புனித சிலுவையின் நாசி கொலைக்களம்

டிஜிடல் பேனர்களில் ரத்தம் வழிய
முகம் குனிந்து தொங்கும் குறுந்தாடி இளைஞன்
உடலெங்கும் சாட்டையடி ரத்தங்கள்
தலையில் ரத்தம் வழிய அழுத்தும் முள்முடி
உன் பாவத்தை கழுவும் ரத்தம்
என்று சொல்லி என் நம்பிக்கையை கேட்கிறான் அவன்
மூன்று நாட்களில் எல்லாம் மறைய உயிர்த்துவிடுவான்
இறுதி தீர்ப்பில் அவன் ரத்த ஒப்பந்தத்தை ஏற்காதவர்களை
நித்திய நரகிலும் தள்ளி ரசிப்பான்.
பஸ் ஸ்டாண்டில் நான் பார்க்கும்
அந்த பிச்சைக்காரர் உடலிலும் வழிகிறது சீழும் ரத்தமும்
ஆனால் அவர் என் நம்பிக்கையை யாசிக்கவில்லை
என் இரக்கத்தை மட்டுமே வேண்டுகிறார்
அவர் உண்மையான இறை மகன்.

2004ம் ஆண்டு வெளிவந்து சர்ச்சைகளை கிளப்பிய ஒரு திரைப்படம் மெல் கிப்சனின் ‘Passion of Christ ‘. 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். இது கிறிஸ்துவின் பாடுகளை காட்டுகிறது. குறிப்பாக ஈஸ்டர் காலங்களில் இந்த ‘கிறிஸ்துவின் பாடுகள் ‘ மிகவும் முக்கியமான விஷயமாக ஐரோப்பிய மக்களிடையே இன்றும் விளங்குகிறது. எங்கள் நாகர்கோவில் வட்டாரங்களில் சிலுவைபாடு என்பார்கள். இந்திய கிறிஸ்தவர்களிடையேயும் இச்சமயங்களில் பல இடங்களில் கிறிஸ்துவின் பாடுகளை விளக்கும் நாடகங்கள், ஒலி-ஒளி காட்சிகள் மற்றும் திரைப்படங்கள் நடைபெறும். ‘அஞ்ஞானிகளான’ இந்துக்களுக்கு கிறிஸ்துவின் ‘அன்பினை ‘ கொண்டுசெல்ல பல பின்தங்கிய வறுமைப்பட்ட கிராமங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே இத்திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.

பொதுவாக பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ‘ஜீஸஸ் ஆஃப் நாஸரேத்’லிருந்து எடுக்கப்பட்ட ‘பாடு ‘ காட்சிகள் காட்டப்படும். இப்போது மெல் கிப்சன் புண்ணியத்தில் கணினி வரைகலை உதவியுடன் வெகு யதார்த்தமாக நம்பகத்தன்மை வெகு அதிகமாக அதிகரிக்கப்பட்ட ஏசுவின் சிலுவைபாடுகளை அஞ்ஞானிகள் கண்டு ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தையும் சதையும் புசித்து தங்கள் பாவங்களை கழுவிக்கொள்ளலாம். மெல்கிப்சன் ஏற்கனவே உலகெங்கிலுமுள்ள எவாஞ்சலிஸ்ட்களுக்கு -குறிப்பாக டெலி-எவாஞ்சலிஸ்ட்களுக்கு- இத்திரைப்படத்தை பயன்படுத்தி ஆன்ம அறுவடைச் செய்ய அழைப்பு விடுத்துள்ளார். ஏனெனில் இத்தகைய ஒரு ஏசுவின் சிலுவைபாடு திரைசித்திரம்தான் கல்லூரி மாணவன் பாபி ஜிண்டால் தன் ஆன்மாவை கத்தோலிக்க சபைக்கு விற்க வழிவகுத்தது. மட்டுமா ? ‘இந்துக்களும் முஸ்லீம்களும் அமெரிக்காவில் எந்த ஒரு அரசு பதவியும் வகிக்க தகுதியற்றவர்கள் ‘ என்று கூறியவரால் உருவாக்கப்பட்ட ‘கிறிஸ்டியன் கொயலிஷன் ‘ எனும் அடிப்படைவாத அரசியல் அமைப்பின் நட்சத்திர வானொலி பேச்சாளராகவும் பாபி ஜிண்டால் உருவாக வழி வகுக்கவும் செய்தது.

