இது குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில ஆக்கபூர்வமான, நேர்மையான கருத்துக்களைத் தொகுத்தளிக்கிறோம்.
"ஆட்சிக்கு எதிரான மனநிலை இருந்தால் மட்டும்தான் திமுக இதுவரை அரியணை ஏறியுள்ளது. என்றுமே மக்கள் திமுகவை ஆதரித்து வாக்களித்ததே இல்லை. இந்த தேர்தலில் ஆட்சிக்கு எதிரான மனநிலையே இல்லை. நாங்கள் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் மைனர் பார்ட்னர், மத்தியில் நல்ல நண்பர்கள். எங்கள் கூட்டணி மக்களுக்கு என்ன செய்தோம், என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஆனால் திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திக்கிறது. அதனால் வெற்றி பெற முடியாது. அதிமுக ஆட்சியை மக்கள் வெறுக்கவில்லை. குஜராத்தில் 27 வருடமாக ஆட்சி செய்கிறோம். எங்கள் மீது மக்களுக்கு வெறுப்பா வந்தது? ஒரு நல்லாட்சி நடத்தினால் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள். கொரோனா காலத்தில் இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளுக்கும் முன்னுதாரணமாக ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ். தலைமையிலான தமிழக அரசு நடந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எங்களால் எல்லாம் அதிமுகவை இயக்க முடியாது. அதிமுக பழம்பெருமைமிக்க பலமான கட்சி. அதற்கு உண்டான மரியாதையை கொடுத்து நல்ல நண்பராகத்தான் நாங்கள் தொடருகிறோம். மக்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்கொள்ள முடியாத பதட்டத்தில்தான் அவருடைய தாயை பழித்து திமுக பேசியது. ஒரு எளிய விவசாயி மகன் உச்சபட்ச அதிகாரத்தை அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக பேசியதை எந்த தமிழ் தாய்மார்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடையும். - மத்திய உள்துறை அமைச்சர், பாஜக தலைவர் அமித் ஷா, ஏப்ரல்-3 தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்
உங்கள் ரசிகன் ரவிப்ரகாஷ், ஃபேஸ்புக்கில்:
உண்மையான நடுநிலையாளர்களுக்கு ஒரு கேள்வி.
ஒருவரின் பேச்சில் உள்ள வக்கிரத்தைச் சுட்டிக்காட்டினால், உடனே ‘இவரைச் சொல்கிறீர்களே, அவரைச் சொன்னீர்களா?’ என்று பாய்கிறார்கள். ஆ.ராசாவைச் சொன்னால், எச்.ராஜாவைக் கை காட்டுகிறார்கள். பாரதியைச் சொன்னால் சேகருக்குத் தாவுகிறார்கள். பொதுவாக இதையெல்லாம் படிக்கிறவர்களுக்கு ‘நியாயம்தானே?’ என்று தோன்றும். இங்கே முக்கியமாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னைப் போன்று தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் நபரின் ஃபேஸ்புக் கருத்துக்கு மிஞ்சிப் போனால் பத்து லைக்குகளும் நாலு கமென்ட்டுகளும் கிடைக்கலாம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆனால், லட்சக்கணக்கான மக்களிடம் சென்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்கள் பிரதமர் மோடியை விமர்சிப்பது போலவோ, எஸ்.வி.சேகரை வளைத்து வளைத்து நக்கல் செய்வது போலவோ, எச்.ராஜாவை கேலியும் கிண்டலும் செய்வது போலவோ என்றைக்காவது ஸ்டாலினின் உளறல்களையோ, வீர்மணி, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா போன்றவர்களின் ஆணவப் பேச்சுகளையோ இந்த அளவுக்கு நக்கலும் நையாண்டியும் செய்து விமர்சித்திருக்கின்றனவா என்று யோசியுங்கள். தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்டிக்கொள்ள… ‘கம்பும் நோகாம, பாம்பும் சாகாம’ என்று சொல்வார்கள்; அதுபோல, ஒப்புக்கு ஒரு சில வார்த்தைகளில் கண்டித்திருப்பார்கள். ஆனால், அப்போதும் மறக்காமல் எதிரணியில் சிலர் சொன்னவற்றை ஞாபகப்படுத்திவிட்டே ஓய்வார்கள். இவ்வளவுதான் இவர்களின் நடுநிலை லட்சணம்!
பாவம் தமிழிசை சௌந்தர்ராஜன்… யார் வம்புக்கும் போகாமல் தானுண்டு தன் பணி உண்டு என்று இருப்பவர். அவரையும் அவரின் உருவத்தையும் கூச்ச நாச்சமில்லாமல் என்னவெல்லாம் கேலி செய்தன இந்தப் பாழாய்ப்போன ஊடகங்கள்?
தங்கள் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு, மக்களைத் தவறான பாதையில் திசை திருப்பும் பாவத்தைச் செய்துகொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.
BBC தமிழ் நேரலை: "எடப்பாடி அரசு மீது மக்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. அரசுக்கு எதிரான ஒரு "ஸ்வீப்" அல்லது "வேவ்" (அலை) என்று எதுவும் இல்லை" - தமிழக தேர்தல் களம் குறித்து மூத்த கல்வியாளர் மற்றும் அரசியல் பார்வையாளர், இதழியல் பேராசிரியர். சி.பிச்சாண்டி உடன் நேர்காணல். வீடியோ இங்கே.
சுரேஷ் வெங்கடாத்ரி, ஃபேஸ்புக்கில்:
நினைத்துப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது. 21ம் நூற்றாண்டின் கடந்துபோன இந்த 21 ஆண்டுகளில் தமிழகத்தை அதிமுகதான் 16 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது.அதில் 2011லிருந்து10ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கிறது.இந்த இருபத்தொரு ஆண்டுகளில் 2006ம் ஆண்டு அதிமுக தோற்றதும் 2011ம் ஆண்டு திமுக தோற்றதும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 2006ல் அதிமுக 2011ல் திமுக சந்தித்ததைப் போல படுதோல்வியை சந்திக்கவில்லை.அதே சமயம் 2016ல் திமுக ஒரு கௌரவமான தோல்வியையே பெற்றது என்பதையும் சொல்ல வேண்டும்.ஆனால் எம்ஜியாருக்குப் பிறகு ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இரு கட்சிகளாலும் முடியவில்லை என்ற நிலையில் ஜெயலலிதாவின் 2016 தேர்தல் வெற்றி குறிப்பிடத்தக்கது .ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில்,அதிமுகவே தமிழர்களின் ஆதரவை அதிகம் பெற்ற கட்சி என்பதே உண்மை. கிட்டத்தட்ட தனியாகவே நின்று எம்ஜியாரின் காலத்திலேயே இல்லாத அளவுக்கு 40%ம் அதிகமான வாக்குகளை அந்தக் கட்சி அப்போது பெற்றது.அது ஒரு சாதனைதான்.
ஆட்சித் திறன் என்று எடுத்துக் கொண்டால், அதிமுக ஆட்சியின் கீழ் இந்த 10 ஆண்டு காலகட்டத்தில் வெளிவந்த பொருளாதார மற்றும் மனித வள நலம்/வளர்ச்சி பற்றிய எல்லா அட்டவணைகளிலும் குறியீடுகளிலும் தமிழகம் இந்தியாவில் தொடர்ந்து முன்னிலையிலேயே இருக்கிறது.2016ன் இறுதியில் அதன் மாபெரும் தலைவர் ஜெயலலிதா மறைந்த பிறகு பல இடைஞ்சல்களையும் பிளவுகளையும்,சந்தித்து வெற்றிகரமாக முழு ஆட்சிக்காலத்தையும் முடித்திருக்கிறது.10 ஆண்டுக்காலம் முழுமையாக ஆண்டு முடித்திருப்பதால்,ஆட்சிக்கெதிரான (anti incumbency ) உச்சத்தில் இருக்குமென்பதே இயல்பு. ஆனால், இந்த விஷயத்தில் எடப்பாடி அரசுக்கு ஒரு நல்லூழாக, இந்த ஆட்சியின் மீதான தீர்ப்பு கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் மீதான தீர்ப்பாக இல்லாமல், எடப்பாடி பழனிச்சாமியின் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியின் மீதான தீர்ப்பாகவே இருக்குமென்று தோன்றுகிறது..தேர்தல் களத்தில் இன்று எம்ஜியாரோ ஜெயலலிதாவோ இல்லை எடப்பாடிப் பழனிச்சாமியே நிற்கிறார்.
இந்த 21ம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட ஆட்சிகளில், (2001-2006 ஜெயா 2006-11 கருணாநிதி 2011-2016 ஜெயா 2017-2021 பழனிச்சாமி) எடப்பாடிப் பழனிசாமியின் இந்த நான்காண்டு கால ஆட்சியே ஒப்பீட்டளவில் சிறந்ததாக இருந்தது என்பதே என் கருத்து. 2006-2011ன் முடிவில் திமுக ஆட்சி போயே ஆகவேண்டும் என்று ஒரு படுதோல்வியை மக்கள் அந்தக் கட்சிக்கு அளித்தார்கள். அந்த ஆட்சியின் அவலம் இந்தத் தேர்தலிலுமே கூட ஓரளவு பாதிப்பை செலுத்துகிறது. திமுகவின் பிரச்சாரம் அதை மறக்கடிக்கதான் முயற்சி செய்கின்றது. அந்த ஆட்சிக்கு இந்த ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்பதே என் கருத்து. 2006-11 ஆட்சியைப் போல மக்களை கதற வைக்கவில்லை.கொடுங்கோல் ஆட்சி என்று வர்ணிக்கும் அளவுக்கெல்லாம் நிச்சயமாக இல்லை. அது 1991-96 வரை ஜெயா செய்த ஆட்சிக்குத்தான் பொருந்தும் வர்ணனை.
இந்த அதிமுக ஆட்சியின் மோசமான நிகழ்வு மற்றும் கையாள்தல் என்றால்,தூத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி பாலியல் புகார்கள் சம்பவங்கள் மற்றும் கடன் சுமை ஆகியவற்றைச் சொல்ல வேண்டும்.மற்றபடி, நீட் தேர்வு, கெயில்,ஒன்ஜிசி போன்றவை எல்லாமே,மத்தியில் காங்கிரஸ் -திமுக ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டவைதான். நீட் பிரச்னையில், மாநில மத்திய அரசுகளை விட உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடே பெரும் தடையாக இருக்கின்றது என்பதும் உண்மை.இங்கே அதை எதிர்க்கும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகளும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் எதிர்ப்பதில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.
நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகமெங்கும் பயணம் செய்திருக்கிறேன். பொதுவாக சாலைகள், நீர்நிலைகள் ஆகியவற்றின் பராமரிப்பு மேம்பட்டே இருக்கிறது.மின்வெட்டு இல்லை.கொரோனா பிரச்னையையும் தமிழக அரசு சிறப்பாகவே கையாண்டது..(இந்த இரண்டாவது அலைக்கு முன்னர் வரை) அரசுப் பொது மருத்துவமனைகள் பற்றி பலரும் பாராட்டிப் பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.சென்ற ஆண்டின் ‘நிவர்’ புயலின் போதும் அரசின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தன.மருத்துவக்கல்லூரிகளில் 7.5%அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது ஒரு தாற்காலிகக் குறுக்கு வழி என்றாலும், உடனடியாக பல ஏழை மாணவர்களுக்கு உதவியதை பார்க்க முடிகிறது. நல்ல வரவேற்பையும் அந்தத் திட்டம் பெற்றுள்ளது.வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடும் அத்தகைய ஒன்றே.இதர நடவடிக்கைகளாக கடன் தள்ளுபடி போன்றவை இந்தக்காலக்கட்டத்தின் கட்டாயங்களாகும்..ஆனால்,பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு ஒரு பாதிப்புதான் என்பதும் உண்மை..பல நேரங்களில் ஒரு Responsive அண்ட் Responsible Govt ஆகவே இந்த அரசு செயல்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் கைப்பாவை போன்ற குற்றச்சாட்டுகளில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், இந்திய ஒன்றியத்தில் மத்திய அரசின் அதிகாரம் மிகப்பெரியதாக இருக்கும் சூழலில் எம்ஜியார் கருணாநிதி போன்றவர்களே இப்படித்தான் நடந்து கொண்டார்கள் என்பதை நீண்ட நாள் அரசியல் நோக்கர்கள் அறிவார்கள். ஜெயலலிதாவின் மூர்க்கமான போக்கினால், நன்மை தீமை இரண்டும் விளைந்ததுதுண்டு.திமுகவை எடுத்துக் கொண்டால்,எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாநில சுயாட்சி, அதிகாரப் பரவலாக்கம் என்பது பற்றியெல்லாம் உரக்கப் பேசுவதும் ஆட்சிக்கு வந்தால்,அடக்கி வாசிப்பதும் வரலாறு.அதுவும் மத்திய அரசில் பங்கு கிடைத்தால் மற்ற எதுவுமே முக்கியமில்லை என்பதையும் பார்த்திருக்கிறோம்.அதே வேளையில் தொகுதிப்பங்கீட்டில் எல்லாம் அதிமுக பாஜகவை அதிகாரம் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதையும் பார்த்தோம்.கறாராக இருக்க வேண்டிய இடங்களில் காரராகவும் சுமுகமாகப் போக வேண்டிய இடங்களில் சுமுகமாகச் சென்றும் கூட்டணியை காப்பாற்றிக் கொண்டனர். இப்படிப் பல விஷயங்களையும் பார்க்கும்போது இது போயே தொலைந்தாக வேண்டிய ஆட்சி என்று என்னால் சொல்ல முடியவில்லை.
இதற்கு மாற்றாக எதிரே இருப்பது என்ன? 2006-11 வரை ஒரு மிக மோசமான ஆட்சியை கொடுத்த திமுகதான்.அதில் கருணாநிதியைத் தவிர மீதி உள்ளவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். அல்லது அவர்களின் வாரிசுகள் இருக்கிறார்கள். அதற்கு இந்த ஆட்சி எவ்வளவோ மேல்.எனவே இந்த ஆட்சியே நீடிப்பதில் பாதகம் ஏதும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். மக்கள் என்ன நினைக்கிறார்களோ?
தேர்தல் 2021 பதிவுகள்: