஞானத்தெளிவுக்கும், அவரது சிவபக்திச் சிறப்பிற்கும் சான்று பகர்வனவாக இருக்கும். திருமுறைகளைப் பேசுவதும் எழுதுவதும் மட்டுமல்லாது, இசைக்கவும் வல்லவர். ஆழ்ந்த கர்நாடக சங்கீத ரசனை கொண்டவர். பேராசியரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து சைவ அன்பர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் கற்பித்து வந்தவர். வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமை கொண்டவரும், சிவானந்தலஹரி உள்ளிட்ட பக்தி நூல்களைத் தமிழ்ச்செய்யுட்களாக ஆக்கித் தந்தவருமான அவரது தந்தையார் கவிமாமணி கு.நடேசக் கவுண்டர் அவர்களின் அறிவுப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து எடுத்துச் சென்றவர் முனைவர் ஐயா அவர்கள்.

வேதநெறியும் தமிழ் சைவத்துறையும் (2009) என்பதில் தொடங்கி சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட அவரது கட்டுரைகள் தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளன. அவற்றை இங்கு வாசிக்கலாம்.
அவரது முந்தைய ஃபேஸ்புக் பதிவுகளைத் தொகுத்து “சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம்” என்ற கட்டுரையாக தமிழ்ஹிந்துவில் வந்துகொண்டிருந்தது. அதன் ஏழாம் பகுதி (இறுதி) இன்று காலை தான் பதிப்பிக்கப் பெற்றது. நூற்பயனைக் கூறும் இப்பகுதியின் இறுதி வரிகள்:
“சிவமயமாதல் , இதுவே இந்நூலினை அனுசந்தித்தலின் பயன். இந்நூற்பயன் கைவந்தவர் சிவஞானியாவர். சிவஞானம் பெறலே இந்நூலினைக் கற்றலின் முக்கியப் பயன். சிவஞானம் பெற்றவர்கள் ‘ஈசுவரத்துவம், சுவாமித்துவம்’ எனும் தலைமைத்தன்மை உடையவர்களாவர். பிரபஞ்ச வாதனை அற்றவராவர். அவாவந்தப் பயனாக வேறு சில சித்திகளும் அவர்கள் விரும்பாமலேயே அவர்களுக்கு வந்து சேரும். அச்சித்திகளை அந்த ஞானியர் பொருட்படுத்துவதில்லை. ஞானியர் அட்டமா சித்திகள் கைவரப் பெற்றாலும் அவற்றைக் ‘கான்ற சோறு’ என அருவருத்து ஒதுக்குவர். இத்தகைய ஞானியரை வானகத்துத் தேவரும் வணங்குவர்”.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்ற குறளுக்கு இலக்கணமாகவே வாழ்ந்த ஐயா அவர்களின் புனித நினைவைப் போற்றுவோம்.
சிவ சிவ.
(ஜடாயு ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)
ஐயா அவர்களின் மறைதலைக் கேட்டு வருந்துகிறேன். அவரது கடைசி எழுத்துகள் போல் அவர் சிவபுரம் உள்ளே புகுந்து இருக்கிறார். ஓம் சாந்தி.
இத்தளத்தில் வந்த எனது முதல் கட்டுரைக்கு வந்த மறுமொழிகளைப் பார்த்துவிட்டு அவர் ஒரு மறுகட்டுரையை எழுதினார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவரது எழுத்துகள் என்னைப் பெரிதும் ஊக்குவித்தன. என் கட்டுரைகளுக்கு மறுமொழிகளும் அளித்திருக்கிறார். அவர் போன்றவர்கள் என்றும் வாழ்பவர்களே!