டாக்டர் ரங்கன்ஜி ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்ற சிறப்பான குறுஞ்சொற்பொழிவுத் தொடரைக் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறார். தினமும் 15-20 நிமிடங்கள் (காலை 7 முதல் 7.20 வரை) இந்தச் சொற்பொழிவு நேரலையில் வருகிறது. இதுவரை 84 பகுதிகள் வந்திருக்கின்றன. இதுவரை வந்த அனைத்துப் பகுதிகளும் யூட்யூபில் உள்ளன.
இத்தொடரில் சங்க இலக்கியங்களில் வேதம், வேதியர், வேத தெய்வங்கள், வேத வேள்விகள், வேதாந்த தத்துவம், ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், முருகன், சிவபெருமான், திருமால், சக்தி எனப் பலவற்றையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களையெல்லாம் எளிமையாக, அழகாக, ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கிறார். குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, திருமுருகாற்றுப்படை என்று பல சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் செறிவான, விரிவான மேற்கோள்களை இந்த உரைகளில் எடுத்தாள்கிறார்.
எனக்குத் தெரிந்து இதுவரை கதாகாலட்சேபம், உபன்யாசம், ஆன்மீகச் சொற்பொழிவுகளில் சங்க இலக்கியங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. திருமுறை, திவ்யப் பிரபந்தம் ஆகிய பக்தி இலக்கியங்களே பேசப்பட்டுள்ளன. அந்த வகையில், இது மிகப் புதுமையான, ஆனால் மிகவும் அவசியமான ஒரு விஷயம். வேதசாஸ்திரங்களிலும் ராமாயணத்திலும் ஆழமான புலமை பெற்று வேத குருகுலம் ஒன்றின் ஆசானாகவும் விளங்கி வழிகாட்டி வரும் ரங்கன்ஜி இதனை முன்னெடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய விஷயம். அரும்பாடுபட்டுத் தமிழ் வளர்த்த உ.வே.சாமிநாதையருக்கு இந்த உரைத்தொடரை அர்ப்பணித்திருப்பதும் சிறப்பு.
முதல் நாள் உரையில் மு.சண்முகம்பிள்ளை எழுதியுள்ள “சங்கத் தமிழர் வழிபாடும் சடங்குகளும்” என்ற நூலைக் குறிப்பிட்டு இதன் ஆசிரியருக்கும் நன்றி தெரிவித்தார் ரங்கன்ஜி. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பான ஆய்வு நூல் இது. தமிழாய்வார்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும் கூட இத்தகைய காத்திரமான நூல்களைக் கற்பதை விடுத்து ஆதாரமற்ற பொய்களையும் இனவெறுப்பு வாதங்களையும் இஷ்டத்துக்கு அவிழ்த்து விடும் “கல்விக் கலாசாரம்” கொண்ட தமிழ்ச் சூழலில், ஆய்வுநூலின் அடிப்படையில் ஆன்மீகச் சொற்பொழிவுத் தொடர் அமைவது கூடுதல் சிறப்பு.
தினமும் Dr. Ranganji’s Live Lectures என்கிற இந்த யூட்யூப் சேனலில் வருகிறது.
ஃபேஸ்புக்கில் இங்கே காணலாம் .
அன்றன்றைய சொற்பொழிவின் சுட்டியை வாட்ஸப் மூலம் பெற இந்த வாட்ஸப் குழுமத்தில் இணையலாம்.
நன்றி ஐயா