யாரே அழகுக்கு அழகு செய்வார்?

                                       (ஆன்மீகத்தில் வாழ்வியல்! – 1)

குணம், குறி ஒன்றுமற்ற பரம்பொருளுக்கு, பலவிதமான வடிவங்களையும், பல குணாதிசயங்களையும் கொடுத்து, அப்பரம்பொருளுக்கு மேலும் மனிதவடிவையும், குடும்பத்தையும் கூட ஏற்படுத்தி மகிழ்கிறது நமது எளிமைவாய்ந்த மனித உள்ளம்.

            பல ஞானிகளும் யோகிகளும் வாழ்ந்தும், இன்னும் வாழ்ந்தும் வரும் அற்புதமான தேசம் பாரததேசம். அன்றிலிருந்து இன்றுவரை இறை வழிபாடு, சிந்தனைகள் ஆகியன வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும், ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றன. கடவுள்களை ‘மகிழ்விக்க’ சாதாரண மனிதர்களாகிய நாம் செய்யும் வேண்டுதல்கள், பூசைகள் இவை ஒரு புறம்; ஏழை எளியோருக்கும், வாயில்லா சீவன்களுக்கும் செய்யும் உதவிகளும் தொண்டுமே கடவுளுக்குச் செய்யும் பூசனைகள் என அறிவுறுத்தும் பெரியோர்கள் என வாழ்ந்து வருவதும் இன்னொரு பக்கத்தில்தான். இப்பெரியோர்கள் பூசைகள், திருவிழாக்கள் எனச் செய்யப்படும் செயல்களை என்றுமே குறைத்துக் கூறியதுமில்லை; இகழ்ந்ததுமில்லை. பெரிதும் ஆமோதித்தே வந்துள்ளனர்.

திருமூலர்,

படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கொயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே.

எனும் திருமந்திரப்பாடலில் ‘தெய்வசிந்தனையோடு நடமாடும் இறையடியார்களுக்கு / மனிதர்களுக்கு நாம் செய்யும் தொண்டுகளும் உதவிகளுமே இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கைக்குச் சமமாகும்,’ என்று கூறியுள்ளார்.

            சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் சித்தர்கள். அனைத்தும் அவனருளாலேயே நிகழ்வது எனும் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள்தாம்.

மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்

என்பது சித்தர் சிவவாக்கியர் பாடல்.

            இறைவனை எல்லா அசையும் பொருட்கள், அசையாத ஜடப்பொருட்கள்- மண், விண், கடல், உடல், உயிர் என்று எல்லாமாகவே கண்டும், அனைத்திலும் கண்டும் கொண்டாடுவது ஒரு பெரும் தவம்.

            இதை எல்லாம் இங்கு குறிப்பிட்டது ஏன்? பல ஞானியர்களும் சித்தர்களும் வாழ்ந்திருந்து, ‘அன்பென்பது எது? வழிபாடு எப்படிப்பட்டது, உண்மை பக்தி என்றால் என்ன?’ என்றெல்லாம் மக்களுக்குப் பலவாறு கூறியிருந்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கே தெரியும் – ஒருநிலையில் அறிவில் உயர்ந்த ஞானியர்க்கே இவ்வாற்றல் – அதாவது எங்கும் எதிலும், எப்போதும் இறைவனைக் காணும் பேறு- வாய்க்கும் என்பது.

            ஆகவே இறைவனை ஒருவர் தனக்குப் பிடித்தமான வடிவில் கண்டு வழிபடும் நடைமுறை சாத்தியமாயிற்று. நவவித பக்தி எனும் வழிபாட்டுமுறைகளும் அமைந்தன.

            நல்ல செயல்களை, வாழ்வியலின் நற்சுவைகளை, கூறுகளை, எவ்வாறு மனிதர்களுக்குச் சுட்டிக்காட்டி அதனை நயம்பட உரைத்து அறிய வைப்பது? அதற்கு இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் பெரிதும் துணை நின்றன.

            பிற்காலத்தில் வந்த புலவர்கள் சிலரும் சில ஆன்மீகவாதிகளும் தாம் புனைந்த ஆன்மீக நூல்கள், இலக்கிய நயம் மிகுந்த சிறு நூல்கள், காவியங்கள் மூலம் அவ்வப்போது இக்கருத்துக்களை எடுத்துக்கூறி வலியுறுத்தி, மக்கள் மனதில் பதியும் வகையில் சிறு கதைகள் போலவே புனைந்து நீதிகளை எடுத்துணர்த்தி, மகிழ்விக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளனர். அவற்றுள் சிலவற்றைப் பார்த்து ரசிப்பதும் சிந்திப்பதும்தான் இக்கட்டுரையின் நோக்கம்.

            முதலில் நாம் காணப்போவது கோவை கவியரசு திரு கு. நடேச கவுண்டர் அவர்கள் எழுதியருளிய ‘யாரே அழகுக்கு அழகு செய்வார்?’ எனும் ஒரு சிறு நூல்.

                                                            *****

            நகைகள், ஆபரணங்கள், அணிமணிகள் இவற்றிடம் பெண்களுக்கிருக்கும் ஆசை சொல்லிமுடியாதது. இதையே கதைக்களனாகக் கொண்டு இக்குறுங்காவியம் கவியரசு அவர்களால் புனையப்பட்டுள்ளது.

            மணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற மகள் பிறந்தவீட்டுக்கு நெடுநாட்கள் கழித்து வருகிறாள். அவளைக் கண்ட தாயின் தவிப்பும் அங்கலாய்ப்பும், கணவனைப் பற்றிய மகளின் பெருமிதமும் இக்குறுங்காவியத்தில் சொல்லோவியம் ஆக்கப்பட்டுள்ளன. இதில் மகள் உமை. தாய், இமவானின் மனைவியாகிய மேனை.  பரமேசுவரனைக் காதலித்து விரும்பி மணந்து கயிலைக்குச் சென்ற உமை நீண்ட காலத்துக்குப் பின் ஒருநாள் தனது இரு மக்களுடனும் தாய் வீட்டுக்கு வருகிறாள்.

            “அம்மா, வந்தாயா? இப்போதாவது தாய்வீட்டிற்கு வழி தெரிந்ததா? எங்களை மறந்தே போய்விட்டாயென்று எண்ணினேன்,” என ஆசையும் ஆற்றாமையுமாக மகளை எதிர்கொள்கிறாள் மேனை.

மேனையெனுந் தாய்விரைவில் மேவிமகள் தன்னை
மென்கையணைத் தென்னுயிரே என்றுமகிழ் கூர்ந்தாள்.

ஒரு தாய்க்குரிய ஆவலுடன் மகளின் தோற்றத்தை எடைபோட முயலுகிறாள்.

            செல்வச் செழிப்புடைய வாழ்வின் அறிகுறிகளான பகட்டான ஆடைஅணிகலன்கள் இன்றி எளிமையாக இருக்கும் மகளின் தோற்றத்தைக் கண்ட தாய் மேனை திடுக்கிடுகிறாள்.

            “என்னம்மா இது? இப்படி எளிமையாக இருக்கிறாய்? நகை நட்டெல்லாம் போட்டுக் கொண்டு வரவேண்டாமோ? ஏற்கெனவே ஊரார் என்னெதிரிலேயே வந்து கண்டபடி உன் கணவனைப்பற்றிப் பேசுகின்றனர். அவன் பிச்சை எடுத்து உண்பவனாமே! அது உண்மையா? இந்த ஏச்சையும் பேச்சையும் கேட்டு நான் அலுத்துவிட்டேனே! நீ வேறு இவ்வாறு காணப்படுகிறாயே!” என்கிறாள் மேனை.

என்றன் எதிர்வந்து நின்று மடந்தையர்
என்னென்ன பேசுகின்றார் – அவர்
உன்றன் பிழைப்பையும் காதலன் றன்னையும்
ஓயாமல் ஏசுகின்றார்.
அன்றவர் சொன்னசொல் என்செவிசுட்டுப்புண்
ஆக்கியதே உமையே – பினர்ச்
சென்றுமனத்திற் புகுந்து வருத்தி என்
சிந்தை எரிக்கின்றதே.

            கலகலவெனச் சிரிக்கிறாள் உமை! “ஐயோ அம்மா! கண்டவர்கள் சொல்வதைக்கேட்டு கதிகலங்கி விட்டாயோ? என் கணவர் அகில உலகையும் ஆளும் நாயகன். அவனையன்றி ஓர் அணுவும் அசையாது. அனைத்துலகங்களையும், ஆக்கி, அருளி, அழிக்கவும் வல்லவன்; அவன் மகிமையை யாரால் சொல்ல இயலும்?எனக்கு அவனால் மிகுந்த செல்வமும் செல்வாக்கும் உள்ளது அம்மா; உலகநாயகனின் உரிமையுள்ளவளான நான் ராஜராஜேஸ்வரி; அனைத்துலகங்களுக்கும் நாயகி அம்மா!” எனக் கூறுகிறாள்.

அகில புவனமும் ஆளுநாயகன் அம்மஎன் அருள் நாயகன்
அவனையன்றி யோர்அணுவு மேஅசை யா திஃதரு மறையேசொலும்
சகல புவனமும் ஆக்கி யழிவுசெய் சத்தியான் பரதத்துவன்
தன்மைபிற ரறியாத பேரருள் தலைமை ஈசனென் பேர்சொலும்
உண்மைகூறின் என்அம்மை நீமிக ஏழையின் மனையுரிமையாள்
உலகநாயகன் உரிமை நான் புவனேசி ராஜ ராஜேஸ்வரீ
வண்மையான் மிகுகாசி நாயகன் மற்றி யார் மலையரசியே
வல்லரார் அவன்மகிமை சொல்லிட மாலயற்கரி யானரோ.

“உன் கணவன் அப்படிச் செல்வம் படைத்தவனாயின் இப்படி ஏன் எளிமையாகக் காண்கிறாய் மகளே?” என அரற்றுகிறாள் தாய். “உன் அழகுக்கேற்றவாறும் தன் தகுதிக்கேற்றவாறும் பொருத்தமான நகைகளை உன் பெருமைவாய்ந்த கணவன் உனக்கு ஏன் அணிவிக்கவில்லை? கடன்வாங்கியாவது அவரவர்கள் மனைவிக்கு நகைகள் செய்து பூட்டி அழகு பார்ப்பாரன்றோ? உன் கணவன் என்ன உலுத்தனா (உலோபியா)?” என அடுக்காகக் கேள்விகளை அடுக்கும் தாய்மனதைத் திருப்தி செய்ய இயலாது சிந்திக்கிறாள் உமை.

அத்தனை செல்வம் உனக்கமைந் திருந்தால் என்கண்ணே
இத்தனை ஏழையாக உமையே
ஏனென்முன் தோன்று கின்றாய்
செல்வமகளே உன்றன் திருமேனி யழகாகப்
பல்வகை யாபரணம் – உமையே
பரமன்ஏன் பூட்ட வில்லை.
வட்டிக்குக் கடன்வாங்கி மனைவிக்கு நன்னகைகள்
இட்டு மகிழ் வரன்றோ – உமையே
இவ்வுல குள்ள வர்கள்.
செட்டியிலும் உலுத்தச் செட்டிகொலோ சிவன்றான்
இட்டிலனோர் நகையும் – உமையே
இதற்கென்ன காரணமோ

            இதற்கு உமை கூறுகிறாள்: “குன்றை வில்லாக வளைத்த என் நாதன் பல அணிமணிகளைப் பூட்டி என்னைப் பார்ப்பதனை விரும்பவில்லை தாயே! பொன்னாபரணங்கள் உனதழகைக் கெடுத்துவிடும் என்பான். உன் இயற்கையழகிற்கு எந்த அணிதான் சமமாகும் என்பான். நிலவின் மீது பருத்தமுத்துக்களாலான மாலையை அணிவித்தால் நிலவின் அழகும் ஒளியும்தான் குன்றுமல்லவா என்பான்,” என்கிறாள்.       

 என்றே மேனை இயம்ப உமையாள்
குன்ற வில்லி மன்ற அணிகள்
பூட்டி என்னைப் பார்க்கச் சகியான்
திங்களின் மேலே திரண்முத்து மாலையிடின்
பொங்குங் கொலோவழகு பொற்கொடீ பேரொளியை
மங்கச் செய்யாதோ மதி.

            மேனை இதைக்கேட்டும் மனம் தளரவில்லை. “நான் இதனை ஒப்பவில்லை மகளே! நல்ல பொன்னாலும் நவரத்தினங்களாலாலுமான அணிமணிகளைப் பூட்டிக் கொண்டால் அழகு இன்னும் மிகுந்து காணுமல்லவோ? இன்று நான் உனக்குப் பல அணிகளைப் பூட்டி உனதழகினைக் கண்டு களிக்கப்போகிறேன்,” எனத் தாய்க்கே யுண்டான உரிமையில் கூறுகிறாள்.

                                    என்றது கேட்ட மேனை நன்கலன்கள்
பூட்டினால் அழகு பொலிந்துதோன் றாதோ
எழில்மிகு தந்தத் தியையிற் பொன்மணிகள்
அந்தத் தந்தத் தழகு மிகாதோ
இன்றைக் கணிகலன் எல்லாம் பூட்டி
உன்னழ கினைக்கண் டுளம்களி கூர்வேன்

                        அத்துடன் நில்லாமல் அழகுசெய்யும் கலையில் தேர்ந்த அரம்பையர்களைக் கொண்டு, ” பேழைகளில் உள்ள பல நகைகளையும் பட்டுப் பீதாம்பரங்களையும் கொணர்ந்து என் மகளை, இந்த உமையை அலங்கரிப்பீர்கள்,” என ஆணையிட்டாள். அவர்களும் அவ்வாறே பார்வதியை மிக அழகாக அலங்கரித்தனர்.

அழகுசெயவல் அரம்பையர்கள் பன்னாள்
பழகும் திறங்கொண்டே பார்வதியை அலங்கரித்தார்.

            பார்த்தவண்ணம் அன்னை நின்றிருக்கிறாள்; என்னவிது? அணிவித்த அணிகலன்கள் ஒன்றாவது அவளழகைக் கூட்டிடவில்லையே! அவளழகை மறைத்ததுதான் அவை செய்த செயல்.

            பூரண சந்தரனை மறைத்த கிரகணகாலத்து ராகுபோல உமையின் திருமேனியழகை அவை மறைத்து நின்றன.

பூரண சந்திரன் தன்னையிராகு பொருந்தி மறைத்ததுபோல் – உமை
ஆரணங்கின் திருமேனி யழகை அணிகள் மறைத்தனவே.

            மேனை பார்த்தாள்; புரிந்து கொண்டாள். அப்பெண்களை நோக்கி, “இந்த அணிகலன்களை நீக்கி விடுங்கள். என் மகளின் அழகுத் திருமேனியை அவை மறைக்கத்தான் செய்கின்றனவே தவிர அவள் அழகினைக் கூட்டிக் காண்பிக்கவில்லை.

            “மகளே! அனைத்திற்கும் மங்களம் சேர்ப்பவளே! எவையெல்லாம் அழகானவையோ அவற்றிற்கு அழகு சேர்க்கும் சங்கரி நீயல்லவோ! உனக்கு அழகு செய்தல் பொருளற்ற செயல். உனது தெய்வீக அழகுக்கு யாரே மேலும் அழகு செய்வார்?”

 எங்கெங் கழகாய் இருப்பவைகட் கெல்லாம்
தங்கியழ களிக்கும் சங்கரியே – மங்களையே
பழகுமழ குனக்குப் பண்ணுதல்வீண் யாரே
அழகுக் கழகுசெய் வார்.

            “பார்வதியின் மேனியினின்று வீண்பாரமான இந்த ஆபரணங்களை நீக்கி விடுங்கள். உலகநாயகன் பரமேசுவரனின் கண்களுக்கு இனிமையாக, எளிமையாகக் காணும் உனது இந்த அழகே நானும் காண விரும்புவது,” என்று மெய்சிலிர்த்தாள் மேனை.

            அழகுக்கு யாரே அழகு செய்வார்?” என்று உண்மையுணர்ந்து மேனை தன் ஆசைமகளை கண்குளிரக் கண்டு உள்ளம் மகிழ்ந்தாள்.

                                                                        *****

            அணிமணிகளில் பெரும்பொருளை கடன்பட்டாவது செலவுசெய்யும் மாந்தர்களுக்கொரு பாடமாக இருக்கட்டும் என்றுதான் இச்சிறு காவியத்தைப் படைத்தாரோ புலவர் என எண்ணத் தோன்றுகிறது. கணவனின் அன்பும், அவன் சிந்தனையுமே தனக்குப் பெருமை தருவன என நிறைவுற்ற மனையாள், அதனால் தாய்க்கும் சமாதானம் கூறி நல்வழிப்படுத்தும் மகள், தன் தவறுணர்ந்து திருந்தும் தாய் எனப் பலவகையான பெண் உள்ளங்களைக் கண்டு ரசிக்கிறோம்.

            அடுத்து விரைவில் இதுபோன்று மற்றுமொரு சுவையான சிறுநூலைக் கண்டு ரசிக்கலாம்.

                                                                        *****

            இச்சிறுநூல் கோவை கவியரசு நடேச கவுண்டரால் இயற்றப்பெற்றது. அன்னாரின் திருமகனும், எனது மதிப்பிற்குரிய ஆசானுமான உயர்திரு. முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா அவர்கள் தாம் இறைவனடி சேர்வதற்குச் சில மாதங்களின்முன்பு (இதனைப் பற்றி நான் எழுத விரும்பியமையால்) எனக்குக் கொடுத்தார். இக்கட்டுரையும் அன்னாருக்குச் சமர்ப்பணம்.

                                    *****

2 Replies to “யாரே அழகுக்கு அழகு செய்வார்?”

  1. ஆஹா! அபாரம். என்ன ஒரு கற்பனை வளம்!!!! எழுத்தின் வீச்சும் மனதிற்கு நிறைவாக இருந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *