நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான கி.ராஜ்நாராயணன் என்கிற கி.ரா மே 17, 2021 அன்று தனது 99ம் வயதில் மறைந்தார். அவருக்கு நமது கண்ணீர் அஞ்சலி. ஓம் சாந்தி.
ஜடாயு:
தனக்கென ஒரு தனித்துவமிக்க கதைசொல்லல் பாணியையும், அதற்கான மொழியையும் சேர்த்தே உருவாக்கிக் கொண்ட ஒரு பெரும் படைப்பாளி கி.ரா. தனது முன்னோர்களின், தனது சமுதாயத்தின், அதன் வரலாற்றின் கதையைச் சொல்ல அந்த சமூகத்திலிருந்தே எழுந்து வந்த சூதர் என அவரைக் குறிப்பிடலாம். ஆந்திர பூமியின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்த்திய வன்முறையையும், அதனால் ஏற்பட்ட புலம்பெயர்தல்களையும் ஒரு மங்கலான, பூடகமான கோட்டுச்சித்திரமாக கோபல்ல கிராமம் நாவலில் அவர் எடுத்துரைக்கிறார். கிராமிய வாழ்க்கையின் பல்வேறு வண்ணங்களையும், விவசாயம் சார்ந்த நுண்தகவல்களையும், பாலியல் வேடிக்கைகள், சீண்டல்கள் உட்பட ஆண்-பெண் உறவின் பல பரிமாணங்களையும், அபூர்வமான கர்ணபரம்பரைச் செய்திகளையும் கதைசொல்லும் போக்கில் இயல்பாக எந்த சுவாரஸ்யக் குறைவுமில்லாமல் அள்ளித்தெளித்துச் செல்வது அவரது எழுத்து. இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் “இனக்குழு அழகியல்” என்ற கோட்பாட்டு சட்டகத்திற்குள் அடைத்து, அதன்வழியே அவரது படைப்புகளை விளக்க முயன்றாலும், இந்த வரையறைகளுக்குள் சிறைப்படாமல் தன்போக்கில் பாயும் பிரவாகமாகவே அவரது எழுத்துக்கள் இருந்துள்ளன.
தனிப்பட்ட அளவில் அவர் எழுதிய ஒரு கதை எனக்கு மிகவும் நெருக்கமானது. முரட்டு ஆண்களால் துன்புறுத்தப்படும் யாரோ ஒரு அபலைப்பெண்ணின் குரல் கேட்டு, தள்ளாத வயதிலும் வந்து அவளைக் காப்பாற்ற தன் சக்தியையெல்லாம் திரட்டிப் போராடும் தாத்தைய நாயக்கரின் கதை. அதற்கு கி.ரா.கொடுத்திருந்த தலைப்பு “ஜடாயு”. நாம் காலம்காலமாகக் கேட்டு வளர்ந்த இராமாயணம் ஏதோ ஒரு பழங்கதையல்ல. என்றென்றைக்குமான உயர் விழுமியங்களின், பண்புகளின் ஆதர்சங்களை வழங்கும் வாழ்க்கைத் தரிசனம் என்பதற்கான சிறந்த சான்று அந்தச் சிறுகதை.
கட்டற்ற கற்பனை வீச்சும், அலாதியான வாழ்க்கை அனுபவங்களும், அவற்றை பௌராணிகத் தன்மைகொண்ட புனைவுகளாக்கும் எழுத்துத்திறனும் கொண்டிருந்த கி.ரா, மூர்க்கமான இடதுசாரி அரசியலின் ஊதுகுழலாகவே விளங்கிவரும் “முற்போக்கு” எழுத்தாளர் முகாமுடன் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது தமிழுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம். அந்த முகாமின் கீழ்த்தரமான, அபத்தமான அரசியல் வெறுப்புணர்வு பிரசாரங்களில் எல்லாம் கூட முதல் ஆளாகக் கையெழுத்திடும் அளவுக்குச் சென்றது கி.ரா.வின் இலக்கிய வாழ்வில் ஒரு கரும்புள்ளி. இந்த அரசியல் சார்பும், குழுசார்ந்த சிந்தனையும் எந்த அளவுக்கு அவர் படைப்புகளை பாதித்ததன என்று மதிப்பிடுவது கடினம். இவை இல்லாதிருந்தால், அவர் இன்னும் ஆழமான, இன்னும் தீவிரமான வரலாற்று பிரக்ஞை கொண்ட படைப்புகளை கட்டாயம் எழுதியிருக்கலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது.
B.R. மகாதேவன்:
துலுக்க ராஜாக்களின் கொடுமைகளுக்கு அஞ்சி தமிழகத்துக்கு அடைக்கலம் தேடி வந்த தெலுங்கு மொழி பேசும் இந்துக்களின் வம்சாவளி. நல்ல கதை சொல்லியான அவரிடம் அது தொடர்பான பெரிய கண்ணீர்க் காவியமே இருந்தது. அவருடைய முன்னோருக்கு இருந்த இஸ்லாமிய அச்சமும் மிரட்டலும் இருந்திருந்த நிலையிலும் இங்கு வேறுவகையான நெருக்கடிகள் அவருக்கு இருந்தன. எனவே தமது முன்னோர்கள் அனுபவித்த துயரத்தை சுருக்கமாக அதுவும் ஒரு புனைவாக, புராணமாகவே எழுதிக் கடந்துவிட்டார்.
தமிழகத்தில் பொருளாதார, சமூக அரசியல் செல்வாக்குடன் இருந்த தெலுங்கர்களில் சிலர் திராவிடம், பகுத்தறிவு, தமிழ்ப் பற்று என்ற வேடம் புனைந்துகொண்டனர். இவருக்கு அது உவப்பாக இருந்திருக்கவில்லை. எளிய மக்களுக்காகப் பேசும் நபராக முன்னெடுத்துக்கொண்டார். அப்படியாக, நல்ல எழுத்தாளரான அவருடைய வலது கரத்தை இடது கரம் தொடர்ந்து தடுத்துவந்தது. அதையும் மீறி அவர் தமிழகத்து கரிசல் மண்ணின் வாழ்க்கையை இந்த மண்ணின் அசல் வாசனையுடன் வெளிக்கொணர்ந்தார். தமிழகமே அவருடைய பூர்விக பூமி என்று எண்ணும் அளவுக்கு அதனுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கையை முன்வைத்தார். ஆனால், பூர்விக பூமியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட வரலாற்று உண்மைகள் எவ்வளவோ அவரிடம் பகிரப்பட்டிருந்த நிலையிலும் இடது கரத்தின் அழுத்தத்தினால் அவரால் அதை எழுதமுடியாமல் போனது.
ஒரு மனிதரை ஒரு கண்ணால் மட்டுமே உலகைப் பார்க்கும்படி நிர்பந்திப்பது போன்ற செயல் இது. கடந்த காலத்து இருண்ட பக்கங்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டிய துர்பாக்கியமான நிலை. குரங்கு பிய்த்தெறிந்த தலையணைப் பஞ்சுத் துகள்களாக சிதறியடிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமது அயல்நாட்டு வாழ்க்கையைப் பற்றி மட்டுமே வளவளவென்று பேசுவது போன்ற நிலை.
அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த பேரும் புகழும் அவர் பல வரலாற்று உண்மைகளைப் பேசாமல் இருந்ததற்காகவுமே வழங்கப்பட்டன. ஒருவகையில் எழுதிய கதைகளுக்காக அல்லாமல் எழுதாமல் இருந்த கதைகளுக்காகவே போற்றப்பட்டவர்.
அந்தக் கதைகள் எழுதப்படாமல் அவருடைய ஆன்மா நிச்சயம் சாந்தியடையாது. இடது கரத்தின் பிடியில் இருந்து விடுபட்ட அவர் இந்த பூமியில் யாருடைய உடம்பிலேயேனும் விரைவில் புகுந்துகொண்டு விடுபட்ட அந்தக் கண்ணீர்க் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தாகவேண்டும்.
அதுவும்தான் அவருடைய வாழ்க்கை என்பதால் அல்ல. அதுதான் அவருடைய வாழ்க்கை என்பதால்.
கி.ரா. பற்றிய சில குறிப்புகள்
நன்றி: சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ள கி.ரா.வின் ‘நிலை நிறுத்தல்’ சிறுகதைத் தொகுப்பு
- கரிசல் இலக்கியத்தின் தந்தை என்றும், கரிசல் இலக்கிய பிதாமகன் என்றும் போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
- கி.ரா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிற இவர், ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம் – லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாக 1922ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தார்.
- ‘ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜன்’ என்பதே கி.ரா.வின் முழுப்பெயர். இளமையில் தந்தையை இழந்து இடைச்செவலில் விவசாயத்தோடு இசை ரசனையும், இலக்கிய ஆர்வமும் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பால் இசைவாணராகாமல், 30 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார்.
- இவரது படைப்புகளில் ‘கோமதி’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘பிஞ்சுகள்/ அந்தமான் நாயக்கர்’, ‘கிடை’, ‘வேட்டி’, ‘குழந்தைப் பருவ கதைகள்’, ‘பெண் மணம்’, ‘சிறுவர் நாடோடிக் கதைகள்’, ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’, ‘கரிசல் காட்டுக் கடுதாசி’, ‘மறைவாய் சொன்ன கதைகள்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
- இசையிலும், பழந்தமிழ் இலக்கியங்களிலும் அலாதியான ஈடுபாடு கொண்டுள்ள இவர், விளாத்திகுளம் சாமிகளிடம் நேரடியாக இசை பயின்றிருக்கிறார். ரசிகமணி டி.கே.சியிடம் கம்பராமாயணம் கேட்டு அறிந்திருக்கிறார். இடைசெவலில் எதிர்த்த வீட்டுக்காரராக இருந்த நாதஸ்வர கலைஞர் காருகுறிச்சி அருணாசலத்தோடு நெடுங்காலம் ட்புறவு கொண்டிருந்திருக்கிறார்.
- கி.ரா.வின் முதல் சிறுகதையான ‘சொந்தச் சீப்பு’ கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழில் வெளியானது. வட்டார மொழியில் எழுதினாலும் மாறுபட்ட பிரச்னைகள் கொண்ட மனிதர்களை எழுதினார் என்பதால், அவருடைய எழுத்துகள் கரிசல் எனும் எல்லை தாண்டி, தமிழ்ச் சமூகத்தின் பரப்பு கடந்து, சர்வதேசப் பரிமாணம் பெற்றிருப்பவை. கி.ராவின் எழுத்துகள் கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை விவரிப்பவை.
- சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங்களையும் பதிவு செய்த இவரது எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது. ஆப்பிரிக்க இலக்கியம் இன்று என்ன காரணங்களுக்காக உலக அரங்கில் பேசப்படுகின்றதோ அதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிசல் எழுத்தின் வழி தமிழில் துவக்கி வைத்த பெருமைகுரியவர்.
- சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்ததோடு, நாட்டார் வழக்காறுகளின் உள்ளிருந்து தாத்தா சொன்ன கதைகள், சிறுவர் கதைகள், பாடல்கள், சொலவடைகள், சொல்லாடல், விடுகதை எனப் புதிய இலக்கிய வகைகளையும் கண்டெடுத்தவர்.
- பல்வேறு இதழ்களில் வெளிவந்த இவரது கதைகள் அனைத்தும் 2007-ல் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்ட ‘நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்’ என்ற படைப்பாக வெளியானது. 2009-ல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளிவந்தன. இவரது கதைகள் வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
- புதுவை பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகைதரு பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது இவரது எழுத்துக்குக் கிடைத்த கௌரவம்.
- கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்கிற பெருமையையுடைய இவருக்கு, ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை சிறப்பு விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விருது, தமிழக அரசின் உ.வே.சா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.