(பாபி ஜிண்டால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. இளம்வயதில் மதம் மாறிய இவர் அமெரிக்காவின் மதவெறிகொண்ட அடிப்படைவாத கிறிஸ்தவர்களால் பெரிதும் விரும்பப் படுபவர். 2008-2016 காலகட்டத்தில் லூசியானா மாநில கவர்னராக இருந்தார்)

மெல்கிப்சனின் வன்முறைக்காட்சிகளும் யூத வெறுப்பியலை நியாயப்படுத்தும் காட்சிகளும் நிரம்பிய ஏசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகள் இந்திய திரையரங்கங்களில் திரையிடப்படும் வேளையில் இந்த சிலுவைபாடு நாடகங்கள் நடந்து வந்திருக்கும் இரத்தம் தோய்ந்த நடைபாடுகளை காண்போம். இந்த இரத்தமும் யூத இரத்தம்தான். ஆனால் ஏசு போல வரலாறா கற்பனையா என அறியப்படாத ஒரு யூதனின் இரத்தமல்ல. மாறாக பல கோடி யூதர்களின் இரத்தம்; யூத குழந்தைகள் மற்றும் பெண்களின் இரத்தம்.அன்பின் பெயரால் தன்னை பிரகடனப் படுத்தியதாகக் கூறப்படும் தெய்வத்தின் பெயரில் மானுடத்தின் வரலாற்றிலேயே நினைத்துப்பார்க்க முடியாத அளவு நடத்தப்பட்ட கொடுமைகளின் இரத்தம் தோய்ந்த பாதை இந்த சிலுவைபாடுகளின் பாதை.

ஆஸ்ட்விட்ச் கொலைக்களம்: ஏசு அழைக்கிறார்?

ஜெர்மனியில் நாஸிகளின் உதயத்திற்கு பலகாலம் முன்பே அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்த சிலுவைபாடு நாடகங்கள்தான். சாம்பல் புதன் அதனைத் தொடர்ந்து பின் புனித வெள்ளி தொடர்ந்து ஈஸ்டர் வரையிலான காலங்களில் இந்த நாடகம் போடப்படும். அதைத் தொடர்ந்து வெடிக்கும் யூதர்களுக்கான உள்ளூர் ‘தீர்வுகள் ‘. நாடகங்களில் ரோமானிய அதிபன் போண்டியஸ் பைலேட் ஏசுவை கொல்ல மிகவும் தயங்குவான். யூதர்களும் அதன் ஆச்சாரியர்களும் அவனை கட்டாயப்படுத்துவர். அதன் விளைவாகவே அவன் அவனுக்கு இஷ்டமில்லாது இந்த அப்பாவியின் இரத்தத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதைக் காட்ட கை கழுவுவான். யூதர்களோ இந்த கொலைக்கான பழி எங்கள் மீதும் எங்கள் சந்ததியினர் மீதும் விழட்டும் என குரலெழுப்புவர். இது மத்தேயு எழுதியதாகக் கூறப்படும் ‘பரிசுத்த நற்செய்தி ‘யிலிருந்து (மத்தேயு-27:25). பின்னர் சிலுவைபாடுகள் தொடங்கும். இந்த நாடகங்களில் பொதுமக்களின் பிரக்ஞையில் மிகத்தெளிவாக யூதர்கள் மீதான வெறுப்பிற்கான இறையியல் காரணங்கள் பதிந்துவிடும். பவாரியாவில் ஒபரம்மெர்கவ் (Oberammergau) கிராமத்தில் நடத்தப்படும் சிலுவைப்பாடு நாடகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

யூத எதிர்ப்பு சூறையாடல்களுக்கு உத்வேகம் அளித்தன ஏசுவின் பாடு நாடகங்கள்

1663 இல் ஏற்பட்ட பிளேக்கிலிருந்து இந்த கிராமம் அதிசயமாக காப்பாற்றப்பட்டதால் அதற்கு நன்றிக்கடனாக 1664 -இலிருந்தே இந்த சிலுவைப்பாடு நாடகம் நடத்தப்படுவதாக வட்டாரக்கதைகள் கூறுகின்றன. ஆனால் வரலாற்றறிஞரான ஜேம்ஸ் ஷெப்பிரொ இந்த கதை வெறும் கதைதான் என்றும் இதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை என்றும் கூறுகிறார். ஆனால் இந்த நாடகம் ஐரோப்பா முழுவதும் புகழ்பெற்றது. அந்த கிராமத்துக்கு நல்ல வருவாயைத் தேடித்தந்தது. ஆனால் இந்த நாடகத்தின் முக்கிய அம்சமாக விளங்கியது அதன் யூத வெறுப்புணர்ச்சிதான். ‘கிரிஸ்டல் இரவு ‘ என்கிற யூதர்கள் தேடிப்பிடித்து செய்யப்பட்ட கொலைத்தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஒபரம்மெர்கவ் ஏசுபாடுகள் நாடக நடிகர்கள்தான். 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதல்களை நடத்திய இளம் நாசிகளை வழி நடத்தி சென்ற ஆண்டன் பெரிசிங்கர், இசையாளர் மேக்ஸ் மேயரை அவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்கி ‘புகழை ‘ச் சம்பாதித்துக் கொண்டான். 1947 இல் நாசி-எதிர்ப்பு நீதி மன்றத்தால் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட இவனே ஒபரம்மெர்கவ் ஏசுபாடுகள் நாடகத்தில் ஏசுவாக நடிக்க 1950- இலிலும், 1960-இலிலும் தேர்ந்தெடுக்கப்பட்டான். 70 இல் இவன் இந்த நாடகத்தின் இயக்குநராகவே பணியாற்றினான். இந்த நாடகத்தின் பார்வையாளர்களில் முக்கியமான ஒருவன் அடால்ப் ஹிட்லர். அவன் இந்த நாடகத்தை இருமுறை பார்த்தான்(1930,1934). 1934 இல் இந்த நாடகத்தில் நடித்த அனைவருமே நாசிகள் அல்லது நாசி ஆதரவாளர்கள். யூதாசாக நடித்தவர் மட்டுமே யூத வெறுப்பிற்கு எதிராக பகிரங்க குரல் எழுப்பியவர். முதன்முறை பார்த்தபோதே இந்த நாடகம் ஹிட்லரை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஏசுவின் சிலுவை பாடுகளை நாசி கருத்தியலை பரப்புவதற்கான மிகச்சிறந்த கருவி என அவன் புகழ்ந்துரைத்தான்.

ஒபரம்மெர்கவ்வின் அருகிலேயே உள்ள நாசிகளின் தாசெவ் (Dachau) அடிமை முகாம் சிலுவைபாடுகளின் இருண்ட பரிமாணத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது. 1988 இல் சில கத்தோலிக்க பாதிரிகளின் முயற்சியால் நாடகத்தின் யூத வெறுப்பியல் குறைக்கப்பட்டதாக் உலகிற்கு காட்டப்பட்டது. ஆனால் ஷெப்பிரொ இந்த நாடகத்தின் 1999 வருட தயாரிப்பினை நியோ நாசிக்கள் பயன்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 2000-ஆம் ஆண்டு காட்டப்பட்ட இந்த நாடகத்தில் யூத வெறுப்பு இல்லாதிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

தாசெவ் யூத வதைமுகாம் (Dachau concentration camp)

தாசெவ் வதைமுகாம் : மீட்கப்பட்ட யூதர்கள்

நாசிகளால் ஆறு மில்லியன் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட மனிதகுலத்திற்கே எதிரான கொடுங்குற்றம் வெளியான பின் யூத வெறுப்பியல் வெளிப்படையாக பேசப்பட முடியாது போயிற்று. அதன் பின்னரும் கூட கத்தோலிக்க சடங்குகளில் யூத வெறுப்பு வெளிப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திகான் கவுன்சிலுக்கு (1960) பின் அது சிறிதே குறைந்தது. இந்த கவுன்சிலில் கத்தோலிக்க திருச்சபை, ‘திருச்சபைக்கு வெளியே மீட்பு உண்டு ‘ மற்றும் ‘யூதர்கள் மீதான மீட்பரின் இரத்த சாபம் தவறு ‘ என்பதான பிரகடனங்களை செய்தது. ஆனாலும் கத்தோலிக்க உட்-பிரிவுகள் சில இரண்டாம் வத்திகான் கவுன்சிலை ஏற்கவில்லை. அந்த உட்பிரிவுகளில் மெல்கிப்சன் சார்ந்திருக்கும் கத்தோலிக்க பிரிவும் ஒன்று. மெல் கிப்சன் இப்பிரிவின் தீவிர உறுப்பினர். ஆனால் இன்று வத்திகானின் தலைமைபீடமான போப்பாண்டவரே இரண்டாம் வத்திகான் கவுன்சிலிலிருந்து பின்னகர்ந்து ‘கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே மானுடத்துக்கு மீட்பு கிடையாது ‘ என அறிவித்துவிட்டார். (அதாவது மகாத்மா காந்திக்கு நரகம்; மெல்கிப்சனுக்கு சுவர்க்கம்).

யூதர்களுக்கு எதிராக மத்தேயு ‘நற்செய்தி’யிலுள்ள ‘இரத்த சாப ‘ கட்டுக்கதையை பயன்படுத்த சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்தால் திருச்சபை தயங்காது என்பதற்கான சான்று 2001 இல் கிடைத்தது. மே, 2001 இல் போப் ஜான்பால்-II சிரியாவிற்கு சென்றார். அங்கு போப் ஜான்பாலுக்கு மரியாதை வரவேற்பு அளிக்க நடத்தப்பட்ட கூட்டத்தில் சிரியாவின் அதிபரான பஷார் அசாத் போப்பின் முன்னிலையிலேயே யூதர்களை ஏசுவைக் கொன்றவர்கள் என்றும் இசுலாமியர்களால் நபி என்று நம்பப்படுகிற முகமதுவை கொலை செய்ய முயன்றவர்கள் என்றும் கூறி அவர்களை எதிர்க்க வேண்டிய இறையியல் கடமையை உணர்த்தினார். இரண்டாம் உலகப்போருக்கும், ஆறுமில்லியன் யூதர்களின் படுகொலைக்கும் பின்னர் உலக தலைவர்களின் மேடை ஒன்றில் மிகவெளிப்படையாக யூதர்கள் மீது ‘இரத்த சாப’ குற்றம் மூலம் அரசியல் எதிர்ப்புணர்வை உருவாக்க முயன்ற பேச்சு இதுவேயாகும். இப்பேச்சு முழுவதையும் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக ஏற்றுக்கொண்ட போப் அப்போது மேடையில் இருந்தபடி அமைதிகாத்தார் என்பது மட்டுமல்ல, பின்னர் பஷார் அசாத்தை அவரது அமைதிக்கான முயற்சிக்காக பாராட்டவும் செய்தார். உலகெங்குமுள்ள யூத மற்றும் மதச்சார்பற்ற மானுட நேய அமைப்புகள் இதற்காக கண்டனம் தெரிவித்ததுடன் போப்பை தன் சிரிய சுற்றுப்பயணத்தை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தன. ஆனால் போப் அவற்றையெல்லாம் முழுமையாக புறக்கணித்து தன் சிரிய சுற்றுப்பயணத்தை எவ்வித தடங்கலுமின்றி முடித்துக்கொண்டார்.

இதே போப்தான் பெத்லகேம் நகரத்துக்குள் ஒரு மூலையில் ஒரு மசூதியை கட்ட இஸ்ரேலிய அரசு முஸ்லீம்களுக்கு அனுமதி அளித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான வத்திகானின் உறவையே முறித்துவிடுவதாக கூக்குரல் எழுப்பியவர். (இயேசு வளர்ந்ததாக நம்பப்படும் நகரமான பெத்லகேம் நகருக்குள் மசூதி கட்டினால் பெத்லகேமின் புனிதம் கெட்டுவிடுமாம்!) யூத வெறுப்பியலின் இறையியல் அடிப்படைக்கான அங்கீகாரத்தை கத்தோலிக்க தலைமைபீடம் வழங்கிவிட்ட பின் இஸ்ரேலில் இன்று பாலஸ்தீனியர்கள் என அழைக்கப்படும் இஸ்ரேலிய அராபிய மக்களுக்கும் இஸ்ரேலியருக்குமான மோதல்களில் இந்த கிறிஸ்தவ கட்டுக்கதை பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

உதாரணமாக கத்தோலிக்க இத்தாலியின் பிரபல பத்திரிகையான ‘ல ஸ்டாம்பா ‘ இஸ்ரேலிய டாங்கி ஒன்றினைக் காட்டி அதனருகே குழந்தை வடிவ ஏசு ‘என்னை நீ மீண்டும் கொல்ல வேண்டுமா ? ‘ என கூறுவது போல கார்ட்டூன் வெளியிட்டிருந்தது (2004). ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இத்தகைய கேலிசித்திரங்கள் நாசி இதழ்களில்தான் வரமுடியும். இத்தகைய சூழலில்தான் மெல்கிப்சனின் திரைச்சித்திரத்தில் இடம் பெறும் யூதர்கள் மேலான ‘இரத்தசாபக் ‘ கட்டுக்கதையை வரலாற்று உண்மையாக உலகெங்கும் காட்டும் காட்சிகள் முக்கியத்துவமடைகின்றன.

யூத வெறுப்பியலின் இறையியல் சிலுவையில் தொடங்குகிறது

யூத வெறுப்பியலுக்கு எதிரான அமெரிக்காவின் முக்கிய அமைப்பான Anti Defamation League (ADL) மெல்கிப்சனின் திரைப்படத்தை மக்களுக்கு திரையிடப்படுமுன் பார்த்தது. அந்த அமைப்பின் இயக்குநர் ஆபிரகாம் பாக்ஸ்மான் ‘இப்படம் அதன் இப்போதைய நிலையில் வெளியிடப்பட்டால் வெறுப்பு, மதவெறி மற்றும் யூத-எதிர்ப்பு ஆகியவற்றையே பரப்புவதாக இருக்கும். ‘ என கூறுகிறார். தனக்கு யூத எதிர்ப்பு ஏதுமில்லை என மெல் கிப்சன் மறுத்துள்ளார். ஆனால் அவர் பெருமையாக கிறிஸ்தவ மததலைமைப் பீடங்களிடமும், கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட்களிடமும் தெரிவித்துள்ள தகவல்கள் அவரது கூற்றினை பொய்ப்பிக்கின்றன. திரைக்கதை மற்றும் வசனம் நற்செய்திகள் தவிர அக்ரிதாவின் மேரி மற்றும் ஆனி காத்தரைன் எம்ரிச் எனும் இரு கத்தோலிக்க பெண் துறவிகளின் எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்டவை என்றும் எனவே வரலாற்றுத்தன்மை உடையவை என்றும் மெல்கிப்சன் கூறியுள்ளார். ஆனால் இந்த இரு பெண் துறவிகளுமே யூதர்களை கடுமையாக வெறுத்தவர்கள். யூதர்கள் கிறிஸ்தவ குழந்தைகளைக் கொன்று மதச்சடங்குகள் செய்வதான பொய்களை கூட எழுதத்துணிந்தவர்கள். எனவே ADL அமைப்பினர் இந்த திரைப்படத்தை வெறுப்பியல் வெறியை உருவாக்கும் திரைப்படம் எனக் கூறுவது சிறிதும் தவறல்ல.

இரண்டாம் உலகப்போருக்கு முன் ஐரோப்பிய பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் துரு பிடித்த பழைய ஆணிகளைக் காட்டி ‘இது என்ன தெரியுமா குழந்தைகளே! இதுதான் நம் மீட்பரான ஏசுவை சிலுவையில் அறைய யூதர்கள் பயன்படுத்திய ஆணி ‘ என்பார்கள். மாணவர்கள் ஆணியை பார்க்க மாட்டார்கள். வகுப்பறையிலிருக்கும் சக யூத மாணவர்களை ஏதோ அவர்கள்தான் இவர்களது ‘மீட்பரை’க் கொன்றுவிட்டு இப்போது வகுப்புக்கு வந்திருப்பது போல பார்ப்பார்கள். இத்தகைய ‘சிலுவைபாடு ‘ ஆணிகளை இரண்டாம் உலகப்போருக்கு பின் காண்பது வெகுவாக குறைந்துவிட்டிருந்தது. இப்போது மெல்கிப்சனின் ‘புண்ணியத்தில் ‘ அத்தகைய ஆணிகள் விற்பனை வெகுவாக கூட ஆரம்பித்துள்ளதாம். (தன் ஒரே குமாரனின் இரத்தத்தால் நம் பாவங்களையெல்லாம் கழுவி, அவ்வாறு கழுவாத அஞ்ஞானிகளுக்கு நித்ய நரக நெருப்பை அளிக்க தயாராக இருக்கும் அன்பே வடிவான வானக தந்தையின் சுவர்க்கத்தில் மெல்கிப்சனுக்கு இப்போதே ‘Presidential Suite ‘ முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.)

போண்டியஸ் பைலட் தன் கரங்களை கழுவியதன் மூலம் ஒரு கற்பனையா அல்லது உண்மையா என நாம் அறியமுடியாத இயேசு எனும் யூதரின் இரத்தப்பழியிலிருந்து விடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கும் வரலாறு முழுக்க கோடிக்கணக்கான மக்களின் இரத்தப்பழியிலிருந்து சிலுவைபாடு சித்தரிப்புகள் அத்தனை எளிதாக தப்பிவிடமுடியாது – அது மெல்கிப்சன் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட கிராபிக்ஸ் சிலுவைப்பாடானாலும் கூட.

பின்குறிப்பு:

கிறிஸ்தவ இறையியலின் மையத்திலிருந்து விலக மறுக்கும் யூத-வெறுப்பு இன்று உலகெங்கிலும் விவாதிக்கப்படுவது போல கிறிஸ்தவத்தின் விக்கிரக ஆராதனை எதிர்ப்பில் இருக்கும் இறையியல் வன்முறையின் வரலாற்று விளைவுகள் விவாதிக்கப்படவில்லை. உதாரணமாக உலகிலேயே மிக நீண்டகால புனிதவிசாரணை எனும் கொடுமை எந்த ஐரோப்பிய மண்ணிலும் நடத்தப்படவில்லை மாறாக பாரதத்தின் கொங்கண கடற்கரையோர பிரதேசங்களில்தான் நடத்தப்பட்டது. எனினும் புனிதவிசாரணை குறித்த வரலாற்றுச்சித்திரம் ஐரோப்பாவில் நடந்த புனித விசாரணைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது.

"ஏறத்தாழ 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இக்கட்டுரையில் எந்த வரிகளை நான் இன்றைக்கு மாற்றுவேன் என்று வாசித்துப் பார்த்தேன். இந்த வரிகளை சேர்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஏசுவின் இடத்தில் தாமஸை போடுங்கள். யூதர்களின் இடத்தில் பிராம்மணர்களை போடுங்கள். ஏசுவின் இடத்தில் தேவசகாயத்தைப் போடுங்கள் யூதர்களின் இடத்தில் குமரி மாவட்ட இந்துக்களைப் போடுங்கள். நமக்கு எதிராக எப்படிப்பட்ட வெறுப்பு பழி உருவாக்கப்படுகிறது என்பதை யூதர்கள் பட்ட வேதனைகளிலும் அனுபவித்த அழிவுகளிலும் இருந்து புரிந்து கொள்ளுங்கள்.’"

- கட்டுரையாசிரியர், ஃபேஸ்புக்கில், ஏப்ரல் 2, 2021.

திண்ணை.காம் இதழில் 2004 மார்ச்சில் வெளிவந்த கட்டுரை. முகப்பில் உள்ள கவிதை 2013ல் கட்டுரையாசிரியர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

One Reply to “புனித சிலுவையின் நாசி கொலைக்களம்”

  1. மேற்படி திரைப்படத்திற்கு தடை ஆணை பெற்று நிரந்தரமாக முடக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *