பொதுவாக, காலஞ்சென்றவர்களுக்கு அளிக்கப் படும் விருது என்பது ஒரு மிகப்பெரும் பிரபலம் அல்லது கவனிக்கப் படாத சாதனையாளருக்கு சற்றே குற்ற உணர்வுடன் தரப்படுவது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பத்ம விபூஷன் முதல் வகையில் சேரும். இது பற்றிக் கூற ஒன்றுமில்லை. கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனர் மற்றும் கொடையாளர் “கியர்மேன்” சுப்பிரமணியன், “இரண்டு ரூபாய் டாக்டர்” என்று புகழ்பெற்ற வடசென்னை மருத்துவர் டாக்டர் தி.வீரராகவன், தனது அற்புதமான ஓவியங்கள் மூலம் குழந்தை இலக்கியங்களுக்கு உயிரூட்டிய கே.சி.சிவசங்கர் (அம்புலிமாமா சங்கர்) – இவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள பத்மஸ்ரீ இரண்டாம் வகையானது. இவர்களது சாதனையையும் தன்னலமற்ற சேவையையும் இந்த விருது நினைவில் நிற்கச் செய்யும்.
பிற பத்மஸ்ரீ விருதுகள்:
ஸ்ரீதர் வேம்பு: Zoho மென்பொருள் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவரும் தொழில்முனைவர். கிராமிய மறுமலர்ச்சியில் ஆர்வம் கொண்டவர். இன்றைய தமிழ்நாட்டு இளைஞர்கள் ஆதர்சமாகக் கொள்ளத் தக்க அனைத்து திறன்களும் பண்புகளும் கொண்டவர்.
கோவை இயற்கை விவசாய முதுமூதாட்டி பாப்பம்மாள் (வயது 105): இவரது பெயரும் புகழும் இந்த விருதின் மூலம் தேசிய அளவில் தெரியவந்திருப்பது சிறப்பு.
சுப்பு ஆறுமுகம்: வில்லுப்பாட்டு எனும் அழிந்து வரும் நாட்டுப்புறக் கலையின் கடைசிக் கண்ணியாக வலம்வந்து கொண்டிருப்பவர். தேசிய விருதுக்கு முற்றிலும் தகுதியானவர். ஆனால், இந்தக் கலைக்கு அனேகமாக எதிர்காலம் இல்லை என்பதே நிதர்சனம்.
கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ: தனது இன்னிசையால் நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். அதோடு கூட, தனிப்பட்ட அளவில் கிராமப் புற இளைஞர்களிடம் சங்கீதக் கல்வியை எடுத்துச் செல்லும் சேவையை, தன்னால் இயன்ற அளவு சத்தமில்லாமல் செய்து வருபவர்.
சாலமன் பாப்பையா: தனிப்பட்ட அளவில் நான் பட்டிமண்டப ரசிகன் அல்ல, அவற்றின் மீது ஒருவித ஒவ்வாமையே உருவாகிவிட்டது. ஆனால், வெகுஜன அளவில் தமிழ்ப் பேச்சு என்ற “நிகழ்த்துகலை” வடிவத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இவற்றுக்கும் ஒரு பங்கு உள்ளது என்றே நினைக்கிறேன். அந்த அளவில் தமிழ்ச்சூழலில் தேசிய, தெய்வீக கருத்தியலுக்கு விரோதமில்லாமல் பேசி, பிரபலமும் ஆகிவிட்ட “பட்டிமண்டப நாயகன்” விருது பெறுவதில் மகிழ்ச்சி.
மராச்சி சுப்புராமன்: திருச்சியைச் சேர்ந்த சமூகசேவகர், SCOPE அமைப்பின் நிறுவனர்.
பி.அனிதா: விளையாட்டு வீரர், 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பெண்கள் பேஸ்கட்பால் அணிக்கு வெற்றிகளையும் புகழையும் தேடித் தந்தவர்.
விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் உண்மையான சாதனையாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்து வரும் நரேந்திர மோதி தலைமையிலான பா.ஜ.க அரசு பாராட்டுக்குரியது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 102 பத்மஸ்ரீ விருதுகளில் 10 விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)