புதிய பொற்காலத்தை நோக்கி – 15

(தரம்பால் அவர்களின் ஆய்வுகளை முன்வைத்தும் அவற்றைத் தாண்டியும்)

முந்தைய பதிவுகளை படிக்க

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அதிலும் பாரம்பரியமா, நவீனமா, இரண்டும் கலந்த கலவையா மூன்றில் எது என்று யோசித்துச் செயல்படலாம்.

உதாரணமாக குளிர்சாதனக் கருவி – ஏசி.

வெப்பம் நிறைந்த நம் தேசத்தில் முற்காலத்தில் அறைகளைக் குளிரிவிக்கப் பல வழிகளைப் பின்பற்றி வந்திருக்கிறோம். காற்றோட்டமான முறையில் வீடுகளைக் கட்டுதல், களி மண்ணால் வீடுகள் கட்டுதல், மூங்கில், தென்னை மரத் தடி, பனை மரத்தடி கொண்டு வீடுகள் கட்டுதல், வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்தல், ஆற்றின் கரையில் வீடுகள் கட்டிக்கொள்ளுதல் எனச் செய்துவந்திருக்கிறோம்.

வெளி வெப்பத்தை உறிஞ்சி அறைக்குள் உமிழும் சிமிண்ட் கொண்டு, காற்றோட்டத்துக்கு வழியின்றி அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிக்கொண்டு சூட்டைக் குறைக்க ஏஸி, ஃபேன் என்று பயன்படுத்துவது அறிவார்ந்த செயல் அல்ல. அவற்றின் மூலம் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் காற்று மாசுவும் அதிகம்.

நமது கல்விமுறையும் விஞ்ஞானிகளும் இந்தப் பிரச்னைகளுக்கு இந்தியத் தீர்வைக் கண்டுபிடிக்கவேண்டும். மேற்கத்திய ஏஸி கம்பெனிகளின் நுகர்வோராகவும் விற்பனையாளராகவும்  இருப்பதில் பெருமை இல்லை. அவர்கள் தயாரித்து அனுப்பும் ஏஸியை அசெம்பிள் செய்து பழுது பார்க்கும் கூலித்தொழிலாளராக மட்டுமே நம் பொறியாளர்களும் விஞ்ஞானிகளும் இருக்கத் தேவையும் இல்லை. அந்தக் குளிர்பதனத் தொழில்நுட்பத்தை நமக்கு உகந்த வகையில் மாற்றியமைக்க முன்வரவேண்டும்.

நமது மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் புதுவகையான ஏஸி ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார். அறையின் வெப்பக் காற்றை ஒரு மோட்டார் மூலம் உறிஞ்சியெடுத்து அதை ஒரு குழாய் மூலம் பூமிக்குள் செலுத்தி அங்கே ஒரு குளிர்ந்த கலத்தின் வழியாக அந்தக் காற்றைப் போகவைத்து குளிர்வித்தார். அதன் பின் அந்த குளிர்ந்த காற்றை இன்னொரு குழாய் மூலம் அறைக்குள் செலுத்தினார். இந்த முறையில் வெகு எளிதில் 27 டிகிரி மற்றும் அதற்கு அதிக அளவு வெப்பமான காற்றானது 20 டிகிரிக்குக் குளிர்விக்கப்பட்டுவிடுகிறது. இதில் எந்த வேதி வாயுக்களின் அவசியமும் இல்லை.

மேற்கத்திய உலகம் தயாரித்த ஏ.ஸி. 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறதென்றால் இந்த இந்திய ஏஸி பத்தாயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடுகிறது. ஒரு கிராமத்து நபர் கண்டுபிடித்த கருவி இது. எந்த பல்கலைக்கழக பேராசிரியரும் விஞ்ஞானியும் இதைச் செய்ய வில்லை. அவர்கள்தான் செய்திருக்கவேண்டும். அவர்களுடைய பாடங்கள் என்பது இப்படியான நோக்கத்தைக் கொண்டதாக மாற்றியமைக்கப்படவேண்டும். அடுக்கு மாடிக் குடியிருப்பு களுக்கும் வெப்பம் மிகுதியாக இருக்கும் இடங்களுக்கும் காலங்களுக்கும் இதை எப்படிப் பயன்படுத்துவது என்று அந்த ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கவேண்டும். நேற்று நாம் அறிவியல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருந்தோம் என்ற உண்மையானது இப்படியான படைப்பூக்கத்தையே நமக்குத் தரவேண்டும்.

