அஞ்சலி: தமிழறிஞர், ஆய்வாளர் பெ.சு.மணி

தமிழறிஞர், ஆய்வாளர் பென்னாத்தூர் சுந்தரேசன் மணி என்கிற பெ.சு.மணி  27 ஏப்ரல் 2021 அன்று தில்லியில் மறைந்தார். இவரது மரணம் தமிழ் ஆய்வுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.  85 வயது வரை வாழ்ந்து சுமார் 80 நூல்களை இவர் எழுதியுள்ளார். வெ.சாமிநாத சர்மா, மகாகவி பாரதி, ம.பொ.சி முதலானோரைத் தனது ஆதர்சங்களாகக் கொண்டவர். பல துறைகளில் ஆழ்ந்த வாசிப்பும், இந்திய தேசியம் மீது உறுதியான பிடிப்பும், ஸ்ரீராமகிருஷ்ண-விவேகானந்த குருமரபின் மீது பக்தியும் கொண்டவர். அவரது மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி. ஓம் சாந்தி. 

தீவிர இலக்கிய செயல்பாட்டாளர், “நவீன விருட்சம்” இதழாசிரியர் அழகிய சிங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய குறிப்பிலிருந்து:

நாங்களிருந்த எதிர் தெருவில்தான் பெ.சு.மணியின் வீடு. பெரும்பாலும் தெருவில்தான் அவரைச் சந்திப்பேன். இன்று (27 ஏப்ரல் 2021) மாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. முகநூலில். அவர் மனைவி உயிரோடு இருந்தபோது அவருடைய சென்னை வாழ்க்கை சிறப்பாகப் போய்க் கொண்டிருந்தது. அவர் மனைவி இறந்தவுடன் அவர் பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது.

அவருடைய மூத்தப் பெண் தில்லியிலும், இரண்டாவது பெண் பெங்களூரில் வசிக்கிறார்கள். இவர் தனியாக இருக்கிறேன் என்று சென்னையில் இருந்தார். அவர்களுக்கு இவரைத் தனியாக இங்கு விட விருப்பமில்லை. பல மாதங்கள் இவர் சென்னையிலும், மற்ற இடங்களிலும் வசித்து வந்தார். சென்னையில் இருக்கும்போது அவருக்கு மனைவியின் நினைவுதான்.

அவருடைய ஆசை எப்படியாவது 100 புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது. நான் அவருக்காக அவருடைய மூதாதையர் கொண்டு வந்த சம்ஸ்கிரதப் புத்தகம் கொண்டு வந்தேன். அது சாத்தியமே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்தார். அந்தப் புத்தகம் அச்சானதும் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவில்லை.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பலரை நான் பேட்டி எடுத்தேன். பெ.சு மணியையும் பேட்டி எடுத்தேன். அவர் மறைந்த இந்த நாளில் திரும்பவும் இங்கு வெளியிடுகிறேன்.


அண்மையில் வ.உ.சி குறித்த முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டு எழுதிவரும் ஆய்வாளர் திரு, ரெங்கையா முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த மீள்பதிவு:

கொடிது கொடிது முதுமையில் தனிமை கொடிது (எழுதப்பட்ட நாள்: மே 18, 2019).

இரண்டு வாரங்களுக்கு முன்பாக பெ.சு.மணி அய்யா அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன். கடந்த ஒரு மாதமாக சென்னையில் அவரது வீட்டில் தனியாக தங்கி வருகிறார். சில நேரங்களில் போன் செய்து ’வந்து விட்டு போப்பா’ என்று அன்புடன் அழைப்பார். நகர நரகவாழ்க்கையில் அலுவலக வேலையை முடித்து விட்டு அவரை பார்த்து விட்டு வரலாம் என்றால் நாட்கள்தான் செல்கிறது. என்னால் போக முடியாத சூழல் இருந்தது. ஒரு கட்டத்தில் அவரை சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று மனது உறுத்தி விட்டது. மதியம் முதல் போன் செய்தேன். போனை எடுக்க வில்லை. பரவாயில்லை நேரடியாக போய்விடுவோம் என்று எண்ணி வீட்டிற்கு சென்று விட்டேன்.

வீட்டின் அழைப்பு மணியை அரை மணி நேரமாக அடித்து ஓய்ந்து விட்டேன். அய்யா அய்யா என்று பலம் உள்ள வரை கத்தியும் பார்த்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால் வீட்டிற்குள்ளேதான் இருந்தார். பின்பு கீழே இறங்கி விட்டு மேலே பார்த்தேன். பெ.சு.மணி அய்யா அவர்கள் பால்கனியில் சேரில் அமர்ந்திருந்தார். அய்யா நான் முருகன் வந்திருக்கேன் என்றேன். பால்கனியிலிருந்து திரும்பியும் என்னைப் பார்த்து யார் என்றார். அய்யா நான்தான் முருகன் என்றேன். ஒன்றும் புரியாதவராய் மேலே வாருங்கள் என்றார்.

பழைய கம்பீரமான பெ.சு. மணி அய்யாவை காணமுடியவில்லை.களையற்ற முகத்துடன், நடையும் தளர்ந்து மெதுவாக கைத்தடி துணையுடன் நடந்து வந்து வாப்பா முருகா என்றார். அய்யா நான் வந்து அரை மணி நேரமாக போன் செய்து, அழைப்பு மணி அடித்து ஓய்ந்து விட்டேன் என்றேன். காது கேட்கும் கருவி வேலை செய்யவில்லை. பாட்டரி தீர்ந்துவிட்டது. போய் வாங்கி வருவதற்கு என்னால் நடந்து போக முடியவில்லை . யாராவது வந்து வாங்கி தர ஆட்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். சரி பரவாயில்லை. என்னென்னோ தேவையோ சொல்லுங்கள். நான் போய் வாங்கி விட்டு வருகிறேன் என்றேன். காது கேட்கும் கருவிக்கு அவர் வாழும் பகுதியில் ஒரு கடையில் பேட்டரி வாங்கி வருகிறேன் என்றேன். என்னை கடைக்கு அனுப்ப அவர் மனது இடம் கொடுக்கவில்லை. என் மனது கேளாமல் நான் கடைக்கு சென்றால் கடை மூடியிருந்தது. அக் கருவிக்கான் பேட்டரி அப்பகுதியில் வேறு எங்கும் கிடைக்கவும் இல்லை. ஏமாற்றத்துடன் திரும்ப வந்துவிட்டேன். அவருக்கு நான் வந்தும் உதவி செய்ய முடியவில்லையே என்று மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

முருகன் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். அய்யா உங்கள் வேலையை பாருங்கள். நான் வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றேன். அதெல்லாம் முடியாது. நீ வீட்டுக்கு வந்தால் சரசுவதி (அய்யாவின் காலமான மனைவி) சாப்பிடாமல் உன்னை அனுப்பி இருக்கிறாளா? அம்மா அளவுக்கு சமைக்காவிட்டாலும் இன்று நான் சரசுவதியாக இருந்து நான் சமையல் செய்வதை சாப்பிட்டு விட்டு செல் என்று அன்பு கட்டளையிட என்னடா வம்பாய் போய்விட்டது. நாம் ஏதாவது அவருக்கு உதவ வந்தால் அவரை கஷ்டபடுத்தும் சூழ்நிலையை அவரே உருவாக்குகிறாரே என்று மனம் நொந்துவிட்டது. அவருக்கு மாலை வேளையில் யாரோ உணவை தயார் செய்து கொண்டு வைத்திருந்தனர். மெல்ல கைத்தடி துணையுடன் சாப்பாட்டு மேசை மீது வைத்திருந்த டிபன் கேரியரில் இருந்த அடை தோசையை எடுத்து வேண்டிய அளவுக்கு மீறி தோசைக் கல்லில் நெய்யை இட்டு பிரட்டி இரண்டு அடைதோசையை தட்டில் வைத்தார். பாதி தட்டு சாப்பிட முடியாத அளவுக்கு சக்கரையும்(குறைந்தது 100 கிராமுக்கும் கூடுதலாக) வைத்து தந்தார். அய்யா அளவுக்கு மீறி சக்கரையை வைத்துள்ளீர்கள். சாப்பிட முடியாது என்றேன். நல்ல சக்கரை சாப்பிடு என்றார். அவரது அன்பை மீற முடியாமல் அளவுக்கு மீறிய சக்கரையையும், நெய் மணத்துடன் அடை தோசையையும் சாப்பிட்டு விட்டேன்.

அவருடன் இளைப்பாறுதலுக்காக பேசிக் கொண்டிருந்த வேளையில் அய்யாவின் இளைய புதல்வி அலைபேசியில் அழைப்பு விடுத்தார். அவருக்கு காது கேட்கவில்லை. நான் அவரிடம் போன் வருவதாக கூறி மொபைலை கொடுத்தேன். மறுமுனையிலிருந்து பேசுவதை கேட்காமல் இந்த முனையிலிருந்து இவர் பேசுவதை மட்டுமே பேசிகொண்டிருந்தார். மொபைலை சரியாக காதில் வைத்து அவுங்க சொல்வதை கேட்காமல் நீங்களே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றேன். எனக்கு காது கேட்கவில்லையே முருகன் என்றார். ஒரு தினச் செய்தி தாள் வாங்கி வர வேண்டுமென்றால் யாரையாவது எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. வாங்கி வரும் நபருக்கு தனியாக 10 ரூபாய் கொடுத்து விடுவேன் என்றார். எனது காலத்திற்கு பிறகு பிராமணர்களை அழைத்து வீணாக சடங்கு என்ற பெயரில் வீணாகசெலவு செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அது குறித்து வீட்டில் உள்ளோரோடு பேசியிருப்பதாகவும் கூறிக் கொண்டிருந்தார். அந்த வீண் செலவை தவிர்க்க ஏழை குழ்ந்தைகளுக்கு உணவிட்டு அவர்கள் பசியை தீர்த்த்தாலே போதும் என்று பேசிக் கொண்டிருந்தார்.

தாங்கள் இப்படி தனியாக இருந்து அவதிப்படுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தயவு செய்து தங்களது புதல்விகளுடைய வீட்டில் இருங்கள். அவர்களும் தாங்கள் தனியாக இருப்பது குறித்து வருத்தப்படுகிறார்கள் என்றேன். அய்யாவுக்கு கோபம் வந்து விட்டது. நீயும் புரியாமல் இப்படி பேசுகிறாயே என்றார். அவர்களுடன் இருக்கும் போது நான் தனிமையில் இருப்பதாக உணர்கிறேன் என்றார். இப்ப நீ பார்க்க வந்திருக்க. பிடித்த இலக்கிய விசயங்களை பேசிக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் பெங்களூரிலோ, டில்லியிலோ தங்கியிருந்தால் முடியாதல்லவா என்றார்.

அவருக்கு யாராவது வந்து எழுத்து சம்பந்தமான விசயங்கள் பேச ஆளுமைகளை தேடுகிறார். என்னைப் போன்றோர் வந்தால் மிக்க உற்சாகமாகி விடுகிறார். நமக்கு நேரம் வாய்க்கமாட்டேங்குது. மெல்ல நடந்து வந்து சாய்வு நாற்காலியில் அமர்கிறார்.

அவருக்கு முன்பாக இரண்டு முக்கிய படங்கள் சுவற்றில் தொங்குகிறது. அண்மையில் காலமாகிய அவரது அன்பு மனைவி சரசுவதி அம்மா படமும் , மற்றொன்று அவருடைய எழுத்து வழிகாட்டியும் குருவுமான வெ.சாமிநாத சர்மா அவர்களின் படமும். அந்த படங்களை பார்த்து கொண்டே இருக்கிறார்.

ஒரு நண்பர் மூலமாக மணி அய்யா குறித்து முக்கிய செய்தி அறிந்தேன். வெ.சாமிநாத சர்மா அவர்கள் மணி அய்யாவிடம் தனது வாழ்நாளில் பேர் சொல்லும்படி 100 புத்தகங்களாவது எழுதி விடு என்றாராம். அதனை தாரக மந்திரமாக கொண்டு தரமான ஆய்வு புத்தகங்களை மட்டும் எழுதி வருபவர்.

வெ.சாமிநாத சர்மா அவர்கள் பெ.சு.மணியை குறிப்பிடும் போது இலக்கியப் பணி என்ற பெயரால் தங்கள் பொழுதையோ, மற்றவர்கள் பொழுதையோ போக்குவதற்காக நூல்கள் எழுதாமல் அறிவுக்கும் சிந்தனைக்கும் ஊட்டம் தரக்கூடிய நூல்களை படைப்பதில் மட்டுமே பெ.சு.மணி தீவிரவாதியாகவே திகழ்பவர் என்று சர்மா அவர்களால் பாரட்டப்பட்டவர்.

பெ.சு.மணி அவர்கள் பல்கலை கழக வளாகங்களில் பேராசிரியராக பணிபுரிந்து கை நிறைய சம்பளம் வாங்கி வேலை செய்பவருமல்ல. அஞ்சல் துறையில் இரவு முழுவதும் கடிதங்கள் பிரிக்கும் வேலையை செய்து கொண்டு பகல் முழுவதும் சைக்கிள் மிதித்து நூலகம் தோறும் சென்று தேனீ போன்று உழைத்து கொண்டு வந்த புத்தகங்கள் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு முன்னேறுவதற்கு இவரது புத்தகங்கள் படிக்கல்லாய் திகழ்ந்தது.

2015 ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் எனது வீட்டில் 2000 புத்தகங்களுக்கு மேல் நனைந்து சிதிலமடைந்து விட்டது. தின மலரில் இது குறித்தான செய்தி வெளிவந்தவுடன் போனில் என்னிடம் தொடர்பு கொண்டு பதற்றத்துடன் என்னை தேற்றினார். தேற்றியதோடு மட்டுமல்லாது அவர் பதிப்பித்த 60 நூல்களினையும் வெளியிட்ட பதிப்பகத்தாரிடம் கூறி அவர்களே கொண்டு வந்து என்னிடம் நூல்களினை சேர்க்கச் செய்தார். இத் தன்மை கொண்டவர்தான் பெ.சு.மணி அவர்கள்.

நான் சாதாரண நூலகராக பணிபுரிந்த கொண்டிருந்த போது என்னையும் ஒரு ஆய்வாளானாக பரிமளிக்க செய்தவர் பெ.சு.மணி அவர்கள். நூலகத்திற்கு வந்து போகும் பல பேராசிரியர்களுக்கு மத்தியில் இவர் ஒருவர்தான் அன்றைய காலங்களில் என்னை வீட்டிற்கு வரவழைத்து பக்குவப் படுத்தியவர். நான் இன்றைய காலங்களில் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் இவர் எழுதிய கட்டுரையின் பாதிப்பு இல்லாமல் நான் எழுதியதில்லை.

வ.உ.சி. பித்தனாக நான் மாறியதற்கு பெ.சு. மணி அய்யாவின் வ.உ.சி. குறித்த தொடர்ந்த உரையாடலும், ஆ.சிவசுப்பிரமணி அய்யாவின் நூல்களின் பாதிப்பும்தான். நெய்வேலி பாலு, மேண்மை மணி போன்றோர் அவரை அடிக்கடி பார்த்து வரும் அன்பர்கள். அவருடைய பொழுதை கழிப்பதற்கு அவர் மனம் ஒத்த அன்பர்கள் சென்றால் கொஞ்சம் உற்சாகமாகி விடுகிறார். ஏனெனில் அவரது கம்பீர குரல் தற்பொழுது குறைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் அவரது புத்தகங்கள் கொண்டு வர பதிப்பாளர்கள் யாரும் பதிப்பிக்க முன் வர வில்லை என்று வருத்தமான தொனியில் பகிர்ந்த போது மனதுக்கு வருத்தமாகி விட்டது.

அவரது புத்தகங்கள் அனைத்தும் இது வரை செண்டிமெண்டாக ஒரே பதிப்பகம்தான் கொண்டு வந்தது. வெ.சாமிநாத சர்மாவினுடைய ஜோதி இதழ், மற்றும் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள் நடத்திய ஞானபானு இதழையும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

1973ல் வெளி வந்த பெ.சு.மணியின் முதல் நூலான “இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் ஆரம்பித்து இராமகிருஷ்ணர் ஆய்வு நூல்கள், பாரதி ஆய்வுகள், வ.உ.சி.தொடர்பான நூல்கள், வ.வே.சு.அய்யர் நூல்கள், ம.பொ.சி. நூல்கள், இதழ்கள் குறித்த நூல்கள், இலக்கிய நூல்கள், என சகல பகுதிகளில் இது வரை 80 நூல்கள் வெளிவந்துள்ளன.

மிக முக்கிய தமிழ் ஆளுமைகளான கோ.வடிவேல் செட்டியார் முதல் ரத்தின தேசிகர், ஜம்புநாத அய்யர், வரதராஜுலு நாயுடு, அயோத்திதாச பண்டிதர் போன்ற அரிய ஆளுமைகள் தக்க சமயங்களில் நுட்பமாக ஆய்வுக் கண்ணோட்டத்துடன் வெளியிட்டவர். நம்முடைய பேராசிரிய பெருந்தகைகள் இவரது பெயரை வாகாக மறைக்கவும் செய்வர். அது குறித்து பல நேரங்களில் என்னுடனான உரையாடலில் விசனப்பட்டதுண்டு.

எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியம் கிட்ட வேண்டும். சாமிநாத சர்மாவின் கூற்று பொய்க்காமல் இருக்க இன்னும் 20 நூல்களினை பெ.சு.மணி அய்யா அளிப்பார். அந்த அளவுக்கு அவர் மனதில் வேகம் இருக்கிறது. நல்ல உடல் ஆரோக்கியம் அவருக்கு வாய்க்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நான் கண்ட அடுத்த அக்ரகாரத்து அதிசய பிறவி பெ.சு.மணி அய்யா அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *