வியாச மகாபாரதத்தின் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பு கிசாரி மோகன் காங்குலி (1848 – 1908) அவர்களால் செய்யப்பட்டது. இன்றுவரை உலகெங்கும் உள்ள வாசகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அறிஞர்களுக்கும் ஆதாரபூர்வமான மகாபாரத நூலாக அது உள்ளது. முலநூலில் சுமார் 80,000 சம்ஸ்கிருத சுலோகங்களுக்கு மேல் உள்ள இதிகாசத்தின் மொழிபெயர்ப்பு எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்த நூலை ஆதிபர்வம் தொடங்கி அத்தியாயம் அத்தியாயமாகத் தமிழில் மொழிபெயர்த்து 2013ம் ஆண்டு தொடங்கி தனது இணையதளத்தில் அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் செ.அருட்செல்வப் பேரரசன் வெளியிட்டு வந்து, 2020ம் ஆண்டு இறுதியில் நிறைவு செய்தார். அதன்பின்பு பாரதத்தின் பிற்சேர்க்கை என்று கூறப்பட்டும் ஹரிவம்ச புராணத்தையும் இதே போன்று வெளியிட்டு முடித்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பு துல்லியமானதாகவும், அதே சமயம் எளிய, சுவாரஸ்யமான நடையிலும் அமைந்துள்ளது சிறப்பு.
இந்த மகாபாரத மொழிபெயர்ப்பு என்னும் மகத்தான பணியையும் இதன் சிறப்புகளையும் விளக்கி, மார்-2020ல் சென்னையில் நிகழ்ந்த பாராட்டு விழாவில் ஜடாயு ஆற்றிய உரையை இங்கே கேட்லாம்.
மொழிபெயர்ப்பு நிறைவடைந்த பின்பு முழுமையாக கிண்டில் மின்னூல்கள் தொகுப்பாக வெளிவந்தது. பின்பு ஜீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலமாக அச்சுப்புத்தகமாக 14 தொகுதிகளில் வெளிவந்திருக்கிறது.
“பதினான்கு தொகுதிகள் கொண்ட முழுமஹாபாரதம் அச்சு நூல் தொகுப்பு 31 ஜூலை 2020ல் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2020 முடிய 126 தொகுப்புகள் விற்பனை ஆகியிருக்கியிருக்கின்றன. 126 என்பது மிகச் சிறிய எண்தான். இருப்பினும், இதுவரை, “புத்தகத்தைப் படித்தோம்”, “இணையத்தில் படித்தோம்”, “கிண்டிலில் படித்தோம்” என அன்பு பகிர்ந்த முதியோரின் சொல் எண்ணிக்கையில் அடங்காது. சொல் உதிர்க்க முடியாதோரும் வலிந்து கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய ஒவ்வொரு கணமும் என் வாழ்வின் பொன்னான தருணங்கள். அப்பாவும், அம்மாவும் இவர்களின் குரல்களில் வாழ்த்தினரென்றே கொள்கிறேன். அச்சுப்புத்தகமே வேண்டாம்; இணையத்தில் இருப்பதே போதும்; “முழுமஹாபாரதம்” அனைவரையும் சென்றடையும் என ஒரு காலத்தில் மனத்தில் உதித்த செருக்கு, அச்சுநூல் படித்துவிட்டு பேசியோரின் சொற்களில் சுக்குநூறாக நொறுங்கியது என்றால் அது மிகையல்ல” என்று தனது ஃபேஸ்புக் பதிவில் அரசன் குறிப்பிட்டுள்ளார்.
கணினி, செல்ஃபோன், கிண்டில், டேப்லெட் போன்ற மின்கருவிகளின் வழியாக நூல்களை வாசிப்பது பலருக்கும் பழக்கமாகி வருகிறது என்றாலும், அச்சுப்புத்தகம் அளிக்கும் நெருக்கமும், வாசிப்பு அனுபவமும் தனிப்பட்டது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதுவும் குறிப்பாக, நடுத்தர வயதினர், முதியவர்கள் ஆகியோருக்கு பெரிய புத்தகங்களை மின்நூல்களாக வாசிப்பது என்பது அனேகமாக இயலாத காரியம். அச்சுப்புத்தகத்தில் வாசிக்கவே அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு மகனும், மகளும் தங்கள் பெற்றோருக்கு அன்புப் பரிசாக வழங்க சாலச் சிறந்த அச்சு நூல் தொகை முழுமஹாபாரதம்.
அச்சுநூல் தொகுப்பை வாங்க: https://www.arasan.info/p/tamil-mahabharata-hardbound-book.html
கிண்டில் மின்-புத்தகமாக வாங்க: https://www.arasan.info/p/kindle-e-books.html
இணையத்திலேயே முழுமையாக வாசிக்க: https://mahabharatham.arasan.info/2021/03/contents-of-mahabharata.html