வெர்டிகல் ஃபார்மிங் என்றொரு வழிமுறை இப்போது பயன்படுத்தப்படுகிறது. துளசி, புதினா, கீரைகள், தக்காளி, போன்ற குறுஞ்செடிகள், டேபிள் ரோஸ் போன்ற படர் கொடிகள் ஆகியவற்றை குறுக்கு-நெடுக்குவசமான குழாய்களில் நட்டு வளர்க்கிறார்கள். இவற்றை அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பக்கவாட்டில் நட்டு வளர்த்தால் சூரிய வெப்பம் நேராக சுவரில் வந்து விழாமல் தடுக்க முடியும். இதனால் வீடுகளைக் குளிர்விக்க ஏசி தேவைப்படாது.

இந்தச் செடிகளில் இருந்து அன்றாடத் தேவைக்கான கீரையைப் பெறவும் முடியும். துளசி போன்ற மூலிகைச் செடிகளை வளர்த்தால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும். இப்படியான குழாய்களை அமைப்பது சிரமமென்றால் பக்கவாட்டுச் சுவரில் இருந்து ஒரு அடி இடைவெளிவிட்டு கயிறு கொண்டு வலை அமைத்து அதில் அவரை, பாவற்காய் போன்ற படர் கொடிகள் படரும்வகையில் செய்யலாம். சங்கு புஷ்பம் போன்ற மலர் செடிகள் வளர்க்கலாம். நம் முன்னோர்கள் வீட்டுக் கூரையில் படர் கொடிகள் வளர்த்ததன் மறுவடிவமே இது.  

வாஷிங் மெஷின் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாம் அவற்றை இறக்குமதி செய்து வந்தோம். அதன் பின் அதை நம் நாட்டிலேயே தயாரிக்க ஆரம்பித்தோம். ஆனால், இதில் நமது தேவை, நலன் சார்ந்து நாம் எதையுமே அமல்படுத்தவில்லை.

கோவையில் ஒரு வியாபாரி சிக்கனமான வாஷிங் மிஷின் ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். பிராண்டட் நிறுவனத்தின் வாஷிங் மிஷின் 15-20 ஆயிரம் என்ற விலையில் இருக்கின்றன. இவர் உருவாக்கியிருக்கும் மிஷின் வெறும் நான்காயிரம் ரூபாய் மட்டுமே.  மிக அழகாக குறைவான நீரைப் பயன்படுத்தி துணிகளைத் துவைத்துவிடுகிறது. ஆனால், இதில் ஒரே ஒரு குறை என்னவென்றால்   தோய்த்த துணிகளை நாம்தான் எடுத்து பிழிந்துகொள்ளவேண்டும். டிரையர் என்ற வசதி இதில் இல்லை. வாஷிங் மிஷின்களில் இருக்கும் டிரையர் என்பது வேறொன்றுமில்லை. ஒரு வேகமான வலிமை மிகுந்த மோட்டார் தான். அதுதான் வேகமாகச் சுழன்று துவைக்கப்பட்ட துணிகளில் இருந்து நீரை பிழிந்து அகற்றுகிறது. அந்த மோட்டார் இருப்பதால்தான் பிராண்டட் வாஷிங் மிஷின்களின் விலை 20 ஆயிரம் என்ற அளவுக்கு இருக்கின்றன.

பள்ளிச் சிறுமி ஒருவர் இந்த மின் மோட்டாருக்குப் பதிலாக சைக்கிள் செயினை மாட்டி பெடல் செய்தே அந்த மோட்டாரை இயக்கும் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார். அதிக துணிகள் போட்டால் மிதிக்க சற்று சிரமமாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு எளிதில் உலர வைத்துவிடமுடியும். நமது நாட்டில் இருக்கும் வியாபாரிகளும், விஞ்ஞானிகளும் விளம்பர மார்கெட்டிங் நிறுவனங்களும் இதுபோன்ற புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுத்து இவற்றை பெருமளவில் உற்பத்தி செய்ய வழிவகுத்துத் தரவேண்டும். பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளம் தருகிறார்கள். அதனால் வளமான வாழ்க்கை கிடைக்கிறது என்று அதிலேயே முடங்கிவிடக்கூடாது.

நமது கட்டுமானத்துறையில் நடந்துவரும் மேற்கத்திய மயமாக்கம் போல் அநியாயம், இழிவு வேறு எதுவுமே இல்லை. பிரிட்டிஷார் வருவதற்கு முன்பாக நம் தேசத்தின் கட்டுமானக் கலையும் சிற்பங்கள் போன்றவையும் உலகத் தரம் வாய்ந்தவையாகத் திகழ்ந்திருக்கின்றன. நாம் நமது தாழ்வு மனப்பான்மையின் காரணமாக இன்றைய கட்டுமானங்களை ஐரோப்பிய, அமெரிக்க பாணியில் வடிவமைத்து வருகிறோம். அதிலும் நமது வீடுகளை வடிவமைக்கும் விதமானது மிக மிக மட்டமானதாக, கலை அழகு இல்லாததாக ஆகிவருகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தாரின் வீடுகள், மன்னர்களின் அரண்மனைகள், ஜமீன் தார்களின் வீடுகள், அக்ரஹாரங்கள் போன்றவையெல்லாம் கட்டுமானக் கலையில் உன்னதமானவை. தீப்பெட்டியை அடுக்கி வைத்ததுபோல் கட்டப்படும் அடுக்குமாடி வளாகங்கள், அலுவலகங்கள் எல்லாம் துளியும் கலை நயம் அற்றவையே.

பெரு நகரங்களில் அலுவலகங்கள், மக்கள் வந்து குவிவதால் 10 மாடி, 20 மாடி என கட்டிக்கொண்டே போகவேண்டியிருக்கிறது என்பதை ஓரளவுக்குத்தான் ஏற்க முடியும். ஒரு நகரத்தில் இப்படி அனைத்தையும் கொண்டுவந்து குவிப்பது மிகவும் தவறான அணுகுமுறைதான். இன்று இணையம், கணினி, தொகைதொடர்பு என வசதிகள் பெருவிகிட்டன. எனவே மெட்ரோ நகரங்களிதான் அனைத்துமே அமையவேண்டும் என்றில்லை. கிராமப்புறங்களில் போதிய இட வசதிகள் இருக்கின்றன. இயற்கைச் சூழல் இருக்கின்றன. நமது பாரம்பரிய முறையிலான கட்டுமானங்களுக்கு அங்கு தாராளம் இடம் இருக்கின்றன. நகரத்தாரின் வீடுகளைப் போல் பிரமாண்டமாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைக் கட்டிக்கொள்ள அங்கு தடையே இல்லை. அக்ரஹாரங்களைப் போல் பணியாளர்களுக்கான வீடுகளை வடிவமைத்துக்கொள்வதில் எந்தச் சிக்கலும் அங்கு இருக்காது.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்று இந்தியர்கள் உலகம் முழுவதும் சென்று வேலை பார்க்கிறார்கள். அந்த நாடுகளில் சிறுசிறு குழுவாகச் சேர்ந்து வாழவும் செய்கிறார்கள். முடிந்த அளவுக்கு நமது கோவில்கள், நடனங்கள், இசைக் கச்சேரிகள், திருவிழாக்கள் ஆகியவற்றை அங்கும் பின்பற்றுகிறார்கள். ஆனால் வீடுகள் என்பது முழுக்கவும் அந்த நாட்டு பாணியிலேயே இருக்கிறது. அதை மாற்றியமைத்து இந்திய பாணியில் அனைத்தையும் கட்டவேண்டும். வெளிநாட்டில் இருக்கும்போதும் இந்திய உடை அணிவது எப்படி தேசத்துடனான பந்தத்தை உருவாகுகிறதோ அதுபோல் வாழும் இடமும், அலுவலகமும் (முடிந்தால் கட்டப்படுவது மிகுந்த மனநிறைவு ஏற்படும். என்றோ ஒரு நாள் அணியும் உடை தரும் மனநிறைவைவிட எந்நாளும் வாழும் இடம் தரும் அல்லவா?

கார், பைக் என மேற்குலகம் உருவாக்கியிருக்கிறது. அவர்களுடைய ஊரில் சாலைகள் அகலமானவை என்பதால் வேகத்துக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். நாமோ குறுகலான சாலைகளைக் கொண்டவர்கள். அப்படியானால் நாமும் அதே வேகத்துக்கு முக்கியத்துவம் தருவதென்பது விபத்துகளையே கொண்டுவரும். நாம் குறைவான வேகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.

இந்த உலகில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களிலேயே மிகவும் அபாயகரமானது பைக்கள்தான். ஹெல்மெட் போட்டுக்கொண்டு போவதுஎன்பதைத் தவிர எந்தவித பாதுகாப்பும் இல்லாத வாகனம். ஆனால், அதன் வேகமோ 80-100 என்று காருக்கு இணையாகவே இருக்கவும் செய்கிறது. இது மிக மிக ஆபத்தானது. நம் நாட்டில் நடக்கும் விபத்துகளில் 60-70 சதவிகித விபத்துகள் பைக் பயணத்தில்தான் ஏற்படுகின்றன.

பைக்கின் வடிவமைப்பில் தேவையான மாறுபாட்டை நாம் இந்தியக் கோணத்தில் செய்யவேண்டும். பைக் என்பது இரண்டு சக்கரங்கள் மட்டுமே கொண்ட்தாக இருப்பதால் எளிதில் கவிழக்கூடியதாக இருக்கிறது. அதை ஏன் நான்கு சக்கரங்கள் கொண்டதாக ஆக்கக்கூடாது. இப்போது இருக்கும் சக்கரங்களுக்கு சற்று அருகில் இன்னொரு ஜோடி சக்கரங்களை முன்னும் பின்னுமாகப் பொருத்தினால் போதும்.

நமது நாட்டில் கூட்டுக்குடும்பம் வழக்கொழிந்து வருகிறது. எனினும் குழந்தைகளும் பெற்றோரும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள். குறைந்தது நான்கு பேர் ஒரு குடும்பத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். நான்கு சக்கரங்களைப் பொருத்துவதன் மூலம் பைக்கின் சீட்டை சற்று அகலப்படுத்தி நான்கு பேருமே அமர்ந்து செல்லும்படியாக வடிவமைக்கலாம். இது அழகிய மினியேச்சர் கார் போலவே இருக்கும். சுற்றிலும் மெட்டல் பாடி உருவாக்கினால் இன்னும் நல்லது. அது இல்லையென்றால் கூடப் பரவாயில்லை.

ரத்தன் டாடா மலிவு விலை கார் தயாரிக்க விரும்பியபோது பைக்-ஸ்கூட்டர் நிறுவனங்களுடன் இப்படியான ஒரு மாடலைத்தான் முதலில் உருவாக்க விரும்பினாராம். ஸ்கூட்டர் நிறுவனங்கள் சம்மதிக்கவில்லையென்பதால் நேனோ கார் தயாரித்தாராம். உண்மையில் அவரே ஒரு நான்கு சக்கர பைக் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கலாம். இன்றும் அதற்கான தேவை இருக்கத்தான் செய்கிறது.

பைக்கில் இந்தியக் குடும்பம் ஒன்று கணவன், மனைவி, குழந்தைகள் என்று இடுக்கிக் கொண்டு சென்றதைப் பார்த்து மனம் வருந்தி, அந்த இந்தியக் குடும்பங்களுக்கு உதவும் என்றுதான் அவர் நேனோவே தயாரித்ததாகவே சொல்லியிருக்கிறார். நான்கு சக்கர பைக் எளிதில் அதைப் பூர்த்தி செய்திருக்கும். ஒரு காரைவிட சுற்றுச் சூழலுக்கு இது குறைவான தீங்கையே உருவாக்கும். மேற்குலத்துக்கு வேகம் பிரதானம்; தனி நபர் குடும்பமே அங்கு அதிகம். நமக்கு பாதுகாப்பு முக்கியம். குடும்பம் முக்கியம். எனவே இந்தியக் கோணத்தில் நமது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இருக்கவேண்டும்.

இதைவிட சைக்கிள்களின் பயன்பாடு அதிகரித்தாகவேண்டியது காலத்தின் கட்டாயம். எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்ற்ச் சூழல் மாசை அது கணிசமாகக் குறைக்கவும் செய்யும். இந்த எண்ணம் நமக்கு இதுவரை இருந்திருக்கவில்லை. இதனால் நமது சாலைகளில் சைக்கிள்களுக்கென்று தனி லேன் அமைக்க வழியில்லை. உண்மையில் எந்தவொரு சாலையாக இருந்தாலும் நடைபாதை, சைக்கிள் பாதை என ஓரத்தில் இருந்திருக்கவேண்டும். இனிமேல் அதைச் செய்வது சிரமம் என்பதால் சைக்கிள்கள் செல்லும்படியாக பாலங்கள் அமைக்கவேண்டும். இப்போது இருக்கும் சாலைகளுக்கு அருகிலேயே வீடுகளும் அலுவலகங்களும் இருப்பதால் அவற்றின் மேலாக பாலங்கள் அமைப்பது சிரமம். ஆனால், தேசம் முழுவதிலும் இருக்கும் ரயில் பாதைக்கு மேலாக சைக்கிள்களுக்கான பாலம் அமைப்பது மிகவும் எளிது. சைக்கிள்கள் மட்டும் அதில் செல்லும் என்பதால் அதிக வலுவுடன் அமைக்கவேண்டிய அவசியமும் இருக்காது. மெட்ரோ ரயில் பாதை, பறக்கும் ரயில் பாதை இவற்றைவிட இந்த சைக்கிள் பாலங்கள் மிகுந்த பலனைத் தரும். ஒரு கம்பெனியின் சி.இ.ஓ. தன் ஒருவருக்காக ஒரு காரில் பயணம் செய்து நான்கு பேருக்கான இடத்தை அடைப்பதைவிட சைக்கிளில் பயணம் செய்வது மிகப்பெரிய சி.எஸ்.ஆர். ஆக இருக்கும். பொதுவாக ஐந்துகிலோமீட்டருக்குள்ளான நமது பெரும்பாலான அன்றாடப் பயணங்களுக்கு சைக்கிள் மிகவும் பொருத்தமானது.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *