வாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு

சொந்த நாட்டில் அடிமைகளாய் வாழ்கின்ற துர்பாக்கிய நிலைமை, தமிழக ஹிந்துக்களுக்கு நீடிக்கிறது. இங்கே ஹிந்துக்களின் மதச் சுதந்திரம், அரசியல் கபடதாரிகளின் முன்னே மண்டியிட்டுக் கிடக்கிறது. இவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான விசை, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்னும் வடிவிலே தற்போது கிடைத்துள்ளது. கடந்த 7-ஆம் தேதியன்று (07.06.2021), போற்றுதலுக்குரிய இந்தப் புனிதத் தீர்ப்பை அளித்த நீதிபதிகள் திரு. மகாதேவன் மற்றும் திரு. ஆதிகேசவலு ஆகிய இருவரையும் சாட்சாத் அந்த பரமேஸ்வரன், மகாவிஷ்ணு என்றே துதிக்கத் தகும்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஹிந்து அறநிலையத் துறையிடம் அறமும் இல்லை, ஹிந்து கலாசாரப் பாரம்பரியத்தைக் காப்பாற்றும் எண்ணமும் இல்லை என்பதை இந்தத் தீர்ப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது. 225 பக்கங்கள் கொண்ட இந்த பிரும்மாண்டத் தீர்ப்பு, தமிழக அரசும் அதன் ஹிந்து அறநிலையத் துறையும் மேற்கொள்ள வேண்டிய கடமைகளுக்கான 75 உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. ஹிந்துக் கோவில்களின் சொத்துகளையும், விக்ரகங்களையும் மட்டுமல்ல, கோவில்களைச் சார்ந்துள்ள  கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றுத் தொன்மை, இசை, இலக்கியம், கலைகள், ஆகம விதிகள், வழக்கமான நடைமுறைகள் ஆகிய அனைத்தையும் காப்பாற்ற வேண்டிய, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்பதை இத் தீர்ப்பு, வெறும் மரச் சுத்தியலால் அல்ல, பெரிய சம்மட்டியாலேயே அடிப்பதைப் போன்று அடித்துக் கூறியுள்ளது.

இந்த வியத்தகு தீர்ப்புக்கான விதையை ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் தன்னையறியாமலேயே விதைத்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, அந்நாளிதழின் வாசகர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தின் அடிப்படையில், அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வால் தானாக முன்வந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பு இது. கோவில்கள் உள்ளிட்ட வரலாற்றுப் புராதனச் சின்னங்களைக் காப்பாற்றுவதற்காக, 17 உறுப்பினர்களைக் கொண்ட பாரம்பரியக் காப்பாணையக் குழு (Heritage Commission) அமைப்பதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என்று 2012-இல் அறிவித்து, அதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகும், அந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதை ‘Silent Burial’ என்ற தலைப்பிலான அந்த வாசகர் கடிதம் சுட்டிக்காட்டியிருந்தது.

முக்கிய அம்சங்கள்: வரலாற்றுச் சிறப்பு மிக்க இத் தீர்ப்பு கோடிட்டுக் காட்டியுள்ள முக்கிய அம்சங்களாவன:

கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மாத்திரம் அல்ல, சிற்பங்கள், விக்ரகங்கள், ஓவியங்கள், இசை, கலைகள் என்ற வகையிலே பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் மையங்களாகவும் அவை திகழ்கின்றன. காலம் கடந்து நிற்கும் இக்கோவில்களை வரலாற்று, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களாகக் கருத வேண்டும். கோவில் தல வரலாறு என்பது, பண்டைய வரலாற்றுச் சம்பவங்களை பிரதிபலிப்பதோடு, இம்மண்ணின் மொழி உயிர்ப்புடன் திகழவும் உதவிகரமாக உள்ளது.

தொன்றுதொட்டு நடைபெற்று வரும் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பேணிக் காப்பாற்றுவதற்காகவே, பழங்காலக் கோவில்களிலே ஒவ்வொரு கலை வடிவத்துக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கேற்ப கோவில்கள் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளன. இறைவன் திருவுருவச் சிலைகளுக்கு முன்பு மந்திரங்கள் கூறுதல், திருமுறைகளை ஓதுதல், வேதம் ஓதுதல், நாட்டியம் ஆடுதல், நாடகம் அல்லது தெருக்கூத்து ஆடுதல், பட்டிமன்றம் நடத்துதல், விழாக்களைக் கொண்டாடுதல் ஆகிய அனைத்துமே இதில் அடங்கும்.

சிற்பத் தூண்கள் கொண்ட மண்டபங்கள், ஓவியங்கள், சுவரோவியங்கள் ஆகிய அனைத்துமே கோவிலின் பாரம்பரியத்தைப் பறைசாற்றுபவை. கோவில்கள் என்பவை இதுபோன்ற பல்வேறு கலையம்சங்களோடு பின்னிப் பிணைந்தவை. இதுபோன்ற கலைகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்தால்தான் அவை நீடிக்க முடியும். இதில் ஏதேனும் ஒரு செயல்பாடு மறையத் தொடங்கினாலும், அது கோவில் சார்ந்த சடங்குகளை பாதிப்பதோடு  மட்டுமின்றி, காலப்போக்கில் இதர செயல்பாடுகளையும் மறையச் செய்து, கோவிலின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும்.

எனவே, கோவில்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், புனரமைப்பதோடு நின்றுவிடாமல், அக்கோவில்கள் சார்ந்த பாரம்பரியப் பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள் ஆகியவையும் தொய்வின்றி நடைபெற முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் பல்வேறு மகான்களோடு தொடர்புடையவை கோவில்கள். ஒவ்வொரு கோவிலிலும், அவர்களது தெய்வீகப் பாடல்கள்  உரிய இசைக்கருவிகள் இசைக்க பாடப்பட வேண்டும்.

கோவில்களைச் சார்ந்த பல்வேறு மடங்களும், ஆதீனங்களும் தமிழ் இலக்கியம், செய்யுள்கள், இசை, மதநூல்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து வரும் பாரம்பரிய இடங்களாகும். தேசத் தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள், தவயோகிகள் போன்றோரை ஆதரித்தவை இம்மடங்களாகும். இக்காலத்திலும் சிறந்த கல்விக்கூடங்களாக அவை திகழ்கின்றன.

ஆலயங்களின் பாரம்பரியப் பெருமைகள்: பல்வேறு கோவில்களில் காணப்படும் கல்வெட்டுகள், வரலாற்றுத் தகவல்களின் பெட்டகங்களாகும். உத்தரமேரூர் வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள 1,100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்வெட்டு, அக்காலத்திலேயே தமிழகத்தில் ஜனநாயக ரீதியிலான ஊராட்சி நடைபெற்றதற்குச் சான்றாகும். 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாமல்லபுரம், கோவில் கட்டடக் கலைக்கான அருங்காட்சியகம் போல் திகழ்கிறது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவில், மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட அற்புதமான குடைவரைக் கோவில் என்பதோடு, சங்க இலக்கியங்களில் போற்றப்படும் பழமை வாய்ந்த தலமுமாகும்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் காணப்படும் 50-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும், அரிய சிற்பங்களும் புறநானூற்றில் புகழப்பட்டுள்ளன. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரமும், மாபெரும் நந்தியும் உலகப் புகழ் பெற்றவை. பிரும்மாண்டமான கோபுரங்களுடனும், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட சிற்ப வேலைப்பாடுகளுடனும் கூடிய மதுரை மீனாட்சியம்மன் கோவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்துவரும் முக்கிய புனித யாத்திரைத் தலமாகும். இதேபோல் பாடல் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலும் கட்டடக் கலைக்கு உலகப் புகழ் பெற்ற தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மை வாய்ந்தது. இதேபோல் பல்வேறு கோவில்களும் பழமையும், கலைப் பாரம்பரியமும் கொண்டவை.

தமிழகக் கோவில் கோபுரங்களின் விமானங்களுக்கு அக்கால மன்னர்கள் பொற்கூரை வேய்ந்துள்ளனர். கணக்கற்ற தங்க நகைகளையும் முத்துக்கள், வைரங்கள், இதர நவரத்தினங்கள் பதித்த இதர ஆபரணங்களையும் காணிக்கையாகத் தந்துள்ளனர். கோவில்களில் உள்ள வெண்கலச் சிலைகளும், பஞ்சலோகச் சிலைகளும் நவரசங்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழகக் கோவில்களில் பக்தியும், இறை நம்பிக்கை சார்ந்த மரியாதையும் மிகுந்த சூழல்  நிலவுவதை, அதன் கட்டடக்கலைச் சிறப்பில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.

ஆகையால், கோவில்களையும், அவற்றின் சொத்துகளையும் பாதுகாப்பதோடு, கோவில்களின் தொன்மை வாய்ந்த தமிழ் மரபுகள், கலாசாரம் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் அவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.

கடமை தவறிய அரசு: தமிழகத்தில் 42,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் சுமார் 38,000 கோவில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் சில கோவில்கள் மட்டுமே வரலாற்றுத் தொன்மை முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் பல பழங்கோவில்கள் அவ்வாறு அறிவிக்கப்படாத நிலையிலேயே உள்ளன. நமது பண்டைய மத நம்பிக்கையும், தெய்வீக நூல்களும் அயல்நாடுகளைச் சேர்ந்த மக்களாலேயே தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்ற போதிலும், நம் சொந்த நாட்டில் அரசியல் உள்நோக்கங்களுக்காக அவற்றுக்கு எதிரான கூச்சல் எழுகிறது.

2015-இல் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை நடந்து முடிந்த புகார்கள் பதிவு, பதிலுரைகள், நீதிமன்ற உதவியாளரின் ஆய்வறிக்கை, முந்தைய உத்தரவுகள், ஆலோசனைகள், பதில் மனுக்கள், கள ஆய்வறிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பார்த்ததில், சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பு (தமிழக அரசு), குறிப்பாக அறநிலையத் துறை தனது கடமையைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றே சென்னை உயர் நீதிமன்றம் கருதுகிறது. பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிறகும், வரலாற்றுச் சின்னங்கள், கோவில்கள், கோவில் நிலங்கள் மற்றும் சொத்துகள், விக்ரகங்கள் (திருச்சிலைகள்) ஆகியவற்றைப் பாதுகாப்பதற்குத் தகுந்த செயல்பாட்டு முறையை (Mechanism) அறநிலையத் துறை உருவாக்கவில்லை.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களையும், சிலைகளையும் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும். இதனை அரசமைப்புச் சட்டத்தின் 49-ஆவது பிரிவு வலியுறுத்துகிறது. நமது கலாசாரத்தின் வளம் மிகுந்த பாரம்பரியத்தை மதிப்பதும், பாதுகாப்பதும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கடமையாகும் என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 51A(f) கூறுகிறது.

யுனெஸ்கோ கண்டறிந்த உண்மை நிலவரம்: கோவில் பாதுகாப்பு தொடர்பாக உண்மை நிலவரத்தைக் கண்டறிவதற்காக நீதிமன்ற உத்தரவுப்படி  அமைக்கப்பட்ட யுனெஸ்கோ குழு, குறிப்பிட்ட 10 கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு கடந்த 2017-இல் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.

“கோவில்களைப் பாதுகாப்பதற்கான பணிகளை (திருப்பணிகளை)  மேற்கொள்வதற்குத் தகுதியும் திறமையும் வாய்ந்த நிபுணர்கள் அறநிலையத் துறையிடம் இல்லை. கோவில் பாதுகாப்புக்குத் தேவையான தகுந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படுவதில்லை, மேலும் தகுதி வாய்ந்த நிபுணர்கள் குழு எதுவும் இல்லை. தற்போதுள்ள ஸ்தபதியின் தரம் கேள்விக்குரியது. அறநிலையத் துறையின் ஒருசில பணியாளர்கள் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் உணர்வோடு இருந்தாலும், பெரும்பாலானோருக்குத் தேவையான தகுதிகளோ, அனுபவமோ இல்லை.

“சில கோவில்களில் நடைபெற்றுள்ள திருப்பணி (பழுதுபார்ப்பு) வேலைகள், அலட்சியமான  செயல்பாட்டுக்குச் சிறந்த உதாரணங்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவில்களை அவை சேதப்படுத்தியுள்ள அவலமும் நேர்ந்துள்ளது. ஆகம சாஸ்திர விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. கோவில்களின் கட்டுமானம் குறித்த பழைய வரைபடங்களோ, புதிய உத்தேச வரைபடங்களோ எதுவுமில்லை. கோவில் கட்டடக் கலை குறித்த வரலாற்றுப் பூர்வ ஆய்வு எதுவுமில்லை. கோவில் பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைந்த திட்டமோ, முழுமையான ஆய்வறிக்கையோ எதுவுமில்லை” என்று உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

முக்கிய உத்தரவுகள்: இவ்விதம் அறநிலையத் துறையின் அவலப்போக்கைப் பிட்டுப்பிட்டு வைத்துள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்பு, தமிழக அரசும், அறநிலையத் துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்ன என்பது குறித்து முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அவை:

தமிழகத்தில் கோவில்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மாமல்லபுரம் உலகப் பாரம்பரியப் பகுதி நிர்வாக ஆணையம் (எம்.டபிள்யூ.ஹெச்.ஏ.எம்.ஏ.) என்ற ஆணையம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கான அரசு அறிவிக்கை, தீர்ப்புத் தேதியில் இருந்து 8 வாரங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும்.

பாரம்பரியக் காப்பாணையக் குழு: இந்த ஆணையத்துக்கும் அரசுக்கும் ஆலோசனை தரும் அமைப்பாகச் செயல்படுவதற்கு, 17 உறுப்பினர்கள் அடங்கிய பாரம்பரியக் காப்பாணையக் குழுவை (Heritage Commission) 8 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். இந்த 17 உறுப்பினர்களில், இந்தியத் தொல்பொருள் ஆய்வமைப்பு (ஏ.எஸ்.ஐ.), மாநில தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள், பிரபல வரலாற்று ஆய்வாளர் அல்லது மானுடவியல் அறிஞர் ஒருவர், பொதுப்பணித் துறையின்  கட்டட அமைப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி ஒருவர், பொதுப்பணித் துறையின் கட்டுமானக் கலைப் பிரிவு அதிகாரி ஒருவர், அறநிலையத் துறையில் இணை ஆணயருக்குக் குறையாத பதவி வகிக்கும் ஒருவர், மாமல்லபுரம் அரசுக் கட்டடக்கலைக் கல்லூரி அல்லது இதேபோன்ற இதர அரசுக் கலைக் கல்லூரியைச் சேர்ந்த தகுதி வாய்ந்த ஸ்தபதி (சிற்பி) ஒருவர், ஆகமங்கள் மற்றும் சிற்பக் கலைகளில் வல்லுநர்களான இருவர், ரசாயன (வேதியியல்) அறிஞர் ஒருவர் உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும். யுனெஸ்கோ பிரதிநிதி ஒருவரை இடம்பெறச் செய்யவும் பரிசீலிக்க வேண்டும்.

இந்த ஆணையக் குழுவானது, மாநிலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த அனைத்துக் கோவில்கள், புராதனக் கட்டடங்கள், இதர நினைவுச் சின்னங்களைக் கண்டறிந்து, அவற்றின் வயது, காலகட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட்டு, தேவையான அறிவிக்கைகளை வெளியிடுவதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை ஆய்வு செய்தல், கண்காணித்தல், புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

மத்திய அல்லது மாநில அரசின் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட எந்தவொரு வரலாற்றுச் சின்னமோ, கோவிலோ, விக்ரகமோ, சிற்பமோ, சுவரோவியமோ இந்தப் பாரம்பரியக் காப்பாணையக் குழுவின் ஒப்புதலின்றி பழுதுபார்த்தல் அல்லது புதுப்பித்தல் பணிக்கு உட்படுத்தப்படக் கூடாது.

நிபுணர்கள் குழு: மாநில அளவிலான நிபுணர்கள் குழுவையும் மாநில அரசு ஏற்படுத்த வேண்டும். இந்தக் குழுவிலே, கட்டுமானக் கலை நிபுணர், தொல்பொருள் ஆய்வாளர், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நிபுணர், தகுதி வாய்ந்த மரபுவழி ஸ்தபதி, வரலாறு, எழுத்தியல், உருவயியல், மற்றும் நுண்கலைகளில் தேர்ந்த நிபுணர், ஆகம விற்பன்னர்கள் இருவர், அறநிலையத் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றின் தலா ஒரு பிரதிநிதி ஆகியோர் இடம்பெற வேண்டும்.

மாவட்ட அளவிலான நிபுணர்கள் குழுவின் பரிந்துரைப்படி, கோவில்களின் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்வதும், அதற்கான அனுமதிகளை வழங்குவதும் மாநில நிபுணர்கள் குழுவின் பொறுப்பாகும். வரலாற்று நிபுணர், தகுதி வாய்ந்த ஸ்தபதிகள், கட்டுமானக் கலை நிபுணர், சுவரோவிய நிபுணர், வரலாற்றுச் சின்ன பாதுகாப்பு நிபுணர், அறநிலையத் துறை பிரதிநிதி ஆகியோர் அடங்கிய மாவட்டக் குழுக்களை மாநில அரசு உருவாக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள கோவில்களைப் பார்வையிட்டு, அவற்றில் எந்தெந்த கோவில்கள், விக்ரகங்கள் ஆகியவை அரசுச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படக் கூடியவை, எவற்றில் எல்லாம் பழுதுபார்ப்பு திருப்பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பவற்றைக் கண்டறிந்து, பாரம்பரியக் காப்பாணையக் குழு அல்லது நிபுணர்கள் குழுவின் மேற்பார்வையின் கீழ் அரசுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கையை மாவட்டக் குழு தயார் செய்ய வேண்டும்.

செயற்குறிப்பேடு: பாரம்பரியக் காப்பாணையக் குழு, எம்.டபிள்யூ.ஹெச்.ஏ.எம்.ஏ. ஆகியவற்றின் செயல்பாட்டுக்கான நெறிமுறைகள்; பாரம்பரிய மற்றும் பாரம்பரியம் சாராத கோவில்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தலங்களை சேதங்களில் இருந்து தடுத்தல், பாதுகாத்தல், புதுப்பித்தல் தொடர்பான செயல்முறைகள் ஆகியவை தொடர்பான பாதுகாப்புச் செயற்குறிப்பேட்டை (Conservation Manual) மாநில அரசு, 12 வாரங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும்.

நேரடி ஆய்வு: இந்தியத் தொல்பொருள் துறையானது (ஏஎஸ்ஐ), மாநிலத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த கோவில்கள் அனைத்தையும் கள ஆய்வு செய்ய வேண்டும். அவற்றில் ஏற்பட்டுள்ள சேதத்தைக் கண்டறிந்து,  6 அல்லது 12 மாதங்களுக்குள் மீண்டும் முந்தைய நிலைக்கு அதனைப் புதுப்பித்தல் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும். கோவில்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணைய வலைத்தளம் ஒன்றை ஏஎஸ்ஐ உருவாக்க வேண்டும்.

கோவில்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் அதன் சொத்துகள் தொடர்பாக, ஹிந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் அல்லது இணை ஆணையர் பதவியில் உள்ள உயரதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எந்தவொரு கோவில், விக்ரகம், நினைவுச் சின்னம், சிற்பம், சுவரோவியம், சித்திரம் சம்பந்தப்பட்ட பழுதுபார்ப்பு அல்லது திருத்தப் பணிகள் எதுவும் மாநில அளவிலான அல்லது மாவட்ட அளவிலான குழுவின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படக் கூடாது. தற்போது நிலுவையில் உள்ள பணிகளையும் இக் குழுக்களின் அனுமதி பெற்ற பிறகே தொடர வேண்டும். ஆகம மற்றும் சிற்ப சாஸ்திரங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டுள்ள பழுதுபார்ப்புப் பணிகள் மீது கவனம் செலுத்தி, அவற்றின் முந்தைய தொன்மையான நிலைக்கேற்ப அவற்றைச்  சீரமைக்க வேண்டும்.

கோவில் வருமைானத்தை மடைமாற்றக் கூடாது: கோவில் வருமானத்தை அந்தக் குறிப்பிட்ட கோவில் மற்றும் அதுசார்ந்த மதப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், வேறு விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று சட்டப் பிரிவு 66 தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கிறது. எனவே கோவில் வருமானத்தை பிற துறைகளுக்கோ அல்லது அரசுக் கருவூலத்துக்கோ மாற்றுவதோ, இதர விஷயங்களுக்காகப் பயன்படுத்துவதோ கூடாது.

கோவில் வருமானமானது, கோவில் பராமரிப்பு, கோவில் விழாக்களை நடத்துதல், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கான ஊதியம் வழங்குதல் ஆகியவற்றுக்கே முதன்மை நோக்கமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு மேல் கூடுதல் வருமானம் இருப்பின், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இதர கோவில்களில் பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்தெந்த ஆலயங்களில் சரியான அளவிலும், உடனடியாகவும் புதுப்பிப்பு, புனரமைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதையும், எந்தெந்த ஆலயங்களில் முறைப்படியான தினசரி பூஜைகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது என்பதையும் கண்டறிந்து அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டியது அறநிலையத் துறையின் கடமையாகும்.

சொத்துக் கணக்கெடுப்பு, தணிக்கை: கோவில்களுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்துகளைக் கணக்குத் தணிக்கை செய்வதற்கான தரநிலைகளையும் நடைமுறைகளையும் அறநிலையத் துறை வகுக்க வேண்டும். கோவில்கள் போன்ற மத அமைப்புகளின் சொத்துகளை சுதந்திரமான கணக்குத் தணிக்கைப் பிரிவைக் கொண்டு ஆய்வு செய்ய  வேண்டியது சட்டப்பிரிவு 87-இன் கீழ் அவசியமாகும்.

கோவில் விக்ரகங்கள், ஆபரணங்கள், இதர மதிப்பு வாய்ந்த பொருட்களின் பதிவு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டும். தங்க நகைகள், விக்ரகங்கள் திருட்டுப்போயிருந்தாலோ காணாமல் போயிருந்தாலோ அவை குறித்து கணக்கெடுத்து, அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கோவில் நிலம் கோவிலுக்கே: மாவட்ட நிபுணர்கள் குழுவானது, சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோவில்களின் நிலங்களையும் கணக்கெடுக்க வேண்டும். நிலங்களின் சர்வே எண், கதவிலக்கம், குத்தகைக்கு விடப்பட்டுள்ளதா இல்லையா, விவசாயப் பணி நடைபெறுகிறதா இல்லையா, தற்போதைய நில வாடகை, வாடகை நிர்ணய நாள், சந்தையில் தற்போதைய வாடகை நிலவரம், குத்தகைதாரர் பெயர், குத்தகைக் காலம், 5 ஆண்டுகளுக்கு மேற்பட்டு இருந்தால் ஆணையரால் அனுமதிக்கப்பட்டுள்ளதா என்ற விவரம், குத்தகைதாரர் தனிநபரா அல்லது நிறுவனமா போன்ற விவரங்கள், தனிநபர் எனில் அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல், வாடகை பாக்கி இருப்பின் அதன் விவரங்கள், வாடகை செலுத்தப்படாத கால அளவு, நிலுவையில் உள்ள வழக்குகள், நில ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியல், நடவடிக்கை நிலவரம், அறிவிப்பு வெளியிடப்பட்ட கோவில் நில ஆக்கிரமிப்புகளின் பட்டியல், அவற்றை மீட்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்றதற்கு எதிராக தொடுக்கப்பட்ட கிரிமினல் புகார்களின் நிலவரம் போன்ற அனைத்து விவரங்களையும் திரட்ட வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்துக்கு 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பாடு என்ற கொள்கையை இங்கே நுழைக்கக் கூடாது. கோவில் நிலங்களின் அறங்காவலராக இருக்கும் மாநில அரசோ அல்லது அறநிலையத் துறை ஆணையரோ, நில நன்கொடையாளர்களின் விருப்பத்துக்கு மாறாக கோவில் நிலங்களைப் பயன்படுத்துவதோ பிறருக்குக் கொடுப்பதோ கூடாது.

இனமாகக் கொடுக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும். கோவில் நில ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது 8 வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிலைகளைப் பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு: புராதனச் சின்னம் அல்லது தொன்மை வாய்ந்தது என்ற விளக்கத்துக்கு உட்படுகின்ற அனைத்து விக்ரகங்கள் குறித்தும் மாவட்ட நிபுணர்கள் குழு கணக்கெடுத்து பட்டியல் தயாரிக்க வேண்டும். அவற்றைப் புகைப்படம் எடுத்து கம்ப்யூட்டரில் சேகரிக்க வேண்டும்.

சிலைகள் தொடர்பான விவரங்கள், திருட்டுப்போன சிலைகள், அவை மீட்கப்பட்டனவா, திருட்டு குறித்து எஃப்ஐஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதா-  இல்லையா, வழக்குகளின் தற்போதைய நிலைமை ஆகிய தகவல்களை ஹிந்து அறநிலையத் துறையும் இந்தியத் தொல்பொருள் துறையும் தங்களது இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

களவுபோன மூலவர் விக்ரகங்களை அறநிலையத் துறை மீட்க வேண்டும். அனைத்துக் கோவில்களிலும் சிலைகளைப் பாதுகாப்பதற்கு நவீன அறிவியல் தொழில்நுட்பத்துடன், எச்சரிக்கை மணி, 24 மணி நேர வீடியோ  கண்காணிப்பு ஆகிய வசதிகளுடனும் கூடிய பாதுகாப்பு அறைகளை அறநிலையத் துறை ஏற்படுத்த வேண்டும்.

சிலைகளின் இருப்பு விவரங்களை கம்ப்யூட்டரில் சேமிக்க வேண்டும், எழுத்துப்பூர்வ ஆவணங்களிலும் இவை இடம்பெற வேண்டும். சிலைக் கடத்தல் ஆசாமிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு, ஏஎஸ்ஐ நிபுணர்கள் அடங்கிய மத்திய சிலைகள் மற்றும் தொன்மைப் பொருட்கள் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

தகுந்த அளவில் கோவில் பணியாளர்கள்: ஒவ்வொரு கோவிலிலும் தினசரி பூஜைகள் முறைப்படி நடைபெறுவதற்கு ஏற்ப, தகுதியும் திறமையும் வாய்ந்த அர்ச்சகர்களை போதுமான அளவுக்கு அறநிலையத் துறை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சைவ மற்றும் வைணவக் கோவில்களிலும் முறையே, தேவாரம்-திருவாசகத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற  ஓதுவார்கள், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தேர்ச்சி பெற்ற பட்டர்கள் ஆகியோரையும் கோவில் பாரம்பரியத்தை நன்கு அறிந்த இசைக் கலைஞர்களையும் நியமிக்க வேண்டும்.

கோவில் விழாக்களின்போது, கோவில் தல வரலாறு, புராணங்களை நன்கறிந்து அவற்றைப் பிறருக்கு எடுத்துரைக்கும் கவிஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்களை அறநிலையத் துறை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த ஸ்தபதிகளை (சிற்பிகளை) கோவில்களில் நியமிக்க வேண்டும்.

தமிழகத்தின் மண் சார்ந்த கலாசாரம், வரலாறு, தொன்மைப் பாரம்பரியம் ஆகியவற்றை நன்கு விளம்பரப்படுத்துவதோடு, அந்த நோக்கத்திலான கருத்தரங்குகள், சுற்றுலாக்கள், போட்டிகள் ஆகியவற்றையும் மாநில அரசு நடத்திட வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: கோவில்களின் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்ட விதிமுறைகளின் படியும், அரசு ஊழியர்களுக்கு இணையாகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஹிந்து அறநிலையத் துறைச் சட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் கோவில் பணியாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற தினத்தில் இருந்து 30 நாள்களுக்குள் இறுதிப் பயன்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரங்கள் குறித்து, நீதிமன்றத்தில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கோவிலுக்கு முழு நேர ஊழியம் செய்ய ஏதுவாக, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, கோவில் வருமானத்தின் அடிப்படையில் அறங்காவலர்களுக்கு நிலையான ஊதியத்தை நிர்ணயிக்கலாம்.

அறங்காவலர்கள் நியமனம்: அறங்காவலர்கள் இல்லாமல் உள்ள கோவில்களின் பட்டியல், எவ்வளவு காலமாக அப்பொறுப்பு காலியாக உள்ளது, அறங்காவலர்களுக்குப் பதிலாக ‘பொருத்தமான நபர்‘ என நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் ஆகிய அனைத்தையும் 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பரம்பரை அறங்காவலர்கள் யாரும் உரிமை கோராத நிலையில், சம்பந்தப்பட்ட கோவிலின் சமய உட்பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபரை, அறங்காவலராக நியமிக்கலாம். அவருக்கு எவ்வித அரசியல் பின்னணியும் இருக்கக் கூடாது. அறங்காவலர்களின் நடத்தை, குணநலன், சமயப் பணிகள்  மற்றும் நிர்வாக அலுவல்களில் அவருக்குள்ள விருப்பம், திறமை ஆகிய அனைத்து விஷயங்களிலும் கடுமையான நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அரசியல் பின்னணி கொண்ட எந்த நபரும் கோவில் ஊழியராகவோ அறங்காவலராகவோ நியமிக்கப்படக் கூடாது.

ஒழுங்கு நடவடிக்கை: உரிய அனுமதி பெறாமல் பழங்காலக் கோவில்களை பழுதுபார்ப்பு என்ற பெயரில் சேதப்படுத்திய மற்றும் திருத்தியமைத்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  திருட்டுப் புகார்கள் மற்றும் கோவில் சொத்துகளை சட்டவிரோதமாக மாற்றியது தொடர்பான புகார்கள் எழுந்துள்ள அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்களுக்கு எதிராக துறை ரீதியில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட உயரதிகார அமைப்புகள் கவனிக்க வேண்டும்.

கோவில் வரலாற்றுப் பலகை: கோவில்களின் முன்புறத்தே, சம்பந்தப்பட்ட கோவிலின் தல வரலாற்றை எடுத்துரைக்கும் கிரானைட் கற்பலகையை அறநிலையத் துறை நிறுவ வேண்டும். கோவிலுக்கு வருவதற்கான திசைகாட்டிப் பலகைகளையும் ஆங்காங்கே பொருத்த வேண்டும்.

கோவிலுக்குச் சொந்தமான திருக்குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் பராமரிப்பை, உள்ளூர் ஏஎஸ்ஐ அலுவலர் மற்றும் உள்ளூர் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் அடங்கிய அறிவியல்பூர்வமாகச் செயல்படும் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தப் பராமரிப்புக்கு ஆகும் செலவுகளை அறநிலையத் துறையே ஏற்க வேண்டும்.

கோவில் பிரசாதங்கள் மற்றும் அபிஷேகங்களுக்குத் தேவையான பொருட்களை நேர்மையாகவும், பாரம்பரிய முறை மற்றும் அறிவியல் ரீதியில் பாதுகாப்பாகவும் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக, மாவட்ட ஆயுர்வேத தலைமை மருத்துவர், சித்தா தலைமை மருத்துவர், அறங்காவலர்கள், உணவுப் பாதுகாப்பு அதிகாரி, பக்தர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களை மாவட்டந்தோறும் ஏற்படுத்த வேண்டும்.

கோவில்களில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளைப் பராமரிக்கும் பாரம்பரியப் பணி, அறிவியல் பூர்வமாகவும் உள்ளூர் அரசு கால்நடை மருத்துவ அலுவலகங்களின் வழிகாட்டுதலின்படியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள நூறாண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த அனைத்துக் கோவில்கள், கோவில் குளங்கள், மடங்கள், கோவில் தேர்கள், நகைகள், ஓவியங்கள், கலைப் பொருட்கள், புனித மரங்கள் (ஸ்தல விருட்சங்கள்) ஆகிய அனைத்தையும், தனியார் நிர்வாகத்தின்கீழ் இருந்தாலும் அவை அனைத்தையும் உடனடியாக ‘தேசியச் சின்னங்கள்’ என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதன்மூலம் புராதனச் சின்னங்கள் சட்டத்தை எழுத்துப் பிசகாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஹிந்து அறநிலையத் துறைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வர வசதியாக, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சட்டத்தை மறுபார்வையிடுவதற்காக உயரதிகாரக் குழு அமைக்கப்பட வேண்டும்.

கோவில்களில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்குத் தேவையான தண்டனையியல் சட்ட விதிமுறைகள், கிரிமினல் சட்ட விதிமுறைகள் ஆகிய ஷரத்துகள் அடங்கியதாக ஹிந்து அறநிலையத் துறைச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற மூதுரைக்கு உயிர்கொடுக்கும் வகையிலும், ‘கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரங்களாக’ மாறிவிட்டதை மாற்றி சீர்திருத்தும் நோக்கிலும் சிறப்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஆலயங்களைப் பாதுகாக்கும் திருப்பணியில் தமிழக ஹிந்துக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

மாவட்டங்கள் அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்படும் நிபுணர்கள் குழுக்களில் ஆன்மீகம் அறிந்த குணவான்கள் இடம்பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். நாம் இருக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கும், பாரம்பரியக் கோவில்களுக்கும் சென்று வழிபடுவதோடு மட்டுமின்றி அவற்றின் தூய்மை, தொன்மை, நம் ஆன்மீகக் கலாசாரம் ஆகியவை  காப்பாற்றப்படவும் நாம் துணை நிற்க வேண்டும். 

அப்போதுதான், ‘வாராதுபோல் வந்த இந்தப் புனிதத் தீர்ப்பு’ உண்மையிலேயே நமக்கு வாழ்வளிக்கும், வளம் கொடுக்கும்.

2 Replies to “வாராதுபோல் வந்த புனிதத் தீர்ப்பு”

 1. “ரூ. 250 கோடி வடபழனி கோவில் நிலம் மீட்கப்பட்டது உண்மையா?”

  சென்னை சாலிகிராமம் பகுதியில் ரூ. 250 கோடி மதிப்புள்ள 5.38 ஏக்கர் வடபழனி கோயில் நிலத்தை மீட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால், உண்மையில் அந்த நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவே இல்லை.

  “சமூகநலத்துறையின் நிலம்”

  வடபழனி கோவிலுக்கு சொந்தமான இந்த இடம் திமுக ஆட்சிக்காலத்தில் 22.10.2008 அன்று தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறைக்கு 29 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு மகளிர் விடுதியை கட்டியுள்ள சமூகநலத்துறை, மீதிமுள்ள இடத்தை திறந்தவெளியாக விட்டுள்ளது. அங்கு வெளியாட்கள் நுழைவதை தடுக்க கேட் எதுவும் இல்லாததால் – வாடகை வாகனங்களை நிறுத்தும் இடமாக சிலர் அதனை பயன்படுத்தி வந்துள்ளனர்.

  அதாவது, வடபழனி கோவில் இடம் இருப்பது தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் கட்டுப்பாட்டில் தான். அந்த இடத்துக்குள் நுழையும் வழியில் ஒரு கேட் அமைத்து பூட்டினாலே, அங்கு யாரும் வாகனங்களை நிறுத்த மாட்டார்கள்!

  சாதாரணமாக ஒரு கேட் அமைப்பதற்கு பதிலாக – ஒரு படையையே திரட்டி சென்று, ஊடகங்கள் முன்பாக சீன் போட்டுள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு! ஆனால், அந்த இடம் சமூகநலத்துறையிடம் இருப்பதால் – இதைக் கூட அந்த துறையின் அமைச்சர் கீதா ஜீவன் தான் செய்திருக்க வேண்டும்!

  “ஒரு துறையிடம் இருந்து இன்னொரு துறையே மீட்டு சிக்ஸர்!”

  தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையிடம் இருந்த நிலத்தை, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளதாக – சிக்ஸர் அடித்துள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு! இதைத்தான் ‘ரூ.250 கோடி வடபழனி முருகன் கோவில் நிலம் மீட்பு’ என்று எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள்!

  —————
  குறிப்பு: முகநூல் நிறுவனத்தின் உதவியுடன் ‘உண்மையை கண்டுபிடிப்பதாக கூறும்’ YouTurn எனும் திமுக ஆதரவு இணையம் உள்ளது. இவர்கள் திமுகவுக்கு எதிராக எந்த செய்தி வந்தாலும் அதனை பொய்ச்செய்தி என்று அறிவிக்கிறார்கள். இந்த டுபாக்கூர் வேலையை நம்பி, முகநூல் நிறுவனமும் அந்த செய்தியை திரையிட்டு மறைக்கிறது. அதே போல ‘வடபழனி கோவில் நிலமீட்பு செய்தியின் உண்மை நிலையை சுட்டிக்காட்டுவதையும்’ இந்த YouTurn நிறுவனம் மறைக்கிறது!

 2. தமிழகத்தில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா என்பது கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு பகிரங்கமான ஆதரவு என்பதாகும்

  எந்த கோவில் நிலமும் காலியாக இல்லை, எல்லா நிலங்களிலும் வீடுகளும் நிறுவணங்களும் அமைந்துள்ளன‌

  அவற்றில் இருப்போருக்கு பட்டா என்பது அவர்களுக்கு கோவில் சொத்துக்களை கொடுப்பதாகிவிடும், நாளையே பல கோடிகளுக்கு அவர்கள் விற்றுவிட்டு இன்னொரு இடத்துக்கு நகரும் வாய்ப்பு உண்டு

  இதனால் பாழாக போவது கோவில்களே

  இது கோவிலின் சொத்துக்களை அழிக்கும் முயற்சி, சொத்துக்கள் அழிய அழிய மெல்ல பலமிழக்கும் கோவில்களும் வருமானமில்லாமல் அழியும் என செய்யபடும் முயற்சி

  யானையினை வதைத்து கொல்ல முதலில் யானை மேல் கைவைக்காதே, அதன் தீவனம் மேல் கை வை, மெல்ல மெல்ல பசியால் வாடும் யானை இறக்கும் எனும் அந்த பழமொழியின் வடிவம் இது

  கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா என்பது எக்காலமும் ஏற்றுகொள்ளமுடியாதது, அதை செய்ய அரசுக்கு நிச்சயம் அனுமதி இல்லை

  இன்று வீட்டுக்கு பட்டா என்பார்கள், நாளை கடைகளுக்கு பட்டா என்பார்கள் ஒரு காலத்தில் எல்லாம் பட்டாவாகி ஆலயத்தின் சொத்து பூஜ்ஜியம் எனும் நிலைக்கு வரும்

  கோவில்களின் நிலமும் வருமானமும் எக்காலமும் கோவிலுக்குரியவை

  குடியிருப்பாளர்களை காலி செய்ய சொல்லவேண்டாம் மாறாக உரிய வாடகையினை ஆலயங்களுக்கு கட்ட சொல்லலாம், அதுதான் காலம் காலமாக ஆலயம் நிலைத்திருக்க வழி

  இந்துக்கள் இது சம்பந்தமாக உடனடியாக வழக்கு தொடுப்பது நல்லது

  தமிழக பாஜக இதை செய்யும் என கருத வேண்டா, அவர்கள் “நட்சத்திர ஜன்னலில்” எதையோ உற்று நோக்கி கொண்டிருப்பதாக செய்தி

  இந்துக்களும் , இந்து அமைப்புக்களும் இது சம்பந்தமாக வழக்கு தொடுக்கலாம், முன்பு வடநாட்டு இந்து தலைவர்களை அழைத்து வருவதை போல் இப்பொழுதும் செய்து ஆலய சொத்துக்களை காக்கலாம்

  இந்து ஆலயங்களை பாழாக்கும் மிகபெரிய சதிக்கு அஸ்திவாரமிடும் திமுக அரசுக்கு கண்டனங்கள்

  இதெல்லாம் கோவில் நிலத்தில் இருக்கும் லயோலா கல்லூரி உள்ளிட்ட பல நிறுவணங்களுக்கு இந்துக்களின் சொத்துக்களை பட்டாபோட்டு கொடுக்கும் முயற்சி

  இது சட்டமானால் எல்லா கோவில் நில ஆக்கிரமிப்பும் முறைபடி பட்டாவாகும், பின் எங்கிருந்து மீட்பது?

  ஆலய சொத்துக்களை மிக பகிரங்கமாக திமுக அரசு தூக்கி கொடுத்து துண்டாட விரும்புவது மிகபெரிய இந்து எதிர்ப்பு துரோகம், இந்துக்கள் ஏதாவது செய்யவேண்டிய கட்டாய நிலையில் இருகின்றனர்

  காலம் தன் கடமையினை யார் மூலமாவது செய்யட்டும் ஆனால் மிக கொடிய காரியத்தில் இறங்கும் இந்த அரசின் நடவடிக்கைக்கு தெய்வமும் ஆலயத்தை கட்டிய மன்னர்களின் ஆன்மாவும் மிக சரியான தண்டனையினை வழங்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *