கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்வது ஒரு அடையாள போராட்டம்தான். அதாவது,முன்பு நமை அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் அரசின் நிழல் சட்டங்கள் இன்னும் துரத்துவதை குறித்த எதிர் கோஷம் என்பதாகக் கூட பார்க்கலாம்.
சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் அல்லது அடுத்து வந்து திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. நேருவோ, காமராஜரோ, அண்ணாவோ, கருணாநிதியோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். சில நல்லவைகள் நடக்காமல் இல்லை, ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் இந்த 200 வருடமாகவும் அதன் இறுதி 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள்..
இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் துறை பழுதப்பட்டுள்ளது. ஆளும் முதல்வர் நினைத்தாலும் அதை சீர்படுத்த முடியவில்லை. அது எங்கேயோ செயல்பட மறுக்கிறது. பழுதுபட்டுள்ள இயந்திரமாக உள்ளது என்பதை கட்சி பேதமில்லாமல் நாம் உணர வேண்டும்.
இதில் நாத்திகன், திமுககாரன், அதிமுககாரன், பாஜககாரன் என்பதல்லாம் தள்ளி வைக்க வேண்டும். ஒரு ஹிந்துவாக – தமிழனாக இதை சீர்தூக்கி நிறுத்த வேண்டியது எல்லோருடைய கடமையும் கூட.
நமது கோவில்கள்தான் நம்முடைய அறிவு, கலை, பக்தி என எல்லாவற்றையும் உலகிற்கு உயர்த்திக் காட்டுவது. இத்தனை ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளது என நாம் பெருமையாக சொல்வது எல்லாமே கோவில்களில்தான் உள்ளது. பல்லாயிரம் நிவந்தங்கள், நீர்மேலாண்மை, விவசாயம், நிலம் என எல்லாமே அதைச்சுற்றித்தான் உள்ளது.
உலகம் நம்மை நோக்கி வருவது இந்த பழம்பெருமைமிக்க கலாச்சார பொக்கிஷத்திற்காகத்தான்.இந்த கறுப்பர்களாக இதையெல்லாம் செய்தார்கள் என்ற வெறுப்பில்தான் நமக்குள் பிரிவினை விஷத்தை அனலாக கொதிக்க விட்டது ஒரு பிரித்தாளும் சதி.நம்மை கவ்விக் கொண்ட இந்த மேற்கின் இருட்டை கிழித்தெறிந்தே ஆக வேண்டும் நாம்.இல்லை என்றால் மீட்பே கிடையாது.
ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது.
இதில் அந்த கோவில்களில் ஏற்கனவே இருந்த கல்வெட்டுகளை எல்லாம் முறையாக திரும்பவும் பதிவு செய்துள்ளார் திருப்பணியின் போது.’ ஸ்வஸ்தி ஸ்ரீ ;இதுவும் ஒரு பழங்கற்படி’ என்று துவங்கி அந்த கல்வெட்டு செய்திகளையும்,நிவந்தங்களையும் உலகமறிய மீண்டும் தொடர்ந்திருக்கிறார்.
இதுதான் எதிர்கால சமூகத்திற்கு அடுத்த ஆயிரம் வருடத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. உயிரை கொடுத்து காத்த நிலம், உயிரை கொடுத்து காத்த கோவில், பண்பாடு இவற்றை சட்டம் என்பவற்றின் பெயரால் பலியாகக் கொடுக்க முடியாது.அதுவும் நம்மை நாமே ஆள்கிற இந்த நேரத்தில் கூட.
நான் சில மாதம் முன்னால் செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த ஆநாங்கூர் கோவிலுக்கு சென்றிருந்தேன். யாருமே இல்லை பூட்டியிருந்தது. வாசலில் இருந்த இளைஞர்கள் ஓடிப்போய் சாவியை வாங்கி வந்து திறந்துவிட்டு கூடவே வந்தார்கள். நாங்கள் அங்கிருக்கும் கல்வெட்டுகளை படித்தவுடன் அவர்களுக்கு இன்னும் குஷியாகிவிட்டது.
“அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை. உடனே ஒரு கல்வெட்டில் அந்த பெயர் எழுதியிருப்பதை காட்டினோம். அதை தெளிவாக படித்த இளைஞருக்கு புதையல் கிடைத்தது போல மகிழ்ச்சி. இவ்வளவு பழமையான ஊரிலா நாங்கள் வாழ்கிறோம் என்று சந்தோஷமாக கேட்டார்.
“இது செம்பியன் மாதேவி திருப்பணி செய்த கோவில். அப்படியென்றால் இது அந்த காலத்தை விட பழமையான கோவில். இது கருங்கற் பணி செய்தே ஆயிரம் வருடத்துக்கு மேலாகிற. ,தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு முன்னே கட்டப்பட்டது” என்றவுடன் அவர்கள் கண்ணில் ஒரு கலாச்சார பலம் மின்னி மறைந்தது.
இன்று இந்தியாவில் பழமையான கோவில் மரபு, ஆகம முறைகளுடன் பாதுகாப்போடு இருப்பது தமிழகத்தில்தான். காஷ்மீரில் கோவில்களும் சைவமும் எப்படி இருந்தன என்று உலகத்திற்கு தமிழகத்தை காட்டித்தான் சொல்ல முடிகிற நிலை இன்று உள்ளது. படையெடுப்புகளில் காப்பாற்றப்பட்ட இந்த பொக்கிஷங்களை அரசியல், வரலாற்று அறிவில்லாமல் நாம் இழந்துவிடக்கூடாது.
எனவே, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களோடு நாம் இணையாத புள்ளிகள் இருக்கலாம். அவர் சொல்கிற கருத்துகளோடு நாம் முரண்படலாம். ஆனால் இப்போது உள்ள கோவில் நிர்வாகத்தை மறுசீரமைக்க வலிமையாக நாம் குரல் கொடுக்க வேண்டியது நேரம் இதுவென்பதில் மாற்றுக் கருத்தில்லை.
படங்கள்: ஆநாங்கூர் கோவில் (செம்பியன் மாதேவி திருப்பணி)
Well written article. We should talk to Google to take this project in to a great scale. We can use technology to reconstruct these ancient architect and crest s repository for theses timeless, art and life of people.
நிறைய கோவில்கள் ஒரு கால பூஜைகள் கூட செய்யமுடியாமல் தவிப்பது வேதனைக்குரியது. ஆனால் கோவிலை இந்து சமய அறநிலையத் துறையை விட்டு வெளியே வருவது சரியான தீர்வல்ல.
இந்து சமய அறநிலையத் துறையை சில மாறுதலுக்குட்பட்டு சீர்திருத்தப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் ஏன் நிறைய கோவில்கள் பராமரிக்க இயலவில்லை என்பதை ஆராய வேண்டும்.
# ஜோதிடர்கள் கூறும் பரிகாரத்தலங்கள் நிரம்பி வழிகின்றன.
# அதிக சக்தி கொண்ட தெய்வங்கள் என்று நம்பப்படும் தலங்களும் கூட்டம் நிரம்பிவழிகின்றன.
# ஸ்ரீ ரங்கம், திருவண்ணாமலை போன்ற புகழ்பெற்ற தலங்களும் வெகுவாகவே பக்தர்கள் வருகின்றனர்.
இருப்பினும் ஏன் மற்ற கோவில்களுக்கு கூட்டம் வருவதில்லை?
ஏதோ எனது சிற்றறிவுக்கு அலசியதில்…
# மக்கள் தாங்கள் வசிக்கும் தெருவிலேயே ஒரு சிறிய கோவிலை கட்டிக் கொள்கின்றனர். பரிகாரத்தை கண்களுக்கு, புகழ் பெற்ற ஆலயங்களுக்கு பல நூறு கிலோமீட்டர்கள் பயணம் சென்று தரிசப்பவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் புராதான கோவில்களுக்கு செல்வதில்லை.
ஒருகோவிலில் வரும் காணிக்கை தான் கோவிலின் அன்றாட செலவுக்கு மூலதனம். பக்தர்கள் வருகை குறையும் போது உண்டியல் காணிக்கைகளும் வருவதில்லை, இது போதாதென்று உண்டியலில் காணிக்கை செலுத்தாதீர்கள், இவை பிற மதங்களின் வழிபாட்டு தலங்களின் செலவுக்கு செல்கிறது என்று முகநூலில் உலாவும் தவறான செய்திகள் வரும் காணிக்கையை வெகுவாக பாதிக்கிறது.
ஓவ்வொரு கோவிலின் அருமை பெருமைகளை சமூகவலைத்தளங்களில் வெகுவாக பரப்பினால் வெளியூர் மக்கள் வெகுவாக வருவார்கள்.
உதாரணமாக நான் அதிக காலம் வசித்த விருத்தாசலத்தில் பஞ்சபூத சிவாலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கிருக்கும் பழமலைநாதரை தரிசித்தாலே அந்த பலன் கிடைக்கும் என்ற விசேஷ தலம். ஆனாலும் இது வெகுவாக பரப்பப்படாததால் வெளியூர் பக்தர்களால் கவணிக்க படவில்லை. சுலபமாக சென்றுவர இரயில், பேருந்துகள் இருந்தும் பக்தர்கள் வருகை குறைவு. காரணம் பிரபலப்படுத்தப்படாததே!
இவற்றை செய்தாலே அணைத்து கோவில்களிலும் பக்தர்கள் வருகையை அதிகப்படுத்தலாம். பக்தர்கள் வருகை இருந்தாலே உண்டியல் வருவாய் பெருகும்.
# மேலும் இந்த சமய அறநிலையத் துறை கோவில் நிலங்களுக்கு உண்டான குத்தகை தொகையை காலத்திற்கேற்ப உயர்த வேண்டும். இதை ஒழுங்காக வசூலிக்க வேண்டும்.
இதை இந்துக்கள் ஒன்றாக ஊர் கூடி தேர் இழுக்க வேண்டுமே அன்றி ஜக்கியின் அரசியலுக்கு அடிமையாகி விடக்கூடாது.